அடக்கம்

முரசொலி · தொகுதி 45 · கடிதம் 3587

முரசொலி கடிதங்கள் · 3587

மாமியார் உடைத்ததும்; மருமகள் உடைத்ததும்!

நாள் 13.9.2011சுமார் 5 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3587. மாமியார் உடைத்ததும்; மருமகள் உடைத்ததும்!

உடன்பிறப்பே,

“திருமழிசையில் 311 ஏக்கரில் குடியிருப்புகள் - சென்னை அருகே துணை நகர் - சட்ட சபையில் ஜெயலலிதா அறிவிப்பு”

இதுதான் தமிழகத்தின் அனைத்து ஏடுகளிலும் 9-9-2011 அன்று தலைப்புச் செய்தி. இந்த அறிவிப்பினை முதலமைச்சர் ஜெயலலிதாதான் பேரவையில் வழக்கம்போல 110வது விதியின் கீழ் படித்திருக்கிறார். அவர் படித்து முடித்தவுடன் வழக்கம்போல அவையிலே உள்ள அனைத்துக் கட்சிகளின் சார்பில் பாராட்டுரைகள் வழங்கப்பட்டுள்ளன. நம்மைப் பொறுத்த வரையில் திருமழிசையில் துணை நகரம் வரப் போவதில் நமக்கு மகிழ்ச்சிதான். ஏனென்றால் திருமழிசையில் இவர்கள் துணை நகரம் அமைக்கவுள்ள இடம் தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி வாரியத்தினால் கையகப்படுத்தப்பட்ட இடம்!

அம்மையார் அவர்கள் படித்த அறிக்கையில் “சென்னை மாநகரம் வெகு வேகமாக விரிவடைந்து வருகிறது, சென்னையில் வீட்டு மனை மற்றும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளின் விலை பெருமளவில் உயர்ந்திருக்கிறது, இந்த நிலையை கருத்திலே கொண்டு துணை நகரம் அமைக்கப் போவதாக” அவர் தெரிவித்திருக்கிறார். திருமழிசை துணை நகரத்தை 311 ஏக்கரில் உருவாக்கப் போவதாக ஜெயலலிதா பேரவையில் 9-9-2011 அன்று அறிவித்து அனைத்துக் கட்சியினரும் உடனடியாக எழுந்து அதைப் பாராட்டியிருக்கிறார்கள் என்ற போதிலும், அதற்கு முன்பே 25-8-2011 அன்று பேரவையில் வீட்டு வசதித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் வைத்த கொள்கை விளக்கக் குறிப்பிலேயே இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பாவம்; அவர் அறிவித்தால் அதை யார் பொருட்படுத்துவார்கள்? “ஜெ” அறிவித்தவுடன்தான் அதற்கு பெரிய மவுசே ஏற்படுகிறது!

அப்போதே அமைச்சர் வைத்திலிங்கம் வைத்த கொள்கைக் குறிப்பு புத்தகத்திலேயே பக்கம் 8இல் “சென்னைப் பெருநகரில் பெருகிவரும் மக்கள் தொகையினால் முறையற்ற வகையில் உருவாகி வரும் கட்டிடங்களைத் தவிர்க்க, அடிப்படை வசதிகளாகிய வரையறுக்கப்பட்ட சாலைகள், தெரு விளக்குகள், மழை நீர் வடிகால், சிறு பாலங்கள், கழிவு நீர் அகற்றல் மற்றும் குடிநீர் வசதிகளுடன் தன்னிறைவு பெற்ற ஒருங்கிணைந்த புதிய நகரத்தை உருவாக்க வேண்டிய அவசியமுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருமழிசைக்கு அருகில் ஏற்கனவே வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட சுமார் 311 ஏக்கர் நிலப் பரப்பில் ஒருங்கிணைந்த நவீன நகரியத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. அணுகு சாலைக்காகத் தேவைப்படும் 12.87 ஏக்கர் சிறு நிலப்பரப்பு இவ்வருடத்தில் கையகப்படுத்தப்படும்” என்றுள்ளது.

எனவே கொள்கை விளக்கக் குறிப்பில் கடந்த மாதமே அறிவிக்கப்பட்ட ஒரு திட்டத்தைத்தான்

9-9-2011 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா ஏதோ புதிதாக அன்றுதான் அத்திட்டத்தை அறிவிப்பதைப்போல பேரவையில் 110வது விதியின் கீழ் அறிவித்திருக்கிறார்.

