முரசொலி கடிதங்கள் · 3493
முதலில் புரியாத எடுகொளாவது; இனி புரிந்து கொள்ளுமா?
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3493. முதலில் புரியாத எடுகொளாவது; இனி புரிந்து கொள்ளுமா?
உடன்பிறப்பே,
மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு அடுத்த கல்வி ஆண்டு முதல் கொண்டுவரப்படும் என்ற ஒரு முடிவினை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததாக நாளேடுகளில் ஒரு செய்தி கடந்த 14-8-2010 அன்று வெளிவந்தது. அந்தச் செய்தி வந்தவுடன் 15-8-2010 அன்று மத்திய அரசின் அந்த முடிவு காரணமாக தமிழக மாணவர்கள் குறிப்பாக ஏழையெளிய மற்றும் கிராமப் புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதை விளக்கி, இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கும், மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்களுக்கும் நான் கடித வாயிலாக தெரிவித்து நமது நாடாளுமன்றக் குழுத் தலைவர் தம்பி டி.ஆர்.பாலு மூலமாகவும் அறிவித்துள்ளேன்.
அந்தக் கடிதத்தில்
“இந்திய மருத்துவக் குழுமம் அளித்துள்ள பரிந்துரையின் பேரில் 2011-2012 ஆம் ஆண்டு முதல் அகில இந்திய அளவில், மருத்துவப் படிப்பில் சேருவதற் கான நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு; உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கு, விசாரணைக்கு வந்த போது தெரிவித்துள்ளது. கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று, தொழில் மற்றும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வினை 2007-2008ஆம் ஆண்டு முதல் இரத்து செய்து சட்டம் இயற்றியுள்ளது. இதனால் சமூக மற்றும் பொருளாதார
நிலைகளில் பின்தங்கியுள்ள கிராமப்புற மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள முடிவு மாநிலங்களின் கல்வி முறையை நிர்வகிப்பதில் உள்ள உரிமையில் குறுக்கிடுவதாகக் கருதப்படுகிறது. தமிழ்நாடு அரசு 69 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் முறையைப் பல ஆண்டுகளாக நடை முறைப்படுத்தி வருகிறது. தற்போது மத்திய அரசு தெரிவித்துள்ள புதிய முறையினால் இந்த இட ஒதுக்கீட்டு முறையைச் செயல்படுத்த இயலாத நிலை ஏற்படும். எனவே தமிழ்நாடு அரசு, மருத்துவக் கல்வி சேர்க்கையில் அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதை ஏற்க இயலாது”
என்று எழுதி அந்தச் செய்தி அனைத்து ஏடுகளிலும் விளக்கமாக வந்துள்ளது.
15ஆம் தேதி நான் இவ்வாறு எழுதியதற்குப் பிறகு, ஜெயலலிதா நான்கு நாட்களுக்குப் பிறகு திடீரென்று விழித்துக் கொண்டு, அவர் ஏன் இத்தனை நாட்களுக்கும் சும்மாயிருந்தார் என்பதைப் பற்றியெல்லாம் நினைக்காமல்; நீண்ட அறிக்கையினை எழுதச் செய்து - அதில்; பெரும்பாலும் என்னைக் குற்றஞ்சாட்டி வதிலும், என்னைப் பற்றியே தேவையில்லாமல் விமர்சிப்பதிலும் நேரத்தினைச் செலவிட்டுள்ளார்.
ஏடுகளில் செய்தியைப் பார்த்த அன்றைய தினமே நான் பிரதமருக்கும், மத்திய அமைச்சருக்கும் கடிதம் எழுதியிருந்த போதிலும், கடிதம் எழுதினால் போதுமா, முதல் அமைச்சர் நேரிலேயே சென்றிருக்க வேண்டாமா என்றெல்லாம் ஜெயா அறிக்கையிலே கேட்டுள்ளார். ஒரு அரசு என்றிருக்கும்போது ஒவ்வொரு நாளும் பிரச்சினைகள் வந்து கொண்டுதான் இருக்கும். ஒவ்வொரு பிரச்சினை வந்தபோதும் உடனடியாக ஒரு முதல் அமைச்சர் டெல்லிக்குச் சென்று பிரதமரையும், துறையின் அமைச்சரையும் நாடாளுமன்றத் தொடர் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமேயானால், சரக்கு மற்றும் சேவை வரி முறையை அமல்படுத்திட அரசியல் அமைப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள உத்தேச வரைவுத் திருத்தம்
குறித்த செய்தி வந்ததும், 29-7-2010 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அந்தக் கடிதத்தின் நகலை மத்திய நிதி அமைச்சருக்கும் அனுப்பினேன். அதைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் நமது நிதியமைச்சர் பேராசிரியர் அவர்களும், வணிக வரித்துறை அமைச்சர் தம்பி உபயதுல்லா அவர்களும் கலந்து கொண்டு நமது நிலையை அங்கே வலியுறுத்தியிருக்கிறார்கள். அந்தப் பிரச்சினையின் முக்கியத்துவம் கருதி, மீண்டும் 17-8-2010 அன்று பிரதமருக்கும் நிதித்துறை அமைச்சருக்கும் நானே கடிதம் எழுதியதோடு, நேற்றையதினம் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்திற்கு நமது சட்டத் துறை அமைச்சர் தம்பி துரைமுருகனை நேரில் அனுப்பி அங்கே அந்தப் பிரச்சினை குறித்து பேசச் செய்திருக்கிறேன்.
