முரசொலி கடிதங்கள் · 3496
ஒத்துழைத்திட முன் வருவீர்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3496. ஒத்துழைத்திட முன் வருவீர்! உடன்பிறப்பே,
மாற்றுத் திறனாளிகள் ஆங்காங்கு போராட்டம் நடத்துவதாகவும் - ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் - உண்ணாவிரதம் இருப்பதாகவும் ஒருசில ஏடுகளில் செய்திகள் வருகின்றன. மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் அல்லது வேலையில்லா கால நிவாரணமாக மாதந் தோறும் 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் செப்டம்பர் 3ஆம் தேதியிலிருந்து 10ஆம் தேதிவரை மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தவிருப்பதாக அவர்களுக்கான சங்கம் ஒன்று நேற்று அறிவித்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளைப் பற்றி எந்தவொரு தரப்பினரும் கவலைப்படாத நிலையில் நான்தான் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு 2010-2011ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் பத்தி 87, 88, 89, 90, 91, 92, 93 என மொத்தம் 7 பத்திகள் எழுதப்பட்டுள்ளன. இதுவரை எந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையிலும் மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து ஏழு பத்திகள் எழுதப்பட்டதில்லை. அதற்குக் கைமாறாகத்தான் அந்த மாற்றுத் திறனாளிகளில் ஒருசிலர் அரசுக்கு எதிரான இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். எனினும் மாற்றுத்திறனாளிகளுக்காக நிதி நிலை அறிக்கையில் இந்த அரசு குறிப்பிடும்போது,
“மாநில அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை இந்த “மாற்றுத் திறனாளிகள்” பெற்றிட நிர்ணயிக்கப்பட்டுள்ள வருவாய் உச்ச வரம்பு முற்றிலும் நீக்கப்படும். மாற்றுத்திறன் உடையோர் உயர்கல்வி பயில்வதற்கு ஏதுவாகக் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களித்த இந்த அரசு, வரும் கல்வி
ஆண்டில் இருந்து தனிக் கட்டணம் செலுத்துவதில் இருந்தும் விலக்களிக்கும். அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் “மாற்றுத் திறனாளி” மாணவர் இல்லங்களில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு, உணவுச் செலவாக மாதம் ஒன்றுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் ரூபாய் 200 உதவித் தொகை, ரூபாய் 450 ஆக உயர்த்தப்பட்டு இனி வழங்கப்படும். இந்தியாவிலேயே முதல் முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்பு அளித்து நலத்திட்ட உதவிகள் வழங்க தனி நல வாரியம் தமிழ்நாட்டில்தான் அமைக்கப்பட்டுள்ளது.
தங்களைத் தாங்களே பராமரித்துக்கொள்ள இயலாத மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு, வருவாய் உச்சவரம்பு இன்றி, 500 ரூபாய் வீதம் மாதாந்திர உதவித் தொகையை இந்த அரசு வழங்கி வருவதால் 50 ஆயிரம் பேர் பயன்பெற்று வருகின்றனர். கண்பார்வையற்றோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு உதவித் தொகைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஆசிரியப் பணி புரிய சிறப்பு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காது கேளாதோருக்குக் குழந்தைப் பருவத்தின் தொடக்கத்திலேயே கண்டறிந்து சிறப்புக் கல்வி அளிக்கும் பள்ளிகள் மாவட்டந்தோறும் தொடங்கப்பட்டுள்ளன. கை, கால் ஊனமுற்றோருக்குப் பயணச் சலுகைகளுடன், நாட்டிலேயே முதல் முறையாக மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டிகள் முதலான பல்வேறு உதவிக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
வேலைவாய்ப் பற்ற பார்வையற்றோருக்கு நிவாரணத்
தொகை வழங்கும் திட்டம், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு
60 ஆயிரம் பேர் இத்திட்டத்தில் பயன் அடைந்துள்ளனர். இந்தியாவிலேயே முதல் முறையாக தசைச் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் 2008-2009 ஆம் ஆண்டிலிருந்து 1000 பேருக்கு மாத உதவித் தொகையாக 900 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. 2005-2006ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் நலனுக்குச் செலவிடப்பட்ட தொகை ரூபாய் 49 கோடி அளவாக இருந்ததை, வரும் நிதியாண்டில் ரூபாய் 176
கோடியாக உயர்த்தியுள்ளதுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துறை என்னுடைய நேரடி மேற்பார்வையில் இயங்கும்” என்று எழுதப்பட்டிருந்தது.
