அடக்கம்

முரசொலி · தொகுதி 45 · கடிதம் 3543

முரசொலி கடிதங்கள் · 3543

நகராட்சி நிர்வாகத் துறையின் ஐந்தாண்டு சாதனைகள்!

நாள் 17.3.2011சுமார் 9 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3543. நகராட்சி நிர்வாகத் துறையின் ஐந்தாண்டு சாதனைகள்!

உடன்பிறப்பே,

திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்கும் காலங்களிலெல்லாம் உருவாக்கிச் செயல்படுத்திவரும் திட்டங்கள் மூலம் ஒட்டு மொத்த தமிழகமும், பல்வேறு துறைகளிலும் - பல்வேறு வகையிலும் வளர்ச்சிபெற்று மக்களின் வாழ்க்கைத் தரம் வெகுவாக உயர்ந்து வருவதைக் கண்டு நடுநிலையாளர்கள் எல்லோரும் இந்த அரசைப் பாராட்டி வருகின்றனர் என்பதை நீ அறிவாய். கழக அரசு திட்டங்கள் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் குறிப்பாக நகர்ப்புறப் பகுதிகள் கடந்த ஐந்தாண்டுகளில் அடைந்துள்ள முன்னேற்றங்களை இந்தக் கடிதத்தின் வாயிலாக உனக்கும் தமிழகமக்களுக்கும் தெரிவித்திட விரும்புகிறேன்.

உள்ளாட்சித் தேர்தல்

2006-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 மாநகராட்சிகள் மற்றும் 152 நகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 2 பெண்கள் உட்பட 6 மாநகராட்சி மேயர்கள், 34 பெண்கள் உட்பட 102 நகரமன்றத் தலைவர்கள், 17 பெண்கள் உட்பட 50 மூன்றாம் நிலை நகராட்சிகளின் நகரமன்றத் தலைவர்கள், 107 பெண்கள் உட்பட 319 மாநகராட்சி உறுப்பினர்கள், 1132 பெண்கள் உட்பட 3392 நகராட்சி உறுப்பினர்கள்

329 பெண்கள் உட்பட 987 மூன்றாம் நிலை நகராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 4855 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி நகராட்சிகள் மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது 4 மேயர், 34 நகராட்சித் தலைவர்கள் உட்பட 1621 பேர் மகளிர் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பேற்றுள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பரவலாக்கம்

உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கூடுதல் பொறுப்புகள், அதிகாரங்கள் வழங்குவது குறித்து விரிவாக ஆராய்ந்து, தக்க பரிந்துரைகள் அளிக்க ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் தலைமையில் வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டு; அக்குழு 10.12.2007 அன்று அரசுக்கு அளித்த 68 பரிந்துரைகளில் 42 பரிந்துரைகளுக்கு உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. ஏனைய பரிந்துரைகள் பல்வேறு நிலைகளில் பரிசீலனையில் உள்ளன.

