அடக்கம்

முரசொலி · தொகுதி 45 · கடிதம் 3560

முரசொலி கடிதங்கள் · 3560

மேலோர் பாராட்டு; கீழோர் பழிக்கின்றாரே!

நாள் 5.5.2011சுமார் 7 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3560. மேலோர் பாராட்டு; கீழோர் பழிக்கின்றாரே! உடன்பிறப்பே,

13.5.2006 அன்று ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல், கடந்த ஐந்தாண்டுக் காலம் முழுதும், “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்பதையே மூச்சாகக் கொண்டு, ஒவ்வொரு நொடியும் தமிழக மக்களின் நல்வாழ்வுக்கும், தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்கும் என்னென்ன பணிகள் ஆற்ற வேண்டுமென்று எண்ணி எண்ணிப் பார்த்து, மெய்வருத்தம் பாராது, பசி நோக்காது, கண் துஞ்சாது பாடுபட்டிருக்கிறோம். 2006 பொதுத் தேர்தலின்போது, கழகத்தின் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம். தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகள் மட்டுமல்லாமல், சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றி இருக்கிறோம். விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் 7 ஆயிரம் கோடி ரூபாயை ரத்து செய்தது முதல், கலைஞர் வீடுவழங்கும் திட்டம் வரை எண்ணிலடங்காத் திட்டங்களை நிறைவேற்றி வைத்திருக்கிறோம்.

மக்களுக்கான மகத்தான பணிகளில் நாம் கண்ணும் கருத்துமாக ஈடுபட்டிருக்கும்போது; நமது மனதைச் சோர்வடையச் செய்து, கவனத்தை திசை திருப்பிடும் தீயநோக்கத்தோடு; ஆதிக்க சக்திகள் சில, நமது பணிகளின் சிறப்பையும், சாதனைகளின் தரத்தையும் வேண்டுமென்றே குறைத்தும், திரித்தும் மதிப்பிட்டு விமர்சனம் என்ற பெயரில், ஏடுகளிலும், ஊடகங்களிலும் வெளியிட்டு வருகிறார்கள். அவற்றில் ஒன்றுதான், இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ் நாளேடு ஒன்றில் (தினமலர்-1.5.2011) ‘ரிவர்ஸ் கியரில் போகிறது தமிழ்நாடு’ என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையாகும். இந்தக் கட்டுரையை எழுதியவர் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், ஒரு பத்திரிகை ஆசிரியருக்கு அடிப்படையாக இருந்திட வேண்டிய நடுநிலைப் போக்கு, சமுதாய நோக்கு, “நல்லது செய்தல் ஆற்றீராயினும்; அல்லது செய்தல் ஓம்புமின்” என்ற பண்பு, ஆகியவற்றில் மூன்றில் இரு பங்கு அல்லது மூன்றில் ஒரு பங்குகூட; கட்டுரை எழுதியவரின் கருத்தில் இல்லை என்பதுதான் வருத்தமளிப்பதாகும். விமர்சனம் என்ற பெயரில், நடுநிலை நாளேடு என்ற “பேனரில்”, எதையாவது எழுதி, பொதுமக்களின் எண்ணத்தைக் குழப்பி, கழக ஆட்சியின் பெருமையையும், புகழையும் சிதைத்துக் காட்ட வேண்டுமென்பதுதான் அவர்களது நோக்கமாகும்.

