அடக்கம்

முரசொலி · தொகுதி 45 · கடிதம் 3542

முரசொலி கடிதங்கள் · 3542

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் ஐந்தாண்டு சாதனைகள் (3)

நாள் 16.3.2011சுமார் 7 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3542. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் ஐந்தாண்டு சாதனைகள் (3)

உடன்பிறப்பே, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையில் கழக ஆட்சி கடந்த ஐந்தாண்டுக் காலத்தில் நிறைவேற்றிய சாதனைகள் - திட்டங்களின் தொடர்ச்சியினை எழுதுகிறேன். எச்.ஐ.வி / எய்ட்ஸ் கட்டுப்பாடு 2001ஆம் ஆண்டில் எய்ட்ஸ் நோயின் தாக்கம் 1.13 சதவீதமாக இருந்ததால் தமிழகம் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தாக்கம் அதிகம் உள்ள மாநிலமாக வகைப்படுத்தப்பட்டது; 2006இல் இந்த அரசு எடுத்த விழிப்புணர்வு மற்றும் தடுப்புப்பணிகளால் தற்போது 0.25 சதவீத மாகக் குறைந்து எச்.ஐ.வி. பாதித்தோரின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து சீராக நிலைநிறுத்தப்பட்டிருப்பது இந்தியாவி லேயே தமிழ்நாட்டில் மட்டும்தான். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காகத் தமிழக அரசு 6.4.2009 அன்று 5 கோடி ரூபாய் முதலீட்டில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி, அவர்களுக்கு உதவித் தொகை வழங்கி வருகிறது. எய்ட்ஸ் நோயால் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் இருந்த 1,549 பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 2009- 10-ஆம் நிதி ஆண்டில் 44 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மனநலக் காப்பகத்தில் சிகிச்சை பெற்றுவரும் மனநோயாளிகளுக்குத் தரமான உணவு வழங்கும் பொருட்டு, இதுவரை வழங்கி வந்த தினசரி உணவுப்படி 13.70 ரூபாயை 20 ரூபாயாக 18.6.2009 முதல் உயர்த்தியதுடன், 28.8.2010 முதல் 20 ரூபாயிலிருந்து 40 ரூபாயாகவும் உயர்த்தி வழங்குகிறது இந்த அரசு. தமிழகத்தில் எச்.ஐ.வி. நோயாளிகளுக்கு முதல்நிலை சிகிச்சை 12,961 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கான

மாத்திரைகளின் விலை ஆண்டொன்றுக்கு 6,000 செலவாகும். தற்பொழுது இரண்டாம் நிலை கூட்டு மருத்துவ சிகிச்சையானது 700 நபர்களுக்கு தாம்பரத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு நோயாளிக்கு வருடத்திற்கு 36,000 செலவிடப்படுகிறது. மேலும், சேலத்திலும் இரண்டாம் நிலை கூட்டு மருத்துவ சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் மதுரையிலும் இச்சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

தமிழகத்திலும் HIV நோயின் தாக்கம் வேகமாக குறைந்ததற்கான காரணங்கள்:

❖ இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமாக 874 ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை மையங்கள் (ICTC) செயல்பட்டு வருகிறது.

❖ 41 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் (ART) செயல்பட்டு வருகிறது.

❖ இம்மையத்தில் பதிவானவர்களின் எண்ணிக்கை 1,62,029

❖ சிகிச்சை ஆரம்பித்தவர்கள் - 73,850

❖ தற்பொழுது சிகிச்சை பெறுபவர்கள் - 47,279

மருத்துவ பயனாளிகள் நலச்சங்கங்கள்

1,539 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 264 அரசு மாவட்ட மற்றும் வட்ட மருத்துவமனைகள், 15 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அவற்றைச் சார்ந்த பிற மருத்துவமனைகள் ஆகியவற்றில் “மருத்துவப் பயனாளிகள் நலச்சங்கங்கள்” அமைக்கப்பட்டு, அச்சங்கங்களுக்கு அளிக்கப்பட்ட 81 கோடியே 12 இலட்ச ரூபாய் நிதியின் துணைகொண்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களைப் பழுது பார்க்கவும், உடனடித் தேவையான கருவிகள், உபகரணங்கள் வாங்கிக்கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளதால், மக்களுக்குத் தரமான மருத்துவ சேவையைத் தடையின்றி அளிக்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், தேசிய சுகாதாரத் திட்டத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், துணை சுகாதார நிலையங்களுக்கும் ஆண்டு பராமரிப்பு நிதியாக 60 கோடியே 86 இலட்ச ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது; ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கு