நிர்வாக அனுமதி மற்றும் தொழில்நுட்ப அனுமதி தொடர்பான வரம்பு உயர்வு

நகராட்சி அமைப்புகள் திட்டங்களை விரைந்து செயல்படுத்திட உதவும் வகையில் அரசு தனது 30.1.2008 நாளிட்ட அரசாணைப்படி, சிறப்பு நிலை நகராட்சிகள் நிர்வாக அனுமதி வழங்கும் வரம்பு 10 இலட்சம் ரூபாயிலிருந்து 40 இலட்சம் ரூபாயாகவும்; தேர்வு நிலை நகராட்சிகள் நிர்வாக அனுமதி வழங்கும் வரம்பு 10 இலட்சம் ரூபாயிலிருந்து 35 இலட்சம் ரூபாயாகவும்; முதல் நிலை நகராட்சிகள் நிர்வாக அனுமதி வழங்கும் வரம்பு 7 இலட்சம் ரூபாயிலிருந்து 30 இலட்சம் ரூபாயாகவும்; இரண்டாம் நிலை நகராட்சிகள் நிர்வாக அனுமதி வழங்கும் வரம்பு 5 இலட்சம் ரூபாயிலிருந்து 25 இலட்சம் ரூபாயாகவும்; மூன்றாம் நிலை நகராட்சிகள் நிர்வாக அனுமதி வழங்கும் வரம்பு 2 இலட்சம் ரூபாயிலிருந்து 15 இலட்சம் ரூபாயாகவும்; மண்டல நிர்வாக இயக்குநர் நிர்வாக அனுமதி வழங்கும் வரம்பு 40 இலட்சம் ரூபாயிலிருந்து 50 இலட்சம் ரூபாயாகவும்; நகராட்சி நிர்வாக ஆணையர் நிர்வாக அனுமதி வழங்கும் வரம்பு 1 கோடி ரூபாயிலிருந்து 5 கோடி ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாநகராட்சிகளைப் பொறுத்தவரையில் ரூ.1 கோடிக்கு மேல் ரூ.5 கோடி வரையுள்ள பணிகளுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தால் நிர்வாக அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பது விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்று, நகராட்சி நிர்வாக ஆணையராகக் கண்காணிப்புப் பொறியாளர் வழங்கும் தொழில்நுட்ப அனுமதி வரம்பு பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளருக்கு உள்ள வரம்பு நீட்டிப்புடன்; மாநகராட்சிகள் நகரப் பொறியாளர்களின் அனுமதி வரம்பு 50 இலட்சம் ரூபாயிலிருந்து 75 இலட்சம் ரூபாயாகவும்; மண்டல செயற்பொறியாளரின் அனுமதி வரம்பு 30 இலட்சம் ரூபாயிலிருந்து 50 இலட்சம் ரூபாயாகவும்; செயற்பொறியாளர் - நகராட்சிப் பொறியாளர் நிலை-1 அனுமதி வரம்பு 30 இலட்சம் ரூபாயிலிருந்து 40 இலட்சம் ரூபாயாகவும்; உதவி செயற்பொறியாளர் - நகராட்சிப் பொறியாளர் நிலை-2 அனுமதி வரம்பு 15 இலட்சம் ரூபாயிலிருந்து 25 இலட்சம் ரூபாயாகவும்; உதவி பொறியாளர் - நகராட்சிப் பொறியாளர் நிலை-3 அனுமதி வரம்பு 5 இலட்சம் ரூபாயிலிருந்து 10 இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் பணிகளுக்கு விரைந்து அவரவர் மட்டத்தில் ஒப்புதல் வழங்குவது எளிமையாக்கப்பட்டுள்ளது.

புதிய மாநகராட்சிகள் உருவாக்கம்

1.1.2008 முதல் திருப்பூர் மற்றும் ஈரோடு நகராட்சிகளும்; 1.8.2008 முதல் வேலூர், தூத்துக்குடி நகராட்சிகளும் புதிய மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டன.

இந்த நான்கு மாநகராட்சிகளிலும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட ஒவ்வொரு மாநகராட்சிக்கும் தலா 5 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டது. வேலூர் மாநகராட்சியில் 14 கோடியே 44 இலட்சம் ரூபாயிலும், தூத்துக்குடி மாநகராட்சியில் 16 கோடியே 49 இலட்சம் ரூபாயிலும் உட்கட்டமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

நகராட்சிகள் தரம் உயர்வு

நகராட்சிகள் மக்கள் தொகை - ஆண்டு வருமானம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன. அந்தவகையில், 10 கோடி ரூபாய்க்குமேல் ஆண்டு வருமானமுள்ள 22 நகராட்சிகள் சிறப்பு நிலை நகராட்சிகள் எனவும், 6 கோடி ரூபாய்க்கு மேல் 10 கோடி ரூபாய் வரை வருமானமுள்ள 35 நகராட்சிகள் தேர்வுநிலை நகராட்சிகள் என்றும், 4 கோடி ரூபாய்க்கு மேல் 6 கோடி ரூபாய் வரை வருமானமுள்ள 36 நகராட்சிகள் முதல் நிலை நகராட்சிகள்

