அடக்கம்

முரசொலி · தொகுதி 47 · கடிதம் 3648

முரசொலி கடிதங்கள் · 3648

காவிரி ஆணையும், அன்றும் - இன்றும்!

நாள் 25.8.2012சுமார் 8 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3648. காவிரி ஆணையும், அன்றும் - இன்றும்!

உடன்பிறப்பே,

தமிழகத்திற்குத் தண்ணீர் தர கர்நாடகம் தொடர்ந்து பிடிவாதமாக மறுத்து வருகின்ற காரணத்தால், காவிரி ஆணையத்தை உடனே கூட்டும்படி பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் அவசரக் கடிதம் எழுதியிருப்பதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது. முதலமைச்சர் அனுப்பியுள்ள கடிதத்தின்படி பிரதமர் அவர்கள் உடனடியாக காவிரி ஆணையத்தைக் கூட்ட வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நானும் கேட்டுக் கொள்கிறேன். 2011இல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு காவிரி ஆணையத்தைக் கூட்டுமாறு ஜெயலலிதா எழுதும் இரண்டாவது கடிதம் இது. தி.மு.கழகம் ஆட்சியிலே இருந்து; இவ்வாறு பிரதமருக்குக் கடிதம் எழுதினால், ஜெயலலிதா என்ன செய்திருப்பார்? “முதலமைச்சர்; பிரதமருக்குக் கடிதம் எழுதி விட்டு, இங்கேயே உட்கார்ந்திருந்தால் என்ன செய்வது? நேரிலே சென்று கேட்டிருக்க வேண்டாமா? தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள்? நேரில் பிரதமரைப் பார்த்துக் கேட்டிருக்க வேண்டாமா? கபட நாடகம் போடும் கையாலாகாத சர்க்கார் இது” என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி வசை பாடி மகிழ்ந்திருப்பார். ஆனால் இப்போது இரண்டாவது கடிதம் எழுதியிருக்கிறார். முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று பிரதமர் காவிரி ஆணையத்தை இதுவரை ஏன் கூட்டவில்லை என்றால், கடந்த காலத்தில் இதே ஜெயலலிதா காவிரி ஆணையத்தைப் பற்றி தெரிவித்த கருத்துக்கள்தான் என்று கூடச் சொல்லலாம். அப்படி என்ன தான் ஜெயலலிதா காவேரி ஆணையம் பற்றி தெரிவித்தார் தெரியுமா?

21-8-1998இல் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், “காவிரி நடுவர் மன்றம் ஏழாண்டுகளுக்கு முன்பு கொடுத்த இடைக்காலத் தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக, தகராறு

செய்து கொண்டிருக்கிற நான்கு மாநில முதலவர்கள், பிரதமர் தலைமையிலான ஆணையத்தின் உறுப்பினர்கள் என்றால் அந்த ஆணையம் நடைமுறைக்கு வராத ஒன்று தானே? ஆணையம் என்றால் என்ன? விதிக்கப்பட்ட செயலை செய்யும் அதிகாரம் உடையது என்பதுதான் அதன் பொருள். ஆனால், பிரதமர் தலைமையிலான ஆணையத்திற்கு காவிரி நதி நீர் தொடர்பாக உத்தரவிடுவதற்கும், செயல்படுத்துவதற்கும் எந்த அதிகாரமும் இல்லை. காவிரிப் பிரச்சினையைத் தீர்க்க இயலாத, எந்த முடிவும் எடுக்க விடாமல் தடுக்கிற வெறும் விவாத அமைப்பாகத்தான் இந்தப் புதிய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய ஆணையத்தை முதலமைச்சர் கருணாநிதி ஒப்புக் கொண்டதற்குக் காரணம் என்ன? தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கான குறுவை விவசாயம் முடிந்துவிட்டது. அறுவடைக்குத் தயாராகி விட்ட நிலையில் கர்நாடகா இனிமேல் தண்ணீர் விட்டாலும் பலனில்லை. ஆக, பிரதமர் தலைமையிலான புதிய ஆணையம் என்பது தமிழ்நாட்டுக்கு எள்ளளவும் நன்மை பயக்காத ஏமாற்றுத் திட்டமே என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறிய ஜெயலலிதாதான் நேற்றைக்கு பிரதமருக்கு உடனடியாக அதே காவிரி ஆணையத்தைக் கூட்டுமாறு கடிதம் எழுதியிருக்கிறார்.