அந்தக் கட்டுரையில், கழக அரசின் ஏழை எளியோருக்கான இலவசத் திட்டங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. அத்துடன், தமிழகத்தை ஒரு பின்தங்கிய மாநிலமாக சித்திரித்துக் காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படுவது கழக ஆட்சியில்தான் - தமிழகத்திலே மட்டும்தான். கழக ஆட்சியில் நடுத்தர வர்க்கத்தினர், ஏழை எளியோர், நலிந்த பிரிவினர் ஆகியோருக்குத் தேவையான பாதுகாப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. உணவுப் பாதுகாப்புக்கு - ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி; மானிய விலையில் மளிகைப் பொருள்கள், 50 ரூபாய்க்கு 10 சமையல் பொருள்கள்; மாதந்தோறும் குறைந்த விலையில் “பாமாயில்” எண்ணெய், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா, கோதுமை மாவு வழங்கப்பட்டு வருகின்றன. மருத்துவப் பாதுகாப்புக்கு - உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்; அழைத்ததும் வந்து அவசர சிகிச்சைக்கு ஆவன செய்திடும் 108 ஆம்புலன்ஸ் திட்டம்; வருமுன் காப்போம் திட்டம்; இருதய அறுவை சிகிச்சைத் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உறையுள் பாதுகாப்புக்கு - மத்திய அரசின் இந்திராகாந்தி நினைவு குடியிருப்புத் திட்டம்; குடிசைகளே இல்லாத கிராமங்களை உருவாக்கிடும் நோக்கில் கலைஞர் வீடுவழங்கும் திட்டத்தின் கீழ், 6 ஆண்டுகளில் அனைத்துக் கிராமங்களிலும் 21 இலட்சம் கான்கிரீட் வீடுகள்; ஐந்தாண்டுகளில் பேரூராட்சிப் பகுதிகளில் இரண்டரை இலட்சம் கான்கிரீட் வீடுகள்; வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான

1,100 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினரின் வாங்கும் திறனுக்கேற்ப குடியிருப்புகள், மனைகள்; நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் அனைத்து ஏழைக் குடும்பங் களுக்கும் பாதுகாப்பான வீடுகள் என இவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

விவசாயத் தொழிலாளர் நலவாரியம் உட்பட, 33 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் உருவாக்கப்பட்டு; 20 இலட்சத்து 3 ஆயிரம் அமைப்பு சாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு, 957 கோடியே 48 இலட்ச ரூபாய் உதவித் தொகை. 1 கோடியே 58 இலட்சத்து 82 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள். 28 இலட்சத்து 34 ஆயிரம் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள். 73 இலட்சம் குழந்தைகள், மாணவ, மாணவியருக்கு சத்துணவுடன் வாரம் ஐந்து நாட்களும் முட்டைகள், வாழைப்பழங்கள். பள்ளிக் கல்வியிலும், கல்லூரிக் கல்வியிலும் ஏராளமான சலுகைகள். 4 ஆயிரத்து 20 திருக்கோயில்களில், 387 கோடி ரூபாய்ச் செலவில் திருப்பணிகள் செய்து, குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித் திட்டத்தின்கீழ், 4 இலட்சத்து 53 ஆயிரம் ஏழைப் பெண்களுக்கு 936 கோடியே 60 இலட்சம் ரூபாய் நிதி உதவி. ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவித் திட்டத்தின்கீழ், 20 இலட்சத்து 75 ஆயிரம் ஏழை மகளிருக்கு, 1052 கோடியே 83 இலட்சம் ரூபாய் நிதி உதவி. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ்,

2 இலட்சத்து 56 ஆயிரம் ஏழை மக்களுக்கு, 667 கோடி ரூபாய்ச் செலவில் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள். ஆதரவற்ற முதியோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் 22 இலட்சத்து 27 ஆயிரம் பேர், மாதம் 500 ரூபாய் வீதம் உதவித் தொகை. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 281 கோடியே 88 இலட்சம் ரூபாய் சுழல்நிதி. 5 இலட்சத்து 5 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு அலுவலகங்களில் புதிய வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தொண்டறம் பேணும் அமைப்புக்களின் துணையுடன்; மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி, அந்தந்த மாவட்ட அமைச்சர்களோடும், மாவட்ட ஆட்சியர்களோடும், தொழில் நிறுவனங்களுடனும் இணைந்து, வேலை வாய்ப்பினைத்

தேடித் தரும் முகாம்களை நடத்தியதன் மூலமாக,

1 இலட்சத்து 33 ஆயிரத்து 998 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. 2 இலட்சத்து 33 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும், 60 ஆயிரத்து 55 கோடி ரூபாய் முதலீட்டிலான, 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொழில் துறையில் செய்யப்பட்டுள்ளன. 12 ஆயிரத்து 618 கிராம ஊராட்சிகளில், 2 ஆயிரத்து 549 கோடி ரூபாய்ச் செலவில் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்.

14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் ‘மெட்ரோ ரயில் திட்டம்’.

