அடக்கம்

முரசொலி · தொகுதி 45 · கடிதம் 3551

முரசொலி கடிதங்கள் · 3551

நாடு வாழ நாம் புரிந்த சாதனைகள்!

நாள் 28.3.2011சுமார் 11 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3551. நாடு வாழ நாம் புரிந்த சாதனைகள்!

உடன்பிறப்பே,

ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் தமிழக மக்கள் பல்வேறு பிரச்சினைகளைத் தான் சந்தித்து வருகிறார்கள், எந்த நன்மையும் செய்யப்படவில்லை, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த கருணாநிதி ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா என்றெல்லாம் கேட்டதாக ஏடுகளிலே செய்தி வந்துள்ளது. எனவே கடந்த ஐந்தாண்டு கால தி.மு. கழக ஆட்சியில் தமிழக மக்களுக்காக என்னென்ன செய்யப்பட்டது என்பது குறித்தும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பது பற்றியும் விளக்கிடுகிறேன்.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வீதம் மாதம் 20 கிலோ அரிசி ஏழையெளிய மக்களுக்கு வழங்கப்பட்டு அதன் மூலமாக மாதந்தோறும் 1 கோடியே 85 இலட்சம் குடும்பங்கள் பயனடைகிறார்கள்.

மாதந்தோறும் குறைந்த விலையில் பாமாயில் எண்ணெய், துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, மைதா செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு அத்தியாவசிய பொருள்கள் அரசின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறதே, இது மக்களுக்கு செய்யப்பட்ட நன்மை இல்லையா? விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நிறைவேற்றிய திட்டம் இல்லையா?

“மானிய விலையில் மளிகைப் பொருள்கள்” என 50 ரூபாய்க்கு 10 சமையல் பொருள்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படுகின்றன.

22 இலட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி கடந்த ஐந்தாண்டு காலத்தில் செய்யப்பட்டிருக்கிறதே, ஜெயலலிதாவுக்கு இது மக்களுக்கு செய்யப்பட்ட நன்மையாகத் தெரியவில்லையா?

விவசாயிகளுக்கான பயிர்க்கடன் வட்டி 2005-2006இல் 9 சதவீதம்; 2006-2007 கழக அரசில் 7 சதவீதம்; 2007-2008இல் 5 சதவீதம்; 2008-2009இல் 4 சதவீதம்; 2009-2010இல் பயிர்க்கடன் வட்டி அறவே ரத்து; 2006க்குப்பின் இதுவரை 35 இலட்சத்து 54 ஆயிரத்து 721 விவசாயிகளுக்கு 8 ஆயிரத்து 477 கோடியே 56 இலட்சம் ரூபாய் பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவைகள் எல்லாம் கடந்த ஐந்தாண்டு காலத்தில் கழக அரசில் செய்யப்பட்ட நன்மைகளா இல்லையா?

2005-2006இல் நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு விலை ரூபாய் 600; 2010-2011 இல் சாதாரண நெல் விலை 1050 ரூபாய்; சன்னரக நெல் விலை 1100 ரூபாய்;

உழவர்களும், வாங்குவோரும் பயனடைய மீண்டும் புதுப்பொலிவுடன் 117 உழவர் சந்தைகள்; மேலும் புதிதாக 45 உழவர் சந்தைகள் அமைப்பு;

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 2006இல் 50 சதவீத காப்பீட்டுத் தொகையை அரசே மானியமாக வழங்கி, ஊக்கப்படுத்தியதால் 2005-2006இல் ஒரு இலட்சம் விவசாயிகள் பயனடைந்த நிலையில்; 2009-2010 ஆம் ஆண்டில் 9 இலட்சத்து ஓராயிரத்து 643 விவசாயிகள் அரசின் மானிய உதவி பெற்றுப் பயிர்க் காப்பீடு செய்தனர். இதுவரை 9 இலட்சத்து ஆயிரத்து 643 விவசாயிகளுக்கு 974 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது; இது மக்களுக்குச் செய்யப்பட்ட சாதனையா இல்லையா?

