அடக்கம்

முரசொலி · தொகுதி 47 · கடிதம் 3660

முரசொலி கடிதங்கள் · 3660

இன்றே அணிவேன்; என்றும் அணிவேன்!

நாள் 5.10.2012சுமார் 5 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3660. இன்றே அணிவேன்; என்றும் அணிவேன்!

உடன்பிறப்பே,

ஒரு ஜனநாயக நாட்டில், எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளையும், குறைகளையும் சுட்டிக்காட்டி அமைதியான முறையில் சட்ட ரீதியாகப் போராட்டம் நடத்துவது என்பது அனுமதிக்கப்பட்ட முறையாகும். தி.மு.கழகம் ஆளுங்கட்சியாக இருந்தபோது, அதை விமர்சித்து ஜெயலலிதாவின் அறிக்கைகள் வெளிவராத நாட்களே கிடையாது. எடுத்துப் பார்த்தால், “வடசென்னை மாவட்டத்தில் தண்டையார் பேட்டையில் துணை மின் நிலையத்தை செயல்பாட்டிற்குக் கொண்டு வராத, மைனாரிட்டி தி.மு.க.அரசைக் கண்டித்து வடசென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” - இது 29-4-2010 அன்று ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை! அந்தப் போராட்டத்திற்கு ஆட்கள் வருகிறார்களோ இல்லையோ, அது நடக்கிறதோ இல்லையோ, ஆனால் ஜெயலலிதாவின் ஆர்ப்பாட்ட “போர்”ப்பாட்டு அறிக்கைகள் வராத நாட்களே இல்லை.

அப்போது மிகச்சாதாரணப் பிரச்சினைகளுக்கெல்லாம் ஆர்ப்பாட்டம், மறியல் எல்லாம் நடைபெற்றது. இப்போதோ மாநிலம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 16 மணி நேரத்திற்கு மேல் மின்சாரமே இல்லை. மாநிலமே இருண்டு கிடக்கிறது. எந்த நாளிதழைப் பிரித்தாலும் திருப்பூரில் மின்வெட்டைக் கண்டித்து போராட்டம், பந்த் - 1000 கோடி ரூபாய் தொழில்கள் பாதிப்பு - கோவையில் போராட்டம் - 800 கோடி ரூபாய் தொழில்கள் பாதிப்பு என்ற செய்திகள்.

சட்டம், ஒழுங்கு என்று எடுத்துக் கொண்டால் இந்த இரண்டு நாட்களில் மட்டும், ராமேசுவரம் அருகே ஒரே குடும்பத்தில் ஆறு பேர் எரித்துக் கொலை - திருப்பெரும்புதூர் அருகே சினிமா

தயாரிப்பாளர் பி.பி.ஜி குமரன் கொலை, இந்த வழக்கில் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் குற்றவாளி என்று கைதாகி இருக்கிறார் - காசிமேட்டில் பிரபல ரவுடி பிரான்சிஸ் வெட்டிக் கொலை - சென்னைப் பல்கலைக் கழக காவலாளி பாபு அடித்துக் கொலை - மதுராந்தகத்தில் சாராய வியாபாரி கங்காதரன் வெட்டிக் கொலை - வெள்ளக் கோவில் அருகே கணவன், மனைவி, மாமியார் கொலை - தேவகோட்டை அருகில் மண்வெட்டியால் அடித்துக் கணவன் கொலை - தஞ்சையில் முன்னாள் காவலர் தர்மன் படுகொலை - நேற்றும் இன்றும் நடைபெற்ற கொலைகளின் பட்டியல் இது.

எட்டாவது முறையாக அமைச்சர்கள் மாற்றம் - இந்த ஆட்சியில் இந்நாள் அமைச்சர்களின் எண்ணிக்கையை விட முன்னாள் அமைச்சர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும் போலும்!. பேரவைத் தலைவரே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என்ற நிலைமை. தேர்தல் நேரத்தில் தோழமைக் கட்சிகளாக இருந்தவர்களே இன்று எதிர்க்கட்சியாகி விட்டார்கள். யாரையும் மதிக்காத போக்கு. அதிகாரிகளின் நிலைமையோ தர்ம சங்கடம். “ஆமாம்” போடுபவர்களே, பதவியில் நீடிக்க முடியுமென்ற நிலை. காவல் துறையோ ஏவல் துறையாகச் செயல்படுகிறது. சென்னை மாநகர ஆணையரே ஒன்றரை ஆண்டிற்கு மேல் நீடிக்க முடியவில்லை.

