அடக்கம்

முரசொலி · தொகுதி 44 · கடிதம் 3498

முரசொலி கடிதங்கள் · 3498

அன்பில் சிலையாகி; அழைக்கின்றார்!

நாள் 7.9.2010சுமார் 7 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3498. அன்பில் சிலையாகி; அழைக்கின்றார்!

உடன்பிறப்பே,

8-9-2010 அன்று திருச்சியில் என் அன்பு நண்பர் அன்பில் தர்மலிங்கத்தின் சிலை திறப்பு விழா. அதற்கு நினைத்துத் கொண்டு இருக்கிறேன். சத்துணவுப் நிலையங்கள் விடுக்கோ என முன் எழுந்தால், சுமார் 87 வயது வாழ்ந்துவிட்ட எனக்கு நெருங்கிய பல நண்பர்களைக் கொடுத்து வந்த பெரும் பெயர்களில் ஒன்றுதான் அன்பில் தர்மலிங்கத்தின் பெயர்.

“அன்பில் அழைக்கிறார்” என்று தலைப்பிட்டு 1956ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. கழக மாநில மாநாட்டுக்கு அன்று அண்ணா அறிவித்த கடிதமும் - நமக்கு அழைப்பும் விடுத்தார். முதல் மாநில மாநாட்டில் 1929ஆம் ஆண்டு நடைபெற்றது 10, 11 ஆகிய நாட்களில் தி.மு.க. மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டின் இப்போது அண்ணாவுக்கு நான் அளித்த அழைப்பிதழில் அண்ணா அருமையாக என்ன சொல்லி அழைத்தார் என்பதை நினைவூட்டவா?

“முடியுமா? முடியும்! என்று எண்ணுவோரின்

தொகையையும், வகையையும், அவர்தம் உறுதியையும்,

உற்சாகத்தையும், அவர்தம் உள்ளத்தில் பொங்கி, கண்வழி வழியும் பேரார்வத்தையும் காட்டுகிறேன் வாரீர், என்று அழைக்கிறார், அன்பில்! இலட்சக்கணக்கில் கூடப் போகிறார்கள் - இலட்சிய முழக்கம் கேட்கப் போகிறது. சிங்களத் தீவிலிருந்தும், திருநெல்வேலிச் சீமையிலிருந்தும் சிங்காரச் சென்னையிலிருந்தும்

பிற மாவட்டம் பலவற்றிலிருந்தும் அடலேறுகளும்,

அவர்கட்குக் காதல் தேனில் வீரத்தைக் குழைத்தளிக்கும்

குமரிகளும், வீரரைப் பெற்றெடுத்த தாய்மார்களும்,

அவர்தம் இளமை வளத்தை எண்ணிக்களித்திடும் முதியோரும், வரலாறு அறிந்த மாணவர்களும், புதிய வரலாறு காணும் பாட்டாளித் தோழர்களும், அணி அணியாக வரப் போகிறார்கள், கடல் அலையை மிஞ்சிடும் களிப்பொலி எழுப்பியபடி, குடும்பம் குடும்பமாக வரப் போகிறார்கள்-குதூகலம் காணப் போகிறார்கள். குன்றெடுக்கும் நெடுந்தோளையும், குளிர்மதிப் பார்வையையும், இன்று கண்டோம் இனி வென்றோம், என்று எவரும் ஆர்வத்துடன் கூறிடத்தக்க வகையில் திரண்டு வருகிறார்கள் திருஇடத்தவர்கள்! காண வாரீர், கடமையை உணர வாரீர்! கருத்தளிக்கவும், காரியமாற்றவும், கலங்கா உள்ளம் படைத்தோரே! திரண்டு வாரீர்! தீரரும் வீரருமான திருஇடத்தினர் எத்துணை எழுச்சியுடன் அணி வகுத்து நிற்கின்றனர் என்பதை எவரும் அறியத்தக்க விதத்திலே வந்து சேருமின்! பெற்றேனே இந்த மக்களை, மாற்றான் எனை ஏச, கூசாது கேட்டுக் கிடந்தனரே குனிந்த தலையுடன் - என்னால் சீராட்டி வளர்க்கப்பட்ட இந்த மக்கள் என்று கூறிக் கொண்டிருந்த தாயகம்; இன்று ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியையும் வீரத்தையும் கண்டு, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு “நான் பெற்ற செல்வங்களே! தீர்ந்ததே என் துக்கம். இனி என் தளை உடைபடும் என்ற நம்பிக்கை பிறந்ததடா” என்று வாழ்த்தி வரவேற்கிறது! அன்னையின் பணிக்காக அருமந்த மக்காள், அனைவரும் வருக!! என்றெல்லாம் கூறி அழைக்கிறார் அன்பில்!” என்று அண்ணா அன்று எழுதினார். அந்த அன்பிலுக்கு சிலை

திறக்கும் நிகழ்ச்சிக்கு உன்னை அழைக்க அண்ணாவும் இல்லை,

அந்த அன்பிலும் இல்லை. நான்தான் இருக்கிறேன் உனை அழைக்க. என் வாயார, மனமார உன்னையெல்லாம் திருச்சிக்கு அழைக்கிறேன் இந்த மடலின் மூலமாக!

