முரசொலி கடிதங்கள் · 3667
மின்வெட்டு தீரும் நாள் எந்நாளோ?
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3667. மின்வெட்டு தீரும் நாள் எந்நாளோ?
உடன்பிறப்பே,
காவல் துறை, சிறைத்துறை, தீயணைப்புத் துறையில் பணியாற்றும் சீருடை பணியாளர்களுக்கு வீடுகள் கட்டித் தரும் பணிக்கு அடிக்கல் நாட்டிய நம்முடைய முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மின்சாரத்தைப் பற்றியும், மின் வெட்டைப் பற்றியும் விலாவாரியாகப் பேசி, மத்திய அரசையும், கடந்த கால கழக அரசையும் எந்த அளவிற்குக் குறை கூற முடியுமோ அந்த அளவிற்குத் தாக்கிப் பேசி, இறுதியாக அடுத்த ஆண்டு இறுதிக்குள் மின் பற்றாக்குறை முழுவதும் தீர்க்கப்படும் என்று முடித்திருக்கிறார். ஆனால் ஆட்சிக்கு வருவதற்கு முன் ஊருக்கு ஊர் பேசிய கூட்டங்களில் ஜெயலலிதாவும் அவரது கட்சியினரும் என்ன சொன்னார்கள்? ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் மின் வெட்டு இல்லாமல் செய்வோம் என்று சொல்லிவிட்டுத்தான் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் இப்போது அடுத்த ஆண்டு இறுதிக்குள் மின் பற்றாக்குறை முழுவதும் தீர்க்கப்படும் என்று சொல்லுகிறார். எப்போது வேண்டுமானாலும் தீர்க்கட்டும்! ஆனால் தேவையில்லாமல் மத்திய அரசின் மீதும் கழக ஆட்சியின் மீதும் குறை கூறுவது நியாயம் தானா?
ஜெயலலிதாவின் நீண்ட உரையில் கழகத்தின் மீது சாட்டியுள்ள குற்றச் சாட்டுகளுக்கு மட்டும் நான் பதில் கூறுகிறேன். அம்மையார் எதை எடுத்தாலும் துரோகம் என்று சொல்லாவிட்டால் பேச்சே முழுமை பெறாது. காவிரியை எடுத்துக் கொண்டாலும், மின்சாரத்தை எடுத்துக் கொண்டாலும் நான் செய்த துரோகம் ஒன்று, இரண்டு என்று சொல்லத் தவறுவதில்லை. பொதுவாக ஜெயலலிதா துரோகத்தைப் பற்றிப் பேசலாமா? இவரை விடவா துரோகத்திற்கு எடுத்துக்காட்டாக வேறொருவர் திகழ முடியும்? தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே தெரிந்த விவரம் ஆயிற்றே? “எனக்கு எல்லாமே எம்.ஜி.ஆர். தான்” என்று சொன்ன ஜெயலலிதா, எந்த எம்.ஜி.ஆர்., அரசியலிலே ஜெயலலிதாவை அழைத்து வந்து கொள்கை பரப்புச் செயலாளராக
ஆக்கி, மாநிலங்களவையில் உறுப்பினராக்கி உலகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தாரோ, அதே எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றித் தன் கைப்பட ஆங்கிலத்தில் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு எழுதிய கடிதத்தை மக்கள் குரல் நாளேடு அப்படியே நகல் எடுத்து வெளியிட்டு, தமிழகத்திலே முதல் துரோகி என்பதைப் பட்டை உரித்துக் காட்டியிருக்கிறதே! இவர் என்னைப் பற்றி துரோகம் என்று கூறுவது கேலிக்கூத்துதானே?
