முரசொலி கடிதங்கள் · 3540
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் ஐந்தாண்டு சாதனைகள்!(2)
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3540. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் ஐந்தாண்டு சாதனைகள்!(2)
உடன்பிறப்பே,
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையில் கழக ஆட்சி கடந்த ஐந்தாண்டு காலத்தில் நிறைவேற்றிய சாதனைகள் - திட்டங்களின் தொடர்ச்சியினை எழுதுகிறேன். மேம்படுத்தப்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள்
ஒவ்வொரு வட்டாரத்திலும் 30 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனை கட்டாயம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 104 கோடியே 53 இலட்ச ரூபாய் செலவில் கடந்த 5 ஆண்டுகளில் 165 ஆரம்ப சுகாதார நிலையங் களில் கூடுதல் மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டு; 30 படுக்கைகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாக மேம்படுத்தப் பட்டுள்ளன; நவீன மருத்துவக் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடு களை ஊக்கப்படுத்தி ஆதரிக்கும் நோக்கத் துடன், மாவட்ட நலவாழ்வு சங்கங்கள் வழியாக 16 கோடியே 8 இலட்ச ரூபாய்ச் செலவில் 213 ஆரம்ப சுகாதார நிலையங்கள் பழுதுபார்க்கப் பட்டு கர்ப்பிணிகள், பிரசவித்த தாய்மார்கள் தங்கிச் சிகிச்சை பெறும் வார்டுகள், பிரசவ அறைகள், அறுவை அரங்குகள் ஆகியவைகள் புதுப்பிக்கப்பட்டு அவை விரிவுபடுத்தப் பட்டுள்ளன. 20 கோடியே 38 இலட்ச ரூபாய்ச் செலவில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் தற்போதுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நடப்பு நிதி ஆண்டில் மேலும் 300 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 18 கோடி ரூபாய் செலவில் கட்டுமானப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சொந்தக் கட்டடங் கள் இல்லாத 20 ஆரம்ப சுகாதார நிலையங் களுக்கு 4 கோடி ரூபாய்ச் செலவில் சொந்தக் கட்டடங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங் களுக்கும் 5 கோடியே 74 இலட்ச ரூபாய் செலவில் கணினிகள் வழங்கப்பட்டு; இணைய தளம் வாயிலான தகவல்கள் தினந்தோறும் பெறப்படுவதுடன் ஆரம்ப சுகாதார நிலையம் எவ்வாறு செயல்படுகிறது என்பதும் கண் காணிக்கப்படுகின்றன. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் தொலைபேசி இணைப்புகளும், கிராம சுகாதார செவிலியர்கள் அனைவருக்கும் செல்போன்களும் வழங்கப் பட்டு; கிராம மக்கள் அவசர காலங்களில் எளிதில் தொடர்பு கொண்டு உரிய சிகிச்சைகள் பெறவும் வகை செய்யப்பட்டுள்ளது. காணொலி காட்சி அரங்கு (எனைநடி ஊடிகேநசநடேந) மூலமாக நேரடியாக மாவட்ட அலுவலர் களுடன் தொடர்பு கொண்டு துறை செயல் பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஓர் ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு நடமாடும் மருத்துவக் குழு என்ற அளவில் 385 நடமாடும் மருத்துவக் குழுக்கள் 37 கோடியே 18 இலட்ச ரூபாய்ச் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மருத்துவக் குழுவிற்கும் ஒரு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவர், செவிலியர், உதவியாளர், ஓட்டுநர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இக்குழு தொலைதூரக் கிராமங்களுக்குச் சென்று, அங்கு வாழும் மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சைகள் அளித்து வருகிறது. 28.02.2011 வரை 3 இலட்சத்து 98 ஆயிரத்து 800 முகாம்கள் நடத்தப்பட்டு, 2 கோடியே 74 இலட்சத்து 8 ஆயிரத்து 896 பேர் பயனடைந் துள்ளனர். மருந்துகள் ஐந்து ஆண்டுகளில் ரூ.1,282 கோடி மதிப்பிலான தரமான மருந்துகளை வாங்கி அரசு மருத்துவமனைகளுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் வழங்கி மக்கள் பயனடைந் துள்ளனர். நவீன மருத்துவக் கருவிகள் 600 கோடி ரூபாய்க்கும் மேலான செலவில், புகழ்வாய்ந்த தனியார் மருத்துவ மனைகளுக்கு இணையாக எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள், 64 கூறு சி.டி.ஸ்கேன், லித்தோஸ்ட்ராப்ஸி, கலர் டாப்லர், செமி ஆட்டோ அனலைசர், கோபால்ட் தெரபி,
லீனியர் ஆக்ஸலரேட்டர், பி.சி.ஆர். கருவி, டயாலிசிஸ் கருவி, கேத்லேப் போன்ற பல அதிநவீன மருத்துவக் கருவிகள் அரசு மருத்துவமனைகளுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள்
மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்னும் இந்த அரசின் கொள்கைக்கேற்ப தர்மபுரி, விழுப்புரம், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகள் இந்த கல்வி ஆண்டில் தொடங்கப்படவுள்ளன. மேலும், அடுத்த கல்வியாண்டில் கடலூர், விருதுநகர், திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன.