கரும்பு விவசாயிகளுக்கு 2005-2006இல் டன் ஒன்றுக்கு வழங்கப்பட்ட விலை ரூ.1014; தற்போது டன் ஒன்றுக்கு ரூ.2000 வழங்கப்படுகிறது.

ஆதிதிராவிட விவசாயிகள் ‘தாட்கோ’ நிறுவனத்தின் மூலம் 31.3.2006 வரை பெற்ற கடன் தொகை வட்டியுட்பட 5 கோடியே 25 இலட்சம் தள்ளுபடி;

நில அடமானத்தின்மீது தொழில்புரிய வழங்கப்பட்ட பண்ணைசாராக் கடன்களுக்கு வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டு; வாங்கிய கடன் அசல் தொகையை செலுத்தினால் கடன் ரத்து;

மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் புரட்சிகரமான திட்டத்தின்கீழ் 189 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம்;

369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம்;

கழக அரசு விவசாயிகளுக்கு வழங்கும் சலுகைகளால் உணவு தானிய உற்பத்தி 2005 - 2006இல் 61 இலட்சம் டன்; 2008-2009இல் 91 இலட்சம் டன் என உயர்வு.

விவசாயிகளைச் சுயஉதவிக் குழுக்களாக ஒருங்கிணைத்து சுழல்நிதி வழங்கும் திட்டத்தின்கீழ் 27 ஆயிரத்து 294 குழுக்கள் அமைக்கப்பட்டு, 27 கோடியே 29 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சுழல்நிதியாக வழங்கப்பட்டு, 32 ஆயிரத்து 940 குழுக்களுக்கு 402 கோடியே 56 இலட்சம் ரூபாய் கடனாகவும் அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு இவைகள் எல்லாம் கடந்த ஐந்தாண்டு காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளாகத் தோன்றவில்லையா?

1 இலட்சத்து 5 ஆயிரத்து 494 கைத்தறி நெசவாளர்களுக்கும், 90 ஆயிரத்து 547 விசைத்தறி நெசவாளர்களுக்கும், சிறப்புத் தொகை செலுத்தி மின் இணைப்பு பெற்ற 2 இலட்சத்து 39 ஆயிரத்து 511 விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம்; மேலும், 2 இலட்சம் பம்ப் செட்களுக்கும் இலவச மின்சார இணைப்பு படிப்படியாக வழங்கிட ஆணையிடப்பட்டு வழங்கப்படுகிறது.

விவசாயத் தொழிலாளர் நல வாரியம் உட்பட 34 அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்களில் 2 கோடியே 11 இலட்சத்து 55 ஆயிரத்து 525 உறுப்பினர்கள் சேர்ப்பு;

20 இலட்சத்து 75 ஆயிரத்து 512 அமைப்பு சாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு 995 கோடியே 78 இலட்சத்து 48 ஆயிரத்து 815 ரூபாய் உதவித் தொகை;

3742 கோடியே 42 இலட்சத்து 59 ஆயிரம் ரூபாய்ச் செலவில் ஒரு கோடியே 72 இலட்சத்து 80 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்க முடிவு செய்யப்பட்டு, இதுவரை ஒரு கோடியே 62 இலட்சத்து 59 ஆயிரத்து 526 குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

661 கோடி ரூபாய்ச் செலவில் 29 இலட்சம் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன;

1 இலட்சத்து 79 ஆயிரம் நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகள் குடும்பங்களுக்கு 2 இலட்சத்து 12 ஆயிரத்து 995 ஏக்கர் இலவச நிலம்;

8 இலட்சத்து 29 ஆயிரத்து 236 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்;

காமராஜர் பிறந்த நாளில் “கல்வி வளர்ச்சி நாள்” என பள்ளிகளில், கல்வி விழா;

2 வயது முதல் 15 வயது வரை உள்ள 73 இலட்சம் குழந்தைகள், மாணவ மாணவியருக்கு சத்துணவுடன் வாரம் 5 நாட்களும் முட்டைகள்; முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப் பழங்கள்;

தமிழ் வழியில் பயிலும் 50 இலட்சத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியர்க்கு அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் சிறப்புக் கட்டணங்களும், 11 இலட்சம் மாணவ, மாணவியருக்கு 10, 12ஆம் வகுப்புகளின் அரசுத் தேர்வுக் கட்டணங்களும் ரத்து.