ஏன்? இன்னமும் அவருடைய வீட்டிலே உடன்பிறவா சகோதரியாக உலா வந்து கொண்டிருக்கும் சசிகலாவை கட்சியை விட்டு நீக்கி - அவரது உறவினர்களை யெல்லாம் சிறையிலே தள்ளி - பின்னர் அவர்களை எல்லாம் விடுவித்ததற்குப் பெயர் துரோகம் இல்லையா? ஏன்? அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்காக ஜெயலலிதாவுடன் பணியாற்றிய எத்தனையோ மூத்த தலைவர்கள், பிறந்த நாள் விழா நடத்திக் கொண்ட குற்றத்திற்காகவே என்ன ஆனார்கள் என்பதைத்த தமிழகம் அறியாதா? எனவே இனியாவது ஜெயலலிதா தனது அறிக்கையிலோ, பேச்சுக்களிலோ இந்த “துரோகம்” என்பதைச் சுட்டிக் காட்டாமல் இருப்பது அவருக்கே நல்லது!
அடுத்து, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்ததாகவும், குஜராத் மாநிலத்தோடு மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போட்டதாகவும், மின்சாரத்தை விலை கொடுத்து வாங்கியும் தமிழகத்திற்குக் கொண்டு வந்து சேர்க்கவே வழியில்லாத நிலைதான் தற்போது உள்ளது என்றும் ஜெயலலிதா பேசியிருக்கிறார். இதைவிட முன்யோசனையற்ற செயல்பாடு ஒன்று இருக்க முடியுமா? ஒரு மாநிலத்திடம் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போடும்போதே, அதை வாங்க முற்படும்போது, அதை வாங்கினால் தமிழகத்திற்குக் கொண்டு செல்ல வழி இருக்கிறதா என்று பார்க்காமலே அ.தி.மு.க. அரசு ஒப்பந்தம் செய்தது என்றால்; அது, எவ்வளவு பெரிய தவறு? ஒப்பந்தம் போட்ட போதே, மின் வாரியத்திலே உள்ள பொறியாளர்கள் எல்லாம், குஜராத்திலே மின்சாரம் வாங்கினால் அதை ஜெயலலிதா எப்படிக் கொண்டு வந்து சேர்க்கப் போகிறார் என்று கிண்டல் செய்து ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்களாம். இதுகூடத் தெரியாத நிலையில் குஜராத் மாநிலத்தோடு மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்யக் காரணமாக இருந்தவர்கள் யார்? அதிகாரிகள் நிச்சயம் ஒப்புக் கொண்டிருக்க மாட்டார்களே?
அதுபோலவேதான் மத்திய அரசிடமிருந்து மின்சாரத்தைப் பெறுவதிலும், அவர்கள் கொடுக்க முன் வந்தால்கூட, அந்த மின்சாரத்தை எப்படி தமிழகத்திற்குக் கொண்டு வந்து சேர்ப்பது என்ற திட்டம் இல்லாமல், அதைப் பற்றி யோசிக்காமல், பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் கடிதம் எழுதிவிட்டால் பிரச்சினை தீர்ந்து விடுமா?
மத்திய அரசைக் குறை கூறும் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து இந்த 18 மாதங்களில் எத்தனை முறை டெல்லி சென்று தமிழகத்தின் மின் தேவையைப் பற்றிப் பிரதமருடனோ, அல்லது துறையின் அமைச்சருடனோ பேச வார்த்தை நடத்தியிருக்கிறார்? ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை?
அவருக்குத் தனியாகச் சென்று கேட்க முடியாவிட்டால் கூட, சட்டப்பேரவையிலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் பேசி, அவர்களையும் அழைத்துக் கொண்டுபோய் டெல்லியிலே ஒரு முறையாவது கேட்டுக்கொண்டது உண்டா? முதல் அமைச்சருக்கே அதிலே அவ்வளவு அக்கறை இல்லை என்கிற போது, தி.மு.க. மத்திய மந்திரிகள் அக்கறை காட்டவில்லை என்று மீது குற்றம் கூறுவது எந்த விதத்தில் நியாயமோ; தெரியவில்லை!
