முரசொலி கடிதங்கள் · 3647
நடுநிலை, நியாயம், மனசாட்சி - இவை என்னாவது?
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3647. நடுநிலை, நியாயம், மனசாட்சி - இவை என்னாவது?
உடன்பிறப்பே,
இந்திய சட்ட வரலாற்றிலேயே இதுவரை காணாத ஆச்சரியமாக சுமார் பதினைந்து ஆண்டு காலத்திற்கு மேலாக ஒரு வழக்கு நடைபெறுகிறதென்றால் அது நமது முதலமைச்சர் ஜெயலலிதாவின் 66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்குதான்! 1996ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு 2003ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றத்தினால், பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டு, அதன் பிறகும் எட்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஏற்கனவே சிறப்பு நீதி மன்றத்தில் இரண்டு நீதிபதிகள் விசாரித்து பின்னர் மூன்றாவதாக தற்போது விசாரித்துக் கொண்டிருக்கும் நீதிபதி மல்லிகார்ஜுனையாவும் இந்த மாதம் ஓய்வு பெறுகிறார்.
இந்த வழக்கில் விளக்கத்திற்கு மேல் விளக்கம், கேள்விக்கு மேல் கேள்வி, வாய்தாவுக்கு மேல் வாய்தா என்று கேட்டே நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் சிறப்பு நீதி மன்றத்தில் கோரிக்கையை வைத்து, அங்கே அவர்களுக்கு எதிராக தீர்ப்பு வந்ததும், அதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்திலே மேல் முறையீடு செய்வதும், அங்கும் தீர்ப்பு எதிராக வந்ததும், மீண்டும் அதே வழக்கினை உச்ச நீதி மன்றத்திலே மேல் முறையீடு செய்வதும், அதன் காரணமாக ஒரு சில மாதங்களைக் கடத்துவதும் - அதன் பிறகு மற்றொரு காரணத்தைச் சொல்லி சிறப்பு நீதிமன்றத்திலே வழக்கினை தாமதம் செய்வதும் தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் நடைபெற்று, அந்த வழக்கினை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்களும், கர்நாடக அரசு சார்பில் அந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் அவர்களும் களைத்துச் சலித்துப் போய் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியாக மனிதனையே கடித்தது என்பார்களே, அதைப்போல கடைசியாக ஜெயலலிதா தரப்பினர் இந்த வழக்கினை விசாரிக்கும் நீதிபதிக்கே தகுதியில்லை என்று முறையிடுகின்ற அளவிற்குப் போய், அந்த நீதிபதிக்கு தகுதி இருக்கிறதா இல்லையா என்ற விசாரணைதான் தற்போது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக் கிறது. இதன் விளைவாக, குறிப்பாக அந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆரம்பம் முதல் தொடர்ந்து வாதிட்டு வந்த மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தனது பதவியையே அண்மையில் ராஜினாமா செய்திருக்கிறார். அதிலேயே ஒரு வேடிக்கை.
வழக்கறிஞர் ஆச்சார்யா அளித்துள்ள ராஜினாமா கடிதத்தில்; அவர் சந்தித்த நெருக்கடிகளையும், மிரட்டல்களையும் வேதனையுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
“சிறப்பு அரசு வழக்கறிஞர் பதவியை நான் ராஜினாமா செய்ததன் மூலம், இதில் ஆர்வமுடன் இருந்த நபர்கள் தங்களது குறிக்கோளை எட்டிவிட்டனர். இந்த வழக்கு விசாரணை கால கட்டம் முழுவதிலுமே வெளியில் சொல்ல முடியாத கஷ்டங்களுக்கு நான் ஆட்படுத்தப்பட்டேன். இதற்கு காரணமாக இருந்தவர்களின் ஒரே குறிக்கோள் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின் அரசு வழக்கறிஞர் பதவியில் இருந்து என்னை விலக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. என்னை தூண்டுவதன் மூலமும், மிரட்டலின் மூலமும் பணிய வைக்க முடியாததால், எனக்கு எதிராக வழக்குகள் போடப்பட்டன. அதை நீதி மன்றம் தள்ளுபடி செய்தாலும் எனக்கு எதிராக தலைமை நீதிபதியிடமும், ஆளுநரிடமும் மனுக்கள் தரப்பட்டன. இந்தத் தொடர் நிகழ்வுகள் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனது ராஜினாமா மூலம், இதில் ஆர்வம் கொண்டிருந்த நபர்கள் தங்களது குறிக்கோளை அடைவார்கள் என்பது எனக்குப் புரிகிறது. இருப்பினும் நான் உதவியற்ற நிலையிலே உள்ளேன்”
என்று குறிப்பிட்டுள்ளார்.
