முரசொலி கடிதங்கள் · 3632
“OTHERWISE - ஜனாதிபதி”
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3632. “OTHERWISE - ஜனாதிபதி”
உடன்பிறப்பே,
இன்றைய தினமணி நாளேட்டில் “கடவுளுக்குத்தான் வெளிச்சம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதன் தொடக்கமே “பொறுப்பான பதவிகளில் தகுதியானவர்கள் அமரும்போது தான் அந்தப் பதவிக்குப் பெருமை, பதவியால் அலங்கரிக்கப்படுபவர் களைவிட யாரால் அந்தப் பதவி அலங்கரிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் மரியாதை. அரசியல் சட்ட அமைப்புகளான குடியரசுத் தலைவர், உச்ச நீதி மன்ற நீதிபதி, தலைமைத் தேர்தல் ஆணையர், தலைமைத் தணிக்கை ஆணையர், ஆளுநர்கள் போன்ற எல்லா பதவிகளுமே சரியானவர்கள் பதவியில் இருந்தால் மட்டுமே அந்தப் பதவிக்கும் பெருமை, தேசத்துக்கும் பெருமை” என்று ஆரம்பிக்கின்றது. இந்தக் கருத்துக்குச் சொந்தக்காரர் யார் தெரியுமா? எஸ். குரு மூர்த்தி. அவர் யார் என்பதை விளக்கத் தேவையில்லை; அனைவரும் அறிந்த உண்மை என்பதால்!
அந்த கட்டுரையாளர் குறிப்பிடும் இந்தப் பதவிகளில் எல்லாம் “அவர்” அமர்ந்தால்தான் அந்தப் பதவி அலங்கரிக்கப்படுமாம்; அப்போதுதான் அந்தப் பதவிக்குப் பெருமையாம். குறிப்பாக குடியரசுத் தலைவர் பதவியிலே ஆர். வெங்கட்ராமன் இருந்தபோது தான் சரித்திரத்தில் இடம் பெற்றாராம். ஆனால் மற்ற குடியரசுத் தலைவர்கள் எல்லாம் அந்தப் பதவியை அலங்கரிக்கவில்லையாம்! விதிமுறைகளை நிலைநாட்டிய குடியரசுத் தலைவர் (ரூல்புக் பிரசிடெண்ட்) என்று ஆர். வெங்கட்ராமன் பெயர் பெற்றவராம்! எப்படி ஆர். வெங்கட்ராமன் விதிமுறைகளை நிலை நாட்டினார் என்பதற்கு ஓர் உதாரணம் நம் தமிழ்நாட்டை வைத்தே கூறலாமே?
1990 ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத்தில் மொத்தம் 234 இடங்களில் தி.மு.கழகம் 142 இடங்களைப் பெற்றிருந்தது. அந்த அளவிற்கு பெரும்பான்மை இருந்த போதிலும், பிப்ரவரி
2ந்தேதியன்று தமிழகச் சட்டப் பேரவையில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அவசர அவசரமாக ஜனவரி 30ஆம் தேதி இரவு ஆட்சி கலைக்கப்பட்டது. இந்திய நாட்டின் தந்தை உத்தமர் காந்தி அடிகளை கோட்சே எனும் கொடியவன் சுட்டுக் கொன்ற நாள் ஜனவரி 30 தான்! அதே நாளில் இந்தியாவின் ஜனநாயகத்தை தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. வினரின் ஆலோசனைப்படி அப்போது பிரதமராக இருந்த சந்திரசேகரும், குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமனும் சேர்ந்து கூட்டுச் சதி நடத்திக் கொன்று குவித்தார்கள். அந்தச் சதிக்கு முழுக்க முழுக்க உடன்பாடாகச் செயல்பட்ட குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமன் அவர்களைத்தான் தினமணி கட்டுரையாளர் விதிமுறைகளை நிலைநாட்டி சரித்திரத்தில் இடம் பெற்றவர் என்று புகழ்ந்துரைத்துள்ளார்.
