முரசொலி கடிதங்கள் · 3590
விரைந்தெழுவீர்; வெற்றிக்கனி பறித்திட!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3590. விரைந்தெழுவீர்; வெற்றிக்கனி பறித்திட!
உடன்பிறப்பே,
உள்ளாட்சி மன்றத் தேர்தல்களுக்கான நாட்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன! அக்டோபர் திங்கள் 17 மற்றும் 19ஆம் தேதிகளில் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. நமது கழகத்தின் வேட்பாளர்களுக்கான முதல் பட்டியல் அறிவிக்கப்பட்டு விட்டது. பொதுவாக அரசின் சார்பில் தேர்தல் நாளுக்கான அறிவிக்கை வெளிவந்து, அதற்கு ஒரு சில நாட்களுக்குப் பிறகுதான் வேட்பு மனு தாக்கலுக்கான நாள் தொடங்கும். ஆனால் இந்த முறை தேர்தல் அறிவிக்கை வெளிவந்த அடுத்த நாளே வேட்பு மனு தாக்கல் செய்வது தொடங்கி விட்டது. அது மாத்திரமல்ல; நான் ஏற்கனவே தெரிவித்தவாறு, இந்தத் தேர்தலில் எந்தெந்த தொகுதிகள் பொதுத் தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் பெண்களுக்கான தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் தனித் தொகுதிகள் என்ற அடிப்படை விவரங்கள் எதுவும் எதிர்க்கட்சிகளுக்குத் தெரிவிக்கப்படவில்லை. “சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணம் நின்று விடுமாம்”! ஆளுங்கட்சியின் எதிர்பார்ப்பு இது! ஆனால் தவறிப் போய், தங்கள் கட்சியின் சார்பாக வேட்பாளர்களின் பட்டியலை, சாமர்த்தியம் என்று நினைத்துக் கொண்டு எப்போதும் அவர் காட்டுகின்ற அவசரம் காரணமாக ஜெயலலிதா வெளியிட்டு விட்டார். பொதுவாக நடைபெற வேண்டிய தேர்தலில், இவ்வாறு ஒரு கட்சிக்கு மட்டும் முன்கூட்டியே தகவலைத் தருவது ஜனநாயகமா? இதற்காகவே இந்த ஆட்சியினர் மீது ஒரு வழக்கு தொடரலாம்! ஆட்சியினர் இவ்வாறு தொகுதிகளை மறைத்து வைத்த காரணத்தால், இதுவரை பொதுத் தொகுதியாக இருந்து, பலரும் அங்கே போட்டியிட எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று அந்தத் தொகுதியை தனித் தொகுதி என்று அறிவித்த காரணத்தால் - அங்கே போட்டியிடுவதற்கு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில்
அரசியல் கட்சிகளுக்கெல்லாம் நெருக்கடி. அது போலவே திடீரென்று பெண்கள் தொகுதியாக மாற்றப்பட்ட இடங்களில், இரண்டொரு நாட்களில் பெண் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசரமும் ஏற்பட்டது. ஆனால் ஆளுங்கட்சிக்கு முன்கூட்டியே எந்தெந்த தொகுதிகள் யார் யாருக்கு என்று தெரிவிக்கப்பட்டுவிட்ட காரணத்தால், ஓட்டப் பந்தயத்தில் ஓடுவதற்குத் தயாராகும்போது பந்தய நெறிமுறைகளை மீறி ஒரு சிலரை மட்டும் மற்றவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னால் கொண்டு போய் நிறுத்துவதைப் போல நிறுத்தி விட்டிருக்கிறார்கள்.
