முரசொலி கடிதங்கள் · 3487
தேன் துளிகள்; தேனருவியாகட்டும்! (2)
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3487. தேன் துளிகள்; தேனருவியாகட்டும்! (2)
உடன்பிறப்பே,
இட ஒதுக்கீடு என்பதற்கு தமிழ்நாடுதான் அதற்கு விளை நிலம் - நாற்றங்கால் - தமிழ்நாட்டிலேதான் நீதிக் கட்சியினால் அதற்கு விதை ஊன்றப்பட்டு, தந்தை பெரியார் அவர்களால், பேரறிஞர் அண்ணா அவர்களால், பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. பெரியாரும், அண்ணாவும் நடத்திய சமூக நீதிப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியின் விளைவாகத்தான், பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் இந்தியப் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்களிடம் சமூக நீதிப் போராட்டத்தால் தமிழகம் பற்றி எரிவதை எடுத்துச் சொல்லி, அதன் பயனாகவே அரசியல் சட்டத்தில் முதல் திருத்தமே வருவதற்கான நிலை ஏற்பட்டது. நம்முடைய எதிர்கால சந்ததி வாழ, வளம் பெற, நாடு வலிமை பெற, சமுதாயம் ஊக்கம் பெற, எத்தகைய முன்னேற்றங்களை கல்வித் துறையிலும், வேறு பல துறைகளிலும் நாம் பெற வேண்டுமென்று கருதுகிறோமோ, அதற்கெல்லாம் இடையூறாக சமூக நீதிப் பாதையில் அவ்வப்போது ஏற்படுகின்ற பின்னடைவை நீக்க வேண்டும் என்பதற்காகத்தான் தொடர்ந்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.
இட ஒதுக்கீடு பற்றி 1994ஆம் ஆண்டில் அகில இந்தியத் தலைவர்களுக்கெல்லாம் நான் எழுதிய கடிதங்கள் குறித்தும், அதற்கு அவர்கள் ஆதரவு தெரிவித்து எழுதிய பதில் கடிதங்கள் குறித்தும் விரிவாக விளக்கியிருக்கிறேன். அதற்குப் பிறகு 1996ஆம் ஆண்டு நான்காவது முறையாகத் தி.மு. கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, மாண்புமிகு உறுப்பினர்கள் ஞானசேகரன், சுப்பராயன், தாமரைக்கனி, பேராசிரியர் தீரன் ஆகியோர் இட ஒதுக்கீடு பிரச்சினை குறித்து 16-8-1996 அன்று சட்டப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார்கள்.
அப்போது பேசிய ஞானசேகரன், “ஏற்கனவே இந்த மாமன்றத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை கல்லூரி மாணவர்கள் சேர்க்கையின்போது கடைப்பிடிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசை வற்புறுத்தி, அரசியல் சாசனத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்ட து. ஆனால் சில பேர் அதை எதிர்த்து 50 சதவிகிதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்று உச்ச நீதி மன்றத்திற்குச் சென்ற காரணத்தினால், அப்போது இருந்த தமிழக அரசினுடைய முதல்வர் ஜெயலலிதா அவர்களும், மற்றவர்களும் சேர்ந்து, 50 சதவிகித இட ஒதுக்கீட்டை நாங்கள் அமல்படுத்துகிறோம் என்று ஒரு அபிடவிட்டை உச்சநீதிமன்றத்திலே தாக்கல் செய்தார்கள். அரசியல் சாசனத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்ட விஷயத்தை அவர்கள் உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்காத காரணத்தினால், இந்த இட ஒதுக்கீடு சம்பந்தமாக, இந்த மாமன்றத்தில் நாம் தீர்மானம் நிறைவேற்றியும், 9வது அட்ட வணையில் சேர்த்தும் அதை இன்னும் செயல்படுத்த முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறோம். இப்போது மாண்புமிகு கலைஞர் அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னால், 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் முகத்தான், 9வது அட்டவணையையெல்லாம் நினைவுகூர்ந்து, ரெவ்யூ பெட்டிஷன் போட்டும் கூட, உச்சநீதி மன்றம் 50 விழுக்காட்டிற்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்கின்ற தீர்ப்பை வழங்கியிருக்கின்ற காரணத்தினாலே, தமிழக அரசு, இந்த 69 சதவிகித இட ஒதுக்கீட்டை எப்படி செயல்படுத்தப் போகிறது, அதற்கு என்ன முயற்சி எடுக்கப் போகிறது?” என்று கேள்வி எழுப்பினார். அன்றையதினமே, அதற்குப் பதிலளித்து நான் கூறியதை சுருக்கமாக இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.
