அடக்கம்

முரசொலி · தொகுதி 47 · கடிதம் 3657

முரசொலி கடிதங்கள் · 3657

கவலை போக்கிடுமா? கண்ணீர் துடைத்திடுமா?

நாள் 26.9.2012சுமார் 6 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3657. கவலை போக்கிடுமா? கண்ணீர் துடைத்திடுமா?

உடன்பிறப்பே,

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு என்ன பாடுபடுகிறது? இதைப் பற்றி பல முறை நான் எழுதியும், எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டுதான் வருகிறது. இதோ சட்டம் ஒழுங்கு தொடர்ந்து சீர்குலைந்து வருவதற்கு மேலும் சில உதாரணங்கள்

* சேலம் மாவட்டம், பூவனூரைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட முத்துச் செல்வி என்பவர் தலையில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

* கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் தன் மனைவி செல்வியை கத்தரியால் குத்திக் கொலை செய்திருக்கிறார்.

* குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே ஜெகநாதன் என்ற போலீஸ்காரர் அடித்துக் கொலை செய்யப்பட்டு பாழடைந்த கிணற்றில் போடப்பட்டுள்ளார்.

* கோவை அருகே குறிச்சியில் மதன்குமார் என்பவர் தன் அத்தை மகள் ரம்யா என்பவரை சரமாரியாக கத்தியால் குத்தியிருக்கிறார். இரண்டு நாளில் இது போல மூன்று சம்பவங்கள் கோவையில் மட்டும் நடந்துள்ளன. அபிநயா என்ற மாணவியும், சுருதி என்ற மாணவியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

* ஆரணி அருகே சேவூரில் தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர் சரவணன் அடித்துக் கொலை.

* தஞ்சை மாவட்டம், திருநாகேஸ்வரத்தில் பேராசிரியர் சாமிநாதன் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

* சென்னையிலுள்ள புழல் சிறையில் இந்த மாதத்திலே அடுத்தடுத்து இரண்டு கைதிகள் மரணமடைந்துள்ள நிலையில் 22-9-2012 அன்று ஒரு விசாரணைக் கைதி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

* திருவள்ளூரில் நேற்று ஒரு நாளில் மட்டும் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கொள்ளை நடைபெற்றுள்ளது.

* புது வண்ணாரப்பேட்டையில் மணி என்ற மீனவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

* கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இதுவரை பத்து மாதங்களில் மட்டும் 12 மரணங்கள் புழல் சிறையிலே நடைபெற்றுள்ளன. அதில் ஆறு பேர் தூக்கிட்டுக் கொண்டு இறந்திருக்கிறார்கள்.

* மதுரையில் நேற்று காலையில் மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து தரைமட்டமானதோடு, இடிபாடுகளில் சிக்கி ஒருவர் இறந்திருக்கிறார்.

* செங்குன்றத்தில் ஆசிக் செரீப் என்ற பதினாறு வயது பத்தாம் வகுப்பு மாணவன் வேன் மோதி இறந்திருக்கிறான்.

* ஊரப்பாக்கம் கிராம மக்கள் 12 மணி நேர மின்வெட்டைக் கண்டித்து போராட்டம் நடத்தி மின்வாரிய அலுவலகத்திற்கே பூட்டு போட்டிருக்கிறார்கள்.

* பொன்னேரியில் ஸ்டீபன் என்ற மருத்துவ அலுவலர் வீட்டில் கொள்ளை.

இவை அத்தனையும் நேற்று ஒரு நாளில் நம்முடைய தமிழ்நாட்டில் நடந்த சம்பவங்களாகும். நேற்று ஒரு நாளில் மாத்திரமல்ல, அன்றாடம் தமிழகத்திலே இப்படித்தான் சட்டம் ஒழுங்கு படாதபாடு பட்டுக் கொண்டிருக்கின்றது. இதைப் பற்றி அரசுப் பொறுப்பிலே இருப்போர் யாரும் கவலைப்படுவதாக இல்லை.

சென்னை நகரிலே போக்குவரத்துத் துறை என்று ஒன்று இருக்கிறதா என்றே தெரியவில்லை. எல்லா இடங்களிலும்

போக்குவரத்து ஸ்தம்பித்து ஓர் இடத்தைக் கடக்க மணிக்கணக்கிலே மக்கள் காத்திருக்கிறார்கள். அதைப்பற்றி ஏடுகளே செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க தூதுவரகத்திற்கு முன்னால் இஸ்லாமியப் பெருமக்கள் மூன்று நாட்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அவர்களை அழைத்து அரசின் சார்பில் யாராவது பேசியிருந்தால் ஒரே நாளில் பிரச்சினை முடிந்திருக்கும். ஆனால் அதைச் செய்யாததால் அவர்கள் போராட்டம் மூன்று நாட்கள் நடைபெற்றது.

