முரசொலி கடிதங்கள் · 3491
எதிரொலிக்கிற அந்தக் கூச்சல்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3491. எதிரொலிக்கிற அந்தக் கூச்சல்!
உடன்பிறப்பே,
எதிர்க்கட்சித் தலைவர் ஜெயாவுக்கு இன்று அறிக்கை எழுத வேறு எந்தப் பொருளும் கிடைக்கவில்லையாம்! “டாஸ்மாக்” பணியாளர்களின் பிரச்சினை குறித்து அறிக்கை விடுத்துள்ளார். அரசுப் பணியாளர்கள் பற்றி அறிக்கைவிட ஜெயலலிதாவுக்கு ஏதாவது தகுதி உண்டா? அவர் ஆட்சிக் காலத்தில் தமிழக அரசின் பணியாளர்கள் பட்ட துன்பத்தை மக்கள் மறந்திருப்பார்கள் என்று அவர் கனவு காண்கிறாரா? “அரசு அலுவலர்களும் அம்மையார் ஜெயலலிதாவும்” என்ற தலைப்பிலே ஒரு பெரிய புத்தகமே எழுதலாமே! இருந்தாலும் ஒரு சிலவற்றை ஞாபகப்படுத்து கிறேன்.
தி.மு. கழக ஆட்சி 1989ஆம் ஆண்டு நடைபெற்றபோது வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை மாதம் 750ரூபாய் மதிப்பூதியத்தில் கழக அரசு அமர்த்தியது. ஆனால் 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல் அமைச்சர் ஆனதும் இந்த மக்கள் நலப் பணியாளர்களையெல்லாம் டிஸ்மிஸ் செய்து வீட்டிற்கு அனுப்பி விட்டார். ஆனால் 1996ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சி மீண்டும் ஏற்பட்டதும், பதவியிழந்த மக்கள் நலப் பணியாளர்களுக் கெல்லாம் நான் மீண்டும் வேலை வாய்ப்பளித்து அவர்களுடைய வாழ்வில் ஒளியேற்றி வைத்தேன்.
அதைப் போல இளைஞர்களுக்கு மேலும் வேலை வாய்ப்பு அளிக்க வேண்டுமென்பதற்காக பத்தாயிரம் இளைஞர்களுக்குச் சாலைப் பணியாளர்கள் வேலை அளித்தேன். 2001ஆம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரானதும், கருணை உள்ளத்தோடு கழக ஆட்சியிலே நியமிக்கப்பட்ட 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களையும், 10 ஆயிரம் சாலைப் பணியாளர்களையும் “டிஸ்மிஸ்” செய்து வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.
பல ஆண்டுக்காலம் வேலை பார்த்து ஊதியம் பெற்று குடும்பம் நடத்திக் கொண்டிருந்தவர்களுக்கு திடீரென வேலையில்லை யென்றால் என்ன செய்வார்கள்? பலபேர் தற்கொலை செய்து கொண்டு மாண்டார்கள். பல பேர் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இருந்ததால் திருமணமும் நிறுத்தப்பட்டு, அவர்களை மணக்கவிருந்த பெண்கள் நிர்க்கதிக்கு ஆளானார்கள்.
உதாரணமாக நாகை மாவட்டம், கீழையூர் அருகேயுள்ள வைரவன்கட்டளை “காமேஸ்வரம்” கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் என்ற மக்கள் நலப் பணியாளர் 11-6-2001 அன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் ஒன்றிய மக்கள் நலப் பணியாளர் சி.கந்தசாமியின் வேலை பறிபோன காரணத்தால் அவருடைய மனைவி பிரபா என்பவர் 11- 6-2001 அன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 12-6-2001 அன்று நத்தம் ஒன்றிய மக்கள் நலப் பணியாளராக பணியாற்றி வந்த திலகர் என்பவரும் வேதனை தாங்காது தன் உயிரை மாய்த்துக்கொண்டார். இவர்களின் குடும்பத்திற்கு தி.மு.கழகத்தின் சார்பில் தலா 25 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டது. அருப்புக் கோட்டையைச் சேர்ந்த ராமமூர்த்தி பணி பறிபோனதும் சோகத்தில் உணவு உண்ணாமல் பட்டினி கிடந்தே மாண்டார். நாகை மாவட்டத்தில் தரங்கம்பாடியைச் சேர்ந்த இளங்கோவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் கபிலன் வேலை போன காரணத்தால் பட்டினி கிடந்து உயிர் துறந்தார்.