மைய அரசு 100 கோடி ரூபாயும், மாநில அரசு 54 கோடி ரூபாயும் வழங்கிட மொத்தம் 154 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை பல சிறப்புப் பிரிவுகள் கொண்ட உயர்தர மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது; இந்த மருத்துவமனையில் ஒரு செவிலியர் கல்லூரியும் நடப்பு ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளது.
மைய அரசின் நிதி உதவியுடன் 150 கோடி ரூபாய்ச் செலவில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையையும் பல சிறப்புப் பிரிவுகள் கொண்ட உயர்தர மருத்துவமனையாகத் தரம் உயர்த்திட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்த மருத்துவமனையில் உள்ள மயக்க மருந்தியல் துறை, இந்தியாவில் உள்ள மிகப் பெரிய மயக்கவியல் துறைகளில் ஒன்றாகும். நடப்பு நிதி ஆண்டில் இத்துறை 2 கோடியே 60 இலட்சம் ரூபாய்ச் செலவில் உயர் மையமாகத் தரம் உயர்த்தப்பட ஆணை பிறப்பிக்கப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இங்கு 28 கோடியே 64 இலட்ச ரூபாய்ச் செலவில் விபத்து சிகிச்சைப் பிரிவு ஒன்றைத் தொடங்கிக் கட்டடப்பணிகள் முடிவடைந்துள்ளது. விரைவில் இந்தப் பிரிவு செயல்படத் தொடங்கும்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் மேம்பாடு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையை 100 கோடி ரூபாய்ச் செலவில் மேம்படுத்திடத் திட்டமிடப்பட்டு கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, சென்னை அரசு பல் மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, இராயப்பேட்டை அரசு மருத்துவமனை, திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை ஆகியவற்றில் 395 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. சென்னை மருத்துவக் கல்லூரிக்குப் புதிய கட்டடம், கூட்ட அரங்கம், மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குத் தங்கும் விடுதிகள் போன்றவை 76 கோடி ரூபாய்ச் செலவில் கட்டப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்படுவதையொட்டி, அம்மருத்துவ மனையில் 50 கோடி ரூபாய்ச் செலவில் அடுக்கு மாடிக் கட்டடம் கட்ட ஆணைகள் வெளியிடப் பட்டு கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 கோடியே 82 இலட்ச ரூபாய்ச் செலவில் புற்றுநோய்ப் பிரிவு, தேனி நகரில் 10 கோடி ரூபாய்ச் செலவில் ஒரு சிறப்பு அரசு மனநல மருத்துவமனை, செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் புதிதாக ஒரு செவிலியர் பள்ளி ஆகியவை தொடங்கப்பட உள்ளன. விழுப்புரம், திருவாரூர் மாவட்ட மருத்துவமனைகள் ஏற்கனவே செயல்பட்டு வந்த கட்டடங்களில் செவிலியர் பள்ளி, நகர நல மையம் ஆகியவை நடப்பு ஆண்டில் தொடங்கிடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல் மருத்துவ வசதி கிராமப் பகுதி மக்களுக்குப் பல் தொடர்பான நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் வசதிகள் 148 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்படுத்தப் பட்டுள்ளன.
