முரசொலி கடிதங்கள் · 3538
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஐந்தாண்டு சாதனைகள் (3)
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3538. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஐந்தாண்டு சாதனைகள் (3)
உடன்பிறப்பே,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கழக ஆட்சி கடந்த ஐந்தாண்டுக் காலத்தில் நிறைவேற்றிய சாதனைகள் - திட்டங்களின் தொடர்ச்சியினை எழுதுகிறேன்.
மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமை மற்றும் குழு உணர்வை உருவாக்கும் நோக்கத்தில் வட்டார மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகள் நடத்த 2007-08 முதல் ஆண்டுதோறும் ரூபாய் 1.60 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இப் போட்டிகள் சுய உதவிக்குழுக்களுக்கிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் சமுதாயத்தில் அங்கீகாரம் பெறவும், வங்கிகள் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களை எளிதில் அணுகி பயன் பெறவும், மகளிர் திட்ட சுயஉதவிக் குழுக்களுக்கு படிப்படியாக அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன.
2008-09 ஆம் ஆண்டு 25,000 இளைஞர்கள் பயிற்சி பெறுவதற்காக ரூ.20 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், நோக்கியா, டி.வி.எஸ், மற்றும் ஐ எல் அண்டு எப் எஸ், போன்ற சிறந்த நிறுவனங்கள் மூலம் இதுவரை 40,123 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி அளித்துள்ளது.
2009-10 ஆம் ஆண்டு 25,000 இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க உத்தேசித்து 31.3.2010 வரை 25,386 இளைஞர்கள் தொழிற்பயிற்சி பெற்று வருகின்றனர்.
2010-11 ஆம் ஆண்டு 25,000 இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க உத்தேசித்து 30.9.2010 வரை 14,134 இளைஞர்கள் தொழிற்பயிற்சி பெற்று வருகின்றனர்.
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் உலக வங்கி உதவியுடன் ரூ.717.00 கோடி செலவில் 6 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் ஓர் ஆற்றலளிப்பு மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டமாகும். இத்திட்டம் 16 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய 70 வட்டாரங்களிலுள்ள 2,509 ஊராட்சிகளில் அக்டோபர் 2006 முதல் 15 வட்டாரங்களில் உள்ள 578 கிராம ஊராட்சிகளில் முதற்கட்டமாகவும், ஏப்ரல் 2007 முதல் 15 வட்டாரங்களில் உள்ள 584 கிராம ஊராட்சிகளில் இரண்டாம் கட்டமாகவும், நவம்பர் 2008 முதல் 20 வட்டாரங்களில் உள்ள 635 கிராம ஊராட்சிகளில் மூன்றாவது கட்டமாகவும், பிப்ரவரி 2009 முதல் நான்காம் கட்டமாக 712 கிராம ஊராட்சிகளிலும் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கூடுதலாக 50 வட்டாரங்களுக்குட்பட்ட 1661 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அத்துடன் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள ஊராட்சிகளில் இத்திட்டம் 2014 ஆம் ஆண்டுவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் இளைஞர்களை வளர்ச்சிப் பணிகளில் ஆக்கபூர்வமாக ஈடுபடுத்தவும், அவர்களின் திறன்களை வளர்த்து வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவும் சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு; புகழ்பெற்ற பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் உதவியுடன் 1,15,838 இளைஞர்களுக்குத் தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு 95,120 இளைஞர்கள் வேலைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவைதவிர 24,352 இளைஞர்கள் தொழிற் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அளித்திட நோக்கியா, பாக்ஸ்கான், எம்.ஆர்.எப்., அசோக் லேலாண்ட், இன்டிமேட் பேஷன்ஸ் போன்ற புகழ்பெற்ற தொழில் நிறுவனங்களுடன் இத்திட்டம் தொடர்பு வைத்துள்ளது.
2,736 கிராம ஊராட்சிகளில் இளைஞர் துணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு வழங்கப்படும் நிதியில் 20 சதவீதம் இளைஞர் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டு; அதன்மூலம் இளைஞர்களை ஈடுபடுத்தி கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் பயனுள்ள செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளன. கல்வி மையங்கள்,
வேலைவாய்ப்பு ஆலோசனை மையங்கள், கிராம தகவல் மையங்கள், உடற் பயிற்சி கூடங்கள் ஆகியவை இந்த செயல் பாடுகளில் அடங்கும்.
ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் சுனாமி அவசரகால உதவித் திட்டம் (TEAP)
இத்திட்டம் 06.04.2005ல் தொடங்கப்பட்டது. எனினும் 13.5.2006 வரை 4.95 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டிருந்தது. ஆனால் இத்திட்டம் 31.10.2009 அன்று நிறைவு பெற்றபோது 292.94 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டம் மாநிலத்தின் 12 ஊரக கடலோர மாவட்டங்களில் 1602 குடியிருப்புகள் அடங்கிய 257 கடலோர கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
வாழ்வாதாரத் திட்டத்தின்கீழ், சுய உதவிக் குழுக்களுக்குச் சுழல் நிதி, பொருளாதார மேம்பாட்டு உதவி மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் தொடங்க மானிய உதவி ஆகியவை வழங்குவதில் இலக்கீடு 100 விழுக்காடு எய்தப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான நிதி உதவி 70,655 பேருக்கு 154 கோடியே 99 இலட்சத்து
49 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் தங்களது வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள வங்கிகளில் கடன் பெறுவது கடினமானதாக உள்ளது. கடலோர மாவட்டங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் ஒவ்வொருவருக்கும் 10,000/-ரூபாய் மான்யமாக அளித்து அதன் மூலம் தொடர் வருமானம் தரக்கூடிய ஒரு சுயதொழிலை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 34,634 மாற்றுத் திறனாளிகளுக்கு ஏறத்தாழ 34.63 கோடி ரூபாய் மான்யமாக வழங்கப்பட்டுள்ளது.
கடலோர மாவட்டங்களில் உள்ள சுய உதவிக் குழுக்கள், மீனவர்கள், கைவினைஞர்கள், நெசவாளர்கள் போன்ற பல்வேறு பிரிவினருக்கும் தேவையான திறன் வளர்ப்பு பயிற்சி அளித்திடவும், உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் 15.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் சுய உதவிக் குழுக்களுக்கென கட்டப்பட்டுள்ள “அன்னை தெரசா மகளிர்
வளாகம்” மற்றும் 6 திட்டங்கள் ஏறத்தாழ 26.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடல் பாதுகாப்பு பயிற்சித் திட்டத்தின் கீழ் மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கடல் பாதுகாப்பு முறைகளில் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் பயிற்சிகள் துவங்கப்பட்டு இதுவரை 31,959 மகளிருக்கும், 36,890 மீனவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஏழு கடலோர மாவட்டங்களில் உள்ள 93 மீனவர் சங்கங்களுக்கு 2.96 கோடி ரூபாய் நடைமுறை மூலதனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தென்னிந்திய மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு மூலம் வங்கிக் கடனும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வட்டிக் கடைக்காரர்களிடமிருந்து அதிக வட்டிக்கு கடன் பெறுவது தடுக்கப்பட்டு, இச்சங்கங்கள் சுயமாகச் செயல்பட வழிவகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 5,000 மீனவர் சங்க உறுப்பினர்கள் நேரடியாகவும் சுமார் 20,000 மீனவர்கள் பயனாளிகளைச் சார்ந்தும் பயன்பெற்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 4 நேரடி கொள்முதல் நிலையங்களும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 11 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் 1 கோடியே 62 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு அவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 4.06 கோடி ரூபாய் செலவில் 11 கடலோர மாவட்டங்களில் 9 பால் குளிரூட்டும் நிலையங்கள், 37 பால் விநியோகிக்கும் நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. மேலும் 160 பால் கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்பட்டும் புதுப்பிக்கப்பட்டும் உள்ளன. இந்த தொழிலில் ஈடுபடும் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 3,645 நபர்களுக்கு பால் உற்பத்தி மற்றும் கறவை மாடுகள் பராமரித்தல் குறித்த பயிற்சியும், 400 நபர்களுக்கு பால் மற்றும் பாலிலிருந்து தயார் செய்யப்படும் பொருட்கள் விற்பனை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 160 பால் கூட்டுறவு சங்கங்கள் புதுப்பிக்கப்பட்டு அவற்றிற்கு 80 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில் 250 நெசவாளர்களுக்கு 61.09 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திறன்வளர்ப்பு பயிற்சி மற்றும் அவர்களது கைத்தறிகளை மேம்பாடு செய்து புதுப்பித்தல், ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 8 பணி மையக் கட்டிடங்களில் சீரமைப்புப் பணிகள் முடிவுற்றுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் 67.49 இலட்சம் ரூபாய் செலவில் சுமார் 1000 கைவினைஞர்கள் பயன்பெறும் கைவினைஞர் கிராமம் அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது.