கடந்த கால ஆட்சியிலே ஏன் “காரிடார்” அமைக்கவில்லை என்று கேள்வி கேட்கிறார் ஜெயலலிதா! அப்போது தமிழகத்திலே தற்போது ஏற்பட்டுள்ளதைப்போல மின் பற்றாக்குறை ஏற்பட்டிருக்குமேயானால், அப்போதே கழக அரசு மத்திய அரசிடம் “காரிடார்” அமைப்பதைப் பற்றிப் பேசியிருக்கும். ஆனால் கழக ஆட்சிக் காலத்திலே இந்த அளவிற்குப் பற்றாக்குறை இல்லை. எனவே “காரிடார்” அமைக்கத் தேவையும் ஏற்படவில்லை. இந்த அடிப்படைக் காரணமே புரியாமல், கழக ஆட்சிக் காலத்தில் காரிடார் அமைக்க ஏன் முயற்சிக்கவில்லை என்று ஜெயலலிதா போலிசார் மத்தியிலே போய்ப் பேசினால் என்ன செய்வது? முதலில் ஒரு முதலமைச்சர் எங்கே, என்ன பேசுவது என்று தெரிய வேண்டாமா? எங்கே சென்றாலும் ஒரு குட்டிக் கதை, எதிர் கட்சிகளைத்
தாக்குவது என்ற போக்கினை எப்போதுதான் திருத்திக் கொள்ளப் போகிறார்?
கழகம் ஆட்சியிலே இருந்த 2006-2011ஆம் ஆண்டு காலத்தில் மின் உற்பத்திக்கு எதுவுமே செய்யவில்லையா? அதைப்பற்றியெல்லாம் எத்தனை கடிதங்கள், எத்தனை அறிக்கைகள் எழுதியிருக்கிறேன். முதலமைச்சர் அதை யெல்லாம் படிக்கவில்லையா? இருந்தாலும் மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 3136 கோடி ரூபாயில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரித்திட ஒரு திட்டம் கழக ஆட்சியில் 2-5-2007 அன்று தொடங்கப்பட்டதா இல்லையா? அந்தத் திட்டத்தின் மூலம் 2011ஆம் ஆண்டு இறுதியிலேயே மின்சாரம் கிடைத்திருக்க வேண்டும். அந்தத் திட்டத்தில் தாமதம் ஏற்பட யார் காரணம்? 2011இல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அல்லவா? எண்ணூர் அனல் மின் நிலைய இணைப்பு மூலமாக 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஒன்று 8-12-2006இல் 3 ஆயிரத்து 136 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது; அதன் உற்பத்தி 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் தொடங்கும். 8-12-2006 என்பது யாருடைய ஆட்சிக் காலம்? கழக ஆட்சிக் காலம் அல்லவா? அப்போது தொடங்கப்பட்ட திட்டம்தானே இது?
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக்கூடிய வகையில் 2 ஆயிரத்து 475 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு திட்டம் 26-6-2007இல் தொடங்கப்பட்டது; இதன் உற்பத்தி 2011 மே திங்களில் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டியது, தற்போது விரைவில் மின் உற்பத்தி இங்கே தொடங்கும் என்று செய்தி வந்துள்ளது. 26-6-2007 யாருடைய ஆட்சிக் காலம்? கழக ஆட்சிக் காலம் அல்லவா?
உடன்குடியில் பி.எச்.இ.எல்., மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணைந்து கூட்டுத் திட்டத்தின்கீழ், ஒவ்வொன்றும் 800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய இரண்டு திட்டங்கள் 15-10-2007இல் 8 ஆயிரத்து 362 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டன. இதில் ஒரு அலகு 2013ஆம் ஆண்டு மார்ச் திங்களிலும்; மற்றொரு அலகு 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் நடைமுறைக்கு வந்து உற்பத்தியைத் தொடங்கும். இந்தத் திட்டம் தி.மு. கழக ஆட்சியிலே நான் முதலவராக இருந்த போது தொடங்கப்பட்ட திட்டம் அல்லவா?
வடசென்னை அனல் மின் நிலையத்திலேயே மேலும் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய ஒரு திட்டம் 2 ஆயிரத்து 475 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 14-7-2008இல் தொடங்கப்பட்டது. இதன் உற்பத்தி 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியிலே விரைந்து நடவடிக்கை எடுக்கப்படாததால், இத்திட்டத்தில் மின் உற்பத்தி தாமதமாகிறது.
