அடக்கம்

முரசொலி · தொகுதி 45 · கடிதம் 3546

முரசொலி கடிதங்கள் · 3546

கவசங்களையும் கேடயங்களையும் என்றும் பிரித்திடேன்!

நாள் 19.3.2011சுமார் 4 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3546. கவசங்களையும் கேடயங்களையும் - என்றும் பிரித்திடேன்!

உடன்பிறப்பே,

வரவிருக்கின்ற சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் - களத்திலே நிற்க விருக்கும் - வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு விட்டன. கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 119 பெயர்களில் 58 பேர் புது முகங்கள் என்றும் 70 பேர் பட்டதாரிகள் என்றும் அதிலே வழக்கறிஞர்கள் 24 பேர் என்றும், டாக்டர்கள் 3 பேர் என்றும்; முதுகலைப் பட்டதாரிகள் 27 பேர் என்றும் செய்தியாளர்கள் என்னைக் கேட்டபோது கூறியிருக்கிறேன்.

அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் சென்னையிலே தங்கியிருந்தோரும் - கழக மாவட்டச் செயலாளர்களும் நேற்றையதினம் இரவே என்னைச் சந்தித்து வாழ்த்தினைப் பெற்றுக் கொண்டு தொகுதிகளுக்கு சென்று விட்டார்கள். இதுவரை பொறுப்பிலே இருந்த ஒரு சிலருக்கு இந்தமுறை வாய்ப்பளிக்கப்படவில்லை என்ற ஏமாற்றங்களாக இருந்தவர்களான - எனக்கு மிகவும் நெருங்கிய கழகத்தின் முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமியும், என்னுடைய தளகர்த்தர்களில் ஒருவர் என்று சொல்லத்தக்க அளவிற்கு என் வாழ்வோடு நெருங்கிய தொடர்புடைய தம்பி கோ.சி. மணியும் இந்தமுறை தேர்தலில் போட்டியிடவில்லை.

இன்னும் சொல்லப்போனால், நான் கழக வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்பே ஆற்காடு வீராசாமி என்னைச் சந்தித்து தனது உடல் நிலையைப் பற்றிக் கூறி தனக்கு இந்த முறை வாய்ப்பளிக்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டார். வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்பாகவே அண்ணா அறிவாலயம் வந்து, என் பக்கத்திலே இருந்து வேட்பாளர்களை

அறிவித்தவுடன், அவரும் என்னை வாழ்த்தி பொன்னாடை அணிவித்தார். இந்த இரண்டு அமைச்சர்களுக்கும் வாய்ப்பு அளிக்காதது பற்றி செய்தியாளர்கள் என்னைக் கேள்வி கேட்டபோது அவர்கள் உடல் நிலை கருதி வாய்ப்பு தரப்படவில்லை என்று நான் அப்போதே கூறி, அதுவும் ஏடுகளிலே வெளி வந்துள்ளது. அதைப்போலவே தம்பி கோ.சி. மணிக்கு வாய்ப்பு தராவிட்டாலும், அவரால் வளர்க்கப்பட்ட மற்றொரு தம்பிக்குத்தான் அந்தத் தொகுதியிலே வாய்ப்பு தரப்பட்டுள்ளது. கோ.சி.மணி இளமை முதல் எப்பொழுதும் எனக்கு கவசமாகவும் எதிர்ப்புக் கணைகளிலிருந்து என்னைக் காத்திடும் கேடயமாகவும் விளங்குபவர். நானும் அவரும் வாழும்வரை இந்த உணர்வு நிரந்தரமாகவே இருக்கும்!

வட சென்னை மாவட்டக் கழகச் செயலாளராக அரும்பணியாற்றி - சுழன்று சுழன்று உழைத்து வரும் தம்பி வி.எஸ். பாபு அவர்களுக்கு - அவருடைய தொகுதி இந்தத் தேர்தலில் சீரமைப்பு காரணமாக பிரிந்துவிட்ட காரணத்தினால் - வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்ற போதிலும் - அவருடைய பட்டாளத்தோடு அறிவாலயம் வந்து எனக்கு பொன்னாடை அணிவித்து, அவருடைய மாவட்டத்தில் போட்டியிடும் கூட்டணியினரையெல்லாம் வெற்றி பெறச் செய்து அழைத்து வருவதாக சூளுரை கூறிவிட்டுச் சென்றபோது, என் மனத்திற்கு என்னாலேயே ஆறுதல் கூற முடியவில்லை. எப்படிப்பட்ட தம்பிமார்களை என் உடன்பிறப்புகளாகப் பெற்றிருக்கிறேன் என்பதை எண்ணி நான் பெருமிதம் கொண்டேன்.

