அடக்கம்

முரசொலி · தொகுதி 46 · கடிதம் 3635

முரசொலி கடிதங்கள் · 3635

களம் காணத் துடிக்குது, கழகப்படை!

நாள் 27.6.2012சுமார் 6 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3635. களம் காணத் துடிக்குது, கழகப்படை!

உடன்பிறப்பே,

22-6-2012 அன்று நடைபெற்ற கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் - வருகிற ஜூலை 4ஆம் தேதியன்று காலை தொடங்கி சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவதென்றும், அதை நடத்துவதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றியும் விளக்கமாகத் தெரிவித்ததோடு - போராட்டத்திற்கு முன்னோட்டமாக மாவட்டத் தலைநகரங்களிலும், வட்டம் மற்றும் பெரு நகரங்களிலும் அறப்போர் விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடத்துவதென்றும் முடிவு செய்ததோடு - அறப்போர் விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களையும், அதில் கலந்து கொள்வோர் பற்றிய விவரங்களையும் விரைவில் தலைமைக் கழகம் அறிவிக்குமென்று சொல்லப்பட்டிருந்தது.

கழகத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர்களாக சுமார் 500 பேர் இருக்கிறார்கள். முப்பதுக்கு மேற்பட்ட மாவட்டக் கழகங்கள் இருக்கின்றன. அதுதவிர மாநகர் மாவட்டங்கள் இருக்கின்றன. கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர்களாக தம்பிகள் ஆ. இராசாவும், திருச்சி என்.சிவாவும் செயற்குழுத் தீர்மானத்திற்குப் பிறகு அவரவராக மாவட்டக் கழகச் செயலாளர்களையும், கழகத் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோரையும் தொடர்புகொண்டு கலந்தாலோசித்து பொதுக்கூட்டம் நடைபெறும் தேதிகளையும், பேச்சாளர்களையும் அறிவித்ததோடு, மற்ற பேச்சாளர்களைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் எந்தெந்தப் பேச்சாளர்கள் என்ற பட்டியலையும் “முரசொலி”யில் அறிவித்திருந்தார்கள். நான்கூட அதைப் பார்த்தவுடன் கொள்கை பரப்புச் செயலாளர்களைத் தொடர்பு கொண்டு, எந்தெந்தப் பேச்சாளர்கள், எந்தெந்தத் தேதிகளில், எந்தெந்த ஊர்களில் என்ற விவரம் வெளியிடப்பட்ட பட்டியலில் தெளிவாகவும், விவரமாகவும் இல்லையே

என்று சுட்டிக்காட்டினேன். அதற்குள் சில பேச்சாளர்களுக்கு தங்கள் பெயர்கள் குறிப்பிடப்படவில்லையே என்று கோபம் வருவதும்; அறப்போராட்ட அணிவகுப்பில் இடம் பெறாமல் போய் விடுவோமோ; என்ற ஆதங்கத்தால்!

நேற்று (25-6-2012) மாலையில் நானும், பொதுச் செயலாளரும் தலைமைக் கழகத்திலே அமர்ந்து கொள்கைப் பரப்புச் செயலாளர்களோடு கலந்துபேசி மாவட்டக் கழகச் செயலாளர்களோடு தொடர்புகொண்டு அறப்போர் விளக்கப் பொதுக் கூட்டங்கள் எங்கெங்கே நடைபெறும் என்ற விவரங்களைத் தொடர்ந்து வெளியிடவும் செய்து, அந்தப் பட்டியலும் இன்று - “முரசொலி”யிலே வெளிவந்துள்ளது.

