முரசொலி கடிதங்கள் · 3633
யார் பெற்ற பிள்ளைக்கு; யார் “தாய் முறை” கோருவது?
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3633. யார் பெற்ற பிள்ளைக்கு; யார் “தாய் முறை” கோருவது?
உடன்பிறப்பே,
புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தல் சூறாவளி பிரச்சாரத்திற்காக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று மதியம் தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்று ஒன்பது இடங்களிலே பிரச்சாரம் செய்துவிட்டு, நேற்றிரவே சென்னை திரும்பியிருக்கிறார். அந்தத் தொகுதியிலே திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை. இருந்தாலும் ஜெயலலிதாவுக்கு தி.மு. கழகத்தையும் என்னையும் தாக்கிப் பேசா விட்டால் பேச்சு வராது போலும்! தனது பேச்சின் தொடக்கத்தில், அ.தி.மு.க.வின் ஆதரவோடு அந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சகோதரர் முத்துக்குமரன் மரணமடைந்ததையொட்டி இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்று மறக்காமல் சொல்லியிருக்கிறார். ஆனால் அந்தத் தொகுதியில் யாரை நிறுத்துவது என்ற பிரச்சினை எழுந்தபோது, அந்தத் தொகுதியில் ஏற்கனவே பொதுத்தேர்தலில் நின்றவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்பது மறந்து போய் விட்டது போலும்! அங்கே அ.தி.மு.க. நிற்குமென்று தன்னிச்சையாகவே அறிவித்தார்கள். அது ஏற்கனவே தோழமைக் கட்சியாகிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நின்ற தொகுதி ஆயிற்றே, குறைந்தபட்சம் அரசியல் நாகரிகம், பண்பாடு கருதியாவது அந்தக் கட்சியின் தலைவர்களை அழைத்து ஒரு வார்த்தை கேட்டுக் கொள்வோம் என்றுகூட நினைக்கவில்லை. அப்படி அழைத்துக் கேட்டால்கூட, அதற்கு மறுப்பு தெரிவிக்கின்ற தலைவரா அந்தத் தலைவர்? எனவே மரியாதைக்காக ஒருமுறை அழைத்துக் கேட்டிருக்கலாம்! ஆனால் அதற்குக்கூட மனம் வரவில்லை. ஆனால் வேட்பாளரை நிறுத்தி விட்டு, தற்போது வாக்காளர்கள்கின்ற நேரம் வந்ததும் இறந்துபோன முத்துக்குமாரனின் குடும்பத்தினரை கோட்டைக்கே அழைத்து முதல் அமைச்சர் ஜெயலலிதா தரிசனம் தருகிறார். அந்தக் கட்சியின் தலைவர்களை அழைத்து
கோட்டையில் பேச்சு நடத்தி, புகைப்படத்தை ஏடுகளிலே வெளியிடுகிறார், தற்போது புதுக்கோட்டைக்குச் சென்று பிரச்சாரத்தைத் தொடங்கிய போதும் சகோதரர் முத்துக்குமரன் அகால மரணமடைந்ததையொட்டி நடைபெறும் இடைத்தேர்தல் என்றெல்லாம் ஞாபகத்தோடு சொல்லியிருக்கிறார்!
புதுக்கோட்டை தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா பேசும்போது, “சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது நடைபெறுவது “இடைத்” தேர்தல் அல்ல; ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியின் செயல்பாடுகளை “எடை” போடும் தேர்தல் என்று சொன்ன தி.மு.க. தலைவர் கருணாநிதி, இந்த “இடைத்” தேர்தலை எதிர்கொள்ள முடியாமல் “நடை”யைக் கட்டி விட்டார்” என்று நாம் அந்தத் தொகுதியில் போட்டியிடாமல் புறக்கணித்ததைப் பற்றிக் கிண்டல் செய்திருக்கிறார்.
அவரே தனது பேச்சில் புதுக்கோட்டை நகராட்சியின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசின் சார்பில் சிறப்பு உதவித் தொகையாக 50 கோடி ரூபாய் வழங்கப்பட்டதையும், மேலும் நூற்றாண்டு விழா நினைவுத் தூண் மற்றும் வளைவுகள் அமைக்க உத்தரவிட்டிருப்பதையும் சொல்லியிருக்கிறார். இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியில் இவ்வாறு பிரத்தியேகமாக அரசின் சார்பில் தேர்தல் விதி முறைகளுக்கு மாறாக செய்வது சரிதானா என்பதை தேர்தல் ஆணையம் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. அதையெல்லாம் ஏற்கனவே உணர்ந்த காரணத்தாலும், தேர்தல் அறிவிப்புக்கு முன்பேயே அமைச்சர்கள் பட்டாளத்தையே அந்தத் தொகுதியில் கொண்டு போய் குவித்து காவல் துறையினரின் துணையோடு பணத்தை வாரிவாரி இறைத்த காரணத்தாலும்தான் திராவிட முன்னேற்றக் கழகம் அந்தப் புதுக்கோட்டை இடைத்தேர்தலிலே போட்டியிடுவதில்லை என்று அறிவித்தது.
