அடக்கம்

முரசொலி · தொகுதி 45 · கடிதம் 3557

முரசொலி கடிதங்கள் · 3557

பொது மன்னிப்பு கேட்க வேண்டியவர் யார்?

நாள் 24.4.2011சுமார் 5 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3557. பொது மன்னிப்பு கேட்க வேண்டியவர் யார்?

உடன்பிறப்பே,

“இலங்கையில் நடந்த இனப் படுகொலையை வேடிக்கை பார்த்ததற்காக, கருணாநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” - ஆணை பிறப்பித்திருப்பவர் யார் தெரியுமா? “சாட்சாத்” ஜெயலலிதாதான்! எங்கிருந்து இந்த வார்த்தை முத்துக்களை அவர் சிந்தியிருக்கிறார் ... தெரியுமா? கோடைவாசஸ்தலமான கொடை நாடு எஸ்டேட்டில் தங்கியிருந்து கொண்டு, பாவம் அங்கும் என் மீது வசைமாரி பொழிய ஏதாவது கிடைக்காதா என்ற நினைவோடு, ஓய்வெடுக்க முடியாமல் இலங்கைத் தமிழர்களுக்காக மனம் வருந்தி, என்னை பொது மன்னிப்பு கேட்கச் சொல்லுகிறார்!

யாரை மன்னிப்பு கேட்கச் சொல்லுகிறார் ஜெயலலிதா?

1956ஆம் ஆண்டிலே சிதம்பரம் தி.மு.கழகப் பொதுக் குழுவிலே அறிஞர் அண்ணா அவர்களின் முன்னிலையில் இலங்கைத் தமிழர்களுக்கான தீர்மானத்தை முன்மொழிந்த என்னைத்தான் ஜெயலலிதா பொது மன்னிப்பு கேட்கச் சொல்லுகிறார்.

24-8-1977 அன்று சென்னையிலே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக ஐந்து இலட்சம் பேர் கலந்துகொண்ட பேரணியை நடத்தியவன் நான். 1981ஆம் ஆண்டு இலங்கையிலே தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி கிடைத்த அன்றைய தினமே, ஆம் ஆகஸ்ட் 13ஆம் தேதியன்றே - “கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் இலங்கையின் கிழக்கிலும் தெற்கிலும் கலவரங்கள் பரவி வருகின்றன என்று தெரிவிக்கின்றன. அங்குள்ள அரசே கலவரத்தை ஊக்குவிப்பதாகத் தோன்றுகிறது. வட கொழும்பில் தமிழர்களின் இல்லங்கள் தாக்கப்படுகின்றன, யாழ்ப்பாணம் ரயில்கள் தாக்கப்படுகின்றன, அதில் இருந்த தமிழ்ப் பயணிகள் கொள்ளையடிக்கப்பட்டு வண்டியை விட்டு வழியில்

தூக்கியெறியப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மனிதாபிமான அடிப்படையில் உதவிட வேண்டுகிறேன்” என்று பிரதமருக்கு தந்தி கொடுத்த கருணாநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம்!

அதே 1981ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள் இலங்கைத் தமிழர்களுக்கான பிரச்சினையில் அன்றிருந்த அ.தி.மு.க. அரசினால் கைது செய்யப்பட்ட கருணாநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம்!

25-7-1983 அன்று வெலிக்கடை சிறைச் சாலைக்குள் சிங்களவர் நுழைந்து தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் போன்ற 35 தமிழர்களை படுகொலை செய்தபோது தமிழகத் தலைநகரிலே 7 மணி நேர அவகாசத்தில் 8 இலட்சம் பேரைத் திரட்டி பேரணி நடத்திய நான் பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம்!

மத்திய, மாநில அரசுகள் ஈழத் தமிழர் பிரச்சினையில் போதிய கவனம் செலுத்திட வலியுறுத்தி 10-8-1983 அன்று நானும், கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும் எங்கள் சட்ட மன்ற உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்தோம்.

16-5-1985 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நானும் கலந்து கொண்டு கைதானேன்.

