அடக்கம்

முரசொலி · தொகுதி 47 · கடிதம் 3665

முரசொலி கடிதங்கள் · 3665

நீர் இடித்து நீர் விலகுவதா?

நாள் 23.10.2012சுமார் 7 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3665. நீர் இடித்து நீர் விலகுவதா?

உடன்பிறப்பே,

நான் அடிக்கடி ஒன்றைச் சொல்லியிருக்கிறேன்; தந்தை பெரியார் அவர்கள் வலியுறுத்திச் சொல்வார் என்று குறிப்பிட்டே அதைச் சொல்லியிருக்கிறேன். அதுதான் கழகத்தின் தாரக மந்திரங்களான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பவற்றுள் “கட்டுப்பாடு” தான் முக்கியம்! அதைத்தான் விழுப்புரம் முப்பெரும் விழாவில் நமது இனமானப் பேராசிரியர் நினைவூட்டி விரிவாக உரையாற்றினார். திராவிட முன்னேற்றக் கழகம் பல முறை தேர்தலில் தோற்றிருக்கலாம். பல முறை வெற்றி பெற்றிருக்கலாம். வெற்றி, தோல்வி பற்றி நாம் எந்தக் காலத்திலும் முறையே வெறியாட்டம் போட்டதோ, வீழ்ந்து பட்டதாக நினைத்ததோ இல்லை. ஆனால் கட்டுப்பாடு குலைந்தாலோ - சேதாரம் ஏற்பட்டாலோ பிறகு கழகத்தைக் காப்பாற்ற முடியாது!

என்னுடைய வயது 89; பேராசிரியரின் வயது 90; இருவருமே மாணவர்களாக இருந்த காலந்தொட்டு, இப்போது வரை ஓய்வின்றி உழைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். நாங்கள் ஓய்வெடுத்துக் கொண்டு ஒரு நாள் கழக அலுவலகத்திற்கு வராமல் இருந்தால் எங்களைக் கேட்பவர்கள் யாரும் இல்லை. இருந்தாலும் காலையிலும், மாலையிலும் கழக அலுவலகத்திற்கு வந்து கொண்டுதான் இருக்கிறோம். கழகம் தற்போது ஆளுங்கட்சி அல்ல. தமிழகத்தில் கடந்த ஆண்டு 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், நாம் எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாத அளவிற்கு தோல்வியைக் கண்டு விட்டோம். நான் அதற்காக துவண்டா போய் விட்டேன்? கழகப் பணி ஆற்றாமல் இருந்து விட்டேனா? இந்த வயதிலும் எதற்காக அன்றாடம் எழுதுகிறேன்? காலையில் சாப்பிடுகிறேனோ, இல்லையோ, எத்தனை நாளிதழ்களைப் படிக்கின்றேன்? அத்தனைப் பத்திரிகைகளையும் உன்னால் வாங்கிப் படித்திட இயலாது என்பதால், அந்த இதழ்களை யெல்லாம் படித்து விட்டு, அதிலே நீ தெரிந்து கொள்ள வேண்டிய

செய்திகளை யெல்லாம் - நீ மக்களுக்கு விளக்கி எடுத்துரைத்திட வேண்டியவற்றையெல்லாம் தேடிப்பிடித்து, ஆளுகின்ற அரசைப் பற்றி எப்படிப்பட்ட செய்திகள், விமர்சனங்கள் எல்லாம் வருகின்றன, உச்ச நீதிமன்றத்தில், உயர் நீதி மன்றத்தில் இந்த ஆட்சியினரைப் பற்றி எப்படிப்பட்ட கருத்துக்கள், கண்டனங்கள் எல்லாம் வெளிவருகின்றன என்பதையெல்லாம் தொகுத்து இப்படி ஓய ஓய சலிப்பின்றி எழுதுகிறேன்.

