அடக்கம்

முரசொலி · தொகுதி 44 · கடிதம் 3497

முரசொலி கடிதங்கள் · 3497

வன்முறைக்கு வக்காலத்து வாய்மை ஆகுமா?

நாள் 4.9.2010சுமார் 6 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3497. வன்முறைக்கு வக்காலத்து வாய்மை ஆகுமா? உடன்பிறப்பே,

அகில இந்திய அளவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய பொதுச் செயலாளராகவும், இடதுசாரி கட்சிகளுடைய பிரதிநிதியாகவும் விளங்குகிற தோழர் ஏ.பி. பரதன் அவர்கள் ஆத்திரமூட்டக் கூடிய விஷயங்களைக் கூட, அமைதியான வார்த்தைகளைக் கோத்தெடுத்து வாதாடக் கூடிய இயல்புடையவர் மட்டுமல்ல; இடதுசாரி இயக்கங்களில் இரண்டறக் கலக்காத பிரமுகர்களையும் விரோதியாகக் கருதி விஷத்தைக் கக்காத பண்புடையவர். ஆனால் அவரா இப்படிப் பேசியிருக்கிறார் என்று அதிர்ந்திடும் அளவுக்கு, அவர் நமது கழகத்தைப் பற்றி - என்னைப் பற்றி அளித்துள்ள பேட்டி நம்பக்கூடியதாக இல்லை யெனினும் - யாரோ சிலரால் நம்மைப் பற்றித் தூவப்பட்ட நச்சுக் கருத்துக்களுக்கு ஆட்பட்டு அவர் கூறியுள்ள கடுமையானதும் காரமானதுமான விமர்சனத்திற்கு நான் விளக்கம் கூறியே தீரவேண்டிய நிலையில் இருக்கிறேன்.

“தோல்வி பயத்தில் கம்யூனிஸ்ட்களை முதல்வர் சாடியிருக்கிறார்” என்று ஏ.பி. பரதன் சொல்லியிருப்பதைப் படித்தபோது எனக்கு சிரிப்புத்தான் வந்தது. நான் எத்தனையோ தோல்விகளை என்னுடைய அரசியல் வாழ்வில் சந்தித்திருக்கிறேன். அதற்காக நான் வாடியதும் இல்லை - யாரையும் தோழர் பரதன் சொல்வது போல சாடியதும் இல்லை.

கழக அரசுக்கும், ஓரிரு சத்துணவு பணியாளர் சங்கங்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையில் - அரசு எடுத்த நிலைக்கு நாம் விளக்கம் தர வேண்டிய சூழலில் - இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலை மனதிலே வைத்து தூண்டி விடும் போராட்டங்களில் ஒன்றாக இது அமைந்திருக்கிறது என்பதையும்

- இதற்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதையும் - இன்னும் சொல்லப்போனால் சத்துணவு பணியாளர்களில் பெரும் பகுதியினர் - ஏன் அந்த பணியாளர்களுக்கான பல்வேறு சங்கங்களை வைத்திருப்பவர்களே - இவர்கள் நடத்துகின்ற போராட்டத்திற்கு ஆதரவாக இல்லையென்பதையும் - சில மாதங்களுக்கு முன்பு கூட அந்தச் சத்துணவு பணியாளர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் தமிழகம் முழுவதிலுமிருந்து சென்னை வந்து எனக்கு நன்றி தெரிவிக்கும் மாநாட்டினை நடத்தினார்கள் என்பதையும் - தற்போது இவர்களின் குறிப்பிட்ட ஒரு சங்கத்தினர் எடுத்து வைக்கின்ற கோரிக்கைகள் அனைத்தும் எந்தவொரு மாநிலத்திலும் - கம்யூனிஸ்ட்கள் ஆளுகின்ற மாநிலங்களிலே கூட நிறைவேற்றப் படவில்லை என்பதையும் எடுத்துச் சொல்லும் போது - இதுபோன்ற போராட்டங்களைத் தூண்டிவிட்டு - சாலை மறியலில் தொடங்கி - தலைமைச் செயலகக் கோட்டையையே முற்றுகையிடுவோம் என்று போராட்டம் விரிவாக்கப்படும்போது - சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்கின்ற கடமை, பொறுப்பு எந்தவொரு கட்சி அரசானாலும் தவிர்க்க முடியாதவையாகும். ஆர்ப்பாட்டம் - போர்ப்பாட்டு - கோட்டை முற்றுகை - மாநிலம் முழுவதிலுமிருந்து பேருந்துகளில் படையெடுப்பு - என்றெல்லாம் பத்திரிகைகளில் விளம்பரம் செய்துவிட்டு - தேதியும் குறித்துவிட்டு - பேரணியாகப் புறப்பட்டு வருவார்களேயானால் - சட்டப்படி அவர்களைத் தடுக்க - மீறியவர் களை கைதுசெய்ய - ஒரு அரசுக்குக் கடமையும், உரிமையும் உண்டு என்பதை ஏனோ அவர்கள் அறியவில்லை. கழக அரசைப் பொறுத்தவரையில் சத்துணவு ஊழியர்கள் ஆனாலும் - வேறு எந்த ஊழியர்கள் ஆனாலும் அவர்களது கோரிக்கைகளை அலட்சியப்படுத்தியதில்லை. அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தத் தவறியதுமில்லை. இன்னும் சொல்லப்போனால் மத்திய அரசு அலுவலர்களுக்காக ஊதியக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்தக்குழு அளித்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கின்ற போதும், அகவிலைப்படி உயர்வினை

