முரசொலி கடிதங்கள் · 3501
நிந்தனை விடுத்து; சிந்தனை செய் மனமே!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3501. நிந்தனை விடுத்து; சிந்தனை செய் மனமே!
உடன்பிறப்பே,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடான “ஜனசக்தி”யில், 18-9-2010 அன்று அந்தக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர், தோழர் திரு. தா. பாண்டியன் அவர்கள் “குடிசைகள் இல்லாத தமிழகம்... மலரட்டும்” என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரையினை எழுதியிருக்கின்றார். அந்தக் கட்டுரையின் முதல் பகுதியில் “குடிசைகள் இல்லாத தமிழகத்தை அமைப்போம் என அறிவித்தவுடன் அறிவிப்பை கொள்கை ரீதியில் வரவேற்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இன்றைய தோழமை நினைவு வந்துவிட்டது போலும்! உடனே தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் குடிசைகள் எத்தனை? எப்பொழுது கணக்கு எடுத்தீர்கள்? ஏதோ ஒரு மதிப்பீட்டின்படி 21 லட்சம் குடிசைகள் என்று சொல்வதா? இதற்கான ஆய்வு, கணக்கெடுப்பு நடத்தப்பட்டதா? உத்தேசக் கணக்கா? என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டிருக்கின்றார்.
அரசு சார்பில் இத்தகைய ஒரு பெரிய அறிவிப்பு செய்யப்படுகின்ற நேரத்தில் கணக்கெடுக்காமலா அறிவிக்கப்படும்? தோழர் பாண்டியன் அவர்களிடம் ஒரு குறைபாடு உண்டு. அவரிடமே அதை நான் ஒரு முறை சொல்லியிருக்கிறேன். அதாவது பத்திரிகைகளை முறையாகப் படிப்பது இல்லை. 6-1-2010 அன்று தமிழக ஆளுநர் பேரவையில் உரையாற்றும்போதே, “தமிழகமெங்கும் ஏழை எளியோர் மண் சுவர்களால் ஆன கூரை வீடுகளில் வசித்து வருவதால், இயற்கை இன்னல்களை எதிர்கொள்ளும் துயர்மிகு நிலை இன்னமும் தொடர்கிறது. கடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில், நமது மாநிலத்தில் ஊரகப் பகுதிகளில் மட்டும் இத்தகைய வீடுகளின் எண்ணிக்கை சுமார்
21 இலட்சம் என அறியப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசின் நிதி உதவியுடன் நாடு தழுவிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்திரா வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் மட்டும் இக்குடிசை களை நமது மாநில அளவில் நிரந்தர இல்லங்களாக மாற்ற வேண்டும் என்றால் அதற்கு இன்னும் 30 ஆண்டுகள் ஆகும். இந்த நிலையை நெஞ்சில் நிறுத்தி, முதல் கட்டமாக, ஊரகப் பகுதிகளில் 21 இலட்சம் வீடுகளில் வசிக்கும் ஏழை எளியோரின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் இந்த வீடுகள் அனைத்தையும் காங்கிரீட் கூரை கொண்ட நிரந்தர இல்லங்களாக தமிழக அரசின் நிதியைக் கொண்டே மாற்றி அமைத்து, அவற்றை இலவசமாக அளிக்கும் மாபெரும் திட்டம் ஒன்றை இந்த அரசு வகுத்துள்ளது. 2010-2011ஆம் ஆண்டு தொடங்கி, இந்தத் திட்டத்தின் கீழ் ஆறு ஆண்டுக் காலத்தில் மண் சுவர்களால் ஆன 21 இலட்சம் கூரை வீடுகளுக்குப் பதிலாக நிரந்தர வீடுகள் இந்த அரசினால் கட்டித் தரப்படும்” என்று தெரிவிக்கப்பட்டு, அது அனைத்து ஏடுகளிலும் வெளிவந்துள்ளது.
இந்த அறிவிப்பு அப்படியே நின்று விடாமல் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு 3-3-2010 அன்று திருச்சியில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து தொடக்க விழா நடைபெற்றபோது அதிலே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றத் தலைவர் நண்பர் சிவபுண்ணியம் அவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றத் தலைவர் செல்வி பாலபாரதி அவர்களும் கலந்து கொண்டு இத்திட்டத்தை வரவேற்றுப் பாராட்டியதோடு, சில திருத்தங்களையும் குறிப்பாக இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடு ஒன்றுக்கு 60 ஆயிரம் ரூபாய் என்பது போதாது, அதனை சற்று உயர்த்திட வேண்டுமென்று வலியுறுத்திப் பேசினார்கள்.