அரசு அலுவலர் வேலை நிறுத்தம் செய்தால் மூன்றாண்டு சிறைத் தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. ஜெயலலிதாவின் அதிரடிப்படி அதற்குப் பெயர் என்ன? மிரட்டல்தானே? மேலும் அதே ஆணையில் போராட்ட நாட்களில் எந்தவிதமான விடுமுறையும் எடுக்கக் கூடாதென்றும், வேலைக்கு வராதவர்களின் பட்டியலை உடனடியாக அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும், அந்த நாட்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவித்திருந்தார்கள். அது மட்டுமல்ல; 2002ஆம் ஆண்டு அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் (எஸ்மா) சட்டத்தின்கீழ், வேலை நிறுத்தம் செய்த அரசு ஊழியர்களின் தலைவர்களை கைது செய்ததோடு, தமிழ்நாடு அத்தியாவசிய
சேவைகள் பராமரிப்பு (டெஸ்மா) சட்டம் என்ற புதிய அவசரச் சட்டம் ஒன்றை அமல்படுத்தி பணியாளர்களை வேலை நீக்கமும் (டிஸ்மிஸ்) செய்தார்கள். அந்த அம்மையார் தான் தற்போது டாஸ்மாக் பணியாளர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.
இந்த ஆட்சியின் டிஸ்மிஸ் பட்டியலைப் பார்த்து விட்டு தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணிக்கு அருகே தலைமை ஆசிரியை ரேணுகா பெரியராசன், அந்தியூரைச் சேர்ந்த குமாரசாமி, கொடுமுடியில் உதவி தலைமை ஆசிரியை சுரோஜினி, தொடக்கக் கல்வி உதவி அதிகாரி அழகம்மாள், டெங்கனிக் கோட்டை செங்கோட் ராஜ், கல்லூரிக் கல்வி இயக்கக ஊழியர் சோலையப்பன், வில்லிவாக்கம் பச்சையப்பன், புள்ளம்பாடி அஞ்சுகம் என்று உயிரைப் பறிகொடுத்தவர்களின் பட்டியல் தொடர்ந்தது.
மேலும் ஒரு கொடுமையாக அலுவலர்களை டிஸ்மிஸ் செய்துவிட்டு, அதுகுறித்த வழக்கிலே என்ன தீர்ப்பு வருமோ என்று கூடக் காத்திருக்காமல் புதிதாக 15,500 பேரை வேலைக்கு எடுப்பதாகக் கூறி, அதிலே ஒரு பெரிய குழப்பம். அரசுப் பணிக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமானால் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலமாக தேர்வு நடத்தித்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி எதுவும் முறைப்படி செய்யாமல் கட்சிக்காரர்களின் பரிந்துரைப்படி தேர்வு செய்தார்கள்.
