முரசொலி கடிதங்கள் · 3588
கல்வி; கருகிடும் மொட்டாவதா?
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3588. கல்வி; கருகிடும் மொட்டாவதா? உடன்பிறப்பே,
அ.தி.மு.க. அரசு பதவியேற்ற இந்த நான்கு மாதங்களில் பள்ளிக் கல்வித் துறையைப் பாழடிக்கின்ற செயல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. வந்ததும் வராததுமாக, சமச்சீர் கல்விச் சட்டத்தை ஏற்க மாட்டோம் என்ற ஒரு முடிவினை தன்னிச்சையாக எடுத்து, பாடப் புத்தகங்கள் எல்லாம் பல கோடி ரூபாய்ச் செலவில் தயாரான நிலையிலே, அவற்றையெல்லாம் விநியோகிக்கக் கூடாது என்று கூறி, சமச்சீர் கல்விச் சட்டத்திற்கு எதிராக திருத்தச் சட்டம் ஒன்றினை தங்களுக்குள்ள பெரும்பான்மை காரணமாக நிறைவேற்றிவிட்டு - புதிய பாடப் புத்தகங்களை அச்சடித்துக் கொடுக்கப் போகிறோம் என்று கூறி, அதற்கான டெண்டர்களை அவசர அவசரமாக அறிவித்து, மாணவர்கள் மூன்று மாத காலம் எதையுமே படிக்காமல் வீணடிக்கின்ற அளவிற்கு நடந்து கொண்டு அதன் மூலமாக மாணவர்களின் கல்வியைப் பாழடித்தனர். மாணவர்களின் மொத்தம் 200 வேலை நாட்களில் 60 வேலை நாட்கள் வீணாகியது.
உச்ச நீதி மன்றம் இந்த ஆண்டே 1 முதல் 10ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டுமென்று தீர்ப்பு வழங்கியதால் - ஆத்திரமடைந்ததோடு, வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு ஆளான இந்த அரசு, ஒட்டு மொத்தமாக மாணவர்களின் கல்வியிலேயே அக்கறையற்ற தன்மையோடு நடந்து கொள்கிறது. உச்ச நீதிமன்றம் ஏதோ தவறு செய்து விட்டதைப் போல முதலமைச்சரே பேரவையிலே தெரிவிக்கிறார். சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களில் தவறு இருந்தால் அதனை அகற்றி விடலாம் என்று நீதிபதிகள் தெரிவித்ததை வைத்துக் கொண்டு, தவறுகளைத் திருத்தாமல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தங்களுக்குப் பிடிக்காததையெல்லாம் கிழித்தார்கள், அடித்தார்கள்,
மறைத்தார்கள். ஆனால் உண்மையான தவறுகளைத் திருத்தாமல், பாருங்கள் இதோ தவறு என்று விளம்பரம் செய்தார்கள்.
பாடப் புத்தகங்கள் அச்சிடுவதிலும் விநியோகிப்பதிலும் ஏராளமான குளறுபடிகள் - இன்னும் கூட பல பள்ளிகளுக்கு குறிப்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படாத நிலை உள்ளதாக பெற்றோர்கள் குமுறுகிறார்கள்.
