அடக்கம்

முரசொலி · தொகுதி 47 · கடிதம் 3670

முரசொலி கடிதங்கள் · 3670

துள்ளி வருகுது வேல்! புள்ளி விவர மாய்மாலம் துள்! துள்!!

நாள் 8.11.2012சுமார் 5 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3670. துள்ளி வருகுது வேல்! புள்ளி விவர மாய்மாலம் துள்! துள்!!

உடன்பிறப்பே,

20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொழில்கள் தொடங்குவதற்கென நேற்றைய முன்தினம் அ.தி.மு.க. அரசு சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. தமிழ், ஆங்கிலம் என அனைத்து நாளேடுகளிலும் முழுப்பக்கம் விளம்பரங்கள் அரசின் சார்பில் தரப்பட்டுள்ளன. அதற்கு மட்டும் எவ்வளவு ரூபாய் அரசுப் பணம் விரயமாகியிருக்கும் தெரியுமா?

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கையெழுத்திடுவதற்காகவே “ஐ.டி.சி. கிராண்ட் சோழா” ஐந்து நட்சத்திர ஓட்டலில் முதல் அமைச்சரே கலந்து கொள்ளும் விழா. ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதென்றால் ஐந்து நிமிடங்களில் தலைமைச் செயலகத்திலேதான் இதுவரை நடந்துள்ளது. ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் விழா நடைபெறுவதே இதுதான் முதல்முறை.

இப்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் 12 நிறுவனங்களில் ஹூண்டாய் மோட்டார், செயின்ட் கோபைன், நோக்கியா, சான்மினா, டியூப் இன்வெஸ்ட் மென்ட்ஸ், டி.வி.எஸ். குழுமம் போன்ற நிறுவனங்கள் எல்லாம் ஏற்கனவே தமிழகத்திலே இயங்கி வருகின்றன. அந்த நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் விழா என்று அரசு விளம்பரங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களின் சார்பில் ஆங்கிலப் பத்திரிகைகளில் விளம்பரங்கள் வேறு! அந்த நிறுவனங்கள் எல்லாம் தங்கள் தொழிற்சாலையை விரிவாக்கிட மேலும் முதலீடு செய்கிறார்கள். அவ்வளவுதான்! இவற்றில் சிற்சில

தொழிற்சாலைகள் வேண்டுமானால் புதிய தொழிற்சாலைகளாக இருக்கக் கூடும்.

இன்றையதினம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள “ஹூண்டாய் மோட்டார் தொழிற்சாலை” தமிழகத்தில் எத்தனை ஆண்டுக் காலமாக நடந்து வருகிறது என்பதை அனைவரும் நன்கறிவார்கள். அந்தத் தொழிற்சாலை திருப்பெரும்புதூரில் அமைக்கப்பட்டு, நானும், மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறனும் சென்று திறப்பு விழா நடத்தி வைத்து, வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. அந்தத் தொழிற்சாலையில் இரண்டாவது கட்டத்தினை 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் 2-2-2008 அன்று கழக ஆட்சியில் திறந்து வைத்தோம். இந்தத் தொழிற்சாலையின் இரண்டு கட்டத் தொழிற்பிரிவுகளிலும் ஏற்கனவே 11 ஆயிரம் பேர் வேலை வாய்ப்புகள் பெற்றுள்ளனர்.

இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் மற்றொரு கம்பெனி “சான்மினா”. இந்தக் கம்பெனியுடன் 19-6-2007இல் கழக ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, 100 ஏக்கர் நிலப்பரப்பில் 225 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டு 28-3-2010 அன்று திறந்து வைக்கப்பட்டு, அந்தத் தொழிற்சாலையும் நடந்து வருகிறது.

மற்றொரு தொழிற்சாலை நோக்கியா. அ.தி.மு.க. ஆட்சியில் இந்தத் திட்டத்திற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக ஜெயலலிதா பேசியிருக்கிறார். எனினும், ஒரகடத்தில் 300 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலைக்காக கழக ஆட்சியில் 26-6-2008இல் ஒப்பந்தம் நடைபெற்றது. இந்தத் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து 16-10-2008 அன்றே திறக்கப்பட்டுள்ளது.

