அடக்கம்

முரசொலி · தொகுதி 46 · கடிதம் 3620

முரசொலி கடிதங்கள் · 3620

என்று தணியும் ஈழத்தமிழர் தாகம்!

நாள் 28.4.2012சுமார் 11 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3620. என்று தணியும் ஈழத்தமிழர் தாகம்!

உடன்பிறப்பே,

இலங்கையிலே ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர் நடைபெற்ற போது; இன்றைக்கு ஈழத் தமிழர்கள்பால் நாம் காட்டுகின்ற உணர்வுபூர்வமான அக்கறையை, அன்றே காட்டியிருக்கக் கூடாதா? இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போராட்டத்தை அப்பொழுது அங்கே ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதை நாம் தடுத்து நிறுத்தியிருக்கலாமே; என்ற ஒரு எண்ணம், ஆதங்கம் இங்குள்ள தமிழர்கள் சிலருக்கு மாத்திரமல்லாமல், தரணியெங்கும் பரவிக்கிடக்கிற தமிழர்களில் சிலருக்கும் இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது!

ஆனால் அவர்களுக்கே தெரியும்! இந்தப் போரில் விடுதலைப் போராளிகள் வெற்றி முகட்டை எட்டாமல் வீழ்ந்து போனதற்குக் காரணம், அவர்கள் ஓரணியாய் நின்று போரிடாததுதான் என்பது ஓர் புறமிருக்க; பல்வேறு அணிகளாக இருந்த போராளிகளும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு - தமிழர் உயிரை தமிழரே பறிப்பதற்கு காரணகர்த்தாக்களாக ஆகிவிட்டார்கள். சகோதர யுத்தம் வேண்டாம் என்று காலில் விழாத குறையாக அவர்கள் ஒவ்வொரு அணியினரின் கரம் பிடித்து கெஞ்சிக் கேட்டுக் கொண்டுங்கூட, அந்த அணிகளிடையே இருந்த உட்பகையை நம்மால் தீர்க்கவும் முடியவில்லை; அதன் காரணமாக ஏற்பட்ட விடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சியைத் தடுக்கவும் முடியவில்லை.

அணிகளின் தலைவர்கள் ஒருவரையொருவர் மாய்த்துக் கொண்டு - ஓர் இனம் பெற வேண்டிய வெற்றியின் கால கட்டத்தையே தள்ளிப் போட்டு விட்ட சோக நிகழ்வை யார்தான் அவர்கள் உண்மையான தமிழரெனின் எண்ணிப் பார்த்துக் கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியும்!

இந்தச் சோக அலைகளுக்கிடையே 2008-2009ஆம் ஆண்டுகளில் இலங்கையில் இறுதிப் போர் நடைபெற்று ஈழத் தமிழ் இனம் உதிரமும் உயிரும் சிந்திய அந்தக் கோர நிலைமைகளை - இலங்கையிலே ஏற்படாமல் தடுத்திட அங்கே போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான என்னென்ன முயற்சிகளிலே ஈடுபட்டோம் என்பதையும், இந்திய பேரரசாம் மத்திய அரசு எவ்வாறெல்லாம் இயன்றவரை அதற்கு ஒத்துழைப்பு நல்கியது என்பதையும் ஞாபகப்படுத்துவது என்னுடைய கடமையாகும். கழக அரசின் சார்பாக இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக 14-10-2008 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, இலங்கையில் இரண்டு வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு முன்வராவிட்டால், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகிட நேரிடும் என்று ஒரு தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. அதையொட்டி, கழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பதவி விலகல் கடிதங்களை என்னிடம் கொண்டுவந்து கொடுத்துவிட்டார்கள். அப்போது ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த தம்பிகள் எல். கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் காதர் மொய்தீன் ஆகியோர் கூட தங்கள் பதவி விலகல் கடிதங்களை என்னிடம் கொடுத்து விட்டார்கள். தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அன்றே பிரதமருக்கு அந்தத் தீர்மானம் தம்பி டி.ஆர். பாலு மூலமாக அனுப்பப்பட்டது. அதனை ஆய்வு செய்த பிரதமர், அரசியல் ரீதியான தீர்வு காண மத்திய அரசு அனைத்து நடவடிக்கை களையும் விரைவாக எடுத்திடும் என்று பாலுவிடம் உறுதி கூறி, அது அப்போதே அனைத்து ஏடுகளிலும் வெளிவந்தது. அதே நாளில் பிரதமர் அளித்த பேட்டியிலும் - “இலங்கையில் ஏற்பட்டுள்ள இனப் பிரச்சினை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. இப்பிரச்சினைக்கு ராணுவம் மூலம் தீர்வு என்பது சரியாக அமையாது. இலங்கையின் இறையாண்மையையும், அங்கு வசிக்கும் தமிழர்களின் மனித உரிமையையும் மதிக்கும் வகையில் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இலங்கை இனப் பிரச்சினைக்கு

