முரசொலி கடிதங்கள் · 3654
பெரியார் பிறந்தநாளில் ‘அதை நினையுங்கள் - இதை மறந்து விடுங்கள்!’
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3654. பெரியார் பிறந்தநாளில் ‘அதை நினையுங்கள் - இதை மறந்து விடுங்கள்!’
உடன்பிறப்பே,
இன்று தந்தை பெரியார் அவர்களின் 134ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா.
நேற்றையதினம் விழுப்புரத்தில் நமது அண்ணனின் 104ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - தந்தை பெரியார் பிறந்த நாள் விழா - கழகம் பிறந்த நாள் விழா என தமிழர் வரலாற்றில் மிகச் சிறப்புக்குரிய மூன்று நிகழ்வுகளையும் ஆண்டு தோறும் நாம் முப்பெரும் விழா கொண்டாடுவதைப் போல; இந்த ஆண்டு முப்பெரும் விழா நடைபெற்று முடிந்த மகிழ்ச்சியோடு அமர்ந்துள்ளேன். விழுப்புரத்தில் முப்பெரும் விழாவா நடந்தது? ‘முப்பெரும்’ மாநாடே நடந்தது. எங்கு நோக்கினும் கழகத்தினர்! கழகத்தினர்! கழகத்தினர்! - நான் ஏற்கனவே எழுதியது போல விழுப்புரம் விழாப் புரமாக - விழிப்புணர்வு பெற்ற விழுப்புரமாக அளித்த காட்சியினை; கண்டோம். எழுச்சி - எழுச்சி - எழுச்சி - எங்கு நோக்கினும் கழகக் கொடிகள், பதாகைகள் - வரவேற்பு வளைவுகள் - தோரணங்கள் - ஒவ்வொன்றிலும் மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி பொன்முடியின் உழைப்பும் - விழுப்புரம் மாவட்டக் கழகத் தோழர்கள் பட்ட பாடும் தெரிந்தது. காலை முதல் இரவு 10 மணி வரை ஒரு நிமிடம் கூட ஓய்வில்லை. மகிழ்ச்சியின் எல்லையில் நின்று விழாவினை இரவு 10.15 மணியளவில் முடித்து விட்டு, சென்னை புறப்பட்டோம். வழியில் திண்டிவனத்தில் 11 மணியளவில் இரவு சாப்பாடு என்ற ஒன்றை முடித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு விடியற்காலை 3 மணிக்குத்தான் சென்னை திரும்பி உறங்கச் சென்றேன்.
அந்த எண்ணங்களோடு காலையில் எழுந்தவுடன் நாளை தந்தை பெரியார் அவர்களின் 134வது பிறந்த நாள்
விழாவினையொட்டி, அவரோடு பழகிய நிகழ்வுகள் எல்லாம் என் நினைவுகளில் அலை அலையாக எழுந்தது. நேற்று விழுப்புரம் முப்பெரும் விழாவில் “சாந்தா அல்லது பழனியப்பன்” என்ற நாடகத்தை நாகை திராவிட நடிகர் கழகத்தின் சார்பில் நடித்தது பற்றியெல்லாம் சொன்னேன் அல்லவா; அதை முடித்து விட்டு புதுச்சேரிக்குத்தான் புறப்பட்டோம். இந்த நாடகத்தில் நான் தாங்கிய பாத்திரத்திற்குப் பெயர் சிவகுரு. புதுவை பொது மக்கள் என்னை “சிவகுரு” என்றே அழைக்கத் தொடங்கினர். புதுவையில் பெரியார், அறிஞர் அண்ணா, தளபதி அழகிரிசாமி