10-9-2011 தேதிய “தினமணி” இதழில் திரு. வி.என். ராகவன் என்பவர் எழுதியுள்ள கட்டுரையில், “சமச்சீர் கல்விப் பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டாலும், மாதிரி வினாத்தாள் இன்னும் வெளியிடப்படாததால் மாணவர்கள் மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தகங்கள் இன்னும் அனைத்து மாணவர்களுக்கும் கிடைத்த பாடில்லை. திருச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் புத்தகப் பற்றாக்குறை பிரச்சினை வெவ்வேறு மாதிரியாக நிலவுகிறது. குறிப்பாக ஒரு பள்ளியில் தமிழ்ப் புத்தகம் கிடைக்கவில்லை. ஆனால், மற்றொரு பள்ளிக்கு தமிழ்ப் புத்தகம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலப் புத்தகம் கிடைக்கப் பெறவில்லை. இதுபோல, வேறு சில பள்ளி மாணவர்களுக்கு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடப் புத்தகங்கள் விநியோகம் செய்யப்படவில்லை. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்ப் பாடப் புத்தகம் முழுமையாகக் கிடைக்கவில்லை. இதே நிலை தான் மற்ற மாவட்டங்களிலும் நிலவுகிறது. நிகழாண்டில் ஏறத்தாழ இரண்டரை மாதங்கள் கடந்து புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டதால், பாடங்களை முடிப்பதிலும் சிரமம் நிலவுகிறது. எனவே, விடுமுறை நாள்கள் போக 180 நாள்களில் கற்பிக்க வேண்டிய பாடங்களை 90 நாள்களிலேயே முடிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது” என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய (13-9-2011) “தி டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேட்டில்கூட இரண்டாம் மொழிப் பாடத்திற்கான புத்தகங்கள் மாணவர்களுக்கு இன்னும் கிடைத்தபாடில்லை என்று விரிவாகச் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்கள் பல பள்ளிகளில் போதுமான அளவுக்கு வழங்கப்படவில்லை என்றும்; சில பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் எதுவுமே வழங்கப்படவில்லை என்றும்;
தமிழகத்தில் சிறுபான்மை மாணவர்களுக்காக நடைபெறும் ஆயிரம் பள்ளிகளில், எந்தப் பள்ளிக்கும் மொழிப் பாடத்திற்கான பாடநூல்கள் வழங்கப்படவில்லை என்றும் செய்தி வெளிவந்துள்ளது.
காலாண்டுத் தேர்வுக்கு வினாத்தாளை எப்படி தயார் செய்வது என்பதில் குழப்பம் நிலவுகிறதாம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வழக்கமான தேதியில் நடத்தப்படுமா? அல்லது தள்ளி வைக்கப்படுமா என்பதிலும் குழப்பம் நீடிக்கிறதாம். இந்தத் தேதி தெரிந்தால்தான் மாணவர்களுக்கான கற்பித்தலை திட்டமிட முடியுமாம்.
பாடங்களையே இப்போதுதான் நடத்தத் தொடங்குகிறார்கள். தரம் உயர்த்தப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டப் பாடங்களை நடத்துவதற்குரிய பணியிடைப் பயிற்சி ஆசிரியர்களுக்கு அளிக்கப் படவில்லை. அதனால் கற்பிப்புப் பணி பெயரளவிலேதான் தற்போது நடைபெற்று வருகின்றது. ஆனால் அதற்குள் காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 22 முதல் நடைபெறும் என்று அரசு அறிவிக்கின்றது.
“பேராசிரியர் முத்துக்குமரன் குழு செய்த அனைத்துப் பரிந்துரைகளையும் நாங்கள் நடைமுறைப்படுத்தப் போகிறோம்” என்று அ.தி.மு.க. அரசு அறிவித்தது. ஆனால் முத்துக்குமரன் குழு அளித்த முதல் வரிசை பரிந்துரைகளில் முக்கியமான பரிந்துரையான, முப்பது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றி இதுவரை இந்த அரசு கண்டு கொள்ளவே இல்லை. அந்தப் பரிந்துரையை நிறைவேற்ற வேண்டுமானால், இந்த ஆண்டிலேயே தமிழ்நாட்டில் 60 ஆயிரம் ஆசிரியர்களைப் புதிதாக நியமிக்க வேண்டும். அரசு 33 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்கப் போவதாக ஓர் அறிவிப்பில் சொல்லியிருந்தாலும், அது நடைமுறைக்கு வந்தால்தான் நிச்சயம். மேலும் அரசின் சார்பில், முத்துக்குமரன் குழுவின் பரிந்துரைக்கு மாறாக 35 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்று கணக்கிட்டு - 16 ஆயிரத்து 549 ஆசிரியர்கள் மட்டுமே கூடுதலாகத் தேவை என்று சொல்கிறார்கள்.