இன்னும் சொல்லப்போனால், அவர்களையெல்லாம் “ஊனமுற்றோர்” என்று அழைப்பதைத் தவிர்த்து அவர்களின் தனிப்பட்ட திறமைகளைக் கருத்தில் கொண்டு “மாற்றுத் திறனாளிகள்” என்று அழைக்கப்படவேண்டு மென்று அறிவிக்கப்பட்டதே இந்த ஆட்சியிலே தான்.
பார்வையற்றோர்க்கு வழங்கப்படுவதைப் போன்று ஏனைய வேலைவாய்ப்பற்ற அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலை வாய்ப்பற்றோர் நிவாரணத் தொகை - பட்டதாரிகளுக்கு 450 ரூபாயும், 12வது படித்தவர்களுக்கு 375 ரூபாயும், பத்தாம் வகுப்பு மற்றும் அதற்குக் குறைவாகப் படித்தவர்களுக்கு 300 ரூபாயும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு இதற்கு முன்பு இருந்த ஆட்சியில் ஒரு ரூபாய் கூட வழங்கப்பட வில்லை.
2010-2011 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின் அறிவிப்பின்படி “மாற்றுத் திறனாளிகளுக்கான துயர் உறுவோர் நிவாரண நிதி” ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் கடும் வன்முறைச் செயல்களால் பாதிக்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிட நிவாரண நிதி ஒன்று ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு இலட்சம் ரூபாய் வரை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு; ஒன்றுக்கு மேற்பட்ட குறை பாடுடைய மாற்றுத் திறனாளிகள் மற்றும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 1500 பேருக்கு இலவசமாக மடக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்படவுள்ளது. கடும் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கை, கால்களின் தசை இறுக்கமாக இருப்பதாலும், இவர்களது தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில், புதிதாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு நாற்காலிகள் அரசால் 500 பேருக்கு முதல் கட்டமாக வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டப் பேரவை உறுப்பினருக்கும் அந்தந்த தொகுதியில் உள்ள மாற்றுத்
திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வாங்கி வழங்கவென 5 இலட்சம் ரூபாய் வீதம் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்காக கழக அரசின் சார்பில் செய்யப்பட்டுள்ள சாதனைகள் பல முறை தெரிவிக்கப்பட்டிருப்பதால், அதனை மீண்டும் விளக்கிட நான் தற்போது விரும்பவில்லை.
தமிழக அரசின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்காக இவ்வளவு காரியங்களைச் செய்யும் போது, அதை எதிர்த்து போராட்டம் நடத்துகிறீர்களே, உண்ணா விரதம் இருக்கிறீர்களே என்று நானே ஒருமுறை பொது மருத்துவமனையிலே அவர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது நேரில் கேட்டேன். அப்போது அவர்கள் தரப்பில் என்னிடம் கூறப்பட்ட பதில் - “நீங்கள் எங்களுக்காக எதுவும் செய்ய வேண்டியதில்லை. இரண்டு நாட்களாக உண்ணா விரதம் இருந்த எங்களைப் பற்றி யாருமே கவலைப்படாத நேரத்தில் முதலமைச்சராகிய தாங்களே இந்தக் காலை நேரத்தில் உணவுகூட அருந்தாமல் வந்து சந்தித்ததே போதுமானது” என்று கூறினார்கள். அப்போது நான் அவர்களிடம் இந்த அரசின் சார்பில் உங்களுக்கு அடுத்தடுத்து சலுகைகளைச் செய்து வரும்போது, இவ்வாறு யாரிடமும் முறையிடாமல் நேரடியாக உண்ணாவிரதத்தில் ஈடுபடுவது நியாயம்தானா என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நாங்கள் இதற்கு முன்பிருந்த ஆட்சிக் காலத்தில் இப்படியெல்லாம் கேட்டுப் போராட்டம் நடத்தியதில்லைதான். இந்த ஆட்சியிலேதான் போராட்டம் நடத்துகிறோம், உண்ணாவிரதம் இருக்கிறோம். காரணம் இப்போது கேட்டால்தான் ஏதாவது நடக்கும், எங்களுக்கு விமோட்சம் பிறக்கும். அ.தி.மு.