அடக்கம்

முரசொலி · தொகுதி 46 · கடிதம் 3627

முரசொலி கடிதங்கள் · 3627

தாமதமின்றி - தக்கதோர் முடிவு காண்பீர்!

நாள் 27.5.2012சுமார் 5 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3627. தாமதமின்றி - தக்கதோர் முடிவு காண்பீர்!

உடன்பிறப்பே,

மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் என்ற பட்டியலில் தி.மு.கழகம் மட்டுமல்ல; திரு.சரத் பவார் தலைமை வகிக்கும் தேசியவாத காங்கிரசும், செல்வி மம்தா பானர்ஜி தலைமை வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், திரு. பருக் அப்துல்லா தலைமையில் இயங்கும் தேசிய மாநாடு கட்சியும், வேறு சில கட்சிகளும் சேர்ந்து, பெரும்பான்மையான காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்து மத்தியில் ஆட்சி நடைபெறுகிறது. அந்த ஆட்சியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் தோழமைக் கட்சிகள் எல்லாம் தற்போது மத்திய அரசு செய்துள்ள பெட்ரோல் விலை உயர்வை ஏற்றுக் கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஒரு சில தோழமைக் கட்சிகள் தனித்தனியாக போராட்டங்களையே அறிவித்துள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இன்றைய தினம் மம்தா பானர்ஜி, முதலமைச்சராக இருக்கும் நிலையில், மத்திய அரசிலும் அங்கம் வகிக்கும் நிலையில் அவர்களே தலைமையேற்று பெட்ரோல் விலைக்கு எதிராக பேரணி ஒன்றை நடத்துகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 30ஆம் தேதி மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம். அது பற்றிக்கூட செய்தியாளர்கள் சிலர் என்னிடம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தலாமா என்று கேட்டார்கள். மக்கள் நலன்களைப் புறந்தள்ளும் எந்த அரசும் செயல்பட முடியாது என்று நான் அவர்களுக்கு அப்போது பதில் அளித்தேன். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் மத்தியில் எந்தக் கட்சியோடு தோழமை பூண்டு மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றாலும் அப்போது “குறைந்த பட்சத் திட்டங்கள்” (Common Minimum

Programme) என்ற பெயரால் நாட்டு மக்களின் நலன்களையே முதன்மையாகக்கொண்டு ஆட்சி செய்வதென்று உறுதிமொழி கொடுத்துத்தான் ஆட்சியிலே பங்கேற்று இருக்கிறோம். மத்தியில் ஆளுகின்ற பொறுப்பையேற்றுள்ள கட்சி எடுக்கும் அத்தனை முடிவுகளையும் ஏற்றுக் கொள்வதாக இருந்தால், தோழமைக் கட்சி என்ற ஒன்றே தேவையில்லையே, அதற்கு அந்தக் கட்சியிலேயே இணைந்து கொள்ளலாமே! அதே நேரத்தில் மத்தியில் ஆளும் கட்சியோடு தோழமையாகச் சேர்ந்து அங்கம் வகிக்கின்ற நிலையில் மத்திய அரசு எடுக்கின்ற ஒவ்வொரு முடிவுகளையும் எங்களைக் கேட்டுக் கொண்டுதான் செய்ய வேண்டுமென்ற அளவிற்கு தொந்தரவு செய்வதும் தோழமைக் கட்சிகளுக்கு அழகல்ல; நிர்வாகத்தில் ஒரு தேக்க நிலையையும் அது உருவாக்கிவிடும். அதே நேரத்தில் பெட்ரோல் விலை உயர்வு போன்ற காரியங்களில் தோழமைக் கட்சி என்ற உணர்வோடு நாட்டு மக்களின் உள்ளத்தில் இருப்பதை மத்திய அரசுக்குத் தெரிவிப்பது எங்களது கடமை என்ற உணர்வோடுதான் செயல்படுகிறோம்.

இதில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநிலச் செயலாளர்களான தோழர்கள் ஜி. ராமகிருஷ்ணனும், தா.பாண்டியனும் மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.கழகத்தைக் குறை கூறுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது என்று எண்ணுகிறார்கள். பெட்ரோல் விலை உயர்வைக் காரணமாகச் சொல்லி, மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை தி.மு.க. வாபஸ் பெற வேண்டும் என்றே தா. பாண்டியன் சொல்லியிருக்கிறார். இந்த இரண்டு கட்சிகளும் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தலின்போது அ.தி.மு.க.வுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து, தேர்தல் பிரச்சாரம் செய்து, அ.தி.மு.க.வை தமிழகத்திலே ஆளுங்கட்சியாக ஆக்குவதற்கான பெரு முயற்சியிலே ஈடுபட்டன.