“இட ஒதுக்கீட்டில் 1991ஆம் ஆண்டு வரையிலே 69 சதவிகிதம் பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, பழங்குடி மக்களுக்கு என்று இருந்ததை அனைவரும் அறிவோம். அதற்குப் பிறகு வழக்கு ஒன்றின் காரணமாக 50 சதவிகிதம் என்ற நிலை உச்சநீதி மன்றத்தினுடைய தீர்ப்பால் ஏற்பட்டபோது தமிழகத்திலே உள்ள எல்லாக் கட்சிகளும் குரல் கொடுத்ததன் காரணமாக, எல்லாக் கட்சிகளினுடைய ஒத்துழைப்போடு இந்தச் சட்டமன்றத்திலே ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
69 சத விகிதத்தை உறுதிப்படுத்துகின்ற வகையில், அந்தத் தீர்மானத்தின் அடிப்படையிலே ஒரு சட்டமும் இங்கே நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை வடிவமைத்துக் கொடுத்ததே திராவிடர் கழகம்தான். ஆனால் அந்த ஆட்சிக்காலத்திலே அதற்கு ஒரு நன்றி கூட சொன்னதாக எனக்குத் தெரியவில்லை. அந்தத் தீர்மானத்தை வரவேற்ற அதே நேரத்தில், திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ், திருநாவுக்கரசர் அவர்கள் கூட அந்த அணியிலே எங்களோடு இருந்தார். எல்லோரும் அந்தத் தீர்மானம் போதுமானதல்ல, அந்தச் சட்டம் போதுமானதல்ல, இருந்தாலுங்கூட அந்தச் சட்டத்தை 9வது அட்டவணையிலே சேர்க்க வேண்டுமென்று குரல் கொடுத்தோம். அந்த நேரத்திலே நான் அகில இந்தியக் கட்சிகளினுடைய தலைவர்களுக்கு கடிதங்கள் எழுதி, “உங்களுடைய ஆதரவெல்லாம் தேவை, நீங்கள் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டினுடைய இந்தச் சட்டத்தை அங்கீகரித்து 9ஆவது அட்டவணையிலே சேர்ப்பதற்கு துணை நிற்க வேண்டு”மென்று எழுதியேன். அந்தக் கடிதங்களுக்கு பெரும்பாலான தலைவர்கள் “நாங்கள் ஆதரிக்கத் தயாராக இருக்கிறோம்” என்று கடிதங்கள் எழுதினார்கள். அந்தக் கடிதங்களுடைய நகல்களை யெல்லாம் எடுத்து, அன்றைய மத்திய அரசுக்கு அனுப்பிவைத்து, இதனை 9 வது அட்டவணையிலே சேர்க்க உதவிட வேண்டுமென்று தி.மு.கழகத்தின் சார்பில் நானும் கேட்டுக் கொண்டேன். இதிலே அக்கறை உள்ள கட்சிகள் அனைத்தும், தங்களுடைய ஆவலை மத்திய அரசுக்கு தெரிவித்து வலியுறுத்தினார்கள். அதற்குப் பிறகு அரசியல் சட்டத்திலே சேர்க்கப்பட்டு 9வது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டது.