மத்திய அரசு உயர்த்துகின்றபோதும் அந்தப் பரிந்துரைகளை மற்ற மாநிலங்களையெல்லாம் முந்திக் கொண்டு அறிவித்து நடைமுறைப்படுத்துகின்ற மாநிலம் தமிழகம் என்பதை எந்தவொரு அரசு அலுவலரும் மறுத்திட முன்வர மாட்டார்கள். தி.மு. கழக ஆட்சிக் காலம்தான் அரசு அலுவலர்களின் பொற்காலம் என்ற சொற்றொடர் நிலைத்துவிட்ட ஒன்றாகும். ஆனால் இந்தப் பிரச்சினை எப்படி ஏற்பட்டது என்பதையெல்லாம் விவரமாகத் தெரிந்து கொள்ளாமலேயே டெல்லியிலிருந்து வந்த தோழர் ஏ.பி. பரதன் அவர்களுக்கு இங்குள்ள கம்யூனிஸ்ட்கள் சொன்னதுதான் உண்மையாகத் தோன்றி, உஷ்ணமான வார்த்தைகளை நம் மீது உதிர்த்திருக்கிறார்.

சரி; அதுதான் போகட்டும்! இவர்கள் வைத்த கொள்ளி இந்தியாவில் சில மாநிலங்களில் மாவோயிஸ்ட் தாக்குதலாகப் பரவுகிறது என்பதை நான் வேதனையோடு சுட்டிக் காட்டியிருப்பதைக் கூட தோழர் பரதன் விமர்சித்திருக்கிறார். மாவோயிஸ்ட்களுக்கும் - கம்யூனிஸ்ட்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அவர் கூறியதுடன், நான் வீண் பழி சுமத்திவிட்டதைப் போல வெகுண்டெழுந்து வியாக்யானம் செய்திருக்கிறார்.

ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன்.

நக்சலைட்டு அமைப்பு என்பது 1967 தேர்தலுக்குப் பின்னர் மேற்கு வங்கத்தில்தான் ஆரம்பமானது. அன்று அவர்கள் “நக்சல்பாரிகள்” என்று அழைக்கப்பட்டார்கள். பின்னர் அவர்கள் இயக்கம் வேறு சில மாநிலங்களுக்கும் பரவியபோது “நக்சலைட்டுகள்” என்று அழைக்கப்பட்டார்கள்.

நக்சலைட்டுகள் எங்கிருந்து உருவானார்கள்? கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்தே - குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து அவர்கள் புதிய இயக்கம் கண்டார்கள்.

அப்போது அவர்கள் - இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பி சட்டசபைகளுக்கும், பாராளுமன்றத்துக்கும் போட்டியிட முடிவு செய்ததன் மூலம் மார்க்சிசம், லெனினிசம் என்ற மகோன்னதமான கொள்கையை கைவிட்டு, அதனைக் குழி தோண்டி புதைத்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார்கள்.

ஜனநாயகத்தின் மூலம், சட்டசபை நுழைவின் மூலம் ஒருபோதும் புரட்சியை உருவாக்க முடியாது - பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் கொண்டுவர முடியாது என்று உரத்துக் கூறிய அவர்கள் இரு கம்யூனிஸ்ட் கட்சியினரையும் திருத்தல்வாதிகள், திரிபுவாதிகள் என்றெல்லாம் அழைத்தார்கள்.