அரசு அலுவலர்களை டிஸ்மிஸ் செய்ததை ரத்து செய்யக் கோரியும், கைது செய்யப்பட்ட அரசு அலுவலர்களை விடுவிக்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் 6-7-2003 அன்று நீதிபதி வழங்கிய தீர்ப்பு வருமாறு :-
“இந்தப் பிரச்சினையில் அரசு நல்ல முடிவெடுக்க இரண்டு நாட்கள் அவகாசம் கொடுத்தேன். அரசு எந்த முடிவும் அறிவிக்க வில்லை. மேலும் இதில் கால தாமதப்படுத்தியது. அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றுதான் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. ஆனால் அரசு அதைக்கூட செய்யத் தவறி விட்டது. அரசு அலுவலர்கள்தானாக முன்வந்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாகக் கூறியுள்ளனர். எனவே அதை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கிறேன். அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இருப்பது துரதிருஷ்டவசமானது. அரசு இதில்
காலதாமதப்படுத்துவது மிகவும் வருத்தமளிக்கிறது. வேதனை அளிக்கிறது. நியாயமான விசாரணையே இல்லாமல் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்வது தவறானது, சட்ட விரோதமானது. அனைத்து அரசு ஊழியர்களையும் விடுதலை செய்கிறேன். எஸ்மா சட்டம் பிரிவு 4, 5இன் கீழ் கைதான அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். போலீஸ் டி.ஜி.பி. இதை உடனே அமுல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களை சஸ்பெண்ட், டிஸ்மிஸ் செய்த அனைத்து உத்தரவுகளையும் நிறுத்தி வைக்கிறேன். அனைவரும் உடனடியாக வேலைக்குப் போக வேண்டும். புதிய ஆட்களை பணியில் நியமிக்கக் கூடாது.”
இந்தத் தீர்ப்புக்குப் பிறகு அரசு வழக்கறிஞர் இந்த உத்தரவை இரண்டு நாளைக்கு நிறுத்தி வைக்க வேண்டுமென்று கோரியபோது, நீதிபதி “இதை ஏற்க முடியாது, நாளிரவில் எதையும் செய்யாதவர்களை தூக்கத்தில் தட்டியெழுப்பி கைது செய்துள்ளது போல இன்று நள்ளிரவே விடுதலை செய்யுங்கள்” என்றார்.
உயர் நீதிமன்ற நீதிபதி இந்த அளவிற்கு அரசு அலுவலர்களுக்காக ஆதரவாக தீர்ப்பளித்ததும், ஜெயலலிதா அரசு அதனையேற்காமல், இரவோடு இரவாக சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியின் இல்லத்திற்கே சென்று மேல் முறையீடு செய்து, அன்றைய தினம் மாலையில் உயர்நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பெற்றது. அந்த அளவிற்கு அரசு அலுவலர்களிடம் விரோதம் பாராட்டிய ஜெயலலிதாதான் தற்போது அவர்களிடம் அன்பு கொண்டவர்களைப் போல தேர்தல் வருகிறது என்றதும் நடிக்கிறார்.
2003ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் அரசு அலுவலர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்ட போது, அவர்களை மிரட்டுவதற்காக அரசாங்கம் அவசர அவசரமாக 16 ஆயிரம் பேரைத் தேர்ந்தெடுத்து, பணியிலே அமர்த்தியது. புதிதாக அமர்த்தப்பட்டதால் - அனுபவமும் இல்லாத காரணத்தால் பணிகளை ஆற்றவும் முடியவில்லை. வேலை நிறுத்தம் செய்த அலுவலர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்கு நடத்திய காரணத்தால், மீண்டும் அவர்கள் பணியிலே சேர்க்கப்பட்ட பிறகு, புதிதாக அமர்த்தப்பட்ட 16 ஆயிரம் அலுவலர்களை என்ன செய்வதென்று அந்த அரசுக்குத் தெரியாததால், அவர்கள் அனைவரை
வரும் வேண்டாத விருந்தாளிகளாக அரசு அலுவலகங்களிலே பணியாற்றாமலே ஊதியம் பெற்று வந்தார்கள்.
2004ஆம் ஆண்டு ஜூன் திங்களில் திடீரென்று அ.தி.மு.க. அரசு அந்த அலுவலர்களையெல்லாம் நீக்குவதாக ஒரு ஆணை பிறப்பித்தது. உதவிக்கரம் நீட்டியவர்களின் வாழ்வைப் பாழாக்குவது நல்லதல்ல என்று நான் ஒரு அறிக்கை விடுத்தேன்.
பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் அவர்களை பணியிலிருந்து அகற்றக் கூடாதென்று கண்டன அறிக்கைகளை வெளியிட்டார்கள். அதன் பிறகு ஜெயலலிதா அரசு பணிந்து அவர்களை பணியிலிருந்து நீக்குவதற்காக பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்றது. அந்த ஜெயலலிதாதான், தனது ஆட்சிக் காலத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள் என்பதற்காக தற்போது இன்னலுக்கு ஆளாக்கப்படுவதாக அறிக்கையிலே கூறியிருக்கிறார். அவரது ஆட்சிக் காலத்தில் அவருக்கு உதவி செய்ய பணியிலே சேர்ந்தவர்களையே, தன் காரியம் முடிந்தவுடன் வீட்டிற்கு அனுப்ப முயற்சி செய்தவர்தான் ஜெயலலிதா. இப்படிப்பட்ட ஜெயலலிதாதான் டாஸ்மாக் பணியாளர்களுக்காக அறிக்கை விடுத்துள்ளார்.
டாஸ்மாக் பணியாளர்கள் அ.தி.மு.க. ஆட்சியிலே இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் என்ற போதிலும், கழக அரசு 2006ஆம் ஆண்டு பதவியேற்ற பிறகு அவர்களையெல்லாம் வீட்டிற்கு ஜெயலலிதாவைப் போல அனுப்பிவிடாமல் அவர்களுக்கு தொடர்பணி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் நியமிக்கப்பட்ட போதே பகுதிநேர-ஒப்பந்த-தற்காலிக ஊழியர்களாகத்தான், தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டார்கள். அவ்வாறு நியமிக்கப்பட்டபோது, மேற்பார்வையாளர்களுக்கு மாதம் 2000 ரூபாயும், மற்றும் விற்பனையாளர்களுக்கு 1000 ரூபாயும் தொகுப் பூதியமாகத்தான் அ.தி.மு.க. ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
2006ஆம் ஆண்டு தி.மு. கழக அரசு பொறுப்பேற்றபோது, மேற்பார்வையாளர்களுக்கு 3000 ரூபாயும், விற்பனையாளர்களுக்கு 2000 ரூபாயும், மதுக்கூட உதவியாளர்களுக்கு 1500 ரூபாயும் மாத ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது.
இந்த அரசு பதவியேற்ற பின், இந்தப் பணியாளர்களுக்கு இரண்டு முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் மேற்பார்வையாளர்களின் ஊதியத்தை 3000 ரூபாயிலிருந்து 3,500 ரூபாயாகவும், விற்பனையாளர்களின் ஊதியத்தை 2000 ரூபாயிலிருந்து 2,400 ரூபாயாகவும், மதுக்கூட உதவியாளரின் ஊதியத்தை 1500 ரூபாயிலிருந்து 1,800 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.
2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் இந்த ஊதியம் மீண்டும் உயர்த்தப்பட்டு மேற்பார்வையாளர்கள் 4000 ரூபாயும், விற்பனையாளர்கள் 2,800 ரூபாயும், மதுக்கூட உதவியாளர்கள் 2,100 ரூபாயும் மாத ஊதியமாகப் பெற்று வருகிறார்கள்.
மதுபானக் கடைகளின் பணி நேரம் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 16 மணி - இந்த ஆட்சி பணியேற்றபின் தற்போது 12 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பணியாளர்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் ஷிப்ட் முறையில் 8 மணி நேரமே தற்போது பணி செய்து வருகிறார்கள். சுழற்சி முறையில் வாராந்திர விடுமுறையும் விடப்படுகிறது.