அதுபோதுமானது அல்ல, அந்தந்த மாநிலங்களின் நிலைகளுக்கேற்ப இந்த இட ஒதுக்கீட்டை அந்தந்த மாநில அரசுகளே நிர்ணயம் செய்து கொள்கின்ற அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப் பட வேண்டுமென்ற முறையில், அரசியல் சட்டம்
திருத்தப்பட வேண்டும் என்ற கருத்தை - கழகத்தின் சார்பில் நாங்கள் எடுத்து வைத்தோம். பா.ம.க. சார்பில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் வலியுறுத்திச் சொன்னார்கள். அதற்காக பல மாநாடுகள் நடைபெற்றன. பல தீர்மானங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அரசியல் சட்டத்திலே திருத்துவது என்றால் அதற்கு நாடாளுமன்றத்திலே மூன்றில் இரண்டு பங்கிற்கு மேற்பட்ட வாக்குகள் தேவை என்கிற ஒரு நியதி இருக்கின்ற காரணத்தால் இப்போது அது முடியுமா இயலுமா என்பது பிரச்சினையாக இருக்கிறது. இருந்தாலும் அந்த முயற்சியிலே இந்த அரசு ஈடுபடும்.
கடந்த காலத்திலே இந்த அவையிலே நிறைவேற்றப்பட்டு, 9வது அட்டவணையிலும் சேர்க்கப்பட்ட சட்டத்தை உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்கின்போது கடந்த அரசின் காலத்தில் அரசு வழக்கறிஞர்கள் நினைவூட்டவே தவறி விட்ட காரணத்தினாலே, உச்சநீதிமன்றத்தினுடைய நீதிபதிகள் அந்தத் தீர்ப்பிலே குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒன்பதாவது அட்டவணையிலே சேர்க்கப்பட்ட செய்தியையே கடந்த கால அரசில் வழக்கறிஞர்கள் எடுத்துச் சொல்லாத காரணத்தினாலே இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டது.”
★
1996ஆம் ஆண்டு சட்டமன்றத்திலே நடைபெற்ற இந்த விவாதத்திற்குப் பிறகு 1997ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 15ஆம் நாள் அன்றைய பிரதமராக இருந்த திரு.தேவகவுடா அவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தில்,
“திரு. வி.பி. சிங் அவர்கள் பிரதமராக இருந்த போது மத்திய அரசின் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்ததைத் தொடர்ந்து மத்திய அரசின் கல்வி நிலையங்களிலும் 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் அந்தந்த மாநிலங்களே தேவைகளுக்கேற்ப இட ஒதுக்கீட்டின் அளவை நிர்ணயித்துக் கொள்ளும் வகையில்
அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தேன்.
தமிழக முதலமைச்சர் பொறுப்பிலே 2006 ஆம் ஆண்டு ஐந்தாவது முறையாக அமர்ந்த நான் அந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது :-
“அன்புள்ள முதல்வர் அவர்களுக்கு,
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருமதி. சோனியா காந்தி அவர்களுக்கு நான் எழுதியுள்ள கடிதத்தின் நகலை இத்துடன் இணைத்துள்ளேன். இக்கடிதத்தின் பொருள் தங்களுக்குப் புரியும். இக்கடிதம் கிடைத்தவுடன் அவர் உடனடி நடவடிக்கை எடுத்து என்னுடைய கடிதத்தில் கண்டுள்ள ஆலோசனைகளை மத்திய மனிதவள ஆற்றல் வளர்ச்சி அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். தங்களது மாநிலத்தில் சமூக ரீதியிலும் கல்விரீதியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர்; மக்கள் தொகையில் 70 சதவிகிதம் இருப்பார்கள் என்று நம்புகிறேன். எனவே, இத்தகைய உரிமை மறுக்கப்பட்ட வகுப்பினருக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உங்களது மாநிலம் இடஒதுக்கீடு செய்திருக்கும் என்று நம்புகிறேன். உச்சநீதிமன்றத்தின் ஒருசில தீர்ப்புகளால், இட ஒதுக்கீடு முறைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள். தற்பொழுது இந்தப் பிரச்சினை 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்புச் சட்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.