ஆனால் ஒரு சிலர் வாய்ப்பு கிடைக்காதவர்கள் - அல்லது அவர்களுடைய ஆதரவாளர்கள் வருத்தப்பட்டுத்தான் செய்கிறார்கள். ஒரு உதாரணம் கூறுகிறேன், கேளேன். கடலூர் சட்டமன்றத் தொகுதியில் என்னுடைய அருமை நண்பராக இருந்தவர் கடலூர் இளம்வழுதி.

அண்ணா அவர்கள் இருந்த காலத்திலிருந்து கழகத்தை வளர்த்தவர். அவர் இப்போது இல்லை, மறைந்துவிட்டார். ஆனாலும் அவருடைய குடும்பமே கழகக் குடும்பம். அவருடைய வீட்டிலே உள்ள பிள்ளை குட்டிகள் எல்லாம் கோபாலபுரம் வீட்டைத்தான் தங்கள் சொந்த வீடாகக் கருதுபவர்கள். அந்த கடலூர் இளம்வழுதியின் புதல்வன்தான் இள. புகழேந்தி, வழக்கறிஞரும் கூட. அவர் அந்தத் தொகுதியின் சட்டப் பேரவை

உறுப்பினராக இருந்து சிறப்பாகப் பணியாற்றினார். ஆனால் கடந்த முறை அந்தத் தொகுதிக்கான வேட்பாளராக அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கழகத்திலே வேறொரு வருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கருதி, புகழேந்தியை அழைத்து நிலைமையை நான் கூறியபோது அதனையேற்றுக் கொண்டு - மிகப் பொறுமையாக இந்த ஐந்தாண்டு காலமும் அவர் கழகப் பணிகளை ஆற்றி வந்தார். கடந்த முறை அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட போது, தனக்கு வாய்ப்பு தராமல் விட்டு விட்டார்களே என்று அவர் எந்த தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை. யாரையும் தூண்டிவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தக் கூறவில்லை. கழக மாணவர் அணியிலே பொறுப்பேற்று ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவ இயக்கங்களைத் தொடங்கிட உழைத்தார். எனவே இந்த ஐந்தாண்டுகள் சட்டமன்றத்திலே நல்ல பணி ஆற்றிய நண்பருக்கு வாய்ப்பு அளிக்க இயலாமல், கழகப்பணியை ஆற்றி வந்த இள. புகழேந்திக்கு வாய்ப்பு தரப்பட்டது என்றதும், இந்த ஐந்தாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவரின் ஆதரவாளர்கள் சிலபேர் அங்கே எதிர்ப்புகளைத் தெரிவித்ததாக ஏடுகளிலே செய்தி வந்துள்ளது. வாய்ப்பு கிடைக்காதவர்கள் பொறுமையாக இருந்த போதிலும், அவருடைய ஆதரவாளர்கள் என்போர், அவருடைய பெயருக்கு சங்கம் ஏற்படுத்த முனைகிறார்கள்.

இத்தகைய போக்குகள் நமது கழகத்திற்கு ஏற்பதல்ல. மாற்று முகாம்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளையெல்லாம் ஏடுகளில் கண்டு வருகிறோம். அதைப் பற்றிக்கூட செய்தியாளர்கள் என்னிடம் கேட்டபோது மற்றவர்களுக்கு ஏற்படுகின்ற சிக்கலைப் பார்த்து மகிழ்ச்சி அடையக் கூடியவன் நான் அல்ல என்றுதான் பதில் அளித்திருக்கிறேன். எனவே மற்றவர்களைப் பற்றியே நாம் நினைத்துக் கொண்டிராமல் நமது பணியினைத் தொடங்கிட வேண்டும்.