கூடங்குளம் அணு உலை பிரச்சினை இன்னமும் முடிந்தபாடில்லை. தொடக்கத்தில் அவசர அவசரமாக எதிர்ப்பாளர்களை சந்தித்துப் பேசி, அவர்களுக்காக அமைச்சரவையைக் கூட்டி கூடங்குளத்தில் பணிகளைத் தொடரக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றிப் பிரதமருக்கு அனுப்பிய முதலமைச்சர் தற்போது அவர்களையோ, அவர்கள் பிரச்சினையையோ காதிலே போட்டுக் கொள்ளவே தயங்குகிறார். வேறு எந்த ஆட்சியிலும் நடைபெறாத அளவிற்கு, மீனவப் பெருங்குடி மக்கள் கடலிலே நூற்றுக்கணக்கிலே இறங்கிப் போராடுகிறார்கள். போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகளை அரசு அழைத்து வந்து அவர்களுக்கு விளக்கமளிக்க ஏன் தயங்குகிறது? அவர்கள் மிகச் சாதாரணமானவர்கள் தானே என்று அரசு கருதுகிறதா? போலீசாரின் துணை கொண்டு தான் அடக்க வேண்டுமென்று கருதுகிறதா? காவல் துறையினரைக் கொண்டுபோய் நூற்றுக்கணக்கிலே அங்கே குவித்து விட்டால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று முதலமைச்சர் கருதுகிறாரா?

காவேரி நதி நீர் ஆணையத்தின் கூட்டத்திலே கலந்து கொள்ளப்போகிறேன் என்று டெல்லி சென்றார் முதலமைச்சர் ஜெயலலிதா! அங்கே என்னவாயிற்று? இதுவரை வந்து கொண்டிருந்த நீரையும் கர்நாடக அரசு நிறுத்தி விட்டது. மேட்டூரில் தண்ணீரின் அளவு ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே வருகிறது. வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர்தான் இப்போது வருகிறதாம். அ.தி.மு.க. அரசு மேட்டூர் அணையைத் திறந்து விட்டதை நம்பி, தொடர்ந்து தண்ணீர் வரும் என்ற நம்பிக்கையோடு சம்பா சாகுபடியைத் தொடங்கி விட்ட விவசாயிகள் தொடர்ந்து தண்ணீர் வருமா என்று அஞ்சித் தவித்துக்

கொண்டிருக்கிறார்கள். இதுபற்றிய விளக்கத்தை அரசின் சார்பில் விவசாயிகளுக்குத் தெரிவிக்க வேண்டாமா? கர்நாடக முதலமைச்சர் காவேரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் வெளிநடப்பு செய்தார். ஊர் திரும்பினார். சும்மா இருந்தாரா என்றால் கிடையாது. உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, அவர்களின் கருத்துக்களையெல்லாம் கேட்டறிந்தார். கூட்டத்தில் ஏன் வெளிநடப்பு செய்ய நேரிட்டது என்று பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். ஆனால் இங்கே என்ன நிலை? டெல்லிக்கு சிறப்பு விமானத்தில் சென்று வந்த முதலமைச்சர் இதுவரை அதைப் பற்றியே மக்களுக்கு எதுவும் கூறவில்லை. ஆய்வுதான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தி.மு. கழகம் ஆளுங்கட்சியாக இருந்த போது காவிரிப் பிரச்சினைக்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டினால், அ.தி.மு.க. அந்தக் கூட்டங்களைப் புறக்கணித்ததைப் போல, தற்போது அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டினால் மற்றக் கட்சிகள் எல்லாம் வருவார்களோ மாட்டார்களோ என்று முதலமைச்சர் ஜெயலலிதா கருதுகிறார்போலும்!

அண்ணா நகரிலே உள்ள அண்ணா வளைவினை அகற்றத் தேவையில்லை என்று முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டதாக ஏடுகள் தெரிவித்தன. ஆனால் அந்த வளைவுகள் இன்னமும் அதே இடத்தில் பாதி அகற்றப்பட்ட நிலையில் எந்த நேரத்திலும் கீழே விழலாம் என்று பயமுறுத்திக் கொண்டுள்ளது. இன்று வந்துள்ள செய்திப்படி ராட்சத கிரேன் வாடகை மட்டும் 96 லட்சம் ரூபாய் ஆகியிருக்கிறதாம். பணி எப்போது தொடங்கும் என்று பொறியாளரிடம் செய்தியாளர் கேட்டபோது, மேலிடத்து உத்தரவுக்காக காத்திருக்கிறோம், விரைவில் பணிகள் தொடங்கும் என்று கூறினாராம்.

