அடக்கம்

முரசொலி · தொகுதி 44 · கடிதம் 3534

முரசொலி கடிதங்கள் · 3534

கமழும் கல்வி நீரோடை - 2

நாள் 9.3.2011சுமார் 9 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3534. கமழும் கல்வி நீரோடை - 2 உடன்பிறப்பே,

“குஞ்சி அழகும், கொடுந்தானைக் கோட்டழகும், மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து நல்லம் யாம் என்னும் நடுவுநிலை மையால் கல்வி அழகே அழகு” என்று சொல்லும் நாலடியார் வரிகளுக்கிணங்க, நம்முடைய கழக அரசு பள்ளிக் கல்வித் துறையில் செய்த சாதனைகளின் சுருக்கம் இதோ :-

2005-2006இல் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு 4 ஆயிரத்து 348 கோடியே 1 இலட்ச ரூபாய்;

ஆனால் 2010-2011 கழக அரசு காலத்தில் பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு 10 ஆயிரத்து 147 கோடியே 56 இலட்ச ரூபாய்; மேலும் 2011-2012 ஆம் ஆண்டிற்கான இடைக் கால வரவு-செலவுத் திட்டத்தில் பள்ளிக் கல்வித் துறைக்காக ஒதுக்கப்பட்ட தொகை 12 ஆயிரத்து 674 கோடி ரூபாய்;

குடியிருப்புகளுக்கு அருகில் பள்ளிகளை அமைத்து 100 விழுக்காடு மாணவர் சேர்க்கையினை உறுதிப்படுத்திட 569 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டதுடன் 2626 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 645 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகவும், 570 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப் பட்டுள்ளன. அண்மையில் மேலும் 344 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரமுயர்த்தப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

2001-2006 அ.தி.மு.க. அரசின் ஐந்தாண்டுக் கால ஆட்சியில் 45 ஆயிரத்து 987 ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் அதாவது அவர்கள் பெற வேண்டிய ஊதியத்தில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு ஊதியம் பெறும் நிலையில் நியமிக்கப்பட்டனர்.

2006இல் பொறுப்பேற்ற திராவிட முன்னேற்றக்கழக அரசு அந்த 45 ஆயிரத்து 987 ஆசிரியர்களுக்கும் 1.6.2006 முதல் காலமுறை ஊதியம் வழங்கி ஒவ்வொரு ஆசிரியரும் தாம் பெற்றுவந்த ஊதியத்தைவிட மூன்று மடங்கு அதிகம் பெற்று மகிழ ஆணையிட்டு நடைமுறைப்படுத்தியது.

அத்துடன், 2006க்குப்பின் தொடக்கக் கல்வித்துறையில் 12 ஆயிரத்து 426 இடைநிலை ஆசிரியர்கள், 14 ஆயிரத்து 115 பட்டதாரி ஆசிரியர்கள் என 26 ஆயிரத்து 541 ஆசிரியர்களும்;

பள்ளிக் கல்வித் துறையில் 70 இடைநிலை ஆசிரியர்கள், 17 ஆயிரத்து 45 பட்டதாரி ஆசிரியர்கள், 4 ஆயிரத்து 665 ஆசிரியர் பயிற்றுநர்கள், 3002 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 525 தமிழாசிரியர்கள், 1131 சிறப்பாசிரியர்கள், 140 தொழில் ஆசிரியர்கள், 1,686 கணினி ஆசிரியர்கள் என 27 ஆயிரத்து 739 ஆசிரியர்களும்,

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 216 விரிவுரையாளர்களும், 32 முதுநிலை விரிவுரையாளர்களும்

-என மொத்தம் 55 ஆயிரத்து 53 ஆசிரியர்கள் நேரடி நியமனம் மூலமாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்;

ஆசிரியர் அல்லாத 1140 பணியாளர்களும் கருணை அடிப்படையில் 449 பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விவசாயம் கற்பிக்க 176 விவசாயப் பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

70 குழந்தைகளுக்கு மேல் பயிலும் 1400 தொடக்கப் பள்ளிகளுக்கு மூன்றாவது ஆசிரியப் பணியிடங்கள் 12.9.2009 அரசாணையின்படி அனுமதிக்கப்பட்டு; பணி நியமனம் செய்யப் பட்டனர்.

