முரசொலி கடிதங்கள் · 3661
இனியாவது அதைத் தவிர்ப்பாரா?
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3661. இனியாவது அதைத் தவிர்ப்பாரா?
உடன்பிறப்பே,
“சீப்பை ஒளித்துவிட்டால் திருமணம் நின்று விடுமா?” என்று கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். 27-9-2012 அன்று தலைமைக் கழகத்தின் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையிலேதான் இந்த ஆட்சியின் அவலங்களைப் பற்றிப் பேசி முடிவெடுப்பதற்காக 1-10-2012 அன்று கழகத்தின் தலைமைச் செயற்குழு கூடி விவாதிப்பதென்று முடிவு செய்து அறிவித்திருந்தது. இடையிலே மூன்றே நாட்கள். ஆனாலும் 1-10-2012 அன்று செயற்குழுவில் 257 உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்கள் 31 பேரும் கலந்து கொண்டு காலை 10 மணி முதல் 1.30 மணி வரை சிறப்பாக நடைபெற்று; செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் எல்லாம் அந்தக் கூட்டத்தில் உரையாற்றி, விவாதித்து இறுதியாக இரங்கல் தீர்மானம் இல்லாமல், ஏழு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் பிறகு செய்தியாளர்கள் என்னிடம், “அந்த ஏழு தீர்மானங்களில் முக்கிய தீர்மானம் எது” என்று கேட்டபோது, “போராட்டத் தீர்மானம்தான்” என்று நான் பதிலளித்தேன்.
அன்றையதினம் நிறைவேற்றப்பட்ட போராட்டத் தீர்மானத்தில் 5-10-2012 அன்று ஒரு நாள் அதுவும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையில் சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்து கடற்கரைச் சாலைவழியாக, கடற்கரை சாலையிலே உள்ள கலங்கரை விளக்கம் வரையிலும், மாவட்ட தலைநகரங்களிலும் அனைத்து வகையிலும் செயலிழந்து விட்ட அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் போக்கினைக் கண்டித்து, கறுப்பு உடை அணிந்த மனிதச் சங்கிலி அமைத்து, அமைதியாக அற வழியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்றுதான்
குறிப்பிட்டிருந்தோம். தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 1-10-
2012 - கறுப்பு உடை அணிந்த மனிதச் சங்கிலி நடத்தத் தீர்மானிக்கப்பட்டது
5-10-2012. மாவட்டக் கழகச் செயலாளர்களில் ஒருவரான தம்பி முல்லைவேந்தன்கூட இடையில் மூன்று நாட்கள்தானே இருக்கிறது, தேதி மாற்றம் செய்ய முடியுமா என்றார்.
“அறிவித்தது, அறிவித்ததுதான், 5ஆம் தேதியில் மாற்றம் இல்லை” என்று கூறினேன்.
சென்னையில் 1ஆம் தேதி மாலையிலேயே மாவட்டக் கழகச் செயலாளர், தம்பி ஜெ. அன்பழகன் காவல் துறையிடம் முறைப்படி அனுமதிகோரி கடிதமும் கொடுத்துவிட்டார். அந்தக் கடிதத்தில் மூன்று மாற்று வழிகளைத் தெரிவித்து, தீர்மானத்தில் குறிப்பிட்ட அந்த வழியில் அனுமதி கொடுக்க அரசு தயங்கினால், மூன்றில் ஒரு பாதையில் அனுமதி தரவேண்டுமென்று கோரப்பட்டது. ஆனால் மிகவும் விரைந்து (?) செயல்படும் இந்த அரசிடமிருந்து எந்த அனுமதியோ, பதிலோ வரவில்லை. அதேநேரத்தில் வேறு சில மாவட்டங்களில் மனிதச் சங்கிலிக்கு அனுமதி மறுக்கப்பட்டு காவல் துறையினர் பதில் கொடுத்திருந்தனர். அந்த நிலையிலேதான், “சீப்பை ஒளித்து வைத்துவிட்ட காரணத்தால் திருமணத்தை நிறுத்திவிடக்கூடாது” என்ற வகையில் - கறுப்பு உடை அணிந்து மனிதச் சங்கிலி அணி வகுப்புக்குப் பதிலாக - ஆட்சியினர் பற்றிய விமர்சனங்களை துண்டுப் பிரசுரங்களாக கையால் எழுதியோ, அச்சியற்றியோ கழகத்தினர் ஒவ்வொரு ஊரிலும் உள்ள பொதுமக்களைத் தேடிச்சென்று வழங்கவேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டு, அவ்வாறே அறிவிக்கப்பட்டது. 5ஆம் தேதி ஒரு நாள் ஒரு சில மணி நேரம் மனிதச் சங்கிலியோடு முடிந்திருக்க வேண்டிய போராட்டம், மூன்று நாட்களாக நீடிக்கப்பட்டு, சென்னை மாநகரிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் மட்டுமே நடைபெறவிருந்த நிகழ்ச்சிக்குப் பதிலாக ஒவ்வொரு கிராமத்திலும் இந்த ஆட்சியினரைப் பற்றிய வண்டவாளங்கள் எல்லாம் அச்சியற்றப்பட்ட துண்டறிக்கைகளாக இலட்சக் கணக்கான மக்களைத் தேடிச்சென்று, அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த அளவிற்கு இந்தப் போராட்டத்தை பெரிதாகவும், விரிவாகவும் ஆக்கிய பெருமை நமது முதலமைச்சர் ஜெயலலிதா ஒருவருக்கே உரியதாகும். அதற்காகத்தான் ஆயிரம் விளக்குத் தொகுதியில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நிகழ்ச்சியைத்
