அடக்கம்

முரசொலி · தொகுதி 45 · கடிதம் 3555

முரசொலி கடிதங்கள் · 3555

அன்றைக்கே எழுதியது; இன்றைக்கும் பொருந்துகிறதே!

நாள் 17.4.2011சுமார் 4 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3555. அன்றைக்கே எழுதியது; இன்றைக்கும் பொருந்துகிறதே!

உடன்பிறப்பே,

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் 3-3-2011 அன்று “ஆணையத்தின் ஆணை பிறந்து விட்டது!” - எனும் தலைப்பிலே ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில் -

“இன்னும் இரண்டு மாதங்களுக்கு நாம் ஒவ்வொருவரும் இடைவிடாமல் பணியாற்ற வேண்டிய காலம்! ஓய்வு கொள்ளாமல் உழைக்க வேண்டிய நேரம்! கடந்த ஐந்தாண்டு காலமாக கழக அரசு தமிழக மக்களுக்காக ஆற்றிய அளவற்ற அரும் பணிகள் - தமிழ்நாட்டு மக்களால் எந்த அளவுக்கு கருதப்படுகிறது, போற்றப்படுகிறது என்பதற்கான முடிவினைத் தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. இன்னும் இடையிலே 42 நாட்கள்தான் உள்ளன, தமிழ் நாட்டு மக்கள் வாக்களிக்கப் போவதற்கு! வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்னும் 17 நாட்கள்தான்! அதற்குள் தோழமைக் கட்சிகளுக்குள் தொகுதிகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட வேண்டும். பின்னர் ஒவ்வொரு கட்சிக்கும் எந்தெந்த தொகுதிகள் என்று பேசி முடிவெடுக்கப்பட வேண்டும். அதன் பின்னர் ஒவ்வொரு கட்சிகளின் சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதை - வேட்பு மனு தாக்கல் செய்தவர்களையெல்லாம் ஒவ்வொரு கட்சியும் அழைத்துப் பேசி - முடிவு செய்து அறிவிக்க வேண்டும். தேர்தல் அறிக்கை எழுதப்பட வேண்டும். வேட்பாளர்களாக கட்சிகளின் சார்பில் அறிவிக்கப்படுவோர், தங்களது வேட்பு மனுவினைத் தாக்கல் செய்திட வேண்டும். அதன் பின்னர் வாக்காளப் பெருமக்களைச் சந்தித்து வாக்களிக்க வேண்டுமென்று

தங்கள் தங்கள் தொகுதிகளில் கேட்டுக் கொள்ள வேண்டும். கட்சிகளின் தலைவர்களும், முக்கியப் பிரச்சாரகர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். இதற்கெல்லாம் 17 நாட்கள்தான் உள்ளன”

- என்று எழுதியிருந்தேன். நான் எழுதியவாறே கட்சிகள் எல்லாம் அல்லும் பகலும் உழைத்து தேர்தல் வாக்குப் பதிவும் நடைபெற்று முடிந்து விட்டது. ஆனால் வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் ஒரு மாத காலம் இடைவெளியினை தேர்தல் ஆணையம் நமக்கெல்லாம் அளித்துள்ளது. அதைப்பற்றிக்கூட நான் முதலில் எழுதிய கடிதத்திலே குறிப்பிட்டிருந்தேன். அது வருமாறு :-

“வாக்குகளை அளித்த பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெற ஒரு மாத காலம் காத்திருக்க வேண்டும். ஏன் இப்படிப்பட்ட இடைவெளி! தேர்தல் ஆணையத்தின் முடிவு அப்படி! வாக்குகளை அளிக்க வேண்டிய நாள் ஏப்ரல் 13! அந்த வாக்குகளை எண்ணப் போகின்ற நாள் மே 13! ஒரு மாத கால இடைவெளி ஏன்? மேற்கு வங்கத்தில் ஆறு கட்டமாகத் தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகுதான் அந்த மாநிலத்திலே வாக்குகளை எண்ணும் போது இங்கேயும் எண்ணப்பட வேண்டுமாம்; அது தேர்தல் விதிமுறை. ஆனால் எதற்காக ஒரு மாத காலம் இடைவெளி விட்டு, அவசர அவசரமாக ஏப்ரல் 13ந்தேதியே அனைவரையும் சிரமத்திற்கு ஆளாக்கி தேர்தல் வாக்கெடுப்பை நடத்துகிறார்கள். என்ன காரணமோ தெரியாது! தேர்தல் ஆணையம் மாநில அரசுகளை கலந்து கொண்டுதானே தேர்தல் தேதியை அறிவித்திருக்கும் என்ற சந்தேகம் ஏற்படலாம். அப்படி அல்ல! ஏனென்றால் தேர்தல் ஆணையம் யாருடைய கட்டுப்பாட்டிற்கும் உரியதல்ல! சுதந்திரமான அமைப்பு. யாரையும் கேட்க வேண்டிய அவசியமில்லை.