2006 ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் ஆசிரியர் கல்வித் தகுதி பெற்ற 1114 மாற்றுத் திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர்களாக அரசுப்பள்ளிகளில் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.

1999 ஆம் ஆண்டு மே மாதம் வரை அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையல்லாத பள்ளிகளுக்கு ஆண்டுக்கு 331 கோடி ரூபாய்ச் செலவில் 11,307 ஆசிரியர் பணியிடங்களும், 648 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் பிப்ரவரி 2011-ல் அனுமதிக்கப்பட்டது. இந்த ஆணையை வரவேற்று சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் திரு.மு.அப்பாவு ஆகியோர் தலைமையில், தமிழ்நாடு கிறித்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் திரு. இனிகோ இருதயராஜ், இ.சி.ஐ. பேராயர் எஸ்றா சற்குணம், சென்னை-மயிலை உயர்மாவட்ட பேராயர் திரு.ஏ.எம். சின்னப்பா, தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் திரு.வின்சென்ட் சின்னதுரை, தமிழ்நாடு சிறுபான்மை மேம்பாட்டுக் கழகத் தலைவர் திரு.சேவியர் அருள்ராஜ் உள்ளிட்ட கிறித்துவ சமுதாயப் பிரதிநிதிகளும், சிறுபான்மை மற்றும் சிறுபான்மையல்லாத சமுதாயத்தைச் சார்ந்த பெருமக்களும் என்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்து - நமது கழக அரசுக்கு ஆதரவுடன் என்றென்றும் நாங்கள் இருப்போம் என்று உணர்ச்சி பொங்க தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில் பட்டம் பெற்று பி.எட். பட்டம் பெற்றவர்களுக்கும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்களாகவும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன.

ஆசிரியர் பணியிட மாற்றங்கள் அனைத்தும் ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு மூலமே நடத்தப்பட்டு ஆசிரியர் சமுதாயத்தின் வரவேற்பினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களுக்கான கல்வித் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்திட முதன்மைக் கல்வி அலுவலர் நிலையில் துணை இயக்குநர் பணியிடம் ஒன்று பள்ளிக் கல்வி இயக்ககத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது.

31 முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான நேர்முக உதவியாளர் பணியிடங்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் நிலையில் தோற்றுவிக்கப்பட்டன.

பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் முதன் முறையாக 67 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள் 2009- 2010ஆம் ஆண்டில் நேரடி நியமனம் மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் தேர்வு செய்யப்பட்டு நிரப்பப்பட்டன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு 2009ஆம் ஆண்டில் மாவட்டக் கல்வி அலுவலகமும், 2010 ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் புதிய மாவட்டக் கல்வி அலுவலகமும் புதிதாக ஏற்படுத்தப்பட்டது.

புதிதாக உருவாக்கப்பட்ட அரியலூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கென தனியே மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகமும், தொடக்கக் கல்வி அலுவலகமும் உருவாக்கப்பட்டுள்ளன.

தர்மபுரி மாவட்டத்திற்கு தனியாக மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் 2007 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளுக்கு அரசு மின்கட்டணம்

ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளுக்கான மின்கட்டணங்களைக் கல்வித்துறை மூலம் செலுத்திட 4.7.2008 அன்று ஆணை வெளியிடப்பட்டது. அதன்படி 2008-2009 இல்

2 கோடியே 97 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாய்; 2009-2010இல் 2 கோடியே 56 இலட்சத்து

17 ஆயிரம் ரூபாய், 2010-2011இல் 2 கோடியே

50 இலட்சம் ரூபாய் அனுமதிக்கப்பட்டது.

18299 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 2 கோடியே 35 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாய் செலவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

16 மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு மாவட்டத்திலுள்ள பள்ளிகளைப் பார்வையிடும் பொருட்டு புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கட்டட வசதி

பள்ளிக் கல்வித்துறையில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம், தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 751 கோடியே 28 இலட்ச ரூபாய்ச் செலவில் 30 ஆயிரத்து 68 வகுப்பறைகள் கட்டப்பட்டன.