தோழர் பரதன் கோவையில் அளித்த பேட்டியில் “அடிக்கடி கருணாநிதி கம்யூனிஸ்டுகள் ஆளும் மாநிலங்களைச் சுட்டிக் காட்டுகிறார். ஒரு சில விஷயங்களில் அது சரி தான்” என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். அவர் கூறுவதைப் போல, மாவோயிஸ்ட்களுக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் இடையே ஏதோவொரு உறவு இல்லை என்றால், மத்திய அரசு மாவோயிஸ்டுகளுக்கு தடை விதித்து, அவர்களை தீவிரவாதிகள் என அறிவித்த போது, மத்திய அரசின் இந்த முடிவுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் திரு. பிரகாஷ் காரத் அவர்கள் இந்தப் பிரச்சினையை அரசியல் ரீதியாகத்தான் தீர்க்க வேண்டுமே தவிர தடையால் ஒரு பயனும் ஏற்படாது என்று தெரிவிக்கவில்லையா? இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எம்.பி. குருதாஸ் குப்தா, மாவோயிஸ்ட்களை தீவிரவாத இயக்கமாக அறிவித்து, அவர்களை தடை செய்ததற்குப் பதிலாக, அரசியல் ரீதியாக அவர்களை எதிர்த்து வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று சொன்னாரா இல்லையா?

மாவோயிஸ்ட்களுடன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாசம் இல்லையென்றால், 3-4-2008 தேதிய “தீக்கதிர்” நாளேட்டில் நேபாள அரசின் வெளி உறவுத் துறை அமைச்சரும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக் குழு உறுப்பினருமான சகானா பிரதான் அளித்த பேட்டி எவ்வாறு வெளியிடப்பட்டது? அந்தப் பேட்டியிலே மாவோயிஸ்டுகள் தேசிய நீரோட்டத்திலும் பொதுவான மக்கள் இயக்கங்களிலும் பங்கேற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியது வெளியிடப்பட்டிருந்ததா அல்லவா? அது மாத்திரமா?

14-4-2008 அன்று “ஜனசக்தி” தலையங்கத்தில்,

“மன்னர் ஆட்சி முற்றுப் பெற்று, புத்தம் புதியதாய் பிறந்த ஜனநாயகத்தின் மழலை சத்தம் நேபாளத்திலிருந்து

நம் காதுகளில் இனிமையாகக் கேட்கத் தொடங்கியுள்ளது. பெருவாரியான வாக்குகளைப் பெற்று மாவோயிஸ்ட்கள் வெற்றிபெறவிருக்கிறார்கள். இனி நேபாளத்திற்குப் புதிய வாழ்க்கை கிடைக்கும் என்பதை உறுதியாக நம்பலாம். மாவோயிஸ்டுகளுக்கு வாழ்த்து சொல்லும் அதே நேரத்தில் பொதுவுடமையின் மிகச் சிறந்த ஆட்சியை இவர்கள் அமைத்துக்காட்ட வேண்டும் என்பதும் முக்கியமானதாகும்” என்று எழுதப்பட்டது மறந்து விடக்கூடிய ஒன்றல்லவே!

30-4-2008 தேதிய “ஜனசக்தி”யில் சி. மகேந்திரன் எழுதிய கட்டுரையில் “மிகவும் பிற்போக்கு அராஜகத்தைக் கொண்ட மன்னராட்சிப் பாதையிலேயே நேபாளம் எந்த மாற்றமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தது. உலகின் எந்த ஒரு நாட்டின் மாற்றங்களும், கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களால்தான், சாதிக்க முடியும் என்பது உலகில் நிரூபிக்கப்பட்ட உண்மை. வீரம் செறிந்த மாவோயிஸ்ட் புரட்சியாளர்களுக்கும் மன்னருக்கும் இடையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தில், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் மன்னராட்சிக்கு ஆயுதம் வழங்கினார்கள் என்ற உண்மையை யாரும் மறந்து விட இயலாது.” என்று எழுதியது மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாகத்தானே?

9-5-2008 தேதிய “ஜனசக்தி”யில் செ. காமராசு அவர்கள் எழுதிய கட்டுரையில் - “உலகின் ஒரே ஓர் இந்துத்துவ அரசு என்ற முகமூடியை அகற்றி மதச்சார்பற்ற நேபாளக் குடியரசு என்ற மகுடத்தை சூட்டிக் கொள்ள இருக்கிறது. புதிய நேபாளம், மத அடிப்படைவாத மன்னராட்சி என்ற சிதிலமடைந்த பழமை யான கோட்டையைத் தகர்த்து ஜனநாயகக் கூட்டாட்சிக் குடியரசை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட இருக்கிறது. புதிய நேபாளத்தை நிர்மாணிக்க வேண்டிய மாபெரும் கடமையை மாவோயிஸ்டுகளிடம் கொடுத்திருக்கிறார்கள் மக்கள். மாவோயிஸ்டு கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது” என்று எழுதவில்லையா?