கழக முன்னணியினரிடத்திலும், தொண்டர்களிடத்திலும் இந்தப் போராட்டம் குறித்து இந்த அளவிற்கு எழுச்சியும், ஆர்வமும் இருந்த போதிலும், ஆளுங்கட்சியின் விளம்பரத்துக்காக காத்துக் கிடக்கும் இரண்டு ஏடுகளுக்கு இந்த எழுச்சியையும் வேகத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் பொய்ச் செய்தி வெளியிட்டு, தங்கள் எரிச்சலைத் தீர்த்துக் கொள்ள முயன்றிருக்கிறார்கள். குறிப்பாக “தினமலர்”, 24-6-2012 தேதிய இதழில், “நமது நிருபர்” தந்த செய்தியாக, “தி.மு.க.வில் அதிருப்திக் குரல் போராட்ட அறிவிப்பால் போர்க்கொடி” என்ற தலைப்பில் - கட்சி நலனுக்காக இல்லாமல் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக தொண்டர்கள் சிறைக்குச் செல்ல வேண்டுமா என்றெல்லாம் கேட்டதாக தங்கள் “ராஜ விசுவாசத்தைக்” காட்டிக் கொண்டுள்ளார்கள். அதைப் பார்த்து விட்டு “தினமணி” நாளிதழோ, அதே “நமது நிருபர்” கொடுத்த தகவலாக, “சவாலில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் - கலக்கத்தில் தொண்டர்கள்” என்ற தலைப்பில் போராட்டத்தைத் தொண்டர்கள் ஆரிக்கவில்லை என்று தங்களின் “அம்மா அபிமானத்தை” தெரிவித்து மகிழ்ந்துள்ளார்கள்.

இப்படிப்பட்டவர்களின் காழ்ப்புணர்ச்சியும், வயிற்றெரிச்சலும் நமக்குப் புரிகிறது என்ற போதிலும் இந்தச் செய்திகளைப் பார்த்துவிட்டு, ஒவ்வொரு கழகத் தோழனும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு எப்படியும் மகத்தான வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதிலும், சிறைக்குப் போயே தீர வேண்டும் என்பதிலும் வேகமாக இருப்பதையும், என் தொண்டர்களை விட, கழக முன்னணியிலே இருப்பவர்களே,

சிறைக்குச் செல்லத் தயாராகி விட்டோம் என்பதையும் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் ஆர்வத்தோடு சொல்லி வருகிறார்கள்.

ஆனாலும் பேச்சாளர்கள் கூட்டத்தில் என்னை விட்டு விட்டார்களே, போராட்டக் களத்திற்கு என்னை அழைக்காமல் இருந்து விட்டார்களே, என் பெயரைக் குறிப்பிடவில்லையே என்பதில் சிலருக்கு வருத்தம்! விரல்விட்டு எண்ணத்தக்க ஒருசிலர் இவ்வாறு கோபித்துக் கொண்டபோதிலும், ஒட்டுமொத்தமாக இந்தப் போராட்டத்திற்காக கழகத் தோழர்கள் இடையே ஏற்பட்டுள்ள எழுச்சியைப் பற்றி பல மாவட்டக் கழகச் செயலாளர்களும், முன்னணியினரும் தொடர்ந்து தொடர்பு கொண்டு செய்திகளைச் சொல்லும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

செயற்குழுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அடுத்த நாளிலிருந்து தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் “முரசொலி”யைப் பிரித்தால் எல்லா மாவட்டங்களிலும், பகுதிகளிலும் மாவட்டக் கழகக் கூட்டங்களும், பகுதிக் கழகக் கூட்டங்களும் நடைபெறும் விவரங்கள் - நிர்வாகிகளின் அவசரக் கூட்டங்கள்! இதோ இன்றைய முரசொலியில் விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் தம்பி பொன்முடி விடுத்துள்ள அறிவிப்பில்; அவருடைய மாவட்டத்தில் ஜூலை 4ஆம் தேதியன்று எட்டு இடங்களில் மறியல் இடங்கள் எவையெவை, அங்கே தலைமை ஏற்பவர் யார், முன்னிலை வகிப்போர் யார் என்றும் நீண்ட பட்டியல் வெளிவந்துள்ளது.

திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர், தம்பி கலைவாணன் அந்த மாவட்டத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஒவ்வொரு மணிக்கும் ஒரு அணியாகப் பிரித்து, ஒவ்வொரு அணியும் யாருடைய தலைமையில் கலந்து கொள்ளும் என்று திட்டச் செய்து எனக்குப் பட்டியலை அனுப்பியிருக்கிறார்.