அதுபோலவேதான் “செயின்ட் கோபைன்” தொழிற்சாலையும் கழக ஆட்சியிலே தொடங்கப்பட்டுச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் சொல்ல வேண்டுமேயானால், டிட்கோ நிறுவனத்தின் மூலமாக மட்டும் கழக ஆட்சியில் கடந்த 2006 மே மாதம் முதல் 27 தொழில்கள் தொடங்கப்பட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. 24 அரசாணைகள் மூலம் 24 தொழில்கள் தொடங்கப்பட அனுமதிகள் வழங்கப்பட்டன. இவற்றின் விளைவாக தமிழகத்தில் 62 ஆயிரத்து 349 கோடி ரூபாய்

முதலீட்டில், 51 புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படவும், அவற்றின் மூலம் 2 இலட்சத்து 35 ஆயிரத்து 464 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்திடவும் வழி வகுக்கப்பட்டது. 2011இல் மைய அரசின் மத்திய புள்ளி விவர நிறுவனம், (Central Statistical Organisation) தனது 2008-2009இல் தொழிற் சாலைகள் குறித்து ஆண்டு ஆய்வினை வெளியிட்டது. அந்த ஆய்வின்படி,

* தமிழ்நாடு மொத்தம் 26,122 தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது; இதன் மூலம் தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது;

* தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கையிலும் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. அதாவது தமிழ்நாட்டில் 17 லட்சத்து 74 ஆயிரத்து 19 பேர் தொழிற்சாலைகளில் மட்டும் பணி புரிகின்றனர்.

* “மொத்த முதலீட்டின்” வரிசையில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தை வகிக்கிறது.

* “மொத்த தொழில் உற்பத்தி”யில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தை வகிக்கிறது.

* மேலும் “நிகர மதிப்பு கூடுதல்” அளவில் தொழிற்சாலை வரிசையில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தை வகிக்கிறது.

என்றெல்லாம் கூறப்பட்டிருந்தது.

“Wall Street Journal”, தனது 8-7-2010 நாளிட்ட இதழில், “தமிழ்நாடு வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளுக்குத் தேவையான நிலங்கள், சாலைகள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை வழங்குவதில் மற்ற இந்திய மாநிலங்களை விடச் சிறப்பாகச் செயல்படுகிறது. மேலும், தொழில் தொடங்கவும், விரிவாக்கம் செய்யவும் 12க்கும் மேற்பட்ட அரசுத் துறை சார்ந்த அனுமதிகளை ஒற்றைச் சாளர முறையில் ஒரே இடத்தில் வழங்குகிறது” என்றும் கூறிப் பாராட்டியுள்ளது.

Oxford Analytica என்ற ஒரு பன்னாட்டுத் தனியார் ஆலோசனை நிறுவனம், India Deconstructed என்ற ஒரு ஆய்வை

நடத்தியது. அந்த ஆய்வின்படி, “தமிழகம் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே முதன்மையாக விளங்குகிறது” என்று கூறி அதற்குத் தமிழ்நாட்டின் தரமான உட்கட்டமைப்பு மற்றும் ஆளுமை ஆகியவையே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளது. அந்தப் பன்னாட்டு நிறுவனம், இந்தியாவிலுள்ள 28 மாநிலங்களையும் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களையும் பகுப்பாய்வு செய்து, “தமிழ்நாடே மிகச் சிறந்தது” என்று அறிவித்துள்ளது.

முதலீடுகளை வெற்றிகரமாக ஈர்ப்பதில் இந்தியாவில் சிறந்த மூன்று மாநிலங்களுள் தமிழகமும் ஒன்றாகத் திகழ்ந்ததை, “ASSOCHAMP” நிறுவனம் வெளியிட்ட “BIZCON” என்ற அறிக்கையில், வாகன உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலமாகத் திகழும் தமிழகம், வாகன உற்பத்தியில் சிறந்து விளங்கும் உலகின் முதன்மையான 10 மையங்களில் ஒன்றாக விளங்குகிறது” என்று குறிப்பிட்டிருந்தது. இது கழக அரசு அறிவித்த ஒருங்கிணைந்த மிகப் பெரும் வாகனத் திட்டக் கொள்கையின் விளைவாக சாத்தியமாயிற்று.

