அடக்கம்

முரசொலி · தொகுதி 46 · கடிதம் 3639

முரசொலி கடிதங்கள் · 3639

இவை எல்லாமே அரசியல்தானா?

நாள் 9.7.2012சுமார் 6 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3639. இவை எல்லாமே அரசியல்தானா?

உடன்பிறப்பே,

சிலர், நாட்டுக்கு, சமுதாயத்துக்கு எவ்வளவோ நன்மைகள் செய்வார்கள்; இருந்தாலும் அவர்களைக் கண்டால் ஒரு “சிலருக்கு” ஓர் “அலர்ஜி”! அந்தச் சிலரில் ஒருவர்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய மாநிலச் செயலாளர் தோழர் ராமகிருஷ்ணன். அவருக்கு என்ன காரணத்தாலோ, “தி.மு.க.” என்றால் பிடிக்காது. தி.மு.க. தற்போது தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் போல தி.மு. கழகமும் தற்போது ஒரு எதிர்க்கட்சிதான். ஆனால் தோழர் ராமகிருஷ்ணனுக்கு ஆளுகின்ற கட்சியைக் குறை சொல்வதைவிட, தி.மு. கழகத்தின் மீது எரிச்சலைக் கக்குவது என்றால் எப்படித்தான் இனிக்குமோ; நமக்குத் தெரியவில்லை! இன்றைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க.; மார்க்சிஸ்ட்களை மதிப்பதேகூட இல்லை. மார்க்சிஸ்டுகளை மட்டுமல்ல, அவர்களோடு கடந்த பொதுத் தேர்தலில் தோழமையாக இருந்து, அ.தி.மு.க; ஆளுங்கட்சியாக வருவதற்கு துணை புரிந்துள்ள முக்கிய கட்சிகளையெல்லாம் கூடப் பிடிப்பதே இல்லை, மதிப்பதே இல்லை. இருந்தாலும் அதை நண்பர் ராமகிருஷ்ணன் அவ்வளவாக கண்டு கொள்வதில்லை.

நேற்றையதினம் தோழர் ராமகிருஷ்ணன், அவர்களுடைய அதிகாரபூர்வமான நாளேடான “தீக்கதிர்” இதழில் ஒரு கட்டுரை எழுதி யுள்ளார். அந்தக் கட்டுரையை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, முதல் பகுதியிலே தி.மு. கழகத்தின் மீது எந்த அளவிற்கு வெறுப்பைக் கக்க வேண்டுமோ அந்த அளவிற்கு கக்கிவிட்டு, இரண்டாவது பகுதியில் அ.தி.மு.க. பற்றியும் வேண்டா வெறுப்பாக, “அவர்களைப் பற்றியும் எழுத வேண்டியிருக்கிறதே” என்று மனம் நொந்து அந்தக் கட்டுரையைத் தீட்டியிருக்கிறார். ஜனநாயக முறைப்படி, மாற்றுக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தத் தாக்குதலுக்கும் பதிலளிக்க வேண்டியது கழகத்தின் கடமை என்ற உணர்வோடுதான் நான்

பின்வரும் விளக்கத்தை அளிக்க முன்வந்துள்ளேனே தவிர, தோழர் ராமகிருஷ்ணனைப் பற்றி தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தக் காலத்திலும் தவறான எண்ணம் கிடையாது. விஷயத்திற்கு வருகிறேன்.

