முரசொலி கடிதங்கள் · 3589
எத்தனை காலமோ; இந்த ஏட்டிக்குப் போட்டி?
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3589. எத்தனை காலமோ; இந்த ஏட்டிக்குப் போட்டி?
உடன்பிறப்பே,
2006ஆம் ஆண்டு தி.மு. கழகத் தேர்தல் அறிக்கையில் சில இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டபோது, அதனைக் கடுமையாக எதிர்த்தவர் ஜெயலலிதா. மக்களை மேலும் ஏழைகளாக்கும் நடவடிக்கைதான் இலவசத் திட்டங்கள் என்று கூறினார். ஆனால் 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை எப்படி இருந்தது என்றால், “ஒண்ணு வாங்கினா ஒண்ணு இலவசம்” என்று கூவினால் எப்படி இருக்குமோ, அதைப் போலத்தான் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இருந்தது என்று 25-3-2011 அன்று “தினமணி” எழுதிய தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலே அறிவித்ததையொட்டியும் - தி.மு. கழக அரசின் திட்டங்களை சற்று விரிவாக்கி செயல்படுத்துவதையொட்டியும் - கழக ஆட்சியில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் வீதம் மாதந்தோறும் 20 கிலோ அரிசி வழங்கப்படும் என்பதை விரிவாக்கி, மாதம் அந்த 20 ரூபாயையும் தர வேண்டியதில்லை, அதையும் நாங்கள் இலவசமாகத் தருகிறோம் என்று கூறி, அதை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள். எனவே கழக அரசின் திட்டத்தை சற்று விரிவுபடுத்திய திட்டம்தான் அத்திட்டம்.
ஏழையெளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு திருமண உதவித் திட்டம் தி.மு. கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம். கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 922 கோடி ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்ட திட்டம் இது. கர்ப்பிணிப் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஆறு மாதங்களுக்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டமும் கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம். அந்தத் திட்டங்களைச் சற்று விரிவாக்கி, அதாவது உதவித் தொகையை அதிகப்படுத்தி
அ.தி.மு.க. அரசு அந்தத் திட்டங்களைத் தொடருவதாக அறிவித்திருக்கின்றது.
ஏழையெளியவர்களுக்கு இலவசமாக வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டி வழங்கும் திட்டம் தி.மு. கழக ஆட்சியில் தொடங்கப்பட்டு, 98 சதவிகிதம் பேருக்கு வழங்கப்பட்டு சுமார் பத்து இலட்சம் பேருக்கு மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், அவர்களுக்கும் அவைகளை வழங்க ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அ.தி.மு.க. அரசு அந்தத் திட்டத்தைத் தொடரப் போவதில்லை என்று அறிவித்ததோடு, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்காகக் காத்திருந்த அந்த பத்து இலட்சம் பேருக்கும் வழங்குவதில்லை என்று அவர்களெல்லாம் ஏமாற்றம் அடைந்திடும் வகையில் முடிவெடுத்துள்ளது. இது கழக அரசின் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தியதற்கான உதாரணமாகும். அதைப் போன்றதொரு மற்றொரு திட்டம்தான் இலவச சமையல் எரிவாயு திட்டம். அந்தத் திட்டத்தையும் அ.தி.மு.க. அரசு தொடர வில்லை.
தி.மு. கழக ஆட்சியின் வழியில் இலவசத் திட்டங்களை வழங்க முன்வந்த ஜெயலலிதா அரசு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, லேப்டாப், ஆடு மாடுகள் என்று தாங்களும் இலவசமாக வழங்க முன்வந்துள்ளார்கள். எந்த அளவிற்கு அவற்றையெல்லாம் வழங்குகிறார்கள் என்பதை தமிழ்நாட்டு மக்கள் போகப் போகப் பார்த்துப் புரிந்து கொள்ளவிருக்கிறார்கள்.
