அடக்கம்

முரசொலி · தொகுதி 44 · கடிதம் 3502

முரசொலி கடிதங்கள் · 3502

இரு விழாக்கள்; ஒரு ஒப்பீடு!

நாள் 4.10.2010சுமார் 4 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3502. இரு விழாக்கள்; ஒரு ஒப்பீடு! உடன்பிறப்பே,

அண்மையில் நடைபெற்ற இரண்டு மூன்று நிகழ்ச்சிகளை இணைத்துப் பார்க்கும்போது, எனக்கு ஒருபக்கம் பிரமிப்பாகவும், பெருமையாகவும் இன்னொருபக்கம் ஆச்சரியமாகவும் இருக்கிறது. அதை உன்னோடு பகிர்ந்து கொள்ளத்தான் இந்தக் கடிதம்.

20.9.2010 அன்று நாகர்கோவிலில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற எழுச்சி மிகு தி.மு.க. முப்பெரும்விழா நடைபெற்றது. அந்த விழாவில், “தந்தை பெரியார் விருதினை” தம்பி வீரபாண்டி ஆறுமுகத்திற்கும்; “அண்ணா விருதினை” செ.குப்புசாமிக்கும்; “பாவேந்தர் பாரதிதாசன் விருதினை” திருமதி ராஜம் ஜானுக்கும்; “கலைஞர் விருதினை” ஜி.எம். ஷாவிற்கும் வழங்கி; முரசொலி அறக்கட்டளை சார்பில், மாணவர்களுக்குப் பரிசு - சான்றிதழ், சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நற்சான்று - பணமுடிப்பு - பதக்கம் மற்றும் தி.மு.க. அறக் கட்டளை சார்பில், மாணவர்களுக்கு நிதியளித்து; நான் உரையாற்றியபோது:

“நான் பேசுகின்ற இந்த இடம் நாகர்கோவில். ஆதித்தமிழன் தோன்றிய இடம். ஏதோ கற்பனையாகச் சொல்லப்படுவது அல்ல; லெமூரியாக் கண்டம் இருந்த பகுதியிலேதான் நாம் இன்றைக்குக் கூடியிருக்கிறோம். இந்த லெமூரியாக் கண்டம்தான் மாற்றமடைந்து, கன்னியாகுமரி மாவட்டமாக விளங்கி- இன்றைக்கு “லெமூரியா” என்ற பெயரை உச்சரிக்கின்ற அளவுக்கு நம்முடைய பழம்பெரும் புலவர்கள், ஆராய்ச்சியாளர்கள் இவர்களெல்லாம் எடுத்துக்கூறிய அந்த ஆதாரங்களுக்கு விளக்கமாகத் திகழ்கின்ற இந்த நாகர்கோவில் நகரம்!

நாகர் என்றால் வேறு யாருமல்ல - நாகர் என்றால் அது நம்மைக் குறிப்பிடுவதுதான். நாகர் என்றால் வேறு யாரோ எவரோ என்று யாரும் கருதத் தேவையில்லை. இனவழி நாகர்க்கு உரிமையான பெரும்பரப்பு, நாகரிகப் பண்பாட்டின் உறைவிடமாக

இருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான் இன்றைக்கும் “நாகர்கோவில்” வட்டாரம் காண்கிறோம். நாகப்பட்டினம், நாகர்கோவில் இவைகளெல்லாம் தமிழர்களுடைய பழம்பெரும் பூமிக்கான அடையாளங்கள்.

கன்னியாகுமரி உள்ளிட்ட இந்த இடத்தை லெமூரியா கண்டம் என்று அழைத்த அந்தக் காலத்தில், நாமெல்லாம் தோன்றா விட்டாலும் கூட, நம்முடைய முன்னோர்கள் தோன்றிய இடம்தான் இந்த இடம். அப்படிப்பட்ட முன்னோர்கள் விதைத்த நாகரிகம்தான் கொஞ்சம்கொஞ்சமாக சிறிதுசிறிதாக, படிப்படியாக வளர்ச்சியுற்ற அந்தப் பரிணாம வளர்ச்சிதான் இன்றைக்கு நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற இந்த நாகரிக வளர்ச்சி: அப்படிப்பட்ட பெரும்புகழுக்கும், வரலாற்றுச் சிறப்பிற்கும் உரிய பகுதி இந்த நாகர்கோவில் பகுதி.