போன்ற தலைவர்களையெல்லாம் அழைத்து மாநாடு ஒன்றினை நடத்தினோம். ஆனால் எங்களுக்கு எதிர்ப்பாளர்கள் “திராவிடத் தலைவர்களே, திரும்பிப் போங்கள்” என்று கூச்சலிட்டனர். “வா என்றழைப்பதுதான் தமிழர் பண்பு, போ என்று கூற காரணம் யாதோ?” என்று தன் பேச்சைத் தொடங்கி அண்ணா அவர்கள் அரியதோர் உரையாற்றினார்கள். அந்த உரையினைத் தொடர்ந்து கழகக் கொடியை ஏற்றி வைத்தார்கள். கொடி ஏற்றப்பட்ட அடுத்த வினாடியே கொடி மரத்தை வீழ்த்தி விட்டார்கள் எதிரிகள்! அவ்வளவுதான், அமளி தொடங்கி விட்டது. பெரியாரையும், அண்ணாவையும் பத்திரமாக ஒரு வண்டியில் ஏற்றி அனுப்பி விட்டு, நானும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும், காஞ்சி கல்யாண சுந்தரமும் நடந்து வந்து கொண்டிருந்தோம். ஒரு பெருங்கூட்டம் எங்களை சூழ்ந்து கொண்டது. அந்தக் குழப்பத்தில் ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து விட்டோம். அடி, அடி, அடி என்று அடித்தார்கள். என் மீது விழுந்த அடிகள் சிலவற்றை திருவாரூர் அண்ணன் ராசகோபால் வாங்கிக் கொண்டார். என் சட்டையில் மாட்டப்பட்டிருந்த “பெரியார் பேட்ஜை” பறிப்பதற்காக ஒருவன் என் சட்டையைக் கிழித்தான். நான் அந்த பேட்ஜை விடாமல் என் கையால் பற்றியவாறு ஓட முயற்சித்தேன். அன்றைக்கு என் சட்டையோடு சேர்த்து பெரியாரின் பேட்ஜை பிடித்திருந்த நான் இன்று வரை அந்த நினைவுகளையும் விடாமல் பிடித்துக் கொண்டுதான் உள்ளேன். அந்தப் பெரியாருக்குத்தான் இன்று பிறந்த நாள் விழா.
அடித்தவர்கள் களைத்துப் போய், நானும் செத்திருப்பேன் என்று எண்ணிக் கொண்டு சாக்கடையோரத்தில் என்னைத் தூக்கி வீசி விட்டு போய் விட்டார்கள். “ஐயோ, யார் பெற்ற
பிள்ளையோ? இப்படிச் சாகக் கிடக்கிறதே?” என்று சொல்லிக் கொண்டே ஒரு மூதாட்டி தன் வீட்டிற்குள் என்னைக் கொண்டு போய் காப்பாற்றினார்கள். என் நிலைமை என்னவாயிற்று என்று தெரியாமல் பெரியாரும் அண்ணாவும் ஊர் முழுவதும் தேடச் சொல்லி பிறகு விடியற்காலை 4 மணியளவில் என்னைக் கண்டுபிடித்து, மீண்டும் கலகக்காரர்கள் தாக்குவார்களோ என்றஞ்சி, கைலி, நீண்ட ஜிப்பா, தலையில் குல்லாய் அணிவித்து பெரியாரிடம் அழைத்துச் சென்றார்கள். என்னைக் கண்டதும், அதுவரை கண்ணுறங்காமல் காத்திருந்த தந்தை பெரியார், என்னைத் தழுவிக் கொண்டு “சுகமாக இருக்கிறாயா?” என்று தழுதழுத்தக் குரலில் கேட்டார். அவரே என் காயங்களுக்கெல்லாம் மருந்திட்டார். என்னுடன் ஈரோட்டுக்கு வா, போகலாம் என்று ஆணையிட்டார். நானும் அவருடன் புறப்படத் தயாரானேன்.