தீர்வு காண முழு ஈடுபாட்டுடன் மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளும்” என்று கூறியிருந்தார்.

18-10-2008 அன்று பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் நேரடியாகவே தொலைபேசியில் இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் பேசினார். 22-10-2008 அன்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளதாக நாடாளுமன்றத்திலே குறிப்பிட்டார். 24-10-2008 அன்று சென்னையில் பிரமாண்டமான “மனிதச் சங்கிலி” ஒன்றினை நடத்தினோம். 26-10-2008 அன்று திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் சென்னை வந்து என்னிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்துப் பேசினார். சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நார்வே நாட்டின் முயற்சியின் பேரில் ஏற்பட்ட சண்டை நிறுத்தம் தொடருவதை உறுதி செய்ய வேண்டுமென்று கலைஞர் வலியுறுத்தினார். போர்ப் பகுதிகளில் அவதிப்படும் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் மன்றம் மற்றும் இந்திய அரசின் மூலமாக மனிதாபிமான உதவிகள் அளிக்க இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது” என்று கூறினார். 12-11-2008 அன்று இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றினை நான் முன்மொழிந்து அது நிறைவேற்றப்பட்டது. 4-12-2008 அன்று தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து, இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம். அதன் பின்னர் பிரணாப் முகர்ஜி அவர்கள் இலங்கைக்கு நேரிலேயே சென்று ராஜபக்சேயுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

27-12-2008 அன்று நடைபெற்ற கழகப் பொதுக் குழுவிலே இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து தீர்மானம் நிறைவேற்றினோம்.

12-1-2009 அன்று தமிழர் தலைவர் கி. வீரமணி, பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் என்னைச் சந்தித்ததைத் தொடர்ந்து மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர். பாலுவையும், மாநிலங்களவை

உறுப்பினர் கனிமொழியையும் பிரதமரிடமும், சோனியா காந்தியிடமும் நிலைமைகளை விளக்கச் செய்தேன். ஆனால் 18-1-2009 தேதிய நாளிதழ்களில் ஜெயலலிதாவின் பெயரால் வந்த ஒரு பேட்டியில், “இலங்கை வேறு நாடு, எனவே அந்த நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவதற்கு ஒரு எல்லை உண்டு. இலங்கையில் ஈழம் என்ற ஒரு நாடு இன்னும் அமையவில்லை. இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று சிங்கள ராணுவம் எண்ணவில்லை. ஒரு போர் நடைபெறும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது இயல்பு. இதில் எந்த நாடும் விதி விலக்கு அல்ல” என்று கூறியிருந்தார்.

28-3-2009 அன்று நான் இலங்கையிலே உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட இந்தியா உதவிட வேண்டுமென்று கேட்டு பிரதமருக்கும், திருமதி சோனியா காந்தி அவர்களுக்கும் எழுதிய கடிதத்திற்கு, 31-3-2009 அன்று திருமதி சோனியா காந்தி அவர்கள் எனக்கு எழுதிய நீண்ட பதில் கடிதத்தில்,