“அரசு பதவியை பயன்படுத்தி பெங்களூரிலுள்ள பி.எம்.எஸ். கல்லூரி அறக்கட்டளையில் திரு. ஆச்சார்யா நிதி மோசடி செய்தார்” என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு; முகாந்திரம் எதுவும் இல்லை என்று தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கு தொடர்ந்தவருக்கு நீதிமன்றம் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.
(B.V. Acharya, Special Public Prosecutor in the disproportionate assets case against Jayalalithaa, resigned from the post, stating that he had suffered untold hardship and embarassment at the instance of interested parties whose sole objective appears to be to get rid of me as SPP. He alleged that the BJP Government in Karnataka was pressuring him to quit the post of SPP. When contacted, Mr. Acharya, 78, said : “The interested parties, having failed to achieve the objective by inducements and threats, initiated several proceedings with oblique motive. Petitions were filed before the High Court and the Governor seeking my removal from the post of SPP when I was holding the post of Advocate General. As a last resort, a private complaint was filed before the Special Lokayuk Court making false and baseless allegations against me, citing my position in the BMS Educational Trust, and an order was obtained for investigation against me. Finally, the High Court recently quashed that complaint, imposing a fine of Rs. 50,000 on the complainant.
Even the High Court in its August 3 order quashing the complaint against him, had found that there was “sufficient weight” in Mr. Acharya’s contention that the complaint was motivated, and was an attempt to humiliate and coerce Mr. Acharya to quit his post as SPP.) (The Hindu 15-8-2012)
இரண்டு நாட்களுக்கு முன்பு பெங்களூரில் நடைபெறும் ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக உயர் நீதி மன்றத்தில் விசாரணை வந்த போது, அரசு வழக்கறிஞராக இருந்த ஆச்சார்யாவும் ஆஜராகி, அந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு மனு தாக்கல் செய்தார். தமிழ் நாளேடுகளில் இந்தச் செய்தி மட்டும்தான் வந்துள்ளது. ஆனால் “இந்து” நாளிதழில், ஆச்சார்யா ராஜினாமா செய்யத் தேவையில்லை என்று கர்நாடக உயர் நீதிமன்றம் சொன்னதாக தலைப்பிட்டு அந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. அதில்
கர்நாடக உயர் நீதிமன்றம், அந்தச் சொத்துக் குவிப்பு வழக்கில் உயர் நீதி மன்றத்துக்கு ஆச்சார்யா உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டது. உயர் நீதிமன்ற நீதிபதி மோகன் சந்தான கவுண்டர் அந்த வழக்கு விசாரணையில் ஆச்சார்யாவை துணை புரிய வேண்டுமென்று கூறினார். திரு ஆச்சார்யா உயர் நீதிமன்ற நீதிபதியிடம் தான் அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாகத் தெரிவித்த போது, அவர் தனது பதவியை ராஜினாமா செய்யத் தேவையில்லை என்று சொன்னதோடு, சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி நியமனம் குறித்து ஏற்கனவே ஆச்சார்யா வாதாடியிருப்பதால் உயர் நீதிமன்றத்திற்கும் உதவியாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார் என்றும் “இந்து” நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான பத்திரிகைகள் இந்தச் செய்தியை ஜெயலலிதா தரப்பினருக்கு அஞ்சியோ என்னவோ, அப்படியே மறைத்து விட்டன. என்ன காரணமோ? ? (The Karnataka High Court asked Senior Advocate B.V. Acharya, who recently submitted his resignation from the post of Special Public Prosecutor in the Disproportionate Assets Case against Tamil Nadu Chief Minister Jayalalithaa, to assist the court in petitions filed by her and other accused. Justice Mohan Shantana goundar, before whom the petitions came up for hearing, told Mr. Acharya that he should assist the court on the issue raised in the petitions as it involved the law followed in the appointment of judge to the special court. When Mr.Acharya told the court that he had submitted his resignation to the State Government and had been asked to continue till alternative arrangements were made, the Judge said there was no need for him to resign from the post and asked him to assist the court since he had argued the issue before the Special Court.)
