முரசொலி கடிதங்கள் · 3548
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை ஐந்தாண்டு சாதனைகள்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3548. சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை ஐந்தாண்டு சாதனைகள்!
உடன்பிறப்பே,
திராவிட இயக்கத்தின் முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மகளிர் முன்னேற்றம். 1929ஆம் ஆண்டில் நடைபெற்ற செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் மகளிர் முன்னேற்றம் குறித்து தந்தை பெரியார் அவர்கள் வடித்தெடுத்த தீர்மானங்களின் அடிப்படையில் தமிழகத்தில் 1967ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் அமைந்த திராவிட முன்னேற்றக் கழக அரசும், அதனைத் தொடர்ந்து 1969இல் எனது தலைமையில் அமைந்த திராவிட முன்னேற்றக் கழக அரசும், பெண்கள் முன்னேற்றம் குறித்த பல சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றி பெண்கள் அரசியல் சமூக பொருளாதார நிலைகளில் விடுதலைபெற்று வாழ்வில் படிப்படியாக முன்னேறவும், பட்டம் பதவிகள் பெற்றுச் சமுதாயத்தில் உயர்நிலை பெறவும் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
1973இல் தமிழகக் காவல் துறையில் முதல் முதலாக பெண்கள் நியமனம்; இன்று இலட்சக்கணக்கான ஏழை எளிய மகளிர் வாழ்வில் பொருளாதார விடுதலைக்கு வழி வகுத்துள்ள சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி - 1989இல் தருமபுரியில் தொடங்கி வைத்த மகளிர் மேம்பாட்டுத் திட்டம்; ஏழைப் பெண்களுக்கு ஈ.வெ.ரா. நாகம்மையார் பெயரில் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம்; ஏழை கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச்சத்து உட்கொள்ள தற்போது 6000 ரூபாய் நிதியுதவி வழங்கும் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி நினைவு மகப்பேறு நிதி உதவித் திட்டம்; 1990இல் அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு; பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் தனிச் சட்டம்; 1996இல் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு; முதல் தலைமுறையாக தொழில் முனையும்
மகளிர்க்கு மானிய உதவி; தொழில் வளாகங்களில் தொழில்மனை ஒதுக்கீட்டில் மகளிர்த் தொழில் முனைவோர்க்கு முன்னுரிமை என்பனபோல பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு பெண்கள் பல வழிகளிலும் முன்னேற்றம் அடைந்து வருவதை நினைவு படுத்திட விரும்புகிறேன்.
இந்தியத் திருநாட்டின் குடியரசுத் தலைவர் பதவிக்கு திருமதி பிரதிபா பாட்டீல் அவர்கள் அறிவிக்கப்பட்டபோதும், அதன்படி அவர் முதலாவது பெண் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் அவரை வரவேற்றுப் போற்றிப் பாராட்டிய உணர்வோடு கழக அரசு பெண்களுக்கு அளித்துவரும் முன்னுரிமைக்குச் சான்றாக இன்று தமிழக அரசின் தலைமைச் செயலாளராகவும், காவல் துறை தலைமை இயக்குநராகவும் மகளிர் மாமணிகள் இருவர் திகழ்வதை நீ அறிவாய்; இந்த நாடும் நன்கறியும்! இந்நிலையில் மகளிர் முன்னேற்றத்திற்காக இந்த அரசு தொடர்ந்து அளித்து வரும் ஊக்கத்தையும், உதவிகளையும் நினைவு படுத்திடும் நோக்கில் இந்தக் கடிதத்தைத் தொடர்கிறேன்.
