அடக்கம்

முரசொலி · தொகுதி 47 · கடிதம் 3662

முரசொலி கடிதங்கள் · 3662

மக்கள் எதிர்பார்க்கிறார்கள்!

நாள் 12.10.2012சுமார் 4 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3662. மக்கள் எதிர்பார்க்கிறார்கள்!

உடன்பிறப்பே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 5-10-2012 அன்று கறுப்பு உடை அணிந்து மனிதச் சங்கிலி அணிவகுப்பு நடத்திட அரசிடம் அனுமதி கோரி, அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்ட காரணத்தால், 5, 6, 7 ஆகிய நாட்களில் தமிழகம் முழுவதிலும் அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களை விளக்கி, கழகத் தோழர்கள் கறுப்பு உடை அணிந்து, வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்கள். அந்தத் தூண்டுதலுக்குக் காரணமாக இருந்தவர்கள் அ.தி.மு.க. ஆட்சியினர்தான்.

கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி, ஒரு ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சி, மக்கள் நலன் கருதி ஆற்ற வேண்டிய கடமையின்பால் பட்டதாகும். கறுப்பு உடை அணிந்து துண்டுப் பிரசுரங்களை வழங்கும் அமைதிவழி அறப் போராட்டம் தமிழகமெங்கும் தி.மு.கழகத்தினரால் வெற்றிகரமாக நடத்தப்பட்டதறிந்து, அ.தி.மு.க.வில் ஒரு சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தி.மு.க.வுக்குப் போட்டியாக, “அ.தி.மு.க.வின் சார்பில் நாங்களும் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்குகிறோம்” என்று சில அ.தி.மு.க. அரசின் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்ட ஒரு சில சாதனைகளைப் பட்டியலிட்டு, பொதுமக்களிடம் சென்று அவற்றை வழங்கியிருப்பதாகச் சில நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.

அ.தி.மு.க.வினர் சென்னையின் ஒரு சில பகுதிகளில் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கிய போது, வீட்டிலிருந்தோர், விளக்கம் பெறுவதற்காக, ஒரு சில கேள்விகளை துண்டுப் பிரசுரம் வழங்கியவர்களிடம் கேட்டிருக்கிறார்கள். “சாதனைப் பட்டியலில் இவற்றையெல்லாம் விட்டு விட்டீர்கள், உங்களது அடுத்த துண்டுப் பிரசுரத்திலாவது அவற்றையும் சேர்த்து விளக்கமாக வெளியிடுங்கள்” என்று சொன்னார்களாம். அவ்வாறு

அ.தி.மு.க.வினரால் தங்கள் துண்டுப் பிரசுரத்தில் தவிர்க்கப்பட்ட “சாதனை(?)களை” அடுத்த பிரசுரத்தில் சேர்ப்பதற்காக செவிவழிச் செய்தியாகச் சொன்னவற்றை, இங்கே நான் ஞாபகத்தில் இருந்தவரை பட்டியலிட்டுள்ளேன்:

* கடந்த ஆட்சிக் காலத்தில் 600 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டு கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தைப் பயன்படுத்தமாட்டேன் என்று இட நெருக்கடிக்கிடையே பழைய தலைமைச் செயலகத்திலேயே தொடர்ந்து இருக்கின்ற இமாலயச் சாதனை!

* பாவேந்தர் செம்மொழித் தமிழ் ஆய்வு நூலகத்தை ஆட்சிக்கு வந்த நாளிலேயே வெளியே தூக்கி எறிந்த விபத்துச் சாதனை!

* கழக ஆட்சியில் கட்டப்பட்டு பாதியில் நின்றிருந்த தலைமைச் செயலகத்தின் இரண்டாம் கட்டமாக நிறைவேற்ற வேண்டிய கட்டிடங்கள், “கலைவாணர் அரங்கப் பணிகள்” ஆகியவற்றைத் தொடராமலும்; அதுபற்றிக் கொஞ்சமும் சிந்திக்காமலும், கிடப்பிலே போட்ட கித்தாப்புச் சாதனை!