அரசியல் அமைப்புச் சட்டம் 31(பி) பிரிவின் படி 9வது அட்டவணை யின்கீழ் இயற்றப்படும் சட்டங்கள் தாக்குதலுக்கு ஆளாக்கப்படவுள்ளன. இந்த வழக்கு வரும் அக்டோபர் 30-ம் தேதியன்று விசாரணைக்கு வரவுள்ளது. எனவே இப்பிரச்சினை அவசர முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதால், தங்களது மாநிலம் உடனடி நடவடிக்கை எடுக்கலாம். இது சம்பந்தமாக தாங்கள் வரும் 30.10.2006 அன்று விசாரணைக்கு வரவுள்ள வழக்கில் தங்கள் மாநிலத்தையும் மனுதாரராக சேர்த்துக் கொள்ளலாம் என்பது எனது ஆலோசனையாகும். மத்திய அரசுக்கும் எம்.நாகராஜ
என்பவருக்கும் நடைபெற்ற ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் சமீபத்தில் அளித்துள்ள தீர்ப்பில்,
“மேற்கூறிய காரணங்களால் அரசுக்கு தவிர்க்கமுடியாத காரணங்கள் இருந்தாலும் கூட இடஒதுக்கீடு அளவு என்பது, மிக அதிகமாகப் போகாததாகவும் 50 சதவிகித உச்சவரம்பை தாண்டி விடாததாகவும் இருக்க வேண்டும்; பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தில் பொருளாதார ரீதியாக முன்னேறியவர்களை விலக்காமல் இருக்கக் கூடாது; இட ஒதுக்கீட்டை காலவரையறையின்றி நீட்டிப்பதாக இருக்கக் கூடாது?”
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்சநீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பு இந்திய அரசியல் சட்டத்தின் உணர்வுக்கு எதிரானது என்பது கண்கூடு. அரசியல் சட்டத்தின் முன்னுரையில் குடிமக்கள் அனைவருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் நீதியை நிலை நிறுத்துவது என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசியல் சட்டம் சமூகரீதியிலும், கல்விரீதியிலும் பின்தங்கிய வகுப்பினருக்கு மட்டுமே இட ஒதுக்கீட்டுக்கு வழிவகை செய்துள்ளதே யொழிய எந்த விதமான பொருளாதாரரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு என வகை செய்யப்படவில்லை. பல நூற்றாண்டுகளாக சமூகரீதியிலும், கல்விரீதியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நுகத்தடியின்கீழ் இருந்து வந்துள்ளனர். சுதந்திரம் கிடைத்தபிறகுதான், அதுவும் அரசியல் சட்டத்தில் இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யப்பட்ட பிறகுதான் இந்த வகுப்பினருக்கு அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் கதவுகள் திறந்து விடப்பட்டன. கடந்த 50 ஆண்டுகளில் இந்த வகுப்பினர் படிப்படியாக சமூக நிலைமையில் உயர்ந்து வருகின்றனர். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் இட ஒதுக்கீடு மூலம் அளிக்கப்பட்டு. வந்த ஏணி இழுத்து விடப்பட்டுள்ளதால், இந்த வகுப்பினருக்கு பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் முன்பு இந்த வழக்கில் மனுதாரராக மாறி இந்த வழக்கை உச்சநீதி மன்றத்தின் 13 அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் பெஞ்சுக்கு அனுப்ப வேண்டும் என்பதை
மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டிய தேவை மாநிலங்களுக்கு மிக அதிகமாக உள்ளது என்று நான் கருதுகிறேன். இந்த நெருக்கடியான வரலாற்றுரீதியான நேரத்தில் சமூகரீதியிலும், கல்விரீதியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் ஆகியோரது நலன்களைப் பாதுகாத்து, பேரழிவு பின்விளைவுகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு அவசர நடவடிக்கைகளை எடுக்கும் படி தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு அந்தக் கடிதத்தில் நான் எழுதியிருந்தேன்.
இந்தக் கடிதத்திற்கு முன்பே 9-10-2006 அன்று திருமதி சோனியா காந்தி அவர்களுக்கு இட ஒதுக்கீடு பிரச்சினையில் ஐந்து பக்கங்கள் கொண்ட விவரமான கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன். அந்தக் கடிதத்தின் இறுதிப் பகுதியில் பின்வரும் யோசனைகளை தெரிவித்திருந் தேன்.
அ) ஒரு முழுமையான கருத்தைப் பெறும் வகையில் இட ஒதுக்கீட்டைப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகளின் கருத்துக்களை இந்திய அரசு கோரிப் பெற வேண்டும்.