910 கோடி ரூபாய்ச் செலவில், சென்னை-ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் “புதிய சட்டமன்ற- தலைமைச்செயலக வளாகம்”. சென்னை-கோட்டூர்புரத்தில் 181 கோடி ரூபாய்ச் செலவில் அண்ணா நூற்றாண்டு நூலகம்.

1929 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம். 630 கோடி ரூபாய்ச் செலவில் இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம். அரசு ஊழியர் - ஆசிரியர்களுக்கு 11 ஆயிரத்து 93 கோடி ரூபாய் நிலுவைத் தொகை. இப்படி இந்த ஐந்தாண்டு காலத்தில் எண்ண எண்ண இனித்திடும் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி, சாதனைகள் படைத்திருக்கிறோம்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தின் காரணமாகத்தான்; 2005-2006ல் 61.17 இலட்சம் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி, 2010-2011ல் 96.08 இலட்சம் டன்னாக உயர்ந்திருக்கிறது.

கழக அரசு ஏழை எளியோர்க்கு உதவிடும் வகையில் செயல்படுத்தி வரும் பொது விநியோகத் திட்டம், உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம், கலைஞர் வீடுவழங்கும் திட்டம் போன்ற எண்ணற்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் பயனாகவும், பொருளாதார வளர்ச்சியின் விளைவுகள் பரவலாக பலதரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளதன் காரணமாகவும், 2005-2006ஆம் ஆண்டில் 39 ஆயிரத்து 692 ரூபாயாக இருந்த தனிநபர் வருமானம், 2009- 2010ஆம் ஆண்டில் 69 ஆயிரத்து 377 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்த விபரங்களெல்லாம், தமிழ்நாடு, ‘ரிவர்ஸ் கியரில்’ பின்னோக்கிச் செல்வதையா காட்டுகிறது? சமூக, பொருளாதார நிலைகளில் வேகமாக முன்னேறி வருவதை அல்லவா காட்டுகிறது? இதனை மனசாட்சி உள்ளோர் நிச்சயமாகப் புரிந்து கொள்வர். கழக ஆட்சியில், தமிழகம் எந்த அளவுக்கு அனைத்து முனைகளிலும் முன்னேறி வருகிறது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள ஏதுவாக, அதுகுறித்து தகுதியுடையோர் விளக்கியதையும், உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களும், ஏடுகளும் எழுதியதையும் எடுத்துச் சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

9.4.2011 அன்று கோவையில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள், “முதலமைச்சர் கலைஞர் தலைமையிலான தமிழக அரசு நீண்டகாலக் கண்ணோட்டத்துடன் செயல்படுத்தி வரும் பல்வேறு வகையான திட்டங்கள், தமிழகத்தை பல வழிகளிலும் - குறிப்பாக, ஊரக வளர்ச்சியிலும், வேளாண்மைச் சீரமைப்பிலும் - ஒரு மாதிரி மாநிலமாக மாற்றி அமைத்திருக்கிறது. அண்மையில் பொருளாதார நிபுணர்கள் சிலர் தயாரித்தளித்த அறிக்கை ஒன்றைப் பார்த்தேன். அந்த அறிக்கையில், தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக அறிவித்திருக்கிறார்கள்” என்று பாராட்டியிருக்கிறார்.

தமிழகத்தின் நிதிநிலை குறித்து மத்திய நிதி அமைச்சர் திரு.பிரணாப் முகர்ஜி அவர்கள் விளக்கிச் சொல்லியிருப்பது நம் அனைவருக்கும் நிறைவளிப்பது மட்டுமல்ல; நினைவிலே கொள்ளத்தக்கதுமாகும். 9.4.2011 அன்று சென்னையில் அவர் தமிழகத்தின் நிதி நிலை பற்றி பின்வருமாறு விளக்கியிருக்கிறார் :

“13வது நிதி ஆணையம் அண்மையில் தாக்கல் செய்த அறிக்கையில், எந்த மாநிலமும் 2011-12ஆம் ஆண்டில் அதன் ஒட்டுமொத்த மாநில உற்பத்தியில் 3 முதல் 3.5 சதவிகிதத்திற்குமேல் கடன் வாங்கக் கூடாது என்று பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் கடன் அளவு, பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட மிகவும் குறைவாகவே உள்ளது.

