அடக்கம்

முரசொலி · தொகுதி 45 · கடிதம் 3547

முரசொலி கடிதங்கள் · 3547

நகராட்சி நிர்வாகத் துறையின் ஐந்தாண்டு சாதனைகள்!

நாள் 20.3.2011சுமார் 5 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3547. நகராட்சி நிர்வாகத் துறையின் ஐந்தாண்டு சாதனைகள்!

உடன்பிறப்பே,

நகராட்சி நிர்வாகத் துறையில் கழக ஆட்சி கடந்த ஐந்தாண்டு காலத்தில் நிறைவேற்றிய சாதனைகள் - திட்டங்களின் தொடர்ச்சியினை எழுதுகிறேன்.

ஒகேனக்கல் குடிநீர் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டம்

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள குடிநீர் ஆதாரங்கள் புளோரைடு உப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட மற்றும் தரமான குடிநீர் வழங்குவதற்காக ஒகேனக்கல் குடிநீர் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டம் தமிழ்நாடு அரசால் 1,928.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினைச் செவ்வனே செயல்படுத்துவதற்காக 5 தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் டிசம்பர் 2012-ல் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர இலக்கிடப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவடையும் பொழுது இவ்விரு மாவட்டங்களிலுமுள்ள 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் மற்றும் 18 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 6,755 ஊரகக் குடியிருப்புகளிலுள்ள ஏறத்தாழ 30 இலட்சம் மக்கள் பயன்பெறுவர்.

அனுமதிக்கப்பட்டுள்ள முக்கிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள்

இவை தவிர, குடிநீர் வசதி தேவைப்படும் சில முக்கிய நகரங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள குடிநீர்த் திட்டங்கள்:

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோவில் மற்றும் மயிலாடுதுறை ஊராட்சி

ஒன்றியங்களிலுள்ள 295 குடிநீர் தரம் பாதிக்கப்பட்ட குடியிருப்புகள் மற்றும் 315 வழியோர குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூபாய் 1 கோடியே 6 இலட்சம் மதிப்பீட்டில் 3.08 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், வெம்பக்கோட்டை, சிவகாசி, விருதுநகர், வத்திராயிருப்பு (பகுதி), திருவில்லிபுத்தூர் (பகுதி) மற்றும் அருப்புக்கோட்டை (பகுதி) ஒன்றியங்களிலுள்ள 755 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூபாய் 234 கோடி மதிப்பீட்டில் 5.43 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் 7 பேரூராட்சிகள் மற்றும் இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் சிவகாசி (பகுதி) ஒன்றியங்களிலுள்ள 395 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூபாய் 173 கோடி மதிப்பீட்டில் 3.84 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி மற்றும் விருதுநகர் (பகுதி) ஒன்றியங்களிலுள்ள 637 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூபாய் 190 கோடி மதிப்பீட்டில் 3.53 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலுள்ள பல்லடம் நகராட்சி, 23 பேரூராட்சிகள் மற்றும் 6 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 965 குடியிருப்புகளுக்கான குடிநீர் மேம்பாட்டுத் திட்டம் ரூபாய் 225 கோடி மதிப்பீட்டில் 9.88 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் மேலூர், அவனியாபுரம், திருமங்கலம் நகராட்சிகள், அ.வெள்ளாளப்பட்டி, விளாங்குடி, பரவை, திருநகர், அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சிகள், 8 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 1,430 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி பேரூராட்சிக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூபாய் 784 கோடி மதிப்பீட்டில் 12.15 இலட்சம் மக்கள்

பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி, 11 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 944 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ.1,295 கோடி மதிப்பீட்டில் 18.68 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களால் 25.1.2011 அன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

2006-2010 வரை நிறைவேற்றப்பட்ட கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை உருவாக்கி நிறைவேற்று வதில் நாட்டிலேயே முன்னோடியாகத் திகழ்கிறது.

2006க்குப்பின் ரூ.1,734.68 கோடி மதிப்பீட்டிலான 201 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களின் மூலம் 16 நகராட்சிகள், 87 பேரூராட்சிகள், 13,469 ஊரகக் குடியிருப்புகளில் வாழும் 89.35 இலட்சம் மக்கள் பயன் பெற்றுள்ளனர்.