ஆ) இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை மட்டுமன்றி, ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள சட்டங்களைப் பற்றியும் உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் எடுத்துக்கொள்ள இருக்கிறது. ஒன்பதாவது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள எல்லாச் சட்டங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன. ஆகையால் இந்தப் பிரச்சினை குறித்தும் மாநில அரசுகளின் கருத்துகளைக் கண்டறிய மத்திய அரசு முன் முயற்சி எடுக்க வேண்டியது தேவையாகிறது. அப்பொழுதுதான், வழக்குகளைக் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் நல்ல முறையில் கையாள இயலும்.
இ) எல்லா மாநிலங்களிலும், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உள்ள சிறப்பு நிலையை மத்திய அரசு தெரிந்து கொண்ட பிறகு இந்த வழக்கைப் பற்றிய வாதங்களை எடுத்துக் கொள்வது நல்லது. அப்பொழுது தான், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 70 முதல் 85 சதவிகிதம் வரையிலுள்ள சமுதாயப் பிரிவினரைப் பாதிக்கும் பிரச்சினை குறித்து உச்ச நீதிமன்றத்திற்கு மத்திய அரசு உரிய முறையில் எடுத்துச் சொல்ல இயலும். வரலாற்று முறையில் உருவாகியிருக்கும் கசப்பான இந்தச் சிக்கல் தீர்க்கப் படுவதற்குப் பல வகையான நியாயமான தீர்வுகள் தேவைப்படுகின்றன.
ஈ.) அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக் குறித்து உச்ச நீதிமன்றம் விவாதிக்க இருப்பதால், மத்திய அரசே இவ்வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டிருக்கும் சட்டங்களை இயற்றுவதில் மத்திய அரசு ஆக்கப் பூர்வமான பங்காற்றியிருக்கிறது. மத்திய அரசும் அனைத்து மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தின் முன் உள்ள இந்த வழக்குகளில் பங்கேற்காமல், பல கோடிக்கணக்கான மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளைச் சரியாக முன் வைத்து வாதிட முடியாது.
உ) இப்பொழுது எழுந்துள்ள வழக்கை இன்னும் விரிவான 13 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதி மன்ற பெஞ்ச் விசாரிக்க நடவடிக்கைகள் எடுக்கலாம். ஏனென்றால் கேசவானந்த பாரதி வழக்கில் (அரசமைப்புச் சட்டத்தின்) அடிப்படைக் கட்டமைப்புஎனும் கருத்தாக்கத்தை 13 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் உருவாக்கியது.
ஆகையால் இந்த நெருக்கடியான கட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களையும் உரிமைகளையும் உறுதியாகவும், நல்ல முறையிலும் பாதுகாக்க எல்லாத் தேவையான
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் உங்கள் உதவியை அவர்கள் முழுமையாக நம்பியுள்ளார்கள். இந்த விஷயத்தில் சரியான காலத்தில் நீங்கள் எடுக்க இருக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் நான் தனிப்பட்ட முறையில் நன்றியுடன் இருப்பேன்.
இவ்வாறு திருமதி சோனியா காந்தி அவர்களுக்கு எழுதியதோடு நிற்காமல் பின்னர் நான் அனைத்து முதல் அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியபோது இந்தக் கடிதத்தை இணைத்தும் அனுப்பினேன்.