அதுமாத்திரமல்ல; சில மாவட்டங்களில் கழகத்தினரிடையே இதற்கு முன்பு இருந்த சிறு சிறு மாச்சரியங்களையெல்லாம் மறந்து விட்டு, இந்தப் போராட்டக் களத்திலே உணர்வு பூர்வமாக ஒன்றாகச் செயல்படுகிறார்கள் என்ற செய்திகளும் மன நிறைவளித்திடும் வண்ணம் வந்துகொண்டுள்ளன. உதாரணத்திற்கு ஒன்று. நேற்றையதினம் கழக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பி ரிஷி ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார்.

கழகச் செயற்குழு நடைபெற்றபோது அதிலே பேசிய அந்த மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி சுப. தங்கவேலன், தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பேசியதை யொட்டி, நான் பேசும்போது “ராமநாதபுரம் மாவட்டத்திலே கழகத் தோழர்கள் ஒற்றுமையாகப் போராடுவோம் என்று அறிவித்திருப்பதே, இந்தப் போராட்டம் வெற்றி பெறும் என்பதை உணர்த்துகிறது” என்று குறிப்பிட்டிருந்தேன். அதைப்பற்றி தம்பி ரிஷி எழுதும்போது, “தாங்கள் செயற்குழுவில் எங்கள் மாவட்டத்தைப் பற்றி வருத்தப்பட்டபோது மிகவும் வேதனையாக இருந்தது. உங்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதுதான் தொண்டர்களாகிய எங்களைப் போன்றவர்களின் கடமை. இனிமேல் எங்கள் மாவட்டத்தில் நீங்கள் வருந்தும்படியாக எந்த நிகழ்ச்சியும் நடைபெறாது. தாங்கள் வருந்தும்படி ஏதாவது நடந்திருந்தால் எங்களை மன்னிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். உள்ளூர் கோபதாபங்களின் காரணமாக ஒருசில மாவட்டங்களில் உள்ள கோஷ்டிப் பூசல்களை ஜூலை 4ஆம் தேதிய போராட்டம் ஒற்றுமைப்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நீர் இடித்து நீர் விலகி விடுமா என்ன?

தொண்டர்களின் ஆர்வத்தையும், எழுச்சியையும் காணும்போது, இந்தப் போராட்டம் மிகப் பெரிய வெற்றியினை அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் இந்தப் போராட்டத்தை நாம் தேவையில்லாமல் நடத்தவில்லை. போராடவேண்டும் என்பதற்காகவும் நடத்தவில்லை. கடந்த ஓராண்டுக் காலத்தில் அ.தி.மு.க. ஆட்சியினர் நடத்தி வருகின்ற அராஜகங்கள் எத்தனை? கழகத்தினர் எத்தனை பேர் மீது பொய் வழக்குகள்? எத்தனை பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்? எத்தனை பேர் மீது அடுக்கடுக்கான புகார்களைச் சுமத்தி காவல் துறை மூலமாக நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்? எத்தனை பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது? அந்தக் குண்டர் சட்டங்கள் பிறப்பித்தது சரியானது என்று ஏதாவது ஒரு வழக்கிலாவது சொல்லப்பட்டிருக்கிறதா? நீதிபதிகள் இந்தப் பொய் வழக்குகளுக்கு எதிராக எத்தகைய கண்டனங்களையெல்லாம் தெரிவித்திருக்கிறார்கள்? அதைப்பற்றி இந்த ஆட்சியினர் ஏதாவது பதில் சொல்கிறார்களா?

