முரசொலி கடிதங்கள் · 3671
திசை திருப்பும் முயற்சியால் பிரச்சினை தீருமா?
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3671. திசை திருப்பும் முயற்சியால் பிரச்சினை தீருமா?
உடன்பிறப்பே,
மின்சார நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது! இன்றைய தினம் வெளிவந்த “தினமணி” நாளிதழிலேயே “முடங்கியது காற்றாலை மின் உற்பத்தி: மாவட்டங்களில் 14 மணி நேர மின்வெட்டு” என்ற தலைப்பில் “காற்றாலை மின் உற்பத்தி முழுவதுமாக நின்று போனதைத் தொடர்ந்து சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டங்களில் அறிவிப்பில்லாத மின் வெட்டு நேரம் மீண்டும் 14 மணி நேரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது” என்று நீண்ட கட்டுரையில் வெளியிட்டுள்ளது.
ஆனால் இங்குள்ள அ.தி.மு.க. அரசோ ஏற்கனவே இருந்த தி.மு. கழக அரசின் மீது பழியைப் போட்டுத் தப்பிக்கப் பார்த்தது. ஆனால் அதுகுறித்து நான் இரண்டு கடிதங்கள் விரிவாக எழுதிய பின், மத்திய அரசின் மீது பழியைச் சுமத்திட முற்பட்டார்கள். பிரதமருக்கு கடிதம் எழுதினார்கள். ஆனால் பிரதமர் பதில் எழுதவில்லை என்று கூறி, உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசின் மீது திட்டமிட்டுக் குறை கூறி வழக்கு தொடுத்தார்கள்.
தமிழக அரசு தொடுத்த வழக்கில், “டெல்லி மாநில அரசு 1721 மெகாவாட் மின்சாரத்தை மத்திய தொகுப்புக்கு திருப்பிக் கொடுத்துவருகிறது. இந்த உபரி மின்சாரத்தை தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அது மட்டுமன்றி டெல்லியிலிருந்து மின்சாரத்தை தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரும் வகையில் மின் தடத்தை ஏற்படுத்தித் தரவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்கள்.
உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு வைத்த இந்த இரண்டு கோரிக்கைகளில் உபரி மின்சாரத்தை மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ஒதுக்குவது என்பது சுலபமாக உடனடியாகத்
தீர்க்கக் கூடிய ஒரு பிரச்சினை. ஆனால் அந்த மின்சாரத்தை தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரும் வகையில், மின் தடத்தை ஏற்படுத்தித் தரவேண்டுமென்ற கோரிக்கையை நினைத்தவுடன் செய்துவிட முடியாது. இது பொறியாளர்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் நன்றாகவே தெரியும். ஆனாலும் தமிழக அரசு இந்தக் கோரிக்கையை உச்ச நீதி மன்றத்தில் தெரிவித்தது. டெல்லியிலிருந்து தேவையான அரிசியைக் கொண்டு வர வேண்டுமென்றால், ரெயில் மூலமாகக் கொண்டு வந்துவிடலாம். அவசர அவசியம் கருதி மருந்து பொருள்களைக் கொண்டு வர வேண்டுமென்றால் விமானம் மூலம் உடனடியாகக் கொண்டு வரலாம். ஆனால் டெல்லியிலிருந்து மின்சாரத்தை ரெயில் மூலமாகவோ, விமானம் மூலமாகவோ கொண்டு வருவதற்கு வாய்ப்பு இல்லை. மின்சாரத்தைக் கொண்டு வருவதற்கு என்று பிரத்தியேகமான கட்டமைப்பு முன்கூட்டியே உருவாக்கப்பட்டிருந்தால் அது உடனடியாக சாத்தியமாகும். உச்ச நீதி மன்றத்தில் நமது முதலமைச்சர் இந்த வழக்கைத் தொடுப்பதற்கு முன்பு பிரதமருக்கு மின்சாரம் கோரி கடிதம் ஒன்றை 24-10-2012 அன்று எழுதியதற்குப் பிறகு அவர்கள் அந்தக் கோரிக்கைக்கு பதிலளிக்காமல் இருந்து விடவில்லை. மத்திய மின்சாரத் துறை இணை அமைச்சர் திரு. கே.