பத்திரிகைச் சுதந்திரம் என்றால் என்ன என்று கேட்கும் நிலை. எத்தனை பத்திரிகைகள் மீது அவதூறு வழக்குகள் என்ற எண்ணிக்கையே தெரியவில்லை. அதன் காரணமாக எந்தப் பத்திரிகையும் இந்த ஆட்சியைக் குறை கூறி, மக்கள் பிரச்சினைகளை விளக்கித் தைரியமாக எதையும் எழுத முடியாத நிலை. எதிர்த்து எழுதினால் அரசின் விளம்பரம் கிடைக்காது. பிரதான எதிர்க்கட்சியில் தீவிரமாகச் செயல்படுவோர் மீதெல்லாம் பொய் வழக்குகளைப் போட்டு சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாகச் சிறைக்கு அனுப்பிடும் கொடுமை. அவர்களிலும் தீவிரமாகச் செயல்படுபவர்கள் மீது குண்டர் சட்டம். கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்களையெல்லாம், திறந்து வைத்துப் பயன்படுத்தாமல், கடந்த ஆட்சியின் திட்டங்களை குப்பைக் குழிக்கு அனுப்புவதைப் போலவே, காழ்ப்புணர்ச்சியோடு செயல்படும் தன்மை. என்னுடைய பெயர் இடம் பெற்றிருக்கிறது என்பதற்காகவே அகற்றப்படும் கல்வெட்டுகள். ஒவ்வொரு

நாளும் இந்த ஆட்சியைப் பற்றி நீதிமன்றங்களிலே நீதிபதிகள் தெரிவிக்கும் கண்டனக் கணைகள். காவிரிப் பிரச்சினையில் கர்நாடகாவில் இந்த ஒரு மாத காலத்தில் மூன்று அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டங்களை நடத்திச் செயல்படுகின்ற அரசு இருக்கையில், தமிழகத்திலோ எந்தக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தையும் கூட்டவே இல்லை. அண்டை மாநிலங்களையும், எதிர்க்கட்சியினரைப் போல நடத்துகின்ற காரணத்தால் இரண்டு மாநிலங்களுக்கும் இடையே சுமுக உறவு கெட்டு 6ஆம் தேதியன்று கர்நாடகாவில் “பந்த்” அறிவிப்பு. அதன் காரணமாக அந்த மாநிலத்தில் பிழைப்புக்காகச் சென்றிருக்கும் தமிழர்கள் தங்கள் நிலை என்னவாகுமோ என்று அச்சத்தில் உறைந்திருக்கின்ற நிலைமை. தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கோ, கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கோ பேருந்துகளே வர முடியாத சூழ்நிலை. ஒன்றரை ஆண்டுக் காலத்தில் மின் வாரியத்திற்கு நான்கு தலைவர்கள். கூடங்குளத்தில் உரிய நேரத்தில் உரிய முடிவுகளை எடுக்காத காரணத்தால் ஒன்றரை ஆண்டுகளாக நீடிக்கும் போராட்டம். அங்கே இரண்டு மீனவர்களை சுட்டுக் கொல்கின்ற கொடுமை. பரமக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆறு உயிர்கள் கொல்லப்பட்ட சோகம்! பஞ்சம், பட்டினி காரணமாக அங்கே கொள்ளை, இங்கே வழிப்பறி, பெண்ணிடம் சங்கிலிப் பறிப்பு என்ற செய்திகள்! எதற்கெடுத்தாலும் போலீஸ் தடியடி. பேச்சுவார்த்தைகளின் மூலமாகத் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளிலே கூட, போலீஸ் படையை அனுப்பி அடக்குமுறை. விலைவாசியைப் பற்றியோ கேட்கவே வேண்டியதில்லை. சுமார் இருபதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் டாஸ்மாக் மூலமாக வருமானம் வந்த நிலையிலே கூட, பால் விலை உயர்வு, பஸ் கட்டணம் உயர்வு, இல்லாத மின்சாரத்திற்கு பொல்லாத மின் கட்டணம், வரலாறு காணாத அளவிற்கு உயர்வு என்று ஏழையெளிய நடுத்தர மக்கள் படாத பாடு படுகிறார்கள். அரசு அலுவலர்களின் நிலையோ சொல்ல முடியாது. மத்திய அரசு அகவிலைப்படி உயர்வினை அறிவித்துப் பல நாட்களாகியும், தமிழகத்திலே இன்னும் அரசு மூச்சு விடவே இல்லை. அங்கன்வாடிப் பணியாளர்கள், சத்துணவுப் பணியாளர்கள் நியமனத்தில் ஆளுங்கட்சியினரின் பரிந்துரைகள் காரணமாக முட்டுக்கட்டை.