ஆயிரத்து 126 கோடி ரூபாய் செலவில், கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகளிலிருந்து, 183 மெகாவாட் இணை மின்சாரம் தயாரிக்கக்கூடிய திட்டம், 14-12-2009இல் தொடங்கப்பட்டது. 2006இல் தி.மு. கழக ஆட்சி அமைந்த பிறகு, வருங்காலத் தேவையை கருத்தில் கொண்டு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக 2010-2011இல் 1400 மெகாவாட் மின்சாரமும், 2011-2012இல் 3316 மெகாவாட் மின்சாரமும், 2012-2013இல் 1222 மெகாவாட் மின்சாரமும், 2013-2014இல் 1860 மெகாவாட் மின்சாரமும் - ஆக மொத்தம் 7798 மெகாவாட் மின்சாரம் பல்வேறு மின் திட்டங்களின் மூலமாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.
இந்தப் புள்ளிவிவரங்கள், தி.மு. கழக ஆட்சியில் புதிதாக மின்சாரத்தை உற்பத்திச் செய்யக்கூடிய திட்டங்கள் எதையும் தொடங்கவில்லை என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாட்டிற்குத் தேவையான திட்டமான விளக்கமாக அமையுமென்று கருதுகிறேன்.
ஆனால் இதைப்போல அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் என்னென்ன திட்டங்கள் தொடங்கப்பட்டன என்பதை ஜெயலலிதா ஏன் தன்னுடைய நீண்ட பேச்சில் கூறவில்லை? மாறாக என்ன சொல்லுகிறார் என்றால், “நான் (ஜெயலலிதா) ஆட்சியில் இருக்கும் போதே பல பெரிய மின் உற்பத்தித் திட்டங்களைத் தீட்டி அவற்றிற்கு தேவையான ஆயத்தப் பணிகளை (?) செய்ய நான் நடவடிக்கை எடுத்தேன். அந்த நேரத்தில் தேர்தல் வந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டது” என்று பேசியிருக்கிறார். இது என்ன ஏமாற்றம்? ஆயத்தப் பணிகளை செய்ய ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தாராம். அதற்குள் தேர்தல் வந்து விட்டதாம்? ஏன் ஆட்சிக்கு வந்தவுடனே ஆயத்தப் பணிகளைச் செய்து, ஆட்சியிலே இருந்தபோதே, தேர்தல் வருவதற்குள்ளாகவே மின் உற்பத்தியைத் தொடங்கி இருக்கலாமே? தி.மு. கழக
ஆட்சியிலே அப்படித்தானே 2006ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், உடனடியாக ஆயத்தப் பணிகளைச் செய்து, 2006ஆம் ஆண்டிலும், 2007ஆம் ஆண்டிலும், 2008ஆம் ஆண்டிலும் மின் உற்பத்திக்கான திட்டங்கள் தொடங்கப்பட்டன. அப்படி தொடங்கிய திட்டங்கள் மூலமாகத்தானே இன்னும் இரண்டொரு மாதங்களில் தமிழ்நாட்டிற்கு மின்சாரம் கிடைக்கவுள்ளது. அதற்கெல்லாம் காரணம் தி.மு. கழக ஆட்சியா? அல்லவா?
2001 முதல் 2006 வரையிலான தனது ஆட்சிக் காலத்தில், தமிழ்நாடு மின் வெட்டே இல்லாத மாநிலமாக இருந்தது என்று ஜெயலலிதா சொல்லி பெருமைப்பட்டுக் கொள்கிறார். 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலே தமிழ்நாட்டில் மின் கட்டுப்பாட்டு முறை இருந்ததா? இல்லையா? அதுபோலவே 3-10-1982 முதல் 26-7-1984 வரை அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலே மின் கட்டுப்பாட்டு முறை இருந்ததா இல்லையா? அது என்னுடைய ஆட்சிக் காலம் அல்ல, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலம் என்று ஜெயலலிதா சொல்கிறாரா? எப்படியோ அதுவும் அ.தி.மு.க. ஆட்சிக் காலம்தான். 2006ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அதிகத் தொழிற்சாலைகளை தமிழகத்திலே தொடங்காமல் இருந்திருந்தால் மின் கட்டுப்பாட்டு முறை வந்திருக்காதுதான். அதற்காக தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்காமல் அ.தி.மு.க. அரசைப் போல ஓர் அரசு இருக்க முடியுமா?
