முரசொலி கடிதங்கள் · 3545
நகராட்சி நிர்வாகத் துறையின் ஐந்தாண்டு சாதனைகள்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3545. நகராட்சி நிர்வாகத் துறையின் ஐந்தாண்டு சாதனைகள்!
உடன்பிறப்பே,
நகராட்சி நிர்வாகத் துறையில் கழக ஆட்சி கடந்த ஐந்தாண்டுக் காலத்தில் நிறைவேற்றிய சாதனைகள் - திட்டங்களின் தொடர்ச்சியினை எழுதுகிறேன்.
சுகாதாரம்
தொற்றுநோய் மருத்துவமனையை நவீனமயமாக்குதல்
சென்னை தொற்றுநோய் மருத்துவமனைக்குப் புதிய கட்டடம் ரூ.18 கோடி செலவில் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டு; கட்டுமானப் பணி முடிவடையும் நிலையில் உள்ளது.
இணைய தளம் மூலம் பிறப்பு, இறப்பு பதிவுகள் மற்றும் சான்றிதழ் வழங்குதல்
இந்தியாவிலேயே முதன் முறையாக பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டு உலகம் எங்கும் உள்ள மக்கள், சான்றிதழ்களை இலவசமாக எடுக்கும் வகையில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 17,13,130 பொதுமக்கள் பயன் பெற்றுள்ளனர். ரூ.1.5 கோடி செலவில் 75 ஆண்டு பழைய பதிவேடுகள் ஸ்கேனிங் மயமாக்கப்பட்டுள்ளன. மேலும் பழைய பதிவேடுகள் அனைத்தும் ஸ்கேனிங் மயமாக்கும் பணி
குளிரூட்டும் பெட்டி அமரர் ஊர்தி போன்ற வசதிகள்
இந்தியாவிலேயே முதன்முறையாக, இறந்தோரின் அனைத்து அடக்க செலவினங்களையும் (வீடு முதல் மயான பூமி வரை) முழுமையாக சென்னை மாநகராட்சியே ஏற்றுக் கொண்டுள்ளது. (குளிரூட்டும் பெட்டி, அமரர் ஊர்தி, எரித்தல், புதைத்தல்) இதற்காக ஆண்டிற்கு ரூ.1.5 கோடி செலவிடப்படுகிறது.
இறைச்சிக்கூடம் நவீனமயமாக்குதல்
100 ஆண்டு பழமை வாய்ந்த பெரம்பூர் இறைச்சிக் கூடம் 48 கோடி ரூபாய்ச் செலவில் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கோடி ரூபாய்ச் செலவில் வில்லிவாக்கம், சைதாப்பேட்டை இறைச்சிக் கூடங்கள் நவீனப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
கல்வித்துறை
தொடக்கக் கல்வியை ஓர் இனிமையான அனுபவமாக மாற்ற சென்னைப் பள்ளிகளில் செயல் வழிக் கற்றல் முறை மூலம் கற்றலையும், கற்பித்தலையும் சிறப்பான அனுபவமாக மாற்ற, வகுப்பறைகள் தேவையான உபகரணங்களோடு நவீன முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. சென்னைப் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவியின் கல்வித் தரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த, 10ம் மற்றும் 12ம் வகுப்பில் சிறப்பாகத் தேர்ச்சியடைந்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகையும், மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு உதவித் தொகையும், 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினியும், சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகையும் தொடர்ந்து வழங்கப்படுகிறது.