23-8-1985 அன்று சந்திரஹாசன், பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த உத்தரவிட்டதைத் தொடர்ந்து சென்னையில் பேரணி நடத்தி, நாடு கடத்தும் காரியம் நிறுத்தப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என்று நான் அறிவித்து, அதனையொட்டி நாடு கடத்தல் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், அவர்களிடையே சகோதர யுத்தம் கூடாதென்பதற்காகவும், 1986ஆம் ஆண்டு மே திங்களில் மதுரையில் பொதுச் செயலாளர் பேராசிரியர், தமிழர் தலைவர் கி. வீரமணி, தம்பி முரசொலி மாறன், தம்பி வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட “டெசோ” அமைப்பின் சார்பில் அனைத்திந்தியாவில் உள்ள பல்வேறு கட்சி களின் தலைவர்களையெல்லாம் அழைத்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டினை நடத்திய கருணாநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம்!

3-6-1986 அன்று என்னுடைய பிறந்த நாள் விழா ரத்து செய்யப்பட்டது, அன்று உண்டியல் மூலம் வசூலான நிதியினை போராளி இயக்கங்களுக்காகப் பகிர்ந்து கொடுத்தவன் நான்.

1987ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி தி.மு.க. சார்பில் பேரணி நடத்தினோம்.

16-10-1987 அன்று தளபதி கிட்டுவைக் காணச் சென்ற வைகோ கைது செய்யப்பட்டதற்காக கண்டன அறிக்கை விடுத்தவன் நான்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக எட்டு மாநில முதல் அமைச்சர்களுக்கும் இந்தியாவில் உள்ள எதிர்க் கட்சித் தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தவனும் நான்தான்.

6-11-1987 அன்று சென்னையில் ஈழத் தமிழர் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பாக பல்வேறு கட்சியினர், தமிழ்ப் புலவர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், மகளிர் கலந்து கொண்ட மனிதச் சங்கிலியை நடத்தியவனும் நான்தான்.

15-3-1989 அன்று டெல்லியில் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி அவர்களை இரண்டு முறை சந்தித்து ஈழத் தமிழர் பிரச்சினைக்காக விவாதித்தவனும் நான்தான்.

15-6-1989 அன்று சென்னை விமான நிலையத்தில் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களைச் சந்தித்து இலங்கைப் பிரச்சினை குறித்து பேசியவனும் நான்தான்.

1991ஆம் ஆண்டு ஜனவரியில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தி.மு. கழக ஆட்சியே கலைக்கப்பட்டபோது, முதலமைச்சராக இருந்ததே நான்தான்! 1997ஆம் ஆண்டு தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போது, இலங்கைத் தமிழர் பிரச்சினை எழுந்த நேரத்தில் தற்போது என்னை பொது மன்னிப்பு கேட்கச் சொல்லுகிற ஜெயலலிதா என்ன சொன்னார் தெரியுமா?

“சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க கருணாநிதி முயல்கிறார் - விடுதலைப் புலிகள் தமிழகத்தில்

மீண்டும் தலை தூக்கி விட்டார்கள்” என்று அறிக்கை அல்லவோ ஜெயலலிதா விடுத்தார்.

5-11-1989 அன்றும் 6-11-1989 அன்றும் தமிழ்நாட்டில் பேசிய ராஜீவ் காந்தி

“இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் கடந்த பல மாதங்களாக ஒத்துழைப்பு வழங்கி வரும் திமுக அரசுக்கும் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கும் நன்றி” என்று கூறினார். இவ்வாறு இளந்தலைவர் ராஜீவ் காந்தி அவர்களால் பாராட்டப்பட்ட நான் பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம்!

23-4-2008 அன்று தமிழக சட்டப் பேரவையில் - இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, அங்கே மோதலில் ஈடுபட்டு வரும் இரு பிரிவுகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகளுக்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கையில் அமைதியை ஏற்படுத்த முறையானதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்காக பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன் வரவேண்டுமென இப்பேரவை வலியுறுத்துகிறது” என்ற தீர்மானத்தை முன்மொழிந்த நான் பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.