தோழர் ராமகிருஷ்ணன் தன் கட்டுரையைத் தொடங்கும்போது, தி.மு. கழகம் நடத்திய அறப்போராட்டம் பற்றியும், அந்தப் போராட்டம் எதிர்பார்த்ததை விட வெற்றி அடைந்துள்ளதாக நான் கூறியுள்ளது பற்றியும் எழுதியுவிட்டு, “பெட்ரோல் விலை உயர்வு, உர விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு என கடுமையான கட்டண, விலை உயர்வுகளால் மக்கள் பாதிக்கப்பட்டனர், அப்போதெல்லாம் அறிக்கை மட்டுமே விடுத்த தி.மு.க., பேரளவுக்கு ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க., தற்போது தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான நில அபகரிப்பு வழக்குகளை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்தியுள்ளது” என்று தனது கண்டனத்தைத் தெரிவித்துவிட்டு, “எந்தப் பிரச்சினைக்காக எப்படிப்பட்ட வடிவத்தில் போராடுவது என முடிவு செய்வது அந்தந்த கட்சிகளின் உரிமை, அதற்குள் நாம் தலையிட விரும்பவில்லை” என்று தன் மனச்சாட்சிக்கும் பதிலளித்துள்ளார்.

எத்தகைய போராட்டம் என்பதை முடிவு செய்யும் உரிமை அந்தந்தக் கட்சிக்கு உரியது என்று அவரே சொல்லிவிட்டு, மக்கள் பிரச்சினைகளுக்காக பேரளவுக்கு ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்தியது ஏன் என்று கேட்கிறார். மக்கள் பிரச்சினைகளுக்காக கவலைப்படாமல், தி.மு. கழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு என்றதும் அதற்காக மட்டும் சிறை நிரப்பும் போராட்டத்தை தி.மு.க. அறிவித்து விடவில்லை. தி.மு. கழகத்தின் மீது தற்போது தான்; வழக்கு, கைது, பழிவாங்கும் நடவடிக்கை தொடங்கப்படவில்லை. 2011ஆம் ஆண்டில் ஜூலை திங்களிலேயே, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் வாராதுமாக; கழக முன்னாள் அமைச்சர்கள் மீது கைது நடவடிக்கை ஆரம்பமாகி விட்டது. 30-7-2011 அன்று வீரபாண்டி ஆறுமுகம், ஜெ.அன்பழகன், எம்.எல்.ஏ. ஆகியோரும், அதே நாளில் திருவாரூரில் பொருளாளர் மு.க.ஸ்டாலின், பூண்டி கலைவாணன் ஆகியோரும், 2-8-2011 அன்று புரசை

ரெங்கநாதனும், 4-8-2011 அன்று ஈரோட்டில் என்.கே.கே.பி. ராஜாவும், 6-8-2011 அன்று திருப்பூர் மாநகர துணைச் செயலாளர் டி.கே.டி. நாகராஜும், 10-8-2011 அன்று திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.வும், சேலம் தம்மம்பட்டி நகரக் கழகச் செயலாளரும், 17-8-2011 அன்று கோவையில் பொங்கலூர் மணியும், 25-8-2011 அன்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாநகரக் கழகச் செயலாளர் அன்பழகன், கோவை மாவட்டக் கழகச் செயலாளர் பொங்கலூர் பழனிச்சாமி மற்றும் பைந்தமிழ் பாரி, மாநகரச் செயலாளர் வீரகோபால் ஆகியோரும், 27-8-2011 அன்று லால்குடியில் சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ.வும், காங்கேயத்தில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஏ.சி. கோவிந்தசாமியும், 29-8-2011 அன்று மதுரையில் முன்னாள் மேயரின் கணவர் கோபிநாத்தும், 1-9-2011 அன்று திருச்செங்கோடு நகராட்சித் தலைவரும், 9-9-2011 அன்று சென்னையில் பகுதிக் கழகச் செயலாளர் க.தனசேகரனும், மதுரையில் ஜெயராமனும், 10-9-2011 அன்று நெல்லையில் கருப்பசாமி பாண்டியனும், 11-9-2011 அன்று மதுரையில் மின்னல்கொடியும், 18-9-2011 அன்று விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடியும், 19-9-2011 அன்று கரூரில் கே.சி.பழனிச்சாமி எம்.எல்.ஏ.வும், 23-9-2011 அன்று சென்னையில் முன்னாள் அமைச்சர் கே.பி.பி. சாமியும், 2-11-2011 அன்று கே.பி.பி. சாமியின் சகோதரர்களும், ஐசரி கணேசும், 16-11-2011 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிதீஷும், 3-6-2012 அன்று மீண்டும் முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகமும், ஐ.பெரியசாமியும், என்.சுரேஷ்ராஜன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் தளபதியும், முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், மதுரையில் குருசாமி, அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ், வீரபாண்டி ஆ.இராஜா, திருச்சி குடமுருட்டி சேகர் என்று கழக முன்னணியினர் கடந்த ஓராண்டுக் காலமாக தொடர்ந்து கைது செய்யப்பட்டு, அவர்கள் ஜாமீனில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பிறகும், மீண்டும் அவர்கள் மீது ஏதோ பொய்ப் புகார்களைப் பெற்று வழக்கு தொடர்ந்தும், அதிலும் ஜாமீன் பெற்றால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தைப் பிறப்பித்து சிறையிலே அடைத்தும் தொடர்ந்து நடந்து வந்த பிறகு வேறு வழியில்லாமல் அத்தகைய பழி வாங்கும் போக்கினைக் கண்டிக்கும் வகையிலே மாத்திரமல்லாமல், அத்துடன் மக்கள் பிரச்சினைகளையும்