“நம்முடைய பிரதமர் அவர்கள் உங்களுக்கு எழுதிய

கடிதத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனைவரின்

சார்பாக இலங்கையில் அண்மையில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை விவரித்திருப்பதைப் பற்றி நானும் உங்களுக்கு உறுதி கூற விரும்புகிறேன்......... தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் போர், அதன் காரணமாக அங்குள்ள தாய்மார்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவித் தமிழர்கள் அனுபவித்து வரும் பெரும் துயரங்கள், நம்மை மிகுந்த கவலைக்கு ஆளாக்கியுள்ளது. அவர்களைப் பாதுகாக்கவும், அவர்களின் நலன்களைப் பேணவும் தேவையான முயற்சிகள் அனைத்தையும் இலங்கையின் அதிகாரவர்க்கம் மேற்கொள்ள வேண்டுமென்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். உள்ளபடியே அதற்கான முதல் கட்டமாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். நமது அரசு இலங்கை அரசுடன் பல்வேறு வகையான கருத்துருக்களின் மீது தொடர்பு கொண்டு வருகிறது. குறிப்பாக போர் நிறுத்தத்தைப் பற்றியும்

தொடர்பு கொள்ளப்பட்டு வருகிறது. போர் நிறுத்தம் ஏற்பட்டால்தான் அப்பாவி மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர முடியும்” என்றெல்லாம் தெரிவித்திருந்தார்கள். அதன் பின்னர் 5-4-2009 அன்று என்னைச் செய்தியாளர்கள்

சந்தித்தபோது, “இலங்கையில் விடுதலைப் புலிகளின் அனைத்து இடங்களையும் ராணுவம் கைப்பற்றி விட்டதாகவும், அவர்களது ராணுவத் தளங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும், பிரபாகரனும், அவருடைய புதல்வரும் தமிழர்கள் வாழ்கிற பகுதியில் மறைந்திருப்பதாகவும் செய்திகள் வந்திருக்கிறதே” என்று என்னைக் கேட்ட நேரத்தில் “போர் நிறுத்தம் வேண்டுமென்று கடந்த ஆறு மாத காலமாகத் தொடர்ந்து சொல்லி வருகிறோம். எங்கள் குரலை மதித்து வெளிநாடுகளிலே உள்ள அரசுகள், ஐ.நா. மன்றத்தினர், வெளிநாட்டுத் தூதுவர்கள் மூலமாக இலங்கைக்குச் சொல்லி வருகிறார்கள். போரை நிறுத்துங்கள் என்று இந்திய அரசினர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் ராஜபக்ஷே போரை நிறுத்தவில்லை. அதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று கூறினேன்.

7-4-2009 அன்று பிரதமர் மன்மோகன்சிங், திருமதி சோனியா காந்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோருக்கு நான் அனுப்பிய தந்தியில் “இலங்கையில் ஒட்டுமொத்த தமிழின மக்கள் கூண்டோடு அழிக்கப்படுவதிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும், அங்கு போர் நிறுத்தத்தை உறுதி செய்து அமைதிப் பேச்சு வார்த்தைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டேன்.

இறுதிப் போரிலே இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக நான் மட்டுமல்ல, இந்திய அரசு மாத்திரமல்ல, பெரிய நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், நார்வே போன்றவைகள் வெளியிட்ட அறிக்கையிலேயே இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டு மென்றும், பாதுகாப்பான பகுதி மீது இலங்கை போர் விமானங்கள் குண்டு வீசுவதை நிறுத்த வேண்டுமென்றும் சொன்னார்கள். அதற்கும் மேலாக ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் தொலைபேசி மூலமாகவே இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை தொடர்பு கொண்டு

இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டுமென்றும், மனிதாபிமான முறையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். ஐக்கிய நாட்டு சபை உயர் அதிகாரி ஒருவரும் அப்போது ராஜபக்சேயுடன் பேசியிருக்கிறார். 9-4-2009 அன்று சென்னையில் என் தலைமையில் “இலங்கை அரசே போரை நிறுத்து” என்று முழக்கமிட்டவாறு பிரம்மாண்டமான பேரணி ஒன்று நடைபெற்றது. இலங்கை அதிபர் ராஜபக்சே இலங்கையில் இரண்டு நாள் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவித்தார். விடுதலைப் புலிகள் ஆதரவு கட்சி எம்.பி.க்களை இந்தியாவிற்கு பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இந்திய அரசு அழைப்பு விடுத்தது. 12-4-2009 அன்று ஈழத் தந்தை செல்வாவின் மகன் சந்திரஹாசன் அளித்த பேட்டியில் “முதல்வர் கலைஞரின் ராஜ தந்திரமான வேண்டுகோள்தான் இலங்கைப் போர் நிறுத்தத்திற்குக் காரணமாக அமைந்தது” என்று கூறினார். மத்திய உள்துறை அமைச்சர், நண்பர் ப. சிதம்பரம் அவர்கள் 14-4-2009 அன்று விடுத்த அறிக்கையில் இலங்கையில் போர் நிறுத்தம் தொடர்ந்திட வேண்டும் என்று இலங்கை அரசை இந்தியா தொடர்ந்து வற்புறுத்தும் என்றார். தமிழர் தலைவர் இளவல் கி. வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கையில் “உலக நாடுகளின் வற்புறுத்தல்கள் காரணமாக 48 மணி நேர போர் நிறுத்தத்தை ராஜபக்சே அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் கலைஞர் தரும் இடையறாத அழுத்தம்தான் இதற்கு முக்கியமான காரணம். இந்திய அரசும் இதில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை” என்று குறிப்பிட்டார். 21-4-2009 அன்று பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் திருமதி சோனியா காந்தி, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு நான் அனுப்பிய தந்தியில், “இலங்கையில் போர் நிலைமை ஆபத்தானதாக உள்ளது. தமிழர்கள் அனுபவித்து வரும் சிரமங்கள் மிக அபாயமான நிலையை எட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பு உட்பட அனைத்து நாடுகளும் உடனடியாகப் போர் நிறுத்தத்தை அறிவிக்கும்படி இலங்கை அரசு மீது நிர்ப்பந்தம் செலுத்தியுள்ளன. இலங்கையிலுள்ள இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்ற இலங்கையில் உடனடியாகவும், நிரந்தரமாகவும் போர் நிறுத்தம் செய்ய இலங்கை

அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடும்படி வலியுறுத்துகிறேன்” என்று கேட்டுக் கொண்டேன்.

“நாதியற்ற ஈழத் தமிழரைக் காத்திட நடுவணரசுக்கு வேண்டுகோள்” என்ற தலைப்பில் உருக்கமிகு உடன்பிறப்பு கடிதம் ஒன்றை 21-4-2009 அன்று நான் எழுதியதோடு, இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற, மத்திய அரசு போர் நிறுத்தத்திற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி 23-4-2009 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்தப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டு அறிக்கை விடுத்தேன். அந்த வேலை நிறுத்தத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டுமென்று கேட்டு, காங்கிரஸ், அ.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., திராவிடர் கழகம், பா.ஜ.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், எம்.ஜி.ஆர். கழகம், பா.ம.க., புதிய தமிழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும், பத்திரிகைகளுக்கும் கடிதம் எழுதினேன். அந்த வேலை நிறுத்தம் அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற்றது.

நான் அனுப்பிய தந்தியின் அடிப்படையில் 22-4-2009 அன்று இரவு டெல்லியில் பிரதமர் அவர்கள் மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட அவசரக் கூட்டம் ஒன்றினைக் கூட்டி, அப்பாவித் தமிழர்கள் மீதான போரினை இலங்கை உடனடியாக நிறுத்தவேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். அதனை இலங்கை அரசுக்கு நேரில் வலியுறுத்துவதற்காக பிரதமரின் சிறப்புத் தூதுவர்கள் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்று கொழும்பு சென்றது. அதே நாளில், இலங்கையில் பாதிக்கப் பட்டிருந்த தமிழர்களுக்காக 936 மெட்ரிக் டன் எடை கொண்ட 6 கோடியே 46 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள் 40 ஆயிரம் சிப்பங்களில் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட உயர் மட்டக் குழுவினர் கொழும்பில் ராஜபக்சேயை நேரில் சந்தித்து, உடனடியாக போரை நிறுத்த ஆவன செய்ய வேண்டுமென்ற இந்தியாவின் வேண்டுகோளைத் தெரிவித்தனர். 24-4-2009 அன்றிரவு அண்ணா அறிவாலயத்திற்கு உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அவர்கள் வந்து, என்னைச் சந்தித்து விவரங்களையெல்லாம் விளக்கினார். அதே நாளில்