முழு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக நியமிக்காமல், அவர்களை அரைநாள் பகுதி நேர ஆசிரியர்களாக
அதுவும் மிகக் குறைந்த ஊதியமாகிய 5000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2001ஆம் ஆண்டு முதல் 2006 வரை ஆட்சியிலே இருந்த அ.தி.மு.க. அரசு பணி நியமனத் தடைச் சட்டம் என்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தபோது பட்டதாரிகள் எல்லாம் பாதிக்கப்பட்டனர். அப்போது ஏறத்தாழ 46 ஆயிரம் ஆசிரியர்களை மாதம் 3000 - 4000 ரூபாய் என்ற தொகுப்பூதியத்தில் - இட மாறுதல் கூட கேட்க மாட்டோம் என்று அவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு நியமனம் செய்தார்கள்.
ஆனால் 2006இல் பொறுப்பேற்ற தி.மு. கழக அரசு அந்த 46 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் 1-6-2006 முதல் காலமுறை ஊதியம் வழங்கி ஒவ்வொரு ஆசிரியரும் தாம் பெற்று வந்த ஊதியத்தை விட மூன்று மடங்கு அதிகம் பெற்று மகிழ ஆணையிட்டு நடைமுறைப்படுத்தியது. மேலும் கழக ஆட்சியில் 2006க்குப் பின் தொடக்கக் கல்வித் துறையில் 12 ஆயிரத்து 426 இடைநிலை ஆசிரியர்கள், 14 ஆயிரத்து 115 பட்டதாரி ஆசிரியர்கள் என 26 ஆயிரத்து 541 ஆசிரியர்களும்; பள்ளிக் கல்வித் துறையில் 70 இடைநிலை ஆசிரியர்கள், 17 ஆயிரத்து 45 பட்டதாரி ஆசிரியர்கள், 4 ஆயிரத்து 665 ஆசிரியர் பயிற்றுநர்கள், 3002 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், 525 தமிழாசிரியர்கள், 1131 சிறப்பாசிரியர்கள், 140 தொழில் ஆசிரியர்கள், 1666 கணினி ஆசிரியர்கள் என 27 ஆயிரத்து 739 ஆசிரியர்களும்;
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 216 விரிவுரையாளர்களும், 32 முதுநிலை விரிவுரையாளர்களும் என மொத்தம் 55 ஆயிரத்து 53 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப் பட்டனர். 2006ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் ஆசிரியர் கல்வித் தகுதி பெற்ற 1114 மாற்றுத் திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர்களாக அரசுப் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டனர்.
பணி நியமனங்களைப் பொறுத்தவரை 1991-1996 வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தி, தர வரிசைப்படி பணி நியமனம் வழங்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களும் அப்படியே தேர்வு செய்யப்பட்டனர். அதனால் பதிவு செய்து காத்திருந்த பட்டதாரிகள்
பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர். வேலை கிடைக்காமல், வயது முதிர்ந்து வேறு வேலையைப் பார்க்கத் தொடங்கினர்.
1996க்குப் பின் தி.மு. கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டது.
2001இல் மீண்டும் ஜெயலலிதா பொறுப்புக்கு வந்ததும் பணி நியமனத் தடைச் சட்டம் கொண்டு வந்தார். அப்போதும் பட்டதாரிகள் எல்லாம் பாதிக்கப்பட்டனர்.
2006இல் நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும், கடந்த ஐந்தாண்டுகளில் 55 ஆயிரம் ஆசிரியர்கள் பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் பெற்றுள்ளனர்.
