அடக்கம்

முரசொலி · தொகுதி 47 · கடிதம் 3649

முரசொலி கடிதங்கள் · 3649

மல்லாந்து படுத்திருப்பவன் காறித் துப்புகிற கதை!

நாள் 30.8.2012சுமார் 6 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3649. மல்லாந்து படுத்திருப்பவன் காறித் துப்புகிற கதை!

உடன்பிறப்பே,

அ.தி.மு.க. செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் தாங்கள் மக்களுக்காக என்ன செய்யப் போகிறோம் என்று சொல்வதற்கு மாறாக - தி.மு.கழகத்தையும் என்னையும் திட்டுவதுதான் நோக்கம் என்ற அடிப்படையிலே வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்களுக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முற்றிலும் என் மீதான தாக்குதல்தான்! 2009இல் இலங்கையில் இனக்கலவரம் உச்சக் கட்டத்தில் இருந்தபோது, மத்திய அரசை நான் வலியுறுத்தவில்லையாம்! அப்பாவி இலங்கைத் தமிழர்கள் அழிவிற்கு நான்தான் காரணமாம்! 2006ஆம் ஆண்டு மே திங்கள் வரை ஆட்சியிலே இருந்த ஜெயலலிதா இலங்கைத் தமிழர்களுக்காக என்ன செய்தாராம்? 16-4-2002 அன்று சட்டப் பேரவையில் ஜெயலலிதாவே முன்மொழிந்த தீர்மானம் வருமாறு:-

“இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப்பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது. இலங்கை அரசின் அனுமதியைப் பெற்று நமது இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி பிரபாகரனை சிறை பிடித்துக் கொண்டு வர வேண்டும்”

என்பதாகும். இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றிய லட்சணமா இது?

17-1-2009 அன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில்,

“இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள்; இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். ஆனால் இன்று இலங்கையில் என்ன நடக்கிறதென்றால், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல விடாமல் விடுதலைப் புலிகள், அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்”

என்று குறிப்பிட்டாரே, இதுதான் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றிய லட்சணமா?

ஜெயலலிதா இப்படியெல்லாம் சொன்னதால் அல்லவா, இலங்கை ராணுவத்தினர் இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்தனர். எனவே இலங்கைத் தமிழர்கள் அழிவிற்கு யார் காரணம்? ஜெயலலிதாவா? நானா?

இனக்கலவரம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது நான் எதுவும் செய்யவில்லையாம்! ஜெயலலிதாதான் பாடுபட்டாராம்! என்ன ஆதாரம்?

14-10-2008 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம், 24-10-2008 அன்று மனிதச் சங்கிலி, 12-11-2008 அன்று சட்டப் பேரவையில் தீர்மானம், 4-12-2008 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரோடு சந்திப்பு, 27-12-2008 அன்று தி.மு. கழகப் பொதுக் குழுவிலே தீர்மானம்,

28-3-2009 அன்று பிரதமருக்கும், சோனியாவிற்கும் கடிதம், 7-4-2009 அன்று பிரதமர், சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி, ப. சிதம்பரம் ஆகியோருக்கு தந்தி, 9-4-2009 அன்று சென்னையில் பேரணி, 21-4-2009 அன்று பிரதமர், சோனியா

காந்தி ஆகியோருக்கு மீண்டும் தந்தி, 23-4-2009 அன்று தமிழகத்தில் “பந்த்”, 24-4-2009 அண்ணா அறிவாலயத்தில் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்துடன் சந்திப்பு, 27-4-2009 அன்று உண்ணாவிரதம் - இவைகள் எல்லாம் இலங்கை யுத்தம் உச்சக் கட்டத்தில் இருந்தபோது நான் எடுத்த நடவடிக்கைகள்! ஆனால் என்னைக் குற்றஞ்சாட்டி செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா செய்தது என்ன?

14-10-2008 அன்று கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் “கண்துடைப்பு நாடகம்” என்று கூறி அதனைப் புறக்கணித்தார்.