பிரதமர் அவர்களும் தொலைபேசியில் என்னுடன் பேசி மத்திய அரசு எடுத்த முயற்சிகளை யெல்லாம் கூறினார். அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒபாமா அவர்கள் சார்பில் வெள்ளை மாளிகையிலிருந்து 25-4-2009 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், இலங்கை அரசு ராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும், இலங்கை விவகாரத்தில் இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை ஆதரிப்பதாகவும் தெரிவித்திருந்தது. 26-4-2009 அன்று இலங்கையில் போர் நிறுத்தம் குறித்து செய்தியாளர்கள் என்னைக் கேட்டபோது, ஓரிரவு பொறுத்திருந்து பார்ப்போம் என்று அதே 26-4-2009 அன்று விடுதலைப் புலிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐ.நா. சபை ஆகியவற்றின் கோரிக்கையை ஏற்று போர் நிறுத்தம் செய்கிறோம். இந்தக் கால வரையற்ற போர் நிறுத்தம் உடனே அமலுக்கு வரும். இலங்கை ராணுவம் நடத்தி வரும் போரால் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்பம் உச்ச நிலையை எட்டியுள்ளது. இலங்கை அரசும் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று அறிவித்தார்கள். ஆனால் யாரும் எதிர்பாராத நிலையில் இலங்கை அரசு அந்த அறிவிப்பை “ஜோக்” என்று கேலி செய்தது. 26ஆம் தேதி வந்த இந்தத் தகவல்களுக்கு பின் அன்றிரவு முழுவதும் நான் தூங்கவில்லை. போர் நிறுத்தம் பற்றி இலங்கை அரசு ஏதாவது அறிவித்ததா என்று டெல்லியிலே தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டே இருந்தேன். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களை பல முறை தொடர்பு கொண்டேன். பிரதமரும் என்னோடு தொடர்பு கொண்டார். வெளிநாடுகளிலிருந்து ஏராளமான தமிழர்கள் என்னை தொலைபேசியிலே தொடர்பு கொண்டு பேசிக்கொண்டே இருந்தார்கள். அதிகாலை 4 மணி வரையிலே தொலைக்காட்சியில் நல்ல செய்தி வருமா என்று எதிர்பார்த்தேன். எந்தச் செய்தியும் வரவில்லை. இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை என்ற செய்திதான் கிடைத்தது. அதற்குப் பிறகுதான் 5 மணி அளவில் என் வீட்டாரிடம் அறிவாலயம் செல்கிறேன் என்று கூறி விட்டு, அண்ணா நினைவிடத்திற்குச் சென்றேன். அதே ஆண்டு ஜனவரி மாதத்தில் மிகப் பெரிய அறுவை சிகிச்சை ஒன்றை என்