* ஆசியாவிலேயே மிகப் பெரியதும், அண்ணா நூற்றாண்டு நிறைவை யொட்டி அதன் நினைவாக சென்னை கோட்டூர்புரத்தில் கட்டப்பட்டதுமான நூலகத்தை குழந்தைகள் மருத்துவ மனையாக மாற்றுவதாக அறிவித்த மாபெரும் சாதனை!

* ஏழை மாணவர்கள் - வசதி படைத்த மாணவர்கள், நகர்ப்புறத்து மாணவர்கள் - கிராமப்புறத்து மாணவர்கள் என்று வழிவழி வந்த வேறுபாடுகளை அகற்றும் சமச்சீர் கல்வி முறைக்கு 23.5.2011இல் தடை விதித்த தனிப் பெரும் சாதனை. சமச்சீர் கல்விக்காக 200 கோடி ரூபாய் செலவழித்து அச்சடிக்கப்பட்ட புத்தகங்களை யெல்லாம் வீணடிக்காத விண்ணுயர் சாதனை!

* ஆசிரியர்கள் நியமனத்திலும், ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்குவதிலும் குறைபாடுகளை ஏற்படுத்தி, அதில் ஆளுங்கட்சியினர் குளிர் காய்ந்த குதூகலச் சாதனை!

* சத்துணவுப் பணியாளர்கள், அங்கன் வாடிப் பணியாளர்கள் நியமனங்களில் ஆளுங்கட்சியினர் புகுந்து விளையாடிய அற்புத சாதனை!

* இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு நாள் ஒன்றுக்கு 20 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு செய்த மின்னல் வேகச் சாதனை. கழக ஆட்சிக் காலத்தில் திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்ட மேட்டூர் புதிய அனல்மின் நிலையம், வடசென்னை அனல்மின் நிலையம் - யூனிட் (1), வடசென்னை அனல் மின்நிலையம் யூனிட் (2), வல்லூர் யூனிட் (1), வல்லூர் யூனிட் (2), வல்லூர் யூனிட் (3), தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் புதிய யூனிட் ஆகியவற்றை; கழக ஆட்சியில் திட்டமிடப்பட்டவை என்ற ஒரே காரணத்திற்காக, உரிய காலத்தில் மின் உற்பத்தி செய்வதில் அக்கறை காட்டாத அபார சாதனை!

* வரலாறு காணாத மின்வெட்டு காரணமாக பல்லாயிரக்கணக்கான சிறுதொழில் முனைவோர், விசைத்தறியாளர், தொழிலாளர்கள் பாதிப்புக்கு ஆளாகி; ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு; தெருவுக்கு வந்து போராடும் திகைப்பூட்டும் சாதனை!

* ‘பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்’ என்ற வகையில் கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினையில் இரட்டை வேடம் போட்ட இணையிலாச் சாதனை!

* தமிழகத்தில் பொறியியல் உயர்கல்வி பரவலாக்கப்பட்டு, அந்தந்த பகுதிகளில் உள்ளோர் பயனடையும் பொருட்டு; திருச்சி, கோவை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் திட்ட

மிட்டு உருவாக்கப்பட்ட அண்ணா பல்கலைக் கழகங்களை ரத்து செய்து உருக்குலைத்த ஒப்பற்ற சாதனை!

* ஏழை எளியோருக்குப் பயன் தரும் எந்த இலவசத் திட்டத்தையும் முழுமையாகச் செயல்படுத்தாத முக்கியச் சாதனை! எடுத்துக்காட்டாக, 2011 பொங்கல் திருநாளையொட்டி வழங்க வேண்டிய இலவச வேட்டி - சேலைகளை எட்டு மாதங்கள் கடந்த பிறகும் இன்னும் வழங்கி முடிக்காத வரலாற்றுப் புகழ் சாதனை - கல்வியாண்டு தொடங்கி ஐந்து மாதங்கள் கடந்த பிறகும் இலவச மடிக்கணினி வழங்கும் பணியும் - இலவச பஸ் பாஸ் வழங்கும் பணியும் முடிந்தபாடில்லாத முக்கியமான சாதனை!

* இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு அமைச்சர்களை அடிக்கடி மாற்றி, அமைச்சர்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையும், நிரந்தர நடுக்கமும் நிலவுவதற்கு வழிவகுத்த நிகரற்ற சாதனை!

