அடக்கம்

முரசொலி · தொகுதி 47 · கடிதம் 3652

முரசொலி கடிதங்கள் · 3652

மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைப்போம்; வா!

நாள் 10.9.2012சுமார் 4 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3652. மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைப்போம்; வா!

உடன்பிறப்பே,

முப்பெரும் விழாவினை இந்த ஆண்டு எந்த மாவட்டத்தில் நடத்துவது என்ற பேச்சு, அண்ணா அறிவாலயத்தில் எழுந்தபோது, சில மாவட்டக் கழகச் செயலாளர்கள், அங்கே இருந்தவர்கள் தங்கள் தங்கள் மாவட்டத்திலே நடத்துவதாக முந்தினார்கள். கழகப் பொருளாளர் தம்பி மு.க. ஸ்டாலின், இந்த ஆண்டு முப்பெரும் விழாவினை விழுப்புரத்திலே நடத்துவதாக முன்பே சொல்லிவைத்துள்ளார். “டெசோ” மாநாட்டினை அங்கே நடத்துவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, பின்பு சென்னைக்கு மாற்றப்பட்டதால், அவருக்கு முன்னுரிமை தர வேண்டுமென்று சொல்லியிருக்கிறார் என்றதும், பொதுச் செயலாளர் பேராசிரியரும் வழிமொழிய இந்த ஆண்டு முப்பெரும் விழாவினை விழுப்புரத்திலே நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டுவிட்டது. விழுப்புரம், தற்போதே விழாப்புரமாக காட்சி அளிப்பதாக செய்திகள் வருகின்றன. பொன்முடியின் ஏற்பாடல்லவா? கேட்கவா வேண்டும்!

முடிவெடுக்கப்பட்டு செய்தி வெளிவந்த மறுநாள் சென்னைக்கு வந்து நன்றி தெரிவித்து விட்டு உடனே நான் விழுப்புரம் செல்கிறேன் அண்ணா, முப்பெரும் விழா வேலைகள் இருக்கின்றன என்று கூறிவிட்டு, நான் சம்மதம் தெரிவிப்பதற்கு முன்பே புறப்பட்டு விட்டார்.

முப்பெரும் விழா - கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை நம் நினைவில் பதித்து - நெஞ்சில் செதுக்கிய - நிகரில்லாத் தமிழர் கோமான் யார் என்ற கேள்விக்கு - ஒரே விடையாக விளங்குகின்ற வித்தகர் - தன்மானக் குன்றம் - தரணி வாழ் தமிழர்களெல்லாம் பெருமன்றம் - தலைமையும் இலக்கணமாய் - பகைமைக்கும் பரிவு காட்டும் நற்குணச்

செல்வமாய்த் திகழும் பேரறிஞர் அண்ணாவின் 104வது பிறந்த நாள் விழா! இந்த ஆண்டு முப்பெரும் விழாவினை, முப்பெரும் விழா மாநாடாகவே நடத்துகின்ற ஏற்பாட்டினைத் தொடங்கி - விழுப்புரத்தில் மாபெரும் விழா மட்டுமல்ல; அதனை மாநாடு போலவே நடத்துகிறோம்.... நாட்டு வாட்டம் போக்கிடவும், நலிவு தீரவும் எத்தனையோ மாநாடுகளை திட்டமிட்டு நடத்திக்காட்டிய நம் அண்ணனுக்கு நாம் நடத்துகின்ற மாநாடு இது. அவரை ஆளாக்கிய தந்தை பெரியாருக்கு நாம் நடத்துகின்ற மாநாடு இது. நம்முடைய கழகத்திற்கு நாம் நடத்துகின்ற மாநாடு இது என்று விழுப்புரம் மாவட்டக் கழகக் காவலர்களும் - மாவட்டக் கழக நிர்வாகிகளும் - விழுப்புரத்தில் கண்டுகொள்ளாக் காட்சிகாண நம்மை அழைத்திருக்கின்றனர்.