முதுகிலே இந்த வயதிலே செய்து கொண்டு, நடக்க முடியாத நிலையில் சக்கர வண்டியிலே பயணம் செய்து கொண்டிருந்த நான் என் உடல் நிலையைப் பற்றியோ வேறு எதைப் பற்றியோ கவலைப்படாமல் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது என்ற முடிவோடு தான் யாருக்கும் கூறாமல், கூறினால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால், நானாக முடிவெடுத்துச் சென்றேன். அதேநாள் காலையில் உண்ணாவிரதப் பந்தலில் என்னைச் சந்தித்த செய்தியாளர்களிடம், “சிங்கள அரசு போர் நிறுத்தம் செய்ய முன்வராத காரணத்தால், என்னையே நான் அர்ப்பணித்துக் கொள்ள, நம்முடைய தமிழர்களுக்காக என் உயிரையும் வழங்க, இலங்கை அரசு வாங்கிய பலிகளிலே ஒரு பலியாக நானும் அமைய, அடையாளப்பூர்வமாக எல்லாத் தமிழர்களின் சார்பாக இந்த உண்ணாநோன்பை நான் மேற்கொண்டிருக்கிறேன்” என்றுதான் தெரிவித்தேன். நான் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த அதே நாளில் பகல் 11 மணி அளவில் இலங்கை பாதுகாப்பு கவுன்சில் கூடி ஆலோசனை நடத்தியது. முல்லைத் தீவில் நடத்தப்பட்டு வரும் போர், அதன் தொடர்ச்சியாக நான் உண்ணாவிரதம் இருப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டது என்றும், அதன் முடிவில் இலங்கை வடக்குப் பகுதியில் நடத்தப்பட்டு வந்த போரை முடிவுக்குக் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டு, 12 மணி அளவில் இலங்கை அரசு ஓர் அறிக்கையினை வெளியிட்டது. அந்த அறிக்கையில் “இலங்கை வடக்கில் நடைபெற்று வந்த போர் முடிந்துவிட்டது. வடக்கு பகுதியில் இனி கனரக ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என்று ராணுவத்துக்கு உத்தர விடப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்து குண்டு வீசுவதும் நிறுத்தப்படுகிறது. வடக்கில் சிக்கியுள்ள பொது மக்களை பாதுகாப்புடன் மீட்கும் பணிகளில் இலங்கை ராணுவத்தினர் ஈடுபடுவார்கள். இனி அப்பாவி மக்களை பாதுகாக்கும் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்று கூறப்பட்டிருந்தது. இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில்; அன்றைய மத்திய வெளி உறவுத் துறை அமைச்சர் திரு. பிரணாப்

முகர்ஜி அவர்கள் 27-4-2009 அன்று வெளியிட்ட அறிக்கையில், “போர் நடவடிக்கைகள் முற்றுப்பெற்று விட்ட தென்றும், கனரகத் துப்பாக்கிகள், போர் ஆயுதங்கள் போன்றவை குடிமக்களை பெருமளவிற்குக் கொல்லும் என்பதால் இலங்கை பாதுகாப்புப் படைகள் அவற்றைப் பயன்படுத்தக்கூடாது என்று ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது. குடிமக்களை மீட்பதற்கும், அவர்களைக் காப்பாற்றுவதற்கும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதில் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் இனி கவனம் செலுத்தும்” என்று குறிப்பிட்டதோடு, அதன் நகல் ஒன்றினையும் நான் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கே அனுப்பி, உண்ணா விரதத்தை என்னை முடித்துக் கொள்ளும்படி பிரதமரும், சோனியா காந்தி அம்மையாரும் கேட்டுக் கொண்டனர். உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கே திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், சி.ஞான தேசிகன் எம்.பி., டி.சுதர்சனம் எம்.எல்.ஏ., டி.யசோதா எம்.எல்.ஏ., கோபண்ணா, எஸ்.எம். இதயதுல்லா, இராயபுரம் மனோ, கராத்தே தியாகராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் வின்சென்ட் சின்னதுரை, விவசாய தொழிலாளர் கட்சி தலைவர் பொன்குமார், முன்னாள் எம்.பி. பு.தா. இளங்கோவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பொதுச் செயலாளர் சையத் சர்தார், எம். ஜெய்னுல் ஆபிதீன், கமுதி பஷீர், திருப்பூர் சத்தார், காயிதே மில்லத் பேரன் தாவூத் மியான்கான், பேராயர் எஸ்றா. சற்குணம், மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவர் ஜி.ஏ. வடிவேலு, லியாகத் அலிகான், முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம், திருவாவடுதுறை ஆதினம் முத்து குமார சுவாமிகள், கவிப்பேரரசு வைரமுத்து, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிக்கோ அப்துல் ரகுமான், கவிஞர் மு.மேத்தா, நக்கீரன் கோபால், எழுத்தாளர் கந்தசாமி, இரயில்வே தொழிற்சங்க தலைவர் மு.கன்னையன், சன் தொலைக்காட்சி இயக்குநர் கலாநிதிமாறன், நல்லி குப்புசாமி செட்டியார், காந்தி கண்ணதாசன், நமது திராவிடக்

