முரசொலி கடிதங்கள் · 3550
தேவர் திருமகனின் பொன்மொழி என்ன?
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3550. தேவர் திருமகனின் பொன்மொழி என்ன?
உடன்பிறப்பே,
14வது சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான பணிகளில் தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. கூட்டணிக் கட்சிகள் எல்லாம் தோழமைக் கட்சிகளோடு கலந்து பேசி தொகுதிகளையும், வேட்பாளர்களையும் நிச்சயம் செய்து அறிவித்து, வேட்பு மனு தாக்கல் செய்வதும் தொடங்கிவிட்டது. ஏப்ரல் 13ஆம் தேதியன்று தமிழ்நாட்டு மக்கள், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தங்களை ஆள வேண்டியவர் யார் என்பதைத் தேர்ந்தெடுக்க தங்களது வாக்குகளை அளிக்கவிருக்கிறார்கள்.
இதுவரை நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் வாக்குப் பதிவு முடிவுற்ற இரண்டொரு நாட்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும். ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத ஒரு முடிவாக ஏப்ரல் 13ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்ற போதிலும், மே திங்கள் 13ஆம் நாள்தான் வாக்குகள் எண்ணிக்கை நடைபெறவுள்ளது. எதற்காக இந்த இடைவெளி? ஏன் ஒரு மாதத்திற்கு முன்பாகவே அரசியல் கட்சிகளுக்கு நேரம் கொடுக்காமலே அவசரம் அவசரமாக தேர்தலை நடத்துகிறார்கள்? எல்லாம் தேர்தல் ஆணையத்தின் முடிவு. அவர்களுக்கு எதிராக யாரும் வாய் திறக்கக் கூடாது. அரசியல் கட்சிகள் சார்பில் வாக்குப் பதிவு செய்யும் நாளை சற்று தள்ளி வைக்க வேண்டுமென்ற கோரிக்கை வைக்கப்பட்டபோது தேர்தல் ஆணையம் அதனை ஏற்க முடியாதென்று தள்ளிவிட்டது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவு என்று சொல்லி மற்றும் ஒரு கொடுமையும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டிலே கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் யாரும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பணம் எடுத்துச் செல்லக்கூடாது.
இதைப்பற்றி அன்றாடம் ஏடுகள் ஒவ்வொரு செய்தியைத் தாங்கி வெளிவருகின்றன. ஏன், மாலை இதழ் ஒன்றில் நேற்று வந்த செய்தியிலே கூட - “தேர்தல் கமிஷன் கெடுபிடி - வாகன சோதனையில் ‘காமெடி’ காட்சிகள் - ஆடு, கொலுசுகளைக் கூட விடவில்லை” என்று கொட்டை எழுத்துக்களில் செய்திகள் வந்துள்ளன.
அந்தச் செய்தியில் “தேர்தல் என்றாலே தெருவுக்குத் தெரு, வீதிக்கு வீதி வேட்பாளர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் மாறி மாறி கார்களில் வந்து பிரச்சாரம் செய்தபடி இருப்பார்கள். எங்கு பார்த்தாலும் ஒலிபெருக்கியில் பிரச்சாரச் சத்தம் காதைப் பிளந்த வண்ணம் இருக்கும். அரசு சுவர்கள், தனியார் சுவர்களில் சின்னங்கள் தேர்தல் வாசகங்கள் எழுத முன் கூட்டியே இடம்பிடித்து விடுவார்கள். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும் பெயர் எழுதுவது வாசகம் எழுதுவது மும்முரமாக இருக்கும். தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே திருவிழா போல ஊரெங்கும் களை கட்டி விடும். ஆனால் இந்தத் தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தேர்தல் கமிஷன் கிடுக்கிப் பிடி உத்தரவுகளைப் போட்டுள்ளது. சுவர்களில் வரையப்பட்டிருந்த சின்னம், தலைவர்களது படங்கள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன. சென்னை நகரில் ஒரு இடத்தில் கூட சின்னத்தைப் பார்க்க முடியவில்லை. சிலைகளைக்கூட விட்டுவைக்கவில்லை. அண்ணா, காமராஜர், ராஜீவ்காந்தி, எம்.ஜி.ஆர். சிலைகளையும் தேர்தல் முடியும் வரை மூடவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சிலைகளை துணியால் சுற்றி மூடி வைத்துள்ளனர். கொடி தோரணங்களும் கண்ணில் படவில்லை. பொது இடங்களில் இருந்த கட்சிக் கொடி கம்பங்களும், கொடிகளும் அகற்றப்பட்டு வருகின்றன. போஸ்டர்கள், டிஜிட்டல் பேனர்களும் எங்கும் காணப்படவில்லை. தேர்தலுக்கு முன்பே தொடங்கும் ஆரவாரம் தம்பட்டம் எதுவும் இன்றிகளை இழந்த கோவில் விழா போல் காட்சி அளிக்கிறது.