அண்ணா மறைந்த பிறகு 1990இல் நடைபெற்ற மாநாட்டின் போது நம்மோடு இருந்த - அன்பிலின் மகன் சட்டமன்ற உறுப்பினராக, இளைஞர் அணியின் நிர்வாகியாக இருந்த தம்பி பொய்யாமொழியும் இப்போது இல்லை.

திருச்சியில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் என்ற வரிசையில் அன்பில் தர்மலிங்கத்தில் தொடங்கி, பொன்மலை பராங்குசம், து.ப. அழகமுத்து, திராவிடப் பண்ணை முத்துக் கிருஷ்ணன், குளித்தலை முத்துக்கிருஷ்ணன், எம்.எஸ். மணி, மு.க.து. நடராசன், உப்பிலியாபுரம் அர. நடராசன், இளமுருகு பொற்செல்வி, திருச்சி பாலகிருஷ்ணன், கஸ்தூரி ராஜ், நகரச் செயலாளராக இருந்த ஏ.வி. கிருஷ்ணமூர்த்தி, நாதன் கம்பெனி பாண்டுரங்கம், காமாட்சி. ராபி ஷரீப் என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்! அன்பில் என்பது திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். அன்பில் என்று சொன்னால் நமது இயக்கத்தினருக்கு, ஏன் தமிழகத்திலே உள்ள அனைவருக்குமே அந்த ஊரின் பெயர் ஞாபகத்திற்கு வராது. அன்பில் தர்மலிங்கத்தின் பெயர்தான் ஞாபகத்திற்கு வரும். அன்பில் வந்தார், போனார் என்றே எல்லோரும் பேசுவார்கள். வந்தார், போனார் என்கிறேனே, அதற்கே ஒரு பொருள் உண்டு. அவர் ஓர் இடத்தில் சில மணி நேரங்கள் இருக்க மாட்டார். அவ்வளவு வேலை அவருக்கு. இயக்கக் காரியங்கள் மட்டுமல்ல; மற்றவர்களுக்கும் நலம் பயக்கும் ஒத்தாசைகள் புரிய வேண்டும் என்பதிலும், அதற்காக அலைவதிலும் முயற்சி எடுப்பதிலும் அலாதியான சுவை அவருக்கு! யாரையும் பார்த்தவுடன் “மச்சான்” - “மாப்பிள்ளை” முறை வைத்துத்தான் அழைப்பார். யாராவது தேர்தலிலே வெற்றி பெற வேண்டுமா? அங்கே அன்பில் இருப்பார். யாரையும் எளிதில் நம்பி விடுவார். அதன் காரணமாக நம்பிக்கை மோசத்திற்கு ஆளாகிப் பிறகு தன்னையே நொந்து கொள்கிற காட்சி நமக்கே பரிதாபமாயிருக்கும். அந்த வரிசையில் முதல் இடத்திலே இருக்கும் அன்பில் தர்மலிங்கத்தின் சிலையினைத்தான் வரும் 8ஆம் தேதியன்று நான் திறந்து வைக்கவருகிறேன். அந்த அன்பில் அழைத்து எத்தனையோ முறை நான் திருச்சிக்கு வந்தது உண்டு. ஆனால் அந்த அன்பிலின் சிலையினைத் திறந்து வைக்க நானே வருவேன் என்று நான் நினைத்ததே இல்லை. அந்த அன்பிலுக்கும் எனக்கும் உள்ள நட்பு பற்றியும், தொடர்பு பற்றியும் நினைவூட்டுவதற்கு பல சம்பவங்கள் உண்டு.