98.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.34 இலட்சம் மக்கள் பயன்பெறும், நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் நகராட்சி, கீழ்வேளூர், வேளாங்கண்ணி பேரூராட்சிகள் மற்றும் 890 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம்;

68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.31 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 239 கடலோர மற்றும் ஊரகக் குடியிருப்புகள் மற்றும் விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை, விருதுநகர் நகராட்சிகள், மல்லாங்கிணறு, காரியாபட்டி பேரூராட்சிகள் மற்றும் 67 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம்;

49.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,41,849 மக்கள் பயன்பெறும், கோவை மாவட்டம் குறிச்சி, குனியமுத்தூர் நகராட்சிகள் மற்றும் கிணத்துக்கடவு பேரூராட்சிக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம்;

29.92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.86 இலட்சம் மக்கள் பயன்பெறும் திருநெல்வேலி மாவட்டம் ஆயக்குடி, அச்சம்புதூர், பண்மொழி, வடகரை, கீழப்பாவூர் பேரூராட்சிகள், கீழப்பாவூர், செங்கோட்டை தென்காசி ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 151 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம்;

23.04 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 92,553 மக்கள் பயன்பெறும் ஈரோடு மாவட்டம் சென்னிமலை, கே.சி.பாளையம், சித்தோடு, நசியனூர் பேரூராட்சிகள் ஈரோடு, சென்னிமலை, பெருந்துறை ஒன்றியங்களைச் சேர்ந்த 69 குடியிருப்புகள் ஆகியவற்றிற்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம்;

13.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,23,082 மக்கள் பயன்பெறும் வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த அரக்கோணம், திருத்தணி நகராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகிய பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

நகர குடிநீர்த் திட்டங்கள்

தமிழகம் முழுவதும் 134 நகரக் குடிநீர்த் திட்டங்கள் 201.77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ரூ.32.61 கோடி மதிப்பீட்டில் 1,37,933 மக்கள் பயன்பெறும் தாம்பரம் நகராட்சி குடிநீர் அபிவிருத்தித் திட்டம்; ரூ.7.90 கோடி மதிப்பீட்டில் 82,689 மக்கள் பயன்பெறும் திருச்சி மாநகராட்சியிலுள்ள திருவரங்கம் குடிநீர் அபிவிருத்தித் திட்டம்; ரூ.6.48 கோடி மதிப்பீட்டில் 60,876 மக்கள் பயன்பெறும் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி குடிநீர் அபிவிருத்தித் திட்டம்; ரூ.4.89 கோடி மதிப்பீட்டில் 72,168 பயன்பெறும் விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகராட்சி குடிநீர் அபிவிருத்தித் திட்டம் ஆகிய நகர்ப்புற குடிநீர்த் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சிறிய நடுத்தர நகரங்களுக்கான குடிநீர்த் திட்டம்

சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கான நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 6 கட்டங்களாக ரூ.493.54 கோடி மதிப்பீட்டில் அனுமதிக்கப்பட்ட 32 குடிநீர்த் திட்டப்பணிகளில் திருப்பத்தூர், வால்பாறை, கரூர், தேவக்கோட்டை அரக்கோணம், திருத்தணி, இராமநாதபுரம்,

பரமக்குடி, கீழக்கரை, இராமேஸ்வரம், அறந்தாங்கி, மறைமலைநகர், சிவகங்கை, நாமக்கல், கூடலூர் மற்றும் விக்கிரமசிங்கபுரம் ஆகிய நகராட்சிகளில் பணிகள் முடிவடைந்துள்ளன; பல்லடம் நகராட்சியில் உட்கட்டமைப்புப் பணிகள் முடிவடைந்து கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகளுக்குத் திருத்திய நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. திருவில்லிபுத்தூர், இராசிபுரம், தஞ்சாவூர், விழுப்புரம் நகராட்சிகளிலும், ஈரோடு மாநகராட்சியிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளக்கோவில், மேட்டூர், சிதம்பரம் ஆகிய 3 நகராட்சிகளில் பணிகள் ஆரம்ப நிலையில் உள்ளன.