55 கோடியே 57 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 12,618 கிராம ஊராட்சிகளில் கிராம சுகாதாரம் மற்றும் குடிநீர் துப்புரவு குழுக்களும், 561 நகர பஞ்சாயத்துகளில் 2540 கிராம சுகாதார மற்றும் குடிநீர்த் துப்புரவுக் குழுக்களும் அமைக்கப்பட்டு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள 2007ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் ரூபாய் வீதம் இதுவரை 60 கோடியே 63 இலட்ச ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறப்பு - இறப்பு பதிவு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் பிறப்பு இறப்புப் பதிவு மையங்களாக அறிவிக்கப்பட்டு, அங்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உடனடியாகப் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படு கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அவர்கள் இல்லங்களுக்கே சென்று சுகாதார ஆய்வாளர்களால் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. போலி மருந்து மற்றும் காலாவதி மருந்து தடுப்பு நடவடிக்கைகள் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை, அண்மையில் ‘ரிநர்வ்’ என்ற போலி மருந்தையும், ‘பென்னாட்ரல் காப் பார்முலா’ என்ற பெயரால் போலி கலப்பட இருமல் மருந்தையும் திடீர் ஆய்வு செய்தபோது, காலாவதியான மருந்துகள் மீண்டும் விற்பனைக்கு அனுப்பப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு; அரசின் உடனடி உத்தரவின் பேரில் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையும் காவல் துறையும் இணைந்து, இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளவர்களைக் கைது செய்து வருகின்றன. மேலும், போலி மருந்து மற்றும் காலாவதி மருந்துகளைக் கண்டுபிடித்து அவைகளைப் பறிமுதல் செய்வதுடன், அவை தொடர்பாக 41 பேரைக் கைது செய்து; அவர்களில் 19 பேரைக் குண்டர் சட்டத்திலும் அடைத்துள்ளனர். பொதுமக்களுக்கு மருந்துகளின் தன்மை அவற்றைப் பயன்படுத்தும் முறை, அளவு, ஒவ்வாமை போன்ற விவரங்களைத் தெரிவிக்கும் வகையில் மருந்துக் கட்டுப்பாட்டுத் தலைமை அலுவலகத்தில் இந்தியாவிலேயே முதன்முதலாக மருந்தியல்

விழிப்புணர்வு மையம் 7.12.2007 அன்று தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையை மேலும் வலுப்படுத்திட வேண்டும் என்பதற்காக 50 மருந்து ஆய்வாளர்களும், 10 இளநிலை பகுப்பாய்வாளர்களும் நியமனம் செய்யப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழக அரசு மூளை இறப்பு உறுப்பு தானப் பிரிவு என்னும் புதிய பிரிவை அக்டோபர் 2008ஆம் ஆண்டில் தொடங்கி; ‘மூளைச்சாவு’ அடைபவர்களிடம் இருந்து, சட்டப்படி சான்றிதழ் பெற்று அவர்களின் சிறுநீரகம், கல்லீரல், இதயம், கண் போன்ற உறுப்புகளை எடுத்து, அந்த உறுப்புகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு உடனடியாகப் பொருத்த வழிவகை செய்துள்ளது. இதுவரை மூளைச்சாவு ஏற்பட்ட 163 பேரிடமிருந்து 29 இதயம், 4 நுரையீரல்,

143 கல்லீரல், 304 சிறுநீரகம், 196 இதய வால்வு, ஆகியவை தானமாகப் பெறப்பட்டு, அவற்றை 942 பேருக்கு வெற்றிகர மாகப் பொருத்தப்பட்டு அவர்கள் பயனடைந்துள்ளனர். இந்தியா விலேயே தமிழ்நாட்டில் தான் மூளைச் சாவு அடைவோரிடமிருந்து உடல் உறுப்புகள் பெறப்பட்டு, தேவைப்படு வோர்க்குப் பொருத்தும் திட்டம் வெற்றிகரமாகச் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

தேசிய கண்பார்வை இழப்புத் தடுப்புத் திட்டம்

கண்பார்வை இழப்புத் தடுப்புத் திட்டத்தின் கீழ், 2006க்குப்பின் 27.48 இலட்சம் பேர் கண்புரை அறுவை சிகிச்சை பெற்றுள்ளனர். 84.54 இலட்சம் பள்ளிச் சிறார்களுக்குக் கண்பார்வைப் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களில் 3.88 இலட்சம் சிறார்க்குக் கண்பார்வைக் குறைபாடு கண்டறியப்பட்டு, 1.39 இலட்சம் பேருக்கு இலவசக் கண் கண்ணாடிகள் வழங்கப்பட் டுள்ளன.