பரிந்துரைகளுக்குச் செவி சாய்க்காமல் நியாயமாகச் செயல்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மூன்று மாதங்களிலேயே மாற்றப்பட்டு விட்ட கொடுமை. சத்துணவுப் பணியாளர்கள் 29 ஆயிரம் பேரைத் தேர்வு செய்ததை உயர்நீதிமன்றமே ரத்து செய்துள்ள வெட்கக் கேடு. அதற்கடுத்த நாளே 3 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. குடிதண்ணீர், குடம் எவ்வளவு என்று ஏடுகளில் செய்தி. குடிநீர் வாரியம் ஒரு லாரி குடிநீர் விலை எவ்வளவு என்று தானாக அறிவிக்கின்றது.

உடன்பிறப்பே, இப்படி எழுதிப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இந்தக் கொடுமைகளையெல்லாம் சுட்டிக்காட்டி ஆளுங்கட்சியின் அராஜகப் போக்கைக் கண்டித்து, அமைதியாக அறவழியில் கருப்பு உடை அணிந்து மனிதச் சங்கிலி அணிவகுப்பு நடத்தப்போகிறோம் என்று கழகச் செயற்குழுவிலே முடிவெடுத்து, முறைப்படி அதற்கு அனுமதி கோரி, காவல் துறையினரிடம் எழுதிக் கொடுத்தால் அதற்குக் கூட இந்த ஆட்சியிலே அனுமதி கிடைக்கவில்லை. கழகத்தின் சார்பில் கேட்கப்படும் வழி சரியில்லை என்று சொன்னதால், மூன்று மாற்று வழிகளைக் குறித்துக் கொடுத்து, இதிலே ஒன்றைக் கொடுங்கள் என்று கேட்டால்; அதற்குக்கூட இந்த ஆட்சியினர் அனுமதி தரவில்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம்?

ஒரே நாளில் ஒரு சில மணி நேரங்களில் மட்டுமே தமிழக மக்கள் பிரச்சினைகளுக்காக நடத்தவிருந்த மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டத்தை தற்போது மூன்று நாட்களில் நடத்தக்கூடிய அளவிற்கு இந்த ஆட்சியினர் நம்மைக் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு சில மணிகள் சாலையோரத்தில் கருப்பு உடை அணிந்து நிற்பதோடு முடிந்து விடுகின்ற நிலையை - கருப்பு உடை அணிந்து வீடு வீடாகச் சென்று இந்த ஆட்சியினரின் அவலங்களை எடுத்துச் சொல்லக் கூடிய அளவிற்கு நம்மைக் கொண்டு போய் விட்டிருப்பது ஆளுங்கட்சியினரே தவிர நாமல்ல.

கழகம் நடத்தவிருந்த மனிதச் சங்கிலிக்கான அனுமதியை ரத்து செய்து காவல் துறை பிறப்பித்த ஓர் ஆணையை தற்போது என்னிடம் காட்டினார்கள். அந்த ஆணையின் தொடக்கத்தில், “அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் நிலவும் கடும் மின்வெட்டைக் கண்டித்தும், தொடர்ந்து தி.மு.க.வினரைப் பழி வாங்குவதைக் கண்டித்தும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில்” போராட்டம்

என்று எழுதியிருக்கிறார்கள். எனவே காவல் துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையிலேயே அ.தி.மு.க. ஆட்சியிலே கடும் மின்வெட்டு இருப்பதையும், தி.மு.க.வினர் பழிவாங்கப்படுவதையும் ஒப்புக் கொண்டிருப்பது நமக்கு நன்றாகவே தெரிகிறது. எனவே இன்றையதினம் அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் தருகிற அளவிற்குத் தமிழகம் இருண்ட கண்டமாகவே காட்சியளிக்கிறது.