இது மட்டுமல்ல; இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பினர் இந்திய நீதி பரிபாலன முறையையே எந்த அளவிற்கு கேலிப் பொருளாக ஆக்கி வருகிறார்கள் என்பதற்கு திரு. ஆச்சார்யா அவர்கள் ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியே தக்க சான்றாகும். அந்தப் பேட்டியின் சில குறிப்பிட்ட பகுதிகள் வருமாறு :-
“ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்குக்கு 2005ஆம் ஆண்டு உச்ச நீதி மன்ற வழிகாட்டுதலின்படி
என்னை, அரசு சிறப்பு வக்கீலாக நியமித்தார்கள். ஆறே மாதங்களில் வழக்கு முடிந்து விடும் என்ற நம்பிக்கையில்தான் ஆஜரானேன். ஆனால், இந்த ஏழு ஆண்டுகளில் அவர்கள் தரப்பிலிருந்து ஸ்பெஷல் கோர்ட்டிலும், ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் எத்தனை மனுக்கள் போட்டிருக்கிறார்கள் தெரியுமா? எத்தனை முறை அப்பீலுக்குப் போய் இருக்கிறார்கள் தெரியுமா? இப்போது கூட சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா போட்ட இரண்டு மனுக்கள் விசாரணையில் இருக்கின்றன. சொத்துக்குவிப்பு வழக்கு கொஞ்சம்கூட நகராமல் அதே இடத்தில் இருந்தால், என்னால் என்ன செய்ய முடியும்? கடந்த ஓர் ஆண்டாகவே என்னை இந்த வழக்கில் இருந்து வெளியேற பலவித சதி முயற்சிகளை மேற்கொண்டனர்.
என்னைப் பற்றி அவதூறாக, கவர்னருக்கும் ஹைகோர்ட் நீதிபதிக்கும் பெட்டிஷன் போடுவது, ஸ்பெஷல் கோர்ட்டிலும் ஐகோர்ட்டிலும் துண்டு அறிக்கை கொடுப்பது, போஸ்டர் ஒட்டுவது, மீடியாக்களில் புகார் பரப்புவது என்றெல்லாம் செய்தனர். ஒரு கட்டத்தில் நான் அட்வகேட் ஜெனரல் பதவி, அரசு சிறப்பு வக்கீல் என இரண்டு பொறுப்புக்களையும் வகிக்கக் கூடாது என்றனர். அப்போது அவர்கள் நான் சிறப்பு வக்கீல் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று நினைத்தனர். ஆனால், நான் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். இறுதியாகச் சிலரைத் தூண்டிவிட்டு கர்நாடக லோக் ஆயுக்தா நீதிமன்றத்திலும், ஐகோர்ட்டிலும் என் மீது அவதூறு வழக்குப் போட வைத்தனர். லோக் ஆயுக்தா வில் போட்ட வழக்கு அடிப்படை ஆதாரம் இல்லாதது என்று ஆரம்பத்திலேயே வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது கோர்ட். இரண்டாவதாக கல்வி நிறுவன மோசடியில் ஈடுபட்டதாகப் போடப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், “நேர்மையானவர்மீது அவதூறு பரப்பாதீர்கள்” என்று கண்டித்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் வழக்கு தொடுத்தவருக்கு
விதித்திருக்கிறது. இதுபோன்ற பிரச்சினைகளால் தேவை யில்லாத நெருக்கடிகளுக்கும் தீவிர மன உளைச்சலுக்கும் உள்ளானேன். மெண்டல் டார்ச்சர் இந்த வயதில் எனக்குத் தேவையா? தொடர்ந்து இந்த வழக்கில் ஆஜராகி நெருக்கடிகளைச் சந்திக்க விருப்பம் இல்லை. நான் கையறு நிலையில் இருக்கிறேன். அதுதான் உண்மை. என்னுடைய ராஜினாமா ஜெயலலிதா தரப்புக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும் என்று கர்நாடக உள் துறைச் செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலும் குறிப்பிட்டிருக்கிறேன்.”