ஆனால் ஆட்சியிலே அமர்ந்த பிறகு, அ.தி.மு.க. அரசு பால் விலையை உயர்த்தியது; பேருந்து கட்டணத்தை உயர்த்தியது; மின் கட்டணத்தை எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்த்தியது, விலைவாசி உயர காரணமாக அமைந்தது. இந்தக் கொடுமைகளையெல்லாம் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சிகள் என்பதற்காகக் கண்டிக்காமல் இல்லை. நீங்கள் எங்களைக் கலந்து கொள்ளாமல் விலை

உயர்வைச் செய்த காரணத்தால், நாங்கள் உங்களை எதிர்க்க மாட்டோம் என்றோ, தோழமையிலிருந்து விலகிவிடுவோம் என்றோ அறிவித்துவிடவில்லை. முதலமைச்சர் பேரவையில் வெளியிடுகின்ற ஒவ்வொரு அறிவிப்பையும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு பாராட்டிய நிலையில்தான் அ.தி.மு.க. ஆட்சி செய்கின்ற தவறுகளையும் தோழமையாக இருந்து கொண்டே கண்டிக்கச் செய்தார்கள். ஆனால் ஆளுகின்ற முதலமைச்சர் தான் ஒரே பிடிவாதமாக இருந்து தான் உயர்த்தியது உயர்த்தியதுதான், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்தான் என்று கடுமையாக இருந்து, தோழமைக் கட்சிகளின் வேண்டுகோள்களையும் ஏற்க மறுத்தார்.

இன்னும் கூற வேண்டுமேயானால், அ.தி.மு.க.வின் மிக நெருங்கிய தோழமைக் கட்சி என்ற அளவில் தா. பாண்டியன் தலைமையிலான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தபோதிலும், ஜூன் 12ஆம் தேதி நடைபெறவுள்ள புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், ஏற்கனவே அந்தத் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு மறைந்தது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்றபோதிலும், ஒரு மரியாதைக்காகக்கூட, கூட்டணி நாகரிகம் கருதி, அந்தக் கட்சியை அழைத்துப் பேசாமல், தன்னிச்சையாக தாங்களாகவே தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே, அ.தி.மு.க. அங்கே நிற்குமென்றும், வேட்பாளர் யார் என்றும் அறிவித்துவிட்டது. உடனே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெகுண்டெழுந்து இனி அ.தி.மு.க.வோடு எங்களுக்குத் தோழமையே இல்லை என்று அறிவித்துவிட வில்லையே! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அங்கே பொதுவேட்பாளராக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களையே நிறுத்தலாம், தாங்கள் ஆதரவு தரத் தயார் என்று சொன்ன பிறகும், அதனை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல், தாங்கள் அங்கே போட்டியிடவே போவதில்லை என்று “ஜகா” வாங்கிய தா. பாண்டியன், தி.மு.க.வை மத்திய அரசிலிருந்து விலக வேண்டுமென்று யோசனை கூறுவது சரிதானா என்பதை அவரே சிந்திக்கட்டும்.

இதேபோல இந்த விலை உயர்வு குறித்து தி.மு.கழகம் எதிர்ப்பதற்கு தகுதி இல்லை என்றும், நீலிக்கண்ணீர் வடிப்பதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருக்

கிறது. ஆனால் இதே மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்து, எடுத்துச் சொல்லியும்கூட, மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்வது பற்றியும், பஸ் கட்டணத்தைக் குறைப்பது பற்றியும் ஜெயலலிதா அரசு வாய் திறக்கவில்லை என்பதற்காக அந்தக் கட்சியினர் எதிர்த்து குரல் எழுப்பாமல் இருந்து விட்டார்களா என்பதை அவர்களே சிந்திக்கட்டும்.