தற்போது 14377 பேர் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று பேரவையில் ஜெயலலிதா அறிவித்தார். பிறகு 110வது விதியின் கீழ் 13300 பட்டதாரி ஆசிரியர்களும், 16549 பகுதி நேர ஆசிரியர்களும் நியமிக்கப்படுவார்கள் என்று சொன்னார்கள். ஆனால் இந்த ஆசிரியர் நியமனங்கள் பதவி மூப்பு அடிப்படையிலா அல்லது தேர்வு மற்றும் நேர்காணல் மூலமா என்று முதல்வரோ, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரோ இதுவரை அறிவிக்கவில்லை. அதற்கு நேரம் செலவழிக்க விரும்பாமல், அ.தி.மு.க. அமைச்சர்கள் எல்லாம் முன்னாள் அமைச்சர்கள் யார் யார் என்ன செய்தார்கள், பேரவையில் அவர்கள் மீது என்ன என்ன புகார்களைக் கூறி ஜெயலலிதாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தலாம் என்பதிலேயே ஆர்வம் காட்டுகிறார்களாம்!
ஆசிரியர்கள் ஆண்டுதோறும் மாறுதல் செய்யப்படுவதில் இந்த ஆண்டு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கழக ஆட்சியில் “கவுன்சலிங்” நடத்தி ஆசிரியர்கள் மகிழ்ச்சியடையத்தக்க விதத்தில், ஒளிவு மறைவின்றி வெளிப்படையான முறையில் மாறுதல்கள் நடந்தன. ஆனால் வேண்டியவர்களுக்கு மட்டும் மாறுதல் போட்டு முடித்து விட்டு; இப்போது “கவுன்சலிங்” நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். பள்ளிகள் தொடங்கி, மூன்று மாதங்களுக்குப் பிறகு “கவுன்சலிங்” மூலம் மாறுதல் என்றால்; யாராவது அதில் விருப்பம் காட்டுவார்களா? மூன்று, நான்கு மாதங்களுக்குப் பிறகு மாறுதல் பெற்று, புதிய இடத்திற்குக் குடும்பத்தோடு செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள முடியுமா?
ஒட்டுமொத்தமாகச் சொல்ல வேண்டுமேயானால், அ.தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு என்ன நடக்கிறதோ இல்லையோ, தமிழக மாணவச் செல்வங்களின் கல்வியைப் பாழடிக்கின்ற காரியம் கச்சிதமாகவே நடைபெறுகிறது. யார் படித்தால் என்ன, படிக்காமல் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என்ற எண்ணத்தோடு ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள். “எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் ஓர் நிறை; எல்லோரும் இந்நாட்டு மன்னர்!” என்ற இலட்சியத்திலும்; சமம் - சமத்துவம் என்ற நெறிகளிலும்; கிஞ்சிற்றும் நம்பிக்கையற்ற ஜெயலலிதா அரசு; சமச்சீர் கல்வியை ஏனோதானோ என்ற முறையில் நடைமுறைப்படுத்திவருகிறது - சமச்சீர் கல்விக்கான பாடப் புத்தகங்கள் விநியோகம் இன்னும் சரியாக முழுமை பெறவில்லை - ஆசிரியர் பணியிடங்கள் ஏராளமாகக் காலியாக உள்ளன - ஆசிரியர்கள் நியமனத்திற்கான கொள்கை இன்னும் முடிவு செய்து அறிவிக்கப்படவில்லை - ஆசிரியர் மாறுதல்களில் பின்பற்ற வேண்டிய முறை எது என்பதில் குழப்பமே நீடித்து வருகிறது. குறைமனதான ஆட்சியாளர்களால் உருவாக்கப்படும் இத்தகைய குழப்பங்களாலும், குளறுபடிகளாலும் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயித்திடப் போகும் இன்றைய இள மொட்டுகளின் பள்ளிக் கல்வி; கண்டுகொள்ள வேண்டியவர்களின் பாரா முகத்தால் கருகிக் கொண்டுதானிருக்கிறது! அன்புள்ள, மு.க. 14-9-2011
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 377–382. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.