அடக்கம்

முரசொலி · தொகுதி 45 · கடிதம் 3539

முரசொலி கடிதங்கள் · 3539

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் ஐந்தாண்டு சாதனைகள்!(1)

நாள் 14.3.2011சுமார் 7 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3539. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் ஐந்தாண்டு சாதனைகள்!(1)

உடன்பிறப்பே,

திராவிட முன்னேற்றக் கழக அரசு அமையும் போதெல்லாம் மக்கள் நல்வாழ்வுத் துறைக்குத் தனி முக்கியத்துவம் அளித்து, தமிழகத்தில் வாழும் மக்கள் அனைவர்க்கும், குறிப்பாக ஏழை எளிய நலிந்த பிரிவினர் அனைவர்க்கும் தரமான, உயரிய மருத்துவ வசதிகள் எளிதில் கிடைப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் உருவாக்கப்படுகின்றன; பல்வேறு புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், 2006ல் இந்த அரசு அமைந்தபின் இந்திய மத்திய அரசும், இதர மாநில அரசுகளும் பாராட்டிப் பின்பற்ற விழைந்திடும் பல்வேறு மருத்துவ நலத்திட்டங்களைப் புதிது புதிதாக அறிமுகம் செய்து அவற்றை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த அரசு எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளின் பயனாக மக்கள் நல்வாழ்வுத் துறையில் தமிழகம் இந்திய அளவில் பல சாதனைகளை நிகழ்த்தி முன்னேற்றம் கண்டு வருகிறது. குடும்ப நலக் கருத்தடை அறுவை சிகிச்சைக்குப்பின் மரணம் ஏற்பட்டால், அக்குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவும் 2006-07 ஆம் ஆண்டு முதல் குடும்பநலக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நிதி ஒதுக்கீடு

இவ்வரசு பொறுப்பேற்றபிறகு மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2005-2006ஆம் ஆண்டு இந்தத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 1487 கோடி ரூபாய் என்பதற்கு மாறாக 2010-2011ல் நிதி ஒதுக்கீடு 3889 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்படும் மருத்துவர் காலிப்பணியிடங்களை உடனுக்குடன் இந்த அரசு நிரப்பி வருகிறது. வேலைவாய்ப்பகம் மற்றும் தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2006க்குப்பின், 7 ஆயிரத்து 438 மருத்துவர்கள்; 9 ஆயிரத்து 744 செவிலியர்கள்; 1,799 கிராம சுகாதார செவிலியர்கள், 703 மருந்தாளுநர்கள், 433 இரண்டாம் நிலை ஆய்வக நுட்புனர்கள், 129 மூன்றாம் நிலை ஆய்வக நுட்புனர்கள் முறையான ஊதிய விகிதத்தில் நியமனம் செய்யப்பட்டு தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த 1,249 மருத்துவர்கள், 5 ஆயிரத்து 478 செவிலியர்கள் உட்பட இதுவரை மொத்தம் 34 ஆயிரத்து 854 பேர் பணிநியமனம் செய்யப்பட் டுள்ளனர். உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்

மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. குலாம் நபி ஆசாத் அவர்கள் “சுகாதார நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே முன்மாதிரியாக விளங்குகிறது” என்று பாராட்டி, உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை 2009ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று தொடங்கி வைத்தார். ஏழை எளிய மக்களின் நலன் கருதி, இந்த அரசு செயல்படுத்திவரும் பல்வேறு மருத்துவ நலத் திட்டங்களில் பலராலும் பாராட்டப்படும் இந்தத் திட்டத்தில் ஒரு கோடியே 35 இலட்சம் குடும்பங்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் உயர்தர தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகச் சிறப்புச் சிகிச்சைகள் அளிக்க உதவும் இத்திட்டத்திற்கான காப்பீட்டுத் தொகை முழுவதையும் கழக அரசே செலுத்துகிறது. இத்திட்டத்தில் 7.3.2011 வரை 2 இலட்சத்து 90 ஆயிரத்து 291 நோயாளிகளுக்கு 750 கோடியே 28 இலட்ச ரூபாய் செலவில் அங்கீகரிக்கப்பட்ட 702 மருத்துவமனைகளில் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு அவர்கள் பயனடைந்துள்ளனர்.