பெட்ரோல் விலை உயர்வுப் பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, தோழமைக் கட்சிகள் மட்டுமல்ல, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியிலே உள்ளவர்கள் அனைவரும் கூட ஏற்றுக் கொள்கின்ற முடிவு அல்ல. காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்றைய தினம் வந்த செய்தியிலேகூட பெட்ரோல் விலை உயர்வினை அரசு மறுபரிசீலனை செய்ய உள்ளதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நண்பர் நாராயணசாமி அவர்களே தெரிவித்துள்ளார். துறையின் அமைச்சர் வெளிநாட்டிலே இருப்பதாகவும், பிரதமர் அவரை உடனடியாக தலைநகரத்திற்கு இந்தப் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக வரச் சொல்லியிருப்பதாகவும், எனவே முடிவிலே மாற்றம் வரலாம் என்றும் தெரிவித்திருக்கிறார். ஆனால் அந்த அறிவிப்பின்படி மத்திய அமைச்சர் திரு. ஜெய்பால் ரெட்டி அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பெட்ரோல் விலையை உயர்த்தும் முடிவை எண்ணெய் நிறுவனங்கள் எடுத்துள்ளன. அதேநேரத்தில் இந்த முடிவால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. மக்கள் உணர்வுக்கு மாறாக அரசால் செயல்பட முடியாது. சர்வதேச நிலைமைக்கு ஏற்ப எடுக்கப்பட்டுள்ள எண்ணெய் நிறுவனங்களின் இந்த விலை உயர்வு விரும்பத்தக்கதோ அல்லது மகிழ்ச்சி அளிக்கும் முடிவோ அல்ல. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு நிலையான ஒன்றல்ல. அவ்வப்போது மாறுதலுக்கு உட்பட்டது. எனவே தற்போது உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெறுவது பற்றி மத்திய அரசு ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பாக சில நாட்கள் பொறுமையுடன் காத்திருந்து நிலைமையை உன்னிப்பாக கவனிக்க வேண்டியுள்ளது” என்று கூறியிருக்கிறார். ஆனால் இந்தப் பதிலையே சில ஏடுகள் ஜெய்பால் ரெட்டி பெட்ரோல் விலை உயர்வைக் குறைக்க மறுத்துவிட்டார் என்று செய்தி வெளியிட்டுள்ளன. அந்த ஏடுகளைப் படிக்கும் பொதுமக்கள், கடந்த 2011ஆம் ஆண்டில் மட்டும் நான்கு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதையும் - இந்த முறை முன்

எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரேயடியாக ரூபாய் 7.50 லிட்டர் ஒன்றுக்கு உயர்த்தப்பட்டதையும் எண்ணி மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு எட்டு ரூபாயும், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ. 13.64ம், நட்டம் ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறுவதாலும்; ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு மிகவும் சரிந்து விட்டதால், வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க மத்திய எண்ணெய் நிறுவனங்கள் செலவிடும் டாலரின் அளவு அதிகரித்து விட்டதாலும்; பெட்ரோல் விலை உயர்வு லிட்டர் ஒன்றுக்கு தற்போது ரூ. 7.50 என உயர்த்தப்பட்டுள்ள நிலையில்; மற்ற நாடுகளில் இதே பெட்ரோல் விலை என்று பார்த்தால் பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 59 ரூபாய்க்கு விற்கப் படுகிறது. சீனாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 37 ரூபாய்க்கும், வங்காள தேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 43.40க்கும், அமெரிக்காவில் ரூ.61.70க்கும் விற்கப்படுவதாக ஏடுகளில் செய்தி வந்திருப்பதையும் கவனித்தால், இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 78 என்று விற்பது முறைதானா என்பதை மத்திய அரசு எண்ணிப் பார்த்திட முன்வர வேண்டும்.

நாடு முழுவதும் மிகக் கொந்தளிப்பாக உள்ள நிலைமைகளை மத்திய அரசிலே உள்ளவர்கள் புரிந்துகொண்டு, தாங்கள் எடுத்த முடிவிலே உறுதியாக இருப்போம் என்றெல்லாம் பிடிவாதம் பிடிக்காமல், விட்டுக்கொடுத்து, மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முன் வருவதுதான் மக்கள் நலச் சர்க்காரின் கடமை என்ற அளவில் ஒன்றிரண்டு நாட்களில் தற்போது செய்யப்பட்டுள்ள பெட்ரோல் விலை உயர்வை, அப்படியே ரத்து செய்ய இயலாவிட்டாலும், பெருமளவுக்குக் குறைத்து, நல்லதோர் சுமுக முடிவு காண முன்வர வேண்டுமென்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகிப்பவர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன்.

அதே நேரத்தில் தமிழக அரசும் ஏற்கனவே கழக அரசில் செய்ததைப்போல பெட்ரோல் விலை உயர்வில் விதிக்கின்ற விற்பனை வரியைக் குறைத்துக் கொள்வோம் என்ற உறுதியினை மக்களுக்குத் தெரிவிக்க முன்வர வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள்

ஏற்று அறிவிக்க வலியுறுத்திடும் வகையில், தி.மு.கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 30ஆம் தேதிக்கான கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்டக் கழகச் செயலாளர்களும், முன்னணியினரும் செய்ய வேண்டுமென்றும், அந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்க கழகத் தோழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புள்ள, மு.க. 27-5-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 273–278. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 46-இல் மேலும் கடிதங்கள்