ஆனால் அந்த என்னுடைய கருத்துக்களை தமிழகத்திலே உள்ள நாளேடுகள் வேண்டா வெறுப்பாக, ஏதோ நாங்களும் வெளியிட்டோம் என்கிற அளவிற்கு, நடுநிலை நாளேடு என்று காட்டிக் கொள்வதற்காக இரண்டு பத்தி, மூன்று பத்தி என்று வெளியிடுகிறார்கள். முழுமையாக வெளியிட்டு, அந்தக் கருத்துக்கள் பரவினால், கழகத்தின் செல்வாக்கு கூடுதலாகி விடுமோ என்று ஆட்சியாளர்களைவிட, நமது இதழாளர்களுக்கு அக்கறையும், ஆர்வமும் அதிகமாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் கழகத்திற்கு எதிர்ப்பான செய்திகள் என்றால் அதற்கு எவ்வளவோ முக்கியத்துவம் கொடுத்து, ஒரு வரி விடாமல் வெளியிட்டு, ஆட்சியாளர்களுக்கு அரவணைப்பு காட்டிட, அரசியல் ரீதியாக உதவிட முன் வருகிறார்கள். என்ன காரணம்? நம்மீது உள்ள வெறுப்பு என்பதை விட; ஆட்சியாளர்களைக் காப்பாற்றிட வேண்டுமென்பதிலே உள்ள முனைப்புதான் காரணம்.

நேற்று (21-10-2012) ஒரு நாள் “தினமலர்” நாளேட்டில் மட்டும் கழகத்திற்கு எதிர்ப்பாக எத்தனை செய்திகள் என்று பாருங்கள்!

❖ “உடன்பிறப்புகள் குமுறல் : வட சென்னைக்கு பஞ்சாயத்து எப்போ?”

❖ “கோவை மாநகர தி.மு.க.வின் மாநில திருமண மேலா?”

❖ “நடுரோட்டில் கட்டிப் புரண்டு சண்டை”

❖ டி.ஆர். பாலுவுக்கு மத்திய இணை அமைச்சர் “அட்வைஸ்”

கொட்டை எழுத்துக்களில், அரைப் பக்கம், முழுப் பக்கம் என்ற அளவிற்கு கழகத்தைப் பாதிக்கும் இத்தனைச் செய்திகள் - ஆனால் சேது கால்வாய்த் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து

நான் ஒன்றரைப் பக்கத்திற்கு விளக்கமாக எழுதிய கட்டுரையில் “நாங்களும் வெளியிடுகிறோம்” என்ற அளவிற்கு இரண்டே இரண்டு பத்திகள் மட்டுமே; நடுநிலை (?) நாளேடாம்!

இன்றைய (22-10-2012) “தினமலர்” இதழில் முதல் பக்கத்தில் “பேனர்” செய்தி - எட்டு பத்தி தலைப்பு செய்தியே - என்ன தெரியுமா? “லடாய்! - தி.மு.க. மந்திரி - எம்.பி., நேருக்கு நேர் மோதலின் பின்னணி - கோஷ்டி பூசலின் பலப் பரிட்சையால் கருணாநிதி அப்செட்!” என்பதுதான்! பழனிமாணிக்கம் பேட்டி கொடுத்ததே 21ஆம் தேதிதான். ஆனால் “தினமலர்” “இந்த மோதலால் அதிருப்தி அடைந்துள்ள கருணாநிதி கடந்த நான்கு நாட்களாக அறிவாலயத்திற்கு வராமல், தன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்” என்று புளுகியுள்ளது. நம்மீது சேற்றை வாரி இறைக்க என்ன காரணம்? அடுப்பில் எரியும் விறகை வெளியே இழுத்தால் கொதிப்பு அடங்கும் என்பார்களே! அதைப் போல “தினமலர்” இப்படி எழுதாவிட்டால், இந்த மாதத்திற்கான அரசு விளம்பரம் குறைந்து விடும்! கடந்த மாதமே அந்த இதழுக்கான விளம்பரத் தொகையைக் குறைத்து விட்டார்களாம்! என்ன காரணம்? அண்ணா நகர், அண்ணா வளைவினை அகற்றுவதில் ஆட்சியாளர்களின் குளறுபடிகள் பற்றிப் பெரிய அளவில் அந்த இதழ் செய்தி வெளியிட்டது என்பதற்காகவே விளம்பரங்களை “கட்” பண்ணக் கூறி விட்டார்களாம்! எனவேதான் “லடாய்” என்று “பேனர்” வெளியிடுகிறது “தினமலர்”. “விளம்பரக் கொழுக்கட்டை” என்னென்ன விநோதத்தைச் செய்கிறது பார்த்தாயா?