ஏன் இன்னும் சொல்லப்போனால், தி.மு. கழகத்தின் சார்பில் தேர்தல் நேரத்தில் வைக்கப்பட்ட ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் இட ஒதுக்கீடு குறித்தும், சமூக நீதி பற்றியும் நான் சொல்லாமல் விட்டதே கிடையாது. 1996ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பே - நாடாளுமன்ற, சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்காக கழகத்தின் சார்பில் படிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில்,
“சமூக நீதி பெற உருவாக்கப்பட்ட இயக்கம் தான் திராவிட இயக்கம். தி.மு.கழகம் பங்கேற்ற திரு.வி.பி.சிங்கின் தேசிய முன்னணி அரசால்தான் மாநில அளவில் இருந்த இட ஒதுக்கீடு மண்டல் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் மத்திய அரசு அளவிற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது இந்திய வரலாற்றில் மகத்தான நிகழ்ச்சியாகும். ஆனால் இது குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சமூக நீதிக்கான பயணத்தில் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. ஐம்பது சதவிகிதம்தான் இட ஒதுக்கீடு இருக்க வேண்டு மென்பதும்; பின் தங்கியோரில் கிரீமிலேயர் எனும் வசதி பெற்றோர் என்று சொல்லப்படுபவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாதென்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியவை அல்ல. அவை சமூக நீதிக்குப் புறம்பானவை. எனவே எத்தனை சதவிகிதம் இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டும். கிரீமிலேயர் என்பது பொருளாதார அடிப்படையைக் கொண்டதால் அந்த அளவு கோல் நீக்கப்பட்டு வருமான வசதி வித்தியாசமின்றி பின்தங்கிய சமூகத்தினர் அனைவருக்கும் இட ஒதுக்கீடு
வழங்கப் பட வேண்டுமென்றும்; அரசியல் அமைப்புச் சட்டம் அதற்கேற்பத் திருத்தப்பட வேண்டுமென்றும்; மத்திய அரசின் கல்விக் கூடங்களுக்கும் உடனடியாக இந்த இட ஒதுக்கீட்டு முறை கொண்டுவரப்பட வேண்டுமென்றும் தி.மு.கழகம் வற்புறுத்தும்” என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். 1996ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலே மாத்திரமல்ல; 2006ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலே கூட,
“பிற்படுத்தப்பட்டோருக்கான மத்திய அரசின் இட ஒதுக்கீட்டில் உள்ள வருமான உச்ச வரம்பை (கிரீமிலேயர்) நீக்குவதற்குரிய சட்டத் திருத்தங்களை கொண்டு வருவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வோம். தமிழ் நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை தடையின்றி செயல்படுத்த உச்சநீதிமன்ற வழக்கினை விரைவுபடுத்தி தகுந்த தீர்ப்பினைப் பெறுவதற்கு வழிவகை செய்வோம். அந்தந்த மாநிலங்களில் வாழும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கைக்கேற்ப இடஒதுக்கீடு அளவை அந்தந்த மாநிலங்களே மேற்கொள்வதற்குரிய வகையில் அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்படவேண்டும்.......” என்று குறிப்பிட்டிருந்தோம்.
இவ்வாறு தொடர்ந்து 1920ஆம் ஆண்டு முதல் சமூக நீதிக்காக - இட ஒதுக்கீட்டிற்காக குரல் கொடுத்து வந்ததின் பயனாகத்தான் - நான் தொடக்கத்தில் குறிப்பிட்டதைப் போல - வெற்றியும், தோல்வியும் மாறி மாறி கிடைத்து வருகிறது என்பதின் அடையாளமாக - கடந்த 13-7-2010 அன்று உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா, நீதிபதி கே.எஸ். ராதாகிருஷ்ணன், மற்றும் நீதிபதி சுதந்திர குமார் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் அளித்த தீர்ப்பு நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது.
உச்ச நீதி மன்றம் அளித்த இந்தத் தீர்ப்பில் -
“பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு மொத்தமாக தமிழ்நாடு அரசு 69 விழுக்காடு இட ஒதுக்கீடு தருவது மேலும் ஓராண்டிற்கு தொடரலாம்.
1993இல் 69 விழுக்காடு ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டம் செல்லுமா என்பது குறித்து கருத்து எதுவும் இந்தக் கட்டத்தில் தெரிவிக்க விரும்பவில்லை.
பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரத்தை மாநிலப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் மாநில அரசு அளிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் இப்பொழுது கேட்டுக் கொண்டிருக்கிறது. அப்படி அளிக்கப்படும் புள்ளி விவரத்தின் அடிப்படையில், மாநிலப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், புதிதாக இட ஒதுக்கீட்டு அளவைப் பிற்படுத்தப்பட்டோருக்குப் பரிந்துரைக்கும். உச்சநீதிமன்றம் பொதுவாக விதித்துள்ள மொத்தம் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கும் அதிகமாக தர வேண்டும் என்று ஆணையம் கருதினால், மண்டல் ஆணைய (இந்திரா சாஹ்னி) வழக்கில், 1992இல் உச்சநீதிமன்றம் கூறிய அடிப் படைகளை கணக்கில் கொண்டு முடிவு தெரிவிக்க வேண்டும். அதாவது 50 விழுக்காடு எல்லையைத் தாண்டுவ தென்றால் மாநிலத்தில் நிலவும் சிறப்புக் காரணங்களைக் கூற வேண்டும்.”