ஏற்கெனவே அ.தி.மு.க ஆட்சியில் நடை முறையில் இருந்த ஆண்டுக்கு ஐந்து நாள் பொது விடுமுறையைத் தவிர, - இந்த ஆண்டு மே முதல் நாளும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு - அன்றைய தினம் பணிபுரிபவர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களின் காப்புத் தொகைக்கு அ.தி.மு.க. ஆட்சியில் வட்டி ஏதும் வழங்கப்பட வில்லை. கழக ஆட்சியில்தான் 1-7-2007 முதல், ஆண்டு ஒன்றுக்கு 3.5 சதவிகிதம் வட்டி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேற்பார்வையாளர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 1,750 ரூபாயும், விற்பனையாளர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 525 ரூபாயும், மற்றும் மதுக்கூட உதவியாளர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 350 ரூபாயும் வழங்கப்படுகிறது. இதுவரை மொத்தப் பணியாளர்களுக்கும் இதற்காக 7 கோடியே 57 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் நடைமுறையில் இருந்த முந்தைய ஊக்கத்தொகை திட்டத்தின்படி குறிப்பிட்ட பணியாளர்கள் மட்டுமே இந்தப் பயனை பெற்று வந்தனர். 2005-2006ஆம்
ஆண்டு ஊக்கத் தொகையாக 26 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. சில்லறை விற்பனைப் பணியாளர்களுக்கு அமலில் இருந்த ஊக்கத் தொகை திட்டம் இந்த அரசு பதவியேற்றபின் அனைத்துப் பணியாளர்களும் பயன்பெறும் வகையில் திருத்தி அமைக்கப்பட்டு, நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஆட்சியில் 2009-10ஆம் ஆண்டில் புதிய திட்டத்தின்படி ஊக்கத் தொகையாக ரூபாய் 33.33 கோடி வழங்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு கடந்த ஆட்சிக் காலத்தில் 2005- 06இல் போனஸ் மற்றும் கருணைத் தொகை 10 சதவிகிதமாக ரூபாய் 8 கோடி மட்டுமே வழங்கப்பட்டது. இந்த ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக போனஸ் மற்றும் கருணைத் தொகை 20 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டது. இதன் மூலம் கடந்த 2009-10ஆம் ஆண்டில் 18 கோடியே 64 இலட்ச ரூபாய் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
கடந்த ஆட்சிக் காலத்தில் பணியாளர் இறக்க நேரிட்டால் குடும்ப நல நிதியிலிருந்து ரூபாய் ஒரு இலட்சம் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆட்சிக் காலத்தில் ஜூலை 2007 முதல் இந்தத் தொகை ரூபாய் ஒன்றரை இலட்சமாக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தி.மு.க. ஆட்சியில்தான் முதல் முறையாக 1-11-2009 முதல் மேற்பார்வையாளர்களுக்கு மாதாந்திர பயணப்படி ரூபாய் 150 முதல் ரூபாய் 250 வரை அளிக்கப்படுகிறது.
உடன்பிறப்பே, இந்த அளவிற்கு டாஸ்மாக் பணியாளர்கள் எந்த ஆட்சியிலே பணியிலே நியமிக்கப்பட்டார்கள் என்றெல்லாம் பார்க்காமல், எந்த அளவிற்கு அவர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியுமோ, அந்த அளவிற்கு கழக ஆட்சியில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் அந்தப் பணியாளர்களில் ஒருசிலர் மட்டும் போராட்டம் என்கிறார்கள், வேலை நிறுத்தம் என்கிறார்கள், அரசை மிரட்டிப் பார்க்கிறார்கள். அவர்களுக்குள்ளேயே கடந்த காலத்தையும், இந்தக் காலத்தையும் சீர்தூக்கிப் பார்த்து பெரும்பாலோர் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற செய்தியும் வந்து கொண்டுதான் இருக்கிறது. என் செய்வது? ஏதோ பிரச்சாரத்தை, அதிலும் குறிப்பாக தி.மு.கழக அரசாங்கத்தை எதிர்த்து யாராவது குரல் எழுப்பினால் அந்தக் குரலோடு இணைந்து கொண்டு நமது
அரசைக் குற்றுவதைத் தொழிலாகக் கொண்டவர்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்தச் சிலர் “அம்மாவுக்கு ஆதரவு” என்ற அகலமான நீண்ட சுவரின் முன்னால் நின்று கொண்டு ஓங்காரக் கூச்சலிடுகிறார்கள். ஆனால் அந்தக் கூச்சல் அந்தச் சுவரிலே மோதி “சூனியக்காரி! சூழ்ச்சிக்காரி! சண்டாளி!” என்றெல்லாம் எதிரொலிக்கிற ஓசையை இந்த நாடு கேட்டுச் சிரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
அன்புள்ள, மு.க. 11-8-2010
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 44 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065830_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_44.pdf; PDF பக்கம் 80–87. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.