சுமார் 2 லட்சத்து 62 ஆயிரம் ஏழைகள் பயன் பெற்ற உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான திட்டம், கழக அரசினால் தொடங்கப்பட்டு கிராம மக்கள் எல்லாம் மிகப் பெரிய தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகளைப் பெற்று உயிர் பிழைத்தார்கள். அந்தத் திட்டத்திற்கு என் பெயரை நான் எவ்வளவோ மறுத்தும் கேளாமல் அந்தத் துறையின் அமைச்சர் கழக ஆட்சியில் வைத்துவிட்டார். ஜெயலலிதாவிற்கு பொறுக்குமா மனம்? அந்தத் திட்டத்திற்கு மூடு விழா நடத்திவிட்டு, வேறு பெயரில் அத்திட்டம் தொடரும் என்று சொல்லியிருக்கிறார்கள். என்ன பெயர் இருந்தால் என்ன? தி.மு. கழக அரசின் அந்த நல்ல திட்டம் தொடர்ந்தால் போதும்!
அதுபோலவே கழக அரசின் மற்றொரு திட்டம், 108 ஆம்புலன்ஸ் திட்டம்! நான் வெளியூர் சென்றால் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஒருவர் அல்லது இருவர் என்னைச் சந்தித்து, அந்தத் திட்டத்தின் காரணமாகத்தான் தாங்கள் உயிரோடு இருக்கிறோம்; நீங்கள் நன்றாக இருக்க வேண்டுமென்று வாழ்த்துகிறார்கள். அந்தத் திட்டமும் இந்த ஆட்சியில் வேகமோ விறுவிறுப்போ இல்லாமல் வேண்டா வெறுப்பாக நடத்தப்படுகிறது.
அ.தி.மு.க. அரசு மூடுவிழா நடத்த முதலிலே முயற்சி எடுத்த திட்டம் சமச்சீர் கல்வித் திட்டம். அந்தத் திட்டத்தை எப்படியாவது ஒழிக்க ஜெயலலிதா எவ்வளவோ பாடுபட்டும் குறிப்பாக சட்டப் பேரவையில் அவசர அவசரமாக திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து தங்களுக்குள்ள பெரும்பான்மை காரணமாக நிறைவேற்றியும் கூட, நீதிமன்றங்களின் நெறி தவறாத தீர்ப்பின் காரணமாக அந்தத் திட்டம் தொடருகிறது. ஆனால் இந்த ஆட்சியாளர்களுக்கு அதிலே ஏற்பட்ட எரிச்சல் - கோபம் காரணமாக மாணவர்களின் எதிர்காலக் கல்வியிலே அக்கறையற்ற நிலைதான் நிலவுகிறது.
சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களில் திருத்தம் செய்கிறோம் என்ற பெயரால் அ.தி.மு.க. ஆட்சியினர் செய்த மாறுதல்கள் எல்லாம் கழகத்தின் மீது கொண்ட காழ்ப்பினை உணர்த்துவதாகவே இருந்தன.
அடுத்து, அ.தி.மு.க. ஆட்சியினரின் கடுமையான கோபத்திற்கு ஆளான மற்றொன்று, தி.மு. கழக ஆட்சியில் எழுப்பப்பட்ட தலைமைச் செயலகக் கட்டிடம், புதிய சட்டப் பேரவை வளாகம். ஜெயலலிதா அம்மையார் ஒருவருக்கு ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக தலைமைச் செயலகத்திலே உள்ள பணியாளர்கள், அதிகாரிகள் எல்லாம் இடப்பற்றாக்குறை காரணமாக இன்று அவதிக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் உட்பட, இந்த அம்மையார் ஒருவரின் பிடிவாதத்திற்காக சிறப்பாகக் கட்டப்பட்டு எழிலுற நிமிர்ந்து நிற்கின்ற கட்டிடத்தில் தங்கள் பணியினைத் தொடர முடியாமல், ஏற்கனவே உள்ள பழைய கட்டிடத்தில் இடப் பற்றாக்குறையில் அலுவலர்கள் பணியாற்ற வேண்டியுள்ளதே என்று தங்களுக்குள்ளாகவே மனம் நொந்து பேசிக் கொள்கிறார்கள்.