1955ஆம் ஆண்டுவாக்கில் திருச்சியில் கழகத் தோழர்களிடையே சற்று ஒற்றுமையின்மை ஏற்பட்டபோது, அண்ணா அவர்கள் திருச்சிக்கே இனி நான் வர மாட்டேன் என்றொரு முடிவினையெடுத்தார். அன்பில் தர்மலிங்கம் தலைமையில் திருச்சி தோழர்கள் எல்லாம் என்னை அணுகியபோது முதலில் அண்ணா ஒப்புக் கொள்ளாமல், என்னை திருச்சிக்கு அனுப்பி முதலில் அங்கே கழகத்திற்குள் ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சி செய்யச் சொன்னார். அவ்வாறே நானும் திருச்சி சென்று அதற்கான செயல்களில் ஈடுபட்ட பின்னர் அண்ணா மகிழ்ந்து, கைத்தறித் துணிகளை விற்பதற்காக கழகம் முடிவெடுத்து திருச்சியில் யார் விற்பது என்ற கேள்வி எழுந்த போது, “திருச்சியில் நானே கைத்தறித் துணி விற்கப் போகிறேன்” என்று அண்ணா அறிவித்தார்.

ஒரு முறை தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளியில் காலையில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டு, அன்று மாலையில் அன்பில் கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக ஒப்புக் கொண்டிருந்தேன். திருமணத்திற்காக நான், மாறன், அன்பில் தர்மலிங்கம், பராங்குசம், பண்ணை முத்து கிருஷ்ணன், குளித்தலை முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் காரில் போய்க் கொண்டிருந்தோம். அது ஒரு ஆற்றங்கரைப்பாதை. நாங்கள் அதே கரையில் இரண்டொரு மைல் தூரம் சென்று அதற்குப் பிறகு ஒரு பாலத்தைக் கடந்து, அடுத்த கரையில் உள்ள திருமண வீட்டிற்கு வந்தாக வேண்டும். அந்தத் திருமண வீட்டிற்கு எனக்கு முன்பு சென்றாக வேண்டுமென்று விரும்பிய அந்தப் பகுதி மக்கள் ஆற்றிலே இறங்கிச் சென்று கொண்டிருந்தார்கள். எங்கள் கார் பாலத்தைச் சுற்றிக் கொண்டு அடுத்த கரை வழியாக வந்தபோது, ஆற்றின் கரையில் ஒரு கூட்டம் நின்றதைக் கண்டு, காரை நிறுத்தி விட்டு, அன்பில் தர்மலிங்கம் அங்கே சென்று என்னவென்று விசாரித்தார். ஆற்றில் இறங்கி வந்த இளைஞர் ஒருவன் நீரில் மூழ்கி அவனைத் தூக்கி வந்து போட்டிருந்தார்கள். அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். பிழைக்கவில்லை. அவனது உயிரற்ற உடலை அனுப்பிவிட்டு திருமண வீட்டிற்குச் சென்று மணவிழாவினை நடத்தி வைத்து விட்டு, கல்லணைக்குத் திரும்பினோம்.

மாலையில் பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டுத் திரும்பும்போது, இரட்டை மாட்டு வண்டியில் சென்றால் சுற்றிக் கொண்டு போக வேண்டும், கொள்ளிடம் ஆற்றில் இறங்கி எதிரே உள்ள கல்லணைக்குச் சென்று விடலாம் என்று அனைவரும் கூற நானும் தலையை அசைத்து விட்டேன். கொள்ளிடத்தின் குறுக்கே இறங்கி கொஞ்ச தூரம் சென்றிருப்போம். திடீரென இடியுடன் கூடிய மழை. ஆற்றில் வரவர நீர் மட்டம் உயர்ந்து கொண்டே வந்தது. மாறனை அன்பில் தர்மலிங்கம் தன் தோளில் தூக்கிக் கொண்டார். இரத்தினம் என்ற ஒரு தோழர் என்னைத் தூக்கிக் கொண்டார். நேரமாக வெள்ளம் பெருகி, பிழைத்து கரையேறுவோமா என்பது சந்தேகத்திற்குரியதாகி, எப்படியோ நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இரவு ஒரு மணி அளவில் கரையேறினோம். இதுவும் ஒரு மறக்க முடியாத சம்பவம் ஆகும். கழக முன்னணி தளபதிகளில் ஒருவரான என் ஆருயிர் நண்பர் அன்பிலுக்கு 1992-93ஆம் ஆண்டுகளில் உடல் நலம் ஓரளவிற்குப் பாதிக்கப்பட்டு, அவரால் சரியாகப் பேச முடியாத நிலை ஏற்பட்டது. பேசிக் கொண்டேயிருக்கக் கூடிய அவரால் பேசாமல் இருக்க முடியவில்லை. 93ஆம் ஆண்டு மார்ச் முதல் வாரத்தில் உடல் நிலை சற்று மோசமாகி தனியார் மருத்துவமனை ஒன்றில் திருச்சியிலே உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்தார். சங்கரன்கோவில், தூத்துக்குடி, கன்யாகுமரி மாவட்டங்களில் சுற்றுப் பயண நிகழ்ச்சிக்காக தேதி கொடுத்திருந்த நான் நேராக அங்கே செல்லாமல், மார்ச் 5ஆம் தேதி திருச்சி சென்று அன்பிலை மருத்துவமனையிலே பார்த்து விட்டுத்தான் கார் மூலம் சங்கரன்கோவில் கூட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தேன். சென்று கொண்டிருக்கும்போதே, அந்தச் சுயமரியாதைச் சுடரொளி, என் அன்புக்கு இனிய நண்பன், அண்ணாவின் ஆருயிர்த் தம்பி, பெரியாரின் செல்லப் பிள்ளை 45 ஆண்டு காலம் என்னுடன் பழகிய அந்த மாவீரன் அன்பில் தர்மலிங்கம் மறைந்து விட்ட செய்தி வந்தது. உடனடியாக திருச்சிக்குத் திரும்பிட நான் துடித்தேன். இருந்தாலும் சங்கரன்கோவில் கூட்டத்தில் 15 நிமிடம் அன்பில் தர்மலிங்கம் பற்றியே பேசிவிட்டு திருச்சி திரும்பினேன். அன்பில் தர்மலிங்கம் தன் வாழ்நாளில் பல பதவிகளை வகித்தவர். ஊராட்சி மன்றத் தலைவராக, கூட்டுறவு சங்க