செயல்வழிக்கற்றல் பள்ளி அறைகள்
மேலும், மாணவ மாணவியருக்குப் பள்ளிகளில் பயின்று வரும் காலங்களில் மனதளவிலும், உடலளவிலும் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில், அவர்களின் உடல் ஆரோக்கியம் காத்திட விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்குச் சீருடை, பரிசுத் தொகை, மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன. தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை பயிலும் மாணவ மாணவியருக்கு இலவசப் பல் பரிசோதனை, முழு உடல் பரிசோதனை, சீருடை மற்றும் காலணி வழங்குதல் போன்ற பணிகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மேலும், மாணவ மாணவியருக்கு வாழ்வாதாரம் அளிக்கும் பொருட்டு வேலையுடன்கூடிய கல்வித் தொகுதிகள், நான்கு சமுதாயக் கல்லூரிகளிலும், சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்திலும் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இத்திட்டங்கள் அனைத்தும் உள்ளாட்சித் துறையால் முதன்முறையாகச் செயல்படுத்தப்படும் திட்டங்களாகும்.
வருவாய்
சொத்து வரி
சென்னை மாநகராட்சியின் 2006-07 ஆம் ஆண்டில் ரூ.231.00 கோடியாக இருந்த சொத்து வரி வசூல், 2007-08 ஆம் ஆண்டு 26 விழுக்காடு உயர்ந்து ரூ.291.00 கோடி; 2008-09 ஆம் ஆண்டில் மேலும் 11 விழுக்காடுகள் உயர்ந்து ரூ.323.80 கோடி; 2009-10 ஆம் ஆண்டு ரூ.365.54 கோடி என வசூலிக்கப்பட்டு, வரி வசூல் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இது 2006-07 ஆம் ஆண்டை விட 57 விழுக்காடுகள் கூடுதல் ஆகும். நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.330.16 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
தொழில் வரி
2006-07 ஆம் ஆண்டில் ரூ.63.82 கோடியும்; 2007-08 ஆம் ஆண்டில் ரூ.75.00 கோடியும், 2008-09 ஆம் ஆண்டில் ரூ.89.91 கோடியும், 2009-10 ஆம் ஆண்டில் ரூ.126.21 கோடியும் தொழில் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ.113.91 கோடி தொழில் வரி மூலமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
தொழில் வரி உரிமம்
தொழில் வரி உரிமம் வழங்கும் முறை எளிமையாக்கப்பட்டு 2006-07 ஆம் ஆண்டு ரூ.3.22 கோடியாக இருந்த தொழில்வரி, படிப்படியாக உயர்ந்து நடப்பு நிதியாண்டில் இன்றைய தேதி வரை ரூ.5.41 கோடி என வசூல் செய்யப்பட்டுள்ளது. சொத்து வரி செலுத்தப்பட்ட தொகை, நிலுவை போன்ற விவரங்களை அறிந்து கொள்ள குறுந்தகவல் சேவையும், கைபேசி மூலம் சொத்து வரி வசூல் செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பூங்காக்கள்
சென்னையில் செம்மொழிப் பூங்கா
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே, 8 ஏக்கர் பரப்பில் 20 கோடி ரூபாய்ச் செலவில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டு மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. சென்னை மாநகரை எழிலூட்டி சிங்காரச் சென்னையாக மேம்படுத்தும் முயற்சியில்
பூங்கா மேம்பாட்டுப் பணிகள் 45 கோடியே 28 இலட்சம் ரூபாய்ச் செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பனகல் பூங்கா, டாக்டர் நடேசன் பூங்கா, திரு.வி.க. பூங்கா, டாக்டர். விஸ்வேஸ்வரய்யா கோபுரப் பூங்கா ஆகியவை பல்வேறு நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இதுபோல் இராஜாஜி சாலைப் பூங்கா, ஜெய் நகர் பூங்கா, அசோக் நகர் முதல் அவின்யூ பூங்கா, நெசப்பாக்கம் பூங்கா, காந்தி இர்வின் சாலை பூங்கா ஆகியவை புதிதாக உருவாக்கப்பட்ட பூங்காக்களில் குறிப்பிடத்தக்கவையாகும்.
மெரினா கடற்கரையில் 3.1 கி.மீ. நீளமுள்ள கடற்கரைப் பகுதி அமர்விடம், நீரூற்றுகள், நடைபாதைகள் ஆகியவை உள்ளடக்கிய பசுமையான புல்வெளித் தளங்களாக ரூ.17.00 கோடி செலவில் அழகுபடுத்தப்பட்டுள்ளது.