புதிய நியமனங்கள்

நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் ஒரு கண்காணிப்புப் பொறியாளர் முதற்கொண்டு 3 ஓட்டுநர்கள் வரை 24 பேரும், 7 நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அலுவலகங்களில் ஒரு செயற்பொறியாளர் முதல் 2 ஓட்டுநர் வரை 19 பேரும், 7 உதவி செயற் பொறியாளர்களும், 7 இரண்டாம்நிலை பட்ட வரைவாளர்களுமாக 14 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில், நேரடி நியமனம் மூலம் 2799 பேரும், கருணை அடிப்படையில் 1701 பேரும், தினக்கூலிப் பணியாளர்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்கி பணி வரன்முறை செய்து 3074 பேரும், அரசு பொதுத்துறையில் பணிபுரிந்து பணியிழந்தவர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு வழங்கல் மூலம் 134 பேரும் ஆக 7708 பேருக்கு நிரந்தரப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நகராட்சிகளில் தொகுப்பூதிய விகிதத்தின் கீழ் பணி நியமனம் செய்யப்பட்ட 170 சமுதாய அமைப்பாளர்கள் 1.9.2006 முதல் ரூ.3200-85-4900 என்ற காலமுறை ஊதிய விகிதத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். மேலும், 133 சமுதாய அமைப்பாளர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மயான உதவியாளர்கள்

நகராட்சி, மாநகராட்சிகளில் பணிபுரியும் வெட்டியான்கள் ‘மயான உதவியாளர்கள்’ என அழைக்கப்பட வேண்டுமென ஆணையிடப்பட்டு, 55 வெட்டியான்கள் மயான உதவியாளர்களாகக் காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் 1266 பேருக்குக் கருணை அடிப்படையிலும், 1042 பேருக்கு நேரடியாகவும் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

328 பணியாளர்களுக்கு அவர்களது பணிவரன்முறைப்படுத்தப்பட்டு காலமுறை ஊதியம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. 10 ஆண்டு காலத்திற்கு மேல் பணிபுரிந்த 2025 தற்காலிக துப்புரவு பணியாளர்களுக்குப் பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வகையாக 2006 முதல் 2010 வரை சென்னை மாநகராட்சியில் மொத்தம் 4661 பணியாளர்கள் பயன்பெற்றுள்ளனர்.

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தில் கருணை அடிப்படையில் பணி வழங்கும் திட்டம் மூலம் 13.05.2006 முதல் 30.9.2010 வரை 416 வாரிசுதாரர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதே காலகட்டத்தில் ஒரு துணை நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர், 128 உதவிப் பொறியாளர்கள், 3 ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள், 3 வரைவாளர்கள், 21 ஓட்டுநர்கள், 33 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 34 பணிமனை மேலாளர் ஆக மொத்தம் 223 அலுவலர் மற்றும் பணியாளர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நேரடியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் கருணை அடிப்படையில் 48 இளநிலை உதவியாளர்கள்/தட்டச்சர் / இளநிலை வரைவு அலுவலர்/பதிவுறு எழுத்தர்/அலுவலக உதவியாளர்/காவலர்/ துப்புரவாளர் ஆகியோர் பணி நியமனம் செய்யப்பட்டனர். 858 தொகுப்பூதியப் பணியாளர்கள் காலமுறை பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். 178 மதிப்பூதிய பணியாளர்கள் தொகுப்பூதியப் பணியாளர்களாகப் பணிமாற்றம் செய்யப்பட்டனர். 310 உதவிப் பொறியாளர்கள் / இளநிலை பொறியாளர்கள்/ இளநிலை உதவியாளர்கள் / இளநிலை நீராய்வாளர்கள்/ மின் கண்காணிப்பாளர்கள்/ ஓட்டுநர்கள் ஆகியோர் கீழ்நிலைப் பணியில் இருந்து பணியமர்வு வழங்கப்பட்டது.

52 உதவிப் பொறியாளர்கள்/உதவி நிலநீர் வல்லுநர் நேரடி பணி நியமனம் செய்யப்பட்டனர்.

உடன்பிறப்பே, நகராட்சி நிர்வாகத் துறையில் நாள்தோறும் நல்ல திட்டங்களும், பணிகளும் நடைபெற்று வருவது கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அந்த மகிழ்ச்சிக்கு காரணம் நாடு அவற்றின் மூலம் பெற்று வரும் நன்மைகள்தான். நகராட்சி நிர்வாகத் துறையின் சிறப்பான பணிகளுக்கெல்லாம் மூல காரணமாக இருப்பது - தம்பி துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சுறுசுறுப்பான முனைப்புதான் என்பதை என்னைப் போலவே நீயும் அறிவாய்! அந்தப் பணிகள் தொடர உன் பணிகள் தொடரட்டும்!

அன்புள்ள, மு.க. 20-03-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 104–110. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 45-இல் மேலும் கடிதங்கள்