என்றும், 4 கோடி ரூபாய்க்குக்கீழ் வருமானமுள்ள 44 நகராட்சிகள் இரண்டாம் நிலை நகராட்சிகள் என்றும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள 13 நகராட்சிகள் மூன்றாம் நிலை நகராட்சிகள் என்றும் மொத்தம் 150 நகராட்சிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் போதிய நிதியுதவிகள் பெற்றுப் பணிகள் மேற்கொள்ளும் திறன் அதிகரித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகள் விரிவாக்கம்

திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய மாநகராட்சிகளிலும், புதுக்கோட்டை, ஓசூர், நாமக்கல், நாகர்கோயில், காஞ்சிபுரம், கரூர், திருப்பத்தூர், விழுப்புரம் ஆகிய நகராட்சிகளிலும் எல்லைகளை விரிவாக்கம் செய்திடவும், அதன் காரணமாக இணைக்கப்படவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேவையான கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

உள்கட்டமைப்பு மேம்பாடு

மத்திய அரசின் நிதி உதவி பெறும் திட்டங்கள்

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டம்

பெருநகரங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டம் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய மூன்று மாநகரங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மதுரை மாநகராட்சி

மதுரை மாநகராட்சியில் 623 கோடியே 91 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் வைகை குடிநீர் மேம்பாட்டுத் திட்டம், திடக்கழிவு மேலாண்மை, மழை நீர் வடிகால் அமைத்தல், பாதாளச் சாக்கடைத் திட்டம், வைகை ஆற்றின் குறுக்கே மூன்று இடங்களில் தடுப்பணைகள் கட்டுதல் ஆகிய 5 பணிகளில் இரண்டாம் வைகை குடிநீர் அபிவிருத்தித் திட்டப்பணி முடிவடைந்துள்ளது. இதர நான்கு திட்டங்களும் முன்னேற்றத்தில் உள்ளன.

மதுரை மாநகருக்கு அருகிலுள்ள நகர்ப்புற தொகுப்புப் பகுதி

மதுரை மாநகருக்கு அருகிலுள்ள நகராட்சிகளுக்கு 146 கோடியே 62 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனுமதிக்கப்பட்டதில் திருப்பரங்குன்றம் குடிநீர்த் திட்டப்பணிகள் முடிவடைந்துள்ளன; திருமங்கலம், அவனியாபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.

கோயம்புத்தூர் மாநகராட்சி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை, இரண்டாவது பில்லூர் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம், மழைநீர் வடிகால் அமைத்தல் ஆகிய 4 திட்டங்கள் 767 கோடியே 38 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் அனுமதியளிக்கப்பட்டு முன்னேற்றத்தில் உள்ளன.

திடக்கழிவு நிரப்புமிடம்

சென்னைப் பெருநகருக்கு அருகிலுள்ள நகர்ப்புறத் தொகுப்புப் பகுதி

சென்னைப் பெருநகருக்கு அருகிலுள்ள நகராட்சிகளுக்கு 13 திட்டங்கள் ரூ.1180.26 கோடி மதிப்பீட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

தாம்பரம், ஆவடி, மதுரவாயல், உள்ளகரம்-புழுதிவாக்கம், திருவொற்றியூர், ஆலந்தூர், அம்பத்தூர் ஆகிய 7 குடிநீர்த் திட்டப் பணிகள் 600 கோடியே 59 இலட்ச ரூபாய் மதிப்பீட்டிலும்; உள்ளகரம்-புழுதிவாக்கம், ஆவடி, அம்பத்தூர், மதுரவாயல் மற்றும் தாம்பரம் ஆகிய 5 பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் 535 கோடியே 46 இலட்ச ரூபாய் மதிப்பீட்டிலும், பல்லவபுரத்தில் ஒரு திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் ரூ.44.21 கோடி மதிப்பீட்டிலும் அனுமதிக்கப்பட்டு, தாம்பரம் நகராட்சி குடிநீர்த் திட்டப்பணிகள் முடிவுற்றுள்ளன; மீதமுள்ள 12 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கான நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்