* எந்த இடத்திலும் காலூன்ற முடியாத அளவுக்கு அதிகாரிகளை அடிக்கடிப் பந்தாடும் அரிய சாதனை!

* குறுவைச் சாகுபடியைக் கனவாக்கி, சம்பாச் சாகுபடியையும் ஏக்கத்திற்கு உள்ளாக்கிய இணையில்லாச் சரித்திரச் சாதனை!

* கட்சி மாச்சரியத்தோடு, நில அபகரிப்பு என்ற பெயரால் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக முன்னணியினர்மீது சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாகப் பொய்யான வழக்குகளைத் திரும்பத் திரும்பத் தொடுத்து கைது செய்து சிறையிலே அடைத்த சிறப்பான சாதனை! மதுபான உற்பத்தியாளர்கள் மேலும் லாபம் சம்பாதிக்க ஏதுவாக,

* மதுபானங்களின் விலையை உயர்த்திய மாபெரும் சாதனை!

* கொலை இல்லாத நாட்களே இல்லை; கொள்ளை நடக்காத ஊர்களே இல்லை; வழிப்பறி நடக்காத சாலைகளே இல்லை; பெண்கள் வெளியே புறப்பட்டால் கழுத்திலே உள்ள தாலிச் சங்கிலிகள் நிலைத்திருக்குமா என்பதே கேள்விக்குறி; போலீஸ் தடியடி, கண்ணீர்ப் புகை, துப்பாக்கிச் சூடு என்று சட்டம் - ஒழுங்கு நிலையைப் படாதபாடு படவைத்த பரவச சாதனை!

* பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணவேண்டிய பிரச்சினைகளுக்குக் கூட போலீஸ் படையை அனுப்பி அடக்குமுறை மூலம் தீர்வு காண முயற்சிக்கும் அரிய சாதனை!

* பால்விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு என்று ஏழை எளிய நடுத்தர மக்களை வாட்டி வதைத்திடும் வளமான(?) சாதனை!

* இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறித்திடும் வகையில்; ஆட்சியினரையும் அவர்தம் செயல்பாடுகளையும் ஆரோக்கியமான முறையில் விமர்சனம் செய்திடும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும், பத்திரிகைகள் மீதும் வழக்குத் தொடுத்து அச்சுறுத்த நினைக்கும் அபார சாதனை!

* தமது இயலாமையை மறைத்து மக்களைத் திசை திருப்புவதற்காக; எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் மீதும், இந்தியப் பிரதமர் மீதும், முன்னாள் ஆளுங்கட்சியான தி.மு. கழகத்தின் மீதும் பழி சொல்லிப் புழுதிவாரித் தூற்றும் புரட்சிகர சாதனை!

* ஜனநாயக நடைமுறைகளுக்கு முக்கியத்துவம்

கொடுத்து, மனசாட்சிக்குப் பயந்து, வாக்களித்த மக்களுக்குப் பயந்து, எதிர்க்கட்சியினருக்குப் பயந்து, பத்திரிகைகளுக்குப் பயந்து நடைபெற்று தி.மு.கழக ஆட்சிக்கு மாறாக; அனைத்துத் தரப்பினரையும் பயமுறுத்தியே ஆட்சி நடத்தும் பண்பட்ட(?) சாதனை!

தி.மு.கழகத்திற்குப் போட்டியாக, ஆளும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒரு சிலர், துண்டுப் பிரசுரத்தில் இடம்பெறச் செய்ய மறந்துவிட்ட இந்தச் சாதனைகளை எல்லாம்; அடுத்த முறையாவது தவறாமல் அச்சியற்றி; பரவசப் பண்பாடி, தமிழகத்துத் தெருக்கள் தோறும் தவறாமல் விநியோகம் செய்வார்கள் என்று; மாற்றம் கருதி வாக்களித்து ஏமாற்றமடைந்த மக்கள் எதிர்பார்க்கிறார்கள்!

அன்புள்ள, மு.க. 12-10-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 122–127. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 47-இல் மேலும் கடிதங்கள்