இந்தியாவில் நிதி ஒழுங்கையும், நிலைத்தன்மையையும் திருப்திகரமாகக் கடைப்பிடித்துவரும்

ஒரு சில மாநிலங்களுள் தமிழகமும் ஒன்றாகும். 2011ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி நிலவரப்படி, தமிழக அரசின் ரொக்கக் கையிருப்பு 13 ஆயிரத்து 537 கோடி ரூபாயாகும். இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து ஒருநாள் கூட தன் கணக்கில் பணம் இல்லாமல், கூடுதல் வரைவுத் தொகையைத் (over draft) தமிழக அரசு பெற்றதில்லை. ஆனால், பல மாநிலங்கள் கூடுதல் வரைவுத் தொகையைப் பெற்றுள்ளன?”

சி.என்.என்.-ஐ.பி.என். என்னும் முன்னணி செய்தி நிறுவனம், 2008ஆம் ஆண்டு முதல் தேசிய அளவில் வளர்ச்சி, சட்டம்-ஒழுங்கு, அடிப்படை கட்டமைப்பு போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் தகுந்த நடுவர்கள் மூலம் அனைத்து மாநிலங்களையும் மதிப்பீடு செய்து, சிறந்த மாநிலங்களைத் தேர்வு செய்து, அம்மாநிலங்களுக்கு “வைர மாநில விருதுகள்” வழங்கி வருகிறது. 2010ஆம் ஆண்டில், தமிழ்நாடு - இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற சிறப்பு விருதினையும்; குடிமக்கள் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் சுகாதாரம், மகளிர் மேம்பாடு ஆகிய 3 பிரிவுகளில் சிறந்த மாநிலத்திற்கான வைர மாநில விருதுகளையும் பெற்றுள்ளது.

பிரபல இதழான ‘இந்தியா டுடே’ கடந்த சில ஆண்டுகளாக தேசிய அளவில் பெரிய மற்றும் சிறிய மாநிலங்களின் வளர்ச்சியைக் குறித்து ஆய்வு செய்து, அவற்றின் செயல்திறன் அடிப்படையில் தரவரிசைப்படுத்தி விருது வழங்கி வருகின்றது. 2010ஆம் ஆண்டிற்கான ‘இந்தியா டுடே’ விருதினை வழங்கிட ஏதுவாக, மாநிலங்களைத் தரப்படுத்த ஒவ்வொரு மாநிலத்திலும், தற்போது உள்ள வளர்ச்சி மற்றும் நிதிநிலை, சட்டம்-ஒழுங்கு, சுகாதாரம், கல்வி, நுகர்வோர் சந்தை, விவசாயம், உள்கட்டமைப்பு, முதலீடு ஆகிய எட்டு தலைப்புகளின்கீழ் பல்வேறு பொருள்கள் குறித்து ஆய்வுகளும், மதிப்பீடுகளும் செய்யப்பட்டு, அவற்றின் அடிப்படையில், 20 பெரிய மாநிலங்களின் ஒட்டு மொத்த வளர்ச்சி அடிப்படையிலான வரிசைப் பட்டியலில், தமிழ்நாடு மூன்றாம் இடம் பெற்றுள்ளதை ஒட்டி, 19.11.2010 அன்று புதுதில்லியில் நடந்த விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் அவர்களால் ‘இந்தியா டுடே விருது’ தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டது. தமிழக அரசு ஏழை எளிய மக்களிடையே வறுமையை