அடையாறு பூங்கா
தமிழக அரசு, சுற்றுச் சூழல் பூங்கா உருவாக்கும் நோக்கத்துடன், 11.10.2006 அன்று அடையாறு பூங்கா அறக்கட்டளை (Adyar Poonga Trust) அமைத்தது. தற்போது, அது சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை எனப் பெயரிடப்பட்டுள்ளது. 58 ஏக்கர் பரப்பளவு கொண்ட அடையாறு சிற்றோடை நிலப் பகுதியும் இப்பணிக்காக ஒப்படைக்கப்பட்டு ஏறத்தாழ 22.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இப்பூங்கா உருவாக்கப்பட்டுத் திறக்கப்பட்டுள்ளது.
கோவையில் செம்மொழிப் பூங்கா
கோயம்புத்தூரில், ‘செம்மொழிப் பூங்கா’ என்னும் பெயரில் தாவர மரபணு வங்கி மற்றும் அது தொடர்பான ஆய்வு மையம் ஆகியவைகளைக் கொண்ட ஒரு உலகத்தரம் வாய்ந்த தாவரவியல் பூங்கா ஒன்றினை அமைப்பதற்கு 26.3.2010 அன்று ஒப்புதல் அளித்து, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை, இப்பூங்கா விரிவான பெருந்திட்டம் தயாரித்தல் மற்றும் ஆலோசகர்களை நியமித்தல், ஒப்பந்தங்கள் நிறைவேற்றுதல் ஆகியவற்றைச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான கருத்துருவாக்கம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் போது 27.6.2010 அன்று வெளியிடப்பட்டது; 163.08 ஏக்கரில் அமையவிருக்கும் இப்பூங்கா முதற்கட்டமாக 45.25
ஏக்கரில் அமைக்கப்பட 12.12.2010 அன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டது.
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம்
குடிநீர் மற்றும் கழிவுநீர்க் குழாய்கள் இல்லாத தெருக்களுக்குக் குழாய்கள் அமைக்கும் பணி
சென்னை மாநகரில் ஜூலை 2006 நிலவரப்படி குடிநீர்க் குழாய்கள் இல்லாமலிருந்த 336 தெருக்களுக்கும், கழிவுநீர்க் குழாய்கள் இல்லாமலிருந்த 177 தெருக்களுக்கும் குடிநீர்க் குழாய்கள் மற்றும் கழிவுநீர்க் குழாய்கள் பதிக்கப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளன.
குடிநீர் வழங்கும் ஆதாரங்கள்:
சென்னையைச் சுற்றியுள்ள நீர் ஆதாரங்களான பூண்டி, சோழவரம், புழல், போரூர், செம்பரம்பாக்கம், கிணற்றுத் தளங்களிலுள்ள நிலத்தடி நீர் ஆதாரங்கள் (மீஞ்சூர், பஞ்செட்டி, தாமரைப்பாக்கம், பூண்டி, கொசத்தலையாற்றுப் படுகை, கன்னிகைப்பேர் மற்றும் தென் கடற்கரை நிலநீர் தாங்கி), கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி, நெய்வேலி நிலநீர்ப் படுகை, கிருஷ்ணா நதிநீர்த் திட்டத்தின்கீழ் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள கண்டலேறு ஏரி ஆகியவை சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரங்களாகும். தற்போது வாரியம் நாளொன்றுக்கு 775 மில்லியன் லிட்டர் குடிநீரை வழங்கி வருகிறது. இதில், ஏறத்தாழ 695 மில்லியன் லிட்டர் நகரின் வீட்டு உபயோகிப்பாளர்களுக்கும், ஏறத்தாழ 80 மில்லியன் லிட்டர் சென்னைப் பெருநகர பகுதியிலுள்ள தொழிற்சாலைகள், வணிகவளாகங்கள், ஊராட்சிகளுக்கும் வழங்கப்படுகிறது.