அ.தி.மு.க. ஆட்சியினர் எதிர்க்கட்சியினரை மட்டுமா பழி வாங்குகிறார்கள்? தங்களுக்கு யார் யாரைப் பிடிக்கவில்லையோ, யார் யாரை அடக்கி ஆள வேண்டுமென்று எண்ணுகிறார்களோ அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் அறிய மாட்டார்களா? உதாரணமாக அவருடைய உடன்பிறவாச் சகோதரி சசிகலா, இன்றைக்கும் அவருடனே, அவர் வீட்டிலேயே இருப்பவரின் கணவர் நடராஜன் மீது 6 வழக்குகள் - விளார் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் தனக்குச் சொந்தமான 15 ஆயிரம் சதுர அடி நிலத்தை அபகரித்து விட்டதாக நடராஜன் தரப்பு மீது புகார் கொடுத்தார். வின்னசென்ட் ஆல்பட் என்பவர் தனது மனைவி மேரி பெயரில் உள்ள 4200 சதுர அடி வீடு மற்றும் கடைகளை நடராஜன் தரப்பினர் இடித்துத் தள்ளி ஆக்கிரமிப்புச் செய்ததாக புகார் கொடுத்தார். தஞ்சை அன்பு நகரைச் சேர்ந்த ரங்கராஜன் என்ற ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் விளாரில் உள்ள தனது 25 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து விட்டதாகப் புகார் கொடுத்தார். திருச்சி கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த வரதராஜன் நிலத்தை விற்றதில் பண மோசடி செய்து ஏமாற்றியதாகப் புகார் கொடுத்தார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி அருகே சகுந்தலா என்பவருக்குச் சொந்தமான வீட்டை இடித்து ஆக்கிரமித்ததாகவும், விளார் கிராமத்தில் அமலபுஷ்ப மேரிக்குச் சொந்தமான 4,800 சதுர அடி பரப்பளவுள்ள இரு மனை இடங்களை நடராஜன் தூண்டுதல் காரணமாக உறவினர்கள் மிரட்டி பத்திரம் பதிவு செய்து கொண்டதாகவும் கூறப்பட்ட புகாரின் பேரில் நடராஜன் மற்றும் சிலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு - இந்த வழக்குகளின் காரணமாக அவர் கைது செய்யப்பட்டார். அந்த வழக்குகள் எல்லாம் என்னவாயிற்று?

வீட்டை இடித்து ஆக்கிரமித்தது தொடர்பான புகாரைக் கொடுத்தவரே திடீரென்று வாபஸ் பெற்றார். எப்படி அவர் வாபஸ் பெற்றார்? முதலில் எதற்காக புகார் கொடுத்தார்? நீதிமன்றத்தின் நேரம் எவ்வளவு வீணடிக்கப்பட்டது? பொய்ப்புகார் என்றால் அதை நம்பி காவல் துறை எப்படி நடவடிக்கை எடுத்தது? அது பொய்ப்புகாரா? உண்மையான புகாரா? பூர்வாங்க ஆதாரம் எதும் உள்ளதா? என்று விசாரித்திருக்க வேண்டாமா? உண்மையான புகார் என்று தெரியாத பட்சத்தில் கைது செய்யலாமா? உண்மையான எத்தனையோ புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க

முன்வராத போலீசார், பொய்ப்புகார் மீது எப்படி அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்தார்கள்? அதுவும் ஜெயலலிதா, சசிகலா மீது நடவடிக்கை எடுத்து நாளேடுகளில் அறிக்கை கொடுத்தவுடன், திடீரென்று புகார்கள் எப்படி வந்தன? சசிகலா மீண்டும் வந்து விட்டதால்தான், புகார் கொடுத்தவர்கள் அவற்றைத் திரும்பப் பெறுகிறார்களா அல்லது திரும்பப்பெற வைக்கப்படுகிறார்களா? அதற்குரிய விலை என்ன?