முறைப்படி தோழமைக் கட்சிகளோடெல்லாம் கலந்து பேசி எந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளிலே போட்டியிடுவது என்பது உறுதியாகிவிட்டது. அவைகள் எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றியும் தோழமைக் கட்சிகளோடு கலந்து பேசி மணிக்கணக்கிலே விவாதித்து, அவைகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதன் பின்னர் கழகத்தின் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களையெல்லாம் நேர்காணலுக்கு

அழைத்து, இரவும் பகலுமாக கழகத்தின் தலைமை அவர்களோடு கலந்து பேசி, வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டார்கள். இதைத் தொடர்ந்து 19-3-2011 அன்று கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. அந்தத் தேர்தல் அறிக்கையினைத் தயாரிப்பதற்காக கழகத்தின் சார்பில் நியமிக்கப்பட்ட குழுவினர் அளித்த விவரங்களை வைத்துக் கொண்டு தேர்தல் அறிக்கை தயாராகி, அச்சுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதைப்பற்றிக் கூட செய்தியாளர் ஒருவர் கடந்தமுறை கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையை அந்தத் தேர்தலிலேயே அதுதான் “கதாநாயகன்” என்று வர்ணிக்கப்பட்டதே, இந்த முறை தி.மு. கழகத்தின் தேர்தல் அறிக்கை எப்படி இருக்குமென்று கேட்டபோது - நான் சிரித்துக் கொண்டே “கதாநாயகி”யாக இருக்குமென்று சொன்னேன். அந்தத் தேர்தல் அறிக்கையிலே கூறப்படும் கருத்துக்களையெல்லாம் வாக்காளப் பெருமக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு உனக்கு இருக்கிறது. கழகத்தின் சார்பில் கடந்த ஐந்தாண்டுகளில் செய்யப்பட்ட சாதனைகளையெல்லாம் எடுத்துச் சொல்லி, இதைப் போன்ற சாதனைகளில் மீண்டும் தொடர்ந்து பெற்றிட நமது அணியினை ஆதரிக்க வேண்டுமென்று அனைவரையும் கேட்டுக் கொள்ள வேண்டியதும் உன்னுடைய கடமைதான்.

கழகத்தின் பொதுச் செயலாளரும், பொருளாளர் தம்பி ஸ்டாலினும், தென் மண்டலத்தின் அமைப்புச் செயலாளர் தம்பி மு.க. அழகிரியும், கழக முன்னணியினரும், பிரச்சாரகர்களும், கழகக் கலைஞர்களும் தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஈடுபடுவது பற்றிய விவரங்கள் அடுத்தடுத்து வரவுள்ளன. இதற்கு முன்பெல்லாம் நான் விடிய விடிய தேர்தல் பிரச்சாரம் செய்வேனே, வேனிலே அமர்ந்து கொஞ்சம் தயிர் சாதத்தை சாப்பிட்டுவிட்டு ஒவ்வொரு தொகுதியாக வலம் வருவேனே, அந்த அளவிற்கு பிரச்சாரம் செய்ய எனது உடல் நிலை இடம் கொடுக்காவிட்டாலும், வரா விட்டால் நீ கோபித்துக் கொள்வாயே என்பதற்காக என்னால் முடிந்த அளவிற்கு ஆங்காங்கு வருவதற்கு முயற்சி செய்கிறேன். அதுபற்றிய விவரங்களையும் இரண்டொரு நாட்களில் தெரிவிக்கிறேன்.

உடன்பிறப்பே, நாளை (19.3.2011) முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. தேர்தலுக்கு இன்னும்

ஒருமாதம் கூட இல்லை. எண்ணி 24 நாட்கள்தான் உள்ளன. அதற்குள் நமக்கு எண்ணிலடங்கா பணிகள் உள்ளன. நேரம் கிடைக்கும்போதெல்லாம் கடிதம் மூலமாக உன்னுடன் தொடர்பு கொள்கிறேன். மாற்றார் முகாமிலே என்ன நடக்கிறது என்றெல்லாம் பார்த்துக் கொண்டிராமல், மக்களை நேரில் சந்தித்து நாம் செய்தவைகளைச் சொல்லி, செய்யப் போவதையும் சொல்லி உண்மை உழைப்புக்கான அங்கீகாரத்தை அளிக்கச் செய்திடுக!

அன்புள்ள, மு.க. 19-3-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 99–103. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 45-இல் மேலும் கடிதங்கள்