நகர்ப்புற உட்கட்டமைப்பு மற்றும் ஆளுமைத் திட்டத்தில் சேர்க்கப்படாத அனைத்து நகரங்களிலும் குடிநீர் வழங்கல், மழைநீர்

வடிகால், திடக்கழிவு மேலாண்மை, சாலைகளை மேம்படுத்துதல், பொது மக்கள் தனியார் பங்கேற்புத் திட்டத்தின்கீழ் வாகனங்கள் நிறுத்துமிடங்கள், புராதனப் பகுதிகளின் மேம்பாடு, நீர் நிலைகளைப் பேணுதல் போன்ற நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களில் 497 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 475 பணிகள் முடிவடைந்துள்ளன; மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

சாலை மற்றும் மழை நீர் வடிகால்

16 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 467 சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் ரூ.69.413 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு 453 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இவற்றுள், மண்டபத்தில் 2 பாலங்கள் 2 கோடியே 20 இலட்ச ரூபாய் மதிப்பீட்டிலும், ஈரோடு மாநகராட்சி பேருந்து நிலையத்தில் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் நிறைவேற்றப்பட்டு; கரூர் நகராட்சியில் ரெட்டை வாய்க்கால் புனரமைக்கும் பணி 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு, முன்னேற்றத்திலுள்ளது.

நகராட்சி நிர்வாக இயக்குநரகம் மூலம் ரூ.436.37 கோடி திட்ட மதிப்பீட்டில் 58 திட்டங்களாக 31,603 குடியிருப்பு அலகுகள் கட்ட அனுமதியளிக்கப்பட்டு; 9,533 அலகுகள் கட்டி முடிக்கப்பட்டு, 13,534 அலகுகள் முன்னேற்ற நிலையில் உள்ளன. எஞ்சியுள்ள பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளன. பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலமாக ரூ.59.44 கோடி திட்ட மதிப்பீட்டில் 4,542 குடியிருப்பு அலகுகள் கட்ட 25 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, 2,576 அலகுகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டன. 1,966 அலகுகள் முன்னேற்ற நிலையில் உள்ளன. இத்திட்டத்தின்கீழ் நகராட்சி நிர்வாக இயக்குநரகக் கட்டுப்பாட்டில் உள்ள 6 உள்ளாட்சி அமைப்புகளான குமாரபாளையம், தாம்புரி, திருப்பத்தூர், சீர்காழி, நாகப்பட்டினம், கொடைக்கானல் ஆகிய நகராட்சிகளில் குடியிருப்புகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன.

நவீன எரிவாயு தகன மேடைகள் மற்றும் நவீன இறைச்சிக் கூடங்கள்

31.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 61 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 30 பணிகள் முடிக்கப்பட்டு; மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

இறைச்சிக்கூடங்களை நவீனப்படுத்த 26 கோடியே 20 இலட்ச ரூபாய்ச் செலவில் 120 நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில், 11 நகராட்சிகளில் பணிகள் முடிவடைந்துள்ளன. 7 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இடமின்மை மற்றும் மற்றும் பிற காரணங்களால் பணிகள் கைவிடப்பட்டுள்ளன. எஞ்சிய நகராட்சிகளில் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

தாய் சேய் நல விடுதிகள்

2007-2008இல் 42 நகராட்சிகளில் 45 தாய் சேய் நல விடுதிகள் கட்ட ரூ.2.53 கோடி மானியமாக அனுமதிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன. 2008-2009இல் 19 நகராட்சிகளில் 20 தாய் சேய் நல விடுதிகளை மேம்படுத்த ரூ.2.00 கோடி அனுமதிக்கப்பட்டு, திண்டுக்கல் நகராட்சியைத் தவிர மற்ற அனைத்து நகராட்சிகளிலும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சி, நகராட்சிகளில் நவீன பேருந்து நிலையங்கள்