கடலோர ஊராட்சிகளில் சுமார் 699 கி.மீ. நீளத்திற்கு 610 சாலைப் பணிகள் 89 கோடி ரூபாய்ச் செலவில் மேற்கொள்ளப்பட்டு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளன.
கடலோர ஊராட்சி மன்றக் கட்டிடங்களைப் புதுப்பித்தல், கூட்ட அரங்குகள் கட்டுதல், ஆகிய 196 பணிகள் 5 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.
ஊரக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தனிநபர் கழிப்பறை பயன்பாடு, தன் சுத்தம், சுகாதாரம் குறித்த 21 விழிப்புணர்வு விளம்பரப் படங்கள் ரூ.67.28 லட்சம் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ளன.
ராஜீவ் காந்தி மறுவாழ்வுத் திட்டத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், நாகப்பட்டினம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கட்டாமல் விலகிய 2,687 வீடுகள் கட்டும் பணி சுமார் 65.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசின் மூலம் மேற்கொள்ளப்பட்டு 2,687 வீடுகளும் முடிக்கப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் அடிப்படை வசதிகளான சிமெண்ட் கான்கிரீட் சாலைகள், தெரு விளக்குகள், பொதுக் கட்டிடங்கள், வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்குதல் ஆகியவை சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தொண்டு நிறுவனங்கள் வீடுகள் கட்டிய பகுதிகளில் அடிப்படை வசதிகள் ராஜீவ்காந்தி மறுவாழ்வுத் திட்டத்தில் 57.34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
40.59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 133 உட்புற சிமெண்ட் கான்கிரீட் சாலைகள், 5.49 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5,495 சுகாதார கழிப்பறை வசதிகளும், 2.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாழ்வான நிலப்பகுதிகளில் மண் நிரப்பும் பணிகளும், 5.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தெருவிளக்குகள் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்புகள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு அனைத்து பணிகளும் முடிவு பெற்றுள்ளன.
11 கடலோர மாவட்டங்களில் அலை ஏற்றத்திலிருந்து 0-200 மீட்டருக்குள் உள்ள எளிதில் பாதிப்புக்குள்ளாகும் வீடுகள்,
1000 மீட்டருக்குள் உள்ள இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம் மற்றும் மீனவர் குடியிருப்புத் திட்டங்களின்கீழ் அரசால் கட்டப்பட்ட 1.1.2006ல் 10 ஆண்டுகள் பழமையான வீடுகள் உட்பட ஏறத்தாழ 18,299 வீடுகளை ராஜீவ்காந்தி புனரமைப்புத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.499.22 கோடி செலவில் மீளக் கட்டும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதுவரை, 17,094 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 1,205 வீடுகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.