இந்த அவலங்களை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையிலேதான் 5ஆம் தேதியன்று சென்னையிலும், 6ஆம் தேதியும், 7ஆம் தேதியும் மற்ற மாவட்டங்களில் மாநகர், ஒன்றியம், சிற்றூர், பேரூர் போன்ற அனைத்துப் பகுதிகளிலும், கருப்பு உடை அணிந்து “முரசொலி”யிலே வெளிவந்துள்ள வாசகங்களை துண்டுப் பிரசுரங்களாக அச்சியற்றி, வீட்டுக்கு வீடு எடுத்துச் சென்று சாதாரண, சாமான்ய, ஏழை, எளிய, நடுத்தர மக்களிடம் வழங்க வேண்டுமென்று கழகத்தினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இந்தப் பணியினை மிகவும் அமைதியாக, அற வழியில், எந்தவிதமான பிரச்சினைக்கும் இடம் தந்து விடாமல் நடத்திட வேண்டுமென்று பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

சாலையோரத்தில் அமைதியாக மனிதச் சங்கிலியாக ஒரே இடத்தில் கருப்பு உடை அணிந்து நின்று அணிவகுப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்றுதான் நாம் அனுமதி கோரினோம். இன்றையதினம்கூட மத்திய அரசின் நுழைவுத் தேர்வினை எதிர்த்து மருத்துவர்கள் மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்தி, அந்தப் புகைப்படங்கள் எல்லாம் ஏடுகளிலே வெளி வந்துள்ளன. எனவே மனிதச் சங்கிலிப் போராட்டம் என்பது அனுமதிக்கப்படாத ஒரு போராட்ட முறை அல்ல. அது போலவே கருப்பு உடை அணிந்து கொள்வது என்பதும் புதிதல்ல. அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள், தி.மு.கழகம் ஆளுங்கட்சியாக இருந்த போது, பேரவைக்கே கருப்பு உடை அணிந்து வந்திருக்கிறார்கள். ஒருவேளை முதலமைச்சர் ஜெயலலிதா; இந்த அறவழி அறப்போராட்ட அணிவகுப்பு ஆர்ப்பாட்டத்திற்கு சென்னையில் கருணாநிதியே இந்த வயதிலே தலைமை தாங்கப் போகிறானே என்பதற்காக என் உடல்நிலை பற்றிப் பரிதாபப்பட்டு, அனுமதி கொடுக்கவில்லையோ என்னவோ? அப்படியென்றால் வெளியூர்களிலாவது அனுமதி கொடுத்திருப்பார்களே? ஏன் கொடுக்கவில்லை?

என்னைப் பொறுத்தவரையில் 5ஆம் தேதி ஒரு நாள் தான் இந்த ஆட்சியினரின் அவலங்களை எதிர்த்து கருப்பு உடை அணிவதாக இருந்தேன். ஒரு பழைய நிகழ்வை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். திராவிட விடுதலைப் படை என்பதாக ஒரு தொண்டர் படை திராவிடர் கழகத்துக்குத் தேவை என்று திருச்சி மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரியார் ஈ.ரோடு திரும்பியதும், அதைப்பற்றி மேலும் சிந்தித்து, 1945 செப்டம்பர் 29ஆம் நாள் “குடி அரசு” இதழில், கருப்புச் சட்டைப் படை அமைப்பு என்பதாக ஓர் அறிவிப்பு வெளியிட்டார். ஈ.வி.கே. சம்பத், கவிஞர் கருணானந்தம் ஆகிய இருவரும் அதன் தற்காலிக அமைப்பாளர்கள் என்று கூறும் அறிவிப்பு 22-12-1945 “குடி அரசு” இதழ் வரையில் தொடர்ந்து வெளியானது. தந்தை பெரியார் விரும்பி அமைத்த அந்தக் கருப்புச் சட்டைப் படையின் முதல் தொண்டராக அப்போதே ஈரோட்டில் பதிவு செய்து கொண்டது யார் தெரியுமா? இதே மு. கருணாநிதிதான். அந்த மு. கருணாநிதிதான், நாளைய மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்குவதாக அறிவித்தேன். ஆம் நாளையதினம் கருப்புச் சட்டை அணிந்து மனிதச் சங்கிலியில் கலந்து கொள்வதாக இருந்தேன். அதற்கு இந்த அரசு அனுமதி கொடுக்கவில்லை. பரவாயில்லை, இன்று முதலே இந்த ஆட்சியின் அவலங்களை எதிர்த்து கருப்புச் சட்டை அணிவேன், இன்றே அணிவேன்; இனி என்றும் அணிவேன்!

அன்புள்ள, மு.க. 5-10-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 111–116. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 47-இல் மேலும் கடிதங்கள்