இதற்கு முன்பு அ.தி.மு.க. இடைத்தேர்தல்களில் “நடை”யைக் கட்டிய நிகழ்ச்சிகள் நடந்ததே கிடையாதா? 18-8-2009 அன்று கம்பம் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றபோது அ.தி.மு.க. அங்கே நிற்கவில்லை. தி.மு.க. சார்பில் கம்பம் ராமகிருஷ்ணன் அங்கே போட்டியிட்டபோது, அவரை எதிர்த்து தே.மு.தி.க. தான் போட்டியிட்டது.
18-8-2009 அன்று திருவைகுண்டம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றபோது, தி.மு. கழகம் அரசியல் நாகரிகத்தோடு அதற்கு முன்பு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அந்தத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுத்து - காங்கிரஸ் வேட்பாளராக திரு. சுடலையாண்டி போட்டியிட்ட போது, அந்தத் தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடாமல் “நடை”யைக் கட்டியதை ஜெயலலிதா மறந்து விடலாமா?
அதுபோலவே அதே நாளில் நடைபெற்ற தொண்டாமுத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்டதா? கிடையாதே! தி.மு.க.வின் தோழமைக் கட்சியான காங்கிரஸ் கட்சிதான் நமது அணியின் சார்பில் போட்டியிட்டது. அப்போது ஜெயலலிதா “நடை”யைக் கட்டினாரே தவிர, போட்டியிடவில்லையே?
அதுமாத்திரமல்ல; அதே நாளில் நடைபெற்ற பர்கூர் தொகுதி இடைத்தேர்தலிலும் ஜெயலலிதா “நடை”யைக் கட்டினாரே தவிர, போட்டியிடவில்லையே? தமிழ்நாட்டு மக்களுக்கு ஞாபகம் இருக்காது என்ற நம்பிக்கையில் புதுக்கோட்டையில் சென்று தி.மு.க. “நடை”யைக் கட்டியதாகச் சொன்னாரா?
இன்னும் சொல்ல வேண்டுமா? இளையான் குடியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் என்ன நிலை? அ.தி.மு.க. போட்டியிடவே இல்லை! என்ன காரணம்? “நடை”யைக் கட்டிய செயல்தானா?
2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை தி.மு. கழக ஆட்சியில் நடைபெற்ற 11 சட்டமன்ற இடைத்தேர்தல்கள் அனைத்திலும் தி.மு. கழகமும், அதன் தோழமைக் கட்சியான காங்கிரசும்தான் வெற்றி பெற்று, ஜெயலலிதாவின் அ.தி.மு.க. ஆறு இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பதும், குறிப்பாக பென்னாகரம் தொகுதியில் 27-3-2010 அன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் பி.என்.பி. இன்பசேகரன் 77,669 வாக்குகளையும், இரண்டாவதாக பா.ம.க. வேட்பாளர் ஜி.கே.எம். தமிழ்க் குமரன் 41,285 வாக்குகளையும், மூன்றாவதாகத்தான் ஜெயலலிதாவின் அ.தி.மு.க. 26,787 வாக்குகளையும் பெற்று - குறிப்பாக அ.தி.மு.க. அந்தத் தேர்தலில் மூன்றாவதாக வந்தது மட்டுமல்ல; டெபாசிட் தொகையையே பறி கொடுத்தது.
இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்ற நினைப்போடு ஜெயலலிதா புதுக்கோட்டைக்குச் சென்று அங்கே எதிர்த்துப் போட்டியிடுகின்ற கட்சிகளை “டெபாசிட்” இழக்கச் செய்ய வேண்டுமென்று கிண்டல் செய்து பேசியிருக்கிறார்.
அ.தி.மு.க.வின் தலைவராக அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக இருந்தபோதே, அண்ணாநகரிலும், மயிலாடுதுறையிலும் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் தி.மு.கழகம் வெற்றி வாகை சூடியிருக்கிறது. எனவே அம்மையாரே, “நா காக்க”!