6-10-2008 அன்று காலையில் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு - புது டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை மத்திய அரசு உடனடியாக அழைத்து, நிராயுதபாணியாக உள்ள இலங்கைத் தமிழர்களை கொல்வது குறித்து இந்தியாவின் மன வருத்தத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும், இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கையும் இனப் படுகொலையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட நான் பொது மன்னிப்பு கேட்க வேண்டுமாம்! சொல்பவர் எப்படிப்பட்டவர் தெரியுமா?

“இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப் பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும்

இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது” என்று தமிழகச் சட்டப் பேரவையில் 16-4-2002 அன்று தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய ஜெயலலிதாதான் என்னைப் பொது மன்னிப்பு கேட்கச் சொல்லுகிறார்.

இலங்கையில் ராஜ பக்ஷேயின் சிங்களப் படையினர் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்தபோது, அதனைக் கண்டித்து தமிழகத்தில் ஊர்வலங்களும், பொதுக்கூட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்ற போது, “இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம் - போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால் இன்று இலங்கையில் என்ன நடக்கிறதென்றால், இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவிடாமல் விடுதலைப் புலிகள் அவர்களை பிடித்து வைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று 17-1-2009 அன்று அறிக்கை விடுத்த ஜெயலலிதா என்னை பொது மன்னிப்பு கேட்கச் சொல்கிறார் என்றால் இதைவிட வெட்கக்கேடு வேறு ஏதாவது இருக்க முடியுமா?

அது மட்டுமா? இலங்கையில் தமிழ் இனப் படுகொலையைக் கண்டித்து போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டுமென்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய போது - இதே ஜெயலலிதாதான் “விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில், தற்போது நடக்கும் உள் நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை” என்று கூறியதோடு இலங்கையில் நடக்கும் யுத்தம் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் என்னும் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம் என்றும் - அதனால்தான் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் இறந்ததற்கு கருணாநிதி இரங்கற்பா எழுதுகிறார் என்றும் அறிக்கை விடுத்து -

அந்த அறிக்கையை இன்றைக்கு ஜெயலலிதாவின் அறிக்கையை வெளியிடுகின்ற சில ஏடுகளே வெளியிட்டனவே!

இலங்கையில் வாழுகின்ற ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் - இரண்டாம் நிலை குடிமக்கள் என்று ஒதுக்கப்படுவதிலிருந்து அந்த மக்கள் இலங்கையில் - எல்லா உரிமைகளையும் பெற்று சமத்துவமாகவும், சாந்தியும் பெற்று வாழும் வகை வகுத்தப்பட வேண்டும் என்றும், அதற்காக 1956 முதல் குரல் கொடுத்து வரும் தி.மு.கழகத்தையும் - அந்தக் கழகத்தின் தலைவனாக இருக்கின்ற என்னையும் இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே குறை கூறுவதற்கு ஜெயலலிதா தகுதி படைத்தவர்தானா?

தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து அரசின் சார்பில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக கலந்தாலோசனை நடத்திய நேரத்தில், ஜெயலலிதா அதனையும் “கபட நாடகம்” என்றுதான் வர்ணித்தார். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதும் - நம்பி வந்தவர்களை நட்டாற்றில் கை நழுவ விடுவதும் - பதவியிலே இருக்கும் போது மிரட்டுவதும், பதவி கோரும்போது கெஞ்சுவதும் - யாரையும், எவரையும் மதிக்காமல் தன்னை மீறி எதுவுமில்லை என்ற ஆணவப் போக்கோடு நடப்பதும் ஜெயலலிதா போன்ற “கபட வேடதாரி”களுக்குத்தான் கை வந்த கலையே தவிர - உழைப்பு; அறப்போராட்டம், தியாகம், அரவணைப்பு, நாகரிகம், பண்பாடு, சுயமரியாதை என்பனவற்றை மதித்து நடக்கும் நான் பொது மன்னிப்பு கேட்கின்ற நிலை என்றைக்கும் வராது! உண்மையில் இலங்கைத் தமிழர்களுக்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டியவர் ஜெயலலிதாதான்.

அன்புள்ள, மு.க. 24-04-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 164–169. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 45-இல் மேலும் கடிதங்கள்