“இந்து” - ஆங்கில நாளேடு! அந்த இதழின் மீது அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் கடுமையாக நடவடிக்கை எடுத்தபோதெல்லாம், அந்த “இந்து” இதழுக்கு ஆதரவாக - பாரம்பரியம் மிக்க அந்த இதழைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக; பக்கம் பக்கமாக எழுதியவன் நான். அகில இந்தியப் புகழ் பெற்ற அந்த நாளேடு நேற்றையதினம் கொட்டை எழுத்துக்களில் வெளியிட்டுள்ள செய்தி என்ன தெரியுமா? “Palanimanickam’s spat with Baalu comes out in open” என்ற தலைப்பில் டி.ஆர். பாலுவைப் பற்றி, மத்திய இணை அமைச்சர் பழனி மாணிக்கம் புகார் கூறி கொடுத்த பேட்டியினை அரைப் பக்க அளவிற்கு வெளியிட்டுள்ளது. “இந்து” பத்திரிகைக்குத் திடீரென்று பழனிமாணிக்கம் மீது அன்பு பெருக்கெடுத்தோடி, அவருடைய பேட்டியை அந்த

அளவிற்கு பெரிதாக வெளியிட்டு விட்டார்களா? தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக சேது சமுத்திரத் திட்டம் வேண்டுமென்று கழகத்தின் தலைவனாகிய நான் அவ்வளவு பெரிய அறிக்கையை எழுதியிருக்கிறேனே, அதிலே ஒரு சிறு பகுதியையாவது “இந்து” வெளியிட்டிருக்கிறதா? கிடையாது.

“டைம்ஸ் ஆப் இந்தியா” - ஆங்கில நாளேடு - எவ்வளவு பெரிய இதழ்? அந்த இதழின் சென்னைப் பதிப்பை நான்தான் தொடங்கி வைத்தேன். அதில், “Two DMK Leaders locked in turf battle - Baalu,Palanimanickam Spar Over Rail Projects” என்று தலைப்பிட்டு, இவர்களின் மோதலைப் பற்றி அரைப் பக்கத்திற்கு செய்தி வெளியிடுகிறது என்றால், நம் இயக்கத்தின் மீதுள்ள பற்றா காரணம்? இல்லை, இல்லவே இல்லை. கழகத்திற்கு எதிரான அந்தச் செய்தியை அந்த அளவிற்கு ஆவலோடு வெளியிடுகிறார்கள். இந்தச் செய்திகளைப் படிக்கின்ற கடைக்கோடித் தொண்டன் இருக்கிறானே, எந்தப் பதவியையும் எதிர்பார்க்காமல், என் வீட்டு வாசலில் காலையிலிருந்து ஒரு மாலையை கையிலே ஏந்திக் கொண்டு, “அய்யா எனக்கு 27 வயது, உங்கள் வாழ்த்துக்காகக் காத்திருக்கிறேன்” என்று ஒவ்வொரு நாளும் கூறிக் கொண்டு காத்திருக்கிறார்களே அவர்கள் எல்லாம் திசை திருப்பும் இந்தச் செய்திகளைப் படித்து விட்டு கண்களிலே கண்ணீரைச் சிந்தவில்லையா; ரத்தத்தை அல்லவா சிந்துகிறார்கள்?

