அடக்கம்

முரசொலி · தொகுதி 45 · கடிதம் 3552

முரசொலி கடிதங்கள் · 3552

யாரா உஷார்! பதுங்கி வருகிறது பணநாயகம்!

நாள் 30.3.2011சுமார் 2 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3552. யாரா உஷார்! பதுங்கி வருகிறது பணநாயகம்!

உடன்பிறப்பே,

உஷார்! உஷார்!!

தோல்வி பயமும் - வெற்றி கை கூடாதோ என்ற சந்தேகமும் ஜெயலலிதா கும்பலுக்கு ஏற்பட்டு;

எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று பணத்தை மூட்டைக் கட்டிக் கொண்டு -

காரிலும் - வண்டிகளிலும் - வேன்களிலும் ஆட்கள் மூலமாகவும் - அனுப்பப்படுவதாக நம்பகமான செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

எப்படியும் இந்தத் தேர்தலில் என்னையும், பேராசிரியரையும், ஸ்டாலினையும் மற்றும் சில கழகத்தின் முக்கிய தளபதிகளையும் தோற்கடித்தே தீர வேண்டுமென்று ஜெயலலிதா கங்கணம் கட்டிக்கொண்டு - சேகரித்த பணத்தையெல்லாம் செலவிடத் துணிந்து விட்டாராம்!

நாட்டில் அரசியல் அமைப்பிலும் மற்ற சகல அமைப்புகளிலும் பறிபோய்விட்ட பதவி அதிகாரத்தை மீண்டும் பற்றிக்கொள்ள வேண்டுமென்பதற்காக - ஒரு தொகுதிக்கு இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் பத்து கோடி ரூபாய் வரையில் செலவு செய்யத் தயார் என்று அம்மையார் சவால்விட்டு பணம் ஊர்வலம் நடத்தத் தயாராகி விட்டார்.

உடன்பிறப்பே, பதுங்கிப் பதுங்கியோ பலத்த காவலுடனோ தேர்தல்களத்தில் குதித்து ஜனநாயகத்தை விலை பேசிக் கொண்டே பண நாயகத்திற்குப் பகைவர்போல் பாசாங்கு செய்யும் அம்மையார் கும்பல் ஆட்களை அடையாளம் காணத்

தவறாதீர்கள்! அவ்வாறு கார்களிலும், வேன்களிலும் பணத்தைக் குவித்து வைத்துக் கொண்டு வாக்குகளை விலை பேசுவோரைக் கையும் களவுமாக காவலர்களிடம் பிடித்துக் கொடுக்க வேண்டிய கடமை உணர்வும் நமக்குள்ளது.

வண்டி வாகனங்களில் வருவார்கள் - ஒண்டிக் கட்டை போல் திரிவார்கள் - ஏழைகளை விலைக்கு வாங்கி ஜனநாயகத்தை ஏலம் போடத் துணிவார்கள் - உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் - ஒருக்கணமும் உறங்காமல் காவல் காத்திட வேண்டும் - இல்லாவிட்டால் எதிரிகள் ஏமாற்றி விடுவார்கள். மாதக் கணக்கில் விவசாயி உழைத்து, வியர்வையைச் சிந்தி வளர்த்த பயிரின் மொத்த விளைச்சலை இரவோடு இரவாக களவாடிச் சென்றிட எத்தர்கள் முயலுவார்கள். ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டோர் புலி வேடம் போடுகிறார், அவர்களின் பொய் வேடத்தைக் கலைத்திட முயலுவதுதான் உன் பணியாக இருக்க வேண்டும். திருவிழா கூட்டத்தில் பணத்தைத் திருடிக்கொண்டு செல்பவன் துரத்திச் செல்பவர்களோடு தானும் சேர்ந்து ஓடிக் கொண்டே “திருடன், திருடன்” என்று குரல் கொடுப்பதைப் போல - நல்லவர்கள் போல மக்களிடம் மீண்டும் நடிக்கப் புறப்பட்டு விட்டார்கள். மக்களின் ஞாபக மறதியை மூலதனமாக வைத்துக் கொண்டு - யாரோ எழுதிக் கொடுத்ததை பக்கம் பக்கமாக படித்து விட்டு, பதவியேற்பு எப்போது என்று துடியாய்த் துடிக்கிறார்கள். அவர்களை நம்பிக் கெட்டோர் நாட்டிலே கண்ணெதிரே இருக்கும்போதே, உண்மை சொரூபத்தைப் புரியாமல் இன்னும் சிலர் உடன் சென்று கொண்டுதான் இருக்கிறார்கள்.