2001ஆம் ஆண்டு தி.மு.கழகம் வெற்றி வாய்ப்பையிழந்து, ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு 9-9-2001 அன்று நான் கூறும்போது, “காவேரி பிரச்சினையில் தி.மு.க. ஆட்சிக்கு அ.தி.மு.க. ஒத்துழைப்பு தர மறுத்ததுபோல் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்தின் இந்தப் பிரச்சினையில் தி.மு.க. தனது ஒத்துழைப்பை இந்த அரசுக்கு நல்கும்” என்று தெரிவித்தேன். ஆனால் ஜெயலலிதா எப்படி விவசாயிகளின் ஜீவாதாரப் பிரச்சினையில் அவர்களுக்கு விரோதமாக நடந்து கொண்டார் என்பதை நாடறியும்.

2-4-2002 அன்று சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கூறும்போது, “செயல்படாத ஆணையம் காவேரி ஆணையம்”, “பல் இல்லாத ஆணையம்”; அந்த ஆணையத்தை ஏற்காமல் நாங்கள் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறினோம், மத்திய அரசு சொன்னதை ஏற்றுக் கொண்டு காவேரி பிரச்சினையில் துரோகம் விளைவித்தது தி.மு.க. அரசுதான்” என்று தேவையில்லாமல் தி.மு.க. மீது வசை பாடினார்.

21-6-2002 அன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு வருமாறு:-

“காவிரி நதி ஆணையத்தை உடனே கூட்டி அதன் விதிமுறைகளுக்கு திருத்தம் கொண்டு வர வேண்டும்; இதற்குப் பிரதமரின் தலையீடு மிகவும் அவசியம் என்பதை முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால் கர்நாடக மாநிலத்தின் சம்மதம் இல்லாமல் காவிரி நதி ஆணையத்தின் விதிகளுக்கு திருத்தம் வெளியிட இயலாது என்று பிரதமர் தெரிவித்து விட்டார். இதிலிருந்து காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை திறம்படச் செயலாக்குவதற்கு மத்திய அரசிடமிருந்து எந்தவித உதவியும் கிடைக்காது என்று தெரியவருகிறது. எவ்வித அதிகாரமும் இல்லாமல், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைத் திறம்படச் செயல்படுத்த இயலாத நிலையில் காவிரி நதி ஆணையம் உள்ளது. எனவே இந்த ஆணையத்தின் கூட்டங்களில் இனிமேல் தமிழ்நாடு கலந்து கொள்ளாது. இந்த முடிவு தற்போது உள்ள கண்காணிப்புக் குழுக் கூட்டங்களுக்கும் பொருந்தும். காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையையும் இனி வரப்போகும் இறுதி ஆணையையும் முழுமையாகவும் திறம்படவும் செயல்படுத்துவதற்கு ஏதுவாக தமிழக அரசு புதிய வரைவு திட்டத்தைச் சமர்ப்பிக்க உள்ளது. இதைச் செயலாக்க மத்திய அரசுக்கு ஆணையிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 131ன் கீழ் புதிய வழக்குத் தொடரப்படும். காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையையும் இனி வரப்போகும் இறுதி ஆணையையும் கர்நாடக அரசு மதித்துச் செயல்பட வேண்டுமென்று கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டுமென உச்ச நீதி மன்றத்தில் கோரிக்கை வைக்கப்படும்.”

அ.தி.மு.க. அரசின் இந்த அமைச்சரவை முடிவினைப் பற்றி என்னிடம் கருத்து கேட்ட போது, “ஆணையத்தைப்

புறக்கணிக்க ஜெயலலிதா அரசு எடுத்த முடிவு; விவேகமானதல்ல; குறுவை நெல் பயிரிடுவதற்குத் தேவையான தண்ணீரைப் பெறுவதற்கு மத்திய அரசின் தலையீட்டையும் உதவியையும் பெற அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும்; தி.மு.க. ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகளை எல்லாம் மாற்றும் போக்குதான் அ.தி.மு.க. அரசில் மேலோங்கி நிற்கிறது. காவிரிப் பாசனப் பகுதிக்கு; உரிய நேரத்தில் நீர் கிடைக்க முயற்சி மேற்கொண்டது தி.மு.க. ஆட்சிக் காலம். ஆணையக் கூட்டத்துக்குச் செல்ல மாட்டேன் என்பது அ.தி.மு.க. ஆட்சிக் காலம்” என்று நான் கூறினேன்.