சி. வேணு கோபால் அவர்கள் இந்தக் கோரிக்கை குறித்து விளக்கிக் கூறும்போது, “மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு மின்சாரம் கொண்டு வருவதற்கான மின் வழித் தடத்தில் பிரச்சினை உள்ளது. தற்போதுள்ள மின் வழித் தடத்தில் கொண்டு வந்தால் கடும் மின்சார இழப்பு ஏற்படும். எனவே ராய்ப்பூர் வழியாக புதிய மின் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் புதிய மின் வழித் தடம் அமைக்கும் பணி வரும் 2014ஆம் ஆண்டு ஜனவரிக்குள் நிறைவு பெறும்” என்று சொல்லி அது அப்போதே ஏடுகளிலேயே வெளிவந்திருக்கிறது. தமிழக அரசின் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்தின் (டான்ஜெட்கோ) மூத்த அதிகாரி ஒருவரே “டெக்கான் கிரானிக்கல்” நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியில், “தேசிய மின் இணைவமைப்பிலிருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்யவோ, தெற்கு மின் இணைவமைப்பின் வழியில்
தற்போதுள்ள நெரிசல் நீங்கி சுலபமாவதற்கோ, 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை தமிழகம் காத்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மத்திய மின்சாரத் துறை இணை அமைச்சர் விளக்கிக் கூறியதில் இருந்தும், மின்வாரிய அதிகாரி “டெக்கான் கிரானிக்கல்” இதழுக்கு அளித்த பேட்டியில் இருந்தும், நாம் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை செய்தி என்னவென்றால், டெல்லியிலிருந்து உடனடியாக தேவையான மின்சாரத்தை வழங்குவதற்கு மத்திய அரசு முன் வந்தாலுங்கூட, அந்த மின்சாரத்தைக் கொண்டு வருவதற்கான கட்டமைப்பு தற்போதுதான் உருவாக்கப்பட்டு வருகிறது, அது முழுமையடைய 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை தமிழக அரசு காத்திருக்க வேண்டும் என்பதுதான். கடுமையான மின் பிரச்சினை வரும் என்பதற்கான அறிகுறிகள் ஓராண்டுக்கு முன்பே தெரிந்திருந்தும் அதற்கான முன் முயற்சியில் அ.தி.மு.க. அரசு ஈடுபடவில்லை என்பதை மறந்துவிட முடியாது. இதை மனதிலே கொண்டு தமிழக அரசு டெல்லியிலிருந்து மின்சாரத்தை வரவழைக்க எண்ணாமல், தமிழகத்திற்கு அருகிலே உள்ள மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து, தமிழகத்திற்குத் தேவையான மின்சாரத்தை மத்திய அரசிடமிருந்து கூடுதலாகப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவதே சாலச் சிறந்ததாக இருக்கும்.
மின்சாரத்தைக் கொண்டு வருவதற்கான கட்டமைப்பைப் பற்றி கருத்திலே கொண்டு தான் மத்திய அரசு சார்பில் உச்ச நீதி மன்றத்தில் வாதிட்ட மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் திரு. ஜி. இ. வாகன்வதி அவர்கள், “கூடுதல் மின்சாரத்தை உட்கிரகிக்கும் திறனை தமிழ்நாட்டு மின் தொகுப்பு பெற்றிருக்கவில்லை. எனவே தமிழ்நாட்டிற்கு, கூடுதல் மின்சாரம் வழங்க இப்போது இயலாது. இதற்கு தமிழ்நாடே பொறுப்பு. மேலெழுந்தவாரியாக இந்த மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.
ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு அதிலும் குறிப்பாக டெல்லியிலிருந்து தமிழகத்திற்கு மின்சாரத்தைக் கொண்டு வருவதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தற்போது இல்லை என்ற உண்மைகளை தமிழக அரசு தெரிந்து வைத்திருக்கிறதா? அல்லது தெரியாத நிலையில் உச்ச நீதி
மன்றம் சென்றிருக்கிறதா? என்றே தெரியவில்லை. உச்ச நீதி மன்ற நீதிபதிகள் நேற்றைய தினம் இறுதியாக இந்த விவகாரம் குறித்து “தொழில் நுட்ப நிபுணர்கள் ஆய்வு செய்ய வேண்டும், தமிழக அரசு கோரும் மின்சாரத்தை விநியோகிக்கும் அளவுக்குத் தென் மண்டல மின்பாதைத் திறன் உள்ளதா என்று நிபுணர்கள் மூலம் மத்திய மின்சார ஆணையம் ஆய்வு நடத்த வேண்டும். அதன் அறிக்கையை வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறும் நவம்பர் 29ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்கள். எனவே அது வரை நாமும் காத்திருக்க வேண்டியதுதான்.