பட்டப்படிப்பு பயிலும் 3 இலட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவியரின் படிப்புக் கட்டணங்கள் ரத்து; 2010-2011 முதல் எம்.ஏ., எம்.எஸ்ஸி. வகுப்புகளுக்கும் படிப்புக் கட்டணங்கள் ரத்து.

படிப்பைத் தொடர இயலாமல் இடையில் நிறுத்திய ஏழை மாணவர்களில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் வேலை வாய்ப்புகளுக்கேற்ற தொழிற் பயிற்சிகளைச் சமுதாயக் கல்லூரிகள்

மூலம் பெற, ஒரு கோடி ரூபாய் செலவில் திறந்த நிலைப் பல்கலைக்கழகம் மூலம் தலா ஆயிரம் ரூபாய் உதவித் தொகை;

ஆண்டுதோறும் 24 இலட்சத்து 82 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கும், 4 இலட்சத்து 35 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்;

ஏழை மகளிர்க்கு பட்டப்படிப்பு வரை வழங்கப்பட்ட இலவசக் கல்வி, முதுகலைப் பட்டப் படிப்பு வரை நீட்டிப்பு.

தொழிற்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து.

பட்டதாரிகள் இல்லாக் குடும்பங்களிலிருந்து தொழிற் கல்லூரிகளில் சேரும் முதல் மாணவர் அல்லது முதல் மாணவிக்கு கல்விக் கட்டணம் 20 ஆயிரம் ரூபாய் ரத்து.

சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை ஆகிய இடங்களில் 5 புதிய அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகங்கள்; 2006க்குப்பின், ஒரத்தநாடு, பெரம்பலூர், வால்பாறை, சுரண்டை, குளித்தலை, லால்குடி, மேட்டூர், புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், பென்னாகரம், திருப்பத்தூர் (வேலூர்), வேதாரண்யம் ஆகிய 14 இடங்களில் அரசின் புதிய கலை அறிவியல் கல்லூரிகள்;

“மாவட்டத்திற்கொரு மருத்துவக் கல்லூரி” கோட்பாட்டின்படி விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்; அரசு பொறியியல் கல்லூரிகள் இல்லா திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலூர், திருக்குவளை, இராமநாதபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகள்.

பத்தாம் வகுப்புவரை பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயப் பாடமென சட்டம்;

நூறாண்டுக் கனவை நனவாக்கிச் “செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்” சென்னையில் அமைப்பு.

அருந்தமிழ்ச் சான்றோர் 113 பேரின் நூல்கள் நாட்டுடைமை; 7 கோடியே 61 இலட்சம் ரூபாய் பரிவுத் தொகை;

நலிந்த கலைஞர்களுக்கான நிதியுதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட நிதியுதவி மாதம் 500 ரூபாய் என்பது 1.9.2006 முதல் 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. 2006க்குப்பின் புதிதாக 2500 நலிந்த கலைஞர்களுக்குத் தலா ஆயிரம் ரூபாய் வீதம் உதவித் தொகை வழங்க அனுமதிக்கப்பட்டு இதுவரை 9 ஆயிரத்து 563 கலைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்றுள்ளனர். இவர்களில், தற்போது 5 ஆயிரத்து 41 கலைஞர்கள் நிதியுதவி பெறுகின்றனர்.

தமிழறிஞர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 999 தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் 15 ரூபாய் மருத்துவப் படியும், 528 தமிழறிஞர்களின் மரபுரிமையர்களுக்கு மாதம் 1500 ரூபாய் குடும்ப ஓய்வூதியமும் 15 ரூபாய் மருத்துவப் படியும் வழங்கப்படுகிறது.