சென்னையையொட்டி துணைக்கோள் நகரம் அமைக்கும் இந்த யோசனை இப்போதல்ல; தி.மு. கழக ஆட்சியிலும் வந்தது. அதாவது; 2006ஆம் ஆண்டு தி.மு. கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதும்

1-9-2006 அன்று பேரவையில் செய்யப்பட்ட அறிவிப்பில், “வண்டலூர் - கேளம்பாக்கம் சாலைக்கு தென் பகுதியில், பழைய மாமல்லபுரம் சாலைக்கும் 45 ஆம் எண். தேசிய நெடுஞ்சாலைக்கும் இடையில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 30 ஆயிரம் ஏக்கர் நிலத்தை உத்தேசமாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தேர்வு செய்துள்ளது. இப்பகுதியில் 13 ஆயிரம் குடும்பங்கள் வாழ்கின்றன. 270 சதுர கிலோ மீட்டரில் உள்ள இந்த நிலப்பரப்பு மாசற்ற, நல்ல சுற்றுப்புறச் சூழலில் இருக்கிறது. புதிய நகர அமைப்பிற்கு இது உகந்த பகுதியாகும். இப்பகுதியில் பெரும்பாலான நிலங்கள் பயிரிடப்

படாமல் தரிசாகவே உள்ளன. இவற்றைக் கையகப்படுத்தும் போது நீர்வளப் பகுதி, குடியிருப்புப் பகுதி, காடுகள் உள்ள பகுதி ஆகியவற்றை நீக்கி விட்டு தரிசாகவும், புஞ்சையாகவும் உள்ள நிலங்களே கையகப்படுத்தப்பட உள்ளன. நிலங்களைக் கையகப்படுத்தும்போது நில உரிமையாளர்களுக்கு நியாயமான மார்க்கெட் விலை வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் இடப்பெயர்ச்சி செய்யப்பட மாட்டார்கள். அவர்கள் அந்தந்த இடங்களிலேயே தொடர்ந்து வாழலாம். புதிய நகரம் அமையும்போது உருவாகும் வேலை வாய்ப்புகள் இப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்களுக்கு நல்ல பலனை வழங்கி அவர்கள் பொருளாதார ரீதியாக உயர்வடைய வழி வகுக்கும்” என்றெல்லாம் தெரிவிக்கப்பட்டது.

தி.மு.கழக ஆட்சியில் 31-8-2006 அன்று பேரவையில் இந்த அறிக்கை படிக்கப்பட்டதுதான் தாமதம் - மறுநாளே 1-9-2006 அன்று ஜெயலலிதா அவசர அவசரமாக ஓர் அறிக்கையினை வெளியிட்டார். அதில்,

“ஆணவம் கொண்ட அற்ப ஜீவராசிகளின் பொறுப்பில் ஆளும் அதிகாரம் சிக்கிக் கொண்டிருப்பதால், ஜனநாயக மக்கள் விரோத அலங்கோலங்கள், பாரம்பரியம் மிக்க தமிழகத்தில் தொடர் நிகழ்வுகளாகிக் கொண்டிருக்கின்றன என்பதற்கு, சென்னையை ஒட்டி அமைக்க இருப்பதாக மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்திருக்கும் துணை நகர் அறிவிப்பும் ஓர் உதாரணமாகிவிட்டது.

ஓர் முதலமைச்சருக்கு தொலைநோக்குப் பார்வை இல்லாதபோது இதுபோன்று தான்தோன்றித்தனமாகச் செயல்படுகின்ற நிகழ்வுகள் நெஞ்சை நடுங்க வைக்கும் நீச்ச செயல்களாக அமைந்து விடுகின்றபோது அதற்கான விலையை கருணாநிதியும் அவரது கட்சியும் கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

கருணாநிதிக்கு “துணை” என்றால் மிகவும் பிடிக்கும் போலும், அதனால்தான் சென்னை மாநகருக்கும் ஒரு ‘துணை’யைத் தேடுகின்றார். தனது குடும்பத்தார்,