கிருஷ்ணா குடிநீர் திட்டத்தின்கீழ், ஆந்திரப்பிரதேசத்திலுள்ள கண்டலேறு நீர் தேக்கத்திலிருந்து பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர் பெறப்படுகிறது. பூண்டி நீர்த் தேக்கத்திலிருந்து, இணைப்புக் கால்வாய்கள் வழியாகப் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர் அனுப்பப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட பின்னர், சென்னைப் பெரு நகருக்கு விநியோகிக்கப்படுகிறது. 2010-2011ல், 27.01.2011 வரை 4.663 டி.எம்.சி. நீர் பெறப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் அதிகபட்சமாக 2009-2010ல் தான் 7.011 டி.எம்.சி. நீர்
பெறப்பட்டது.
செம்பரம்பாக்கத்தில் நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கும் திறனுடைய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்:
கிருஷ்ணா குடிநீர் திட்டத்தின் மூலம் பெறப்படும் கிருஷ்ணா நீரைச் சுத்திகரிக்க, சென்னை நகருக்கு அருகிலுள்ள செம்பரம்பாக்கத்தில் 296 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தியாவின் இரண்டாவது பெரிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையமாக நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கும் நிலையம் மற்றும் நீர் கொண்டு செல்லும் குழாய்கள் அமைப்பதற்கு 1996ஆம் ஆண்டு தமிழக அரசால் அனுமதி அளிக்கப்பட்டு, 19.7.2007 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையத்திலிருந்து தற்பொழுது நாளொன்றுக்கு சுமார் 260 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிக்கப்பட்டு சென்னை நகருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள்
மீஞ்சூரில் அமைக்கப்பட்டுள்ள கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம்:
சென்னைக் குடிநீர் வாரியம் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் வடிவமைத்து, சொந்தமாக நிறுவி, இயக்கி, திருப்பி ஒப்படைக்கும் (DBOOT) அடிப்படையில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை அமைத்துள்ளது. இந்நிலையம் 25.7.2010 முதல் வர்த்தக ரீதியில் செயலாக்கத்தைத் தொடங்கியது. 31.7.2010 அன்று இத்திட்டம் சென்னை மாநகர மக்களுக்குப் பயன்படும் வகையில் இந்நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு ஏறத்தாழ 100 மில்லியன் லிட்டர் குடிநீர் மணலி, மாதவரம், புழல் நீரேற்று நிலையங்கள் மூலம் சென்னை நகர மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கிழக்குக் கடற்கரைச் சாலையில் நெம்மேலி என்ற இடத்தில் அமைக்கப்பட்டு வரும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம்
வளர்ந்து வரும் சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையைச் சமாளிக்க, நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட மேலும் ஒரு கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் கிழக்குக்
கடற்கரைச் சாலையில் நெம்மேலியில் ரூ.1033.68 கோடி செலவில் அமைக்கப்பட மான்புமிகு துணை முதலமைச்சர் அவர்களால் 23.2.2010 அன்று அடிக்கல் நாட்டப்பட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் 2011 டிசம்பரில் முடிவடையும்.