4724 திருக்கோவில்களில் 523 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன;

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித் திட்டம் உட்பட அனைத்துத் திருமண உதவித் திட்டங்களின் நிதியுதவி 10 ஆயிரம் ரூபாய் என்பது 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு; 4 இலட்சத்து 67 ஆயிரத்து 419 ஏழைப் பெண்களுக்கு 882 கோடியே 6 இலட்சம் ரூபாய் நிதியுதவி;

ஏழைக் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தலா 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி திட்டத்தின்கீழ் 25 இலட்சத்து 76 ஆயிரத்து 612 ஏழை மகளிர்க்கு மொத்தம் 1389 கோடியே 42 இலட்சம் ரூபாய் நிதியுதவி;

50 வயது கடந்து திருமணமாகாமல் வறுமையில் வாடும் 12 ஆயிரத்து 904 ஏழைப் பெண்களுக்கு மாதம் 500 ரூபாய் உதவித் தொகை;

“வருமுன் காப்போம் திட்டம்” மீண்டும் செயல்படுத்தப்பட்டு 18 ஆயிரத்து 742 மருத்துவ முகாம்களில் ஒரு கோடியே 77 இலட்சத்து 5 ஆயிரத்து 85 பேர் ஏழை எளியோர் பயன்;

தமிழகத்தில் உள்ள 1,421 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்; புதிதாக உருவாக்கப்பட்ட 116 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்

தலா மூன்று செவிலியர்களைப் பணியமர்த்தி 24 மணி நேரமும் மருத்துவ சேவை அளிப்பதால், அங்கு 2005-2006இல் நடைபெற்ற மகப்பேறுகளின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 532 என்பது,

2009-2010இல் 2 இலட்சத்து 98 ஆயிரத்து 853 ஆக, மூன்று மடங்கு உயர்ந்து கிராமப்புற மகளிர் மகிழ்ச்சியாக இருக்கிறார்களே, அது ஐந்தாண்டு கால சாதனையாக அம்மையாருக்குத் தெரியவில்லையா?

குழந்தைகள் உயிர் காத்திட மூடிய அறுவை சிகிச்சைக்கு 20 ஆயிரம் ரூபாய்; சாதாரண திறந்த அறுவை சிகிச்சைக்கு 50 ஆயிரம் ரூபாய்; கடினமான திறந்த அறுவை சிகிச்சைக்கு 1 இலட்சம் ரூபாய் என அரசு நிதி உதவி வழங்கப்படுகிறது. 21.11.2007இல் தொடங்கப்பட்ட இளம் சிறார் இருதய அறுவை சிகிச்சைத் திட்டம், 3.6.2008இல் தொடங்கப்பட்ட பள்ளிச் சிறார் இருதய அறுவை சிகிச்சைத் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களின்கீழ் 3264 சிறார்க்கு 17 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் புகழ்வாய்ந்த 28 தனியார் மருத்துவ மனைகளின் மூலம் இருதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, குழந்தைச் செல்வங்களின் அரிய உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

கிராமப்புற ஏழைகளுக்கும் உடனடி மருத்துவ வசதி கிடைக்கச் செய்திட இ.எம்.ஆர்.ஐ. நிறுவனத்துடன் இணைந்து 15.9.2008இல் தொடங்கப்பட்ட 445 ஊர்திகளுடன் கூடிய அதிநவீன “அவசர கால மருத்துவ ஊர்தி 108 சேவைத் திட்டம்” தமிழகம் முழுவதும் நடைமுறை; 8 இலட்சத்து 8 ஆயிரத்து 907 பேர் பயன்;

அரசு ஊழியர்களுக்கு நான்காண்டுகளில் 2 இலட்ச ரூபாய் வரை மருத்துவ உதவி வழங்கும் புதிய “மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்”;

“உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்” 2009 ஜூலை முதல் நடைமுறை; 1 கோடியே 34 இலட்சம் குடும்பங்கள் பதிவு; இதுவரை 2 இலட்சத்து 55 ஆயிரத்து 744 ஏழை மக்களுக்கு 667 கோடி ரூபாய்ச் செலவில் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன;

ஏறத்தாழ 2 இலட்சத்து 35 ஆயிரத்து 464 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 62 ஆயிரத்து 349 கோடி ரூபாய் முதலீட்டிலான 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்; 24 அரசாணைகள் மூலம் 51 புதிய தொழிற்சாலைகள் அமைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளில் இதுவரை 12 தொழிற்சாலைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன.