ஆளுநரிடம் அறிக்கை பெறாமலேயே, இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் முதல் முறையாக 356வது பிரிவில் உள்ள “Otherwise” என்கிற ஒரு வார்த்தையைப் பயன்படுத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அரசை, சட்டத்தின் சந்து பொந்துகளைத் தேடி நுழைந்து அன்றைய தினம் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் கலைத்தார் என்பதை தமிழகம் நன்றாகவே அறியும். இன்னும் ஆதாரத்தோடு கூற வேண்டுமேயானால் 25-12-1990 அன்று சென்னைக்கு சங்கராச்சாரியாரைச் சந்திப்பதற்காக அன்றைய பிரதமர் சந்திரசேகர் சென்னைக்கு விமானத்தில் வந்தபோது, விமான நிலையத்தில் முதலமைச்சர் என்ற முறையில் நானும், அப்போது ஆளுநராக இருந்த பர்னாலா அவர்களும் மற்றும் பேரவைத் தலைவர், அமைச்சர்கள், அதிகாரிகள் சென்று வரவேற்றோம். அப்போது விமான நிலையத்திற்கு எதிர்க்கட்சியிலே இருந்த ஜெயலலிதாவும் வருகை தந்து பிரதமரை வரவேற்றார். எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. இருந்தபோது, எப்போதாவது பிரதமரை வரவேற்க ஜெயலலிதா விமான நிலையத்திற்கே வந்து உண்டா? கிடையாது. ஆனால் 1990இல் ஜெயலலிதா விமான நிலையத்திற்கே வந்து பிரதமரை வரவேற்றார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்கள் பிரதமர் சந்திரசேகரிடம் தமிழக அரசு கலைக்கப்படும் என்று சொல்கிறார்களே என்று கேட்டபோது, “யார் இந்த வதந்தியைக் கிளப்பினார்களோ எனக்குத் தெரியாது. நான் பொதுவாக எச்சரிக்கை செய்வதில்லை. எங்கேயாவது நாட்டில்
குழப்பமோ, சட்டம் ஒழுங்கோ பாதிக்கப்பட்டால் மாநில அரசின் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம். வேறு ஒன்றும் இல்லை” என்று பதிலளித்தார்.
ஆனால் அதே நாள் மாலையில் பிரதமர் சந்திரசேகருக்கு ஜெயலலிதா வீட்டில் டீ விருந்து அளிக்கப்பட்டது. பிரதமரை வழியனுப்ப விமான நிலையத்திற்கே ஜெயலலிதா வந்தார். அங்கேயிருந்த செய்தியாளர்களிடம் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென்று பிரதமரிடம் வலியுறுத்தியதாகக் கூறினார். கதை இத்துடன் முடியவில்லை.
அதற்கடுத்த நாள், சென்னையில் ராஜ்பவனில் தங்கியிருந்த குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் அவர்களை ஜெயலலிதா சந்தித்தார். அவரிடமும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, இலங்கைப் போராளிகளைக் கைது செய்வதாக முதலவர் கருணாநிதி கூறுவது வெறும் கண்துடைப்பு என்றெல்லாம் புகார்களைக் கூறினார். மீண்டும் ஒருமுறை ஜெயலலிதா குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் அவர்களைச் சந்தித்து புகார் மனு ஒன்றையே கொடுத்தார். அந்தப் புகார் மனுவிலும் விடுதலைப் புலிகளின் செயல்களுக்கு தி.மு.க. அரசு உடந்தையாக இருப்பதாகக் கூறினார்.
10-1-1991 அன்று மாநிலங்களவையில் முரசொலி மாறனின் கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் சந்திரசேகர், “எந்தவொரு மாநிலத்திலும் அரசியல் சட்டம் 356வது பிரிவைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவரின் ஆட்சியைப் பிரகடனம் செய்ய அரசாங்கம் விரும்பவில்லை” என்று உறுதியளித்தார். ஆனால் மத்திய அரசு தி.மு. கழக அரசைக் கலைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு தமிழக ஆளுநராக இருந்த பர்னாலா அவர்களை டெல்லிக்கு அழைத்து அறிக்கை கொடுக்குமாறு கேட்டபோது, அந்த பஞ்சாப் சிங்கம் பர்னாலா அதற்கு மறுத்துவிட்டார். அந்த நிலையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் தலைமையில் தேசிய முன்னணியின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று, குடியரசுத் தலைவர், தினமணி கட்டுரையாளர் “விதி முறைகளை நிலை நாட்டிய திரு.ஆர். வெங்கட்ராமன்” என்று யாரைப் பாராட்டி எழுதியிருக்கிறாரோ, அவரைச் சந்தித்து ஜனநாயக விரோதமாக நடவடிக்கை எடுக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்ட பிறகும்,
அந்தக் கோரிக்கையை ஏற்காமல், தமிழக ஆட்சியைக் கலைத்தவர் தான் திரு. ஆர். வெங்கட்ராமன் அவர்கள்!
