முரசொலி கடிதங்கள் · 3655
அந்த நாள் ஞாபகம்; இந்த நாள் இல்லையா?
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3655. அந்த நாள் ஞாபகம்; இந்த நாள் இல்லையா?
உடன்பிறப்பே,
தமிழகத்தில் இன்று என்ன நடக்கிறது? இதோ சில சான்றுகள்! அனைத்தும் இன்றைய நாளேடுகளில் வந்த செய்திகளே!
அமெரிக்க துணைத் தூதரகம் 5வது நாளாக முற்றுகை - இரண்டு மணி நேரம் ஸ்தம்பித்தது அண்ணாசாலை - பைக் எரிப்பு, கார், பஸ் உடைப்பு - போலீஸ் தடியடி - ஆஸ்பத்திரியில் பரபரப்பு - இது தலைப்பு. போலீசார் தடியடி நடத்துகின்ற புகைப்படங்கள் ஏடுகளில் எல்லாம் வெளிவந்துள்ளன. “நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் அமெரிக்க திரைப்படத்தைக் கண்டித்து 24 முஸ்லீம் அமைப்புகள் சென்னையில் நேற்று (18-9-2012) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. மாலை 4.45 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பலர் திடீரென அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிடுவதாகக் கூறி அண்ணாசாலை வழியாக ஓடினர். இதைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அண்ணா சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது கல் வீசி தாக்கப்பட்டது. இதில் தனியார் டி.வி. நிறுவனத்தின் கார் உட்பட இரண்டு கார் கண்ணாடிகள் சேதமடைந்தன. அண்ணா சாலையில் உள்ள கார் நிறுவன கட்டிடத்தின் கண்ணாடிகள் மீது கற்கள் வீசப்பட்டன. இதில் கண்ணாடி உடைந்து அங்கிருந்த ஊழியர் ஒருவர் காயமடைந்தார். இதனால் பதற்றம் ஏற்பட்டு, அண்ணாசாலையில் இருந்த கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அந்தப் பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. இதில் சிலர் மண்டை உடைந்தது. போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது. இது சென்னை நகரில் ஒரு காட்சி.
இது தொடர்ந்து ஐந்து நாட்களாக நடக்கிறது. அரசு சார்பில் இந்த ஐந்து நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்துவோரின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, இந்தப் பிரச்சினையில் ஆவன செய்வதாக உறுதியளித்து, சுமுகமாகத் தீர்க்க ஏன் முயற்சிக்கவில்லை?
கிறித்தவ ஆயர் பேரவைத் தலைவர் திரு. ஏ.எம். சின்னப்பா அவர்கள் நேற்று (18-9-2012) அளித்த பேட்டியில், கூடங்குளத்தில் போலீசார் அத்துமீறி இடிந்தகரை தேவாலயத்தில் நுழைந்ததாகவும், கூடங்குளம் பங்குத் தந்தை இல்லத்திலும் காவலர்கள் அத்துமீறி நுழைந்ததாகவும், போலீசாரின் இந்த நடவடிக்கைகளைக் கண்டித்து, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பாக ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் தேவாலயத்தில் காவலர்கள் உள்ளே நுழைந்தது பற்றி கடந்த சில நாட்களாகப் பேசப்பட்டு வருகிறது. அரசு அவர்களை அழைத்துப் பேசியிருக்க வேண்டாமா? சமாதானப்படுத்தியிருக்க வேண்டாமா?