உடன்பிறப்பே, ஐந்தாண்டு காலமாக நாம் சாதனைகளைச் செய்து விட்டுத்தான் தற்போது மக்கள் முன்னால் நிற்கிறோம். ஆனால் அவர்கள் ஆண்ட ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் எந்தத் தரப்பினரையாவது நிம்மதியாக வாழ விட்டார்களா? அரசு ஊழியர்கள் பட்ட பாடு எத்தனை? எஸ்மா, டெஸ்மா சட்டங்களின் மூலமாக அரசு அலுவலர்கள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட கொடுமைகளையெல்லாம் மக்கள் மறந்து விட்டார்களா? சாட்டையால் அடித்து அரசு அதிகாரிகளிடம் வேலை வாங்குகிறேன் என்று சட்டமன்றத்திலே அம்மையார் முழங்கியதுதான் மறக்கக் கூடிய வார்த்தைகளா? ஒன்றிரண்டு பேர் மறந்துவிட்டோ, மீண்டும் தப்பித் தவறி அவர்கள் வந்துவிட்டால்

நாம் முந்திக் கொள்ளலாம் என்ற நினைவோடோ பாதை தவறி நடக்க முயற்சிக்கலாம்.

அவர்கள் வழியில் அவர்கள் செல்லட்டும். நாம் நம் வழியிலே செல்வோம். நாளையதினம் (30-3-2011) என்னுடைய இரண்டாவது கட்டச் சுற்றுப் பயணத்தை கோவையில் தொடங்குகிறேன். என்னுடைய சுற்றுப் பயணத்தையும், எதிர்க்கட்சித் தலைவரின் சுற்றுப் பயணத்தையும் ஒப்பிட்டு எழுதிய ஒரு ஆங்கில நாளிதழ் நான் சாதனைகளைச் சொல்லி வாக்குகளைக் கேட்பதாகவும், ஆனால் அம்மையார் என்னையும், என் குடும்பத்தினரையும் வேகமாகத் தாக்கிப் பேசுவதாகவும் எழுதியுள்ளது. அவர்களுக்கு நம்மைத் தாக்கிப் பேசுவதைவிட வேறு செய்திகள் பேசுவதற்கு இல்லை என்கிறபோது என்ன செய்வார்கள்? அவர்கள் தாக்கிப் பேசிட, பேசிட அவர்களைப் பற்றி மக்களே நன்கு உணர்ந்து கொள்வார்கள். அவர்கள் எப்படியும் வெற்றி பெறமுடியாத நிலையில்தானே குவித்து வைத்துள்ள நிதியைக் கொண்டு பணத்தை அடித்து வெற்றி பெற நினைக்கிறார்கள். அந்த நினைப்புக்கு இடம் கொடுக்காமல் ஜாக்கிரதையாக நீ பணியாற்ற வேண்டியது முக்கியம். நாம் நம் வழி ஜனநாயக வழியில் நடப்போம் - அவர்கள், அவர்களுக்கு மட்டுமே தெரிந்த பணநாயக வழியில் நடக்கட்டும்.

அன்புள்ள, மு.க. 30-3-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 142–144. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 45-இல் மேலும் கடிதங்கள்