அவர்களுடைய அந்தக் கருத்துக்களைக் கூட அலட்சியப்படுத்தாமல் வீடு ஒன்றுக்கு 60 ஆயிரம் ரூபாய் என்பதை 75 ஆயிரம் ரூபாய் என்று உயர்த்தி அறிவித்தேன் என்பதை அனைவரும் அறிவார்கள். இவ்வளவிற்கும் பிறகு நேற்றையதினம் தா.பாண்டியன், தமிழ் நாட்டில் உள்ள மொத்தக் குடிசைகள் எத்தனை, எப்போது கணக்கெடுத்தீர்கள் என்றெல்லாம் கேட்பது சரிதானா? உள்ளபடியே இந்தத் திட்டத்தை வரவேற்கும் செயல்தானா என்பதை அந்தக் குடிசை வீடுகளில்
குடியிருக்கின்றவர்களுக்காக குரல் எழுப்பும் கம்யூனிஸ்ட் கட்சியின் நண்பர்கள் ஒரு சிலராவது எண்ணிப் பார்க்க வேண்டும்.
வீடு ஒன்றுக்கு மூன்று இலட்சம் ரூபாய் ஒதுக்க வேண்டுமாம்! வீட்டின் அளவை அதிகப்படுத்த வேண்டுமாம்! மலிவான பரிந்துரைகளை வாரி இறைக்கிறார்கள். தற்போது அரசு அறிவித்துள்ள வீடு ஒன்றுக்கு 75 ஆயிரம் ரூபாய் என்பதற்கே ஆண்டு ஒன்றுக்கு 2250 கோடி ரூபாய் செலவாகும். இதை மூன்று இலட்சம் ரூபாயாக உயர்த்தினால் ஆண்டு ஒன்றுக்கு 9000 கோடி ரூபாய் தேவைப்படும். உண்மையில் இந்தத் திட்டம் நிறைவேறி கழக அரசுக்கு நல்ல பெயர் வந்து விடக் கூடாது என்பதுதான்! அதனால்தான் வேண்டுமென்றே இப்படிப்பட்ட பரிந்துரைகளை கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாண்டியனார் கூறுகிறார் என்பதை தமிழ்நாட்டு மக்களே புரிந்து கொள்வார்கள்!
தா. பாண்டியனை விட ஒரு படி மேலே சென்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக இருந்து, தி.மு. கழகத்தோடு தோழமை பூண்டு, என்னை அடிக்கடிச் சந்தித்து உரையாடிய தோழர் என்.வரதராசன் அவர்கள் “தமிழகத்தில் தி.மு.க. அரசு; ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்குகிறது” என்று ஒரு பொதுக் கூட்டத்தில் பேசி அவர்களின் நாளிதழில் வெளி வந்துள்ளது.
இதே வரதராஜன் அவர்கள்தான் தலைமைச் செயலகத்திலே என்னைச் சந்தித்து சிறுதாவூரில் தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை ஜெயலலிதாவும், அவருடைய நண்பர்களும் ஆக்கிரமித்துக் கொண்டதாக எழுத்து மூலமாக புகார் மனு கொடுத்து, அதுகுறித்து நான் உடனடியாக நீதிபதி சிவசுப்ரமணியம் அவர்களைக் கொண்டு விசாரிக்கச் செய்து, அவரும், தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலம் அபகரிக்கப் பட்டது உண்மைதான் என்று அறிக்கை கொடுத்த பிறகு, அந்த விசாரணைக்கு ஏற்பாடு செய்த கழக அரசு; ஊழலின் ஊற்றுக் கண்ணாம், அந்த அபகரிப்புக்குக் காரணமான ஜெயலலிதா உண்மையின் உறைவிடமாம்!
26-7-2006 அன்று தோழர் என். வரதராசன் கையெழுத்திட்டு என்னிடம் கொடுத்த மனுவில், “முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்த போது தங்கியிருந்த
சிறுதாவூர் பங்களா அமைந்துள்ள இடம் அவரது தோழி சசிகலாவின் நெருங்கிய உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரன் பெயரில் பதிவு மற்றும் பட்டா உள்ளதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன” என்று எழுதிக் கொடுத்தார்களே, அந்த ஜெயலலிதா தற்போது கம்யூனிஸ்ட்களுக்கு புனிதவதியாகத் தெரிகிறார், தி.மு. கழக அரசு ஊழலின் ஊற்றுக் கண்ணாக மாறிவிட்டதா? அ.தி.மு.க. அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கு செய்திட்ட துரோகத்தை மூடி மறைக்க முயற்சி செய்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்று அறிக்கை விட்ட கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள், தற்போது தி.மு. கழக அரசை ஊழலின் ஊற்றுக் கண் என்று பேசுவது முறைதானா? பட்டா வழங்கவேண்டுமென்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். 14-11-2008 அன்று பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் நன்மாறன் பேசுகையில், “கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியோடு பட்டா வழங்குதல் நிறைவடைந்து விட்டது என்று குறிப்பிட்டாலுங்கூட எங்களுடைய தலைவர் தோழர் திரு.என். வரதராசன் அவர்களுடைய வேண்டுகோளின் அடிப்படையில் மீண்டும் ஓர் ஆண்டு காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டது இப்போதும் அவை நடவடிக்கைக் குறிப்பிலே உள்ளதே! தமிழக அரசின் திட்டங்களையும், செயல்பாடுகளையும் ஆளுநர் உரை விவாதமாக இருந்தாலும், சரி, நிதிநிலை அறிக்கை மீதான விவாதமாக இருந்தாலும் சரி இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியினரும் வரவேற்று, பாராட்டிக் கொண்டு தானே இருந்தார்கள்! திடீரென்று தி.மு. கழக அரசு எப்படி ஊழலின் ஊற்றுக்கண்ணாக மாறி விட்டது? நாங்கள் என்ன ஊழல் செய்து விட்டோம்? தலித்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை விலை கொடுத்து வாங்கி விட்டோமா, அல்லது அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை குறைந்த விலைக்கு யாராவது வாங்கி விட்டோமா? அரசு ஊழியர்களுக்கு எதிராக ஏதாவது எஸ்மா, டெஸ்மா சட்டங்களைப் பிறப்பித்து விட்டோமா? அரசு அலுவலர்கள் இந்த அரசைப் பாராட்டுகிறார்கள் - அனைத்துத் தரப்பினரும் இந்த அரசின் செயல்பாடுகளை வரவேற்கிறார்கள். இந்த நிலையில் கம்யூனிஸ்ட்கள் இந்த அரசை எதிர்க்கக் காரணம் என்ன?