ஜெயலலிதாவின் முதல் கோரிக்கையை அடுத்து மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி குறைந்தபட்சம் தண்ணீராவது திறந்து விட வேண்டும் என்று கர்நாடகத்தை நிர்பந்தித்தது. அதைத் தொடர்ந்து பிலிகுண்டுலுவில் இருந்து ஒரு டி.எம்.சி. தண்ணீரைத் திறந்து விட கர்நாடகம் ஒப்புக் கொண்டது. ஆனால் பிரதமருக்குக் கடிதம் எழுதிய மறுநாளே ஜெயலலிதா புறக்கணிப்பு அறிவிப்பை வெளியிட்டதால் அந்த முயற்சி தோல்வியடைந்தது. அதற்குப் பிறகும் காவிரியில் தமிழகத்துக்கு 3 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவை பிரதமர் வாஜ்பாய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டார். ஆனால் காவிரியில் தமிழகத்துக்கு 3 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட முடியாத நிலையில் கர்நாடகம் உள்ளதாக பிரதமரிடம் கர்நாடக அரசு தெரிவித்தது.

காவேரி ஆணையத்தைப் புறக்கணிப்போம் என்று அ.தி.மு.க. அரசு தெரிவித்த நேரத்தில், திருச்சியில் 4-7-2002 அன்று செய்தியாளர்கள் என்னிடம் அதைப்பற்றி கருத்து கேட்டனர். “காவேரி ஆணையம் அமைக்கப்பட்ட போது தி.மு.க. கழக ஆட்சியில் அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்து அவர்களில் மிகப் பெரும்பாலோருடைய கருத்தின்படிதான் அந்த ஆணையத்திற்கான ஷரத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அதிலே ஒரு ஷரத்தை நாம் விட்டுக் கொடுத்துவிட்டோம் என்றும், அதை இணைத்தால்தான் காவேரி ஆணையக் கூட்டத்திலே கலந்து கொள்ள முடியும் என்றும் இப்போதுள்ள அ.தி.மு.க. அரசாங்கத்தால் சொல்லப்பட்டு வருகிறது. அந்த ஷரத்து

என்னவென்றால், காவேரி ஆணையத்தினுடைய முடிவை - அதாவது, பிரதமர் தலைமையிலே உள்ள தமிழ்நாடு முதலமைச்சர், கர்நாடக முதலமைச்சர், கேரள முதலமைச்சர், பாண்டிச்சேரி முதலமைச்சர் ஆகியோர் உள்ளிட்டவர்கள் எடுக்கின்ற முடிவை எந்தவொரு மாநிலமாவது நிறைவேற்றத் தவறினால், அந்த மாநிலத்திலே உள்ள அணைக்கட்டு நிர்வாகத்தை ஆணையம் எடுத்துக் கொள்வது என்பதாகும். இதனை காவேரி ஆணையத்தில் உள்ள கர்நாடகமும், கேரளமும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தச் சூழ்நிலையில் அந்த ஷரத்தை வலியுறுத்த வேண்டாமென்றுதான் தமிழ் நாட்டிலே கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அப்படி ஒரு அணைக்கட்டின் நிர்வாகத்தைக் கைப்பற்றிக் கொள்வது அல்லது ஆக்கிரமித்துக் கொள்வது என்றால் அது இரண்டு மாநில மக்களிடையே எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைவெல்லாம் யோசித்துத்தான் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகளின் தலைவர்கள், திரு. மூப்பனார் போன்றவர்கள் இப்போதுள்ள காவேரி ஆணையத்திற்கு ஒப்புதல் கொடுத்தார்கள். கர்நாடக முதலமைச்சராக பட்டேல் இருக்கும்போது அரைகுறை மனதோடுதான் இந்த ஆணையத்தையே ஒத்துக் கொண்டார். அடுத்தடுத்து ஓரிரு கூட்டங்கள் காவேரி ஆணையத்தின் சார்பாக கூட்டப்பட்ட போது, அப்போது கர்நாடகா சார்பில் கலந்து கொண்ட முதலமைச்சர் கிருஷ்ணா அவர்கள் காவேரி ஆணையத்தையும், 205 டி.எம்.சி., தண்ணீர் காவேரியிலிருந்து தர வேண்டுமென்று நடுவர் மன்றம் அறிவித்த இடைக்கால ஆணையையும் ஒத்துக் கொண்டார். பிரதமர் வாஜ்பாய் அவர்கள் தலைமையில்தான் அந்தக் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டின் சார்பாக நான் கலந்து கொண்டேன்” என்று கூறினேன்.