4 இலட்சத்து ஓராயிரத்து 704 படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 284 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது;

ஏறத்தாழ 5 இலட்சத்து 5 ஆயிரத்து 314 இளைஞர்களுக்கு அரசு அலுவலகங்களில் புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன;

ஆதரவற்ற முதியோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை மாதம் 200 ரூபாய் என்பது 1.9.2006 இல் 400 ரூபாய் எனவும், 24.11.2010 முதல் 500 ரூபாய் என மேலும் உயர்த்தப்பட்டு, மொத்தம் 23 இலட்சத்து 71 ஆயிரத்து 370 பேர் மாதம் 500 ரூபாய் வீதம் உதவித்தொகை பெறுகின்றனர். இந்த உதவித் தொகை மாதம் 750 ரூபாயாக உயர்த்தப்படும் என தற்போது தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்குப் பராமரிப்பு உதவித் தொகை மாதம் 200 ரூபாய் என்பது 500 ரூபாய் என உயர்த்தப்பட்டு, 2006 முதல் ஆண்டுதோறும் 10 ஆயிரம் கடும் மாற்றுத் திறனாளிகள் பயன்;

1989இல் தருமபுரி மாவட்டத்தில் கழக அரசு தொடங்கிய மகளிர் திட்டத்தின்மூலம் இதுவரை உருவாக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கை 5,54,538. இக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கடன் 9 ஆயிரத்து 32 கோடி ரூபாய்.

2006க்குப்பின் 26 இலட்சத்து 94 ஆயிரம் மகளிர் உறுப்பினரைக் கொண்ட 1 இலட்சத்து 75 ஆயிரத்து 493 புதிய மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு; 1068 கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதாரக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

2,81,883 மகளிர் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுழல் நிதி 281 கோடியே 88 இலட்சம் ரூபாய்.

மகளிர் சுய உதவிக் குழுக்களைப் போலவே 2006க்குப்பின் 19 ஆயிரத்து 885 இளைஞர் சுயஉதவிக் குழுக்களும், 30 ஆயிரம் நகர்ப்புற சுயஉதவிக் குழுக்களும், 11 ஆயிரத்து 155 விவசாயிகள் கூட்டுப் பொறுப்புக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டு நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன.

சுய உதவிக் குழு உறுப்பினர்களாகிய 56,748 இளைஞர்களுக்குத் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

2,549 கோடி ரூபாய் செலவில் 12 ஆயிரத்து 618 கிராம ஊராட்சிகளில் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள்;

அதேபோல, அனைத்துப் பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் 280 கோடி ரூபாய்ச் செலவில் 561 பேரூராட்சிகளில் கட்டமைப்புப் பணிகள்;

நிதிநிலையில் நலிந்த 30 நகராட்சிகளிலும் தலா 75 இலட்சம் ரூபாய்ச் செலவில் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன;

மாநகராட்சி, நகராட்சிகளின் நிதிநிலை மேம்பட்டு மக்களுக்கு வசதிகள் செய்திட அவை அரசுக்குச் செலுத்தவேண்டிய 793 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி;

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதிப் பகிர்வு 2006-2007இல் 8 விழுக்காடு; அதாவது 2112 கோடி ரூபாய்; 2007-2008இல் 9 விழுக்காடு; அதாவது 2734 கோடி ரூபாய்; 2008-2009இல் 9 விழுக்காடு; அதாவது 2959 கோடி ரூபாய்; 2009-2010இல் 9.5 விழுக்காடு; அதாவது 3316 கோடி ரூபாய்; 2010-2011இல் 10 விழுக்காடு என மேலும் உயர்த்தி, 4030 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