ரேஷன் கடைகளில் 20 ஆயிரம் பணியாளர்கள் பற்றாக்குறையாம்; ஒருவரே மூன்று கடைகளில் பணியாற்றும் அவலம் என்று “தினமலர்” நாளேடு இன்று அரைப் பக்கத்திற்கு செய்தி வெளியிட்டுள்ளது. அதே நாளேட்டில் சமையல் எரிவாயு நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்; சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், பல இடங்களில் 60 நாட்களாகியும் சிலிண்டர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர் என்றும் செய்தி வந்துள்ளது.

“அங்கன்வாடி நியமனத்தில் ஆளுங் கட்சிக்கு சாதகம்” என்ற தலைப்பில் இன்று வந்துள்ள செய்தியில் ஒரு பணி இடத்துக்கு நான்கு பேரிடம் பணத்தை வசூலித்து, கட்சி நிர்வாகிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது என்றும், பெத்தநாயக்கன் பாளையம் யூனியன் சேர்மன், மாற்றுத் திறனாளி பெண்ணிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இரண்டு லட்சம் ரூபாய் வசூலித்ததாகவும், வேலையும் வாங்கிக் கொடுக்காமல் பணத்தையும் திரும்ப வழங்காமல் இழுத்தடிப்பு செய்தார் என்றும் எழுதப்பட்டுள்ளது.

மின்வெட்டு பற்றியோ கேட்கவே வேண்டியதில்லை. எந்தப் பத்திரிகையைப் பிரித்தாலும் மின் தடை பற்றித்தான் கொட்டை எழுத்துக்களிலே செய்தி. எதிர்க்கட்சியிலே இருந்த போது, ஜெயலலிதா மின்தடை பற்றி எப்படியெல்லாம் அறிக்கை விடுவார்? இப்போது அதைப்பற்றி வாயையே திறக்கக் காணோம்! ஒவ்வொரு மாவட்டத்திலும் பத்து மணி நேரமா, பன்னிரண்டு மணி நேரமா, பதினான்கு மணி நேரமா என்று போட்டிப் பட்டிமன்றம் நடக்கின்றது. சிறு தொழில் புரிவோர் எல்லாம் செய்வதறியாது தங்கள் தலையிலே கையை வைத்துக் கொண்டு அமர்ந்துவிட்டார்கள். இன்றைய “தினமலர்” நாளேட்டில், “ஆகாயத் தாமரை ஆக்கிரமிப்பால், காவிரி கதவணை மின் உற்பத்தி நிலையங்களில், 70 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மின் கழகத்துக்கு தினமும் 85 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படும் நிலையில், ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காமல், அலட்சியம் காட்டி வருகின்றனர்” என்று செய்தி வந்துள்ளது. இன்றைய “தினமணி” வெளியிட்டுள்ள செய்தியில், “16 மணி நேர மின்தடை : மக்கள் சாலை மறியல்; போலீஸ் தடியடி” என்ற தலைப்போடு 16 மணி நேர மின் தடையைக் கண்டித்து திருநின்றவூரில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் செய்த பொதுமக்கள் என்ற அடிக்குறிப்புடன் பொதுமக்கள் மறியல் செய்யும் புகைப்படம் வெளிவந்துள்ளது.

அதே “தினமணி” பத்திரிகையில் “4 நாள்களாக வரிசையில் நிற்கும் கன்டெய்னர் லாரிகள் - போக்குவரத்து ஸ்தம்பிப்பு” என்ற தலைப்பில் புகைப்படத்தோடு செய்தி வந்துள்ளது. எண்ணூர் விரைவுச்சாலை, மாதவரம் உள்வட்டச் சாலை, பொன்னேரி நெடுஞ் சாலை உள்ளிட்டவைகளில் ஆயிரக்கணக்கான லாரிகள் தொடர்ந்து வரிசை கட்டி நிற்கின்றன என்றும், இதனால் பஸ்

போக்குவரத்து உட்பட அனைத்து வாகனப் போக்குவரத்தும் அடியோடு ஸ்தம்பித்துள்ளது என்றும் எழுதியுள்ளது.