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் சென்னை மாநகரில் நடைபெற்றுவரும் பணிகள்
சென்னை மற்றும் சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சிப் பகுதிகளுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.2032 கோடி மதிப்பீட்டில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றும் 28 திட்டங்கள் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை நகரின் அனைத்து குடியிருப்புகளுக்கும் போதுமான அழுத்தத்தில் சமமான அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட சென்னை குடிநீர் வாரியம் சென்னை மாநகரில் குடிநீர் விநியோக மண்டலங்களை 16 ஆகப் பிரித்து, அதற்கு ஈடாக குடிநீர் பகிர்ந்தளிப்பு நிலையங்களை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே, 12 குடிநீர் பகிர்மான நிலையங்கள் மற்றும் 11 குடிநீர் பகிர்மான மண்டலங்களின் மேம்படுத்தும் பணிகள் உலக வங்கி நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கீழ்ப்பாக்கம், அண்ணா பூங்கா, தென் சென்னை நீரேற்று நிலையம், கலைஞர் கருணாநிதி நகர் ஆகிய 4 குடிநீர் பகிர்மான நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் மற்றும் கீழ்ப்பாக்கம், கலைஞர் கருணாநிதிநகர், திருவல்லிக்கேணி, அண்ணா பூங்கா, தென்சென்னை ஆகிய 5 குடிநீர் பகிர்மான மண்டலங்களை மேம்படுத்தும் பணிகள், இதர சில மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றுக்கு ரூபாய் 337.48 கோடி அனுமதிக்கப்பட்டு, 2007 அக்டோபரில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. அவற்றுள் தென்சென்னை நீரேற்றக் குடிநீர்ப் பகிர்மான நிலையப் பணிகள் (Southern Headworks) முடிவுற்றுப் பயன்பாட்டில் உள்ளது; மற்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்துப் பணிகளும் 2011 ஆம் ஆண்டு இறுதியில் முடிவடையும்.
தகவல் தொழில் நுட்ப விரைவு சாலையில் (இராஜீவ் காந்தி சாலை) குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதலுக்கான உள் கட்டமைப்புப் பணி:
இராஜீவ் காந்தி (தகவல் தொழில் நுட்ப விரைவு சாலை) சாலையில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் கட்டமைப்புப் பணிகள் ரூ.41.77 கோடி மதிப்பீட்டில் 2007-ல் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு நிலைகளில் உள்ளன. இதனைத் தொடர்ந்து தகவல் தொழில் நுட்ப சாலை நெடுகிலும் உள்ள நகர்வோருக்கு நாள் ஒன்றுக்கு 20 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும். அவ்வாறே, கழிவுநீரைச் சேகரிக்கும் அமைப்புப் பணிகள் நாவலூரில் ஒன்றும் (6 MLD), சோழிங்க நல்லூரில் ஒன்றும் (18 MLD) ஆக 2 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கையை வாரியம் மேற்கொண்டுள்ளது. 14 கழிவு நீரகற்று நிலையங்களுக்கான கட்டுமானப்பணி, கழிவுநீர் குழாய்கள் பதித்தல் பணி, விசைக் குழாய் பதித்தல் பணி ஆகியவற்றுக்கு ஆணைகள் 20.09.2010 அன்று வழங்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகரிலுள்ள நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளுக்குக் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று திட்டங்கள்
ரூபாய் 12.36 கோடி மதிப்பீட்டில் 2008 மார்ச்சில் தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் போரூர் பேரூராட்சிக்கான குடிநீர் வழங்கல் அபிவிருத்தித் திட்டம் மார்ச் 2011லிலும்; ரூபாய் 23.30 கோடி மதிப்பீட்டில் 2008 ஆகஸ்டில் தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் மதுரவாயல் நகராட்சிக்கான குடிநீர் வழங்கல் திட்டம் 2012 ஏப்ரலிலும்; ரூபாய் 103.84 கோடி மதிப்பீட்டில் 2009 பிப்ரவரியில் தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் ஆவடி நகராட்சிக்கான குடிநீர் வழங்கல் திட்டம் 2011 நவம்பரிலும்; ரூபாய் 64.39 கோடி மதிப்பீட்டில் 2009 டிசம்பரில் தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் ஆலந்தூர் நகராட்சிக்கான குடிநீர் வழங்கல் திட்டம் 2011 டிசம்பரிலும்; ரூபாய் 267.08 கோடி மதிப்பீட்டில் 2009 செப்டம்பரில் தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் அம்பத்தூர் நகராட்சிக்கான குடிநீர் வழங்கல் திட்டம் 2011 நவம்பரிலும்; ரூபாய் 19.17 கோடி மதிப்பீட்டில் 2011 ஜனவரியில் தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் நெற்குன்றம் ஊராட்சிக்கான குடிநீர் வழங்கல் திட்டம் 2012 ஏப்ரலிலும்; ரூபாய் 24.24 கோடி மதிப்பீட்டில் 2010 ஜூலையில் தொடங்கப்பட்டு
நடைபெற்றுவரும் உள்ளகரம்-புழுதிவாக்கம் நகராட்சிக்கான குடிநீர் வழங்கல் திட்டம் 2012 ஜூலையிலும்; ரூபாய் 85.11 கோடி மதிப்பீட்டில் 2010 ஆகஸ்டில் தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் திருவொற்றியூர் நகராட்சிக்கான குடிநீர் வழங்கல் திட்டம் 2012 ஆகஸ்டிலும் முடிவடைந்து மக்களுக்குப் பயன்படும்.