இணைத்து கழகத் தலைமைச் செயற்குழுவினைக் கூட்டி அதிலே ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அதற்குப் பிறகுதான் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டு முறைப்படி நடைபெற்றுள்ளது. ஆனால் இத்தனையையும் மார்க்சிஸ்ட் தலைவர் ராமகிருஷ்ணன் வசதியாக மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு தி.மு. கழகம் மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடாமல், முன்னாள் அமைச்சர்களின் கைதுக்காக மட்டும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தியிருப்பதாகக் குற்றஞ்சாட்டுவது நியாயம்தானா? அதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலையா?

தோழர் ராமகிருஷ்ணன் அத்துடன் நிறுத்தவில்லை. தி.மு.க.விற்கு பதில் சொல்லும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நில அபகரிப்பு குறித்து எத்தனை புகார்கள் வந்துள்ளன, எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, எவ்வளவு நிலம் மீட்கப்பட்டுள்ளது என்று அ.தி.மு.க. அரசு பேரவையில் அளித்த விளக்கங்களையெல்லாம் தனது அறிக்கையிலே தொகுத்துக் காட்டியிருக்கிறார். அது அவருடைய கடமையென்று கூடக் கூறலாம்! ஆனால் அவருடைய அறிக்கையிலேயே மொத்தம் பெறப்பட்ட நில அபகரிப்பு வழக்குகள் 703 என்றும், அதிலே தி.மு.க.வினர் மீது மட்டும் 42 வழக்குகள்தான் என்றும் அரசு தகவல் தெரிவிக்கிறது என்று சொல்லியிருப்பதி லிருந்தே, தி.மு.கழகத்தினர் மீது எந்த அளவிற்கு அரசு காழ்ப்புணர்ச்சியோடு விரைந்து நடவடிக்கை எடுக்கின்றது என்பதையும், மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அக்கறை காட்டவில்லை என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தொடர்ந்து தனது அறிக்கையில் சேலம் அங்கம்மாள் காலனி பிரச்சினை குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். அதிலே தி.மு. கழக ஆட்சியின்போது, பள்ளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளரும், சேலம் வருவாய் கோட்டாட்சியரும் கூறியதையும் தெரிவித்திருப்பதிலிருந்து கழக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நான் செய்தியாளர்களிடம் கூறியதைத்தான் உறுதி செய்துள்ளார். அதன்பிறகு அந்தக் காலனியிலே உள்ளவர்கள் தாக்கப்பட்டது குறித்து, தற்போது அ.தி.மு.க. அரசு தம்பி வீரபாண்டி ஆறுமுகம் மீது எடுத்துள்ள நடவடிக்கை நீதிமன்றத்திலே உள்ளது. வழக்கு விசாரணை இன்னமும் முடியவில்லை.