இதைப்பற்றி நான் கேள்வி எழுப்பிய பிறகு, அதற்குப் பதிலளிக்க வேண்டிய அரசின் சார்பில் எந்தவிதமான பதிலும் சொல்ல இயலாத நிலையில், செய்தியாளர்களை மாநில தேர்தல் ஆணையர் சந்தித்த போது, இதுபற்றிய கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பிய நேரத்தில், எந்தெந்த தொகுதிகள் யார் யாருக்கு என்று தேர்வு செய்து அறிவிக்க வேண்டியது என் பணி இல்லை என்று மட்டுமே சொல்லியிருக்கிறாரே தவிர; என்ன காரணத்தினால் இதுவரை எவையெவை யார் யாருக்கான தொகுதிகள் என்று அறிவிக்கப்படவில்லை என்பது பற்றி அவர் வாயே திறக்கவில்லை. ஏனென்றால் அவ்வாறு செய்தது அரசின் தவறு என்று அவருடைய மனச்சாட்சியே சொல்லியிருக்கிறது. எனவே அந்தப் பணி தன்னுடையது அல்ல என்று மட்டுமே மறுத்திருக்கிறார். எப்படியோ ஓரளவிற்கு நாமாகவே நமது முயற்சியில் தொகுதிகளைத் தெரிந்து கொண்டு வேட்பாளர்களை அறிவித்து விட்டோம்.
மாநிலத் தேர்தல் ஆணையர் செய்தியாளர்களிடம் கூறும்போது வேட்பு மனு வாங்குகின்ற இடத்திலே அது யாருக்கான தொகுதி என்று ஒட்டப்பட்டிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு வேட்பாளரும் தாங்கள் வேட்பு மனு வாங்க வேண்டிய இடத்திற்குச் சென்று, அங்கே நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதைப் பார்த்து தெரிந்துகொண்டு அதற்குப் பிறகு வேட்பு மனுக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாம்! வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான தேதி 22-9-2011 முதல் தொடக்கம் என்ற போதிலும், அந்தத் தேதியில் சென்று வேட்பு மனுக்களைக் கேட்டபோது, அந்த மனுக்கள் தேர்தல் ஆணையத்திலிருந்து
இதுவரை வந்து சேரவில்லை என்ற பதில்களே பல இடங்களில் கிடைத்துள்ளன. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடும் “தினத்தந்தி” நாளிதழிலேயே முதல் பக்கத்தில், “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறு நாளே மனு தாக்கல் தொடங்கியதால், அதற்கான முன் ஏற்பாட்டில் யாரும் இல்லை, மேலும் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்களும் நேற்று மாலைதான் அறிவிக்கப்பட்டதால், எங்கு சென்று வேட்பு மனு தாக்கல் செய்வது என்று தெரியாமல் பலர் தவித்தனர்” என்று வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற எந்த உள்ளாட்சி மன்றத் தேர்தல்களிலும் இப்படி நடைபெறவில்லை. அரசின் இந்தச் செயல்களால், பல தொகுதிகள் மாற்றப்பட்டுவிட்ட நிலையில் புதிய வேட்பாளர்களைத் தேர்வு செய்து அறிவித்திருக்கிறோம். எனவே பல பேருக்கு தாங்கள் வேட்பாளராக நிற்க முடியவில்லையே என்று வருத்தம் ஏற்பட்டிருக்கலாம். பல பேர் திடீரென்று வேட்பாளராக நிற்க வேண்டிய நிலை உண்டாகியிருக்கலாம். அதையெல்லாம் எண்ணிக் கொண்டிருக்காமல், தேர்தலுக்குப் பிரச்சாரம் செய்ய, வாக்குகளைக் கேட்க, வீடு வீடாகச் சென்று மக்களிடம் முறையிட நேரம் இல்லாமல் இருக்கலாம், எனவே கழக உடன்பிறப்புகள் உடனடியாக தங்கள் பணிகளைத் தொடங்கிட வேண்டும். இது உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் என்பதால் தேர்தல் பிரச்சாரத்திற்காக பெரிய கூட்டம் என்றெல்லாம் நேரத்தைச் செலவழிக்காமல், வீட்டிற்கு வீடு சென்று வாக்குகளைக் கேட்க வேண்டும்.
தி.மு. கழகம் உள்ளூர் பிரச்சினைகளில் எந்த அளவிற்கு கடந்த காலங்களில் செயல்பட்டுள்ளது என்பதையெல்லாம் வாக்காளர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். கடந்தமுறை அந்தப் பொறுப்பிலே இருந்தவர்களுக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்காமல் வேறொருவருக்கு வாய்ப்பு சென்றிருக்கலாம். அவர்கள் தங்களுக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று எண்ணிவிடக் கூடாது. வேறு சில இடங்களில் கடந்த முறை வாய்ப்பு பெற்றவர்களுக்கே இந்த முறையும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கலாம். ஒவ்வொரு முறையும் இவருக்கே வாய்ப்பா என்றும் கோபப்படத் தேவையில்லை.