கழிவுநீரகற்றலில் இயந்திரங்கள் பயன்படுத்துதல்
மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றிச் சுமக்கும் இழி நிலையை நீக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, சென்னைக் குடிநீர் வாரியம் கழிவுநீர் அமைப்புகளைப் பராமரிக்க உயர் அழுத்த விசையுடன் நீரைப் பீய்ச்சும் இயந்திரங்கள், நீர்விசையால் இயங்கும் தூர்வாரும் இயந்திரங்கள் மற்றும் கையினால் இயக்கப்படும் வாளியான தூர்வாரும் இயந்திரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகிறது. தற்போது வாரியத்தில் 56 உயர் அழுத்த விசையுடன் நீரைப் பீய்ச்சும் இயந்திரங்களும், 53 நீர்விசையால் இயங்கும் தூர்வாரும் இயந்திரங்களும் பயன்பாட்டில் உள்ளன. இது தவிர 25 உயர் அழுத்த விசையுடன் நீரைப் பீய்ச்சும் இயந்திரங்கள் (Jet Rodding Machines), 3 கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் (Super Suction Machines) மற்றும் 17 நீர் விசையால் இயங்கும் தூர்வாரும் இயந்திரங்கள் (Hydraulically Operated Desilting Machines) ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. மேலும் 17 நீர் விசையால் இயங்கும் தூர்வாரும் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளன.
நலிவடைந்த பிரிவினருக்கான குடிநீர் இணைப்பு சலுகைகள்
நலிவடைந்த பிரிவினரும் எளிதில் குடிநீர் இணைப்புப் பெற தற்போது 500 சதுர அடி வரையுள்ள குடியிருப்புகளுக்கு ரூபாய் 100 மட்டுமே இணைப்புக் கட்டணமாகப் பெற்றுக் கொண்டு குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. இதுவரை 21,435 இணைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்
தமிழகத்திலுள்ள கிராம மற்றும் நகரப் பகுதிகளுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி வழங்கும் நோக்கத்துடன் 1971 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால்
வாரியம் நாட்டில் முன்னோடி நிறுவனமாகத் திகழ்கிறது.
இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம்
திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் மற்றும் கடியாகுறிச்சி ஆகிய இடங்களில் காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சார்ந்த 5 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 18 ஒன்றியங்களைச் சார்ந்த 3,163 ஊரக குடியிருப்புகளைச் சார்ந்த 15.75 இலட்சம் மக்கள் பயன் பெறக்கூடிய இராமநாதபுரம் மாபெரும் கூட்டுக் குடிநீர்த் திட்டம் 112.2006-ல் ரூ.616.00 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத்திட்டம் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு ஓராண்டுக்கு முன்னதாகவே இரண்டாண்டுகளில் முடிக்கப்பட்டு, 11.6.2009 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தினால் இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்கள் பெரிதும் பயனடைந்துள்ளன.
(தொடர்ச்சி நாளை)
அன்புள்ள, மு.க. 19-03-2011
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 89–98. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.