நேற்று காலையிலே ஒரு உடன்பிறப்பு - சேப்பாக்கம் ராஜா - அவருடைய வளர்ப்பு மகனுக்கு என் வீட்டிலே திருமணத்தை நான் நேற்று நடத்தி வைத்தேன். சேப்பாக்கத்தில் நான் தேர்தலில் போட்டியிட்ட போது இரவும் பகலும் உழைத்தவர் ராஜா. திருமணம் முடிந்து மணமக்கள் எல்லாம் போய் விட்டார்கள். ஆனால் ராஜா மட்டும் மேலே தாழ்வாரத்தில் அமர்ந்திருந்த என்னிடம் வந்து என் கால்களில் விழுந்தார். “என்ன?” என்றேன். “அய்யா, என் வாழ்நாளில் எனக்கு எந்தப் பதவியும் தேவையில்லை, தங்கள் கையால் தாலி எடுத்துக் கொடுத்து, என் மகனை வாழ்த்தினீர்களே, அதுவே எனக்குப் போதும். இந்தப் பிறவியின் பயனை அடைந்து விட்டேன்” என்றார். இப்படிப்பட்ட தன்னலமற்ற, தலை வணங்கத்தக்க உடன்பிறப்புகள் எல்லாம் - கழகத்திலே பதவிச் சுகம் கண்டு, முன்னணித் தலைவர்களாக

இருப்பவர்கள் - ஒருவரோ டொருவர் திறந்தவெளி மைதானத்தில் மோதிக் கொள்வதைக் கண்டு, ரத்தக் கண்ணீர் வடிக்காமல் என்ன செய்வார்கள்?

என்னைச் சந்திக்க வருகிற நமது இயக்க முன்னோடிகள் மாத்திரமல்ல, தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் கழகத்திற்கு எந்த அளவிற்கு செல்வாக்கு கூடியிருக்கிறது என்பதைப் பற்றியும், ஆளுங்கட்சி மீது ஒன்றரை ஆண்டுக் காலத்திலேயே எந்த அளவிற்கு வெறுப்பும் விரக்தியும் ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பற்றியும், மின்வெட்டின் காரணமாக மக்கள் எந்த அளவிற்கு கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றியும் விளக்கி, என்னிடம் எடுத்துக் கூறும்போது; என் மனதிலே ஆளுங்கட்சிக்கு மக்களின் எதிர்ப்பு பெருகுகிறது என்ற செய்தியைவிட, இரண்டு கழக முன்னோடிகள் ஒருவரோடொருவர் குழு சேர்த்துக் கொண்டு இந்த மாவட்டத்திலே மோதிக் கொள்கிறார்கள். ஒரு குழுவினர் துண்டுப் பிரசுரங்களை பொது மக்களிடம் கொடுத்து விட்டுச் சென்ற சிறிது நேரத்திற்குப் பிறகு, நமது கழகத்தைச் சேர்ந்த இன்னொரு குழுவினர் தனியாக வந்து அதே துண்டுப் பிரசுரங்களைக் கொடுக்கிறார்கள் என்றெல்லாம் கேள்விப்படுகிறேனே, அந்தச் செய்திதான் என்னைப் பெரிதும் வருந்தச் செய்கிறது. அந்த வருத்தம், என்னை உண்ண விடாமலும் இரவு முழுவதும் தூங்க விடாமலும் செய்து விடுகிறது.

1967ஆம் ஆண்டு முதன் முதலாகக் கழகம் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, நாமெல்லாம் பெருமகிழ்ச்சியிலே ஆழ்ந்திருந்த போது, அண்ணா மட்டும் அந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இல்லை. அமைப்புச் செயலாளர் என்.வி. நடராசன் அப்போது அண்ணாவிடம், “என்ன அண்ணா? உங்கள் முகத்திலே மகிழ்ச்சி இல்லையே” என்று கேட்ட போது, “ஆட்சி வந்து விட்டது, ஆனால் கட்சி போச்சே” என்று அண்ணா சொன்னார். அவர் என்ன அர்த்தத்தில் அப்படிச் சொன்னார் என்பதை நான் இப்போது அனுபவ ரீதியாக உணருகிறேன். இரவு 11 மணி வரை கழக முன்னணியினரோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்து விட்டு, படுக்கச் சென்றால், உள்கட்சியை அரித்து வரும் இத்தகைய குழுக்களைப் பற்றிய வேதனைதான் என்னைச் சூழ்ந்து கொள்கிறது. தூங்கவிடாமல் செய்கிறது.