தொடங்கிவைத்தபோது முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டேன். துண்டுப் பிரசுரங்களை அச்சியற்றி விநியோகிக்க வேண்டுமென்ற முடிவினை 3ஆம் தேதி எடுத்து, அது நாளேடுகளில் 4ஆம் தேதியன்றுதான் வெளிவந்தது. அதற்குப் பிறகு 5ஆம் தேதிக்கு 24 மணி நேரங்கள்தான். அதற்குள் கழக உடன்பிறப்புகள் என்ன மாயம் செய்தார்களோ? எப்படித்தான் அச்சியற்றினார்களோ? என்று வியக்குமளவுக்கு இலட்சக் கணக்கான துண்டுப் பிரசுரங்கள் பொது மக்கள் கையில்! 5ஆம் தேதியும், 6ஆம் தேதியும் தொடர்ந்து தொலைபேசிகள்! கறுப்பு உடையில் கழகத்தினர் தெருத்தெருவாகச் சென்று வீடுகளிலே மட்டுமல்ல; சாலையோரங்களிலே நின்றவாறு ஓடுகின்ற கார்களை நிறுத்தியும், பேருந்துகளில் பயணம் செய்தும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து தமிழ்நாட்டில் இந்த ஆட்சியினருக்கு எதிராக ஒரு பெரும் எழுச்சியை மூன்றே நாட்களில் ஏற்படுத்தி விட்டார்கள். குறைந்த நாட்களில் இப்படிப்பட்ட எழுச்சியை ஏற்படுத்திய என்னுடைய உடன் பிறப்புகளுக்கெல்லாம் என் நெஞ்சார்ந்த நன்றியினையும், பாராட்டினையும் தெரிவிக்கத்தான் இந்த மடல்! கழகத்தின் சார்பில் எதைச் செய்தாலும், அதை எதிர்க்கின்ற போக்குத்தான் இன்றைய ஆட்சியினரிடம் உள்ளது. கடந்த மாதம் “டெசோ” இயக்கம் சார்பில் சென்னையிலே ஒரு மாநாட்டினை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தபோதும், அ.தி.மு.க. ஆட்சியினர் அதற்கு அனுமதி மறுத்தார்கள். அப்படி அனுமதி மறுக்கப்பட்ட காரணத்தினாலே, அந்த மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. தற்போது இந்த கறுப்பு உடை அணிந்து மனிதச் சங்கிலி நடத்துகிறோம் என்றால் அதற்கும் அனுமதி மறுப்பு. ஆட்சியினரின் இந்த ஜனநாயக விரோதப் போக்கினை எடுத்துக் காட்டி இடித்துரைக்க வேண்டிய பத்திரிகைகளோ, பஜனை மடம் நடத்துவதைப்போல எதற்கெடுத்தாலும் இந்த ஆட்சியைப் பாராட்டுகின்றன. இந்த ஆட்சியின் இருண்ட நிலைகளை விளக்க கறுப்பு உடை அணிகிறோம் என்றால், அதற்கு ஒரு காரணம் கற்பித்து, மஞ்சள் ஆடையை அகற்றிவிட்டேன், கறுப்பு சட்டை அணியக் காரணம் என்ன தெரியுமா? “தினமலர்” நாளேடு எவ்வளவு பெரிய
பத்திரிகை. அந்தப் பத்திரிகையில் அரை பக்கத்திற்கு ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்கள். அதன் தலைப்பே “மஞ்சளில் இருந்து கறுப்பு - கலரை மாற்றினார் கருணாநிதி” என்பதுதான். அந்தச் செய்திக் கட்டுரையில், “கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கருணாநிதி திடீரென மஞ்சள் துண்டு அணியத் துவங்கினார். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் ராசி ரிஷபம். இந்த ராசிக்கு குரு பகவான் சாதகமில்லாதவராக இருப்பதால், அவரை குளிர்விக்கும் வகையில் மஞ்சள் துண்டு அணியத் துவங்கியதாக அப்போது தகவல்கள் வெளியாகின. தற்போது, திடீரென கறுப்புச் சட்டையை தொடர்ந்து அணிவேன் என்று கருணாநிதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ஜோதிட வட்டாரத்தில் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது : கறுப்பு நிறம், சனி பகவானுக்கு உகந்த நிறம். கருணாநிதியின் ரிஷப ராசிக்கு ஐந்தில் சனி இருந்தபோது, அதன் பலனாக, ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பதவி பறிபோனது. தற்போது ரிஷப ராசிக்கு, ஆறில் சனி பகவான் மாறியுள்ளார். இதனால் அவருக்கு உகந்த கறுப்பு வண்ண உடையை அணிவதன் மூலம் எதிரிகளை எதிர் கொள்ளவும், வெற்றிகளை குவிக்கவும் முடியும் என்பதால், அவர் கறுப்பு உடைக்கு மாறியிருக்கிறார்” என்றெல்லாம் எழுதியிருப்பதைப் பார்த்து சிரிப்புதான் வருகிறது. இப்படியெல்லாம் கற்பனையாகச் செய்திகளை வெளியிட்டு பிழைப்பதும் ஒரு பிழைப்பா?