அதுபோலவே சாதிவாரிக் கணக்கெடுப்பில் பயோ-மெட்ரிக் முறையைக் கொண்டுவரப் போவதாக செய்தி வந்ததும், 14- 8-2010 அன்று இந்தியப் பிரதமருக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வழிகாட்டும் தலைவர் திருமதி சோனியா காந்திக்கும் அதுபற்றி விவரமாக கடிதம் எழுதியிருக்கிறேன். எனவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினை வரும்போதும் முதலமைச்சர் நேரடியாக டெல்லிக்கு சென்றிட முடியாது.
எதிர்க்கட்சித் தலைவர் ஜெயாவுக்கு பிரச்சினையைப் பற்றி அறிக்கை எழுதவே நான்கு நாட்களாகி இருக்கிறது. அந்த அறிக் கையிலும் பிரச்சினையைப் பற்றி எழுதுவதற்குப் பதிலாக என்னைப் பற்றியே எழுதுகிறார் என்றால், அவருக்கு பிரச்சினையிலே உள்ள அக்கறையை விட இந்த அரசை எதிர்த்து எழுத வேண்டும் என்பதிலேதான் கவனம் என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியும்.
மேலும் ஜெயலலிதா தனது அறிக்கையில், தமிழகத்திலே நுழைவுத் தேர்வை அவர்தான் ரத்து செய்ததைப் போல விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால், ஜெயாவின் ஆட்சிக் காலத்தில்தான் பொது நுழைவுத் தேர்வு முறையை முறையாக சட்டவிதிகளின்படி நீக்காமல் 9-6-2005 அன்று அவசர அவசரமாக ஒரு அரசாணையைப் பிறப்பித்து, அந்த ஆணை 27-6-2005 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தால் செல்லுபடியாகாது என்று தீர்ப்பு கூறப்பட்டுவிட்டது. மீண்டும் 18-2-2006இல் ஜெயா
ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஆணையும், 27-2-2006இல் உயர்நீதிமன்றத் தினால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
ஆனால் 2006ஆம் ஆண்டு மே திங்களில் தி.மு. கழக அரசு பொறுப்பேற்ற பிறகுதான், பொது நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்ய எடுக்கப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று 24-5-2006 அன்று ஆளுநர் உரையிலேயே அறிவித்து, அதன் தொடர்ச்சியாக அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர், டாக்டர் எம். அனந்தகிருஷ்ணன் தலைமையிலே ஒரு குழு 7-7-2006 அன்று அமைக்கப்பட்டது.
அந்தக் குழு அளித்த பரிந்துரைகளை சட்டப்படி பரிசீலித்து, பொது நுழைவுத் தேர்வு முறையை அறவே நீக்குவதற்கான உரிய சட்டத்திருத்தம் தி.மு. கழக ஆட்சியிலே கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத் திருத்தம் சட்டமன்றத்தில் நிறைவேறிய பிறகு - குடியரசுத் தலைவரின் ஒப்புதலை முறைப்படி பெற்று, அதன் பின்னர் இது சட்ட மாக்கப்பட்டு 7-3-2007 அன்று முதல் இந்தச் சட்டம் அமுலிலே இருந்து வருகிறது. இந்தச் சட்டத்தையும் எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு - அந்த வழக்கினை விசாரணை செய்த, சென்னை உயர்நீதி மன்றம் 27-4-2007 அன்று இந்தச் சட்டத்தை ஏற்று உறுதி செய்தது. அதன் காரணமாக கடந்த இரண்டு மூன்று ஆண்டு காலமாக ஏழையெளிய, கிராமப்புற மாணவர்கள் பல்வேறுகணக்கில் பயன் பெற்று வருகிறார்கள்.
தற்போதைய பிரச்சினையிலேகூட, பிரதமருக்கும், துறை அமைச்சருக்கும் நான் 15ஆம் தேதி கடிதம் எழுதியதோடு விட்டு விடாமல், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், நம்மையும் ஒரு வாதியாகச் சேர்த்துக் கொள்ளக் கோரி, தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்றைய தினம் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து, பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை அறவே ரத்து செய்துள்ள நிலையில், மருத்துவக் கவுன்சிலின் முடிவு, தமிழக அரசின் நிலைக்கு எதிராக உள்ளதால், தமிழக அரசையும் ஒரு வாதியாக சேர்த்துக்கொள்ளும்படி கோரப்பட்டுள்ளது.
இந்த மனு அடுத்த மாதம் 10ஆம் தேதியன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரவீந்திரன், எ.கே.கங்குலி ஆகியோர் முன்னிலை யில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்தச் செய்தியும் ஏடுகளிலும் வந்துள்ளது; தொலைக் காட்சிகளிலும் சொல்லப்பட்டுள்ளது.
இந்த அளவிற்கு இந்தப் பிரச்சினையிலே தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில் அதையெல்லாம் அப்படியே மறைத்து விட்டு, எதிர்க்கட்சித் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவர் அரசின் நடவடிக்கைகளுக்கெல்லாம் எதிராக எந்த அளவிற்கு செயல்பட்டு வருகிறார் என்பதையும், அதுவும் இத்தனை நாட்களும் கொடநாட்டிலும், சிறுதாவூரிலும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்து விட்டு, தற்போது தேர்தல் வருகிறது என்றதும், அதற்காக இப்படியெல்லாம் தேவையற்ற செயல்களில் ஈடுபடுவதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். முதலில் புரியாத எடுகொளாவது; இனி புரிந்து கொள்ளுமா?
அன்புள்ள, மு.க. 20-8-2010
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 44 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065830_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_44.pdf; PDF பக்கம் 94–98. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.