அடக்கம்

முரசொலி · தொகுதி 45 · கடிதம் 3541

முரசொலி கடிதங்கள் · 3541

நானும் உன்னுடன்தான் என்பதை மறந்துவிடாதே!

நாள் 15.3.2011சுமார் 3 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3541. நானும் உன்னுடன்தான் என்பதை மறந்துவிடாதே!

உடன்பிறப்பே, அன்றாடம் கழக அரசின் பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட சாதனைகளை உனக்குத் தொகுத்து எழுதவும் - பகல் நேரங்களில் அண்ணா அறிவாலயத்தில் காலை முதல் இரவு வரையில், ஏன் சில நாட்களில் நள்ளிரவு வரையில் அமர்ந்து நேர்காணலுக்கு வரும் உடன்பிறப்புகளைச் சந்திப்பதிலுமே நேரம் செலவழிப்பதால் பல விவரங்களை உனக்கு எழுதுவதற்கு எனக்கு நேரம் கிடைக்க வில்லை. நேர்காணலுக்கு வருகின்ற உடன்பிறப்புகளை சந்திக்கும்போது - அதிலே பலபேர் “நாங்கள் வேட்பாளராக நிற்பதற்காக பணம் கட்டி இங்கே வரவில்லை, உங்களை நெருக்கத்தில் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமே என்பதற்காகத்தான் வந்தோம்” என்று சொல்வதைக் கேட்கும்போது - இவர்களை உடன்பிறப்புகளாகப் பெற நாம் என்ன பாக்கியம் செய்தோம் என்று எண்ணிடத்தான் தோன்றியது! அதிலும் இந்த முறை எந்தத் தேர்தலுக்கும் வராத அளவிற்கு நேர்காணலுக்குக் கூட்டம். முன்பெல்லாம் ஒரு தொகுதிக்கு இருபது அல்லது இருபத்தைந்து பேர்கள்தான் நேர்காணலுக்கு வருவார்கள். இந்த முறை ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக எவ்வளவு பேர் மனு செய்திருக்கிறார்கள் என்று கேட்கும்போது - எண்பது பேர், தொன்னூறு பேர் என்று பதில் வரும். ஒவ்வொருவராக அழைத்து நேர்காணலை நடத்தினால் அனைவரையும் பார்த்து முடிப்பதற்குள் தேர்தல் நாளே வந்துவிடும். எனவேதான் முதல் நாள் ஒவ்வொருவரையும் அழைத்துப் பார்த்தபோது, அந்த நாளில் 7 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை பார்க்க நிச்சயிக்கப்பட்டிருந்த போதிலும், இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களைக் கூடப் பார்த்து முடிக்க முடியவில்லை. எனவே தான் இரண்டாவது நாளிலிருந்து ஒவ்வொரு தொகுதிக்கும் மனு செய்தவர்களை

இரண்டு மூன்று குழுக்களாகப் பிரித்து நேர்காணலை நடத்தி முடித்தோம். நேர்காணலுக்கு வந்திருப்பவர்களைக் காண அண்ணா அறிவாலயத்திற்குள் ஒவ்வொரு நாளும் நுழையும்போதே ஒரு திருவிழா கூட்டம். என்னைக் காண்பதிலே தான் அவர்களுக்கு எத்தனை இன்பம்! எவ்வளவு ஆர்வம்! போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ - வாய்ப்பு கேட்பவர்களுடன் உடன் வந்தவர்கள்தான் எத்தனை பேர்? நேர்காணலுக்கு வந்தவர்கள் சிலபேர் பழைய நினைவுகளையெல்லாம் எடுத்துக் கூறினர். ஒரு சிலர் அந்தக் காலத்தில் அண்ணா அவர்களோடும், என்.வி.என். போன்றவர்களோடும், தளபதி அண்ணன் அழகிரியோடும் நான் அமர்ந்திருந்தபோது எடுத்த புகைப்படங்களையெல்லாம் கொண்டு வந்து காட்டியபோது - நான் அந்தக் காலத்தில் அவர்களோடு அமர்ந்திருந்த அந்த பழைய நினைவுகள் எல்லாம் என் சிந்தனையிலே மிதந்தன. இதோ ஒரு கடிதம்! 9-8-1968 அன்று நான் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதம். அந்தக் கடிதத்தை நண்பர் ஒருவர் பொக்கிஷம் போல எடுத்து வந்து காட்டினார். அந்தக் கடிதம் இங்கே அப்படியே வெளியிடப்பட்டுள்ளது, ஆம்; நீயும் காண்பதற்காக! அந்தக் கடிதத்தில் தஞ்சை மாவட்டக் கழகத் தேர்தலில் பொதுக்குழுவிற்கு போட்டியிட்ட நான், எனக்கு வாக்களிக்க வேண்டுமென்று கேட்டு எழுதிய கடிதம்தான் அது! அத்தனை தொகுதியிலிருந்தும் வந்தவர்களை அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்களோடு அமர்ந்திருந்து நேர்காணலை முடித்து விட்டோம். இடையிடையே தோழமைக் கட்சியின் தலைவர்களுடனும், குழுவினருடனும் எந்தெந்த தொகுதிகளை யார் யார் பங்கிட்டுக் கொள்வதென்று நமது கழகக் குழுவினர் சந்தித்து, என்னோடும் அதைப்பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். நானும் பொதுச் செயலாளர் பேராசிரியரும் எங்கள் அறைக்குள் இருந்தவாறு அவர்களுக்கு யோசனைகளைத் தெரிவித்தோம். தற்போது அநேகமாக நமது தோழமைக் கட்சிகளுடன் எல்லாம் பேசி யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது இறுதியாக்கப்