'108' அவசர கால மருத்துவ ஊர்தி சேவைத் திட்டம் கிராமப்புற ஏழை மக்களுக்கு அவசர காலங்களில்

உடனடி மருத்துவ வசதி கிடைத்திட வேண்டும் என்பதற்காக “அவசரகால மருத்துவ ஊர்தி-108 சேவைத் திட்டம்”, இ.எம். ஆர்.ஐ. என்னும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் 24 மணிநேர இலவச சேவையாக 415 ஊர்திகளுடன் 365 நாட்களும் செயல்படுத்தப்படுகிறது. உலக வங்கி நிதி உதவியில் இந்த திட்டத்திற்கு மேலும் 31 கோடி ரூபாய் செலவில், 200 ஊர்திகளைக் கொண்டு விரிவாக்கப்படும். மொத்தம் 632 வாகனங்கள் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் செயல்படும். உடனடி மருத்துவ உதவி தேவைப்படும் அவசர காலத்தில் - குறிப்பாக தாய்மார்கள் பேறுகாலம், விபத்து நேரங்கள் ஆகிய வேளைகளில் தொலைபேசி எண் 108-ஐ சுழற்றினால் மருத்துவ உதவி தேவைப்படுவோர் இருக்குமிடம் தேடி ஏறத்தாழ 20 நிமிடங்களில் மருத்துவ ஊர்தி உரிய மருத்துவப் பணியாளர் களுடன் வந்து, முதலுதவி செய்து, அவர்களை ஏற்றிக் கொண்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவ மனையில் அவர்களை அனுமதித்து, தேவைப்படும் அவசர சிகிச்சைகளை உடனடியாக அளிக்க உதவுகிறது. அண்ணா பிறந்த நாளான 15.9.2008 அன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 7.3.2011 வரை 8 இலட்சத்து 62 ஆயிரத்து 576 நோயாளிகளை அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆபத்தான நிலையிலிருந்த 34 ஆயிரத்து 407 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. இவற்றில், 2,20,294 பிரசவங்களும் அடங்கும். இதுவரை 143.64 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம்

ஏழை கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச்சத்து உட்கொள்ளவும்,

கருவுற்றிருக்கும் காலத்தில் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டவும் அவர்களுக்குத் தலா 6000 ரூபாய் நிதியுதவி வழங்கும் டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம். ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு அவர்கள் கருவுற்ற ஏழாவது மாதத்தில் முதல் தவணையாக 3000 ரூபாயும்,

குழந்தை பிறந்தவுடன் இரண்டாவது தவணையாக 3 ஆயிரம் ரூபாயுமாக வழங்கும் இத்திட்டத்தில் இதுவரை 25 இலட்சத்து 76 ஆயிரத்து 612 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 1,389 கோடியே 42 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டு, இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது. வருமுன் காப்போம் திட்டம்

கிராமப்பகுதி மற்றும் நகரப்பகுதிகளில், மக்களின் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க ஏதுவாக வருமுன் காப்போம் திட்டம் 1997ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பின்னர் வந்த அ.தி.மு.க. ஆட்சியில் கைவிடப்பட்ட இத்திட்டம் 30.12.2006 அன்று மீண்டும் தொடங்கப்பட்டு, 28.02.2011 வரை தமிழகம் முழுவதிலும் 19 ஆயிரத்து 272 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 1 கோடியே 81 இலட்சத்து 66 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். தொடர்ந்து நடைபெற்றுவரும் இத்திட்டத்தின் மருத்துவ முகாம்களில் உயர் சிகிச்சைகள் தேவை எனக் கண்டறியப்படுபவர்களுக்கு “கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில்” இலவச அறுவை சிகிச்சைகள் முற்றிலும் இலவச மாகவே அளிக்கப்படுகின்றன. கண்ணொளி காப்போம் திட்டம்