மேற்கண்ட வீடுகள் கட்டும் பகுதிகளில் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நெறிமுறைகளின்படி அடிப்படை வசதிகளான சிமெண்ட் சாலைகள், தார்ச் சாலைகள், குடிநீர் வழங்கல், தெரு விளக்குகள், குளம் சீரமைத்தல், மயானம் சீரமைப்பு, அங்கன்வாடி மையங்கள்/சமையல் கூடங்கள் கட்டுதல் போன்ற பணிகள் 68.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3,251 பணிகள் எடுக்கப்பட்டு அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரங்களை மீளப் பெறவும், பாதிப்படைந்த வீடுகளை மீளக் கட்டிடவும் தமிழ்நாடு அரசு உலக வங்கியின் தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவியுடன் அவசரகால சுனாமி மறுகட்டமைப்புத் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு, இத்திட்டத்தின் கீழ் கடல் உயர் அலை ஏற்றத்திலிருந்து 200 மீட்டர் முதல் 1000 மீட்டர் தொலைவிற்குள் உள்ள எளிதில் பாதிக்கக் கூடியவையாக அறியப்பட்ட வீடுகளை எதிர்காலத்தில் சுனாமி போன்ற பேரிடர்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் மீண்டும் கட்டித் தர முடிவு செய்துள்ளது. அதன் மூலம்
பேரிடலிருந்து மீளும் தன்மை கொண்ட கடலோர சமுதாயத்தை உருவாக்க வழி வகை செய்துள்ளது. இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் தமிழக அரசும் உலக வங்கியும் 18.8.2009-ல் கையொப்பமிட்டுள்ளன.
அவசரகால சுனாமி மறுகட்டமைப்புத் திட்டத்தின்கீழ் இத்துறை பின்வரும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. (ETRP-VRCCP)
I. கடல் உயர் அலை ஏற்றத்திலிருந்து 200 மீட்டர் முதல் 1000 மீட்டர் வரையிலுள்ள கடலோரப் பகுதிகளில் உள்ள எளிதில் பாதிப்புக்கு உள்ளாகும் எனக் கண்டறியப்பட்ட ஏறத்தாழ 17,000 வீடுகளை மீளக் கட்டித் தருதல்.
II. அவசர காலத்தில் எளிதாக வெளியேறி தப்பித்து செல்லத் தேவையான வெளியேறும் சாலைகளை அமைத்தல். மேலும் வெளியேறும் சாலைகளில் பாதுகாப்பானப் பகுதியினைச் சென்றடைய ஏதுவாக வழிகாட்டுப் பலகைகள் அமைத்துத் தருதல்.
11 கடலோர மாவட்டங்களில் வருவாய்த் துறையினரால் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியல் மூன்றாம் நிலை எளிதாக்குநர்களாக நியமனம் செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் மூலம் மறுஆய்வு செய்யப்பட்டனர். அதன்படி 15,056 வீடுகள் மீளக்கட்ட தகுதியுடையவைகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. 15,056 வீடுகள் புதியதாக கட்டுவதற் காக 157 தொகுப்புகளாக எடுக்கப்பட்டு இதுவரை 14,429 எளிதில் பாதிப்புக்குள்ளாகும் வீடுகள் அகற்றப்பட்டு, 13,070 வீடுகள் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டு முன்னேற்றத்தில் உள்ளன. அனைத்து வீடுகளும் திட்ட செயலாக்க காலமான டிசம்பர் 2011க்குள் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உடன்பிறப்பே!
மாநில அரசிலும், மைய அரசிலும் பங்கு பெற்று மகத்தான தொண்டு புரிவதற்கு ஏற்றவர்களாக இளைஞர்களை உருவாக்கும் பாசறைகள் போல விளங்கிடும் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் உதவியோடு இந்த அரசு துணை முதலமைச்சர் தம்பி மு.க. ஸ்டாலின் அவர்களின் இடைவிடாத முயற்சிகளின் காரணமாக கிராமப்புறங்களில் சாலைகள்,
குடிநீர் வசதி, மின் வசதி, கல்வி வசதி, விளையாட்டு வசதி, போக்குவரத்து வசதி, சுகாதார வசதி, கால்நடை மருத்துவ வசதி போன்றவைகளையும் இன்னபிறவற்றையும் உருவாக்கி, “எல்லா வசதிகளும் எங்கும் உள்ளன” என்று சொல்லும் நிலையை ஏற்படுத்தியுள்ளது; தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது என்பதனை கடந்த 5 ஆண்டுகளில் நீ அனுபவப் பூர்வமாக நன்கறிவாய்! வரவிருக்கின்ற இந்தப் பொதுத் தேர்தலின் போது மக்களிடம் செல்கின்ற நீ இந்தச் சாதனைகளைக் காட்டி தலை நிமிர்ந்து சென்று வாக்கு கேட்கலாம் அல்லவா? அன்புள்ள, மு.க. 13-03-2011
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 34–41. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.