அவ்வளவு ஏன், இன்று கோவையில் பேட்டியளித்துள்ள தோழர் ஏ.பி. பரதன் அவர்களே, “நேபாள மாவோயிஸ்டுகளின் வெற்றி தெற்காசியாவில் மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று கூறிடவில்லையா?

மாவோயிஸ்ட்கள்பால் கம்யூனிஸ்ட்களுக்கு அன்பு இல்லை என்றால், பாசம் இல்லை என்றால் இந்தக் கருத்துக்கள் எல்லாம் அவர்களின் இதழ்களில் ஏன் வெளியிடப்பட்டன? இதைத் தானே நான், அவர்கள் வைத்த கொள்ளிதான் இந்தியாவில் சில மாநிலங்களில் “மாவோயிஸ்ட்” தாக்குதல்கள் என்று எழுதி யிருந்தேன். அதற்காகத்தான் பரதனில் தொடங்கி இங்குள்ள கம்யூனிஸ்ட்கள் வரை என்மீது தாண்டிக் குதிப்பது என்ன நியாயம்? இங்குள்ளவர்கள் நம் மீது பாய்வதிலாவது ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் எதிலும் ஆழமாகவும், தீவிரமாகவும் சிந்தித்துப் பேசக் கூடிய பரதன் அவர்கள் இங்குள்ள கம்யூனிஸ்ட்களின் வன்முறைப் போராட்ட அறைகூவல்களுக்குத் துணை போகலாமா? குறிப்பு:- இந்த ஆண்டு மே திங்கள் இறுதியில் செய்தியாளர்கள் என்னைச் சந்தித்த போது, “நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்கள் சமீப காலமாக பொது மக்கள் மீது தாக்குதல் தொடுக்கிறார்கள், அந்தப் பிரச்சினையை சமாளிப்பது என்பது மத்திய அரசுக்கு ஒரு பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது, அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று கேட்ட நேரத்தில் நான் அளித்த பதில் -- “அவர்களது இலட்சியங்கள் உயர்ந்தவைகளாக இருக்கலாம். அவர்களது கொள்கைகள் சிலாக்கியமானவைகளாக இருக்கலாம். ஆனால் அவற்றை நிறைவேற்றுவதில் இப்போது அவர்கள் கையாளுகின்ற முறைகள் மனித நேயத்திற்கு முற்றிலும் விரோதமானவைகளாக இருக்கின்றன. இன்றைக்குக் கூட (30-5-2010) ஒரு பத்திரிகையிலே பார்த்தால், ரெயிலைத் தகர்த்ததில் மாண்டுபோனவர்களின் படங்கள் எல்லாம் வெளிவந்திருக்கின்றன. அதிலே மிகப் பரிதாபகரமான ஒரு காட்சி - இறந்துபோன ஒரு குழந்தையின் சவத்தை பயணிகள் தூக்கிச் செல்கின்ற காட்சி. இதிலே அந்தக் குழந்தைகளுக்கும் மாவோ இயக்கத்திற்கும் எந்தவிதமான மாறுபாடான கருத்தும் கிடையாது. ஆனால் இப்போது ஒரு புது முறை - பழைய முறைதான் - இருந்தாலும் புதுமுறையாகக்கையாளப்படுவது - சமுதாயத்திலே உள்ள - ஆண்கள், பெண்கள், குழந்தைகள், மற்றவர்கள் இறப்பைப் பற்றிக் கவலைப் படாமல் - தங்களின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்று கருதுகின்ற நிலை

வளருவது நல்லதல்ல. அந்த இயக்கங்களின் அடிப்படையான பொதுவுடைமைக் கொள்கைகளில் இந்த முறை சரி தானா என்பதை அந்த இயக்கங்களின் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். இன்று நேற்றல்ல, நீண்ட காலமாக நான் சொல்லி வருகின்ற ஒரு கருத்து இது. அந்தக் கருத்தை இந்தியாவிலே எங்கேயோ ஒரு மூலையில் - தமிழ்நாட்டிலேயிருந்து நான் ஒலிக்கின்றேன் - அந்தக் கருத்துக்கு மாவோ தலைவர்கள் மதிப்பளித்து மனித நேயத்தைக் காப்பாற்றுவதற்குப் பக்க பலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்” என்பதாகும். உடன்பிறப்பே, இன்று இந்தக் கடிதம் உனக்கு எழுதும்போது என்னுடைய இந்தக் கருத்தையும் சம்பந்தப் பட்டவர்கள் யோசிக்க வேண்டுமென்பதற்காகவே தந்துள்ளேன். அன்புள்ள,

மு.க.

4-9-2010

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 44 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065830_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_44.pdf; PDF பக்கம் 118–124. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 44-இல் மேலும் கடிதங்கள்