கிருஷ்ணகிரி, இராஜபாளையம், உள்ளகரம்-புழுதிவாக்கம், நெல்லிக்குப்பம், கொடைக்கானல், அனகாபுத்தூர், பூவிருந்த வல்லி (பகுதி-1), கோவில்பட்டி, பொள்ளாச்சி, பழனி, நாகர் கோவில் (வடசேரி), திருவண்ணாமலை, வெள்ளக்கோவில், சத்தியமங்கலம், ஓசூர், தேவக்கோட்டை, வந்தவாசி, ஈரோடு, கோயம்புத்தூர் மாநகராட்சி (மேட்டுப்பாளையம் சாலை) ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ரூ.53.67 கோடி செலவில் பேருந்து நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

மறைமலைநகர், குழித்துறை, பூவிருந்த வல்லி (பகுதி2), தாம்பரம், மணலி, வாணியம்பாடி ஆகிய நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

சாத்தூர், திண்டிவனம், திண்டுக்கல், ஆரணி, நாகர்கோவில், தேனி, திருவாரூர், சிவகங்கை போன்ற நகராட்சிகளில் ரூ.29.50

கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளும், மதுராந்தகம், செங்கற்பட்டு, கொமாரப் பாளையம், இராசிபுரம், மேட்டூர், போடிநாயக்கனூர், காரைக்குடி, இராமநாதபுரம், பத்மநாபபுரம், அருப்புக்கோட்டை, திருப்பூர் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ரூ.6.97 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையங்களை மேம்படுத்தும் பணிகளும் நடைபெறுகின்றன.

பேரூராட்சிகளில் பேருந்து நிலையங்கள்

2010-11ம் ஆண்டு 22 பேரூராட்சிகளில் உள்ள பேருந்து நிலையங்களில் பழுதடைந்த ஓடுதளங்கள் ரூ.350.00 இலட்சம் செலவில் சிமெண்ட் கான்கிரீட் தளங்களாக மாற்றப்பட்டுள்ளன. திருப்பெரும்புதூர், ஆலங்காயம், சேத்துப்பட்டு, சங்ககிரி, காங்கேயம், பெருந்துறை வடலூர், செஞ்சி, திருவையாறு, வேளாங்கண்ணி, தாரங்கம்பாடி, வைத்தீஸ்வரன் கோவில், உடையார்பாளையம், ஒட்டன்சத்திரம், நான்குநேரி, திசையன்விளை, திருச்செந்தூர், திற்பரப்பு வாழப்பாடி போன்ற 49 பேரூராட்சிகளில் 19 கோடியே 94 இலட்ச ரூபாய்ச் செலவில் நவீன பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மண்சாலைகளை தார் - சிமெண்ட் சாலைகளாக மாற்றுதல்

2006 முதல் 2010வரை ரூ.241.56 கோடி செலவில் பல்வேறு திட்டங்களின் கீழ் 1723.255 கிலோ மீட்டர் சாலைகள் தார் மற்றும் சிமெண்ட் சாலைகளாக மாற்றப்பட்டன.

2010-11ம் ஆண்டில் இத்திட்டத்தின்கீழ் ரூ.60.00 கோடி மதிப்பீட்டில் மண்சாலைகளைத் தார் மற்றும் சிமெண்ட் சாலைகளாக மாற்ற உத்தேசிக்கப்பட்ட பணிகளில், இதுவரை ரூ.6.00 கோடி மதிப்பீட்டில் 60 கிலோ மீட்டர் நீள மண்சாலைகள் தார் மற்றும் சிமெண்ட் சாலைகளாக மாற்றும் பணிகளின் செயலாக்கம் பல்வேறு நிலைகளில் உள்ளன.