கழகத் தலைவர் திருமதி. ஓவியம், தொலைக்காட்சி முன்னாள் இயக்குநர் நடராஜன், சி.கே.பெருமாள், அண்ணாவின் புதல்வர் சி.என்.ஏ.இளங்கோவன், சிறுபான்மை ஆணைய உறுப்பினர் இனிகோ இருதயராஜ், காவியக் கவிஞர் வாலி, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், ஈழத் தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரஹாசன், மறவன்புலவு இலங்கை அறிஞர் க.சச்சிதானந்தம், தலைமைச் செயலக சங்கத் தலைவர் கணேசன், சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்புத் தலைவர் விடுதலை, இளவேனில், வழக்கறிஞர் காந்தி, சுப. வீரபாண்டியன், நடிகர்கள் எஸ்.எஸ். இராஜேந்திரன், சத்யராஜ், எஸ்.வி. சேகர் எம்.எல்.ஏ, இராதாரவி, நடிகை விஜயகுமாரி, நடிகர்கள் செல்வா, பிரசாந்த் மற்றும் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எல்லாம் நேரில் வந்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்திய பிறகு மதியம் 1 மணி அளவில் நான் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டேன்.

ஆனால் அதற்குப் பின்னரும் இலங்கை சிங்கள அரசு ராஜபக்ஷேயின் சிங்கள பேரினவாதப் பிடிவாதத்தினால் களத்தில் நின்ற போராளிகளையெல்லாம் கொன்று குவித்தனர். போராட்டத்தை நிறுத்துவதற்கான எவ்வளவோ முயற்சிகளை நாம் மேற்கொண்டோம், அதற்கு உறுதுணையாக மத்திய அரசும், பிரதமரும், மத்திய அமைச்சர் பெருமக்களும் இருந்தும் கூட, சிங்கள அரசினர் அளித்த வாக்குறுதிகளையெல்லாம் ஒவ்வொரு முறையும் மீறி, போரைத் தொடர்ந்து, நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி சகோதர யுத்தத்தினால் ஏற்பட்ட சரிவைப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி வாகை சூடினர். வீழ்ந்தது தமிழின எழுச்சி ஈழத் தமிழகத்தில்! எந்த ஒரு இனத்தின் எழுச்சியும் வீழ்வதும் தாழ்வதும்; பின்னர் வெற்றிச் சிகரம் ஏறுவதும் உலக வரலாற்றில் காணக்கூடிய ஒப்பற்ற உதாரணங்கள். ஒற்றுமை இல்லாத காரணத்தாலும் ஒருவரை ஒருவர் தீர்த்துக் கட்டும் காரணத்தாலும் தொடர்ந்து வீழ்ந்துபட்டு வருகின்ற இனமாக தமிழ் இனம் இருந்தாலுங் கூட அந்த இனத்திற்கு தமிழ் ஈழத்தில் தற்காலிகமாக ஏற்பட்டிருப்பது; நிரந்தரமானதல்ல என்பதையும்; அது நிரந்தரமாக இருந்துவிடக் கூடாது என்பதையும் - அசையாத நம்பிக்கையுடன் மனத்தில் கொண்டு களத்தில் மறைந்த மாவீரர்கள் அனைவருக்கும் இறுதி வணக்கத்தைத் தெரிவித்து -

இனியும் தமிழ் இனம் தலை நிமிர்ந்தே வாழ்வதற்கு - நமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தருவதற்கு தயங்க மாட்டோம் என்ற உறுதியுடன்; அண்ணல் காந்தி காட்டிய வழியில்; அறிஞர் அண்ணா வகுத்த நெறியில்; தன்மான உணர்வைத் தட்டியெழுப்பிய தந்தை பெரியார் போதித்த பாதையில்; ஈழத் தந்தை செல்வா ஊட்டிய உணர்வில்; அறப்போர் தொடர்ந்திட அணி வகுப்போம்! அன்புள்ள, மு.க. 28-4-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 221–232. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 46-இல் மேலும் கடிதங்கள்