அப்படிப்பட்ட பழம்பெரும்பூமியில் - “வரலாற்றுச் சிறப்புவாய்ந்த பூமியில் ஆயிரக் கணக்கான, லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய மக்களின் சந்ததிகள் நாம். நம்முடைய கலாச்சாரம் தனிக் கலாச்சாரம். அதற்குப் பெயர்தான் திராவிடக் கலாச்சாரம். திராவிடக் கலாச்சாரம் என்று சொல்லும்போது, அதிலே என்ன முக்கியமான பொருள் என்றால், ஏதோ இன்னொரு கலாச்சாரம் இருக்கிறது, அதனால் தான் இதனைத் திராவிடக் கலாச்சாரம் என்று பிரித்துச் சொல்கிறோம் என்ற அந்த வேறுபாட்டை பொதுவிலே உணரக்கூடியவர்கள் உண்டு. ஆரியக் கலாச்சாரத்தைப் பிரித்துக் காட்ட, நாம் திராவிடக் கலாச்சாரத்தைச் சொல்ல வேண்டியிருக்கிறது. திராவிடக் கலாச்சாரத்தில் ஊறி வளர்ந்தவர்கள் நாம். அதனால்தான், இந்த இயக்கத்திற்கு, “திராவிட முன்னேற்றக் கழகம்” என்று பெயர் வைத்திருக்கிறோம் என்றால், திராவிடக் கலாச்சாரத்தை வாழ்த்த, திராவிடக் கலாச்சாரத்தைப் போற்ற, திராவிடக் கலாச் சாரத்தை வெற்றி கொள்ளச் செய்ய, நாம் உருவாக்கியிருக்கின்ற கழகத்திற்குப் பெயர் தான் திராவிட முன்னேற்றக் கழகம்”

- என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அல்லது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய திராவிடப் பாரம்பரியத்தின் பரிணாம வளர்ச்சியைக் குறிப்பிட்டுக் காட்டினேன். “கல்தோன்றி

மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி” திராவிட இனம் என்பது வாழையடி வாழையாக வரும் மரபு. அதைப்போலவே, தமிழரின் கலை, பண்பாடு, கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் இராஜராஜனின் தஞ்சைப் பெரியகோயில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா - இலட்சோப லட்சம் தமிழ்மக்கள் பங்கேற்க - தஞ்சை மாநகரில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. அந்த விழாவில், நிறைவுரை ஆற்றும்போது, தென்னிந்திய வரலாற்றில் மிகவும் படைப்பாற்றல் நிறைந்த சோழர்காலத்தின் அருமைபெருமைகளை எல்லாம் எடுத்துச் சொல்லி; அவர்கள் கையாண்ட வெளிநாட்டு வாணிகம், கடல் வாணிகம், செய்முறைகள் ஆகியவற்றின் நுணுக்கங்களைப் பற்றியெல்லாம் விளக்கி உரைத்து, 176 ஆண்டுகள் சோழப்பேரரசு தென்னகத்திலே நிலைத்து வாழ்ந்தது என்பதற்கான ஆதாரங்களை நீலகண்ட சாஸ்திரி, காத்யாயனர் போன்ற ஆய்வாளர்களின் கருத்துகளை எடுத்துவைத்து, நான் ஆற்றிய உரையில்:

“இராஜராஜனுடைய நிர்வாகம் அனைத்து மன்னர்களுக்கும் ஒரு உதாரணமாக விளங்கியது. எல்லா எல்லைகளிலும் காவல் படைகள்; சிங்கம்போல் சாம்ராஜ்யத்தைச் சுற்றி வருவதற்கு மகன் இராஜேந்திரன். புதிதாக வென்ற நாடுகளில் பழைய நம்பிக்கையான அதிகாரிகள். அரசியல் அறிவும், கூர்மதியும் கொண்ட அலுவலாளர்கள் எல்லோரையும் தன்னிடத்திலே வைத்துக்கொள்ளும் சாதுர்யம் பெற்றிருந்தார் இராஜேந்திரன்” - என்று குறிப்பிட்டு; இராஜராஜசோழன் காலத்தில் நிர்வாகத்தில் அறிமுகம் செய்துவைத்த நில அளவை முறை, நீட்டல் அளவை முறை, நிறுத்தல் அளவை முறை, ஊராட்சிக்கான குடவோலை முறை ஆகியவற்றைப் பற்றியெல்லாம் எடுத்துரைத்தேன். இது ஆயிரம் ஆண்டு காலத்திற்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் சரித்திரம். இவையனைத்திற்கும் ஆதாரங்களாக இராஜராஜனே எழுப்பியிருக்கும் தஞ்சைப் பெரியகோயிலும், பொறித்து வைத்திருக்கும் கல்வெட்டுகளும் நீடித்து நிலைத்திருக்கும் சான்றுகளாக நம் கண்முன்னே காட்சியளிக்கின்றன.