நபார்டு நிதியுதவியில் 1002 கோடியே 25 இலட்சத்து 81 ஆயிரம் ரூபாய்ச் செலவில் 1153 உயர்நிலை-மேல்நிலைப் பள்ளிகளில் 16 ஆயிரத்து 980 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் அவற்றிற்கான இருக்கை வசதிகள்; 843 அறிவியல் ஆய்வுக் கூடங்கள், 4047 கழிவறைகள், 968 குடிநீர்த் திட்டங்கள், 3 இலட்சத்து 35 ஆயிரத்து 37 மீட்டர் நீளச் சுற்றுச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாகை, கடலூர், நெல்லை ஆகிய மூன்று மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கும் தலா 17 இலட்சத்து 16 ஆயிரம் ரூபாய் வீதம் 53 இலட்சத்து 72 ஆயிரம் ரூபாய்ச் செலவில் கட்டடங்கள் கட்டப்பட்டன.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பூர் மாவட்டம் அவினாசி, திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி, சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில், வேலூர் மாவட்டம் நெமிலி, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிப் பாக்கம், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம், திருச்சி மாவட்டம் மணிகண்டம், சேலம் மாவட்டம் தலைவாசல், ஈரோடு மாவட்டம் மூலனூர், மதுரை மாவட்டம் மதுரை வடக்கு, தொப்பம்பட்டி, ஈரோடு மாவட்டம் காங்கேயம், விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை, தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஆகிய இடங்களில்

19 உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு தலா 15 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் வீதம் 2 கோடியே 98 இலட்சத்து 87 ஆயிரம் ரூபாய்ச் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

பள்ளி சீரமைப்பு மாநாடுகள் கடந்த 5 ஆண்டுகளில் 22 மாவட்டங்களில் பள்ளி சீரமைப்பு மாநாடுகள் நடத்தப்பட்டு - 970 கோடி ரூபாய்க்கு அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் பொதுமக்களிடமிருந்து நன்கொடையாகப் பள்ளிகளுக்குப் பெறப்பட்டுள்ளது. 2007-2008ஆம் ஆண்டில் 1 முதல் 4 ஆம் வகுப்புகளில் செயல்வழிக் கற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் 8ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டது. தமிழகத்தில் செயல்படும் 36 ஆயிரத்து 150 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு செயல்வழிக்கற்றல் மற்றும் படைப்பாற்றல் கல்வி முறையில் மாணவர்களுக்கு கற்றல் மேம்பாட்டினை உறுதி செய்ய 26 கோடி ரூபாய் செலவில் வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் டிவிடி பிளேயர்கள் வழங்கப்பட்டுள்ளன. 46 கோடி ரூபாய்ச் செலவில் 6,7,8 ஆம் வகுப்புகளில் பயிலும் 9 இலட்சத்து 24 ஆயிரத்து 490 குழந்தைகளுக்கு இருக்கை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. கழக அரசு சத்துணவுடன் வாரம் 5 முட்டைகள், இலவச பஸ் பாஸ், தமிழ்வழிப் பயிலும் மாணவர்க்குச் சிறப்புக் கட்டணம் ரத்து, படிப்புக் கட்டணம் ரத்து, தேர்வுக் கட்டணம் ரத்து என்பன போன்ற சலுகைகளை வழங்கியதால் பள்ளிகளில் படிப்பைவிட்டு இடைநிற்றல் விகிதம் வெகுவாகக் குறைந்தது. 2001-2002இல் தொடக்கக் கல்வியில் 12 விழுக்காடாக இருந்த இடைநிற்றல் விகிதம் 2009-2010இல் 1.02 விழுக்காடு என்றும்; நடுநிலைக் கல்வியில் 13 விழுக்காடாக இருந்த இடைநிற்றல் விகிதம் 1.88 விழுக்காடு என்றும் குறைந்து அதிக மாணவர்கள் பள்ளிகளில் தொடர்ந்து படித்தனர். அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் நகர்ப்புறத்தில் வாழும் ஓராண்டிற்கு மேல் இடைநின்ற குழந்தைகள், தெருவோரச் சிறார்கள், புலம்பெயர்வோர் ஆகியோர் 6 முதல் 12 மாதம் வரை பயில 1621 இணைப்பு மையங்கள் பள்ளி வளாகத்திலேயே ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இதில் பயிலும் குழந்தைகளுக்கு மதிய உணவு, சீருடை, காலணி, புத்தகப் பை, கற்றல் கற்பித்தல் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

பள்ளியே செல்லா குழந்தைகள், இடைநின்ற குழந்தைகள், மலைவாழ் குழந்தைகள், நகர்ப்புற வசதியற்ற குழந்தைகள் ஆகியோர்களுக்காக 231 உண்டு உறைவிட மையங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. செயல்வழி கற்றல் ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரையிலும் படைப்பாற்றல் கல்வி ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இம்மையங்களை 177 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் நடத்தி வருகின்றன. இதன் மூலம் 9454 குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர்.