பட்டுவிட்ட நிலை. இன்று அல்லது நாளைக்குள் அந்தப் பட்டியலை நீ ஏடுகளிலே காணலாம். அனைத்துக் கட்சியினரும் தங்கள் தங்களுக்குள் விட்டுக் கொடுத்து தொகுதிகளை பரிமாறிக் கொண்டிருக்கின்றோம். ஒரு சில தொகுதிகளை குறிப்பிட்டு இரண்டு மூன்று கட்சிகள் கேட்டதால் பேசி முடிக்க சில நாட்களாகி விட்டன. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதன் காரணமாக அந்தப் பிரச்சினைகள் எல்லாம் ஓரிரு தொகுதிகளைத் தவிர மற்றவையெல்லாம் தீர்க்கப்பட்டுவிட்டன. இதனையடுத்து கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டும். நான் முன்பே எழுதியது போல ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக எண்பது பேர் போட்டியிடுகின்ற நிலையில் அவர்களில் கழகத்தின் சார்பாக போட்டியிட ஒருவரைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுபற்றி மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் கலந்து பேச வேண்டும். அதற்கு உதவியாக மாவட்டக் கழகச் செயலாளர்கள் இன்றும் நாளையும் சென்னையில் இருப்பது நல்லது. ஏனென்றால் கழகத்தின் சார்பில் இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் 16-3-2011 புதன்கிழமை மாலை 5 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் என்னால் செய்தியாளர்கள் மத்தியில் அறிவிக்கப்படவுள்ளது. வேட்பு மனுத் தாக்கல் 19-3-2011 அன்று தொடங்குகிறது. அதற்கு முதல் நாள் 18-3-2011 அன்று மாலை 5 மணியளவில் அண்ணா அறிவாலயத்திலேயே நமது தோழமைக் கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கையினை 19-3-2011 அன்று மாலையில் அண்ணா அறிவாலயத்தில் பத்திரிகையாளர்கள் மத்தியில் வெளியிடவுள்ளேன். அதன் பின்னர் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுபவர்கள் அவரவர் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தாக வேண்டும். அதன் பின்னர் தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்பட வேண்டும். இடையிலே இருப்பதோ ஒரு சில நாட்கள்தான். அந்த நாட்களில் உன்னுடைய உழைப்பு மிகவும் அவசியம். இந்த வயதில் நான் இந்த அளவிற்கு உழைப்பதைப் பார்க்கும் நீ உழைக்கத் தயங்க மாட்டாய் என்பதை நான் அறிவேன். ஒவ்வொரு முறையும் நான் தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஈடுபடுகின்ற அளவிற்கு இந்த முறை நீயும் எதிர்பார்க்க

மாட்டாய் - என்னாலும் முடியாது என்பதை நீயே அறிவாய! எனினும் உடல் ஒத்துழைக்காவிட்டாலும் உள்ள உறுதியோடு முடிந்த வரை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். என்னைப் போலவே நமது பொதுச் செயலாளரும், பொருளாளரும், கழக முன்னோடிகளும், கழகக் கலைஞர்களும், தோழமைக் கட்சிகளின் தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள். தொகுதிகளில் கழகம் போட்டியிட்டாலும், நமது அணியிலே உள்ள கட்சிகள் போட்டியிட்டாலும் அங்கெல்லாம் கழகத் தோழர்களின் பணி சிறப்பாக அமைந்திட வேண்டும். கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் நமது அமைச்சர்களின் துறைகள் வாயிலாக என்னென்ன சாதனைகளை செய்திருக்கிறோம் என்பதை நள்ளிரவிலும் கண் விழித்து உனக்காக அன்றாடம் முரசொலியில் எழுதிக் கொண்டிருக்கின்றேன். அந்தச் சாதனைகளை வாக்காளப் பெருமக்களிடம் எடுத்துக் கூறத் தவறி விடாதே! நமது சாதனைகளைச் சொல்லி தைரியமாக மக்களிடம் வாக்கு கேட்கக் கூடிய அளவிற்கு கழக அரசு பாடுபட்டிருக்கிறது என்பதை நீ அறிவாய்! இடையிடையே நேரம் கிடைக்கும் போது உனக்கு எழுதுகிறேன். தேர்தல் களத்தில் நீ சுழன்று பணிபுரியும் போது; நானும் உன்னுடன்தான் இருப்பேன் என்பதை மறந்து விடாதே! அன்புள்ள, மு.க. 15-03-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 57–60. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 45-இல் மேலும் கடிதங்கள்