கடந்த ஆண்டு ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்த முதல் அமைச்சர் ஜெயலலிதா தற்போதுள்ள 3 மணி நேர மின் வெட்டினை 2 மணி நேரமாகக் குறைப்போம் என்றும், ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை முழுவதும் தீர்க்கப்படும் என்றும் சொன்னார். அந்தத் துறையின் அமைச்சர், நத்தம் விசுவநாதன் “இந்தியா டுடே” இதழுக்கு 2012, பிப்ரவரி மாதம் அளித்த பேட்டியில், “இந்த மார்ச் முதல் மே மாதம் வரையில் மட்டும் தான் தமிழகம் மின் பற்றாக்குறையை அனுபவிக்கும். இந்த மூன்று மாதங்களை மட்டும் பொறுத்துக் கொண்டால் தமிழகத்தில் மின் பற்றாக்குறையே இருக்காது” என்று சொன்னார். ஆனால் நேற்றைய பேச்சில் முதலமைச்சர் ஜெயலலிதா அடுத்த ஆண்டு இறுதிக்குள் மின் பற்றாக்குறை முழுவதும் தீர்க்கப்படும் என்று சொல்லியிருக்கிறார். இவற்றில் எதுதான் உண்மை? எது எப்படியோ; தமிழ்நாட்டில் மின் வெட்டு தீரும் நாள் எந்நாளோ?
அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றப்படும் நாளே அந்நாள்!
இந்த வார ஜூ.வி. இதழிலே கூட “ஆற்காடு வீராசாமியின் மின்வெட்டுக்கும், நத்தம் விஸ்வநாதனின் மின்வெட்டுக்கும் என்ன வித்தியாசம்” என்ற கேள்விக்கு, “ஆற்காடு வீராசாமிக்கு கொஞ்சமாவது உறுத்தல் இருந்தது, தன்னால் தான் தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர், ஒருவேளை தோற்றால், இந்த மின் வெட்டுதான் முக்கியமான காரணம் என்று! ஆனால் நத்தம் விசுவநாதனுக்கு அந்த மாதிரி எந்தக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. அது வேற டிபார்ட்மெண்ட் மேட்டர். அதுவும் பக்கத்து ஸ்டேட் மேட்டர் என்று நினைப்பது போலவே மெத்தனமாக இருக்கிறார்” என்று எழுதியுள்ளது. எனவே தமிழகத்தின் மின் வெட்டை ஆட்சியாளர்கள் இந்த அளவில் நமக்கு என்ன என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கழக ஆட்சியில் வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே இருந்த மின் வெட்டு, அ.தி.மு.க. ஆட்சியில் தற்போது தமிழக வரலாறு இதுவரை கண்டிராத கொடுமையாக பதினாறு மணி நேரம் மின் வெட்டு, கடும் மின் வெட்டுப் பிரச்சினையினால் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் பொது மக்கள் தினமும் தெருவுக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். பல நூறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடிக் கொண்டிருக்கிறார்கள். உற்பத்திக்குப் பாதிப்பு ஏற்பட்டு மாநிலப் பொருளாதார நிலை தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இக்கட்டான இந்த கால கட்டத்தில்; கழகத்தின் சார்பில் தரப்படும் விளக்கங்கள் ஒருபுறமிருக்க - ஆட்சிப் பொறுப்பிலே உள்ள அ.தி.மு.க., மின்சாரப் பிரச்சினையைத் தீர்க்க, சிந்தித்து, முறையாக வழி காண்பதை விட்டு விட்டு; வீண் குற்றச்சாட்டுகளை மற்றவர்கள் மீது அடுக்கிக் கொண்டு காலத்தைக் கழிப்பது கண்டு யாரும் காலவரையறையின்றி பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து செயலாற்றுவதே சிறப்பு!
அன்புள்ள, மு.க. 28-10-2012
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 155–161. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.