மழையினால் பாதிக்கப்பட்ட சாலைகளைப் பழுதுபார்த்தல்

2006 முதல் 2009வரை நான்கு ஆண்டுகளில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிப்படைந்த சாலைகள் ரூ.68.62 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ளன.

பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம்

நகர்ப்புற சுய வேலை வாய்ப்புத்திட்டத்தின்கீழ் ரூ.21.81 கோடி நிதியுதவி வழங்கப்பட்டு, 18,615 பேர் சிறு தொழில்கள்

தொடங்கிப் பயன் அடைந்துள்ளனர். ரூ.29.60 கோடி செலவில் 61,403 பேருக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. நகர்ப்புறப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.34.83 கோடி செலவில் வறுமைக் கோட்டின்கீழ் உள்ள 4,282 பேர் பயன் அடைந்துள்ளனர். சிக்கன மற்றும் நாணய சங்கத்தின்கீழ் ரூ.20.83 கோடி சுழல் நிதியாக வழங்கப்பட்டு 2,44,833 பேர் பயனடைந்துள்ளனர்.

நகர்ப்புற கூலி வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் ரூ.7.37 கோடி செலவில் 11,004 பேர் பயனடைந்துள்ளனர்.

பன்னாட்டுத் தரச் சான்றிதழ்

தமிழ்நாட்டிலுள்ள நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் சீரிய நிர்வாகமுறை, சிறந்த மேலாண்மை அமைப்பு ஆகியவற்றிற்காக நகராட்சி நிர்வாக இயக்குநரகத்திற்கு 2008-ஆம் ஆண்டில் பன்னாட்டுத் தரச் சான்றிதழ் ISO 9000-2000 வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி - திருமண மண்டபத்திற்கு 16.7.2007 அன்றும்; மதுரை மாநகராட்சி - ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு 17.7.2007 அன்றும்; திண்டுக்கல் நகராட்சி - நவீன இறைச்சிக் கூடத்திற்கு 29.9.2008 அன்றும்; திருச்சிராப்பள்ளி மாநகராட்சி - நவீன எரிவாயு தகன மேடைக்கு 14.2.2009 அன்றும் பன்னாட்டுத் தரச் சான்றிதழ் வழங்கும் நிறுவனம் (ISO) 9001:2001 சான்றிதழ் வழங்கியுள்ளது.

சிறப்புத் திட்டங்கள்

கல்வி உதவித் தொகைத் திட்டம் - நகராட்சி - மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஊக்குவித்தல் திட்டம்

நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்று 10வது மற்றும் 12வது பள்ளி இறுதித் தேர்வுகளில் தேர்ச்சிபெறும் மாணவர்களில் முதலாவதாக வரும் 25 மாணவர்களுக்கு தலா ரூ.10,000/- ரொக்கப்பரிசும் ஒரு தகுதிச் சான்றிதழும் வழங்கும் புதிய திட்டமும்; மேலும், 12வது வகுப்புப்பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பரிசுபெற்ற 25 மாணவர்களில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய

மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் மேற்படிப்பினைப் படித்திட கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டமும் 2007-2008இல் அறிமுகப்படுத்தப்பட்டது; 2008-09ம் ஆண்டில் 10-வது மற்றும் 12-வது வகுப்பில் முதலாவதாகத் தேர்ச்சிபெற்ற 26 மாணவர்களுக்கு ரூ.10,000/- பரிசுத் தொகையும் தகுதிச் சான்றிதழும் வழங்கப்பட்டது. 12-வது வகுப்புத் தேர்வில் தேர்ச்சியடைந்து பரிசுபெற்ற மாணவ மாணவியரில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய 65 மாணவர்கள் இக்கல்வி உதவித் தொகைத் திட்டத்தில் பயன் பெற்று மேற்படிப்பு படிக்க வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இதன்மூலம் நகராட்சி - மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். சென்ற கல்வியாண்டில், திருநெல்வேலி மாநகராட்சிப் பள்ளியில் பயின்ற மாணவி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 495/500 மதிப்பெண்கள் குவித்து மாநில அளவில் முதலிடம் பெற்று நகராட்சிப் பள்ளிகளின் கல்வித்தரம் உயர்ந்துள்ளமைக்குச் சான்றாகத் திகழ்ந்தார்.

அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன் முறை செய்தல்

தமிழ்நாட்டில், சென்னை மாநகராட்சி தவிர மற்ற மாநகராட்சிகளில் 1663 அனுமதியற்ற மனைப்பிரிவுகளும் 86,393 அனுமதியற்ற மனைகளும்;

நகராட்சிப் பகுதிகளில் 2921 அனுமதியற்ற மனைப்பிரிவுகளும் 1,20,488 அனுமதியற்ற மனைகளுமாக மொத்தம் 4584 அனுமதியற்ற மனைப்பிரிவுகளும், 2,06,882 அனுமதியற்ற மனைகளும் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டது.

அவற்றுள் சென்னை தவிர மற்ற மாநகராட்சிப் பகுதிகளில் சதுர அடி ஒன்றுக்கு ரூ.5/-ம் மற்ற நகராட்சிப் பகுதிகளில் சதுர அடி ஒன்றுக்கு ரூ.2-ம் பெற்றுக்கொண்டு அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை 31.12.06 வரை வரன்முறைப்படுத்தலாமென 25.7.2006 அன்று அரசு ஆணையிட்டது. இந்தக் கால வரம்பு 31.12.2007 வரையும், பின்னர் 30.6.2008 வரையும் நீட்டிக்கப்பட்டு;

அனைத்து மாநகராட்சிகளிலும் இதுவரை 69,746 மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளும், நகராட்சிகளில் 53,947 மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளும் வரன்முறைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன் மூலம் அரசுக்கு 97.94 கோடி ரூபாய் வரன்முறைக் கட்டணமாகக் கிடைத்தது.

25.7.2006 நாள் ஆணையின்படி பேரூராட்சிப் பகுதிகளிலுள்ள அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவு மற்றும் மனைகளைச் சதுர அடிக்கு ரூ.1/-வீதம் செலுத்திக் கொள்ள முதலில் 31.12.2006 வரையும், பின்னர் படிப்படியாக நீட்டிக்கப்பட்டு, இதுவரை 64,147 அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் 30,900 மனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் அரசுக்கு ரூ.7.70 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

சிறப்புத் திட்டங்கள்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - கோவை மேம்பாட்டுத் திட்டங்கள்

கோயம்புத்தூரில் 2010ம் ஆண்டு ஜூன் 23-27 வரை நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினையொட்டி, அங்கு அரசு நிதி உட்பட பல்வேறு துறைகள் மூலமாக மொத்தம் 65 கோடியே 96 இலட்சத்து 59 ஆயிரம் ரூபாய்ச் செலவில் பல உட்கட்டமைப்பு மேம்பாட்டு வசதிகள் செய்யப்பட்டன.

மாநாட்டு நிறைவுவிழாவில் அறிவிக்கப்பட்டபடி, 165 ஏக்கர் நிலப்பரப்பில் செம்மொழிப் பூங்காவும்; காந்திபுரத்தில், 1 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேலான மேம்பாலமும் அமைக்கப்பட அடிக்கல் நாட்டப்பட்டுப் பணிகள் தொடங்கியுள்ளன.

அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா - காஞ்சிபுரம் நகர் மேம்பாட்டுத் திட்டம்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி 25, 26 செப்டம்பர் 2009-ல் காஞ்சிபுரம் நகராட்சிக்கு சிறப்பு ஒதுக்கீடு செய்து சில வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்ததையொட்டி 6 கோடியே 34 இலட்ச ரூபாய் செலவில் 11 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

(தொடர்ச்சி நாளை)

அன்புள்ள, மு.க. 17-3-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 69–79. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 45-இல் மேலும் கடிதங்கள்