15-10-2008 அன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில்,

“இலங்கையில் தற்போது நடக்கும் யுத்தம் விடுதலைப் புலிகள் என்னும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம். இந்த யுத்தத்தில் அங்கு வசிக்கும் அப்பாவித் தமிழர்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல விடாமல் விடுதலைப் புலிகள் அமைப்பு அவர்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாகச் செய்திகள் கூறுகின்றன. போரை நிறுத்த வேண்டும் என்பதன்மூலம் கருணாநிதி, விடுதலைப் புலிகள் அமைப்பைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று அல்ல”

என்று என்னைத் தாக்கி அறிக்கை விட்டதைத் தவிர வேறு எதையும் ஜெயலலிதா செய்ய வில்லை.

இலங்கைத் தமிழர்களுக்காக எதுவுமே செய்யாத ஜெயலலிதா, தற்போது அவரது கட்சியின் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் என்னைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.

மேலும் அந்தத் தீர்மானத்தில் போர் முடிந்து விட்டதாக பொய்யான தகவலைக் கூறி நான் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றதாகச் சொல்லியிருக்கிறார். நான் உண்ணாவிரதம் இருந்த 27-4-2009 அன்று மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் ஆங்கிலத்தில் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

27-4-2009

The Government of Sri Lanka has announced that combat operations have reached their conclusion and that the Sri Lankan Security forces have been instructed to end the use of heavy caliber guns, combat aircraft and aerial weapons, which could cause civilian casualities. Sri Lankan forces will now confine their attempts to rescue the civilians who remain and give foremost priority in saving them.

This is an important first step in addressing concerns for the safety and security of Tamil civilians and Internally Displaced Persons trapped in the conflict zone.

The need of the hour is for urgent steps to ameliorate the humanitarian situation of those who have come out from conflict zone as well as to bring the remaining civilians and IDPs in the No Fire Zone out to safety. The IDPs and innocent civilians are the main victims of the conflict and every measure must be taken to protect them and guarantee their welfare.

I am happy to announce that the Prime Minister has approved a grant of Rs. 100 crores (Rs. 1 billion) for providing humanitarian relief assistance to innocent civilians who have been evacuated from the conflict zone. The details regarding utilization of this assistance are being worked out.

ஆங்கிலத்தில் வந்துள்ள இந்த அறிக்கையின் தமிழாக்கம் வருமாறு :-

“போர் நடவடிக்கைகள் முற்றுப் பெற்று விட்டதென்றும், கனரகத் துப்பாக்கிகள், போர் விமானங்கள், வான்வழித் தாக்கிடும் போர் ஆயுதங்கள் போன்றவை குடிமக்களை பெருமளவிற்குக் கொல்லும் என்பதால் இலங்கை பாதுகாப்புப் படைகள் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.”

இவ்வாறு இலங்கை அரசு அறிவித்துள்ளதாகவும், மேலும் “குடிமக்களை மீட்பதற்கும், அவர்களைக் காப்பாற்றுவதற்கும் தேவையான அனைத்து முயற்சிகளையும்

மேற்கொள்வதில் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் இனி கவனம் செலுத்தும்” என்றும்,

“போர் முனையில் சிக்கிக் கொண்டுள்ள தமிழ் மக்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஆகியோரின் பாதுகாப்பு பற்றிய பிரச்சினைகளே முதன்மையானவை ஆகும். அவற்றைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசு இன்று செய்துள்ள அறிவிப்பு முக்கியமான முதல் படியாகும்” என்றும்

“போர் முனையிலிருந்து வெளிவந்தோரின் துயரங்களைத் தணிப்பது மட்டுமன்றி; போர் நடைபெறாத பகுதியில் இன்னும் தங்கியிருக்கும் குடிமக்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஆகியோரை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதுதான் தற்போதைய உடனடித் தேவையாகும்” என்றும், இலங்கை அரசு கூறியிருப்பதாகத் தெரிவித்த பிரணாப் அவர்கள், அந்த அறிக்கையில்,

“போர்ப் பகுதியிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு இந்தியப் பிரதமர் அவர்கள் 100கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளார் என்பதை அறிவித்திட மகிழ்ச்சி அடைகிறேன்”

என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மத்திய முக்கிய அமைச்சர் ஒருவரே இவ்வாறு அறிவித்த பிறகும், அதை எப்படி நம்பாமல் இருப்பது? அவ்வாறு நம்பி நான் எடுத்த முடிவுக்குத்தான் களங்கம் கற்பிக்க முயலுகிறார் இன்றைய முதல்வர் ஜெயலலிதா. இந்த ஒன்றிலிருந்தே ஜெயலலிதாவின் தற்போதைய செயற்குழுத் தீர்மானம் எவ்வளவு இட்டுக் கட்டிய கற்பனை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இதுமாத்திரமல்ல; ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதுதான் இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக மிகவும் பாடுபட்டவரும், விடுதலைப் புலிகளின் அரசியல்