விசாரணை முடிந்து தவறு என்று நீதிபதி கூறினால் நடவடிக்கை எடுக்கட்டும். ஆனால் இந்த அரசே நீதிபதியாகி, 75 வயதுக்கு மேலான முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்கள் ஒரு இதய நோயாளி என்பது தெரிந்திருந்தும், நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்த பிறகும், வேண்டுமென்றே வழக்குக்கு மேல் வழக்குப் பதிவு செய்வதும், ஜாமீனில் வெளியேவர முடியாமல் குண்டர் சட்டத்தைப் பிறப்பித்திருப்பதும், சேலம் சிறை, கோவை சிறை, புழல் சிறை, வேலூர் சிறை என்று அங்குமிங்கும் வேனிலேயே இழுத்தடிப்பதும் நியாயம் என்று ராமகிருஷ்ணன் கருதுகிறாரா? அது பழிவாங்கும் செயலா? அல்லவா? அவருடைய கட்சியிலே மாவட்டக் கழகச் செயலாளர் ஒருவர் மீது நடவடிக்கை எடுத்தால் எந்த அளவிற்கு கண்டன அறிக்கைகளைக் கொடுத்து, போராட்டம் நடத்துகிறார்கள்? ஆனால் கழகத்தின் முன்னாள் அமைச்சர் மீது தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கைகளை அரசு எடுக்கும் போது, அதற்காகப் போராட்டம் நடத்துவது தவறா? அப்படி போராட்டம் நடத்தும்போதுகூட, அதற்காக மட்டுமே போராட்டம் நடத்தாமல் மக்கள் பிரச்சினைகளையெல்லாம் இணைத்துக் கொண்டுதானே தி.மு. கழகம் போராட்டம் நடத்தியது. செயற்குழு தீர்மானத்திலேயே “காவிரி டெல்டாப் பகுதிகளில் கனவாகிப் போன குறுவைச் சாகுபடி; கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய அண்டை மாநிலங்களின் ஆரோக்கியமற்ற அணுகுமுறைகளினால் தீர்க்கப்படாமல் நீண்டு கொண்டே வரும் நதி நீர்ப் பிரச்சினைகள்; அரிசி விலை உயர்வு, மளிகைப் பொருள்கள் - காய்கறிகள் விலை உயர்வு; பேருந்துக் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, இல்லாத மின்சாரத்திற்கு இதுவரை இல்லாத கட்டண உயர்வு; ஆசிரியர்கள் இட மாறுதலிலிருந்து கட்டட அனுமதி வரை அனைத்துத் துறைகளிலும் தலைவிரித்தாடும் ஊழல் சாம்ராஜ்யத்துக்கே உரிய முறைகேடுகள் - கையூட்டுக் கலாச்சாரம்; பொதுத் தேர்தலின் போது போட்டி போட்டுக் கொண்டு செய்யப்பட்ட அறிவிப்புகளின் அலங்கோல நடைமுறைகள்; நீதிமன்றக் கண்டனங்கள் என தமிழகத்தின் கழுத்தை நெரித்து நிலைகுலையச் செய்திடும் நிர்வாகப் பிரச்சினைகள் எண்ணிக்கையிலும், பரிமாணத்திலும் நாள்தோறும் வளர்ந்து அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கும் நெருக்கடியிலிருந்து; திசை திருப்பும் தந்திரமாகவே, “விளம்பர மேலா”, “காணொலிக் காட்சி மாயா