ஏழையெளிய மக்களுக்காகவே ரேஷன் கடைகள் மூலமாக ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. மளிகைச் சாமான்கள் குறைந்த விலையில், சலுகை விலையில் வழங்கப்படுகிறது. ஆனால் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுங்கட்சியாக உள்ள மாநிலத்தில் என்ன நிலை? நேற்றைய “தினமலர்” நாளிதழில் “மேற்கு வங்கத்தில் ரேஷன் கடைகள் தனியார் வசம் - சுப்ரீம் கோர்ட் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்” என்ற தலைப்பில் வந்துள்ள செய்தியில், “மேற்கு வங்கத்தில் பெரும்பான்மையான ரேஷன் கடைகளும், அங்கன்வாடி மையங்களும் தனியார் வசம் இருப்பது சுப்ரீம் கோர்ட் குழு சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பொது விநியோக திட்டத்தின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. ஆனால், தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மார்க்சிஸ்ட் கட்சி, தனது ஆட்சி நடக்கும் மேற்கு வங்கத்தில், பெரும்பான்மையான ரேஷன் கடைகளை தனியார் வசம் ஒப்படைத்துள்ளது. இது குறித்து சுப்ரீம் கோர்ட் உணவுத் துறை கமிஷன் அங்கு விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது: மேற்கு வங்கத்தில் பொது விநியோக திட்டத்தின்கீழ் இயங்கும் 97 சதவிகித ரேஷன் கடைகள் தனியார் வசம் உள்ளன. இதே போன்று 97.5 சதவிகித அங்கன் வாடிகள், காண்ட்ராக்டர்களிடம் உள்ளது. இதில் நான்கில் மூன்று பங்கு அங்கன் வாடிகளுக்கு சொந்தக் கட்டடம் கிடையாது. மூன்றில் இரண்டு பங்கு அங்கன் வாடி மையங்களில் குழந்தைகளுக்கு தண்ணீர் மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை வசதி கிடையாது. வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் பெரும்பாலான ஏழை குடும்பங்களுக்கு இதுவரை ரேஷன் அட்டைகள் வழங்கப் படவில்லை. ஆனால் ரேஷன் கடைகள் தனியார் வசம் இருப்பதால், ஏராளமான போலி ரேஷன் அட்டைகள் தயாரிக்கப்பட்டு மானிய விலையில் வழங்கப்படும் பொருள்கள் கள்ளச் சந்தையில் கொள்ளை லாபத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றன. பள்ளிக்கூடங்களில் 43 சதவீத நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மதிய
உணவுதிட்டத்தின் கீழ் பயன் பெறவில்லை. இது தவிர சமூக வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதிலும் மேற்குவங்கம் மிகவும் பின்தங்கியுள்ளது” இதனை நான் அந்த அரசை குறை கூற வேண்டும் என்பதற்காக
சொல்லவில்லை. நேற்றையதினம் நாளேட்டில் வந்துள்ள
செய்தியினைத்தான் எழுதியிருக்கிறேன். இதைக் கூட எழுத நேரிட்டதற்கு காரணம், மதுரைக் கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்,
“அடக்குமுறை கொண்டு எந்த இயக்கத்தையும் தமிழக அரசால்
ஒடுக்கிவிட முடியாது. ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு
தலைமை ஏற்பது மேற்கு வங்க அரசே” என்று கூறி அவர்களின்
ஏட்டில் அந்தப் பேச்சு இடம் பெற்ற காரணத்தினால் தான் மேற்கு
வங்க அரசின் நிலையை நான் குறிப்பிட வேண்டியதாயிற்று! இரு
கம்யூனிஸ்டுகளும் இனியாவது “நிந்தனை” விடுத்துச் “சிந்தனை” செய்வார்களாக!
அன்புள்ள,
மு.க.
20-09-2010
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 44 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065830_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_44.pdf; PDF பக்கம் 148–153. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.