உடன்பிறப்பே, இந்த முறை உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் நாம் ஆட்சியினரை எதிர்த்துப் போட்டியிடவிருக்கிறோம். ஆட்சியினர் என்றால், கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மிருக பலத்தோடு வெற்றி பெற்று, கர்வத்தின் உச்சியில் உள்ள ஒரு கட்சியை எதிர்த்துப் போட்டியிடுகிறோம். நமக்குள்ளே எழுந்த போட்டியின் காரணமாகவும் - நம்மவர்கள் சிலர் நடந்து கொண்ட செயல்பாடுகளின் காரணமாகவும் மிகப்பெரிய தோல்வியை சட்டமன்றத் தேர்தலில் நாம் அடைந்தோம். இந்த அரசியல் நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, சட்டமன்றத்திலே ஆளுங்கட்சி வரிசையிலே உள்ள முதலமைச்சரும் மற்ற அமைச்சர்களும் நம்மைப் பற்றி இழித்தும் பழித்தும் என்னென்ன பேசுகிறார்கள் என்பதற்கான ஒருசில உதாரணங்களை நான் எழுதியிருக்கிறேன். அவற்றையெல்லாம் எடுத்து ஒரு முறை படித்துப் பார்! சட்டமன்றத்திலே நமது கட்சியின் உறுப்பினர்கள் உள்ளே அமர்ந்து நேர்மையான ஜனநாயகப் பணியாற்றுவதற்குக் கூட அனுமதிக்காமல் ஆளுங்கட்சியினர் என்னென்னவோ பேசி, நம்மை ஏசி, வெளியே அனுப்புவதிலேயே குறியாக இருந்ததையெல்லாம் யோசித்துப்பார்! இந்தச் சூழ்நிலைகளிலிருந்தெல்லாம் நாம் எழுந்து நின்று வழக்கம் போல் மக்கள் பணியாற்றிட வேண்டுமென்றால், நமக்குள்ள அரிய வாய்ப்பாக வந்துள்ள இந்த உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை முறையாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் நாம் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காகவே ஆளுங்கட்சி எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல், நமது கழக முன்னணியினரையெல்லாம் தேடிப் பிடித்து பொய் வழக்குகளைச் சுமத்தி சிறையிலே தள்ளி வேடிக்கை பார்க்கின்றது. ஒரு வழக்கில் நீதிமன்றம் சென்று ஜாமீன் பெற்றால், அதன்படி சிறையிலிருந்து வெளியே வருவதற்கே விடாமல், எங்கேயாவது தேடி, யாரையாவது பிடித்து அவர்களிடம் ஒரு புகார் மனுவினைப் பெற்று, அது உண்மையா, பொய்யா என்பதைப் பற்றி காவல் துறையினர் மூலமாக விசாரணை நடத்தாமல், புகார் வந்தவுடனேயே கைது, சிறைவாசம் என்று ஆளுங்கட்சியினர் அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதையெல்லாம் நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும். தேர்தலில் முன் நின்று பணியாற்ற, உழைக்க கழகத்தைச் சேர்ந்த முன்னணியினர் சிறையிலே இருந்தால், அதற்கடுத்த மட்டத்திலே உள்ள ஏனைய
கழகத்தினர் ஒவ்வொருவரும் தம்மை வேட்பாளராக எண்ணித் தேர்தல் பணிகளிலே ஈடுபட வேண்டும்.