ஆலோசகராக இருந்தவருமான அருமை நண்பர் ஆண்டன் பாலசிங்கம் அவர்கள்,

நோய்வாய்ப்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை அளிப்பது பற்றி ஓர் பிரச்சினை எழுந்தது. அப்போது பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் அது பற்றிக் கேட்டபோது, மனிதாபிமான அடிப்படையில் பாலசிங்கம் அவர்களுக்கு சிகிச்சை பெறுவது பற்றி பரிசீலிக்கப்படும் என்றுதான் கூறினார். அப்போது தமிழக முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா, வாஜ்பாய் அவர்களின் கருத்தைக் கடுமையாக எதிர்த்தார். தமிழகம் உள்பட இந்தியாவின் எந்த இடத்திலும் ஆண்டன் பாலசிங்கம் சிகிச்சை பெற, மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்றே கூறினார். தமிழகத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் மீது புதிய “பொடா” சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

12-4-2002 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா, விடுதலைப் புலிகள் பிரச்சினை தொடர்பாக இரண்டு முறை விரிவாகப் பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியின் போது அவர் கூறியதாவது :-

“விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான சமரசப் பேச்சு வார்த்தையில் இந்தியா பங்கேற்காது எனப் பிரதமர் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் அதேசமயம் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் பால சிங்கத்துக்கு இந்தியாவில் சிகிச்சை அளிப்பது குறித்து மனிதாபிமான அடிப்படையில் பரிசீலிக்கப்படும் எனப் பிரதமர் தெரிவித்துள்ளதை எதிர்க்கிறேன். தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் எந்த இடத்திலும் ஆண்டன் பாலசிங்கம் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்பது அ.தி.மு.க. அரசின் நிலைப்பாடு. இந்த விஷயத்தில் தமிழகத்தை மத்திய அரசு நிர்ப்பந்திக்காது என்ற நம்பிக்கை உள்ளது.”

இப்படியெல்லாம் பேட்டி கொடுத்தவர் இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்தவராம்! ஆனால் நான் இலங்கைத் தமிழர்கள் அழிவிற்குக் காரணமானவனாம்!

ஜெயலலிதாவிடம் செய்தியாளர்கள், “விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்” என்று ம.தி.மு.க., பா.ம.க., போன்ற சில கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்களே என்று கேட்டபோது,

“விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பு. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் தேசத்துரோகக் குற்றம் செய்ததாகக் கருதப்பட வேண்டும். எனவே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் மீது புதிய “பொடா” சட்டத்தின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியும். இச்சட்டத்தின் கீழ் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கும் உள்ளது”

என்று பதிலளித்தார். நானாக இதை இட்டுக்கட்டிக் கூறவில்லை. தினமணி நாளிதழ் 13-4-2002இல் முதல் பக்கத்தில் வந்துள்ள தலைப்புச் செய்தியே இதுதான்!

இத்தகைய முரண்பாடுகளுக்கும், இரக்கமின்மைக்கும் சொந்தக்காரர்தான் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா; இவர்தான் நம்மைப் பார்த்து “கபட நாடகம்” ஆடுவதாகச் சொல்கிறார். அரசியலுக்கு வந்தது முதல் இப்போது ஆட்சி நடத்துகிற வரையில் அனைத்து நிகழ்ச்சிகளையும் “கபட நாடகம்” ஆகவே ஆடித் தீர்ப்பவர், நம்மைப் பார்த்து பொய்யர்கள் என்றும், புளுகர்கள் என்றும், உண்மையை மறைப்பவர்கள் என்றும் உளறிக் கொட்டுவதும்; தங்கள் வரலாற்றை மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு பிறர் மீது மாசு கற்பிக்க முயலுவதும், மல்லாந்து படுத்திருப்பவன் காறித் துப்பிய கதையாகவே ஆகிவிடும்.

அன்புள்ள, மு.க. 30-8-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 40–46. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 47-இல் மேலும் கடிதங்கள்