ஏன் அமைச்சர்களே, எதுவும் சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வழிகாட்டும் தலைவி சோனியா காந்தி முன்னிலையில் திறக்கப்பட்ட அந்தக் கட்டிடத்தையே அம்மையார் ஜெயலலிதா அவமானப்படுத்தியிருக்கிறார்.
ஒவ்வொருவருக்கும் தேவையான வசதி வாய்ப்புகளை மனதிலே கொண்டு உருவாக்கப்பட்ட அந்த மாளிகை, ஜெயலலிதா அம்மையாரின் பிடிவாதம் காரணமாக எந்தவிதமானப் பயன்பாட்டுக்கும் வாய்ப்பின்றி மிகப்பிரமாண்டமாக நின்று கொண்டுள்ளது. இதுபோன்ற கட்டிடங்கள் பயன்படுத்தப்படாமல் சில ஆண்டுகளுக்கு அப்படியே விடப்பட்டால் என்ன ஆகும்? தான் செய்துள்ள காரியம் பற்றி பலரும் குறை சொல்கிறார்களே என்பதால், அதற்கு ஏதோ ஒரு காரணம் சொல்லி விசாரணைக் கமிஷன் ஒன்றை தனக்கு வேண்டிய நீதிபதி ஒருவரைக் கொண்டு அமைத்திருக்கிறார். விசாரணைக் கமிஷனை அமைத்து விட்டால், அதன் அறிக்கை வரும் வரை எதுவும் செய்ய முடியாது என்று பரமக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு பேரவையில் விளக்கம் சொன்ன ஜெயலலிதா, தலைமைச் செயலகம் குறித்து விசாரணைக் கமிஷனை அறிவித்து விட்டு, அவரே அந்தக் கட்டிடத்தில் உயர் சிகிச்சைக்கான மருத்துவமனையை நிறுவப் போவதாக அறிவித்திருக்கிறாரே, அதற்கு மட்டும் விசாரணைக் கமிஷன் பரிந்துரைக்காக ஏன் காத்திருக்கவில்லை? தலைமைச் செயலகம், சட்டப்பேரவை வளாகம், மேலவை, நூலகம் போன்றவைகளுக்காக எழுப்பப்பட்ட கட்டிடத்தில், உயர் நிலை மருத்துவமனையை நிர்மாணிக்க முடியுமா? மருத்துவமனை அமைக்க வேண்டுமென்றால், அந்தக் கட்டிடம் கட்ட ஆரம்பிக்கும் போதே, அதற்கான வசதிகள் எல்லாம் செய்திருக்க வேண்டாமா? ஒரு தவறைச் செய்துவிட்டு, அதை மறைக்க ஒன்பது தவறுகள் செய்வதா?
கழக அரசு காலத்தில் உருவாக்கப்பட்ட தலைமைச் செயலகத்திற்குப் போகக்கூடாது என்ற அம்மையாரின் பிடிவாதம் காரணமாக பாதிக்கப்பட்ட மற்றொன்று - செம்மொழி மைய அலுவலகம், பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகம் ஆகியவைகளாகும். அமைச்சரவையைக் கூட்டிக்கூட
முடிவெடுக்காமல், தன்னிச்சையாக பாவேந்தர் செம்மொழி ஆய்வு நூலகம் இயங்கி வந்த இடத்திலே சட்டப்பேரவையை நடத்திட ஜெயலலிதா இரவோடு இரவாக எடுத்த முடிவு காரணமாக, அங்கே வைக்கப்பட்டிருந்த அரிய ஆய்வு நூல்களும், பழைய சுவடிக் கருவூலங்களும் எடுத்தெறியப்பட்டன. இன்றளவும் அந்த பாவேந்தர் செம்மொழி ஆய்வு நூலகத்தின் கதி அ.தி.மு.க. ஆட்சியிலே என்ன ஆயிற்று என்றே தெரியாத நிலை!