நேற்று மாலையில் மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கம் அளித்த பேட்டி பற்றி அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவனும், தம்பி முரசொலி செல்வமும் என்னிடம் வந்து கூறியவுடன், “இன்றிரவு என் தூக்கம் போச்சு” என்றுதான் கூறினேன். அதுபோலவே இரவு முழுவதும் நான் உறங்கவில்லை. இன்று காலையில் தாய்க் கழகமான, திராவிடர் கழகத்தின் தலைவர், தமிழர் தலைவர், இளவல் வீரமணி அவர்கள் என்னிடம் நேரிடையாகப் பேசுவதற்குத் தயங்கிய நிலையில், என் செயலாளரிடம் தொலைபேசியில் தன்னுடைய மன வேதனையையெல்லாம் கொட்டித் தீர்த்திருக்கிறார். “நம் கழகத்தில் இப்படியெல்லாம் கிடையாதே, இதென்ன புதுப் பழக்கம்” என்று பதறியிருக்கிறார்.

அண்ணா சொன்னாரே; “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்று! அதெல்லாம் மறந்து போய் விட்டதா? அதுவும் தஞ்சை மாவட்டத்திலா? கடந்த சில நாட்களுக்கு முன்பு, தஞ்சை மாவட்டத்தில் கீழ் மட்டத்திலே இரண்டு பிரிவினருக்கு இடையே உள்ள பிரச்சினையைச் சமாதானப்படுத்துவதற்காக, கழக அலுவலகத்திற்கே அழைத்து நானும், பேராசிரியரும் இரண்டு மணி நேரம் செலவிட்டோம். தம்பி துரைமுருகன் அந்தக் கூட்டத்தில் பேசும்போது தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் இணைந்த மாவட்டம், நம் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள அவருடைய சொந்த மாவட்டம். அங்கே அவர் கூறுவதுதான் “வேதவாக்கு” என்றெல்லாம் தெரிவித்து, அங்கே குழு உருவாகலாமா என்று கண்ணீர் மல்கக் கேட்டாரே! அந்த மாவட்டத்திலா இந்தத் தலைக்குனிவு? மன்னையும், தஞ்சை நடராசனும், தாழையும், குடந்தை நீலமேகமும், மாயூரம் கிட்டப்பாவும், விளநகர் கணேசனும், முத்துப்பேட்டை தர்மலிங்கமும், பேராவூரணி கிருஷ்ண மூர்த்தியும், நாடியம் ராமையாவும், குடவாசல் கிருஷ்ண மூர்த்தியும், டி.கே. கோவிந்தனும் உயிரோடு இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா? ஏன், என் இனிய உடன்பிறப்பு கோ.சி. மணி பழைய உடல் நிலையோடு உத்வேகமாக இருந்திருந்தால், இப்படியொரு செய்தி ஏடுகளில் வந்திருக்குமா?

என்னுடைய குணம் மிக தாட்சண்யம்! சில கட்சிகளின் தலைமையைப் போல எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், கட்சிக்காக உழைத்தவர்களாக இருந்தாலும், மூத்தவர்களாக

இருந்தாலும் கணநேரத்தில் “கட்டம் கட்டி” விடுகிறார்கள்? என்னால் அப்படி - இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் - இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு, கடினமாக இருக்க முடிவதில்லை. அதையே காரணமாகக் கொண்டு, தாங்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று கருதினால் பிறகு நான் என்ன தான் செய்ய முடியும்?

