அடக்கம்

முரசொலி · தொகுதி 45 · கடிதம் 3544

முரசொலி கடிதங்கள் · 3544

நகராட்சி நிர்வாகத் துறையின் ஐந்தாண்டு சாதனைகள்!

நாள் 18.3.2011சுமார் 8 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3544. நகராட்சி நிர்வாகத் துறையின் ஐந்தாண்டு சாதனைகள்!

உடன்பிறப்பே,

நகராட்சி நிர்வாகத் துறையில் கழக ஆட்சி கடந்த ஐந்தாண்டு காலத்தில் நிறைவேற்றிய சாதனைகள் - திட்டங்களின் தொடர்ச்சியினை எழுதுகிறேன்.

தஞ்சை பெரியகோவில் 1000 ஆண்டு நிறைவு - தஞ்சை நகர் மேம்பாட்டுத் திட்டம்

தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு 1000 ஆண்டு நிறைவு விழாவையொட்டி அரசு சார்பில் விழா எடுக்கப்பட்டு, 25.19 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் தஞ்சை நகரில் பல அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

பேரூராட்சிகள் இயக்ககம்

பேரூராட்சிகள் நிர்வாகம்

“பேரூராட்சிகள்” எனும் உள்ளாட்சி அமைப்பு வகையினை உருவாக்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.

நிதி அதிகார வரம்பு உயர்வு

சிறப்பு நிலை, தேர்வு நிலைப் பேரூராட்சி மன்றம் அனுமதி வழங்கும் திட்டத்திற்கான அதிகார வரம்பு 2 இலட்ச ரூபாய் என்பது 8 இலட்சம் ரூபாய் என்றும், முதல்நிலை மற்றும் இரண்டாம்நிலைப் பேரூராட்சிகளுக்கான அதிகார வரம்பு 1 இலட்சம் ரூபாய் என்பது 4 இலட்சம் ரூபாய் என்றும் உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோலவே, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அதிகார வரம்பு 5 இலட்ச ரூபாய் என்பது 20 இலட்சம் ரூபாய் என்றும், மாவட்ட ஆட்சியர்களுக்கான அதிகார வரம்பு 10 இலட்சம் ரூபாய் என்பது 30 இலட்சம் ரூபாய்

என்றும், பேரூராட்சிகளின் இயக்குநர் அதிகார வரம்பு 1 கோடி என்பது 3 கோடி ரூபாய் என்றும் 12.4.2008 இல் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, தொழில் நுட்ப அனுமதி வழங்கும் அதிகார வரம்பும் செயற்பொறியாளருக்கு இருந்த 30 இலட்ச ரூபாய் 40 இலட்ச ரூபாய் என்றும், உதவி செயற்பொறியாளர் அனுமதி வழங்கும் அதிகார வரம்பும் 15 இலட்ச ரூபாய் என்பது 20 இலட்ச ரூபாய் என்றும் உயர்த்தப்பட்டுள்ளது. பேரூராட்சிகளில் செயற்பொறியாளர் தொழில் நுட்ப ஒப்புதல் வழங்கும் நிதிவரம்பு 40 இலட்ச ரூபாயிலிருந்து 50 இலட்ச ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்

பேரூராட்சிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த “அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்” எனும் ஒரு சிறப்புத் திட்டம் நான்கு ஆண்டு காலத்தில் செயல்படுத்தப்படும் என 11.4.2007ல் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு; 6.7.2007 அன்று ஆணைகள் வெளியிடப்பட்டு, 3.9.2007 அன்று மாமல்லபுரத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. அதுமுதல் ரூ.280.50 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் அனைத்து பேரூராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கான நகர்ப்புற அடிப்படை வசதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.31.84 கோடி மதிப்பீட்டில் 28 பேரூராட்சிகளில் 479 சாலை மற்றும் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.

நகர்ப்புற ஏழைகளுக்கான அடிப்படை வசதித் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த வீடுகள் (ம) குடிசைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம்

ஒருங்கிணைந்த வீடுகள் மற்றும் குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டம், நகர்ப்புற ஏழைகளுக்கான அடிப்படை வசதி திட்டம் ஆகியவற்றின் கீழ், விளாங்குறிச்சி, பெரியநாயக்கன்பாளையம், நெ.4.வீரபாண்டி, வீரகோளம், கண்ணம்பாளையம், இடிகரை, மதுக்கரை, வேட்டப்பட்டி, சாவணம்பட்டி, வெள்ளலூர், கெங்கவல்லி, மோகனூர், சீராப்பள்ளி, ஆலம்பாளையம், தொளூர், வீரகனூர், ஆர்.புதுப்பட்டி, அவல் பூந்துறை, ஊத்துக்குளி, பள்ளப்பாளையம், கொடுமுடி, லக்கம்பட்டி,