அதுபோலவே கழக அரசு மத்திய அரசின் உதவியோடு சென்னை மாநகரில் உள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு “மெட்ரோ ரெயில் திட்டம்” அறிவித்து பல இடங்களில் அதற்கான பணிகள் நடை பெற்று வருகின்ற நிலையில், ஜெயலலிதா “மோனோ ரெயில் திட்டம்” தான் சிறந்தது, அதனைத்தான் தொடரப் போகிறேன் என்று அறிவித்திருக்கிறார். இதுவும் ஏட்டிக்குப் போட்டியான திட்டம்தானே!
ஜெயலலிதா மூடு விழா நடத்திய கழக அரசின் மற்றொரு சிறந்த திட்டம் - கலைஞர் வீடு வழங்கும் திட்டம். குடிசைகளே இல்லாத தமிழகத்தை உருவாக்கிடும் மிகப் பெரிய நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட திட்டம் - குடிசை வாழ் மக்களால் குதூகலத்துடன் கொண்டாடப்பட்ட திட்டம் - அதற்கு அம்மையார் மூடு விழா நடத்திவிட்டார்கள். அதனால் பாதிக்கப்படப் போகின்ற 21 லட்சம் தமிழக குடிசைவாசிகளின் வயிற்றெரிச்சலும் கண்ணீரும் அ.தி.மு.க. ஆட்சியினரை சும்மா விடாது என்பது மட்டும் நிச்சயம்!
அ.தி.மு.க. அரசு மூடு விழா நடத்திய மற்றொரு திட்டம் - சட்டமன்ற மேலவை. பேரறிஞர் அண்ணா, மூதறிஞர் ராஜாஜி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., சிலம்புச் செல்வர், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, ஆர். வெங்கட்ராமன், டாக்டர் பி.வி. செரியன், குன்றக்குடி அடிகளார், டாக்டர் லெட்சுமணசாமி முதலியார் போன்றவர்கள் எல்லாம் இடம்பெற்ற மேலவையை மீண்டும் கொண்டுவர தி.மு. கழக அரசு எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டு, நாடாளுமன்றத்தினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மேலவைக்கு மூடு விழா நடத்திய பெருமை ஜெயலலிதாவையே சேரும்.
அதுபோலவே ராஜராஜனின் ஆயிரமாவது ஆண்டு விழா தஞ்சையில் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டபோது, செம்மை நெல் சாகுபடி முறைக்கு “ராஜராஜன் 1000” என்று என்னால் பெயரிடப்பட்டது. அந்தப் பெயரைச் சூட்டியவன் நானல்லவா? அதனால் அந்தப் பெயரும் மாற்றப்பட்டுவிட்டது.
தி.மு. கழக ஆட்சியில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு பொறியியல் கல்லூரிகள் அமைக்கும் நோக்கத்துடன், 12 புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டதன் காரணமாக - தமிழகத்திலே உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமாகி, சென்னையிலே உள்ள அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பணி பெருகிவிட்ட காரணத்தினாலும் - பொறியியல் தொழில் நுட்பவியல் ஆகியவற்றின் ஆய்வுப் பணிகள் பரவலாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடும் - திருச்சி, கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை என்று ஐந்து இடங்களில் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் புதிதாக தொடங்கப்பட்டன. ஆனால் தி.மு. கழக அரசு செய்த அனைத்து பணிகளையும் மாற்ற வேண்டுமென்ற தீய எண்ணத்தோடு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை பழைய நிலைக்கே கொண்டு வரும் மசோதாவைக் கொண்டுவந்து பேரவையிலே நிறைவேற்றியிருக்கிறது. இது மாணவர்களின் எதிர்காலத்தையும், உயர்கல்வியின் தரத்தையும், ஆராய்ச்சியின் அவசியத்தையும் நாசமாக்கி அழித்திடும் அ.தி.மு.க. அரசின் முயற்சியாகும்.