தற்போது அறிவித்துள்ள முடிவின்படி தேர்தல் நடைபெறப் போகின்ற நாள்

ஏப்ரல் 13. அதற்குப் பின்னர் வாக்குகளை எண்ணப் போகின்ற நாள் மே 13. மே 13ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டால், வாக்கு எண்ணிக்கை முடிய ஒரு நாள் ஆகும். முடிவுகள் மே 14ந் தேதிதான் தெரியும். ஆனால் தற்போதுள்ள சட்டமன்றம் முடிவுற்று, அடுத்த சட்டமன்றம் மே 17ந் தேதியே தொடங்கப்பட வேண்டும். ஏனென்றால் தற்போதுள்ள சட்டமன்றத்தின் காலம் மே 16ந் தேதியோடு முடிவடைகிறது. எனவே மே 17ந் தேதிக்குள் தமிழகத்திலே ஒரு புதிய அமைச்சரவை உருவாகியாக வேண்டும். மே 14ஆம் தேதியன்று யார் யார் சட்டப்பேரவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது அறிவிக்கப்பட்டு - அதிலே எந்தக் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது என்பது முடிவாகி, அந்தக் கட்சியின் சார்பிலே தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி, தங்கள் சட்டமன்றக் கட்சித் தலைவராக, அதாவது முதல் அமைச்சராக ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவர் ஆளுநரைச் சந்தித்து, ஆளுநர் அவர்களை அமைச்சரவை அமைக்கச் சொல்லிக் கேட்டு - அதன் பின்னர் அமைச்சர்கள் அறிவிக்கப்பட்டு - அந்த அமைச்சர்கள் ஆளுநர் முன்னிலையிலே பதவிப் பிரமாணம் செய்து கொண்டு - புதிய சட்டப் பேரவையை மே 17ந் தேதிக்குள் கூட்டியாக வேண்டும். இதற் கெல்லாம் இருக்கின்ற நாட்கள் மே 15, மே 16 ஆகிய இரண்டு நாட்கள்தான். அதற்குள் இத்தனை பணிகளையும் முடிக்க முடியுமா? ஆனால் முடித்தாக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது! தேர்தல் ஆணையம் இதனையெல்லாம் எண்ணிப் பார்க்காமல் இருந்திருக்குமா என்றால் நிச்சயம் எண்ணிப் பார்த்திருக்கும். எண்ணிப் பார்த்து விட்டுத்தான் இந்தத் தேர்தல் தேதிகளை அறிவித்திருக்கின்றது.

மே திங்கள் 17ந்தேதியன்றுதான் புதிய சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும் என்றால், எதற்காக அவசர அவசரமாக ஏப்ரல் 13ந்தேதியே தேர்தலை நடத்த வேண்டும். மேலும் சில நாட்கள் தேர்தலில்

போட்டியிடுபவர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் கால அவகாசம் கொடுத்து ஏப்ரல் மாதக் கடைசியிலோ அல்லது மே மாதத்தில் முதல் வாரத்திலோ - அனைவரும் எதிர்பார்த்ததைப் போல தேர்தல் தேதியை அறிவித்திருக்கலாம் அல்லவா? ஏப்ரல் மாதம் 13ஆம் தேதியே அவசர அவசரமாக தேர்தல் தேதியை நிர்ணயம் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன? தேர்தல் ஆணையம் யாராலும் கேள்வி கேட்க முடியாத அமைப்பு என்றாலும் - சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் அல்லவா?”

உடன்பிறப்பே,

நான் இவ்வாறு எழுதியவாறே, தமிழ்நாட்டு மக்கள் அளித்த தீர்ப்புகள் - மே திங்கள் 13ஆம் தேதி வரை அறைகளிலே பத்திரமாகப் பூட்டி வைக்கப்பட்டு மூன்றடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுவரை அரசின் சார்பில் எந்தவிதமான முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட மாட்டாது. அல்ல, அல்ல, எடுக்கப்படக்கூடாது. திடீரென ஏதாவது ஒரு முக்கிய முடிவு, கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு விட்டால் அப்போது என்ன செய்வது? தேர்தல் ஆணையத்திற்கே வெளிச்சம்! அதிகாரிகளின் நிலை என்ன? திரிசங்கு சொர்க்கம் என்பார்களே, அந்த நிலைதான்! இப்போதே பத்திரிகைகள் எல்லாம் தலைமைச் செயலகம் வெறிச்சோடிக் கிடப்பதாகவும் - அதிகாரிகள் எல்லாம் குடும்பத்துடன் விடுமுறையில் செல்லவிருப்பதாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளன.

அது மாத்திரமல்ல, அரசின் சார்பில் நாட்டில் நடைபெற்றாக வேண்டிய முக்கியமான பணிகள் எல்லாம் நிறைவேற்றப்பட வேண்டிய நேரம் இது. அந்தப் பணிகள் எல்லாம் முறையாக நடைபெற்றால்தான் ஜூன் மாதத்தில் தொடங்க விருக்கும் தென்மேற்குப் பருவக் காற்று காலத்தின் போது வேளாண்மைப் பணிகளை ஒழுங்காகச் செய்திட முடியும். அதிகாரிகள் பராமரிப்புப் பணிகளை ஆய்வுகூட செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுரை கூறியுள்ளதாம்! அதனால் அடிப்படைப் பணிகளைக்கூட நிறைவேற்ற முடியாத நிலைமை உள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசும் அதன் அமைச்சர்களும் ஐந்தாண்டு காலத்திற்கு, அதாவது மீண்டும் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் வரை அவர்களது பொறுப்புகளை நிறைவேற்ற தகுதி படைத்தவர்கள். ஆனால் அவர்களின் பணிகளை நிறைவேற்ற முடியாமல் தடுப்பது எந்தவகையில் நியாயமோ? சட்டம் படித்தவர்களும், தேர்தல் ஆணையமும்தான் இதற்கெல்லாம் ஒரு முறையான தீர்வினைக் காண வேண்டும்!

அன்புள்ள, மு.க. 17-4-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 155–159. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 45-இல் மேலும் கடிதங்கள்