பி.மேட்டுப்பாளையம், கூகலூர், பி.என்.பட்டி, கருப்பூர் உட்பட 42 பேரூராட்சிகளில் ரூ.81.44 கோடி மதிப்பீட்டில் 7248 வீடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டு இதுவரை 4190 வீடுகள் கட்டப்பட்டுள்ளன; எஞ்சிய வீடுகளின் கட்டுமானப் பணிகள் பல்வேறு நிலையில் முன்னேற்றத்தில் உள்ளன.

நகர்ப்புற வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள்

சுவர்ண ஜெயந்தி சகாரி ரோஜ்கார் யோஜனா திட்டம்

சுவர்ண ஜெயந்தி சகாரி ரோஜ்கார் யோஜனா திட்டம் 1.12.1997 முதல் அறிமுகப்படுத்தப்பட்டு மத்திய மாநில அரசுகளின் நிதிப்பங்கீட்டில் நகர்ப்புற சுய வேலைவாய்ப்புத் திட்டம் நகர்ப்புற மகளிர் சுயஉதவித் திட்டம், நகர்ப்புற ஏழைகளுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவதற்குரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி, நகர்ப்புற சமூக மேம்பாட்டுக் கட்டமைப்பு, நகர்ப்புற கூலி வேலை வாய்ப்புத் திட்டம் ஆகிய துணைத் திட்டங்கள் 55.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு உள்ளன.

சுனாமி நிவாரணம் மற்றும் மறுவாழ்வு

சுனாமி அவசர கால உதவித் திட்டம்

சுனாமி பாதித்த 5 கடலோர மாவட்டங்களைச் சார்ந்த 19 பேரூராட்சிகளில் ரூ.63.67 கோடி செலவில் சாலை சீரமைத்தல் மற்றும் கட்டடங்கள் பழுதுபார்த்தல் ஆகிய பணிகள் முடிக்கப்பட்டன.

வாழ்வாதார செயல்பாடுகள்

சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் 12.78 கோடி ரூபாய்ச் செலவில் 19 பேரூராட்சிகளில் 60,966 உறுப்பினர்கள் அடங்கிய 3387 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு குழு உறுப்பினர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு நிலையான சொத்துகளை உருவாக்க பொருளாதார உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் 969 மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட ரூ.96.90 இலட்சம் மானியம் அளிக்கப்பட்டு பயன் அடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் பொருளாதார உதவி மற்றும் சுழல்நிதி பெற்ற

22,891 பயனாளிகளுக்கு உயிர்க்கூறு அங்க அடையாள அட்டை வழங்குவதற்கு இந்த அரசு ரூ.24.33 இலட்சம் அரசு ஒதுக்கீடு செய்து, அதில் ரூ.11.42 இலட்சம் செலவிடப்பட்டுள்ளது.

2006-2011 வரை நிறைவேற்றப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டங்கள்

365.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 16.71 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் கரூர், இனாம் - கரூர் நகராட்சியில் 38.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.21 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையிலும்; தஞ்சாவூர் நகராட்சியில் 77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2.16 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையிலும்; மயிலாடுதுறை நகராட்சியில் 46.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 84,290 மக்கள் பயன்பெறும் வகையிலும், திருச்சி மாநகராட்சியில் 132 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7.46 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையிலும்; திருநெல்வேலி மாநகராட்சியில் 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4.10 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையிலும்; உதகமண்டலம் நகராட்சியில் விடுபட்ட பகுதிகளுக்கு 5.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 94 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையிலும் 6 பாதாள சாக்கடைத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவை தவிர, கும்பகோணம், ஆலந்தூர், வளசரவாக்கம், மதுரை ஆகிய நகரங்களிலும் பாதாள சாக்கடைத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும், நடப்பு நிதியாண்டில் 23 பாதாள சாக்கடைத் திட்டங்கள் 806.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

சிறிய மற்றும் நடுத்தர நகரங்களில் பாதாள சாக்கடைத் திட்டம்

சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கான நகர்ப்புற உள்ளகட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 136 கோடியே 14 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் 4 நகராட்சிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட அனுமதிக்கப்பட்டு; மறைமலைநகர் பாதாள சாக்கடைத் திட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது. அரியலூர், உடுமலைப்பேட்டை நகராட்சிகளில் 66 கோடியே 83 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயலாக்கத்திற்கு அனுமதிக்கப்பட்டு ஆரம்பகட்ட நிலையில் உள்ளன.