கண்ணொளி காப்போம் திட்டத்தின்படி அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் 14 ஆயிரத்து 801 பள்ளிகளில் பயிலும் 6 முதல் 8-ஆம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் பயனடைந்துள்ளார்கள். இந்தத் திட்டத்தில் 30 இலட்சத்து 4 ஆயிரத்து 749 மாணவர்களுக்கு உரிய மருத்துவ வல்லுநர்களுடனும், மருத்துவ சாதனங்களுடனும் கண் பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவர்களில் பார்வைக் குறைபாடு கண்டறியப்பட்ட

1 இலட்சத்து 60 ஆயிரத்து 903 மாணவ மாணவியர்க்கு இலவச கண்ணாடிகள் வழங்கப்பட்டன. 2010-2011 முதல் 6 மற்றும் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்க்கும் விரிவுபடுத்தப்பட்ட இத்திட்டம் 28.2.2011 வரை 39 இலட்சத்து 60 ஆயிரத்து 467 மாணவ மாணவியர்களுக்குப் பரிசோதனைகள் செய்து, 1 இலட்சத்து 70 ஆயிரத்து 803

மாணவர்களின் கண் குறைபாடுகளைக் கண்டறிந்து அவர்களில் 1 இலட்சத்து 2 ஆயிரத்து 779 மாணவர்களுக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. இளம் சிறார் மற்றும் பள்ளிச் சிறார் இருதய பாதுகாப்புத் திட்டம்

ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த சிறார்கள் மற்றும் பள்ளி மாணவர்களை இதய நோய்களிலிருந்து காத்திட, “இளம் சிறார் இருதய அறுவை சிகிச்சைத் திட்டம்”

2007-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்தும், பள்ளி மாணவர்களுக்காக “பள்ளிச் சிறார் இருதய அறுவை சிகிச்சைத் திட்டம்” 3.6.2008 முதற்கொண்டும் செயல்படுத்தப்படுகின்றன. இந்த இரண்டு திட்டங்களின்கீழும் புகழ்பெற்ற 27 தனியார் மருத்துவமனைகளில் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டங்களின் கீழ், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இதுவரை 1,800 குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சைகள் இலவசமாகச் செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டங்கள் அல்லாமல், வறுமைக் கோட்டிற்குக் கீழ்வாழும் குழந்தைகளுக்கு உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 4,700 குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது.

கலைஞர் காப்பீட்டுத்திட்டம், இளம்சிறார் மற்றும் பள்ளி சிறார் இருதய பாதுகாப்புத்திட்டம் ஆகிய அனைத்து திட்டங்களையும் உள்ளடக்கி இதுவரை இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 9,800 ஆகும். இரண்டு முன்னோடித் திட்டங்கள் இருதய நோய் தடுப்புத் திட்டம்

சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளாகச் செயல்படுத்தப்படும், “இருதய நோய் தடுப்புத் திட்டம்” என்னும் முன்னோடித் திட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட ஏறத்தாழ 8 இலட்சம் மக்களுக்கு விருதுநகர் மாவட்டத்திலும், ஏறத்தாழ 5 இலட்சம் மக்களுக்கு

சிவகங்கை மாவட்டத்திலும் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் குறித்த பரிசோதனைகள் செய்யப்பட்டு இதய நோய் வராமல் தடுக்கும் வாழ்க்கை நடைமுறைகள் பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் இதய நோய் உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. உலகவங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் தமிழகத்தின் இதர மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.