க. ஆட்சி என்றால் காவல் துறையினரை விட்டு எங்களை விரட்டி அடிப்பார்கள், கேட்க நாதியே இருக் காது. இப்போது போராட்டம் நடத்தக் காரணமே, எப்படியாவது உங்கள் காதுகளுக்கு செய்தி எட்டினால் உடனடியாக விடிவு காலம் பிறக்கும் என்பதால்தான் இப்படியெல்லாம் செய்கிறோம். நாங்கள் வைக்கின்ற கோரிக்கைகளே அதிகப் பட்சம் என்பது எங்களுக்கு தெரிந்திருந்தும் - விடிவு காலம் பிறக்கும் என்பதால்தான் கேட்கிறோம் என்று சொன்னார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் மாற்றுத் திறனாளிகள் மட்டுமல்ல, யாருக்குமே எந்த விதமான சிரமமும் இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் நான் இந்த வயதிலும் இரவுப் பகலாக உழைக்கிறேன், சிந்திக்கிறேன். யாருக்கு என்ன செய்தால், அவர்களுக்கு நல்வாழ்வு ஏற்படும் என்றுதான் நினைத்துக்கொண்டே இருக்கிறேன். ஆனால் அரசு ஒன்று இருக்கும் போது, அந்த அரசினால் எந்த அளவிற்கு செலவழிக்க முடியும் என்றெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிற து அல்லவா? அரசிடம் இருக்கின்ற நிதியைக்கொண்டு அனைத்துத் தரப்பினரையும் முடிந்த அளவிற்கு திருப்தி செய்ய வேண்டுமென்பதுதான் என்னுடைய எண்ணம். அதுவும் இன்னும் சில மாதங்களில் பொதுத் தேர்தல் வரப்போகிறது என்றதுடன், அதற்குள் தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டுமென்று அனைத்துத் தரப்பினரும் எண்ணுகிறார்கள். அதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் முறைதான் போராட்டம் என்பதெல்லாம்! உண்மையில் அவர்களுக்கு இந்த அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்த வேண்டுமென்பது நோக்கமல்ல. அதே நேரத்தில் ஒருசில அரசியல் வாதிகள் தங்கள் சங்கங்களை வளர்க்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இந்த அப்பாவிகளைத் தூண்டிவிட்டு குளிர்காய எண்ணுகிறார்கள். அதுவும் அந்த அலுவலர்களுக்குத் தெரிகிறது என்ற போதிலும் தங்களையும் அறியாமல் ஆளாகிவிட நேரிடுகிறது என்பதை நான் நன்கறிவேன்.
பொதுத் தேர்தல் நெருங்குகிறது என்பதற்காக போராட்டம் நடத்த முற்படுவோருக்கு நான் சொல்லிக்கொள்கிறேன். இந்த ஆட்சி மாறிவிடும், பிறகு உங்கள் தேவைகள் எதுவும் நிறைவேறாது என்றெல்லாம் நீங்கள் பயப்படத் தேவையில்லை. நிச்சயமாக ஆட்சி மாறாது! ஏன் மாறப்போகிறது? இந்த ஆட்சியிலே உங்கள் தேவைகள் கவனிக்கப்பட வில்லையா? எந்தத் தரப்பினராவது புறக் கணிக்கப்பட்டதுண்டா? ஊழல்கள் நடை பெற்றது உண்டா? உங்களுக்காக இந்த அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட சலுகைகளை நீங்கள் அறிய மாட்டீர்களா? அந்தச் சலுகைகளையெல்லாம் நீங்கள் பெறுகிறீர்களா இல்லையா? அந்த அறிவிப்பின் வாயிலாக நடத்தப்படும் திட்டங்களில்
ஏதாவது குறை உண்டா, ஊழல் உண்டா? சுமார் ஒன்றரை கோடி குடும்பங்களுக்கு வண்ணத் தொலைக் காட்சி பெட்டிகள் வாங்கித் தரப்பட்டுள்ளதே, அதிலே ஏதாவது புகார்கள் வந்ததுண்டா? ஆனால் இந்த ஆட்சியிலே அனைத்துக் கட்சியினரைக்கொண்டு குழு அமைத்து, அந்தக் குழுவினை அழைத்து அவர்கள் முன்னிலையில்தான் “டெண்டர்”களே திறக்கப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த விவரங்களையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் அறிய மாட்டார்களா? எனவே ஆட்சி மாறி விடும், உங்கள் கோரிக்கைகள் நிறைவேறாமலே போய்விடும் என்றெல்லாம் நினைக்கத் தேவையில்லை. எனவே இந்த அரசை எதிர்த்துப் போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணா விரதம் என்பதையெல்லாம் கைவிட்டு, இந்த அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க முன்வாரீர், முன்வாரீர் என்று அழைக்கிறேன். அன்புள்ள, மு.க. 3-9-2010
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 44 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065830_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_44.pdf; PDF பக்கம் 112–117. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.