ரூபாய் 158.05 கோடி மதிப்பீட்டிலான இந்த அரசினால் அனுமதிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வரும் ஆவடி நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டம் 2011 ஆகஸ்டிலும்; ரூபாய் 160.97 கோடி மதிப்பீட்டிலான தாம்பரம் நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டம் 2012 மே திங்களிலும்; ரூபாய் 60.01 கோடி மதிப்பீட்டிலான மதுரவாயல் நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டம் 2012 ஆகஸ்டிலும்; ரூபாய் 20.47 கோடி மதிப்பீட்டிலான திருமழிசை பேரூராட்சி பாதாள சாக்கடைத் திட்டம் 2012 பிப்ரவரியிலும்; ரூபாய் 38.29 கோடி மதிப்பீட்டிலான போரூர் பேரூராட்சி பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் 2012 ஜூலையிலும் முடிவடையும்.

அம்பத்தூர் பாதாள சாக்கடைத் திட்டம்

அம்பத்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம், இரண்டாம் கட்டப் பணியின் கீழ் கழிவு நீரேற்று நிலையம் மற்றும் கழிவுநீர் கொண்டு செல்லும் விசைக் குழாய்கள் அமைக்கும் பணிகள் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் ஆகஸ்ட் 2007ல் தொடங்கப்பட்டன. இப்பணிகள் முடிவடைந்து ஆகஸ்ட் 2009ல் திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

முதற்கட்ட அம்பத்தூர் பாதாள சாக்கடைத் திட்டத்தில் விடுபட்ட பகுதிகளுக்கு ரூ.35.86 கோடி மதிப்பீட்டில் 22.6.2010 அன்று பணி ஆணை வழங்கப்பட்டு நடைபெற்று வரும் பணிகள் 2012 ஜூலையில் முடிவடையும்.

திருவொற்றியூர் பாதாள சாக்கடைத் திட்டம்

திருவொற்றியூர் நகராட்சிப் பகுதியில் கழிவுநீர் அமைப்பை மேம்படுத்துதல் மற்றும் விரிவுபடுத்தும் பணி தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்ட நிதி உதவியுடன் 5 சிப்பங்களில் ரூபாய் 87.63 கோடி திருத்திய திட்ட மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2007 மே திங்களில் தொடங்கப்பட்ட இப்பணிகள் 2012 டிசம்பரில் முடிவுறும்.

பல்லவபுரம் பாதாள சாக்கடைத் திட்டம்

பல்லவபுரம் நகராட்சிக்கான பாதாள சாக்கடைத் திட்டம் ரூபாய் 72.10 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாதவரம் பாதாள சாக்கடைத் திட்டம்

மாதவரம் நகராட்சிக்கான பாதாள சாக்கடைத் திட்டம் ரூபாய் 37.81 கோடி மதிப்பீட்டில் மார்ச் 2012ல் முடிக்கத் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவை தவிர, ரூபாய் 155.22 கோடி திருத்திய மதிப்பீட்டில் நடைபெறும் அம்பத்தூர் (பிரிவு 3) நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டம் 2012 ஜூலையிலும்; ரூபாய் 28.08 கோடி மதிப்பீட்டிலான உள்ளகரம் புழுதிவாக்கம் நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டம் 2013 ஜனவரியிலும்; ரூபாய் 20.19 கோடி மதிப்பீட்டிலான பெருங்குடி பேரூராட்சி பாதாள சாக்கடைத் திட்டம் 2012 நவம்பரிலும்; ரூபாய் 58.61 கோடி மதிப்பீட்டிலான பள்ளிக்கரணை பேரூராட்சிக்கான பாதாள சாக்கடைத் திட்டம் 2013 ஜனவரியிலும் முடிவடையும்.