இயக்குநராக, திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராக, சென்னை கூட்டுறவு வங்கி இயக்குனராக, திருச்சி மாவட்ட கழகத்தின் செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக, வேளாண்மைத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். என்னுடைய அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராக மட்டுமல்லாமல், உள்ளாட்சித் துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, வருவாய்த் துறை ஆகிய துறைகளையும் அவர் பொறுப்பேற்று நடத்தினார்.

அண்ணாவின் அமைச்சரவையிலேயே இடம் பெற்றிருக்க வேண்டிய அன்பிலை; 1971ஆம் ஆண்டு நான் இரண்டாவது முறையாக முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தபோது; 8-3- 1972 அன்று எனது அமைச்சரவையில் வேளாண்மைத்துறை அமைச்சராக ஆக்கினேன்.

1986ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அன்பில் தர்மலிங்கத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் “பெரியார் விருதினை” என் கையினால் வழங்கி நானே பெருமைப்பட்டுக் கொண்டேன்.

அன்பில் மறைந்த போது, முரசொலியில் நான் எழுதினேன் -

“திருச்சியில் 1956 கழக மாநில மாநாட்டின் போது ‘அன்பில் அழைக்கின்றார்” என்பது அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதிய கடிதத்தின் தலைப்பு. அது அண்ணா வழங்கியுள்ள பொருள் பொதிந்த சொற்றொடர்களில் ஒன்றாக ஆகிவிட்டிருப்பதை எப்படி மறக்க இயலும்? அந்த அன்பில் இன்று இல்லை. படமாகி விட்டார். இந்த முடிவு இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு எனினும், இன்னும் அவர் பழமாக, கிழமாக மாறி அப்போதும் இந்த இயக்கத்தின் பாதுகாப்பு அரணாகத் திகழ்வார் என்றுதான் நம்பியிருந்தேன். நானிருந்தாலும், இல்லாவிட்டாலும் இல்லத்தில் எம் அஞ்சுகத்தாயின் கையினால் குறைந்தது பத்து இட்லிகளாவது பரிமாறச் செய்து உண்டு செல்லும் அந்தக் காலம் முதல் எங்கள் குடும்பத்தில் ஒருவரானவர்தானே அவர். மாவட்டத்திலும் சரி, மாநில முழுமையும் சரி, எத்தனை செல்வாக்கு அவருக்கு! அமைச்சராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரைச் சுற்றி ஒரு கூட்டமே இருக்கும். ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்திலே பிறந்து, உழைப்பால் உயர்ந்து, பெரியார், அண்ணா, இராஜாஜி,