திருவள்ளூர் மாவட்டத்தில் திட்டக் குழு ஊரகப் பிரிவுக்கு நான்கு உறுப்பினர்களையும், நகர்ப்புறப் பிரிவுக்கு நான்கு உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று (18-9-2012) கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் அலுவலக வளாகத்திலும், வாக்குச் சாவடி மையத்திலும் மணிமாறன், எம்.எல்.ஏ., தலைமையில் அ.தி.மு.க.வினர் திரண்டு, தி.மு.க.வினரை வாக்குப் பதிவு செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். தி.மு.க. வேட்பாளர்களின் அடையாள அட்டைகளைப் பிடுங்கி கிழித்து எறிந்ததுடன் சரமாரியாகத் தாக்கி அங்கிருந்து வெளியேற்றியிருக்கிறார்கள். தி.மு.க.வினர் வந்த கார்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். தி.மு.க.வினர் மீது நடந்த தாக்குதலை பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். காவல் துறை அதிகாரியிடம் முறையிட்ட போது, கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் நடந்த சம்பவத்துக்கு தான் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டார். கலெக்டர் அலுவலகத்திற்குள் உள்ளே நுழையவே காவல் துறை அனுமதிக்கவில்லை. இதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதால், அவர்களை காவல்
துறை கைது செய்து மாலையில் விடுவித்திருக்கிறார்கள். இது ஒரு காட்சி.
அம்பத்தூர், அத்திப்பட்டு, அயப்பாக்கம், போரூர், பூவிருந்தவல்லி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் விநியோகம் செய்யும் தனியார் லாரி உரிமையாளர்கள் நேற்று (18-9-2012) காலையில் 200க்கும் மேற்பட்ட லாரிகளுடன் பூவிருந்தவல்லி தாசில்தார் அலுவலகம் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
இதோ மற்றொரு காட்சி! பொன்னேரி அருகே குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் வீட்டில் முகமூடிக் கொள்ளையர்கள் புகுந்து, கணவன், மனைவியைப் பயங்கரமாகத் தாக்கியதோடு, 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 42 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரொக்கப் பணம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். அதே கொள்ளையர்கள், கொக்குமேடு கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வீட்டில் பூட்டை உடைத்தவுடன் சத்தம் போடப்பட்டதால் தப்பியோடியிருக்கிறார்கள். பின்னர் பொன் நகரில் உள்ள பால் வியாபாரி தேவன் வீட்டிலும் கொள்ளையடிக்க முயன்றிருக்கிறார்கள். இவை அனைத்தும் நேற்று நடைபெற்ற காட்சிகள்.
தண்ணீர் லாரிகளை போலீஸ் அதிகாரிகள் மடக்கி அபராதம் விதிப்பதைக் கண்டித்து, சென்னை புறநகர்ப் பகுதிகளில் நேற்று தண்ணீர் லாரிகள் திடீரென நிறுத்தப்பட்டு, அதன் உரிமையாளர்கள் ஸ்டிரைக் செய்துள்ளார்கள்.
நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். இதற்கு முன்பாகவே திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களுக்கு லாரிகளில் சிலிண்டர்களை எடுத்துச் செல்லும் டிரைவர்களும், கிளீனர்களும் ஊதிய உயர்வுக் கோரிக்கைகளை முன் வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் இந்தப் பிரச்சினையில் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை உடனே தலையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலை கூட்டுறவுச் சங்கத்தில் புதிய உறுப்பினர் சேர்ப்பு விவகாரத்தில் மோதல் ஏற்பட்டு, நாற்காலிகளையும், கற்களையும் வீசி ரகளை நடைபெற்றுள்ளது.
ஏற்கனவே பள்ளி மாணவர்கள் செல்லும் வேனில் இருந்து ஒரு மாணவன் விழுந்து இறந்த சம்பவத்திற்குப் பிறகும் எச்சரிக்கையாக இல்லாத காரணத்தால், துறையூர் அருகே நேற்று (18-9-2012) பள்ளி வேனில் இருந்து கிஷோர் என்ற ஐந்து வயது மாணவன் கீழே விழுந்து இறந்திருக்கிறான். அது போலவே திருச்சிக்கு அருகே மிதுன் என்ற மாற்றுத் திறனாளி மாணவனும் பள்ளி வேன் மோதி இறந்திருக்கிறான்.