திருமண நிதியுதவித் திட்டங்கள்
பெண்கள் அனைவரும் கல்விபெற ஊக்கமளித்திட வேண்டும் எனும் நோக்கில் 8 ஆம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கிய மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் 1989ஆம் ஆண்டில் கழக ஆட்சியில் அறிமுகப்படுத்தப் பட்டது. பின்னர் பெண்கள் அனைவரும் குறைந்தது 10 ஆம் வகுப்பு வரையாவது படிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இத்திட்ட நிதியுதவி 1996இல் 10 ஆயிரம் ரூபாய் என உயர்த்தி வழங்கப்பட்டது. ஆயினும், 2001இல் பொறுப்பேற்ற அ.தி.மு.க. அரசு இத்திட்டத்தை முடக்கி வைத்து, ஏழை எளிய பெண்கள் பயனடைவதைத் தடுத்தது. அந்நிலையில், 2006இல் பொறுப்பேற்ற இந்த அரசு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தை மீண்டும் நடைமுறைப் படுத்தியதுடன், நிதியுதவி 10 ஆயிரம் ரூபாய் என்பதை 15 ஆயிரம் ரூபாய் எனவும் உயர்த்தியது. பின்னர், 20.3.2008 அன்று இத்திட்ட நிதியுதவியை 20 ஆயிரம் ரூபாய் என்றும், அதனைத் தொடர்ந்து 1.4.2010 முதல் 25 ஆயிரம் ரூபாய் என்றும் மேலும் உயர்த்தி வழங்கி வருகிறது. இப்போது வெளியிடப்பட்ட கழகத் தேர்தல்
அறிக்கையிலே கூட, இந்த 25 ஆயிரம் ரூபாயையும், 30 ஆயிரம் ரூபாயாக புதிய ஆட்சி மலருமேயானால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2006க்குப்பின் 4 இலட்சத்து 64 ஆயிரத்து 756 ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 880 கோடியே 55 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவியாக வழங்கப்பட்டு, ஏழைக் குடும்பங்கள் கடந்த ஐந்தாண்டுகளாகப் பயனடைந்துள்ளன. ஏனைய திருமணத் திட்டங்களின் நிதியுதவிகளும் 1.4.2010 முதல் 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு வழங்கப்படுகின்றன.
அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்
அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் நிதியுதவி, மணம்புரியும் தம்பதியரில் ஒருவர் ஆதி திராவிடர் அல்லது பழங்குடியினராகவும் மற்றொருவர் வேறு இனத்தைச் சார்ந்தவராகவும் இருந்தால் 20 ஆயிரம் ரூபாய் எனவும், மணம்புரியும் தம்பதியரில் ஒருவர் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவராகவும் மற்றொருவர் முற்பட்ட இனத்தைச் சார்ந்தவராகவும் இருந்தால் 15 ஆயிரம் ரூபாய் எனவும் உயர்த்தப்பட்டது. இத்திட்ட நிதியுதவி 1.4.2010 முதல் இரண்டு திட்டங்களுக்கும் 25 ஆயிரம் ரூபாயாக மேலும் உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் 11 ஆயிரத்து 383 தம்பதியருக்கு 20 கோடியே 89 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்
இத்திட்டத்தின்கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளில் 910 ஏழை விதவைப் பெண்களின் மறுமணம் செய்துகொள்ள 1 கோடியே 12 இலட்சத்து 71 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு விதவைத் தாய்மார்களின் மகள் திருமண நிதியுதவித் திட்டம்
ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு விதவைத் தாய்மார்களின்
மகள் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஐந்தாண்டுகளில் 16,365 பெண்களின் திருமணங்களுக்கு 30 கோடியே 32 இலட்சத்து 93 ஆயிரம் ரூபாய் திருமண நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம்
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டத்தின்கீழ் ஐந்தாண்டுகளில் 2220 பெண்களின் திருமணங்களுக்கு 4 கோடியே 58 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
ஆக, பல்வேறு திருமண நிதியுதவித் திட்டங்களின்கீழ், 5 ஆண்டுகளில் 4 இலட்சத்து 95 ஆயிரத்து 634 ஏழைப் பெண்களின் திருமணங்களுக்காக மொத்தம் 937 கோடியே 50 இலட்சத்து 87 ஆயிரம் ரூபாய் அதாவது சற்றேறக்குறைய ஆயிரம் கோடி ரூபாய் ஏழைப் பெண்களின் திருமணத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம்.