“தினமலர்” இப்படி எழுதியிருக்கிறது என்றால், இன்னொரு பத்திரிகை “தினமணி”யோ, “கறுப்புச் சட்டை : பாசிசத்தின் அடையாளம்” என்று எழுதியுள்ளது. நம்மைப் பற்றி இவ்வளவு எழுதுகின்ற இந்தப் பத்திரிகைகள் - 10ஆம் தேதியன்று தமிழகச் சட்டப்பேரவை எத்தனை மணிக்கு துவங்குகிறது? எமகண்டம், ராகுகாலம் எல்லாம் பார்த்து பேரவையைத் தொடங்குவதைப் பற்றி வாய் திறக்க ஏன் நடுங்குகிறது? ஆகஸ்ட் 15 ஆம் தேதி கோட்டையில் கொடியேற்று விழா நிகழ்ச்சி எப்போது நடைபெற்றது? ஒவ்வொரு ஆண்டும் எத்தனை மணிக்கு நடந்தது? இந்த ஆண்டு மட்டும் ஏன் நேர மாற்றம்? இப்படி ராகுகாலம், எமகண்டம் எல்லாம் பார்த்து ஒரு ஆட்சி நடைபெறுகிறதே? அதையும் பார்த்துக் கொண்டு தற்போது உறுதி மொழி ஏற்கும்போது மட்டும், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகிய மூவரின் ஒட்டு மொத்த உருவமாக தமிழக முதலமைச்சர் திகழ்கிறார் என்று அறிக்கை வேறு ஒரு கேடா?
இப்படிப்பட்ட பத்திரிகைகளின் பாராட்டுக்களிலே மயங்கி, எதையும் செய்யலாம், கேட்பதற்கு ஆள் இல்லை, கடந்த கால ஆட்சியிலே நிறைவேற்றப்பட்ட திட்டங்களையெல்லாம் குப்பைக் கூடைக்கு அனுப்பலாம், அதைப்போலவே தி.மு.கழக ஆட்சியில் எழுப்பப்பட்ட கட்டிடங்களைக்கூட அப்படியே கிடப்பிலே போடலாம், யார் நம்மை என்ன செய்ய முடியும் என்றெல்லாம் முதலமைச்சர் செயல்படுவது அவருக்கு நல்லதோ கெட்டதோ, இந்த நாட்டு மக்களுக்கு நல்லதல்ல. தி.மு.கழகம் விநியோகித்த துண்டுப் பிரசுரங்கள் தமிழ்நாட்டு மக்களின் கவனத்திற்கு மாத்திரமல்ல; முக்கியமாக இந்த ஆட்சியிலே இருப்போரின் நடவடிக்கைக்கு உரிய செய்திகள்தான் அதிலே இடம் பெற்றுள்ளன. அவற்றின் மீது இந்த ஆட்சியினர் உரிய நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும். மாறாக யார் மீது என்ன வழக்கு போடலாம்? யாரை எப்படி கைது செய்யலாம்? என்றெல்லாம் சிந்தித்து அடக்குமுறை தர்பார் நடத்துவதிலேயே காலத்தைச் செலவழிப்பது ஆங்கிலத்திலே சொல்ல வேண்டுமென்றால் “Cheap Taste” - அதாவது மலிவான அணுகுமுறை. முதலமைச்சர் இனியாவது அதைத் தவிர்ப்பாரா? அன்புள்ள, மு.க. 9-10-2012
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 117–121. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.