இதற்கெல்லாம் மேலாக வாகன சோதனை, வியாபாரிகளையும் பல்வேறு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களையும் முடக்கிப்போட்டு விட்டது. நகைக்கடைக்காரர்கள் அல்லது தொழில் நிறுவனங்கள் நடத்துவோர் அன்றாடம் வசூல் ஆகும் வியாபார பணத்தை வங்கியில் கட்ட எடுத்துச் செல்வார்கள்.
இப்போது அவர்கள் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்ல முடியவில்லை. வாகன சோதனையில் சிக்கினால் அதிகாரிகள் பறிமுதல் செய்து விடுகிறார்கள். இது போல் நிலம் வாங்க - விற்க எடுத்துச் செல்லும் பணமும் பறிமுதல் செய்யப்படுகிறது. இதுவரை நடந்த சோதனையில் எந்த அரசியல் பிரமுகரிடமும் பணம் சிக்கவில்லை என்பதுதான் வேடிக்கை” என்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.
மாலை இதழிலேயே இவ்வாறு செய்தி வந்திருக்கிறது என்றால் இவை அனைத்தும் உண்மை. தேர்தல் ஆணையத்தின் பெயரால் என்னென்ன நடைபெறுகின்றன என்பதைத்தான் அந்த இதழ் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் வாகனச் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 29ஆம் தேதியன்று கடை அடைப்பு நடத்த வணிகர்கள் முடிவு செய்திருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் திரு. ஏ.எம். விக்கிரமராஜா அறிக்கை கொடுத்திருக்கிறார். அவர் கொடுத்துள்ள அறிக்கையில் தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் 22ந்தேதிக்குள் அவர்களை அழைத்துப்பேசி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்றும், இல்லாவிட்டால் 24ஆம் தேதி வணிகர் சங்கப் பிரதிநிதிகள் ஒன்று கூடி சென்னையில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்றும், அதன் பின்னரும் இந்தப் பிரச்சினை நீடித்தால் வரும் 29ஆம் தேதி கடையடைப்பு நடத்துவார்கள் என்றும், அதற்கும் பலன் இல்லாவிட்டால் வணிகத் துறையினர் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆங்கில நாளிதழ் ஒன்றில் வந்த செய்தியில் “The Election Commission has banned the display of statues of political leaders erected in public places and has instructed the authorities and political parties to cover such statues till the end of the April 13 elections” என்று கூறப்பட்டுள்ளது.
“விடுதலை” நாளிதழில் வெளிப்பட்ட செய்தியில் - “தேர்தல் கமிஷன் சுதந்திரமாகத் தேர்தல் நடப்பதைக் கண்காணிப்பதில் யாரும் குற்றம் சொல்ல முடியாது என்றபோதிலும் கூட, அதீதமான நடவடிக்கைகளை அதன் அதிகாரிகள் பலர், மகாராஜாவை மிஞ்சும்
ராஜவிசுவாசிகளாக மாறி ஏதேதோ செய்வதும், சட்டத்தை அவர்கள் கையில் எடுத்துச் செயல்படுவதும் சட்டப்படி “துஷ்பிரயோகம்” ஆகும் என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியது அரசியல் கட்சி அல்லாத நம்மைப் போன்றவர் கடமையாகும். திண்டுக்கல்லில் தலைவர்கள் சிலைகளை துணிபோட்டு மூடி வைப்பது தேவையா? மறைந்த தலைவர்களின் படத்தைப் போட்டு சுவரொட்டி அடித்து ஓட்டுகிறார்கள். அதை என்ன செய்வது? தலைவர்கள் சிலைக்கும், வாக்களிப்பதற்கும் என்ன சம்பந்தம்? திருமண மண்டபங்களை சோதனையிட உரிமை உண்டு. அதைப்பூட்டி சாவியை எங்களிடம் கொடுங்கள் என்று கேட்க உரிமை உண்டா? ஏற்கனவே திருமணம் ஏற்பாடானவர்கள் கதி என்னவாகும்? இதற்குரிய வாடகையை தேர்தல் கமிஷன் கொடுக்குமா? கொடுக்க வேண்டாமா? நஷ்ட ஈடு தராமல் நிலத்தைக் கூட கையகப்படுத்த முடியாதே சட்டப்படி. அப்படி இருக்கையில் திருமண மண்டபங்களைப் பூட்டி சாவியை எடுத்துக் கொள்வது சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதல்லவா? தனி மனித உரிமை போன்ற பலவற்றைப் பறிப்பதற்கு ஓர் எல்லை இல்லையா? உடனே சிலைகளை மூடுவதை நிறுத்த வேண்டும், இல்லையேல் பற்பல இடங்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை அதுவே ஏற்படுத்தக்கூடும். உடனே தேர்தல் கமிஷன் அதிகாரிகள் இதுபற்றி இணக்கமாக சிந்திக்க வேண்டுகிறோம்” - என்று எழுதியுள்ளது.