திரு. வெங்கட்ராமன் அவர்கள் இதையெல்லாம் செய்த பிறகும், நமக்கு அவரிடம் நேரடியாக எந்தப் பகையும் இல்லை. இதையெல்லாம் இப்போது தெரிவிக்க வேண்டுமென்றும் நமக்கு எண்ணம் இல்லை. இதெல்லாம் நடந்து முடிந்து போன சம்பவங்கள். ஆனால் இவைகளையெல்லாம் ஞாபகமூட்டுமாறு தினமணி கட்டுரையாளர் நம்மைப் பிடித்துத் தள்ளுகிறார். ஆர். வெங்கட்ராமன் அவர்களை இவர்கள் பாராட்டுவது பற்றிக் கூட நமக்கு கவலையில்லை. ஆனால் அந்தப் பதவியில் இருந்த மற்றவர்களையெல்லாம் எந்த அளவிற்கு தூசுக்கு சமமாக இழிவுபடுத்தி தினமணி கட்டுரையாளர் எழுதியிருக்கிறார் தெரியுமா?
• குடியரசுத் தலைவர் வி.வி.கிரி, இந்திரா காந்தி அனுப்பும் உத்தரவு எதுவாக இருந்தாலும், கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்திட்டார்.
• “ரப்பர் ஸ்டாம்பு” என்கிற கேலிப் பெயருக்கு ஆளானவர். சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பக்ருதீன் அலி அகமது, ஆளும் கட்சியின் கைப்பாவையாகவும், படித்துப் பார்க்காமல் கையொப்பமிடும் இயந்திரமாகவும் செயல்பட்ட அவலம் நடைபெற்றது.
• பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கியானி ஜெயில் சிங் தரம் தாழ்ந்த அரசியல்வாதி போலச் செயல்பட்டவர்.
இவ்வாறு குடியரசுத் தலைவர் பதவி நாற்காலியிலே அமர்ந்திருந்த இந்தப் பெருமக்களைப் பற்றி எழுதிய தினமணி கட்டுரையாளர், பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் பதவி தனது இழந்த மரியாதையையும், பெருமையையும் மீண்டும் பெற்றது ஆர். வெங்கட்ராமன், குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதுதான் என்று எழுதியிருக்கிறார் என்றால் அது என்ன நியாயம் என்பதை “அவர்” தான் கூற வேண்டும்.
கடைசியாக இன்றைய குடியரசுத் தலைவர், முதன் முதலாக ஒரு பெண்மணி அந்தப் பெருமைமிகு பதவியிலே அமர
வேண்டுமென்று இந்தியாவே எண்ணி, தி.மு.கழகமும் அதற்குப் பெருமுயற்சியெடுத்துக் கொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட அம்மையார் பிரதிபா பாட்டீல் பற்றி இந்தக் கட்டுரையாளர் என்ன எழுதுகிறார் தெரியுமா?
“நேரு குடும்பத்தில் சமைப்பது - வரும் பார்வையாளர்களுக்கு டீ, காபி கொடுப்பது - பாத்திரங்களைக் கழுவுவது என்று கௌரவம் பார்க்காமல் சேவை செய்திருக்கிறார் - பத்துப் பாத்திரம் தேய்த்த நன்றி விசுவாசத்துக்குக் கொடுக்கப்பட்ட பதவி” என்றெல்லாம் யாரோ கூறியதாக தினமணி கட்டுரையாளர் எழுதியிருக்கிறார் என்றால், இந்திய அரசியல் சட்டத்தின் தலைமைப் பதவியையே ஒருவர் தவறாக விமர்சனம் செய்திருக்கிறார் என்ற காரணத்திற்காக அரசே அவர் மீது வழக்குக் கூட போடலாம்!
கட்டுரையை முடிக்கும்போது கூட “ஏதாவது வீட்டு வேலை நன்றாகச் செய்யும் ஊழியர்” ஒருவரை அந்தப் பதவிக்கு நியமனம் செய்யலாமே என்றெல்லாம் எழுதியிருக்கிறார் என்றால், அந்தக் கட்டுரையிலே அவர்களுக்கே உரிய எவ்வளவு “குசும்புத்தனம்” இடம் பெற்றுள்ளன என்பதை இனியாவது திராவிட மக்கள் புரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்பட முன் வர மாட்டார்களா என்ற ஆதங்கத்தில்தான் இந்தக் கடிதம்!
அன்புள்ள மு.க. 10-6-12
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 311–315. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.