சுகாதாரத் துறையில் அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சி

ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டை அதிகரிக் கும் வகையில், தனியார் பங்களிப்பை இந்த அரசு ஊக்குவிக்கிறது. ‘கேடலிஸ்ட் டிரஸ்ட்’ என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம்

ரூ.2 கோடி செலவில் 30 படுக்கைகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையமாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மதுரை வடமலையான் மருத்துவ மனை, மேலக்கால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 12 இலட்சம் ரூபாய்ச் செலவில் மகப்பேறு வார்டு ஒன்றினைக் கட்டிக் கொடுத்துள்ளது. நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் எழில்மிகு பூங்காவும், பிரசவ நாற்காலியும் ரூ.5 இலட்சம் செலவில் வழங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 4 இலட்சம் ரூபாய்ச் செலவில் இயந்திர சலவையகம் அமைக்கப்பட்டுள்ளது. பானாவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விப்ரோ ஜி ஹெல்த்கேர் என்ற நிறுவனம் ரூ.40 இலட்சம் செலவில் மருத்துவ உபகரணங்களை வழங்கி உள்ளது. “டைம்ஸ் பவுண்டேசன்” நிறுவனம் 10 கோடி ரூபாய்ச் செலவில் காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரியில் 30 படுக்கைகள் கொண்ட ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தைக் கட்டி ஒப்படைத்துள்ளதுடன், ரூ. 5 கோடி செலவில் திருவொற்றியூரில் 50 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனையையும் நிறுவப்பட்டுள்ளது.

அமரர் ஊர்தி சேவை

ரூ. 10 கோடி செலவில், ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த உறுப்பினர் எவரேனும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சேர்ந்து இறந்துவிட்டால் அவர்களின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல, அவரது உறவினர்கள் தனியார் ஊர்திகளுக்கு அதிக கட்டணம் செலுத்தவேண்டிய நிலை ஏற்படு கிறது. இதனைப் போக்க இலவச அமரர் ஊர்தி சேவைத் திட்டம் 180 அமரர் ஊர்திகளுடன் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மூலம் தமிழ்நாடு இ.எம்.ஆர்.ஐ. நிறுவனத்தின் உதவியுடன் செயல்படுகிறது. முதல் கட்டமாக 10 அமரர் ஊர்திகளுடன் 26.02.2011 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக தொலைபேசி அழைப்பு எண் 155377.

மருத்துவ மாணவர்களுக்கு உதவித் தொகை

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப் படிப்பிற்கான பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாத உதவித்தொகை 4 ஆயிரத்து 500 ரூபாய் என்பதை 7 ஆயிரம் ரூபாய் என்றும்; அரசுப் பணிசாரா மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிலும் முதலாண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத உதவித்

தொகை 8 ஆயிரம் ரூபாய் என்பதை 15 ஆயிரம் ரூபாய் என்றும்;

இரண்டாமாண்டு பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகை 8 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆய்வுப்படி 500 ரூபாய் என்பதை 16 ஆயிரம் ரூபாய் என்றும்;

மூன்றாம் ஆண்டு பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகை 8 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆய்வுப்படி 1000 ரூபாய் என்பதை 17 ஆயிரம் ரூபாய் என்றும்;

சிறப்பு மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிலும் முதலாண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை 9,500 என்பதை 18,000 ரூபாய் என்றும்;

சிறப்பு மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிலும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை 10,000 ரூபாய் என்பதை 19,000 ரூபாய் என்றும்;

சிறப்பு மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிலும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை 10,000 ரூபாய் என்பதை 20,000 ரூபாய் என்றும்;

நான்காம் ஆண்டு நரம்பியல் அறுவை மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிலும் மருத்துவ மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகை 9 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆய்வுப்படி 1000 ரூபாய் என்பதை 18 ஆயிரம் ரூபாய் என்றும்;

ஐந்தாம் ஆண்டில் 19 ஆயிரம் ரூபாய் என்றும் ஆண்டுக்கு 9 கோடியே 60 இலட்ச ரூபாய் செலவில் 1.7.2009 முதல் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை பெற்றுள்ள விருதுகள்

மாண்புமிகு மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. குலாம் நபி ஆசாத் அவர்கள், “சுகாதாரத் திட்டங்களைச் செயல் படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முன்மாதிரியாக விளங்குகிறது” எனப் பல நேரங்களில் பாராட்டியுள்ளார். தேசிய ஊரக நல்வாழ்வுத் திட்டங்களைத் தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக மத்திய அரசு தமிழ்நாட்டை முதல் மாநிலமாகத் தேர்ந்தெடுத்து, அதற்கான விருதினை, மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்