12 ஆயிரத்து 94 கோடி ரூபாய்ச் செலவில் 57 ஆயிரத்து 787 கிலோ மீட்டர் நீளச் சாலைகளில் மேம்பாட்டுப் பணிகளும் பராமரிப்புப் பணிகளும் நிறைவேற்றப்பட்டன;

4 ஆயிரத்து 730கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் இருவழித் தடங்களாக அகலப்படுத்தப்பட்டுள்ளன;

தமிழகத்தில் உள்ள சாலைகளில் 1046 பாலங்கள் மற்றும் 3800 மிகச் சிறுபாலங்கள் 881 கோடி ரூபாய்ச் செலவில் கட்டப்பட்டுள்ளன;

தமிழகத்தில் உள்ள 4,676 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகளில் 3,226 கி.மீ நீளச் சாலைகள் 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளன;

தலவரி, தலமேல்வரி, தண்ணீர்த் தீர்வை அனைத்தும் ரத்து; நிலவரி, ஏக்கர் ஒன்றுக்குப் புன்செய் நிலங்களுக்கு 15 ரூபாய் என்பது 2 ரூபாய் என்றும், நன்செய் நிலங்களுக்கு 50 ரூபாய் என்பது 5 ரூபாய் என்றும் பெயர் அளவிற்கு மட்டுமே வசூலிக்க அரசு ஆணை;

ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ளன.

அரியலூர், திருப்பூர் புதிய மாவட்டங்கள் உதயம்;

இஸ்லாமியர் சமுதாயம் மேன்மைபெற 3.5 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு;

அருந்ததியர் சமூகத்தின் அவலம் தீர 3 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு;

சமத்துவ சமுதாயம் காணும்நோக்கில் அனைத்துச் சாதியாரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேற்றப்பட்டு பல்வேறு சாதிகளையும் சார்ந்த 216 பேருக்கு அர்ச்சகர் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்க ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள 145 பெரியார் நினைவு சமத்துவபுரங்களுடன் மேலும் 95 சமத்துவபுரங்கள் அமைத்து 240 சமத்துவபுரங்களையும் தந்தை பெரியார் திருவுருவச் சிலைகளுடன் நிர்மாணிக்கும் திட்டம் நடைமுறை; 95 சமத்துவபுரங்களில் இதுவரை 65 சமத்துவபுரங்கள் திறப்பு; 30 சமத்துவபுரங்கள் அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

சென்னை கோட்டூர்புரத்தில் உலகத்தரத்திலான 181 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான “அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்” 15.9.2010இல் திறப்பு;

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற - தலைமைச்செயலக வளாகம் திறந்து சாதனை;

100 கோடி ரூபாய்ச் செலவில் அடையாறு தொல்காப்பியப் பூங்கா திட்டம்;

சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் 8 கோடி ரூபாய்ச் செலவில் உலகத்தரத்திலான “செம்மொழிப் பூங்கா” 24.11.2010இல் திறப்பு;

சென்னை மாநகர் குடிநீர் பற்றாக்குறையை முற்றிலும் தீர்த்திட, வட சென்னை மீஞ்சூரில் “கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்” நிறைவேற்றப்பட்டு, 31.7.2010இல் திறப்பு;

மத்திய அரசு அனுமதித்துள்ள 908 கோடி ரூபாய் நிதியுதவியுடன் தென் சென்னையில் நெம்மேலியில் “கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்;” உருவாகிவருகிறது.

ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதி உதவியுடன் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “மெட்ரோ ரயில் திட்ட” அமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன;

1929 கோடி ரூபாய் மதிப்பீட்டில், “ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்;”

630 கோடி ரூபாய்ச் செலவில், “இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றம்;”

சென்னைத் துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை 1,655 கோடி ரூபாய் மதிப்பீட்டில், “பறக்கும் சாலைத் திட்டம்;” பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டு வேகமாக உருவாகி வருகிறது.