சட்டமன்றத் தேர்தல்களில் பெரு வெற்றி பெற்று, ஆட்சிப் பொறுப்பிலே இருப்பவர்கள், அதைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இந்தத் தேர்தலில் அனைத்து விதமான முறைகேட்டிலும் ஈடுபடக் கூடும். ஏராளமாக பணத்தை வாரி இறைத்து, எப்படியாவது வெற்றி பெற முயற்சிப்பார்கள். பொறுப்பேற்றிருக்கின்ற காரணத்தினால், அவர்கள் மூன்று, நான்கு மாதங்களுக்குள்ளாகவே தங்களுடைய தோழமைக் கட்சிகளையே மதிக்காமல் அவமதித்து அலைக்கழிக்கின்ற செயலிலே ஈடுபட்டிருப்பதையெல்லாம் மக்களுக்குச் சொல்ல வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் பெற்ற பெரு வெற்றியின் காரணமாக இறுமாப்பு கொண்டு, யாரையும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று சர்வாதிகார பாணியிலே பேசுகின்ற நிலையிலே உள்ளவர்களைத் திருத்துவதற்காவது இந்த உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் அவர்களுக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்க நாம் முயற்சிக்க வேண்டும். தப்பித்தவறி அவர்கள் மீண்டும் இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்று விடுவார்களேயானால், பின்னர் நாட்டு மக்களைப் படாதபாடுபடுத்துவார்கள். இப்போதே யாரையும் மதிக்க முன் வராதவர்கள், பின்னர் தம்மைத் தட்டிக் கேட்க நாதியில்லை என்று எப்படிப்பட்ட கொடுமைகளையெல்லாம் கட்டவிழ்த்து விடுவார்கள் என்று கற்பனையே செய்ய முடியாது. கழகத்தின் சார்பில் எஞ்சியிருக்கின்ற முன்னணியினர் மீதும் ஏதாவது பொய் வழக்குகளைப் போடுவதற்கும், பொது மக்களைத் தொடர்ந்து வஞ்சிப்பதற்குமான முயற்சிகளையெல்லாம் மேற்கொள்வார்கள்.
மேலும் ஒரு செய்தியும் நமக்குக் கிடைத்துள்ளது. அதாவது நமது கட்சியின் சார்பில் போட்டியிடுபவர்கள், கடந்த முறை போட்டியிட்டிருந்தால் அவர்கள் தங்கள் தேர்தல் செலவு கணக்குகளைக் காட்டியிருக்க வேண்டும் என்றும், அவ்வாறு காட்டாதவர்களின் வேட்பு மனுக்களையெல்லாம் ரத்து செய்வதற்கான முயற்சியில் மாநில தேர்தல் ஆணையத்தின் உதவியோடு ஆளுங்கட்சியினர் ஈடுபட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே அதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
பத்திரிகைகள், ஊடகங்கள் கண்ணை மூடிக் கொண்டு பத்திரிகா தர்மத்தை பறக்க விட்டு விட்டு ஆளுங்கட்சியை ஆதரிக்கின்றன. ஆளுங்கட்சி சார்பில் மாநகராட்சிமன்ற உறுப்பினர் வேட்பாளர்களின் பட்டியலைக் கூட முழுவதுமாக வெளியிடவும், முதல் பக்கத்தில் வெளியிடவும் தயாராக இருக்கின்ற நாளேடுகள், நாம் அறிவிக்கின்ற வேட்பாளர்களின் பெயர்களை ஏனோதானோவென்று ஏழாம் பக்கத்திலும், எட்டாம் பக்கத்திலும் வெளியிட்டு, எப்படியாவது முதலமைச்சரின் நேர் காணலுக்கான நேரமாவது ஒதுக்கப்படாதா என்று கண் விழித்துக் காத்துக் கிடக்கிறார்கள். இவைகளையெல்லாம் மீறித்தான் நாம் நமது பணிகளையாற்றிட வேண்டும். அந்தப் பணிகளையும் உடனடியாக ஒவ்வொரு கிராமந்தோறும் ஓடோடிச் சென்று ஆற்றிட வேண்டும். நாட்டு நிலைமைகளை வாக்காளர்களிடம் திண்ணை தோறும், தெருக்கள் தோறும் விளக்கிட வேண்டும். இருக்கும் நாட்களோ ஒரு சில; ஆற்ற வேண்டிய பணிகளோ மிகப் பல! உதவாது இனி ஒரு தாமதம், உடனே புறப்படுவீர்! விரைந்தெழுவீர்; வெற்றிக்கனி பறித்திட!
அன்புள்ள, மு.க. 24-9-2011
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 391–396. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.