அந்த நடராஜன் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு 12-5-2012 அன்று கொடுத்த பேட்டியில் என்ன சொன்னார்? “என் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய் வழக்குகள். என் மீது போடப்பட்ட ஆறு வழக்கில் 2 பேர் தற்போது வாபஸ் பெற்றுள்ளனர். நில அபகரிப்புச் சட்டத்தை என் மீது மோசடியாகப் பயன்படுத்தி உள்ளனர். இதற்காக தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி., திருச்சி ஐ.ஜி., டி.ஐ.ஜி., உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டில் 3 ரிட் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளேன். ஜெ. வீட்டில் இருந்து நான் வெளியேறி 20 ஆண்டுகள் ஆகிறது. என்னை கட்சியில் இருந்து நீக்கியதாக அறிக்கை வெளியிட்டார். நான் கட்சியில் உறுப்பினராகவே இல்லை. அப்படி இருந்ததாக அவர் தான் நிரூபிக்க முடியுமா? அவர்கள் என்ன செய்தாலும் அமைதியாக இருந்தேன். இனி அப்படி இருக்க மாட்டேன். நேரடியாக அரசியலில் இறங்குவேன். 2011 தேர்தல் அறிக்கையை தயாரித்துக் கொடுத்ததே நான்தான். பொன்னர்ஜ், பன்னீர்செல்வம் ஐ.ஏ.எஸ்., ஆகியோர்தான் லேப்டாப் உள்ளிட்ட இலவசங்களைச் சேர்த்தோம். அந்த அறிக்கையின் முதல் பிரதி என்கிட்டேதான் இருக்கு. சசிகலா மீண்டும் சேர்வதற்கு முன்னாடி அவர் பெயரில் வந்த அறிக்கை, அவர் கொடுத்த அறிக்கை அல்ல. என் மனைவிக்கு அறிக்கை தயாரிக்கத் தெரியாது. 3 முறை முதல்வராக இருப்பவராலேயே ஒரு அறிக்கை தயாரிக்க முடியாது. என்னை மாதிரி ஒரு இன்ஜினியர்தான் ரெடி பண்ணித்தரணும். அப்படிச் செய்தாலும் ஒரு குறிப்புக் கூட இல்லாமல் பேசத் தெரியாது. என்னை நில அபகரிப்பில் கைது செஞ்சீங்களே, எத்தனை ஏக்கரை மீட்டீங்க? சார்ஜ் ஷீட்டாவது போட முடியுமா? சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு 5 மணி நேரத்தில் காரில் போயிடலாம். என்னை கைது செய்து 12 மணி நேரம் அலைக்க

கழிச்சாங்க. டி.ஜி.ஜி. அமல்ராஜ் தஞ்சாவூர் பக்கத்தில் செங்கிப்பட்டியில் ஒரு நடுக்காட்டில் வண்டியை நிறுத்தி வைத்துவிட்டார். எதற்கு? என்னவுண்டரில் என்னைச் சாகடிக்கவா? திருச்சி ஐ.ஜி. அலெக்சாண்டர் மோகன் தஞ்சாவூரில் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் உட்கார்த்துக்கிட்டு எல்லா இன்ஸ்பெக்டர்களையும் கூப்பிட்டு என்மேலே ஏதாவது ஒரு கேஸ் போட்டுட்டு வாங்கன்னு உத்தரவு போடுறாராம்

இப்படியெல்லாம் பேட்டி கொடுத்து ஏடுகளில் எல்லாம் வெளிவந்ததே? இந்த அ.தி.மு.க. அரசு இதற்கு என்ன பதில் சொல்கிறது? இவர் ஒருவர் மட்டுமா? திவாகரன் மீதான வழக்கு என்னவாயிற்று? ராவணன் மீதான வழக்கு என்னவாயிற்று? இதைக் கேட்டால் குற்றமா? தினமணியும் தினமலரும் சீறுவதா?

மக்கள் ஐந்தாண்டுகளுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றால் தாராளமாக ஆண்டு விட்டுப் போகட்டும். கையிலே அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வதா? அதற்காகத்தான் ஜூலை 4ந்தேதிய போராட்டம். இன்று புதன் கிழமை. அடுத்த புதன்கிழமைதான் சிறை நிரப்பும் போராட்டம். ஒரு வாரம்தான் உள்ளது. அதற்கான முனைப்பான முயற்சிகளில் இன்றைக்கே ஈடுபடத் தயாராவீர்! அதற்கான அறப்போர் விளக்கக் கூட்டங்களை அமைதியான முறையில் தமிழகம் எங்கும் நடத்திடுவீர்! 22ஆம் தேதி புரசைவாக்கத்தில் கடலெனத் திரண்ட மக்களிடையே நான் குறிப்பிட்டபடி “தமிழன் யாருக்கும் தாழான் - யாரையும் தாழ்த்த மாட்டான்” என்பதை நிரூபித்திடுவீர்.

அன்புள்ள, மு.க. 27-06-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 329–335. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 46-இல் மேலும் கடிதங்கள்