இரண்டு நாட்களுக்கு முன்பு பழனிமாணிக்கம் என்னைச் சந்தித்தார். அவருடைய தொகுதியிலே நடைபெறுவதைப் பற்றி யெல்லாம் என்னிடம் கூறினார். பொறுத்திருங்கள், தலைமைக் கழகத்திற்குப் புகாராக எழுதிக் கொடுங்கள், என்று சொன்னேன். அதற்குள் என்ன அவசரம்? எதற்காக இந்தப் பேட்டி? நான் அனைவருடனும் எளிதில் கலந்து, அன்போடு பழகுகிறேன் என்பதற்காகவே - அதையே பலவீனமாக எடுத்துக் கொண்டு, எது வேண்டுமானாலும் செய்வதா? “மறப்போம்; மன்னிப்போம்” என்று அண்ணா சொன்னபடி, நான் எல்லாவற்றையும் மன்னித்து விடுகிறேன், மறந்து விடுகிறேன் என்பதற்காக எதையும் செய்யத் துணிவதா? எதிர்க் கட்சிகளிடமிருந்து கட்சியைக் காப்பாற்றுவதா? நமக்குள்ளேயே உலவுகின்ற இத்தகைய குழு பேதத்தைப் போக்குவதா? இலை நிறைய பண்டங்களையும், பதார்த்தங்களையும் பரிமாறி விட்டு, அதன் மூலையிலே சாணத்தையும் சிறிது வைப்பதற்குப் பெயர் விருந்தோம்பலா? எதற்காக நான் இருக்கிறேன்? எதற்காகக் கழகத் தலைமை இருக்கிறது? மாவட்டத்திற்கு மாவட்டம் இது போன்றதொரு நிலைமை உருவானால் அதற்கு எங்கே எல்லை?

தம்பி பழனிமாணிக்கம் தஞ்சையிலே பேட்டி கொடுத்து விட்டு, அவரது மனச்சாட்சியே உறுத்திய காரணத்தால் நேற்றிரவே அவசர அவசரமாகச் சென்னை வந்து என்னைச் சந்தித்து என்ன காரணத்தால் அந்தப் பேட்டியைக் கொடுக்க நேரிட்டது என்பதை என்னிடமும், துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகனிடமும், அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவனிடமும் விளக்கினார்.

இந்தத் தம்பிகள் இருவருமே ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் - இன்னும் சொல்லப் போனால் நாடாளுமன்றத்தில் நீண்ட கால அனுபவம் உள்ளவர்கள் - இருவருமே தம்பி முரசொலி மாறனின் தயாரிப்புகள்! கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு

நாடாளுமன்றத்தில் ஒரு விவாதம் - அதாவது தமிழகத்திற்கு வர வேண்டிய ஒரு திட்டம் மேற்கு வங்கத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்பதைப் பற்றி தம்பி டி.ஆர். பாலு காரசாரமாக ஆளுங் கட்சியைத் தாக்கிப் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மூன்றாவது வரிசையிலே இருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், முதல் வரிசையிலே இருந்த தம்பி டி.ஆர். பாலுவைத் தாக்குவதற்காக வேகமாக வருகிறார்கள். ஆனால் அவர்கள் பாலுவை நெருங்குவதற்கு முன்பாக, ஐந்தாவது வரிசையிலே அமர்ந்திருந்த பழனிமாணிக்கம் முதல் வரிசைக்கு ஓடி வந்து, டி.ஆர். பாலுவிற்கு அரணாக அவர் முன்பு நின்று கொண்டு மேற்கு வங்க நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தடுத்தார்! அந்த உணர்வு இன்று எங்கே போய் விட்டது? “ஊரிடத்துப் பகை என்றால் உறவிடத்துப் போயுரைப்பேன்; உறவிடத்தே பகை என்றால், யாரிடத்துப் போயுரைப்பேன்?” என்ற நிலையில் நான் நிம்மதி இழந்திருக்கிறேன்! பாலுவிற்காக பழனிமாணிக்கம் அல்ல - பழனிமாணிக்கத்தைத் தாக்குவதற்கு அங்கே யார் முற்பட்டிருந்தாலும், பழனிமாணிக்கத்தை விட வேகமாக ஓடி வந்து பாதுகாக்கக் கூடியவர் தான் டி.ஆர். பாலு! என்ன செய்வது? அதைத்தான் அண்ணா “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்றார். “நீர் இடித்து நீர் விலகாது” என்பது முதுமொழி அல்லவா? மறந்து விடாமல் அதை நினைப்போம்; மறந்திருந்தாலும் மீண்டும் அதை நினைப்போம்! கட்டுப்பாடு போற்றி, கழகத்தை உயிரெனக் காப்போம்!

அன்புள்ள, மு.க. 23-10-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 141–148. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 47-இல் மேலும் கடிதங்கள்