என்று கூறப்பட்டுள்ள வாசகங்கள் - பாலைவனத்தில் குடிநீர் கிடைக்காமல் வேகாத வெயிலில் சென்று கொண்டிருந்தவர்களுக்கு வழியிலே ஒரு சிறிய நீரூற்று தென்பட்டதைப் போல - தமிழ்நாட்டு மக்களுக்கு அமைகிறது என்றால் மிகையல்ல. அதிலும் குறிப்பாக எத்தனையோ ஆண்டு காலமாக இந்த இட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்காக உண்மையிலேயே பாடுபட்டு வரும் நமக்கு தேன் துளிகள் தேனருவியாகப் பெருகிட வேண்டுமென்ற ஆவல் ததும்புவதில் வியப்பில்லை அல்லவா? மாநிலத்தில் சிறப்புக் காரணங்கள் இருந்தால், அதனைத் தெரிவித்து 50 விழுக்காடு என்பதைத் தாண்டலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருப்பது நாம் கேட்கின்ற மாநிலங்களுக்கு இட ஒதுக்கீட்டு அதிகாரம் வேண்டும் என்ற நியாயத்தை உணர்ந்து சொல்லியிருப்பது போலத் தெரிகிறது.
இந்த வெற்றியிலும் மகிழ்ச்சியிலும் நாம் உரிமை கொண்டாடுவதற்கு ஆட்சியில் நாம் இருந்தாலும்
இல்லாவிட்டாலும் திராவிட இயக்கத்தின் சமூக நீதி கொள்கையை தொய்வில்லாமல் பாதுகாத்து நிறைவேற்றி வருகிறோம் என்பதற்கு நீதி மன்றங்களில் நாம் நடத்தி வந்துள்ள சட்ட ரீதியான சமூக நீதிப் போராட்டங்களும் மக்களிடையே ஏற்படுத்திய விழிப் புணர்வும் பெரும் காரணங்கள் என்பது மாத்திர மல்ல; ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் இந்தச் சமூக நீதியைப் பலமாகப் பாதுகாத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோரான வன்னியப் பெரு மக்களும், சீர் மரபினர்களும் மற்றும் சில வகுப்பினரும்; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பட்டியலில் இணைக்கப்பட்டு, 20 விழுக்காடு எனப் பயன் பெறவும் - மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக இஸ்லாமியப் பெருமக்கள் 3.5 விழுக்காடு பெறவும் - தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக அருந்ததியப் பெருமக்கள் 3 விழுக்காடு பெறவும் - தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் பழங்குடியின மக்களும் ஒட்டுமொத்தமாக 18 விழுக்காடு என்று பெற்றிருந்ததை மாற்றி, பழங்குடி இன மக்களுக்கென தனியே ஒரு விழுக்காடு என்றும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே 18 விழுக்காடு என்றும் மாற்றியமைத்ததும் - முன்னேறிய வகுப்பினர் பட்டியலிலே இருந்த கொங்கு வேளாளச் சமுதாயத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்ததும் - சமூக நீதியில் இந்த இயக்கத்திற்கு உள்ள அக்கறைக்கான எடுத்துக்காட்டுகளாகவும் - அதனால்தான் அண்மையில் வந்துள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பை தேன் துளிகளாகவும், இது தேனருவியாக மாறுகின்ற அளவுக்கு சமூக நீதிப் பயணத்தில் முழுமையான வெற்றியைப் பெற வேண்டுமென்றும் விரும்புகிறோம்.
(முற்றும்)
அன்புள்ள, மு.க. 23-7-2010
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 44 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065830_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_44.pdf; PDF பக்கம் 46–57. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.