சுற்றத்தார் மற்றும் பேரன்கள் தயாநிதி மாறன், கலாநிதிமாறன் பயன்பெறவே சென்னை துணை நகரத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட உள்ளது என்ற செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன. சென்னை மாநகரத்தில் உள்ள மக்களின் இட நெருக்கத்தைக் குறைப்பதற்காக துணை நகரம் ஏற்படுத்த இருப்பதாக கருணாநிதி சொல்கிறார். முதலில் அவர் வீட்டில் உள்ள பெண்டு பிள்ளைகள், பேரன் பேத்திகள், மறைந்த முதல் மனைவியின் உறவினர்கள், அவர்கள் வழி வந்த உறவினர்கள், இருக்கும் மனைவியின் உறவினர்கள், ஏற்படுத்திக் கொண்ட துணைவியின் வழி வந்த உறவுகள் ஆகியோர் முதலில் கோபாலபுரத்தை விட்டும், சி.ஐ.டி. காலனியை விட்டும் வெளியேறி ஜன நெருக்கத்தை மேற்படி பகுதிகளில் குறைக்கட்டும்”

- என்றெல்லாம் அந்த அறிக்கையில் ஜெயலலிதா; கூறியிருந்தார். ஆனால் தற்போது அவரே திருமழிசையில் துணை நகரம் அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.

இதிலே இன்னும் வேடிக்கை என்னவென்றால், ஜெயலலிதா எதிர்த்து அறிக்கை கொடுப்பதற்கு முன்பாகவே அப்போது எங்களுடன் தோழமையாக இருந்த பா.ம.க. சார்பில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் இந்த துணை நகரம் வருவதால் விவசாய நிலங்கள் எல்லாம் பாதிக்கும், அங்கே வசிக்கின்ற மக்கள் சிரமப்படுவார்கள் என்று நாகரிகமாகச் சொன்னதன் பேரில் இரண்டே நாட்களில், அதாவது

2-9-2006 அன்றே நான் விடுத்த அறிக்கையில், “தி.மு.கழகத் தேர்தல் அறிக்கையிலும், ஆளுநர் உரையிலும் நிதிநிலை அறிக்கையிலும் அறிவிக்கப்பட்டு சென்னையை ஒட்டிய துணை நகர அமைப்பு உருவாக்கப்படுமென நான் குறிப்பிட்டிருந்த திட்டம்; நல்லெண்ண அடிப்படையிலும் தோழமைக் கட்சி வழங்கிய அறிவுரையை சிந்தித்துப் பார்த்தும்; சில சுயநல தீய சக்திகள் திட்டமிட்டுள்ள பகீரங்க வன்முறை வெறியாட்டத்துக்கு அப்பாவிப் பொதுமக்கள் பலியாகிவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வுடனும் கைவிடப்பட்டுள்ளது” என்று கூறிவிட்டேன்.

ஜெயலலிதாவின் அந்த அறிக்கை பற்றி 3-9-2006 அன்றே பா.ம.க.வின் அதிகாரபூர்வ ஏடான “தமிழ் ஓசை”யில், “ஜெயலலிதாவின் அறிக்கை - அநாகரிகத்தின் உச்சக்கட்டம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்கள்.

தற்போது அ.தி.மு.க.வுடன் தோழமைக் கட்சியாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடான “தீக்கதிர்”, 4-9-2006 அன்று எழுதிய தலையங்கத்தில்,

“சென்னை அருகே துணைநகரம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதலவர் கருணாநிதி அறிவித்துள்ளார். நல்லெண்ண அடிப்படையில் தோழமைக்கட்சியினரின் உணர்வுகளை மதித்து இந்த முடிவை எடுத்திருப்பதாக முதலவர் அறிவித்துள்ளார். ஆனால் ராணி மேரி கல்லூரியை இடித்துவிட்டு அந்த இடத்தில் தலைமைச் செயலகம் கட்ட முந்தைய (அதிமுக) ஆட்சி முயன்றபோது மாணவிகள் போராடினர். அனைத்துத் தரப்பு மக்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனாலும் ஆணவத்தோடு அந்தத் திட்டத்தை கைவிட அடாவடியாக மறுத்த ஜெயலலிதா அரசின் செயலோடு முதலவரின் இந்த அறிவிப்பை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது தவிர்க்க முடியாததாகிறது. துணை நகரத் திட்டம் கூடாது என்று ஜெயலலிதா விடுத்த அறிக்கை அரசியல் அநாகரிகத்தின் உச்சமாக இருந்து வேதனையளிக்கிறது. அரசின் ஒரு திட்டத்தை எதிர்க்க எதிர்க்கட்சிகளுக்கு முழு உரிமை உண்டு. ஆனால் அதில் அரசியல் நாகரிகம் பேணப்பட வேண்டும். ஆனால் ஜெயலலிதாவின் அறிக்கையில் முதலவர் கருணாநிதி குடும்பத்தினர் குறித்து அருவருக்கத்தக்க, அநாகரிகமான வார்த்தைகளை ஜெயலலிதா பயன்படுத்தியுள்ளார். அவரது வன்மத்தையும், வக்கிரத்தையுமே இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. இதனால்தான் சட்டமன்றத்தில் இந்த அறிக்கையை முதலவர் (கலைஞர்) படித்துக் காட்டிய போது, அ.தி.மு.க.வினரால்கூட சகித்துக்கொள்ள முடியவில்லை போலும். சட்டமன்றமும், அரசியல் அரங்கமும் நாகரிகமான விவாதம் நடைபெற வேண்டிய இடங்களேயன்றி