காவேரி ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா சொன்னார். அதற்கடுத்த நாள்; “அழைத்தால் பார்க்கலாம்” என்றார். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் 5-7-2002 அன்று எதிர்க்கட்சியாக இருந்த நிலையிலும், பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு நான் காவிரி நதி நீர் ஆணையத்தை உடனே கூட்ட வேண்டுமென்று கோரி கடிதம் ஒன்று எழுதினேன். அந்தக் கடிதத்தில், “தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்ற காவிரி நடுவர் மன்ற உத்தரவை கண்காணிப்பதற்காகவே

தங்களது (பிரதமரது) தலைமையில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல் அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்டு காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், நடுவர் மன்ற ஆணையின்படி தண்ணீர் திறந்து விடப்படாததால், காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மிகுந்த துயருக்குள்ளாகியுள்ளனர். காவிரிப் பாசன விவசாயிகளின் இந்தத் துயரத்தை உணர்ந்து, பிரச்சினை ஓரளவேனும் குறைக்கப்பட்ட தமிழகத்திற்கு 3 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்து விடும்படி கர்நாடக முதலமைச்சரை தாங்கள் கேட்டுக் கொண்டதற்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், தாங்கள் விடுத்த அந்தக் கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்க மறுத்துள்ளது. எனவே, காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டத்தை விரைவில் கூட்டி நடுவர் மன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தங்களை வேண்டுகிறேன்” என்று எழுதியிருந்தேன்.

முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் முடிவெடுத்தவாறு 10-7-2002 அன்று உச்ச நீதி மன்றத்தில் காவேரியில் தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்ய வேண்டுமென்று வழக்கு தொடர்ந்தார். அதில் “29-7-2002 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் தமிழக, கர்நாடக அதிகாரிகளைப் பிரதிநிதிகளாகக் கொண்ட காவிரி நீர்க் கண்காணிப்புக் குழு ஆகஸ்ட் 12ஆம் தேதி கூடி ஆலோசித்து ஒரு வாரத்திற்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். தமிழக அரசின் கோரிக்கை தொடர்பான சிபாரிசுகளை பிரதமரைத் தலைவராகக் கொண்ட காவிரி நதி நீர் ஆணையத்துக்கு அது வழங்க வேண்டும். பின்னர் தமிழக, கர்நாடக முதலமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்ட காவிரி நதி நீர் ஆணையம் விரைவில் கூடி, அது பற்றி முடிவெடுக்க வேண்டும்” என்று உச்ச நீதி மன்றம் தெரிவித்தது.

5-7-2002 அன்று பிரதமருக்கு காவேரி ஆணையத்தைக் கூட்ட வேண்டுமென்று நான் எழுதிய கடிதத்திற்கு 10-7-2002 அன்று பிரதமர் எழுதிய பதில் கடிதத்தில் அதைப்பற்றிக் கவனிப்பதாகக் கூறியிருந்தார். அவ்வாறே காவிரி நதி நீர் ஆணையம் கூட்டப்பட்டது.

காவேரி ஆணையத்தைப் பல் இல்லாத ஆணையம், செயல்படாத ஆணையம் என்றெல்லாம் குறிப்பிட்ட ஜெயலலிதா

2002ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27இல் டெல்லியில் நடைபெற்ற காவேரி ஆணையக் கூட்டத்திலே கலந்து கொண்டார். ஆனால் அங்கே அனைவருடனும் சுமுகமாகப் பேசி சாதுரியமாகத் தண்ணீரைப் பெறுவதற்கான வழிவகை காணாமல், அவருக்குள்ள முன்கோபம் காரணமாக பிரச்சினையின் அவசர முக்கியத்துவத்தை மறந்து, இடையிலே வெளி நடப்பு செய்வதாகக் கூறி விட்டு வெளியே வந்து விட்டார். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்னவோ தமிழ் நாட்டு விவசாயிகள் தான்!

7-9-2002 அன்று செய்தியாளர்கள் என்னைச் சந்தித்த போது, “கர்நாடக மாநில முதல்வர் அடிக்கடி அனைத்துக் கட்சித் தலைவர்களைக் கூட்டி காவேரி பிரச்சினையிலே முடிவெடுப்பதைப் போல தமிழக முதல்வர் கூட்டுவதில்லையே என்று கேட்டபோது கூட, யாருடைய துணையும் இல்லாமல் தன்னால் செயல்பட முடியும் என்ற நம்பிக்கையுடைய முதல் அமைச்சரைத் தான் நாம் பெற்றிருக்கிறோம்” என்றுதான் கூறினேன்.

மருத்துவமனைக்கு முரசொலி மாறனைப் பார்க்க வந்த பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் காவேரி ஆணையத்தை உடனடியாகக் கூட்ட வேண்டுமென்று நான் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் பொறுப்பிலே இருந்த தமிழக முதல் அமைச்சர், ஜெயலலிதா பிரதமர் வருகின்ற நேரத்தில் கோடைவாசஸ்தலமான ஊட்டியிலே அரசுப் பணிகளைத் தீவிரமாக ஆற்றிக் கொண்டிருந்ததால்; (?) பிரதமரை நேரில் சந்திக்க முடியாமல், நான் வேண்டுகோள் விடுத்த பிறகு காவேரி ஆணையத்தைக் கூட்டுமாறு கோரி அப்போதும் பிரதமருக்கு டெல்லிக்குக் கடிதம் எழுதினார்.