7-2-2000 நாளிட்ட “எகனாமிக் டைம்ஸ்” நாளிதழில் “இந்தியாவில் பெரிதும் தொழில் மயப்படுத்தப்பட்ட மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு விளங்குகிறது. நாட்டின் ஏற்றுமதிக்குத் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிகப் பெரிதாகும்”என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தொழில் துறையில், கழக ஆட்சியில் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பற்றியும், அதை அப்போது ஏடுகள் எல்லாம் ஒருமுகமாகப் பாராட்டியது பற்றியும் எழுத ஆரம்பித்தால் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்க முடியும். ஆனால் அப்போது இதைப்பற்றியெல்லாம் கழக அரசிலே இருந்தவர்களுக்கு ஏடுகள் மூலமாகப் பக்கம் பக்கமாக விளம்பரங்களை ஒவ்வொன்றுக்கும் கொடுக்கத் தெரியவில்லை. அவ்வாறு முழுப் பக்க விளம்பரங்களின் மூலம் அரசின் பணத்தை வாரி இறைத்து, அரசை எதிர்த்து அவர்கள் எதுவும் எழுதாமல் அடக்கி வைத்திடவும் தெரியவில்லை.

6-11-2012 தேதிய “தினத்தந்தி” நாளிதழில் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிடும்போது, “எனது தலைமையிலான

(ஜெயலலிதா) அரசுடன் கடந்த ஆண்டு மே 14ந்தேதி டெய்லர் இந்தியா, யமஹா மோட் டார், அசோக் லேலண்ட் நிசான் மோட்டார் நிறுவனம், எய்ச்சர் மோட்டார்ஸ், பிலிப்ஸ் கார்பன் பிளாக் ஆகிய நிறுவனங்கள் ரூ. 5,700 கோடிக்கு முதலீடு செய்யும் வகையில் ஒப்பந்தம் செய்தது, இதன் மூலமாக 9,500 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகி இருக்கிறது” என்று பேசியதாக வெளியிட்டுள்ளது.

நான் கேட்க விரும்புவதெல்லாம், முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு பதவி ஏற்றதே மே திங்கள் 16ஆம் நாள் தான்! அவ்வாறு இருக்கையில் மே 14ஆம் தேதியன்றே மேலே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களோடு எவ்வாறு ஒப்பந்தம் செய்திருக்க முடியும் என்பதுதான்!

“Fortune 500” நிறுவனங்களைச் சேர்ந்த ஹூண்டாய், போர்டு, நிஸ்ஸான், டேம்லர், மோட்டரோலா, டெல் கம்ப்யூட்டர்ஸ், சாம்சங், சான்மினா மற்றும் நோக்கியா சீமென்ஸ் போன்றவை தங்கள் தயாரிப்பு நிறுவனங்களைத் தமிழ்நாட்டில் கழக ஆட்சியிலேயே ஏற்படுத்தின.

2011-2012ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அதுவரை தமிழகத்திலே ஆட்சி செய்த தி.மு. கழக ஆட்சியில், தமிழ்நாட்டில் 52,195 கோடி ரூபாய் அளவிற்கு பல முன்னணித் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2007-2008 ஆம் ஆண்டுக்கான கழக அரசின் நிதிநிலை அறிக்கையில் “இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, மோட்டரோலா, அப்போலோ டயர்ஸ், டெசால்வ், டெல் கம்ப்யூட்டர்ஸ், குரோத் லிங், சாம்சங், மகிந்திரா - ரெனால்ட் - நிஸ்ஸான் மற்றும் கபாரோ ஆகிய நிறுவனங்களோடு ரூபாய் 6,985 கோடி மதிப்பீட்டிலான தொழில் முதலீடுகளுக்கான எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இவற்றால், 96,000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று அறிவிக்கப்பட்டது.