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்குட்பட்ட போரூர், திருமழிசை ஆகிய பேரூராட்சிகளில் ரூ.58.76 கோடி மதிப்பீட்டிலும், பெருங்குடி பேரூராட்சியில் ரூ.20.19 கோடி மதிப்பீட்டிலும், பள்ளிக்கரணை பேரூராட்சியில் 58.61 கோடி மதிப்பீட்டிலும் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. மேலும், நந்தம்பாக்கம், சோழிங்கநல்லூர், மீனம்பாக்கம், சின்னசேக்காடு, புழல் ஆகிய பேரூராட்சிகளில் நிறைவேற்றப்பட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மாமல்லபுரம் பேரூராட்சியில் ரூ. 6.08 கோடி மதிப்பீட்டிலும், திருச்செந்தூர் பேரூராட்சியில் ரூ 14.48 கோடி மதிப்பீட்டிலும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

வீடுகளுக்குப் பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குதல்

இதுவரை முடிக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடைத் திட்டங்களின் மூலம் 1,70,477 வீடுகளுக்குப் பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம்

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டம் - நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் ஆளுமைக்கான திட்டம்

இத்திட்டத்தில் 47 திட்டங்களுக்கு ரூ.5134.05 கோடி சென்னை, மதுரை கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்கு

ஒப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த 47 திட்டங்களுக்கான மத்திய அரசின் பங்கு ரூ.2162.72 கோடி. மாநில அரசின் பங்கு ரூ.881.78 கோடி. இந்தப் பங்கீட்டில் இதுவரை மத்திய அரசு ரூ.933.16 கோடியும் மாநில அரசு ரூ.373.88 கோடியும் ஆக மொத்தம் ரூ.1307.04 கோடி நிதி மத்திய மற்றும் மாநில அரசுகளால் விடுவிக்கப்பட்டுள்ளது. ஒப்பளிக்கப்பட்ட 47 திட்டங்களில் இதுவரை 9 திட்டங்கள் முடிவுற்றன. மற்ற திட்டங்கள் பல்வேறு நிலைகளில் முன்னேற்ற நிலையில் உள்ளன.

சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கான நகர்ப்புற கட்டமைப்புத் திட்டம்

மாநில அளவிலான ஒப்பளிப்புக் குழு 122 திட்டங்களுக்கு ரூ.882.72 கோடி திட்ட மதிப்பீட்டிற்கு ஒப்பளிப்பு செய்துள்ளது. இத்திட்டங்களில் மத்திய அரசின் பங்கு ரூ.706.18 கோடியும், மாநில அரசின் பங்கு ரூ.88.27 கோடியும் ஆகும். இந்தப் பங்கீட்டில் இதுவரை மத்திய அரசு ரூ.559.64 கோடியும் மாநில அரசு ரூ.69.96 கோடியும் ஆக மொத்தம் ரூ.629.60 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த 122 திட்டங்களில் இதுவரை 88 திட்டங்கள் முடிவுற்றன; மற்ற திட்டங்கள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.

பெரு நகர அடிப்படை வசதி மேம்பாட்டு நிதித் திட்டம்

இத்திட்டத்தின்கீழ் 28 திட்டங்களுக்கு ரூ.662.42 கோடி அனுமதி அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட ரூ.198.88 கோடியில் 5 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு; மற்ற திட்டங்கள் பல்வேறு நிலைகளில் முன்னேற்ற நிலையில் உள்ளன.

சென்னை மாநகராட்சி

மேம்பாலங்கள்:

சென்னை நகரில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, ரூ.9.72 கோடி செலவில் வடக்கு உஸ்மான் சாலை மற்றும் மகாலிங்கபுரம் சாலை சந்திப்பில் கட்டப்பட்ட மேம்பாலம் 30.3.2008 அன்றும்; ரூ.19.80 கோடி செலவில் உஸ்மான் சாலை மற்றும் துரைசாமி சாலை சந்திப்பில் கட்டப்பட்ட மேம்பாலம் 14.8.2008 அன்றும்; ரூ.16.50 கோடி செலவில் கோபதி நாராயணா சாலை மற்றும் திருமலை சாலை சந்திப்பில் கட்டப்பட்ட

கலைவாணர் மேம்பாலம் 29.12.2008 அன்றும்; ரூ.19.93 கோடி செலவில் டர்ன்புல்ஸ் சாலை மற்றும் செனடாப் சாலை சந்திப்பில் கட்டப்பட்ட ஜி.கே.மூப்பனார் மேம்பாலம் 11.12.2009 அன்றும்; ரூ.6.03 கோடி செலவில் அடையாறு ஆற்றின் குறுக்கே ஆலந்தூர் சாலையில் கட்டப்பட்ட ஆலந்தூர் அபிரகாம் மேம்பாலம் 11.12.2009 அன்றும்; ரூ.4.33 கோடி செலவில் ஜோன்ஸ் சாலையில் கட்டப்பட்ட சி.பி.பவளவண்ணன் வாகனச் சுரங்கப்பாதை 11.12.2009 அன்றும் திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