அரவாணிகள் என்று சொல்லப்படும் திருநங்கைகளும் இந்தச் சமுதாயத்தின் அங்கம் என்பதால் அவர்களின் நலனை உறுதி செய்வதற்காக, “தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம்” 15.4.2008 அன்று கழக ஆட்சியிலே தொடங்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் வகையில் அவர்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை இவ்வரசு வழங்கி வருகிறது.
அரவாணிகள் நலவாரியத்தின் மூலம், இதுவரை 3878 அரவாணிகள் கணக்கெடுக்கப்பட்டு, 2328 அரவாணிகளுக்கு அடையாள அட்டைகளும், 1238 பேருக்குக் குடும்ப அட்டைகளும், 133 பேருக்குத் தொகுப்பு வீடுகளும், 100 பேருக்குத் தையல் இயந்திரங்களும், 482 பேருக்கு வீட்டுமனைப்பட்டாக்களும், 585 பேருக்கு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மருத்துவ அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன.
2010-2011ஆம் ஆண்டில் அரவாணிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் வாரியத்திற்கென 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
அரசு குழந்தைகள் காப்பகம்
திருநெல்வேலி, தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, தூத்துக்குடி, சேலம் ஆகிய மாவட்டங்களில் அரசுக் குழந்தைகள் காப்பகங்களுக்குக் கட்டடம் கட்டுவதற்கு 4 கோடியே 33 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
அரசுக் குழந்தைகள் காப்பகங்களில் பயன்பெற்று வரும் 4072 குழந்தைகளுக்கு உணவூட்டு செலவினத்திற்காகக் கடந்த ஐந்தாண்டுகளில் 5 கோடியே 23 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
அரசுச் சேவை இல்லம்
சமுதாயத்தில் விதவையர், கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற ஏழைப் பெண்கள் ஆகியோர் தங்கள் கல்வித் தரத்தை உயர்த்திக் கொண்டு தொழில் கல்வி, தையல், கணிப்பொறி மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சுப் பயிற்சிகளுடன் பாதுகாப்பான உறைவிடமும் பெறும் பொருட்டு சேவை இல்லங்களை இந்த அரசு நடத்தி வருகிறது.
அனைத்து சேவை இல்லங்களிலும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 670 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 31.6 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கணினி பயிற்சி மற்றும் கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
அரசுச் சேவை இல்லங்களில் பயன்பெறும் 670 பயனாளிகளுக்கு உணவூட்டுச் செலவினமாக 1 கோடியே 7 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் இதுவரை செலவிடப்பட்டுள்ளது.
அரசுக் குழந்தைகள் மற்றும் சேவை இல்லங்களில் பயன் பெறும் உள்ளுறைவோர்களுக்கான மாதாந்திர உணவூட்டுச் செலவினம் 225 ரூபாயிலிருந்து 450 ரூபாயாகக் குழந்தைகளுக்கும்; 300 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக பெரியவர்களுக்கும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம்
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாத்தல் சட்டப்படி பெண்களின் பாதுகாப்பிற்காக மாவட்ட சமூகநல
அலுவலர்கள் தற்காலிகப் பாதுகாப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
31 மாவட்டங்களில் முழு நேர அலுவலர்களாக 31 பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் 31 இளநிலை உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்;
மேலும் சேவை பங்களிப்பாளர் 31 மாவட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2 கோடியே 61 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பாதுகாப்பு அலுவலர் மற்றும் தட்டச்சர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
98 குறுகியகால பாதுகாப்பு இல்லங்கள் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் வகையில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.