மத சுதந்திரம் பேண - “கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் ரத்து;”

“மூன்றாவது காவல் ஆணையம்” மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பூரணலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்டு, அது வழங்கிய 444 பரிந்துரைகளில் இதுவரை 278 பரிந்துரைகள் நடைமுறை;

2 இலட்சத்து 12 ஆயிரத்து 981 சத்துணவுப் பணியாளர்கள் பயன்பெற கால முறை ஊதியம்; ஓய்வூதியம்;

டெஸ்மா, எஸ்மா சட்டங்களை நீக்கி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பறிக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்கப்பட்டு, 1.1.2006 முதல் தமிழகத்தில் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 155 கோடியே 79 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவில் 6வது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இதன்காரணமாக, 11 ஆயிரத்து 93 கோடி ரூபாய் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகையாக அளிக்கப்பட்டு புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 2 இலட்சம் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் 200 கோடி ரூபாய் கூடுதல் செலவில் ஒரு நபர் குழு பரிந்துரை 1.8.2010 முதல் நடைமுறை;

ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்கி 163 கோடி ரூபாய்ச் செலவில் கூடுதல் சலுகைகள்; 2.73 இலட்சம் ஆசிரியர்கள் பயன்.

அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத அலுவலர்கள், அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஊர்திப்படி 300 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக 1.10.2010 முதல் உயர்த்தி வழங்கிட ஆணை;

21 இலட்சம் குடிசை வீடுகளை 6 ஆண்டுகளில் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் “கலைஞர் வீடு வழங்கும் திட்டம்” என்னும் புரட்சிகரமான திட்டம் இவ்வாண்டில் நடைமுறை. நடப்பாண்டில் ஒரு வீட்டிற்கு 75 ஆயிரம் ரூபாய் மானியம் வீதம் 2,250 கோடி ரூபாய்ச் செலவில் 3 இலட்சம் வீடுகளைக் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டு, 15.8.2010 முதல் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்குரிய பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

இத்திட்டத்தின்கீழ் முதல் வீடு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராமத்தில் 9.10.2010 அன்று பயனாளிக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இதுவரை 75 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

31.3.2011க்குள் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் கான்கிரீட் வீடுகளும், 15.4.2011க்குள் 2 இலட்சம் கான்கிரீட் வீடுகளும் கட்டி முடிக்கப்படும். இதுவரை இத்திட்டத்திற்கு 1082 கோடி ரூபாய் அரசு செலவிட்டுள்ளது. மேலும் 12 இலட்சம் பயனாளிகளுக்கு தகுதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக மேலும் 3 இலட்சம் குடிசைகள் இத்திட்டத்தின்கீழ் கான்கிரீட் வீடுகளாகக் கட்டப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டு 2011 பிப்ரவரியில் பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கான அரசு மானியம் 75 ஆயிரம் ரூபாய் என்பது ஒரு இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

உடன்பிறப்பே, இன்னும் துறைவாரியாக கழக அரசின் ஐந்தாண்டு காலச் சாதனைகளையும் பட்டியலிடுவதென்றால் இடம் போதாது என்பதால் அந்தப் பட்டியலை நிறுத்தி விட்டேன். தற்போது கடந்த ஐந்தாண்டுகளில் எந்தச் சாதனையும் செய்யப்படவில்லை என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசப்படுவதால் ஒட்டுமொத்த சாதனைகள் சிலவற்றை அவர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் ஞாபகப்படுத்துவதற்காக இதனைத் தொகுத்து வெளியிட்டுள்ளேன். செய்த சாதனைகளைச் சொல்லியிருக்கிறேன். இந்தச் சாதனைகளை அன்றாடம் அனுபவித்து வரும் தமிழ்நாட்டு மக்கள் காட்டப்போகும் நன்றியினை எதிர்பார்த்து நிற்கின்றேன்.

அன்புள்ள, மு.க. 28-03-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 129–141. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 45-இல் மேலும் கடிதங்கள்