இதிலே இன்னும் வேடிக்கை! வாகன சோதனையில் ஆடு, கோழிகளைக் கூட விட்டு வைக்கவில்லை. வாக்காளர்களுக்கு பிரியாணி போடுவதற்காக மொத்தமாக கொண்டு போவதாக கற்பனை செய்து கொண்டு ஆடுகளையும், கோழிகளையும் ஏன் பீடிகளையும் கூட பறிமுதல் செய்துள்ளார்கள். விற்பனைக்காக எடுத்துச்சென்ற கொலுசுகளையும், நகைகளையும் கைப்பற்றியிருக்கிறார்கள்.
மதுரையில் ஒரு அரசியல் கட்சியினரின் வெங்காய கிடங்கில் பணம் பதுக்கி வைத்திருப்பதாகக்கூறி சோதனை நடத்தியிருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையத்தின் இந்தக் கெடுபிடிகளை எதிர்த்து தேனி மாவட்டம், ஜக்கம்பட்டியைச் சேர்ந்த தில்லை நடராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது
நல வழக்கு ஒன்றையே தாக்கல் செய்துள்ளார். அதில் தேசிய நெடுஞ்சாலைகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாகனங்களைச் சோதனையிட்டு பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர், இதுபோல பணத்தை பறிமுதல் செய்ய தேர்தல் கமிஷனுக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை, திருமணத்துக்கு நகை வாங்கி வந்தாலும் அதையும் பறிமுதல் செய்கிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். நீதிபதிகள் வழக்கு விசாரணையை தள்ளிவைத்திருக்கிறார்கள். விசாரணை தொடருகிறது.
தேர்தல் ஆணையம் தனது செயல்பாட்டினை இந்த அளவோடு நிறுத்திக் கொள்ளவில்லை. இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவிற்கு போலீஸ் டி.ஜி.பி. முதல் மாவட்டக் கலெக்டர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் பல பேரை தேர்தல் கமிஷன் மாற்றம் செய்து ஆணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் நேர்மையாகப் பணி புரிந்து கொண்டிருந்த பல அதிகாரிகளை அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அதிலே உண்மை இருக்கிறதா என்பதைப் பற்றிக்கூட விசாரிக்காமல் - தமிழக அரசிடம் கேட்காமல் கூட தனிச்சையாக மாற்றி ஆணை பிறப்பித்திருக்கிறார்கள். அதிகாரிகள் அளவிலே மட்டுமல்ல, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலே சாதாரணமாகப் பணியாற்றும் மக்கள் தொடர்பு அதிகாரிகளைக்கூட மாறுதல் செய்து உத்தரவிட்டிருக்கிறார்கள்.
இன்று காலையில் வெளிவந்த “தினத்தந்தி” நாளிதழிலே கூட, “தற்காலிக அலுவலகங்கள், பிரச்சார வாகனங்களில் கட்சிக்கொடி கட்டுவதற்கும், தேர்தல் அதிகாரியின் அனுமதி பெற வேண்டும் - தேர்தல் ஆணையத்தின் கூடுதல் விதிமுறைகள் அமலுக்கு வந்தன” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் தினமும் புதிது புதிதாக வெளியிட்டு வரும் உத்தரவுகளினால் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பிரச்சாரத்தை எப்படி தொடங்குவது, செலவுக் கணக்கை எப்படிக் காட்டுவது என்று தெரியாமல் விழி பிதுங்கிய நிலையில் காணப்படுகிறார்கள். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் கூடுதல் விதிமுறைகளை நேற்று அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு
வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது” என்று எழுதி தேர்தல் ஆணையத்தின் கூடுதல் கெடுபிடிகள் எல்லாம் கூறப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம் இந்த முறை இந்த அளவிற்கு அதிகக் கெடுபிடிகள் செய்ய என்ன காரணம்? தேர்தல் ஆணையம் கெடுபிடியில் ஈடுபட்டிருப்பதாக நாம் குற்றம் சாட்டவில்லை. நாளேடுகள் பல அதைப்பற்றி அன்றாடம் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. அதைப்பற்றி தேர்தல் ஆணையம் ஏதாவது கவலைப்படுகிறதா? “மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம் - கங்கையே சூதகமானால் எங்கே மூழ்குவது?” என்று தேவர் திருமகன் அடிக்கடி கூறிய பழமொழிதான் நினைவிற்கு வருகிறது!
அன்புள்ள, மு.க. 23-3-2011
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 123–128. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.