தஞ்சாவூர் மற்றும் தேனி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட, “கருப்பை வாய் புற்றுநோய் தடுப்புத் திட்டம்” எனும் மற்றுமொரு முன்னோடித் திட்டம் 100 கோடி ரூபாய்ச் செலவில் எல்லா மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

தமிழ்நாடு மாநில நலவாழ்வுச் சங்கம் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் வீடு வீடாகச் சென்று 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளதா என்பது குறித்து, சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோரைக் கொண்டுபரிசோதனை செய்து சிகிச்சை வழங்க வழிவகை செய்யும் “நலமான தமிழகம்” என்ற புதுமையான திட்டம் 26.11.2010 அன்று தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்மூலம் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில், சிகிச்சைகள் அளிக்க ஆவன செய்யப்பட்டுள்ளது. இதுவரை 45,982 முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதில் 21 இலட்சத்து 75 நபர்கள் பங்கேற்றனர். 3.18 இலட்சம் இரத்த அழுத்த நோயாளிகளும், 2.90 இலட்சம் சர்க்கரை நோயாளிகளும், 1.82 இலட்சம் பேர்களில் இரண்டு நோய்களும் பாதிக்கப்பட்டவர்களிடம் கண்டறியப்பட்டு, ஆக மொத்தம் 7.90 இலட்சம் பேர்களை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள்

கிராமப்புற மக்களுக்கு எல்லா நேரத்திலும் மகப்பேறு உதவிகள் இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தமிழகத்தில்

உள்ள 1,589 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணிநேர பிரசவ சேவைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மூன்று செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த நான்கரை ஆண்டுகளில் தேசிய ஊரக நலவாழ்வு இயக்கத்தின் நிதியில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டமைப்புகள் மற்றும் அறுவை அரங்குகள் வலுப்படுத்தப்பட்டு; நவீன மருத்துவக் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிகழும் பிரசவங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து தற்போது மூன்று மடங்கிற்கு மேலாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனைகளில் நிகழும் பிரசவங்களின் எண்ணிக்கை கணிச மாகக் குறைந்து வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2005-06ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்த பிரசவங் களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 532 மட்டுமே. ஆனால், இந்த எண்ணிக்கை 2009-10ஆம் ஆண்டில் 2 இலட்சத்து 98 ஆயிரத்து 253 ஆக உயர்ந்துள்ளது. 2010-11 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் முடிய 2 இலட்சத்து 55 ஆயிரத்து 877 பிரசவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 10 இலட்சத்து 49 ஆயிரத்து 988 பிரசவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிக அளவில் பிரசவங்களும், சிசேரியன் அறுவை சிகிச்சையும் நடைபெறுகின்றது. 2009-10ஆம் ஆண்டில் 2,694 சிசேரியன் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. 2010- 11ஆம் ஆண்டில் பிப்ரவரி-2011 வரை 4,363 சிசேரியன் அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. இதுவரை கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 8,708 சிசேரியன் அறுவை சிகிச்சைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரத்தம் அளிக்கும் வசதி இல்லாமல் இருந்தது. தற்போது, இரத்தம் சேமித்து வைக்கும் வசதிகளையும் ஏற்படுத்திட ஆணையிட்டு; இதுவரை, 255 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரத்த சேமிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்நோயாளிகளுக்கு சுத்தமாக சலவை செய்து துணிகள் வழங்க 9 கோடியே 66 இலட்ச ரூபாய்ச் செலவில் சலவை இயந்திரங்கள்

வழங்கப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குப் பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பெண்கள் ஆகியோர்க்குத் தினமும் மூன்று வேளை உணவு, மூன்று நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. 15.9.2008இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் 28.2.2011 வரை 20 இலட்சத்து 94 ஆயிரத்து 23 தாய்மார்கள் பயனடைந்துள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படு கிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்குக் கர்ப்பகாலச் சர்க்கரை நோய் உள்ளதா எனப் பரிசோதனை செய்து சிகிச்சை அளிப்பதும் தமிழகத்தில் மட்டும்தான். கிராமப்பகுதி மக்களுக்கு எளிதில் மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக 2006க்குப் பின் 66 கோடியே 42 இலட்ச ரூபாய்ச் செலவில் 166 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. (தொடர்ச்சி நாளை) அன்புள்ள, மு.க. 14-03-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 42–49. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 45-இல் மேலும் கடிதங்கள்