ஒழிக்கவும், சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களையவும், செயல்படுத்திவரும் திட்டமான “வாழ்ந்து காட்டுவோம் திட்டம்” குறித்து, உலக வங்கியின் முன்னாள் செயலாக்கத் தலைவர் திருமதி. மீனா முன்ஷி அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில், “‘வாழ்ந்து காட்டுவோம் திட்டம்’, 2006ஆம் ஆண்டின் இடைப் பகுதிக்குப் பிறகு வேகமாகச் செயல்படத் தொடங்கி, மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்றும்; தமிழக அரசு இத்திட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து, திட்டப் பணியாளர்களுக்கு அவ்வப்போது தக்க அறிவுரைகள் வழங்கியதன் பயனாக, களத்தில் இத்திட்டம் மிகுந்த வரவேற்பினைப் பெற்று தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் மகத்தான வெற்றி கண்டுள்ளது” என்றும் பாராட்டியுள்ளார்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில், மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டச் செயல்பாட்டில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டின் மீதான விசாரணை மேற்கொண்டு அளித்த தீர்ப்பில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு.கே.ஜி.பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதிகள் திரு.தீபக் வர்மா மற்றும் திரு.பி.எஸ்.சவ்யான் ஆகியோர், இத்திட்டச் செயலாக்கத்தில் தமிழ்நாடு மற்றும் மேகாலயா ஆகிய இரு மாநிலங்கள் அதிக அக்கறையுடன் செயல்படுவதாகப் பாராட்டி, மற்ற மாநிலங்களும் இவ்விரு மாநிலங்களின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திறம்பட செயல்பட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்கள்.

“Wall Street Journal” தனது 2010, ஜூலை 8ஆம் நாளிட்ட இதழில், கழக அரசின் செயல்பாடுகளை பெரிதும் பாராட்டியிருக்கிறது. அந்த இதழில் “தமிழ்நாடு வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளுக்குத் தேவையான நிலங்கள், சாலைகள் ஆகிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில், மற்ற இந்திய மாநிலங்களைவிடச் சிறப்பாக செயல்படுகிறது. தொழில் தொடங்கவும், விரிவாக்கம் செய்யவும், 12க்கும் மேற்பட்ட அரசுத் துறை சார்ந்த அனுமதிகளை ஒற்றைச்சாளர முறையில் ஒரே இடத்தில் வழங்குகிறது” என்றும் கூறிப் பாராட்டியுள்ளது.

“Oxford Analytica (ஆக்ஸ்போர்ட் அனலிட்டிகா)” என்ற ஒரு பன்னாட்டு தனியார் ஆலோசனை நிறுவனம், “இந்தியா டிகன்ஸ்ட்ரக்டட்” (India Deconstructed) என்ற ஒரு ஆய்வை

நடத்தியது. அந்த ஆய்வின்படி, “தமிழகம் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே முதன்மையாக விளங்குகிறது” என்று கூறி, அதற்கு தமிழ்நாட்டின் தரமான உள்கட்டமைப்பு மற்றும் ஆளுமை ஆகியவையே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவிலுள்ள 28 மாநிலங்களையும் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களையும் பகுப்பாய்வு செய்து, “தமிழ்நாடே மிகச் சிறந்தது” என்று அறிவித்துள்ளது.

3.5.2011 அன்றுகூட தமிழகத்தில் மகப்பேறு நலத் திட்டம் சிறப்பாகச் செயல்படுகிறது என்று உலக வங்கி பாராட்டியிருப்பதை ‘இந்து’ நாளிதழ் “Maternity Health Scheme commended” என்று தலைப்பிட்டு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு மகப்பேறு நலத் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தி, குழந்தை இறப்பு விகிதத்தைப் பெருமளவுக்குக் குறைத்திருப்பதை உலக வங்கி பாராட்டியிருக்கிறது.

இந்த மதிப்பீடுகளையெல்லாம் கண்ட பிறகாவது, ஏனோ தானோ என்று விமர்சனம் செய்து, கழக அரசின் செயல்திறனையும், மக்கள் நலப் பணிகளையும், சாதனைகளையும் இன்னமும் குறைத்து மதிப்பிடுவோர்; தமது அணுகுமுறையைத் திருத்திக் கொண்டு, ஆத்திரத்தையும், அலட்சியத்தையும் குறைத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். எவர் போற்றினாலும், புகழ்ந்தாலும்; புழுதிவாரித் தூற்றினாலும், பொருள்படுத்தாமல் போனாலும்; நமது இலட்சியப் பயணமும், தமிழகத்துக்கும் - தமிழ் மொழிக்கும் - தமிழர்களுக்குமான நமது பணிகளும், ஓய்வில்லா உழைப்பும், இன்றுபோல் என்றும் தொடரும்!

அன்புள்ள, மு.க. 5-5-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 181–188. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 45-இல் மேலும் கடிதங்கள்