இவ்வாறு மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா அவர்கள் அந்தப் பேட்டியில் தன் மனந்திறந்து நடந்தவைகளையெல்லாம் உலகத்திற்குத் தெரிவித்திருக்கிறார். என்னதான் இவர்கள் வழக்கை நீட்டிக்க இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டாலும் மக்களுக்கும் உலகத்திற்கும் இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கு என்பது எந்த அளவிற்கு வலிமையான ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் உண்மையான ஒன்று என்பது தெளிவாக தெரிந்துவிட்டது. எதற்காக இப்படியெல்லாம் வழக்கை இழுத்தடிக் கிறார்கள்? “மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் ஏற்படும்!”
இதோ ஒரு உதாரணம்! சென்னை உயர் நீதி மன்றத்தில் எம். மாரியப்பன் என்பவர், கோவை சிறப்பு துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) உத்தரவை எதிர்த்து கோவை முதன்மை உதவி நீதிபதி நீதிமன்றத்தில் 1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்த முறையீட்டு மனு கடந்த 14 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதால் அதை விரைவில் விசாரித்துத் தீர்ப்பு வழங்கக் கோரியிருந்தார். அந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “நீதிமன்றத்தில் ஒரு முறையீட்டு மனுவை 14 ஆண்டு காலம் நிலுவையில் வைத்திருப்பது கவலை அளிக்கும் அம்சம். நிச்சயமாக ஜீரணிக்க முடியாதது. வழக்கு தாக்கல் செய்தவரின் வழக்குக்கு விரைவில் தீர்வு காண அனுபவ அடிப்படையிலான, நடைமுறை சாத்தியமான, தேவைக்கேற்ற, பொது அறிவு அணுகுமுறையை நீதிமன்றம் கடைப்பிடித்து வழக்குக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். இது, இந்த நீதிமன்றத்துக்கு, வழக்காடுபவர் நிரந்தரமானவரல்ல
(Immortal) வழக்கோ சாகாவரம் பெற்றது (Mortal); என்ற முதுமொழியை நினைவுபடுத்துகிறது. நடுநிலைமை, நியாயம், நல்ல மனசாட்சி மற்றும் புத்திசாலித்தனத்தின் அடிப்படையில் கூட, நீதி பிறழ்வதைத் தடுக்க இந்த முறையீட்டு மனுவை மூன்று மாதங்களுக்குள், விசாரித்துத் தீர்ப்பு வழங்குமாறு கோவை முதன்மை உதவி நீதிபதிக்கு உத்தரவு விடப்படுகிறது”. (Keeping an appeal pending for 14 long years is a disturbing feature and certainly not a palatable one. A pragmatic, practical, purposeful and common sense approach should be adopted by a court of law to secure the records in time so that the case/cause of the litigant is resolved early. It reminds this court of the saying that a “litigant” is mortal and a “litigation” is an immortal one”)
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு - 14 ஆண்டுகளாக நடைபெற்ற ஒரு வழக்குக்கு என்றால் - 16 ஆண்டுகளாக நடைபெறும் ஜெயலலிதா தரப்பினரின் சொத்துக்குவிப்பு வழக்குக்கும் இந்த தீர்ப்பு பொருந்துமா? பொருந்தாதா?
இந்திய அரசியல் சட்டத்துக்கு முரணாகப் பதவிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டவர்கள் - உயர் நீதிமன்ற நீதிபதியின் உறவினர்மீதே கஞ்சா வழக்குப் போட்டுப் பழி தீர்த்துக் கொள்ள முயற்சி செய்தவர்கள் - தங்களுக்கு வேண்டாதவர்களைப் பணிய வைத்திட சட்டத்தை வளைத்து காவல் துறையைப் பயன்படுத்தி கைது செய்து சிறையிலடைத்து மகிழ்ச்சி கொண்டாடியவர்கள் - முன்னாள் அமைச்சர்கள் மீதும், கழக முன்னணியினர் மீதும் நில அபகரிப்பு என்ற பெயரால் “குண்டர் சட்டம்” உள்ளிட்ட அனைத்துச் சட்டங்களையும் தங்கள் விருப்பத் திற்கும் வசதிக்கும் ஏற்ப துஷ்பிரயோகம் செய்தவர்கள் - அவர்கள்தான் இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கினை இவ்வாறு இழுத்தடிக்கிறார்கள். இது சரிதானா என்பதை நாட்டு மக்களே! நடுநிலையாளர் களே! நல்லவர்களே! நீங்களே கூறுங்கள்.
அன்புள்ள, மு.க. 19-8-2012
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 24–30. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.