பெரியாரின் ஈரோட்டுக் “குடியரசு” அலுவலகத்தில் துணை ஆசிரியனாகப் பொறுப்பேற்றேன். என் இனிய நண்பர் கருணானந்தம், ஏ.பி. ஜனார்த்தனம், தவமணி ராஜன் ஆகியோர் குடியரசு அலுவலகத்தில் பணியாற்றி வந்த காலம் அது. காலை எட்டு மணிக்கெல்லாம் பெரியார் வீட்டில் அவர் முன்னால் அமர்ந்து - அன்று வருகிற தபால்களை அவர் பார்த்து அதுபற்றிய விளக்கங்களை அறிவித்து - அதனைச் செயல்படுத்துகிற வழி வகைகளை நாங்கள் தொடங்கிடுவோம். குடியரசு இதழில் நான் எழுதிய “அண்ணாமலைக்கு அரோகரா” என்ற கட்டுரையைப் பெரியார் பெரிதும் பாராட்டினார். திருவண்ணாமலை தீபத்தைப் பற்றிய கட்டுரை அது. அதற்குப் பிறகு பெரியாரைக் கவர்ந்த மற்றொரு கட்டுரை “தீட்டாயிடுத்து!” என்ற துணைத் தலையங்கம். ஒவ்வொரு நாளும் இரவு, பெரியார் வீட்டில் உணவு முடிந்ததும், பெரியார் தன் வீட்டு மாடியில் காற்றோட்டமான பகுதியில் எங்களை உட்கார வைத்துக் கொண்டு, சமுதாயச் சீர்திருத்தங்கள், அரசியல் மாற்றங்கள் இவைகளைப் பற்றியெல்லாம் நீண்ட நேரம் விளக்கங்கள் அளிப்பார். நாங்கள் குடியரசு இதழில் சிறப்பாக எழுதிவிட்டால், படி ஏற முடியாத நிலையிலும் மிகுந்த சிரமத்தோடு மாடிக்கு ஏறி வந்து தட்டிக் கொடுத்துப் பாராட்டுவார். எவ்வளவு மகிழ்ச்சி அப்போது ஏற்படும் தெரியுமா?
சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, திருச்சி ரயிலடியில் பெரியாரும், நானும் இந்தி எழுத்துக்களை
அழித்தோம். ரயிலடிக் களம் முடிந்து நானும், ஆயிரக்கணக்கான கழகத் தோழர்களும் கொடி ஏந்தியவாறு திருச்சி நகர வீதிகள் அனைத்திலும் நடந்து சென்றே ஊர்வலம் நடத்தினோம். தெப்பக்குளம் வழியாக ஊர்வலம் வந்த போது, காரில் சென்று கொண்டிருந்த பெரியார் அவர்கள் இறங்கி, எங்களை வாழ்த்தி வழி அனுப்பினார். இரு வேறுபட்ட கட்சிகளாகப் பிரிந்த பிறகு ஏற்பட்ட இந்தத் திடீர்ச் சந்திப்பில் பாசமும் கொள்கைப் பற்றும் பட்டுப் போகவில்லை என்ற உண்மை ஒளி விடலாயிற்று. இதைத்தான் “நீரிடித்து நீர் விலகாது” என்பார்களோ?
அதன் பிறகு தந்தையைச் சந்திக்க 2-3-1967இல் திருச்சிக்குச் சென்றோம். ஆம், கழகம் தேர்தலில் வென்று தமிழகத்தில் ஆளும் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு தந்தை பெரியாரின் வாழ்த்துக்களை நேரில் பெற விரும்பி, அண்ணா அவர்களோடு திருச்சி சென்ற போது, அதாவது
18 ஆண்டுகளுக்குப் பின்னர் அய்யாவின் பக்கத்தில் போய் அமர்ந்த போது பாச வெள்ளம் அங்கே கண்ணீராகி விழிகளுக்குத் திரையிட்டது. குரல் தழுதழுத்தது. நாவும் எழ மறுத்தது. என்ன பேசுவதென்றே எனக்குத் தெரியவில்லை. எங்கள் நிலைதான் தந்தைக்கும். “என்னைக் கூச்சப்பட வைத்து விட்டீர்கள்” என்று பெரியார் குமுறினார். இந்த நிகழ்ச்சியைப் பற்றித்தான் விழுப்புரம் முப்பெரும் விழாவில் நமது பேராசிரியர் பேசும்போது உணர்ச்சி ததும்ப எடுத்துக் கூறினார்.