செப்டம்பர் திங்கள் 15ஆம் நாள் காலை 7.30 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு எதிரே அமைந்துள்ள அண்ணாவின் திரு உருவச் சிலைக்கு நானும், பேராசிரியரும், பொருளாளரும் மற்றும் கழக முன்னணியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, விழுப்புரம் முப்பெரும் விழா மாநாட்டில் கலந்து கொள்ளப் புறப்படுகிறோம். விழுப்புரத்தில் முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் திறந்தவெளி மாநாடாக நடத்தினால் எங்கே மழை வரக் கூடுமோ என்பதற்காக இந்த ஆண்டு பந்தல் அமைத்து சிறப்பாக நடத்துகிறார்கள் விழுப்புரம் மாவட்டக் கழகக் கண்மணிகள், தம்பி பொன்முடி தலைமையில்!

காலை 10 மணியளவில் - நமது கழகத்திற்கு வலுசேர்க்க பட்டி தொட்டியெல்லாம் பயணம் செய்து - பட்டி மன்றங்கள் மூலமாக பிரச்சாரம் செய்து வருகின்ற தம்பி திண்டுக்கல் ஐ. லியோனி குழுவினரின் பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பட்டிமன்றத்தின் தலைப்பு - “நூற்றாண்டு திராவிட இயக்க வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரிந்தது கலைப்பணியே - அரசியல் பணியே”.

பட்டிமன்ற நிகழ்ச்சி முடிந்ததும் சிறிது நேரம் மட்டுமே இடைவேளை! 3 மணியளவில் தம்பி இறையன்பன் குத்தூசு அவர்களின் கழகப் பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.

மாலையில் தொடக்க நிகழ்ச்சியாக விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் புதிதாக அமைந்துள்ள பேரறிஞர்

அண்ணா அவர்களின் முழு உருவ வெண்கலச் சிலையினை பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் தலைமையில், பொருளாளர் தம்பி மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நான் திறந்து வைக்கிறேன்.

அடுத்து முப்பெரும் விழா மேடையில் - அண்ணா அவர்கள் தன் வாழ்வில் மாணவர்கள் பால் பெரிதும் அன்பும் அக்கறையும் கொண்டு, அவர்களை முன்னேற்றப் பாடுபட்டார் என்பதற்கு அடையாளமாக - மேல் நிலைப் பள்ளித் தேர்வில் உயர் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தி.மு.கழக அறக்கட்டளை சார்பில் நிதியளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்பித்தல் போட்டியில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி மற்றும் மேல் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு முரசொலி அறக்கட்டளை சார்பில் நிதியளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல, தொழிலாளர்கள்பால் அண்ணா நேசம் கொண்டவர் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் வழங்குவதைப் போலவே இந்த ஆண்டும் சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கான நற்சான்று, பண முடிப்பு, பதக்கம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

மாலையில் முப்பெரும் விழா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி - அந்த விழாவிற்கு பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் தலைமை தாங்கிட தந்தை பெரியார் விருதினை மும்பை பொ. அப்பாதுரை அவர்களுக்கும், அண்ணா விருதினை அ. இரகுமான்கான் அவர்களுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களுக்கும் என் பெயரால் உள்ள கலைஞர் விருது ஆர்.டி. சீத்தாபதி அவர்களுக்கும், என்னால் வழங்கப்படவுள்ளது. விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி பொன்முடி வரவேற்புரை ஆற்றிட, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆர். ஜனகராஜ் நன்றியுரையாற்ற உள்ளார்.

நீர் இடித்து நீர் விலகாது என்ற பழமொழிக்குச் சான்றாக நின்ற - நிற்கின்ற - நிற்கப் போகின்ற இந்தத் திராவிடர் இயக்கத்தின் வரலாறு; தீரர்கள் நடேசனார், நாயர், தியாகராயருடன் விளைந்து வாடிவிட்ட காளான் செடி அல்லவே! - களங்கள் பலவற்றில் பகை உணர்வுகளைப் பந்தாடி - வென்றும் - வீழ்ந்தும்

- உயர்ந்தும் - தாழ்ந்தும் - இன்று உச்சி முட்டக் கொடி பறக்க திராவிட இயக்கத்தின் வரலாறு; தீப்பொறியாகக் காற்றில் பறந்து மறைந்து விட்டதல்ல; தீபமாக ஒளி விட்டவாறு தென்னக மக்களின் நம்பிக்கை மிகுந்த ஜோதிச் சுடராக; விண்ணுக்கும் மண்ணுக்குமாக எழுந்து நிற்கும் பேரொளியாக விளங்குகிறதென்றால்; அதற்கு ஒரு தாயிடம் உருக்கமுடன் அன்பு செலுத்தும் மகனைப் போல - இந்த இயக்கத்தின் மூத்த பிள்ளையாகிய அண்ணா அவர்களிடம் - இளைய பிள்ளைகளாகிய நாம் காட்டிய பாசம், பரிவு, கொண்டிருந்த பந்தம், கொண்டிருக்கும் சொந்தம்; இவைகள் அல்லவா தலையாய காரணங்கள்!.....