ஆத்திரத்தையும் அவதூறையும் வெளிப்படுத்தும் இடங்கள் அல்ல. ஜெயலலிதாவோ, அவரது கட்சியினரோ மக்களின் தீர்ப்பிலிருந்து இன்னமும் பாடம் கற்றுத் திருந்தவில்லை என்பதையே அவர்களது வார்த்தைகளும் செயல்பாடுகளும் நிரூபிக்கின்றன”

- என்று எழுதியிருந்ததையும், தற்போது அதே மார்க்சிஸ்ட்கள் தோழமை உணர்வோடு நடந்து கொள்ள நேரிட்டிருப்பதையும் இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

நான் இதையெல்லாம் குறிப்பிட்டதால், ஜெயலலிதா உடனே நான் மாமல்லபுரம் அருகே துணை நகரம் அமைப்பைத்தான் எதிர்த்தேன், தற்போது திருமழிசையில்தானே அறிவித்திருக்கிறேன் என்று சொல்லக்கூடும்! ஆனால் தி.மு. கழக ஆட்சிக் காலத்திலேயே திருமழிசையைச் சுற்றியுள்ள வெள்ளவேடு கிராமத்தில் 33.66 ஏக்கரும், நரசிங்கபுரம் கிராமத்தில் 68.31 ஏக்கரும், பல்லவ ராஜபுரம் கிராமத்தில் 141.68 ஏக்கரும், குத்தம் பாக்கம் கிராமத்தில் 112.20 ஏக்கரும், செம்பரம்பாக்கம் கிராமத்தில் 97.63 ஏக்கரும் கையகப்படுத்தி அங்கே ஒரு துணை நகரம் அமைப்பதற்கான முயற்சிகளில் 2006ஆம் ஆண்டு பொறுப்புக்கு வந்ததும் தொடங்கினோம். 1695 ஏக்கர் நிலம் அதற்காக கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டு, 467 ஏக்கர் கையகப்படுத்தப்பட்ட நிலையிலே அந்தப் பகுதி மக்களும், விவசாயிகளும் தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்தார்கள். எனவே அவர்களின் கோரிக்கைகளை ஏற்று, 21-12-2006 அன்று தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், திருவள்ளூர் மாவட்டம் - குத்தம்பாக்கம், வெள்ளவேடு, பர்வதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் துணை நகரம் அமைக்கும் திட்டத்திற்காக நஞ்செய், புஞ்செய் நிலங்களைக் கையகப்படுத்துவதில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு 2006ஆம் ஆண்டு தி.மு. கழகம்; துணை நகரத் திட்டத்தை அறிவித்தபோது இந்த ஜெயலலிதா அதனை எதிர்க்காமல் இருந்திருந்தால் இந்நேரம் துணை நகரமும் வந்திருக்கும், சென்னையின் இட நெரிசலும் குறைந்திருக்கும். ஆனால் அன்றைக்கு தி.மு.கழக அரசு துணை நகரத்தை அறிவித்தபோது எதிர்ப்பு கூறப்பட்டாலும், தற்போது ஜெயலலிதா அம்மையார் பேரவையில் 110வது விதியில் திருமழிசை துணை நகரத்தை அறிவித்தவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

உட்பட; பா.ம.க. உட்பட; அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களும் அதனை வரவேற்றிருக்கிறார்கள். இதைத்தான் “மாமியார் உடைத்தால் மண்சட்டி; மருமகள் உடைத்தால் பொன்சட்டி” என்கிறார்களோ?

அன்புள்ள,

மு.க.

13-9-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 370–376. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 45-இல் மேலும் கடிதங்கள்