முரசொலி மாறன் மேம்பாலம் - பெரம்பூர்

வட சென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பெரம்பூர் ரயில்வே மேம்பாலப் பணி 1999ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டிருந்த போதிலும், முந்தைய அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் இப்பணி முடக்கப்பட்டு, பெரம்பூர் பகுதி வாழ்மக்கள் பெரும் வேதனைகளுக்கு ஆட்பட்டு வந்தனர். 2006ஆம் ஆண்டில் இந்த அரசு அமைந்தபின் 51 கோடி ரூபாய்ச் செலவில் 2008 ஜூன் திங்களில் இந்தப் பாலத்தை மீண்டும் கட்டத் தொடங்கி 21 மாத காலத்தில் பணிகள் முடிந்து, 28.3.2010 அன்று திறந்து வைக்கப்பட்டது.

மேலும், ரூ.15.75 கோடி செலவில் ரங்கராஜபுரம் இரயில்வே சந்திக்கடவின் குறுக்கே மேம்பாலம், ரூ.13.39 கோடி செலவில் வில்லிவாக்கம் இரயில்வே சந்திக்கடவு - 2ல் வாகன சுரங்கப்பாதை, ரூ.10.55 கோடி செலவில் மணியக்கார சத்திரத் தெருவில் இரயில்வே சந்திக்கடவின் குறுக்கே வாகனச் சுரங்கப் பாதை ஆகிய பணிகள் நடைபெறுகின்றன; இப்பணிகள் விரைவில் முடிவடையும்.

மழைநீர் வடிகால்வாய்

சென்னை மாநகராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் மழைநீர் தேக்கம் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் துறை மூலம், 158.61 கி.மீ. நீளத்திற்கு ரூ.89.68 கோடியில் மழைநீர் வடிகால்வாய்கள் கட்டப்பட்டுள்ளன.

சென்னைவாழ் மக்களுக்கு மழைக்காலத்தில் உண்டாகும் வெள்ள பாதிப்பினால் ஏற்படும் துன்பத்தைத் தவிர்க்கும் விதமாக ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின்

மூலமாக சிறிய மற்றும் பெரிய மழைநீர் வடிகால்வாய்கள் அமைப்பதற்கு ரூ.1447.91 கோடி திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்நாள் வரை சென்னை மாநகராட்சி செயல்படுத்திட அனுமதிக்கப்பட்ட திட்டங்களில் இதுவே பெருந்திட்டமாகும்.

இத்திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.814.88 கோடி மதிப்பீட்டுத் தொகையில் 320.82 கி.மீ. நீளத்திற்கு புதிய மழைநீர் வடிகால்வாய்கள் கட்டுதல், 183.08 கி.மீ. நீளத்திற்குப் பழுதடைந்த கால்வாய்களைப் புதுப்பித்தல், 28.64 கி.மீ. நீளத்திற்கு கால்வாய் மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ள ஒப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இத்திட்டத்தில் அடங்கிய கொளத்தூர், வேளச்சேரி, இராயபுரம், கேப்டன் காட்டன் கால்வாய், கூவம், மாம்பலம் - நந்தனம், வடக்கு பக்கிங்காம் கால்வாய், மத்திய பக்கிங்காம் கால்வாய், தெற்கு பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நல்லா, அடையாறு, விருகம்பாக்கம், அரும்பாக்கம் ஆகிய 12 நீர்ப்பிடிப்புப் பகுதிகளுக்குப் பணி ஆணைகள் வழங்கப்பட்டுப் பணிகள் தற்போது நடைபெறுகின்றன.

மெரினா அழகுபடுத்தும் திட்டத்தின்கீழ் நடைபாதையைச் சுத்தம் செய்வதற்கு, அழுக்கைத் தேய்த்து சுத்தப்படுத்தும் இயந்திரம், புல்தரையைச் சமப்படுத்துவதற்கான உபகரணம், மெரினா கடற்கரையில் முதன்முதலாக மணற்பரப்பில் மணலை ஜலித்து சுத்தம் செய்வதற்கான இயந்திரம், மெரினா கடற்கரையின் நடைபாதையைச் சுத்தம் செய்வதற்கு அமர்ந்து இயக்கும் சிறிய வகையிலான 2 இயந்திரப் பெருக்கிகள் ஆகியன கொள்முதல் செய்யப்பட்டு மெரினா கடற்கரைப்பகுதி எழிலூட்டும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

(தொடர்ச்சி நாளை)

அன்புள்ள, மு.க. 18-3-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 80–88. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 45-இல் மேலும் கடிதங்கள்