திரு. குலாம்நபி ஆசாத் அவர்கள் முன்னிலையில், 12.4.2010 அன்று புதுடெல்லியில் நடந்த விழாவில் இந்தியாவின் துணை ஜனாதிபதி மூலம் வழங்கியது. இவ்விருதினை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை முதன்மைச் செயலாளர் பெற்று வந்தார். மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை நிறைவேற்றுவதில் மாநில அளவில் சிறப்பாகச் செயல்படும் மாநிலம் என்ற அடிப்படையில் சுகாதாரத் துறையில் தமிழக அரசு செய்து வரும் பல்வேறு சீர்திருத்தங்களுக்காகவும், உன்னதமான பல புதிய திட்டங்களை நிறைவேற்றி வருவதற்காகவும், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து அரசு கூட்டு முயற்சியில் பல்வேறு திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதற்காகவும் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு இந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பின் (FICCI) 2009ஆம் ஆண்டிற்கான முதல் பரிசு வழங்கப்பட்டது; 2009ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்காக, அறிவியல் மேம்பாடு மற்றும் ஊடகக் கல்வி மையம் “ஈ இந்தியா 2009” என்ற விருதினை வழங்கியது. பிறப்பு இறப்புகளைப் பதிவு செய்வதில் தமிழகம் இரண்டாவது விருதினைப் பெற்றுள்ளது. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருவதற்காக “ஈ - இந்தியா 2010” என்ற விருது தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு நன்கு சேவை செய்து வருவதற்காக கிண்டி, கிங் நோய் தடுப்பு மருந்து நிலையம் இந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பின் (FICCI) 2010ஆம் ஆண்டிற்கான விருதினைப் பெற்றுள்ளது. 48 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ISO தரச்சான்றிதழ் ரூ. 4.86 கோடி செலவில் 48 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு, இந்திய தர நிறுவன அலுவலர்களின் முன்னிலையில் 26.02.2011 அன்று 48 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ISO சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரக அதிகாரி திரு. ஆன்ட்ரியூ டி. சிம்கின், 1.8.2009 அன்று காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில்

சில ஆரம்ப சுகாதார நிலையங்களை பார்வையிட்டு, தமிழ்நாடு அரசு, கிராமப்புற மக்களுக்கு, சிறந்த மருத்துவ சிகிச்சைகளை அளித்து வருகிறது என்று பாராட்டி, தமிழ்நாட்டில் வழங்கப்படும் சுகாதார வசதிகளை அமெரிக்க அரசிடம் தெரிவித்து அங்குள்ள கிராமப் பகுதி மக்களுக்கு இங்குள்ளதுபோல் சுகாதார வசதிகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சிறப்பான பொது சுகாதாரச் சேவையை மக்களுக்கு வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன் உதாரணமாக விளங்குகிறது என்றும், மாவட்ட மற்றும் வட்ட அளவிலான மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களை ஒருங்கிணைத்து கிராமப் பகுதிகளில் சுகாதாரச் சேவையைச் சிறப்பாக விரிவுபடுத்தியுள்ளது என்றும் உலக வங்கி தனது “World Bank” செப்டம்பர் 2010 இதழில் தலைப்புச் செய்தியாக “Tamil Nadu Shows the way in Tackling Some of India’s Pertinent Health Issues” என்ற தலைப்பில் எழுதி தமிழ்நாட்டைப் பாராட்டி கட்டுரை வெளியிட்டுள்ளது. உடன்பிறப்பே, மக்கள்நல்வாழ்வுத் துறையின் சார்பில் இவ்வளவு சிறப்பான திட்டங்களையும் கழக அரசு நிறைவேற்றி வருகிறது. இந்த துறையின் அமைச்சர் தம்பி எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் அரிய உழைப்பின் காரணமாக இந்தத் திட்டங்கள் எல்லாம் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின் றன. இந்தத் திட்டங்கள் தொடர்ந்து நிறைவேறிட மீண்டும் தி.மு. கழக அரசே தேர்ந்தெடுக்கப்பட இத்திட்டங்களையெல்லாம் மக்களிடம் எடுத்துக் கூறிடுவீர்! நமது அணியின் வெற்றியை உறுதி செய்திடுவீர்! அன்புள்ள, மு.க. 16-03-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 61–68. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 45-இல் மேலும் கடிதங்கள்