மணல் கொள்ளையால் கிணறுகள் வற்றின என்று இன்று ஒரு செய்தி. தண்ணீர் பற்றாக்குறை, மின் வெட்டு பாதிப்பால் டெல்டா பகுதிகளில் விளைச்சல் குறைந்தது என்று மற்றொரு செய்தி. ராமநாதபுரம் அருகே குடிநீர் பஞ்சம் வேறொரு செய்தி. மக்களின் அன்றாட வாழ்க்கையிலே சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்சினைகளையெல்லாம் விட்டுவிட்டு, முதலமைச்சர் அன்றாடம் எல்லோரையும் கேலி செய்வதைப் போல பத்து நகராட்சிகளுக்கு புதிய அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கு அறிவிப்பு - தொழில் பயிற்சி நிலையங்களில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் உதவித்தொகை உயர்வு - விலையில்லா மடிக் கணினி வழங்கப் போகிறோம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆட்சிக்கு வந்தவுடன் அறிவித்த மடிக் கணினிகளே இன்னும் வழங்கப்படவில்லை. கூடங்குளம் பகுதியிலே போராட்டக்காரர்களை ஏமாற்றுவதற்காக 500 கோடி ரூபாய்க்கு நலத் திட்டங்களை வழங்கப்போவதாக அறிவித்து ஆறு மாதங்கள் ஆயிற்று. அவற்றில் எதையுமே ஆரம்பிக்கவில்லை என்று “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளிதழ் முதல் பக்கத்திலே கொட்டை எழுத்துக்களில் எழுதியுள்ளது. அதற்குப் பதில் அளிக்க அரசிலே யாரும் இல்லை. இதிலே நடைபெறாத செயல்களுக்கு அறிவிப்பு ஒரு கேடா? அரசாங்கத்தில் வேறு என்ன நடக்கிறது? இவ்வாறு அறிவிப்புகளை அன்றாடம் செய்வதும் - பத்திரிகைகள் மீதும், எதிர்க்கட்சிக்காரர்கள் மீதும் பழி வாங்குவதற்காக பொய் வழக்குகளைத் தொடுப்பதும் தான் நடைபெறுகின்றன. - உதாரணமாக இன்றையதினம் கூட முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது செம்மண் எடுத்ததில் அரசுக்கு 28.37 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திவிட்டதாக ஐந்து பிரிவுகளில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். என்னென்ன பிரிவுகள் தெரியுமா? 379 (திருடியது); 506-1 (மிரட்டல்); 406 (அதிகாரம் செய்தல்); 120-பி (சதி செய்தல்); போன்ற பிரிவுகளையெல்லாம் போட்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் கிரானைட் ஒதுக்கீட்டில் என்னென்ன முறைகேடுகள் நடந்தன, அதிலே யார் யாருக்கு எவ்வளவு பொறுப்பு என்பதைப் பற்றியெல்லாம் முழுவதுமாக விசாரிக்க வேண்டும். அதைப்

போலவே வாகன ஓட்டிகள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் திருமாவளவனின் உதவியாளரை கைது செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை மாறுதல் செய்து, அவர்கள் அன்றாடம் கொடுக்கும் பூங்கொத்துகளை வாங்கிக் கொண்டு, அதைப் புகைப்படம் எடுத்து ஏடுகளிலே வெளியிடுவதும் தானே நடக்கிறது? மக்கள் பிரச்சினைகள் கவனிக்கப்படுகின்றனவா?

குறிப்பாக மின் தடையைப் போக்க என்ன வழி? டீசல் விலை உயர்வால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு கேரள மாநிலத்தைப் பின்பற்றியாவது வாட் வரியைக் குறைக்க முடியுமா? சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஆறுக்கு மட்டுமே மத்திய அரசு மானியம் கொடுக்கின்ற நிலையில் காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலங்களில் மேலும் மூன்று சிலிண்டர்களுக்கு மாநில அரசே மானியம் கொடுக்க முன்வரும் என்பதைப் போல, தமிழகத்திலும் அப்படிப்பட்ட சலுகை அளிக்கலாமா? சம்பா சாகுபடிக்கு என்ன செய்வது? கூடங்குளம் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர என்ன செய்யலாம்? என்பது போன்ற முக்கிய பிரச்சினைகளில் முதலமைச்சர் ஜெயலலிதா சம்பந்தப்பட்டவர்களை அழைத்துப் பேசி அதிலே முடிவு கண்டு அறிவிப்பதுதான் மக்கள் குறை தீர்ப்பதற்கான வழியே தவிர, அறிவிப்புச் செய்வதும், வழக்குப் போடுவதும் மட்டுமே மக்கள் குறைகளைத் தீர்க்க உதவாது!

வெற்று அறிவிப்புகளும், வீண் வழக்குகளும் காலத்தைத் தள்ளப் பயன்படுமே அன்றி; நம்பி வாக்களித்த மக்களின் கவலை போக்கிடுமா? கண்ணீர் துடைத்திடுமா?

அன்புள்ள, மு.க. 26-09-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 90–96. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 47-இல் மேலும் கடிதங்கள்