மனவளர்ச்சி குன்றியோருக்கான உண்டு உறைவிட மையங்கள் கோயம்புத்தூர், சேலம், ராமநாதபுரம், பெரம்பலூர், திண்டுக்கல், கடலூர் மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் 265 குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

பள்ளியை விட்டு இடைநின்ற 2 இலட்சத்து 94 ஆயிரத்து 182 குழந்தைகள் முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளின் நலன் பேணுதல்

6 முதல் 14 வயது வரையிலான மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு வாழ்க்கைக்குகந்த தரமான உள்ளடங்கிய கல்வியினை வழங்கிட 52 கோடியே 27 இலட்ச ரூபாய்ச் செலவில் மேற்கொள்ளப்பட்ட பணிகள்:

❖ 90 ஆயிரத்து 543 மாற்றுத்திறன் கொண்டுள்ள குழந்தைகள் அரசு மற்றும் மாற்றுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

❖ 75 ஆயிரத்து 174 மாற்றுத்திறன் கொண்டுள்ள குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

❖ 4476 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

❖ மிகவும் பாதிக்கப்பட்ட 22 ஆயிரம் குழந்தைகள் வீட்டுவழிக் கல்வி மற்றும் பயிற்சியின் மூலம் தொடர்ந்து பயனடைந்து வருகின்றனர்.

❖ தரமான உள்ளடங்கிய கல்வி வழங்கிட அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

❖ மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

❖ 412 வட்டாரங்களில் ஆதார வள பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன.

❖ 333 பகல் நேரப் பாதுகாப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

❖ 1144 அரசு பள்ளிகளில் 73 இலட்சம் ரூபாய்ச் செலவில் சாய்தள நடைபாதை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

❖ 826 சிறப்பு ஆசிரியர்கள், 133 தசைப் பயிற்சி நிபுணர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் முறையில் கணினியைப் பயன்படுத்தி பாடங்களை போதிப்பதின் மூலமாக மாணவர்களுக்கு எளிமையாக, கற்றுக்கொள்ள இயலும் என்ற அடிப்படையில் 7500 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 26 ஆயிரத்து 900 மடிக்கணினிகள் 142 கோடியே 15 இலட்சம் ரூபாய்ச் செலவில் வழங்கப்பட்டுள்ளன.

அனைத்து மாவட்டங்களிலும் தலா இரண்டு கணினிக் கூடங்கள் நிறுவப்பட்டு நடுநிலை, உயர்நிலை மற்றும்

மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 37 ஆயிரத்து 207 ஆசிரியர்களுக்கு கணினிப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

1980 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும், 2131 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கும் மொத்தம் 233 கோடியே 77 இலட்சத்து 81 ஆயிரம் ரூபாய்ச் செலவில் 41 ஆயிரத்து 110 கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் 2009-10 ஆம் கல்வி ஆண்டு முதல் கணினி அறிவியல் பாடப்புத்தகம் அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில்

பயிலும் அனைத்து 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 இலட்சத்து 75 ஆயிரம் தமிழ் வழி மாணாக்கர்கள் மற்றும் 75 ஆயிரம் ஆங்கில வழி மாணாக்கர்கள் பயனடைந்துள்ளனர்.

2008-2009 ஆம் கல்வி ஆண்டு முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசாக மடிக்கணினி வழங்கும் புதிய திட்டம் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ்

2008-2009ஆம் ஆண்டு முதல் 2009-2010ஆம் ஆண்டு முடிய இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 2205 மாணாக்கர்களுக்கு 4 கோடியே 74 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய்ச் செலவில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் மாணாக்கர்களை உயர்கல்வி பயில ஊக்குவிக்க வழி வகுப்பதாக உள்ளது.