“தன்னை வெல்வான் தரணியை வெல்வான்” என்று இந்தத் தம்பியை யாரையங்கே கோட்டை தனிமைச் சிறைச்சாலையில் தங்கத் தமையன் அண்ணா வாழ்த்தினார் என்றால்; உன் உழைப்புத்தான் இந்த இயக்கத்துக்கு உயிர் என்று உத்தமப் பெரியார் உரைத்தார் என்றால் - உன் போன்ற உடன்பிறப்புகள் என்னுடன் கொண்டுள்ள உறவும்; உதவிடும் ஒத்துழைப்பும் - அல்லவா என் உதிரத்துடன் கலந்து எனக்கோர் புத்துணர்ச்சியை வழங்கி; இந்தப் புவியில் மேலும் பல வெற்றிகளைப் பெற்றிட ஆர்த்தெழும் அறப்போர் ஆயுதங்களாக அணிவகுத்திருக்கின்றன.

உடன்பிறப்பே,

இந்த விழாக்கள் பற்றிய செய்திகள் ஏற்கனவே ஏடுகளில் வெளிவந்து அவற்றில் கலந்து கொள்ள புறப்பட வேண்டுமென்று எண்ணத்தோடு நீ இருக்கிறாய் என்பதை நான் அறிவேன். இருந்தாலும், அண்ணாவின் விழாவிற்கு, அண்ணன் நான் அழைக்க வில்லையே என்ற குறை உனக்குமிருக்குமல்லவா? அதற்காகவே இந்தக் கடிதம்! தலைமைக் கழகம், அண்ணாவிற்கு விழா எடுத்த போதும், உனது சொந்த ஊரில் உன்னால் முடிந்த அளவிற்கு அண்ணாவிற்கு விழா எடுப்பாய் என்பதை நான் நன்கறிவேன். அதுதான் குன்றின் மேலிட்ட விளக்காக ஒளி வீசும். இருந்தாலும் விழுப்புரம் எடுக்கும் இந்த விழாவிற்கு நீ உன் குடும்பத்தோடு புறப்படத் தயாராகு!

மனக் கலக்கத்தில் ஒரு மணல் துளியளவு கூட தலைவனுக்கு வருதல் கூடாது என்று என் தம்பிமார்கள் எண்ணிடுவார்களேயானால்;

அண்ணா போல் புன்னகை தவழும் முகத்துடன் அய்யா போல் நெஞ்சு நிமிர்த்திய நடையுடன் வயதான இந்தக் காலத்திலும் வாலிப முறுக்கு எனக்கும் வந்தே தீரும் தம்பி!

என்று திடம் கொள்கிறேன் - திசை எட்டுமிருந்து தீ பாவினாலும் - தீயோர் வலை நாள்தோறும் விரிக்கப்பட்டாலும் - கணைகள் ஆயிரமாயிரம் கடுகிப் பறந்து வரினும் கவலைப்படாது;

கருமமே கண்ணாக - கழகமே பாசறையாக - பெரியாரே துணையாக - பேரறிஞர் அண்ணாவே என் உயிரின் இணையாக -

இருக்கும்போது; இந்த முப்பெரும் விழா - விழுப்புரம் நகரில் நடைபெறுகிறது;

அதில் நான் கலந்து கொண்டு கழகத் தீரர்களுக்கு விருது வழங்கும் வாய்ப்பு பெறுகிறேன் என்பதை நினைத்தால்;

இதனை இரட்டிப்பு மகிழ்ச்சி என்பதா?

இடையறாத மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கப் போகிறேன் என்பதா?

வாழ்க திராவிடம் வெல்க திராவிட உணர்வு - வாழ்க தமிழ் வெல்க தமிழர்!

அன்புள்ள, மு.க. 10-9-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 60–64. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 47-இல் மேலும் கடிதங்கள்