24-12-1973 அன்றுதான் தந்தை பெரியார் அவர்கள், தமிழகத்தையும், நம்மையும் தவிக்க விட்டு விட்டு மறைந்தார். செய்தி அறிந்ததும் சில நிமிடங்கள் எனக்கு என்ன செய்வதென்றே புரியாத நிலை. இன்றைக்கு வருவதைப் போல அன்றைக்கும் அலைஅலையாக பெரியாரோடு பழகிய நினைவுகள் எல்லாம் என் மனதிலே எழுந்தன. என் கடமை, தந்தை பெரியாருக்கு அரசு மரியாதையுடன் இறுதிப் பயணம் செய்திட விரும்பி தலைமைச் செயலாளரை அழைத்து, அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி கூறினேன். அதிகாரிகள்; பெரியார் அவர்கள் அரசுப் பொறுப்பில் எதிலும் இல்லாத காரணத்தால் அரசு மரியாதை செய்வதற்கு விதிமுறைகள்படி வழியில்லை என்று கூறினர். “காந்தியடிகள் எந்த அரசுப் பொறுப்பில் இருந்தார்? எனவே நாம்
விரும்பியபடி தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை தரப்பட்டே ஆக வேண்டும், அதனால் கழக அரசு கலைக்கப்படக் கூடிய நிலை தோன்றுமேயானால், அதை விட பெரிய பேறு எனக்கு இருக்க முடியாது, வேண்டியதைக் கவனியுங்கள்” என்று கூறினேன். எனவே காந்தியடிகளுக்கு எவ்வாறு அரசு மரியாதை அளிக்கப்பட்டதோ, அதைப் போலவே தந்தை பெரியாரும் ஒப்பற்ற சமுதாயப் புரட்சியாளர், சீர்திருத்தச் சிந்தனையாளர் என்பதால் அரசு மரியாதையோடு அடக்கம் செய்யலாம் என்று கூறினேன். அவ்வாறே ஏற்பாடுகள் நடைபெற்றன.
தந்தை பெரியார் அவர்கள் மறைந்தாலும், அவர் நமக்கு அளித்த போதனைகள் மறையவே இல்லை. அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த போதே, தந்தை பெரியாருக்கு அளிக்கும் முதல் காணிக்கையாக சுயமரியாதை திருமணச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார். அதைப் பற்றி பேரவையில் கே. வினாயகம் அவர்கள் அந்தச் சட்டம் தி.மு. கழக அரசு தந்தை பெரியாருக்குச் செலுத்தும் காணிக்கையா என்று கேட்டபோது, அண்ணா அவர்கள் எழுந்து, இந்தச் சட்டம் மாத்திரமல்ல, இந்த அமைச்சரவையே தந்தை பெரியாருக்கு காணிக்கைதான் என்று இடிமுழக்கமென எழுந்த கையொலிக்கிடையே அறிவித்தார்.
அண்ணா அவர்கள் மறைந்த பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற நான் தந்தை பெரியார் அவர்களின் மனதில் முள்ளாக உறுத்திக் கொண்டிருந்த மற்றொரு கொள்கையான அர்ச்சகர் சட்டத்தைக் கொண்டு வந்து 2-12-1970 அன்று நிறைவேற்றினோம். ஆலயங்களில் நியமிக்கப்படும் அறங்காவலர்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஒருவரையும் நியமிக்க வேண்டும் என்பதை மரபாக மட்டுமே கொண்டிருந்த நிலையை மாற்றி, எந்த ஒரு ஆலயத்து அறங்காவலர் குழுவிலும் நிச்சயம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் இடம் பெற்றாக வேண்டுமெனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்தச் சட்டம் நடைமுறைக்கு வராமல் உச்ச நீதிமன்றம் வரை சென்று விட்டது.