நேற்றைய மாலைப் பத்திரிகை ஒன்றில் அ.தி.மு.க. ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள இந்த 12 தொழிற்சாலைகளும் எவ்வளவு முதலீடு செய்யப் போகிறார்கள்

என்பதைப் பற்றியும், இதன்மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் விரிவாக வெளியிட்டிருக்கிறார்கள். அதன்படி ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தில் 500 பேருக்கும், ஹர்ஷா குரூப் நிறுவனங்கள் மூலமாக 1,850 பேருக்கும், டி.வி.எஸ். குழும நிறுவனங்கள் மூலமாக 1,300 பேருக்கும், முருகப்பா குழுமத்தின் மூலமாக 1,130 பேருக்கும், டான்பாஸ் மூலமாக 1,200 பேருக்கும், சான்மினா மூலமாக 1,500 பேருக்கும், நோக்கியா நிறுவனத்தின் மூலமாக 500 பேருக்கும், ஆம்வே மூலமாக 475 பேருக்கும், இந்தோ ராமா குழுமத்தின் மூலமாக 500 பேருக்கும், பி.ஜி.ஆர். எனர்ஜி குழுமத்தின் மூலமாக 2,400 பேருக்கும், ஆட் இண்டஸ்ட்ரி பார்க் நிறுவனம் மூலமாக 2,000 பேருக்கும், செயின்ட் கோபையின் நிறுவனத்தின் மூலமாக 500 பேருக்கும் நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 12 தொழிற்சாலைகளிலும் மொத்தம் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூட்டிப் பார்த்தால் 13,855 பேர்களுக்குத்தான் நேரடியாக வேலை வாய்ப்பு கிடைத்திடும். இதில் கோவையில் தொடங்கவுள்ள ஆட் இண்டஸ்டிரி பார்க் நிறுவனம் மூலமாக 2000 பேருக்கு உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் படிப்படியாக 25,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று “மாலை முரசு” சொல்லியிருக்கிறது. ஆனால் இன்று காலை “தினமணி”யிலோ இதே தொழிற்சாலையில் நேரடி வேலை வாய்ப்பில் 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்கிறார்கள். இதில் மாலைமுரசில் வந்தது உண்மையா? தினமணியில் வந்தது உண்மையா? அந்த 25 ஆயிரம் பேரையும் உண்மை என்று கணக்கிட்டால் கூட மொத்தம் 36 ஆயிரம் பேர்தான் வருகிறது. ஆனால் அனைத்து விளம்பரங்களிலும், நாளேடுகளிலும் 1,36,000 பேர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாக கொட்டை எழுத்துச் செய்திகள். எந்த அளவிற்கு நாட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்!

இதைச் சமாளிப்பதற்காக நேரடியாக வேலை வாய்ப்பு இவ்வளவு பேருக்குக் கிடைத்தாலும் மறைமுகமாக வேலை வாய்ப்பு கிடைப்பதையும் சேர்த்துக் கணக்கிட்டோம் என்பார்கள். அதிலும் 14 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலை என்றால் மீதி 1 லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு மறைமுகமாக வேலை கிடைக்கும் என்றால் அது நம்பக் கூடியதா என்பதையும் நீங்களே

யூகித்துக் கொள்ளுங்கள். இதையெல்லாம் யார் எண்ணிப் பார்த்து வெளியிடப்போகிறார்கள், அப்படி வெளியிட்டால் இருக்கவே இருக்கிறது அவதூறு வழக்கு, சமாளித்துக் கொள்ளலாம் என்று இந்த ஆட்சியினர் செய்கின்ற கெடுபிடிகளைப் பற்றியெல்லாம் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். தொழில் துறையில் கழக ஆட்சியில் செய்யப்பட்ட அளப்பரிய சாதனைகளையும், அவை பற்றிய விவரங்களையும், இப்போது நடக்கின்ற புள்ளி விவர மாய்மாலங்களையும் கணக்கிட்டு ஒப்பிட்டுப் பாருங்கள்!

அன்புள்ள, மு.க. 8-11-2012

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 179–185. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 47-இல் மேலும் கடிதங்கள்