புதுக்கோட்டையில் பேசிய ஜெயலலிதா; மின்சாரத் தடை காரணமாக பொதுமக்கள் வருத்தமாக இருப்பார்கள் என்பதை தான் அறிவேன் என்றும், அதற்குக் காரணம் ஏற்கனவே இருந்த தி.மு. கழக ஆட்சிதான் என்றும், வருங்காலங்களில் மின் தேவை நிறைவு செய்யப்படும் என்று கூறியதோடு, எந்தெந்த மின் திட்டங்களிலிருந்து எவ்வளவு மின்சாரம் விரைவில் கிடைக்கும் என்றோர் பட்டியலையும் அங்கே பேசியிருக்கிறார், இல்லை படித்திருக்கிறார்! அவர் படித்த பட்டியலிலே உள்ள அனைத்து மின் நிலையங்களும்
தி.மு. கழக ஆட்சியிலே அடிப்படை கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்பதை நான் பலமுறை அறிக்கைகள் மூலமாகச் சொல்லியிருக்கிறேன்.
உதாரணமாக எண்ணூர் அனல் மின் நிலைய இணைப்பு மூலமாக 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம், தி.மு. கழக ஆட்சியில்
8-12-2006இல் 3,136 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. அதன் உற்பத்திதான் 2013 ஆகஸ்டில் தொடங்கவுள்ளது. கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தைத்தான் ஜெயலலிதா ஏதோ தனது ஆட்சியில், தன் முயற்சியால் வருகின்ற திட்டம் போல புதுக்கோட்டையில் சென்று பேசியிருக்கிறார்.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 3,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய ஒரு திட்டம்
2-5-2007இல் தொடங்கப்பட்டது. கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட அத்திட்டத்தின் உற்பத்திதான் விரைவிலே வரவுள்ளது.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய வகையில் 2,475 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26-6-2007இல் கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்தின் உற்பத்தி மிக விரைவில் வரவுள்ளது.
உடன்குடியில் பி.எச்.ஈ.எல். மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணைந்து கூட்டுத் திட்டத்தின்கீழ், ஒவ்வொன்றும் 800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக் கூடிய இரண்டு திட்டங்கள் 15-10-2007இல் 8,362 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தைத்தான் மீண்டும் தற்போது இந்த ஆட்சியிலே தொடங்கவுள்ளதாக ஜெயலலிதா அறிவித்தார்.
2006இல் தி.மு. கழக ஆட்சி அமைந்த பிறகு, வருங்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக 2010-2011இல் 1400 மெகாவாட் மின்சாரமும், 2011-2012இல் 3316 மெகாவாட் மின்சாரமும், 2012-2013இல் 1222 மெகாவாட் மின்சாரமும், 2013-2014இல் 1860 மெகாவாட் மின்சாரமும் - ஆக மொத்தம் 7798 மெகாவாட் மின்சாரம் பல்வேறு மின் திட்டங்களின் மூலமாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.
2006ஆம் ஆண்டு தமிழகத்திலே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்த பின்னர் பல்வேறு புதிய தொழிற்சாலைகள் ஆங்காங்கு தொடங்கப்பட்டதால் மின் தேவை அதிகமாயிற்று. 2001 முதல் 2006ஆம் ஆண்டுவரை ஆட்சியிலே இருந்த அ.தி.மு.க.வின் தலைவி ஜெயலலிதா, எதிர்காலத் தேவையைக் கணக்கிட்டு இந்த அளவிற்கு அப்போதே முயற்சிகள் எடுத்திருப்பாரானால், தற்போது மின் பற்றாக்குறையே ஏற்பட்டிருக்காது. தமிழ்நாட்டு மக்கள் அவதிக்கு ஆளாகியும் இருக்க மாட்டார்கள்.
இதையெல்லாம் புதுக்கோட்டை தொகுதி வாக்காளப் பெருமக்கள் அறிய மாட்டார்கள் என்ற தைரியத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா அங்கே போய் கழக ஆட்சியினால்தான் மின்சாரப்
பற்றாக்குறை, நான்தான் வந்து அவற்றை நிவர்த்தி செய்தேன் என்றெல்லாம் கதை விட்டிருப்பதை நன்றாகவே அறிவார்கள். சிலரை சில நாள் ஏமாற்றலாம், பலரை பல நாள் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது!
அன்புள்ள, மு.க. 11-6-2012
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 316–321. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.