மாநில அளவில் தமிழை முதல் மொழி பாடமாக படித்து முதல் 3 இடங்களைப் பெறும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது மேற்படிப்பை தொடர ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசால் ஊக்கத்தொகை 2009-10 ஆம் கல்வி ஆண்டு முதல் உயர்த்தி வழங்கப்படுகிறது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதற் பரிசாக ரூ. 50,000/-, இரண்டாம் பரிசாக ரூ.30,000/-, மூன்றாம் பரிசாக ரூ. 20,000/- மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 25,000/- இரண்டாம் பரிசாக ரூ.20,000/- மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 15,000/- தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம்

இலவச தமிழ் பாடநூல்கள்

❖ மெட்ரிகுலேஷன் / மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்புகள் வரை பயிலும் மாணவர்களுக்கு 2007-2008 ஆண்டு முதல் இலவச தமிழ்பாடநூல்கள் ஆண்டுக்கு ஏறத்தாழ 2 கோடியே 25 இலட்ச ரூபாய்ச் செலவில் வழங்கப்பட்டுள்ளன.

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகத்தை வலுப்படுத்துதல்

❖ மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகத்தை வலுப்படுத்தும் விதமாக ஒரு இணை இயக்குநர் பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டது. அதனடிப்படையில் இணை இயக்குநர் பணியிடத்திற்கு அலுவலர் நியமிக்கப்பட்டு அப்பணியிடத்திற்கு உரிய அதிகார பகிர்வு அளித்து 16.12.2008 அன்று அரசு ஆணையிட்டுள்ளது. அனைவருக்கும் தொடக்கக் கல்வி இயக்கப் பணிகள் நிறைவு பெற்று வருவதைத் தொடர்ந்து, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் 2009-2010 முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. புதிய உயர்நிலைப் பள்ளிகள்: ஒவ்வொரு பள்ளிக்கும் 58 இலட்சத்து 12 ஆயிரம் ரூபாய் வீதம் 1 கோடியே 16 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவில் 200 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பள்ளி மான்யம்: மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு / மாநகராட்சி / நகராட்சி / நலத்துறை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 40,000 ரூபாய் என்ற அளவில் 4,627 பள்ளிகளுக்கு பள்ளி மானியம் 18 கோடியே 50 இலட்சம் ரூபாய் அனுமதிக்கப்பட்டு, 9,10 ஆம் வகுப்புகளுக்கான ஆய்வகங்கள், நூலகங்கள் மேம்படுத்தப்பட்டு, தண்ணீர், மின்சாரம், தொலைபேசி மற்றும் இணைய வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி இடைநிலை வகுப்புகளில் கற்பிக்கும் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 1 கோடியே 50 இலட்ச ரூபாய்ச் செலவில் ஐந்து நாள்கள் பணியிடைப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மாதிரிப்பள்ளிகள் மாநிலத்தில் 13 மாவட்டங்களில் (அரியலூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, கரூர், பெரம்பலூர், நாமக்கல், சேலம், சிவகங்கை, திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம்) கல்வியில் பின்தங்கிய 44 ஒன்றியங்களில் தரமான கல்வியை வழங்கும் நோக்கில் ஒரு பள்ளிக்கு 3 கோடி ரூபாய் வீதம் 18

ஒன்றியங்களில் 54 கோடி ரூபாய்ச் செலவில் ஒரு ஒன்றியத்திற்கு ஒரு மாதிரிப்பள்ளி வீதம் 18 மாதிரி மேல்நிலைப்பள்ளிகள் 2010- 2011ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டன. மாணவியர் விடுதிகள் மாநிலத்தில் 13 மாவட்டங்களில் (அரியலூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, கரூர், பெரம்பலூர், நாமக்கல், சேலம், சிவகங்கை, திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம்) கல்வியில் பின்தங்கிய 44 ஒன்றியங்களில் ஒரு ஒன்றியத்திற்கு ஒரு மாணவியர் விடுதி வீதம் 44 மாணவியர் விடுதிகள் 18 கோடியே 70 இலட்ச ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்விடுதிகளுக்குத் தொடர் செலவினமாக ஆண்டு ஒன்றுக்கு தலா 14 இலட்சத்து 27 ஆயிரம் ரூபாய் அனுமதிக்கப்படும். ஒவ்வொரு விடுதியிலும் 100 மாணவியர் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். (தொடர்ச்சி நாளை) அன்புள்ள, மு.க. 09-03-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 44 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065830_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_44.pdf; PDF பக்கம் 370–380. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 44-இல் மேலும் கடிதங்கள்