30.9.2010 அன்று அயோத்தி சம்பந்தமான வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரித்து, இரண்டு இந்து அமைப்புகளுக்கும், ஒரு முஸ்லீம் அமைப்பிற்கும் சமமாக வழங்கவேண்டு மென்று தீர்ப்பு சொல்லப்பட்டது. நீதிபதி

டி.வி.சர்மா என்பவர் தனது தீர்ப்பில், “சர்ச்சைக்குரிய இடம் இராமர் பிறந்த இடம்தான். இராமர் ஒரு கடவுள். அவர் தெய்வாம்சம் பொருந்தியவராக வழிபடப்பட்டிருக்கிறார். அங்கு பாபரால் கட்டடம் எழுப்பப்பட்டது. எந்த வருடம் என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. சர்ச்சைக்குரிய இடத்தில் 1949ஆம் ஆண்டில் டிசம்பர் 22-ம் தேதி நள்ளிரவில், சிலைகள் வைக்கப்பட்டன. சர்ச்சைக்குரிய இடத்தை இராமர் பிறந்த இடமாகக் கருதி, இந்துக்கள் வழிபட்டு வந்துள்ளனர். நினைவு தெரிந்த நாளிலிருந்தே, அதை புனிதத் தலமாகக் கருதி, ஆன்மீகப் பயணம் சென்று வருகிறார்கள் ” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இராமர் கிருதயுகத்தில் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. கிருதயுகம் என்பது

17 இலட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் கொண்டதாகும். இப்படி கற்பனைக்கே எட்டாத எண்ணிக்கை கொண்ட ஆண்டுகளுக்குமுன், நடந்த நிகழ்ச்சியைப்பற்றி, இராமர் பிறந்த இடம் இதுதான் என்று அறுதியிட்டு உறுதியாக வழங்கப்பட்டிருக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பார்க்கும்போது; சுமார் 17 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது; ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து- தென்னகத்தையே கட்டி ஆண்ட மாமன்னன் இராஜராஜசோழன் மறைந்தவிதத்தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்கான நினைவுத்தூண் அமைந்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லையே என அகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது.

திராவிட இனத்தின் வரலாறு, நிரல்படுத்தி முறையாக எழுதப்படவில்லை என்றாலும்கூட, லெமூரியாக் கண்டத்தைப் பற்றிய ஆராய்ச்சி, சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றிய ஆராய்ச்சி, தமிழ்மொழியைப் பற்றிய மூல ஆராய்ச்சி ஆகிய ஆராய்ச்சிகளின் மூலமாக, வெளிநாடுகளைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர்கள், மொழியியல் வல்லுநர்கள் திராவிட நாகரிகம் குறைந்தது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த அடிப்படையில் - நம்முடைய திராவிட இனத்தின் வரலாறு பற்றிய ஆதாரங்களை, பிற வரலாறுகளுடன் ஒப்பிட்டு

நோக்கும்பொழுது, திராவிட இனம் அறிவியல் ரீதியாக வாழ்ந்துள்ள உண்மை வரலாற்றினைத் தெளிவாக உலகம் அறிந்துகொள்ளமுடியும். ஆனால், திராவிட இனத்தைப் புறந்தள்ள முயற்சித்த ஆரிய நாகரிகம் அடிப்படை ஆதாரம் இல்லாமலேயே வெறும் மூடநம்பிக்கையை மக்களிடம் வளர்ப்பதில் மட்டும் முனைப்பாகச் செயல்பட்டிருக்கிறது என்பதை நீ அறிந்துகொண்டால் போதும்! அன்புள்ள, மு.க. 4-10-2010

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 44 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065830_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_44.pdf; PDF பக்கம் 154–158. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 44-இல் மேலும் கடிதங்கள்