திருமழிசையில் துணை நகரம் ஒன்றினை அமைக்கப் போவதாக பேரவையில் ஜெயலலிதா வழக்கம் போல 110வது விதியின் கீழ் அறிவித்தார். அந்தத் திட்டம் பற்றியும், ஏற்கனவே கழக ஆட்சியில் துணை நகரம் அமைக்கப்படுவதற்கான முயற்சி தொடங்கப்பட்டது பற்றியும், அப்போது அதற்கெதிராக ஜெயலலிதா விடுத்த அநாகரிக அறிக்கை பற்றியும் நான் விவரமாக எழுதியிருக்கிறேன். அதைப் பார்த்ததும், அந்தத் துறையின் அதிகாரிகளை அழைத்து நான் எழுதியிருப்பதெல்லாம் உண்மைதானா என்று கேட்டறிந்த பிறகு எதுவும் பதில் கூறாமலேயே விட்டுவிட்டார்கள்.
தமிழக அரசின் சார்பாக ஐந்து வகையான திருமண உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மூவலூர்
ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம், ஏழை விதவைகளின் பெண் குழந்தைகளுக்கான ஈ.வெ. ரா.மணியம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், அனாதை பெண்களுக்கான அன்னை தெரசா நினைவு திருமண உதவித் திட்டம், அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் ஆகிய திட்டங்கள்தான் அவை. இந்த ஐந்து திட்டங்களில் என்னுடைய அன்னையார் பெயரிலே உள்ள “அஞ்சுகம் அம்மையார் கலப்புத் திருமண உதவித் திட்டம்” என்பதை மட்டும் ஜெயலலிதா அவசர அவசரமாக மாற்றி, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டத்துடன் இணைத்து விட்டார்.
கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட “தொல்காப்பியர் பேரவை” போன்ற தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக 100 கோடி ரூபாய் கழக ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அந்தத் திட்டத்தை ஏற்காமல், அதற்கு வேறு பெயரிடுவதற்கான முயற்சியில் இந்த ஆட்சியினர் ஈடுபட்டுள்ளார்கள்.
ஜெயலலிதா அரசு பொறுப்புக்கு வந்த பிறகு எடுத்த மற்றொரு முடிவு - தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மீண்டும் சித்திரை மாதம் முதல் தேதிக்கு மாற்றிட பேரவையில் மசோதா ஒன்றினை தாக்கல் செய்து, குரல் வாக்கின் மூலமாக நிறைவேற்றியிருக்கிறார்.
சேலத்தில் 100 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மூடு விழா நடத்தி யிருக்கிறார்.
உடன்பிறப்பே, கடந்த நான்கு மாத கால அ.தி.மு.க. ஆட்சியில் இப்படித்தான் காரியங்கள் நடைபெற்று வருகின்றனவே தவிர, தாங்களாக சிந்தித்து செயலாற்ற வேண்டுமென்ற சிந்தனை ஆட்சியாளருக்கு இல்லை. காரணம், அவர்கள் சிந்திப்பதெல்லாம் கழக முன்னோடிகளையெல்லாம் பொய் வழக்கிலே எப்படி சிக்கவைப்பது, ஆதாரம் இருக்கிறதோ இல்லையோ அவர்களையெல்லாம் கைது செய்து சிறையிலே
அடைக்க வேண்டுமென்ற கொடூரமான எண்ணம்தான். எப்படியெல்லாம் பொய் வழக்குகளைப் போடுகிறார்கள், ஒரு வழக்கிலே நீதிமன்றம் ஜாமீன் வழங்கினால், வேறு ஏதாவது ஒரு வழக்கினை அவர்கள் மீது தொடுத்து தொடர்ந்து சிறையிலே வைப்பதற்கான முயற்சியிலே காவல் துறையினரின் துணையோடு செயல்படுகிறார்கள். வினையை இன்றைக்கு விதைப்பவர்கள் ஒரு நாள் வினையை அறுவடை செய்தே ஆக வேண்டும் என்பது மட்டும் உண்மை. காவல்துறையினருக்கும் சேர்த்துத்தான் இதைச் சொல்லுகிறேன்!
அன்புள்ள, மு.க. 19-9-2011
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 383–390. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.