ஜாலங்கள்”, “கழகச் செயல் வீரர்கள் கைது - குண்டர் சட்டம்” “நீதிமன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்படாததும், சுட்டிக்காட்டி தலையில் குட்டிக்காட்டப்பட்டதுமான கழகத்தை நெரிக்கும் காட்டு மிராண்டித்தனமான சட்டப் பிரயோகங்கள்” ஆகியவற்றை அ.தி.மு.க. அரசு தொடர்ந்து செய்துவருகிறது என்பதைக் தமிழ்நாட்டவர் உணரத் தலைப்பட்டுவிட்டனர்” என்றெல்லாம் விரிவாக எழுதிவிட்டுத்தான் “இதையெல்லாம் கண்டித்து” சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப் போவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை ராமகிருஷ்ணன் மறைத்துவிட்டு அறிக்கை விட்டிருப்பது சரிதானா என்பதை அந்தக் கட்சியிலே உள்ள தோழர்களாவது எண்ணிப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை விளக்கங்களையும் தந்திருக்கிறேன்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலே உள்ள தோழர்களும், முன்னணியிலிரும் ஆளுங்கட்சியைக் கடுமையாக விமர்சிக்கின்ற நேரத்தில் மேலிடத்திலே உள்ள ஓரிருவர் முதலமைச்சரைப் பாராட்டுகிறார்கள் என்றால், அதற்கான காரணத்தை நம்மால் யூகித்துக் கொள்ள முடிகிறது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலே ஏன் இந்த கொள்கை மாறுபாடு?

தோழர் ராமகிருஷ்ணன் தனது அறிக்கையின் முதல் பகுதியிலே தி.மு. கழகத்தின் மீது இந்த அளவிற்கு குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தாலும், அவரது அறிக்கையின் இரண்டாவது பகுதியிலே ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வினர் நடத்திய நில அபகரிப்பு பற்றியும் எழுதியிருப்பது நமக்கு ஓரளவு ஆறுதலைத் தருகிறது. ஆனால் அப்போதும்கூட, ஆளுங்கட்சியைக் குறை கூறும்போதே, ஆட்சியிலே இல்லாத தி.மு.கழகத்தையும் அதனுடன் சேர்த்துக் கொண்டு இணைத்துத் தாக்கி அறிக்கை விடுவது என்பது - ஆளுங்கட்சியின் தலைமை எங்கே தங்களைக் கோபித்துக் கொண்டுவிடப் போகிறதோ என்றெண்ணி, கழகத்தையும் ஆளுங்கட்சியோடு சேர்த்துக் கொண்டு சம நிலையில் அறிக்கை விடுகிறதோ என்றுதான் எண்ண வேண்டியுள்ளது.

தி.மு. கழகம் ஆளுங்கட்சியாக இருந்த போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் என்னைத் தலைமைச் செயலகத்திலே சந்தித்து, அ.தி.மு.க.வின் தலைவிக்கு மிகவும் வேண்டியவர்கள் சிறுதாவூர் கிராமத்தில் தலித்துகளுக்கு தரப்பட்ட நிலங்களையெல்லாம் ஆக்ரமித்து விட்டார்கள் என்று புகார்

கொடுத்ததையும், அந்தப் புகாரின் மீது கழக அரசு நடவடிக்கை எடுத்து, விசாரணைக் கமிஷன் அமைத்ததையும், அந்த விசாரணைக் கமிஷன் நீதிபதி திரு.சிவசுப்பிரமணியம் அவர்கள் அறிக்கை கொடுத்ததையும், அந்த அறிக்கை தற்போது அ.தி.மு.க. ஆட்சியிலே எந்தவிதமான நடவடிக்கைக்கும் உள்ளாகாமல் இருப்பதையும் பற்றி மௌனமாக இருப்பது ஏன்? தி.மு. கழகம் என்றால் மட்டும் வெறுப்பைக் காட்ட முன் வருவது ஏன்? இவை எல்லாமே அரசியல்தானா?

அன்புள்ள, மு.க. 09-07-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 349–355. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 46-இல் மேலும் கடிதங்கள்