29-11-2002 அன்று பிரதமர் தலைமையில் காவேரி ஆணையக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. கர்நாடக முதலமைச்சர் முதல் நாளே டெல்லி சென்று விட்டார். ஆனால் காவிரி நீர் தேவைப்பட்ட நமது மாநில முதல் அமைச்சர் கடைசி நிமிடம் வரை வருவதாகச் சொல்லிவிட்டு, பிறகு டெல்லி பயணத்தையே ரத்து செய்துவிட்டார். அதனால் யாருக்கு நட்டம்? முதல் அமைச்சருக்கு அல்ல, நமது மாநில விவசாயிகளுக்குத்தான்.

இதற்கிடையில் “பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியது,

கடுமையான ஆட்சேபத்துக்குரியது” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். முதலமைச்சர் பிரதமருக்கு எழுதிய அந்த அவதூறு கடிதத்தை நான்கு நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசு வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழக அரசின் வழக்கறிஞரான திரு. கே.கே. வேணுகோபால், நீதிபதிகள் முன்னிலையில் கூறுகையில், “பிரதமர் மீதும்; அவரது தலைமையில் செயல்படும் காவிரி நதிநீர் ஆணையத்தின் மீதும் தமிழகம் முழு நம்பிக்கை வைத்துள்ளது. காவிரி நதி நீர் ஆணையத்தின் மீது நம்பிக்கை தெரிவித்தும், பிரதமர் வாஜ்பாய்க்கு இது தொடர்பாக எழுதிய கடிதத்தைத் திரும்பப் பெறுவதற்காக மீண்டும் ஒரு கடிதத்தை வெகு விரைவில் பிரதமர் வாஜ்பாய்க்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதி அனுப்புவார்” என்றும் தெரிவித்தார்.

இது பற்றி நான் கூறும்போது, “13-9-2001 அன்று காவேரி ஆணையத்தைக் கலைக்க வேண்டுமென்று செய்தியாளர்களிடம் ஜெயலலிதா அறிவித்தார். காவேரி ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் கலந்து கொள்ள நிபந்தனைகள் விதித்தும், பிரதமர் வாஜ்பாய் அவர்களை விமர்சித்தும் தற்போது நவம்பர் 5 அன்று கடிதம் எழுதிய கால கட்டத்திற்குள்ளாக ஜெயலலிதா, காவேரி ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து, பல்வேறு முரண்பாடான நிலைப்பாடுகளை எடுத்து விட்டார். அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்” என்று கூறினேன். உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் ஒப்புக் கொண்டதற்கிணங்க, 16-11-2002 அன்று பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், பிரதமர்மீது தனிப்பட்ட முறையில் தான் மிகுந்த மதிப்பு வைத்திருப்பதாகவும், காவேரி ஆணையத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் எழுதியிருந்தார்.

இதை யெல்லாம் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம். ஆனால் உண்மை நிலை மேட்டூர் அணை இந்த ஆண்டு இதுவரை திறக்கப்படவில்லை; குறுவை சாகுபடி நடைபெறவே இல்லை; சம்பாவாவது பயிரிடப்படுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது என்பது தான். ஆனால் முதலமைச்சர் எதையாவது ஒரு பிரச்சினை பற்றி பிரதமருக்கு கடிதம் எழுதுகிறாரோ இல்லையோ, அதைப் பற்றிய செய்தியை ஏடுகளில் வெளியிடுவதிலேதான்

அதிக அக்கறை காட்டிக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.க. விற்கு வாக்களித்தால் தமிழ்நாட்டில் பாலாறு பாயும், தேனாறு ஓடும், பிரச்சினைகள் எல்லாம் நொடியில் தீர்ந்து விடும், எந்த நேரத்திலும் மின்பற்றாக்குறையே இருக்காது, கொலை, கொள்ளை என்பதே என்னவென்று தெரியாமல் மாயமாய் மறைந்து விடும் என்றெல்லாம் நம்பி வாக்களித்து எதுவும் நடக்காமல், ஏமாந்து நிற்கும் தமிழ் நாட்டு மக்களே, உங்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்று சொல்ல நான் தயாராக இல்லை. ஏன் என்றால் உங்களில் நானும் ஒருவன் அல்லவா?

அன்புள்ள, மு.க. 25-8-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 31–39. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 47-இல் மேலும் கடிதங்கள்