52 அரசு வட்ட மருத்துவமனைகளிலும் பல் சிகிச்சைப் பிரிவுகள் புதிதாகத் தொடங்கப்பட்டு, பல் மருத்துவர்கள், பல் டெக்னீசியன்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதுடன், மேலும் புதிய உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. விபத்து மற்றும் அவசர சிகிச்சை வசதிகள் :-
தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு உடனடி சிகிச்சை அளிக்க ஏதுவாக விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் இதுவரை நாமக்கல், கடலூர், பத்மநாபபுரம், வாலாஜா பேட்டை, மேலூர், தென்காசி, தாம்பரம், பெரம்பலூர், ஓமலூர் ஆகிய 9 மருத்துவ மனைகளில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கோவில் பட்டி, கரூர் மாவட்ட தலைமை மருத்துவமனை கள், வேலூர், கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள், மதுரை இராஜாஜி மருத்துவமனை, சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை, கன்னியாகுமரி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஆகியவற்றில் அமைக்கப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் உள்கட்ட மைப்பு வசதி மேம்பாடு
உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப் படும் தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தில், 198 அரசு மருத்துவமனைகளில் 285 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப் பட்டுள்ளன. வட்ட மருத்துவமனை மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகளின் உள்கட்ட மைப்பு வசதிகள் தேசிய சுகாதார நலவாழ்வு இயக்க நிதி 75 கோடி ரூபாய் மூலம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்ட தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தைத் தமிழகம் மட்டுமே குறிப்பிட்ட காலத்திற்குள் செயல் படுத்தி இலக்கை முடித்துள்ளதால், உலக வங்கி மேலும் மூன்று ஆண்டுகளுக்கு 627 கோடி ரூபாய் நிதி உதவியில் இத்திட்டத்தை நீட்டித்திட இசைவு தெரிவித்து பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இளம் சிசு தீவிர கவனிப்பு மையங்கள்
இளம் சிசு மரணம் அதிகம் நிகழும் 15 மாவட்டங்களில், கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் பயிற்சி பெற்ற
செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டு தேவையான மருத்துவ உபகரணங்களுடன் 11 கோடியே 48 இலட்ச ரூபாய்ச் செலவில் இளம் சிசு தீவிர கவனிப்பு மையங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் மேலும் 10 மாவட்டங்களில் இம்மையங்களை அமைத்திட 26 கோடியே 84 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள் ளன. பச்சிளங் குழந்தைகளின் உயிர் காக்கும் அவசர கால சிகிச்சை திட்டம் 0-1 வயது வரையுள்ள பச்சிளங் குழந்தைகளின் உயிர் காக்கும் அவசர கால சிகிச்சை திட்டம், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பொருந்தும். இத்திட்டத்திற்கான விளக்க அட்டை 26.02.2011 அன்று வழங்கப்பட்டுள்ளது. 2010-11 ஆம் நிதியாண்டில் ரூ. 10 கோடியும், 2011-12ல் ரூ.15 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பள்ளி மாணவர்களுக்கான பல் பாதுகாப்புத்திட்டம் பள்ளி மாணவர்களுக்கான பல் பாதுகாப்புத் திட்டம் ரூ. 5.66 கோடியில் 26.02.2011 அன்று துவக்கி வைக்கப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர் களுக்கு செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் 55 இலட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். மேம்படுத்தப்பட்ட பள்ளி சுகாதாரத் திட்டம் இத்திட்டம் 26.02.2011 அன்று ரூ. 6.18 கோடி செலவில் 10 மாவட்டங்களில் செயல்படுத்தப் பட்டுள்ளது. இதனால் 32.06 மாணவர்கள் பயனடைகிறார்கள். ஒவ்வொரு பள்ளியிலும், சுகாதாரக் குழுக்கள் அமைத்து புதிய சுகாதார அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்திய முறை மருத்துவம் 479 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்திய முறை மருத்துவப் பிரிவுகள் ஏற்கனவே செயல்பட்டு வந்தன. 2006க்குப்பின், 444 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்திய முறை மருத்துவப் பிரிவுகள் தொடங்கப்பட்டு 54 கோடியே 90 இலட்சம்
ரூபாய் மத்திய மற்றும் மாநில அரசின் நிதியுதவியோடு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. சித்தா பிரிவு உள்ள 31 ஆரம்ப சுகாதார நிலையங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறை மகப்பேறு பிரிவுகள் 59 இலட்சத்து 19 ஆயிரம் ரூபாய்ச் செலவில் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை அரசு யோகா மற்றும் இயற்கைக் கல்லூரி 90 இலட்சம் ரூபாய்ச் செலவிலும், சென்னை அரசு யுனானி மருத்துவக் கல்லூரி 92.50 இலட்சம் ரூபாய்ச் செலவிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரியில் நாஸிங் தெரபி ஒரு மருந்தாளுநர் என்ற பட்டப் படிப்புக்கு தலா 3 கோடி ரூபாய்ச் செலவிலும், சென்னை அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவ மனையில் நாஸிங் தெரபி, மருந்தாளுநர் பட்டயப் படிப்புகள் தலா 3 கோடி ரூபாய்ச் செலவிலும் தொடங்கப்பட்டுள்ளன. (தொடர்ச்சி நாளை) அன்புள்ள, மு.க. 15-03-2011
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 50–56. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.