சமூகப் பாதுகாப்பு திட்டங்கள்
தமிழக அரசு, இந்திரா காந்தி மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதிய தேசியத் திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள கடும் அல்லது 80 சதவீதம் உடல் உறுப்புகள் குறைபட்ட பலதரப்பட்ட ஊனமுடைய, 18 வயது முதல் 64 வயது வரை உள்ளோர் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறுவர். இத்திட்டம் 31-3-2010 முதல் நமது மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு மாதம் 500 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில் 200 ரூபாய் மத்திய அரசின் பங்காகவும், 300 ரூபாய் மாநில அரசின் பங்காகவும் வழங்கப்படுகிறது.
ஆதரவற்ற மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியத்திட்டம் மாநில அரசினால் வாய்பேச முடியாதவர்களுக்கும் 19-3-2010 முதல் நீட்டிக்கப்பட்டு, செயல்படுத்தப்படுகிறது.
1-6-1975இல் இருந்து செயல்படுத்தப்பட்டு வரும் ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டத்துடன் தமிழக அரசு, 40 முதல் 64 வயதுவரை உள்ள மற்றும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள விதவைகளுக்கென இந்திரா காந்தி விதவையர் ஓய்வூதிய தேசியத் திட்டம் என்ற திட்டத்தை 31-3-2010 முதல்
செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு மாதம் 500 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில் 200 ரூபாய் மத்திய அரசின் பங்காகவும் 300 ரூபாய் மாநில அரசின் பங்காகவும் வழங்கப்படுகிறது.
1-7-2008 முதல் 50 வயது மற்றும் அதற்கு மேலாகியும் திருமணம் ஆகாத, வறுமையில் வாடும் ஏழைப் பெண்களுக்குத் தமிழக அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்கீழ் 14 ஆயிரத்து 270 ஏழைப் பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்ட 400 ரூபாய் தற்போது 500 ரூபாய் என மாநில அரசினால் உயர்த்தி வழங்கப்படுகிறது.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும், முதியோர் ஓய்வூதியம் பெறத் தகுதியான ஆதரவற்ற முதியோர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், தகுதியிருந்தும் ஓய்வூதியம் பெற இயலாதவர்களை இத்திட்டத்தின்கீழ் கொணர இவ்வரசு எடுத்த முயற்சியின் காரணமாக, தற்போது 2010-2011ம் நிதி ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை, 9 இலட்சத்து 78 ஆயிரத்து 677 பேர் பயனடைந்துள்ளனர்.
இதுகாறும், மாநில அரசு நடைமுறைப்படுத்தி வந்த ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மாநில நிதியிலிருந்து வழங்கி வந்த ஓய்வூதியமான 200 ரூபாயை 1.9.2006 முதல் 400 ரூபாயாக உயர்த்தி வழங்கிய இந்த அரசு, 1.12.2010 முதல் இந்த ஓய்வூதியத்தை மாதம் 500 ரூபாய் என மேலும் உயர்த்தி வழங்கி வருகிறது.
ஆதரவற்ற, வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ள, வயது முதிர்ந்தோருக்கு ஆண் வாரிசு எவரேனும் இருப்பின் அவருக்கு முதியோர் ஓய்வூதியம் கிட்டாத நிலை இருந்தது. அதை மாற்றிடும் வகையில் ஆதரவற்ற, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள, ஆதரவற்ற முதியோர்களுக்கு ஆண் வாரிசுகள் எவரேனும் இருந்தாலும் அம்முதியோர்களுக்கு ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியம் வழங்கலாம் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உரிய ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
65 வயதினை எட்டிய, ஆதரவற்ற அரவாணிகளையும் ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியத்திட்டத்தின்கீழ் சேர்த்து, அவர்களுக்கு மாதமொன்றிற்கு 400 ரூபாயை ஓய்வூதியமாக வழங்கிடலாம் என்று 4-4-2008இல் அரசு ஆணையிட்டது.
தற்போது இந்த ஓய்வூதியம் மாதம் 500 ரூபாய் என வழங்கப்படுகிறது.
அன்புள்ள, மு.க. 21-3-2011
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 111–118. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.