அடுத்து தந்தை பெரியார் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான கொள்கை, பெண்களுக்கு சொத்துரிமை வழங்க வேண்டும் என்பதாகும். 1929ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற
சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு பெற்றோர் சொத்தில் பெண்களுக்கு உரிமை வழங்கும் தனி சட்டத்தினை முன்னோடி மாநிலமாக 1989ஆம் ஆண்டில் மே திங்கள் 6ஆம் நாள் தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றினேன்.
அதைப் போலவே சாதி சமய பிணக்குகளை அகற்றி அனைத்துச் சமுதாய மக்களும் நல்லிணக்கமாக ஒன்று கூடி சமத்துவ உணர்வுடன் வாழ்கின்ற சூழ்நிலையை உருவாக்கும் வகையில் இந்திய சுதந்திரப் பொன்விழாவையொட்டி 1997ஆம் ஆண்டில் தி.மு. கழகம் உருவாக்கிய புதுமையான, புரட்சிகரமான திட்டம்தான் பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சமத்துவபுரக் குடியிருப்பிலும், 100 வீடுகள் கட்டப்பட்டு, அவற்றில் 40 வீடுகள் ஆதி திராவிடர்களுக்கும், 25 வீடுகள் மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், 25 வீடுகள் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், 10 வீடுகள் இதர பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அனைத்துச் சமுதாயத்தினரும் ஒரே இடத்தில் இணக்கமாக வாழ்வதற்கு வழிவகை செய்யப்பட்டது.
தந்தை பெரியார் அவர்களோடு பழகி, அவரின் கொள்கைகளையெல்லாம் நடைமுறைக்குக் கொண்டு வந்த காரணத்தால்தான், தந்தை பெரியார் அவர்கள் “பொதுமக்களுக்காக பொதுத் தொண்டு செய்தவர்கள் என்பது மாத்திரமல்லாமல், பாராட்டுதலுக்குரிய எந்தக் காரியத்தை யார் செய்தாலும் அவர்களைப் பாராட்ட, பெருமைப்படுத்த பொதுமக்கள் முயற்சிப்பது இயற்கையே ஆகும். கலைஞர் கருணாநிதி விஷயத்தில் பாராட்டத் தகுந்த பல தன்மைகள் இருக்கின்றன. கலைஞர் அவர்கள் தனது பள்ளி மாணவப் பருவத்தில் இருந்து பொதுத் தொண்டு செய்து வருகிறார். தியாகிகள் அடையாளமாகிய சிறை செல்லும் தன்மையில் பலமுறை சிறை சென்றிருக்கிறார். இவ்வளவு மாத்திரமல்லாமல் ஒரு கட்சியை ஆரம்பித்து, ஆரம்பித்த முக்கியஸ்தர்களில் ஒருவராய் இருந்து, அந்தக் கட்சிக்கு உண்டான எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து அந்தக் கட்சியை நல்ல வண்ணம் உருவாக்கி அந்தக் கட்சியை நாடாளும் ஸ்தாபனம் ஆக்கிய முக்கியஸ்தர்களில் ஒருவராகவும் இருக்கிறார். கலைஞர் அறிவில் சிறந்தவர், நிர்வாகத்தில் சிறந்தவர், பொதுத் தொண்டுக்காக தியாகம் செய்ததில் சிறந்தவர்” என்றெல்லாம் என்னைப் பாராட்டிய
சொற்கள் கல் மேல் எழுதப்பட்ட மணிமொழிகளாக என் மனதிலே தோன்றும்போது சில அனாமதேயங்கள் என்னைப் பற்றியும், என் தன்மானத்தைப் பற்றியும் அநாகரிகமாக அலறுவது எப்படி எனக்குப் பெரிதாக தோன்றும். என் அருமை உடன்பிறப்புகளே, ‘அதை நினையுங்கள் - இதை மறந்துவிடுங்கள்’.
அன்புள்ள, மு.க. 17-9-2012
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 72–78. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.