பெருந்தலைவர் காமராஜர், காயிதேமில்லத் போன்றவர்களின் அன்பைப் பெற்ற என் நண்பர் - என் உயிர்த் தோழர் - கழக ஆட்சியில் வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்ததையும், அத்துறையினைத் திறம்பட வளர்த்ததையும் எண்ணித்தான் திருச்சி மாவட்டத்தில் 1989 ஆம் ஆண்டு ‘அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி’ ஒன்றினைத் தொடங்கினேன் கழக அரசு சார்பில்! அன்பிலுக்கும், அருமை நண்பர் எம்.ஜி.ஆருக்குமுள்ள நட்பைப் பத்திரிகைகள் எல்லாம் படம் போட்டு எழுதியுள்ளனவே இப்போது. அந்த எம்.ஜி.ஆர் அவர்களின் நண்பர் அன்பிலின் பெயரை நான் வைத்ததைத் தான்; இந்த ஆட்சி வந்ததும் வராததுமாகத் தூக்கி எறிந்து விட்டது. ஆனால் புகழ்வானின் உச்சியிலே கொடி போட்டு, இலட்சோப இலட்சம் கழகத் தொண்டர்களின் உள்ளத்தில் குடி கொண்டுள்ள, அந்த விவசாயக் குடும்பத்து வீரன் - கொள்கைத் தங்கம், அன்பில் தர்மலிங்கத்தின் பெயர் என்றைக்கும் யாராலும் அழிக்க முடியாதது!

நண்பனே! அன்பில்! இப்போதும் நீ எங்கள் வீட்டுக்குள் நுழைந்து தாழ்வாரம், கூடம், இங்கெல்லாம் நடந்து கொண்டிருப்பது போலவே இருக்கிறது! அண்ணா அறிவாலயத்தில் என்னருகிலும் பேராசிரியர் அருகிலும் அமர்ந்து இருப்பது போலவே உணருகிறேன்! நீ எங்கும் போய்விடவில்லை! எங்களுக்குள்தான் இருக்கிறாய்!

அன்பில் பிரிந்துவிட்டக் கொடுமைக்குப் பிறகு அவர் பெற்ற மூத்த செல்வன் என்னை அன்பொழுக அப்பா, அப்பா என்று அழைப்பானே, அன்பு மகன் பொய்யா மொழி, அவனை சட்டப் பேரவை உறுப்பினராக ஆக்கினேன். ஆனால் அவன் தன் தந்தையைப் பின் தொடர்ந்து மிகச் சிறு வயதிலேயே மறைந்து விட்டான். அன்பிலின் இரண்டாவது மகனும், பொய்யாமொழியின் தம்பியுமான பெரியசாமியை திருச்சி இரண்டாவது தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக ஆக்கியுள்ளோம். அவனைப் பார்க்கும் போதெல்லாம் மறைந்த மாவீரர்களின் நினைவு என் நெஞ்சில் எத்தனையோ பழைய சிந்தனைகளை எழுப்பிடத் தவறுவதில்லை.

அன்பிலும் நானும் நண்பர்களாக தொடங்கியது - அடுத்த தலைமுறையில் தம்பி மு.க. ஸ்டாலினும், அன்பிலின் மகன்

பொய்யா மொழியும் நண்பர்களாக இரண்டாம் தலைமுறையில் தொடர்ந்து - இப்போது ஸ்டாலினின் மகன் உதயநிதியும், பொய்யா மொழியின் மகன் மகேந்திரனும் நண்பர்களாகித் தொடருகிறது நட்பு. அந்த நட்பின் அடையாளச் சின்னம், அன்பிலின் சிலையைத் திறக்கத்தான் திருச்சி வருகிறேன்; அங்கே திருச்சி தீரர்களுடன் நீயும் இருப்பாய் என்ற நம்பிக்கையுடன்! ஆம்; என்னையும் உன்னையும் சிலை வடிவில் நின்று சிரித்த முகத்துடன் அன்பில் அழைக்கின்றார் - எத்தனையோ கோபதாபங்கள் - எம்மிடையே ஊடல்கள் - உறவுகள்! எதையும் உரிமையுடன் - உணர்வு கலந்த உண்மை நட்புடன் - கணமும் பிரியாமல் கண்ணின் கருவிழி போல என்னையும் - என் நட்பையும் - எம் கழகத்தையும் காத்து நின்ற காவலன் இன்றில்லையெனினும் இதோ - தம்பி நேருவின் தளராத உழைப்பின் சின்னமாக தடந்தோள் உயர்த்தி நிற்கும் - அந்தத் தங்கத் திருமகனின் பெயரை நெஞ்சில் தாங்கி - அன்று திருச்சியில் நடைபெற்ற முதல் மாநில மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார் அண்ணா; “அன்பில் அழைக்கிறார்” என்று! இதோ நானும் அழைக்கின்றேன்! வா! உடன்பிறப்பே! அந்தத் திருநகர் திருச்சியில் சந்திப்போம்! அன்புள்ள, மு.க. 7-9-2010

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 44 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065830_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_44.pdf; PDF பக்கம் 125–132. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 44-இல் மேலும் கடிதங்கள்