தர்மபுரி மாவட்டத்தில் அதியமான் கோட்டையில் சின்னசாமி என்ற கட்டிடத் தொழிலாளி உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காரைக்குடி அருகே பாலசுப்பிரமணியன் என்ற ஒன்றிய தி.மு.க. இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அருகே தாம்பரத்தில் மின்சாரம் தாக்கி மைக் செட் ஊழியர் ஒருவரும், மாணவர் ஒருவரும் உடல் கருகி இறந்திருக்கிறார்கள்.
ஜாமீனில் விடுதலையான இலங்கைத் தமிழர் செந்தூரன் மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்கியிருக்கிறாராம்.
பரங்கிமலை போலீஸ் குடியிருப்பில், பட்டப் பகலில் காதலியுடன் உல்லாசமாக இருந்த போலீஸ்காரர் ஒருவரை கையும் களவுமாக பிடித்து மனைவியே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்.
திருவொற்றியூரிலிருந்து மணலி செல்லும் சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கூடங்குளத்தில் சம்மன் அனுப்பியும் ஆஜராகாத உதயகுமாருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. அவருடைய மனைவியோ உதயகுமாருக்கு ஆபத்து என்று பேட்டி கொடுத்துள்ளார்.
ராஜபக்ஷே இந்தியாவுக்கு வருவதை எதிர்த்து, சட்டக் கல்லூரி மாணவர்கள் நேற்று (18-9-2012) திடீரென சென்ட்ரலில் ரெயில் மறியல் போராட்டம் செய்திருக்கிறார்கள்.
நேற்று காலையில் அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை என்று அறிவிப்பு செய்த அ.தி.மு.க. அரசின் பள்ளிக் கல்வித் துறை, மாலையில் அந்த அறிவிப்பை திடீரென வாபஸ் பெற்றுள்ளது.
“கிடப்பதெல்லாம் கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மனையிலே வை” என்பதைப் போல அ.தி.மு.க. அரசு தன் மீது ஏராளமான தவறுகளை வைத்துக் கொண்டு, தன்மீது சாற்றப்பட்ட குற்றச்சாட்டுகளைச் சமாளிக்கின்ற வகையில் எப்போதும் காவல்துறையினரைப் பலிகடாவாக்கி, சென்னை அமெரிக்கத் தூதுவரக வளாகத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு சென்னை மாநகர காவல் துறை ஆணையரைப் பொறுப்பாக்கி இன்று அவசர அவசரமாக அவரை அந்தப் பதவியிலிருந்து மாற்றியிருக்கிறது.
கடந்த மாதம் திருவேற்காடு கோவிலில் முதல் அமைச்சர் நடத்தி வைத்த 1006 திருமணத்தின் போது, ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட ஜோடிகளைக் கொண்டு வந்து மீண்டும் திருமணம் செய்து வைத்த கேலிக்குரிய செய்திகள் ஏடுகளிலே ஆதார பூர்வமாக வந்தபோது, அந்தத் துறையிலே உள்ள அதிகாரிகளையெல்லாம் இப்படித்தான் அ.தி.மு.க. அரசு பழி வாங்கியது. அரசு செய்கின்ற தவறுகளுக்கெல்லாம் அதிகாரிகள் பலிகடாவாக ஆக்கப்படுகிறார்கள்.
உடன்பிறப்பே, தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போது இதுபோல ஒரு நிகழ்ச்சி, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டால் போதும். உடனடியாக இன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா எப்படியெல்லாம் அறிக்கை விட்டிருக்கிறார். “இந்தத் துறைக்குப் பொறுப்பேற்றுள்ள “மைனாரிட்டி” அரசின் முதலமைச்சர், இந்தத் தவறுக்குப் பொறுப்பேற்று உடனடியாகப் பதவி விலக வேண்டும், இல்லாவிட்டால் மத்திய அரசு இந்த அரசின் மீது 356வது பிரிவினைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று எத்தனை அறிக்கைகள் விட்டிருக்கிறார் என்பதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.
அன்புள்ள, மு.க. 20-9-2012
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 79–83. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.