ஆனால் இதற்கிடையே தமிழ்நாட்டில் உள்ள சில நாளேடுகள் மத்திய அரசுதான் இந்த மின்சாரத்தை வழங்க மறுப்பதைப் போலவும், தமிழக அரசிடம் எந்தத் தவறும் இல்லை என்பதைப் போலவும், எப்படியாவது தமிழக அரசையும், குறிப்பாக தமிழக முதல் அமைச்சரையும் எந்தப் பழியும் வந்து விடாமல் காப்பாற்றுகின்ற முயற்சியிலே ஈடுபட்டு, அவ்வாறே செய்திகளை தொடர்ந்து வெளியிடுகின்றன. உச்ச நீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை விவகாரங்களை உள்ளே விரிவாக வெளியிட்டாலுங்கூட, “தினமணி” நாளேடு தலைப்பில் “தமிழகத்துக்கு டெல்லி மின்சாரம் கிடையாது - உச்ச நீதி மன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்” என்று வெளியிட்டுள்ளது. அதைப்போலவே “தினமலர்” நாளேடு தலைப்பில் “முடியாது - தமிழகத்திற்கு உபரி மின்சாரத்தை வழங்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்” என்றும் வெளியிட்டுள்ளது. “தினத்தந்தி” நாளேடோ “கூடுதல் மின்சாரத்தை தமிழ்நாட்டுக்கு வழங்க இயலாது - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்” என்று வெளியிட்டுள்ளது. இப்படி;
“கிடையாது”
“இயலாது”
“முடியாது”
-என்று மத்திய அரசு கூறியதாக பழி சுமத்தி மாநில முதலமைச்சருக்கு துளி அளவு கெட்டப் பெயரும் வந்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கின்றன இங்குள்ள சில நாளேடுகள்! எனவே மத்திய அரசுக்கு தமிழகத்திற்கு மின்சாரம்
வழங்கக் கூடாது என்பது எண்ணமல்ல. அந்த மின்சாரத்தை வழங்கினால், உடனடியாக அதை எடுத்துச் செல்ல வழியில்லை என்பதைத்தான் மத்திய அரசு தெரிவிக்கின்றது. அதைத் தெரிந்து கொண்டுதான் மத்திய அரசு அந்த வழித்தடத்தை ஏற்படுத்தித் தரவேண்டுமென்றும் உச்ச நீதி மன்றத்திலே தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. மத்திய அரசுக்கும் அந்தக் கோரிக்கையை ஏற்பதில் சிரமம் இருக்காது. ஆனால் அந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டாலும், அது இன்று தொடங்கி நாளையே முடிவடைந்து விடுகின்ற ஒன்றா என்றால் நிச்சயமாக இல்லை. அதனால் பயன் உடனடியாக தமிழகத்திற்குக் கிடைக்குமா என்றால் கிடைக்காது. அதற்கு என்ன வழி? மத்திய அரசுடன் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினை இது. அதைத்தான் விடுதலையில் கூட தமிழர் தலைவர் வீரமணி முன்பே எழுதியிருந்தார். எனவே எதிலும் பிறரைக் குற்றம் சாட்டி தான் தப்பித்துக்கொள்ளும் போக்கிலிருந்து விடுபட்டு தமிழக முதலமைச்சர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும். உடனடியாக முதல் அமைச்சரோ, மின் துறை அமைச்சரோ டெல்லி சென்று உரியவர்களோடு அமர்ந்து பேசி, தமிழகத்தின் மின் தேவையைத் தீர்க்க உடனடியாக என்ன செய்யலாம் என்று கலந்தாலோசித்து முடிவு காண வேண்டும். பள்ளிகளிலே சில சிறு பிள்ளைகள் எதற்கெடுத்தாலும் ஆசிரியரிடம் புகார் செய்வதைப் போல, “நான் உச்ச நீதி மன்றம் போகிறேன், வழக்கு தொடுக்கிறேன்,” என்பது பிரச்சினையைத் தீர்க்க நிச்சயமாக உதவிடாது.
அன்புள்ள, மு.க. 10-11-2012
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 47 (சீதை பதிப்பகம்), Vol47.pdf; PDF பக்கம் 186–190. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.